Thursday, August 22, 2013

தினமும் ஓரு கீரை நம் உணவில் சேர்த்தால் நமக்கு உணவே மருந்தாகும்.

திமும் ஓரு கீரை நம் உணவில் சேர்த்தால் நமக்கு உணவே மருந்தாகும்.

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி முக்கியமாக மருந்துக்குத்தான் அதிகப் பயன்படுத்தப்படுகிறது. கீரையாகவும் அதைப் பயன்படுத்தலாம். கரிப்பான், கரிசாலை, பொற்றிழைக்கரிப்பான் என்னும் வேறு பல பெயர்களும் இதற்கு உண்டு.

கரிசல் என்றால் தங்கம் என்று ஒரு பொருள் உண்டு. இது உடலைத் தங்கம் போல ஆக்கும் என்னும் கருத்தில் இந்தக் கீரைக்கு கரிசலாங்கண்ணி என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

நெல் வயல்களிலும், வாய்க்கால் வரப்புகளிலும், ஏரிக்கரைகளிலும், ஈரப்பிடியுள்ள வேறு இடங்களிலும் கரிசலாங்கண்ணிக் கீரை வளர்ந்து கிடப்பதைக் காணலாம்.

கரிசலாங்கண்ணியில் பொதுவாக நான்கு வகைகள் உள்ளன. அவற்றுள் மஞ்சள் பூ பூக்கும் வகைதான் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

மற்ற கீரை வகைகளில் உள்ளதைப் போலவே கரிசலாங்கண்ணியிலும் வைட்டமின்களும், தாது உப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.

கரிசலாங்கண்ணிக் கீரை இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. கண் பார்வையைத் தெளிவு படுத்துகிறது. தசையைக் கடுமையாக விரைக்கச் செய்யும் "தணுக் வாய்வு" என்னும் கொடிய நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்தில் இது முக்கியப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது.

கரிசலாங்கண்ணிக் கீரை உடலுக்கு உரமூட்டுகிறது. மண்ணீரலில் ஏற்படும் வீக்கம் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. தோல் வியாதிகளுக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையினால் ஒற்றடம் கொடுத்தால் உடலில் ஏற்படும் வீக்கங்கள் வற்றும்.

இந்தக் கீரையை உண்பதாலும், இதன் சாற்றை தலையில் தேய்ப்பதாலும் முடி கருகருவென்று வளரும். குழந்தைகளைத் தேய்த்துக் குளிப்பாட்டவும் இந்தக் கீரையின் சாற்றைப் பயன்படுத்தலாம்.

கரிசலாங்கண்ணி இலைச் சாறு இரண்டு சொட்டுகளுடன் எட்டு சொட்டு தேனைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளி, நீர்க்கோவை போன்றவை குணமாகும். நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கரிசலாங்கண்ணிச் சாற்றைச் சேர்த்து காய்ச்சித் தயாரிக்கப்பட்ட தைலத்தை தலைவலி முதலியவற்றுக்குத் தேய்க்கலாம். தலையில் தேய்த்தால் தலை முடி கருமையாகும். இந்தத் தைலத்தை உடலில் வலியுள்ள இடத்தில் தேய்த்தால் வலி நீங்கும்.

எடையையும், உடல் பருமனையும், தொந்தியையும் கரைக்க விரும்புபவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கரிசலாங்கண்ணிக் கீரையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கண்மை கண் நோய்களைத் தடுக்கிறது. இதன் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நீங்கும்.

 

குறிஞ்சான் கீரை

 

 

குறிஞ்சாக் கீரையில் இருவகை உண்டு. சிறுகுறிஞ்சான், பெருங்குறிஞ்சான்.

சிறுகுறிஞ்சான் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் இதன் பயன்பாடு அதிகம். இது கொடி வகையைச் சார்ந்தது. மரங்களில் கொடியாகப் படரும். கசப்புச் சுவை கொண்டதால் இதனை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவதில்லை.

இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.

சிறுகுறிஞ்சான் வாதமொடு சீதத்தை நீக்கும் மறுவுதிரம் இல்லாத மாதர்க்குறுமுலகில் அத்தி சுரமும் அகலாக் கடி விடமும் தத்தியக லர்த்தகர்க்குத் தான் வாதசுரஞ் சன்னிசுரம் மாறாக் கபச்சுரமும் பூதலம் விட்டோடப் புரியுங்காண்மாதேகேள் அக்கரங்கள் தீர்க்கும் அதிசுரந்தா கந்தொலைக்குந் தக்க சிறு குறிஞ்சான்தான்.

                                                                                                (அகத்தியர் குணபாடம்)

நீரிழிவு நோயின் தாக்கம் குறைய

நீரிழிவு நோயாளிகளின் முக்கிய உணவாக உட்கொள்ள வேண்டிய கீரை குறிஞ்சாக் கீரைதான். இன்று நம் நாட்டில் குறிப்பாக தென்தமிழ்நாட்டில் அதிக மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025ம் ஆண்டில் உலகில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உணவு முறையின் மாறுபாடே நீரிழிவு நோய் வருவதற்கு முக்கியக் காரணம். மேலும் உடல் உழைப்பின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளின் பாதிப்புகள் குறைய குறிஞ்சாக் கீரை மிகவும் உதவுகிறது. அதிக கசப்புத் தன்மை கொண்ட இந்தக் கீரை உடலின் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்படாமல் வருமுன் காக்க குறிஞ்சாக் கீரை சிறந்த மருந்தாகும்.

குறிஞ்சாக் கீரையை நன்கு நீர்விட்டு அலசி, அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது நீர்விட்டு அவித்து சிறிது நேரம் அப்படியே ஊறவைத்து சாப்பிட வேண்டும்.

இவ்வாறு வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.

நாவற் பழக் கொட்டையையும், சிறுகுறிஞ்சான் கீரையையும் நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலையில் 1 குவளை தண்ணீருக்கு 1 தேக்கரண்டி பொடி வீதம் இட்டு காய்ச்சி கஷாயமாக்கி அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்க

உணவு முறை மாறுபாட்டாலும், நேரம் தவறி உணவு உண்பதாலும் வாயு சம்பந்தப்பட்ட உணவுகளை அடிக்கடி உண்பதாலும் சிலரின் வயிற்றில் வாயுவின் சீற்றம் மிகுந்து குடலின் உட்புறச் சுவர்களைப் பாதிக்கிறது. மேலும் மது, புகை, போதை வஸ்துக்களாலும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உண்டாகும்.

இவர்கள் குறிஞ்சாக் கீரையை பாசிப் பருப்புடன் சேர்த்து காரம் சேர்க்காமல் வேகவைத்து கடைந்து நெய் கலந்து உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் விரைவில் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

உடல் வலுப்பெற

குறிஞ்சாக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோயின் தாக்கம் ஏதுமின்றி நல்ல வலுவுள்ள உடலைப் பெறலாம்.

பசியைத் தூண்ட

சிலர் எப்போது பார்த்தாலும் பசியில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் தினமும் குறிஞ்சாக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து உணவில் சேர்த்துக்கொண்டால் நன்கு பசியைத் தூண்டும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

உடல் சூட்டைத் தணிக்க

வாரம் இருமுறை குறிஞ்சாக் கீரையை உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடல் சூடு தணியும்.

இருமல், சுரம் நீங்க

கடும் சுரம், இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிஞ்சாக் கீரையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வருவது நல்லது.

ஈரல் பலப்பட

குறிஞ்சாக் கீரையை வேகவைத்து அதனுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஈரலில் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.

மேலும் குறிஞ்சாக் கீரையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி நெறிகட்டிய இடத்தில் வைத்து கட்டினால் வலி குறையும்.

காணாக்கடி

எத்தகைய விஷக்கடியாக இருந்தாலும் குறிஞ்சாக் கீரையை கடிபட்ட இடத்தில் வைத்து கட்டியும், கீரையை கஷாயம் செய்து சாப்பிட்டால் விஷம் விரைவில் முறியும்.

அகத்திக் கீரை

 

 

செடி இனத்தைச் சேர்ந்த அகத்தி, தோட்டங்களில் குறிப்பாக நீர் தேங்கிய நிலங்களிலும், வெற்றிலைக் கொடிக் கால்களிலும் விளையும். அகத்தியில் சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என்ற சில வகைகள் உண்டு. பொதுவாக அகத்தி வெள்ளை நிறத்தில் பூக்கும். சிவப்பு நிறத்தில் பூக்கும் அகத்தி சிவப்பகத்தி என்று அழைக்கப்படுகிறது. சிறிது உப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையை வேறு மருந்துகள் உண்ணும் காலங்களில் உண்ணக் கூடாது. ஏனெனில் மருந்துகளின் வீரியத்தை அகத்திக் கீரை குறைக்கவும் அழித்துவிடம் செய்யும். இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் கெட்டுப் போகும் வாய்ப்புண்டு. சொறி, சிரங்கும் தோன்றலாம். இரத்தம் குறைந்து இரத்த சோகை ஏற்படலாம். வயிற்று வலியும் பேதியும் உண்டாகலாம். காய்ச்சல் நேரத்தில் இக்கீரையைப் பிழிந்து அதன் சாற்றில் இரு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி நீங்கும். சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. போதுமான பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும். குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்துதலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும். இது வாயுவை உண்டாக்கும் இயல்புடையது. எனவே வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இக்கீரையை உண்ணக் கூடாது.

 

பருப்புக் கீரை

 

நல்ல சத்துள்ள கீரைகளுள் பருப்புக் கீரையும் ஒன்று. நீண்ட காலமாக இந்தக் கீரையைப் பருப்புடன் சமைத்து உண்ணும் வழக்கம் இருந்து வருவதால் இதற்குப் பருப்புக் கீரை என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது.

பருப்புக் கீரையின் இலைகள் நீளவட்ட வடிவத்தில் பசுமை நிறமுடையதாகவும், தடிப்பாகவும் இருக்கும். இந்தக் கீரைச் செடி சுமார் 15 செ.மீ. உயரம் வரை வளரும். இந்தச் செடி நன்கு வளரத் தண்ணீர் அதிகம் தேவைப்படும். விதைகள் மூலமும், தண்டுகளை நட்டும் இந்தக் கீரையை இனவிருத்தி செய்யலாம்.

பருப்புக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. இந்தக் கீரையின் இலை, தண்டு அனைத்தையும் உணவாகப் பயன்படுத்தலாம். இதைப் பருப்புடன் சேர்த்து வேக வைத்துக் கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். பொரியலும் செய்யலாம்.

பருப்புக் கீரையை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் வேனிற்காலத் தலைவலி, சூட்டால் உண்டாகும் தலைவலி ஆகியன குணமாகும். இந்தக் கீரையைச் சாப்பிடுவதால் கல்லீரல் நோய்கள் தீரும். செயல் இழந்துபோன கல்லீரலை மீண்டும் செயல்படச் செய்ய மஞ்சள் கரிசலாங்கண்ணியைப் போலவே பருப்புக் கீரையையும் பயன்படுத்தலாம்.

பருப்புக் கீரையை வேறோடு பிடுங்கி, புளியங்கொட்டை அளவு மஞ்சள் சேர்த்து அரைத்து எலுமிச்சங்காய் அளவு எடுத்துத் தயிரில் கலந்து 40 நாட்கள் காலையில் மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மரத்தல், கல்லீரல் புண், கல்லீரல் பெருத்தல் போன்ற நோய்களும் மண்ணீரல் நோய்களும் நீங்கிவிடும்.

பருப்புக் கீரையின் தண்டை அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டால் வேர்க்குரு, கைகால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் ஆகியவை குணமாகும். இந்தக் கீரையின் விதையை அரைத்து இளநீரில் கலக்கி உள்ளுக்குக் கொடுத்தால் சீதபேதியால் ஏற்படும் வயிற்றுளைச்சலும், முக்கலும் விலகும். மூத்திர எரிச்சலும் வெள்ளைப்படுதலும் கட்டுப்படும்.

இந்தக் கீரை குடல் புழுக்களை அகற்றுகிறது. மூல நோய் உள்ளவர்களுக்கு மலம் வலியில்லாமல் எளிதாகக் கழிய பருப்புக் கீரை உதவுகின்றது. இது சிறுநீரைப் பெருக்கும். மூலநோயைக் குறைக்கும்.

பருப்புக் கீரையின் சாற்றைப் பிழிந்து 50 முதல் 100 மி.லி. அளவு வரை தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளும் வெறும் வயிற்றில் பருகி வந்தால் இரத்தபேதி, சீதபேதி, மூத்திரத் தடை, வெப்பம், நீர்ச்சுருக்கு ஆகிய நோய்கள் நீங்கி உடல் சூடு தணியும்.

பருப்புக் கீரை இலையை அரைத்துத் தீப்புண், கொப்புளம், வெந்நீர்க் கொப்புளம் ஆகியவற்றின் மீது பூசினால் எரிச்சல் தணிந்து புண் விரைவில் ஆறும்.

மஞ்சளுடன் இக்கீரையைச் சேர்த்து அரைத்துக் கட்டிகளில் பூசினால் கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறி புண் ஆறும்.

 

கல்யாண முருங்கை இலை

 

1. கல்யாண முருங்கை இலை, சீரகம் இரண்டையும் நெல்லிச் சாறு விட்டு அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தம், பித்த மயக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் சரியாகும்.

2. கல்யாண முருங்கை இலையுடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் சளி மற்றும் கப நோய்கள் குணமாகும்.

3. கல்யாண முருங்கை இலையுடன், ஊற வைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், உடல் சூடு, வெள்ளைப்படுதல், வெட்டைச்சூடு போன்ற குறைபாடுகள் தீரும்.

4. கல்யாண முருங்கை இலையுடன் சிறிது பார்லியைச் சேர்த்து அரைத்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

5. கல்யாண முருங்கை இலையுடன் ஓமம், வாய்விளங்கம் இரண்டையும் சேர்த்து அரைத்து இரவில் சாப்பிட்டு வந்தால், அதிகாலையில் மலம் தாராளமாகக் கழியும்.

6. கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து, காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் தாமதித்த மாதவிலக்கு சீராகும்.

7. கல்யாண முருங்கை இலையுடன் சம அளவு அம்மான் பச்சரிசி இலையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

9. கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்துப் பூசினால், படை சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

10. கல்யாண முருங்கை இலை, முருங்கை இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த சோகை குணமாகும்.

 

முளைக் கீரை

 

கீரைத் தண்டாக வளரும் தண்டுக்கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும்.

முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும். வருடம் முழுவதும் தடையின்றி கிடைக்கும்.

முளைக்கீரையை விதைத்த பின்னர் 45 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். அதற்கு மேல் வளர விட்டால் கீரை முதிர்ந்து தண்டு நார் பாய்ந்துவிடும். உண்ணுவதற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் முளைக்கீரையும் ஒன்று.

முளைக்கீரையில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் இருக்கின்றன. குறிப்பாக சுண்ணாம்புச் சத்து நிறைய இருக்கிறது.

நல்ல மலமிளக்கியாகவும் அது விளங்குகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

முளைக்கீரையைப் பருப்புடன் நன்கு வேக வைத்து மசித்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

முளைக்கீரை உணவுக்குச் சுவையூட்டுவதுடன் பசியையும் தூண்டுகிறது. முளைக்கீரையை நன்கு கழுவிச் சிறிது வெங்காயம், புளி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவை சேர்த்து வேக வைத்துக் கடைந்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உட்சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் ஆகிய நோய்கள் குணமாகும். அதோடு கண்ணும் குளிர்ச்சியடையும்.

முளைக் கீரையைத் தொரர்ந்து சாப்பிடுவதால், சொறி, சிறங்கு முதலிய நோய்கள் குணமாகின்றன. இந்தக் கீரை வெப்ப சுரத்தைத் தணிக்கிறது.

முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும். முளைக் கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்துக்கள் இரத்தத்தை சுத்தி செய்து உடலுக்கு அழகையும் மெருகையும் ஊட்டுகின்றன.

இக்கீரையில் மட்டுமே எல்லா விதமான தாது உப்புக்களும் உள்ளதால் இதை நாள்தோறும் உணவுடன் சேர்த்துக்கொண்டால் ஒரு பரிபூரண உணவுக்குரிய எல்லாச் சத்துக்களையும் நாம் பெற முடியும்.

முளைக்கீரை காச நோயின் துன்பத்திலிருந்து விடுபட வைக்கும்.

 

புளியாரைக் கீரை

 

அரைக்கீரை வகையைச் சேர்ந்த புளிப்புச் சுவையை உடைய இந்தக் கீரையில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. நன்கு பசியைத் தூண்டி, உடல் எடையை அதிகரிக்கும். உடலில் புது ரத்தம் ஊற வைக்கும். நாள்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து இது. தலைவலி, தலைச்சுற்றல், காய்ச்சல், வாந்தி, மயக்கம், வாத நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும். இந்தக் கீரையைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டால் அதிசயமான பலன்களைப் பெறலாம். குளிர்ச்சியான உடல் தன்மை கொண்டவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடக்கூடாது.

புளியாரைக் கீரையின் மருத்துவப் பயன்கள்

1. புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், மிளகு (3), மஞ்சள் தூள் (2 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகி, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
2.
புளியாரைக் கீரையை சிறுபருப்பு சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தீரும்.
3.
புளியாரைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.
4.
புளியாரைக் கீரையுடன் வெந்தயம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
5.
புளியாரைக் கீரையை மிளகு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் அனைத்து விதமான காய்ச்சல்களும் சரியாகும்.
6.
புளியாரைக் கீரையைச் சாறு எடுத்து, அதில் உப்பு சேர்த்துக் காய்ச்சவும். மீண்டும் மீண்டும் காய்ச்சுவதில் பாத்திரத்தில் படியும் உப்புப் படிவத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும். இதைப் பொடியாக்கி வைத்துக்கொண்டு, 2 சிட்டிகையை எலுமிச்சைச் சாறில் கலந்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட வயிற்று வலியும் உடனே மறையும். குடற்புண்களும் மாயமாக மறையும்.
7.
புளியாரைக் கீரை சாறு எடுத்து, அதில் மாதுளம் பழத்தோலை அரைத்து, தயிரில் குழைத்துச் சாப்பிட்டால் சீதபேதி, வயிற்றுக் கடுப்பு இரண்டும் தீரும்.
8.
புளியாரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் பித்த நோய்கள் குணம¡கும்.
9.
புளியாரைச் சாறில் துத்தி இலையை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் சரியாகும்.
10.
புளியாரைச் சாறில் ஓமத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

மணத்தக்காளி

 

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்னைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை.

இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும்.

மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து. மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.

கொத்தமல்லிக் கீரை

 

கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள்.

கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது.

கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும்.

இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது.

இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.

இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும்.

கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும்.

பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும்.

முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.

மணலி கீரை

 

 

மணலிக் கீரை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இது தென்னிந்தியா முழுவதும் பரவிக் காணப்படும். மேலும் பஞ்சாப், சிந்து போன்ற இடங்களிலும் பரவிக் கிடக்கிறது.

மணலிக் கீரை சமையலுக்கு உகந்த கீரைகளுள் ஒன்று.

இதனை மணல்கீரை, நாவமல்லிக்கீரை என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

இதன் இலை தண்டு அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. நம் முன்னோர்களின் மருத்துவக் கீரைகளில் மணலிக் கீரையும் இடம்பெற்றுள்ளது.

வதைமறும் நெஞ்சேறி வந்த கபம்விலகுஞ்

சீதமுட நோய்பலவுந் தீருங்காண் போதவுள்ளே

வீறு கிருமியோடு மேவாப் பயித்தியம்போங்

கூறுமண லிக்கீரைக்கு

- அகத்தியர் குணபாடம்

வயிற்றுப் பூச்சி நீங்க

வயிற்றில் கிருமிகள் இருந்தால் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் இவை உறிஞ்சி விடுவதால், உடல் பலவீன மடைந்து காணப் படுவார்கள். பெரும்பாலும் சிறு குழந்தைகள் தான் இந்த வயிற்றுப் பூச்சியால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். மேலும் வயிற்றுப்புண், குடல்புண், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படுவதற்கு இவை காரணமாகின்றன. இந்த வயிற்றுப் பூச்சிகளுக்கு மருந்துகள் சாப்பிட்டாலும் முழுமையாக ஒழிந்துவிடாது. இவை முற்றிலும் அறவே நீக்க மணலிக் கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கலந்து கூட்டு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சி நீங்கும்.

மார்புச்சளி

சளியின் அபகாரம் அதிகரித்து அது மார்பு பகுதியில் சேர்ந்து சளி கட்டிக்கொள்வதால் தொடர்ந்து இருமல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. இந்த மார்புச் சளியை போக்க, மணலிக்கீரையை நன்கு நீர்விட்டு அலசி பின் அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும். அல்லது மணலிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலயில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க

பொதுவாக கீரைகள் அனைத்துமே மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. மணலிக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி வாரம் இருமுறை பாசிப்பருப்பு கலந்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

ஞாபக சக்தியைத் தூண்ட

ஞாபக மறதி மனிதன் வாழ்வை சீரழிக்கும் நோய். ஞாபக மறதிக்கு பித்த அதிகரிப்பே காரணம். மேலும் மூளைக்கு தேவையான சத்துக்கள் குறைவதால் ஞாபக மறதி உண்டாகும். இக்குறையை நீக்க மணலிக் கீரை மசியல் செய்து சாப்பிடுவது நல்லது.

குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்க

மணலிக் கீரையின் சமூலத்தை நீர்விட்டு அரைத்து 70 கிராம் அளவாக எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் அருந்தி விட்டு மறுபடியும் நான்கு நாள் இடைவெளிவிட்டு மூன்று நாட்கள் அருந்தி வந்தால் குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்கும்.

பைத்தியம் மாற

மூளை பாதிப்புள்ள குழந்தைகளுக்கு மணலிக் கீரையை மசியல் செய்து கொடுத்தால் மூளை நரம்புகள் நன்கு பலம் பெறும். இதனால் பைத்தியம் குணமாக வாய்ப்புண்டு.

ஈரல் பலப்பட

ஈரல் பாதிக்கப்பட்டாலே உடலின் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும். இரத்தம் சீர்கெடும். கண்பார்வை கோளாறுகள் உண்டாகும். ஈரலைப் பலப்படுத்த மணலிக்கீரை கசாயம் செய்து அருந்தி வரவேண்டும்.

மணலிக் கீரையை குடிநீரில் கொடுக்க மார்புச் சளி, வயிற்றுப்புண் நீங்கும்.

மணலிக்கீரை கிடைக்கும் காலங்களில் வாங்கி உண்டு அதன் முழு மருத்துவப் பயனையும் அடைந்து ஆரோக்கியமாக வாழ்வோம்.

வல்லாரை

 

வல்லாரை கால்வாய் மேட்டிலும், குளக்கரைகளிலும், ஆற்றோரங்களிலும், வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும்.

இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம்.

வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம். பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வைக்கலாம்.

இந்தக் கீரையை சாம்பார் செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாகும். வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும்.

வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.

சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.

வல்லாரை கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து அது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

வல்லாரைக் கீரை பொதுவாக மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியை வளர்க்கிறது. நரம்புத் தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இருதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது. குடல் புண், காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர் தகராறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

வல்லாரை வைத்தியம்

1. அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று அடுத்த நான்கு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்த விதமான அச்சம், பயம் போன்ற பல வகையான மனநோய்களும் விலகும்.
2.
தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். இனிமையான குரல் வளம் உண்டாகும்.

3. வல்லாரை இலை 4, அக்ரூட் பருப்பு 1, பாதாம் பருப்பு 1, ஏலக்காய் 3, மிளகு 3 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.

4. வல்லாரைச் சாறு 15 மி.லி., கீழாநெல்லி இலைச்சாறு 15 மி.லி., பசும்பால் 100 மி.லி. ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், முற்றிய மஞ்சள் காமாலை கூட குணமாகும்.

5. வல்லாரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் போன்றவை விலகும்.

6. வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.

7. வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.

கொடிப் பசலைக் கீரை

 

கொடி வகையைச் சேர்ந்த இக்கீரை கொம்புகள், வேலிகளைச் சுற்றிப் படரும். இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது. தேகச் சூட்டைத் தணித்து உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.

இக்கீரையை நன்றாக நசுக்கி, தலையில் வைத்துக் கட்டினால் உடலில் ஏற்படும் மிதமிஞ்சிய உஷ்ணத்தைப் போக்கும்.

இதன் இலைகளை நெருப்பிலிட்டு வதக்கி, வீக்கங்கள், கட்டிகள் ஆகியவற்றின் மீது வைத்து கட்டினால் விரைவில் குணம் கிட்டும். உடல் வறட்சியைப் போக்கும். நீர் தாகத்தைத் தணிக்கும்.

மலத்தை இளக்கி, மலச்சிக்கலைப் போக்கும்.

குழந்தைகளுக்கு நீர்கோத்திருந்தால், பசலைக் கீரையைச் சாறு பிழிந்து அதில் கற்கண்டு கலந்து ஒரு வேளை ஒரு ஸ்பூன் வீதம் ஓரிரு நாட்கள் குடிக்கத் தந்தால் போதும். குணம் கிட்டும்.

கொடியில் அல்லாமல் தரையில் படரும் பசலையும் உண்டு. இது தரைப் பசலைக் கீரை என்று அழைக்கப்படுகிறது. இரண்டு கீரைக்கும் ஒரே பலன்தான்.

இக்கீரை அதிக குளிர்ச்சித் தன்மை உடையது. எனவே குளிர்ச்சித் தேகம் கொண்டவர்கள் அதிகம் உண்ணக்கூடாது. கபம் கட்டும்.

முருங்கைகீரை

 

பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் பெருகும். எனவேதான், கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.
முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும். 

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது.

இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயன்,வைட்டமின் உள்ளது.

கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம்,தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சுப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படும் திருகுவலு,வயிற்றுப்போக்கு கட்டுபடும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் செர்த்துப பருகிவர காசநோய்,கீழ்வாயு,முதுகுவலி குணப்படும்.

வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.

ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயன்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்

புதினா

 

கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர்.

புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.

புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். சீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும்.

ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.

புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது.

புதினாக் கீரையை வீட்டுத் தோட்டத்திலும், தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம். புதினாக் கீரை வாங்கும்போது இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை மண்ணில் ஊன்றி வைத்தால் அவை தளிர்த்துப் புதிய இலைகளைக் கொடுக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது.

புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். புதினாக்கீரையைக் கொண்டு ஓர் அருமையான பற்பொடி தயார் செய்யலாம். இந்தப் பற்பொடியை உபயோகித்து வந்தால் பல்லீரல் வேக்காடு, பல்லீரலில் இரத்தம் வருதல், பல் சொத்தை, பல் அசைவு இவைகளைக் குணப்படுத்தும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க இந்தப் பற்பொடி நன்கு பயன்படும்.

இந்தப் பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார்.

எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த அளவிற்கு புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.

சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும்.

தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

கீரைத்தண்டு

 

சாதாரணமாக கீரைத்தண்டு தோட்டங்களில் விளைகிறது. இதில் செங்கீரை, வெண்கீரை என்று இரண்டு வகை உண்டு. கீரைத்தண்டின் இலை, தண்டு, வேர் அனைத்தையும் சமைத்து உண்ணலாம். இக்கீரைத் தண்டு இனிப்புச் சுவை உடையது.கீரைத்தண்டை சமைத்து உண்டால் சிறுநீர் வெளியேறும் போது உண்டாகும் எரிச்சல், வெள்ளை ஒழுக்கு, இரத்த பேதி போன்றவை குணமாகும். வயிற்று வலிக்கும் நல்லது.

வாய்வுத் தொல்லையும் மாறும்.செங்கீரைத் தண்டு தேகச்சூட்டை மாற்றும். காய்ச்சலுக்கு நல்லது. தீராத பித்தத்தைக் குணமாக்கும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக இரத்தப் போக்கைக் கட்டுபடுத்தும்.

கீரைத்தண்டு நார்ச்சத்து மிகுந்தது. எனவே மலத்தை இளக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மலம் கழிக்கும் போது ஆசனவாயில் உண்டாகும் எரிச்சலைத் தணிக்கும். மூலநோயைக் குணப்படுத்தும்.கீரைத்தண்டை வெறுமனே தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் குடித்தாலும் நிரம்ப பலன் உண்டு. தேகம் குளிர்ச்சி பெறும். சமைத்தும் உண்ணலாம்.

முள்ளங்கிக் கீரை

முள்ளங்கி மண்ணுக்கு அடியில் தோன்றும் கிழங்கு ஆகும். அதன் மேல்பாகத்தில் வளரும் கீரையே முள்ளங்கிக் கீரை என்று அழைக்கப்படுகிறது. இக்கீரைக்கு மருத்துவக் குணங்கள் உண்டு என்றாலும் அடிக்கடி சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இக்கீரை வயிற்றில் புழுக்களை உண்டாக்கும். பித்தத்தையும் அதிகரிக்கும். வாய்வுத் தொல்லையை உண்டாக்கும். இருப்பினும் வெள்ளையால் வரும் நீர் அடைப்பிற்கு முள்ளங்கியைப் போலவே இக்கீரையும் பயன்படுகிறது. இக்கீரையின் தளிர்களைப் பறித்து, சோற்று உப்புடன் சேர்த்து தினமும் காலையும் மாலையும் உண்டு வந்தால் வெள்ளையால் உண்டாகும் நீர் அடைப்பு விலகும். இக்கீரை கல்லீரலில் உண்டாகும் பல கோளாறுகளைக் குணப்படுத்தும், அதுபோல் இருதயத்திற்கும் பலம் சேர்க்கும். இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் அவ்வப்போது இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் பலன் கிட்டும்.

 

முடக்கத்தான்

 

முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.

முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்ட¡கப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.

துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.

இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்ட¡ல் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.

 

வெந்தயக் கீரை

 

சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை எனப்படுகிறது. இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது. இது மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலன் தந்துவிடும். கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூக்கும் முன்னரேயே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறமுடையது. சுமார் இரண்டரை அடி வரை வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க முடியும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இதை துவரம்பருப்புடன் வேக வைத்து கூட்டாகச் செய்து சாப்பிடலாம். இந்தக் கீரையுடன் புளி சேர்த்து வேக வைத்தும் கூட்டு தயாரிக்கலாம்.   

வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது.

 

வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக்கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும். நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும். இந்தக் கீரையை வதக்கி அதனுடன் வாதுமைப் பருப்பு, கசகச கோதுமை ஆகியவற்றைச் சேர்த்துப் பால்விட்டு அரைத்து நெய்விட்டுக் கிண்டி உட்கொண்டால் உடலுக்கு வலிமையும், வனப்பும் ஏற்படும். இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரையுடன் சீமைப்புள், அத்திப்பழம், திராட்சை ஆகியவை சேர்த்துக் கஷாயமிட்டு தேன் கலந்து உண்டால் மார்பு வலி, மூக்கடைப்பு ஆகிய நோய்கள் நீங்கும். மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.   

வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும். இந்தக் கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும். வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது. சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது. வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும்.  

 

ஆரைக் கீரை

நீர் நிறைந்த வயல்கள், நீரோடையின் கரைகள், ஏரிக்கரைகளில் வளரும் இக்கீரைக்கு பூவோ காயோ எதுவும் இல்லை. நான்கு இலைகளுடன் காணப்படும் இக்கீரையை ஆவாரை, சதுப்பன்னி என்றும் அழைக்கிறார்கள். ஆரைக்கீரை இனிப்புச் சுவை உடையது.

குளிர்ச்சித் தன்னம உடையது. நாக்கிற்கு நல்ல சுவை தருவது இக்கீரை. உடல் உஷ்ணத்தைத் தணித்து, குளிர்ச்சி குறையாமல் வைத்திருக்கும்.
இது அதிகமாய் வெளியேறும் சிறுநீரைக் கட்டுப்படுத்தும். அதனால் உடலில் நீர்ச்சத்து இருக்கும். வறண்ட தேகம் உடையவர்க்கு உகந்கது.
இக்கீரையைச் சமைத்து உண்டால் வெள்ளை நோய் குணமாகும். அதிகமான தாகத்தைத் தணிக்கும். சிலருக்கு சிறுநீரில் இரத்தம் கலந்து போகும். அவர்களுக்கு இக்கீரை கண் கண்ட மருந்து. சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் மதியம் மட்டும் இக்கீரையைத் தொடர்ந்து நாற்பது நாட்கள் சமைத்து உண்டுவர, நல்ல குணம் கிட்டும். இக்கீரை உடலுக்கு நல்ல வலுவூட்டும். இக்கீரையை வெயிலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி வடி கட்டிக் கொள்ளவும். அதில் சிறிதளவு சக்கரையை கலந்து நாள்தோறும் குடித்து வந்தால் நோய்கள் வராது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கீழாநெல்லிக் கீரை

 

நீர் நிறைந்த சதுப்பு நிலங்களிலும், வயல் மற்றும் கால்வாய் ஓரங்களில் வளரும் இக்கீரை எளிதில் கிடைக்கும்.  

கீழாநெல்லி, கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இக்கீரையில் கிட்டத்தட்ட அனைத்துச் சுவைகளும் அடங்கியுள்ளன. புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளும் உண்டு. இக்கீரை குளிர்ச்சித் தன்மை உடையது.  

இக்கீரையின் தளிர்களை அரைலிட்டர் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் சீதபேதி உடனே மாறும். இரத்த சோகையால் உடல் வெளுத்துக் காணப்படுபவர், மேகநோயால் அவதிப்படுபவர் இதை நன்றாக அரைத்து பசுவின் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.  

மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த இக்கீரையைத் தவிர வேறு மருந்து கிடையாது. கீழாநெல்லிக்காய்களே ஆங்கில மருத்துவத்திலும் மஞ்சள் காமாலைக்குப் பயன்படுத்தப் படுகிறது.  

கீழாநெல்லி, தும்பை இலை, கரிசலாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, காலை, மாலை சுமார் பத்து நாட்கள் உண்டு வந்தால் காமாலை நோய் பூரணமாகக் குணமாகும். பெரியவர்கள் நெல்லிக்காய் அளவும், சிறியவர்கள் சுண்டைக்காய் அளவும் உட்கொண்டால் போதுமானது. காரம், புளியைத் தவிர்த்து, வழக்கத்திற்கு பாதி உப்பு சேர்த்து, பால்சோறு அல்லது தயிர்சோறு மட்டும் சாப்பிட்டு வர வேண்டும்.  

 

இக்கீரை பசியை நன்றாகத் தூண்டும்.  

சொறி, சிரங்குகளுக்கு இக்கீரையை உப்புடன் சேர்த்து அரைத்துப் பூசினால் நல்ல பலன் கிட்டும். காயங்களுக்கு உப்பு சேர்க்காமல் வெறுமனே இக்கீரையை அரைத்து, பற்றுப் போட்டால் காயங்கள் விரைவில் ஆறும்.  

மாதுளைக் கொழுந்தும், இக்கீரையையும் சம அளவில் கலந்து அரைத்து, பசுவின் தயிர் அல்லது மோரில் கலந்து ஓரிரு நாட்கள் குடித்தால் போதும், சீதபேதி குணமாகும்.  

கண் பார்வை மங்குதல், மாலைக் கண் போன்ற கோளாறுகளுக்கு, கீழாநெல்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரையை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து காலை, மாலை புளித்த மோரில் கலந்து தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகினால் போதும். பார்வை மிகும். கண்பார்வை கூர்மை பெறும்.

 

துத்திக் கீரை

 

கீரைகளின் பயன்களை அனைத்து மக்களும் உணரத் தொடங்கிவிட்டனர். காலை நேரங்களில் கீரைக் கட்டுகளை மக்கள் வாங்கிச் செல்வதை நாம் காண்கிறோம்.

குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் இதன் மகிமையை சில காலம் மறந்து நோய்களின் உறைவிடமாக தங்கள் உடம்பை ஆக்கிக் கொண்டு விட்டனர் பலர்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் குணம் கீரைகளுக்கு அதிகம் உண்டு என்பதை

இந்தக் கீரை மருத்துவக் குணங்கள் கொண்ட கீரையாகும். இதனை கக்கடி, இக்கசி என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

இவை இந்தியாவில் உஷ்ணப் பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இவற்றில் பால் துத்தி, சிறுதுத்தி, கருந்துத்தி, ஐயிதழ்துத்தி, காட்டுத் துத்தி, கொடித்துத்தி, நாமத்துத்தி, நிலத்துத்தி, பொட்டகத்துத்தி என பல வகைகள் உள்ளன.

இதன் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.

மூலநோய் கட்டி முளைபுழுப்புண் ணும்போகுஞ்

சாலவதக் கிக்கட்டத் தையலே மேலுமதை

எப்படியேனும் புகிச்ச எப்பிணியும் சாந்தமுறும்

இப்படியிற் றுத்தி யிலையை

(அகத்தியர் குணபாடம்)

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது. மனச் சிக்கல் இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்துவிடும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.

மூல வியாதி குணமாக

காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக மாறுகிறது.

இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.

உடல் சூடு தணிய

துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.

வெப்பக்கட்டி குணமாக

துத்தியிலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும்.

துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.

பல்ஈறு நோய் குணமாக

துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.

குடல் புண் ஆற

துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.

சிறுநீர் பெருக்கி

சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.

துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.

 

 



--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

1 comment:

Nanjil Siva said...

நல்ல அருமையான விரிவான தகவல்கள்...வாழ்த்துக்கள்...