Tuesday, November 1, 2011

டாஸ்மாக்கால் அழியும் குடும்பங்கள் - உண்மைக்கதை


விடிகாலையில் உழவர் சந்தைக்கு காய் வாங்குவதற்காக மழையில் நனைந்து கொண்டே மனையாளுடன் சென்றேன். மழை அரும்புகள் சாரையாய் பூமியைத் தழுவிக் கொண்டிருந்தன. ”பூமி தன்னைத் தானே குளிர்விக்கிறது போலும் கோதை” என்றேன். வழமை போல, ”ஓ அப்படியா?” என்று பதில் வந்தது.


செல்வ விநாயகர் கோவிலைத் தாண்டும் போது பார்வை அவரை நோக்கிச் செல்ல, அங்கு அவருக்கே ஏதும் இல்லாத நிலை போல. மார்கழி மாதம் வந்தால் பொங்கல், பிரசாதம் என்று களையாக இருப்பார் பிள்ளையார். நானும் வாரா வாரம் பிள்ளையாரை நேசமாகப் பார்க்க ஆரம்பித்தேன். இனிப்பு பொங்கல் சூடாய் கிடைக்கும். சில சமயம் சுண்டலும் தருவார்கள். எந்த பாரியாளின் கைப்பக்குவத்திற்கும் எட்டாத சுவையாக இருக்கும் பிரசாதம்.
 

இப்போதெல்லாம் பிள்ளையார் கோவிலில் அதிகம் கூட்டம் காணாது. இடது பக்கமாய் இருக்கும் கலைஞர் படிப்பகத்தின் திண்ணையில் ஒன்றிரண்டு பேர் பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்கள். மழையினால் இன்றைக்கு ஒருவரையும் காணோம்.

சந்தையின் வாசலில் பூ விற்றுக் கொண்டிருக்கும் பெண் தலை மீது பிளாஸ்டிக் பை சிவப்பாய் மாட்டப்பட்டிருந்தது. எப்போது பார்த்தாலும் மலர்ந்த பூவை நூலோடு கோர்த்துக் கொண்டே இருப்பார் அந்தப் பெண்.பைக்குளுக்கு டோக்கன் வாங்கும் பாட்டி எப்போதும் புன்னகையுடனே இருப்பார். அவரைப் பார்த்து சிரிப்பொன்றினை சிந்து விட்டு, வண்டியை கீரைக்கார கவுண்டர் இருக்குமிடம் விட்டேன்.

”மழை வந்து இன்னிக்கு வியாபாரத்தை கெடுத்துப் போச்சுங்க” என்றார்.

“மழை வந்தாலும் சங்கடம், வல்லேன்னாலும் சங்கடம் தான் போல” என்று சொல்லிவிட்டு, ”நவாப்பழத்தை பசங்ககிட்டே கொடுத்தேன்னா, அவங்க உருட்டி விளையாடுறாங்க” என்றேன்.

கேட்டு விட்டு சிரி சிரியென்று சிரித்தார். உழவர் சந்தை நவாப்பழம் ஒன்றும் அப்படிச் சுவையாக இருப்பதில்லை.கொஞ்சம் துவர்ப்பு தட்டுது. ஆசையாக் கேட்டேன்னு கவுண்டரு பறிச்சிக் கொடுத்தாரு. அதுல இரண்டைக் கொண்டு போயி பிள்ளையளுக்கு கொடுங்கோன்னு சொன்னாரு. அந்தப் பழத்தை வாங்கி பசங்க, கீழே பளிங்கு போல உருட்டி விளையாட ஆரம்பிச்சுட்டானுங்க.
 

வியாபாரம் ஒன்னும் சரியில்லை. கூட்டமும் குறைவாத்தான் இருந்தது. எதிர்த்த கடைக்காரர் அழுகிப் போன பூசணிக்காய குப்பைத் தொட்டிக்குள்ளே தூக்கி போட்டுக்கிட்டு இருந்தாரு. கருவேப்பிலை விக்கிற அம்மாவைக் காணல.
 

”அண்ணன் மருமவன் ஆக்சிடெண்டில செத்துப் போனாரு இல்லைங்களா, அந்தப் புள்ள மருந்தைக் குடிச்சிட்டு, குழந்தைக்கும் கொடுத்துட்டு இப்போ குழைந்தையும் செத்துப் போச்சுங்க.அந்தப் புள்ளய மட்டும் காப்பாத்திட்டோம். என்ன ஏன் காப்பாத்துறீங்க. நான் செத்துத்தான் போவப்போறேன்னு சொல்லிகிட்டு இருக்குன்னாரு” கவுண்டரு.

போனவாரம் சந்தைக்கு போன போது, ”லாரி சந்துக்குள்ளே இருந்து வந்த குடிகாரன் ஒருத்தன் கவுண்டர் அண்ணன் மருமகன் மீது வண்டிய ஒரே தாட்டா தாட்டிட்டானாம்.ஆளு ஸ்பாட்லே அவுட்டுங்கன்னாரு கவுண்டரு. அடப்பாவமேன்னு கேட்டுக்கிட்டு வந்தேன். இந்தவாரம் இப்படி ஒரு செய்தி.

'ஆக மொத்தம் ஒரு குடும்பமே காலி. யாரோ ஒரு குடிகாரப் பய குடிச்சிட்டு வந்து எதுக்க வந்தவன் மேல மோதி கொன்னுட்டான். ஊரு முழுக்க எங்கன பாத்தாலும் டாஸ்மாக் கடை. குடிச்சவன் செத்தான்னா அதை அவன் விதின்னு சொல்லலாம். குடிக்காதவன் குடிச்சவன்னால சாகுறானே அதை என்னன்னு சொல்லுறது? யாரைக் குத்தம் சொல்லுறது. இன்னிக்கு ஒரு குடும்பமே காணமா போச்சே அதுக்கு யாரைக் குத்தம் சொல்லுறது? என்ன உலகம்டா இதுன்னு என்னென்னவோ மனசுக்கு வந்து போச்சு.'

'இந்தப் புள்ளைக்கி அறிவு எங்க போச்சு, புருஷன் செத்தா என்ன இப்போ? புள்ளை இருக்குல்லே, நாளொன்னைக்கு லட்சம் லட்சமா டவுரி வாங்குற இந்தக் காலத்துல இப்படி ஒரு புள்ளையான்னு' மனசுக்குள்ளே தோணுச்சு.
 

வண்டியில மனையாள கூட்டிக்கிட்டு வரும் போது, பிள்ளையார் கோவிலைப் பார்த்தேன். கர்ப்பக் கிரகத்துக்குள்ளே உட்கார்ந்திருந்தார். வாசலில் யாருமில்லை. அய்யரு மட்டும் சோகமா உட்கார்ந்திருந்தார். ஏனோ முகம் தெரியாத அந்த ஆக்சிடெண்ட் ஆன மகராசன் மனசுக்குள் வந்து போனார்.

நேர நிர்வாக டிப்ஸ்!



பில்கேட்ஸ் முதல் பள்ளிக் குழந்தைவரை கடவுள் எல்லோருக்கும் சமமாகக் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம். இழந்தால் திரும்பப் பெறவே முடியாததும் அதுதான். நேர நிர்வாகத்தை சரியாக கடைபிடிப்பதும், நேரத்தின் அருமையை மனத்தில் பதிய வைத்துக்கொள்வதும் உங்கள் உடனடி நோக்கமாக இருக்க வேண்டும்.

அறையில் உங்கள் கண்களில் படும்படியான ஓர் இடத்தில் சரியான நேர நிர்வாகத்தின் பயன்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

* குறித்த நேரத்தில் வேலையை முடிப்பதால் குழப்பம் இருக்காது.
* நம்மைப்பற்றி நமக்கே ஒரு பெருமை உண்டாகும்.
* சமூகத்தில் மதிப்பு கிடைக்கும்.
* வாய்ப்புகளை இழக்க மாட்டோம்.
எனக்குத் தெரிந்த கல்லூரி மாணவி ஒருத்தி சமீபகாலமாக கைக்கடிகாரம் அணியக் காணோம். கேட்டால் ‘செல்ஃபோன் இருக்கே. நேரத்தை தெரிஞ்சுக்கணும்னா அதுவே போதுமே‘ என்றாள். இப்படி ஒரு நடைமுறை வசதி இருப்பது உண்மை. ஆனாலும் நேரம் நம் கண்ணில் அடிக்கடி பட்டுக்கொண்டே இருப்பது நல்லது. செய்யும் வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டியதன் அவசியத்தை அது நினைவு படுத்திக்கொண்டு இருக்கும்.
வீட்டில் உள்ள சின்னச் சின்ன பொருள்களையெல்லாம் ஒரு சின்ன சூட்கேஸ் அல்லது ஒரு பெட்டியில் போட்டு வைப்பது என்பதை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். கையோடு பெட்டியிலிருக்கும் பொருள்களின் பெயர் பட்டியலையும் எழுதி பெட்டியின்மேல் ஒட்டி விடுங்கள். அப்போதுதான் அதில் எதையாவது காணவில்லை என்றால் வீடு முழுவதும் தேடவேண்டிய கட்டாயம் ஏற்படாது. அந்தப் பெட்டியை மட்டும் ஆராய்ச்சி செய்தாலே போதுமானதாக இருக்கும். வீட்டிலும் அலுவலகத்திலும் அந்தந்தப் பொருளை அதற்கான இடத்தில் வையுங்கள்.

நாளைக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இன்றே திட்டமிடுங்கள். அப்படி செய்ய வேண்டிய காரியங்களை (எதை முதலில் செய்ய வேண்டும் எதை அடுத்தது என்கிற வகையில்) 1,2,3 என்பதுபோல் வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்தநாள் ஒவ்வொரு காரியமாக செய்து முடித்தவுடன் அந்த எண்ணுக்கெதிரே பெருமையுடன் ஒரு டிக் போட்டுக்கொள்ளலாம். இப்படி திட்டமிடுவதன் மூலம் குறித்த நேரத்தில் குறித்த வேலையை செய்த திருப்தி இருக்கும். செய்த வேலையிலும் ஒரு தெளிவு இருக்கும்
செய்யவேண்டிய காரியங்களுக்கு நேரம் ஒதுக்கும் போது கொஞ்சம் பிராக்டிகலாக யோசியுங்கள். ’நான்கு விஷயங்களைச் செய்யவேண்டும். ஒவ்வொன்றிற்கும் அரைமணி நேரமாகும்’ என்றால் நான்கை அரையால் பெருக்கி இரண்டு மணிநேரம் என்று திட்டமிட வேண்டாம். எதிர்பாராத இடையூறுகள் வர வாய்ப்புண்டு. எனவே இரண்டு மணிநேரம் என்பதற்கு பதிலாக இரண்டரை மணிநேரம் என்று கொஞ்சம் கூடுதலாகவே நேரம் ஒதுக்குங்கள். டென்ஷனின்றி வேலையை முடிக்கலாம்.

எந்த ஒரு செயலை செய்யும் போதும் உடல் - மனம்- திறன் மூன்றும் இணைந்து விருப்பத்துடன் செய்யுங்கள். நமக்குப் பிடிக்காத வேலையாக இருந்தாலும் கண்டிப்பாக செய்ய வேண்டிய பட்சத்தில், ஈடுபாடு காட்டும் போது அந்த வேலை சீக்கிரமாகவும் சிறப்பாகவும் முடியும். உடல் சோர்வும் தெரியாது.
குறித்த நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல் போடும்போது அவசியம் செய்ய வேண்டிய, ஆனால் அதேசமயம் உங்களுக்குப் பிடிக்காத காரியம் எதுவோ அதை முதலில் ‘செய்து தொலைத்துவிடுங்கள்.’ அப்போது மனத்தில் ஒரு நிம்மதி உண்டாகி மீதிக் காரியங்களை வேகமாகவே செய்து முடிப்பீர்கள்.

எப்பொழுதும் வேலை வேலை என்றில்லாமல் உங்களுக்குப் பிடித்த இசையை சற்றுநேரம் கேட்பதோ, உற்சாகம் தரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொஞ்சநேரம் பேசுவதோ நேர நிர்வாகத்துக்கு எதிரான செயல்கள் இல்லை. சொல்லப்போனால் இதனால் கிடைக்கும் உற்சாகம் காரணமாகவே வேலைகளைத் தடையில்லாமல் நீங்கள் செய்ய வாப்புண்டு. கடும் வேலைச்சுமையின்போது ரிலாக்ஸ் செய்வதில் தவறில்லை.
நீங்கள் இன்னும் புத்திசாலித்தனமாகக்கூட இதற்கு முன் கூறிய ஆலோசனையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட காரியத்தை முடித்தவுடன் உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்கலாம். மற்றொரு காரியத்தை செய்து முடித்தவுடன் அரைமணிநேரம் டி.வி. பார்க்கலாம். இது உங்களுக்கு நீங்களே அளித்துக் கொள்ளும் உற்சாகம்! இப்படி வைத்துக்கொண்டால் பிடித்த விஷயத்தை சீக்கிரம் செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தில் உங்கள் கடமைகளை இன்னும் வேகமாகவே முடித்துவிட வாய்ப்பு உண்டு.

தொலைக்காட்சி பார்க்கும்போது நடுவில்தான் எத்தனை விளம்பர இடைவேளைகள்! நாளை அணிய வேண்டிய உடைகளை எடுத்து வைத்துக் கொள்வது, நாளைக்கான காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்வது போன்ற விஷயங்களையெல்லாம் அப்போது செய்தால் அடுத்தநாள் ஆரவாரமின்றி அமைதியாகக் கழியுமே!
தொலைக்காட்சித் தொடர் எதையாவது தொடர்ந்து பார்க்கிறீர்களா? வேண்டாம் என்றால் விடவா போகிறீர்கள்? ஒன்றை கவனித்திருப்பீர்கள். பல சானல்கள் சரியான நேரத்துக்கு நிகழ்ச்சிகளைத் தொடங்குவதில்லை. ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்குப் பிறகுதான் தொடங்குகின்றன. அதை நடைமுறையில் தெரிந்துகொண்டு முன்னதாகவே டி.வி. பார்க்க உட்காருவதையாவது தவிர்க்கலாம். அந்த ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் எத்தனையோ காரியங்களை செய்து முடிக்கலாம். முயற்சி செய்து பாருங்கள்.

தொலைக்காட்சியில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி உங்களைக் கவர்ந்தால் அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த அறையை ஒழுங்குபடுத்தி வைக்கலாம். உதாரணத்துக்கு டீ-பாய் மேல் இருக்கும் நாளிதழ்களை அடுக்கி வைப்பது, ஷோ-கேஸ் பொம்மைகளை அடுக்கி வைப்பது, தரையைச் சுத்தப்படுத்துவது இப்படி ஏதேனும் ஒன்றைச் செய்யலாம்
செய்ய வேண்டிய வேலைகளை அவ்வப்போது மனத்தில் மட்டும் குறித்துக் கொள்ளாமல், கையோடு பளிச்சென்று தெரியும்படி வீட்டுக் கூடத்தில் ஒரு கரும்பலகை அல்லது வெள்ளைப் பலகையை மாட்டி எழுதி வையுங்கள். வேலை முடிந்ததும் உடனுக்குடன் மறக்காமல் பலகையில் குறித்துக்கொள்ளுங்கள். மறதியில் விட்டுப் போன வேலைகள் நினைவுக்கு வரும்.

ஏதோ ஓர் இனம்புரியாத காரணத்துக்காக செய்ய வேண்டிய ஒரு செயலைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் என்றால் அது சம்பந்தப்பட்ட இரண்டு மூன்று பேரிடம் ‘நான் நாளைக்கு இந்த செயலை செய்துவிடுவேன்‘ என்று சவால்போல சொல்லிவைத்து விடுங்கள். நீங்கள் தள்ளிபோட நினைத்தாலும் அவர்களது தேவைக்காகவாது உங்களுக்கு நினைவூட்டிவிடுவார்கள்
தொலைபேசியில் உரையாடும்போது சில நேரங்களில் முகவரி அல்லது முக்கியமான குறிப்புகள் எழுத வேண்டியிருக்கும். அதனால் சில வெள்ளைத் தாள்களும் பேனாவும் எப்போதும் அருகிலேயே இருக்கட்டும்! தொலைபேசியில் பேசும் போது எதிர்முனையில் இருப்பவரிடம் காத்திருக்கச் சொல்லி பேனாவைத் தேடினால் நன்றாக இருக்காது. இதன்மூலம் நேரமும் விரயமாகும்.

குறிப்பிட்ட நேரத்துக்கு யாரையாவது சந்திப்பதாகச் சொல்லியிருந்தால் ‘நம் திட்டமிட்டபடி 11 மணிக்கு இன்னிக்கு சந்திக்கிறோம், சரிதானே?‘ என்று அன்று காலையே அவரிடம் உறுதி செய்துகொள்ளுங்கள். இதன் மூலம் சந்திக்கும் நேரத்தை வலியுறுத்துகிறீர்கள். ஒருவேளை அவரால் இன்றோ அல்லது இன்றைக்கு 11 மணிக்கோ உங்களை சந்திக்க முடியாது என்றால் அதை முன்னதாகவே தெரிந்துகொண்டு நம் திட்டங்களைத் தெளிவாக வகுத்துக்கொள்ளலாம்.
எப்போதும் நமது உறவினர்கள், நண்பர்கள் வட்டம் சூழ இருப்பது நல்லதுதான். அவர்களது வருகை நன்மையளித்தாலும் மனதுக்கு மகிழ்ச்சி கிடைத்தாலும் அவர்கள் நேரத்தின் அருமை புரியாதவர்கள் என்றால் உங்கள் வீட்டுக்கு அவர்களைக் கூப்பிடுவதைவிட நீங்கள் அவர்கள் வீட்டுக்குச் சென்றுவிடலாம். கொஞ்சநேரம் பேசிவிட்டு நீங்கள் கிளம்பிவிடலாம்.

பொதுவாக உறவினர்களாக இருந்தாலும் நண்பர்களாக இருந்தாலும் வரவேற்பறையில் அமர வைத்துப் பேசுவோம். அறையில் பளிச் என தெரியும்படி, ‘எனக்கு நிறைய வேலை இருக்கிறது. உங்களுக்கு?’, ‘தாராளமாகப் பேசுவோம். ஆனால் சீக்கிரமே பேசி முடிப்போம்’ என்பதுபோன்ற வாசகங்களை மாட்டி வைக்கலாம். நேரத்தின் அருமையுணர்ந்து அவர்கள் வேலையை முடித்து கிளம்பி விடுவார்கள்
நாட்கள், வாரம், மாதம், வருடம் என ஒவ்வொரு வேலைகளையும் பட்டியலிட்டுச் செய்வோம். இவற்றை டைரியில் எழுதி வைப்பதைவிட கணினியில் விவரங்களாகப் பதிவு செய்து கொள்வது நல்லது. டைரி தொலைந்து போகலாம். ஆனால் எத்தனை வருடங்கள் கூடினாலும் கணினியில் பதிவான விவரம் வேண்டும்போது கிடைக்கும். அடுத்த பட்டியல் போடும்போது கை கொடுக்கும்.

அடிக்கடி மின்வெட்டு நடைபெறும் பகுதியில் இருக்கிறீர்களா? மின்வெட்டு இரவில் ஏற்பட்டால் வெளிச்சம் இருக்காது. பகலில் என்றால் மின்விசிறி சுற்றாவிட்டாலும் கூட வெளிச்சம் இருக்கும். எனவே முடிந்தவரை செய்யவேண்டிய வேலைகளை பகற்பொழுதில் முடித்து விடுங்கள். கூடுமானவரை மாலை அல்லது இரவுக்குத் தள்ளிப் போடாதீர்கள். இல்லையேல் அடுத்தநாள் வேலை பளு கூடி விடும்.
எவ்வளவோ இடங்களில் நாம் காத்திருக்க வேண்டியிருக்கும். நாம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட புத்தகம் ஒன்றை எப்போதும் எடுத்துச்சென்றால், காத்திருக்கும் வேளையில் படிக்கலாம். வரவு செலவு கணக்கை எழுதும் நோட்டுப்புத்தகம் ஒன்றையும் எப்போதும் கைவசம் வைத்திருக்கலாம். சரி செய்ய வேண்டிய விஷயங்களை குறிப்பெடுத்துக்கொண்டால் அடுத்த முறை சிக்கலின்றி வரவு செலவு செய்யலாம்.

உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். சத்தான உணவு, உடற்பயிற்சி போன்றவை தினமும் அவசியம். நேர நிர்வாகத்துக்கும் உடல் நலத்துக்கும் என்ன தொடர்பு என்று தவறிப்போய்கூட கேட்டுவிடாதீர்கள். திட்டமிட்டு செய்யும் வேலைகள், திட்டமிட்டபடி நடக்க நம் மனம் மட்டுமல்ல; உடலும் ஒத்துழைத்தால்தான் முடிக்க முடியும். எனவே, உடல் நலம் ஒழுங்காக இருந்தால்தான் திட்டமிட்டபடி செயல்களை முடிக்கமுடியும். உங்கள் நேரப் பட்டியலில் உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குங்கள்
கடின உழைப்பாளியாக இருப்பதைவிட புத்திசாலித்தனமான உழைப்பாளியாக இருங்கள். (Hard work (vs) Smart work) செய்ய அவசியமில்லாத காரியத்தை மாங்குமாங்கென்று செய்வானேன்? எந்தக் காரியங்கள் செய்ய வேண்டியவை அதிலும் எவையெல்லாம் உடனடியாகச் செய்யவேண்டியவை என்பதில் கவனம் செலுத்துங்கள். வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அனுபவமும் இதில் கிட்டலாம்.

பிறருக்கு உதவுவதில் தவறில்லை. ஆனால் உங்களுக்குப் பிடிக்காத, நீங்கள் செய்யத் தேவையில்லாத ஒரு காரியத்தை உங்கள் தலையில் கட்ட, உங்களுக்குப் பிடித்தவரே முயற்சித்தாலும் அதற்கு ஒத்துக்கொள்ளாதீர்கள். அவரது மனம் புண்படுமோ என்று நினைத்து உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள். முடியாது என்று கனிவாக, அதேசமயம் உறுதியாக மறுத்துவிடுங்கள். நாளடைவில் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் கூடும்.
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். நாம் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்ற பட்டியலை போட்டுவிட்டு, ‘நாம் இதைச் செய்தால் தப்பாகிவிடுமோ’ என்ற பயத்தின் காரணமாக சிலர் செய்ய வேண்டிய காரியங்களைத் தொடங்கமாட்டார்கள். அந்தச் செயலை செய்ய நினைக்கும் முன் அதைப் பற்றி ஆராய்ந்து யோசித்து பொறுமையாகச் செயல் படுங்கள். பயத்துக்கு நேரத்தை விரயமாக்குவதில் பெரும் பங்குண்டு.

சிலர் வேலைகளை சுறுசுறுப்பாகச் செய்ய தமது வீடுகளில் கடியாரத்தைக் கூட பத்து நிமிடம் ஃபாஸ்டாக வைத்திருப்பார்கள். அவர்கள் மனத்தில் இந்த உண்மை தெரியும்தான் என்றாலும் கடியாரத்தைப் பார்த்தவுடன் உண்டாகும் சுறுசுறுப்பு வேலைக்காக ஒதுக்கிய நேரத்தை அனுசரிக்க வைக்கும். அதேநேரம் நாம்தான் ஃபாஸ்டாக வைத்திருக்கிறோமே என்ற அலட்சியத்தையும் ஏற்படுத்திவிட வாய்ப்புண்டு.
தினமும் வழக்கத்தைவிட ஒரு அரை மணிநேரம் அதிகமாக விழித்திருக்கப் பாருங்கள். இரவு கொஞ்சம் அதிகமாக விழித்திருப்பதா? காலையில் கொஞ்சம் சீக்கிரம் எழுந்திருப்பதா? இந்தக் கேள்விக்கான பதிலை நீங்கள்தான் அதாவது பயாலஜிகல் க்ளாக் எனப்படும் உங்கள் உடல் இயக்கம்தான் தீர்மானிக்க வேண்டும். எப்போது விழித்திருந்தால் உங்கள் காரியங்களைச் சிறப்பாகவும் வேகமாகவும் செய்ய முடிகிறது என்பதைப் பொருத்துதான் நீங்கள் இந்த அதிகப்படி நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அலாரம் வைத்துக்கொள்வதில் குறைச்சலேயில்லை. அலாரம் அடித்து கண் விழித்தவுடன் நம்மில் ஒரு பகுதி ‘எழுந்திரு’ என்று சொல்லும். இன்னொரு பகுதி ‘அலாரத்தை நிறுத்து. ஐந்து நிமிடம் கழித்து எழுந்துவிடலாம்’ என்று சலுகை கேட்கும். மனத்தை உறுதியாக்கிக் கொண்டு உட்கார்ந்துவிடுங்கள். இந்த ஒரு நொடித் தீர்மானம் உங்களுக்கு தினமுமே கொஞ்சம் அதிக நேரத்தைப் பெற்றுத்தரும். அதனால், படுத்தவாக்கிலேயே அலாரத்தை நிறுத்த முடியாத அளவுக்கு கொஞ்சம் தள்ளியும், அதேசமயம் அலார ஒலி நம்மை எட்டும் அளவுக்கு அருகிலும் அது இருக்கும்படி வைத்து விடுங்கள்

நான் படித்த கடிகள். உங்களுக்காக...


நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?
ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.

வேலு : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர் : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.

பட்டைய கிளப்பும் பாக்கி : "நடிகையின் இடையைப் பார்த்தே வக்கீல் கேள்வி கேக்குறாரே, ஏன்?"
பேட்டை மாமா : "குறுக்கு விசாரணை பண்றாராம்".

டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
மாயான்டி மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?

வேலு : "ஓட்டல் ஓனர் வீட்ல பொண்ணு பார்க்கப் போனது தப்பாப்போச்சு"
ரமனன் : "ஏன்?"
வேலு : "பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு."

வேலு : எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு கிளார்க் இருக்காங்க . . .
கைப்பில்ல : இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?
வேலு : நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.

வேலு : என் சொந்த ஊரு மதுரை. இப்பதான் திருச்சி வர்றேன். என் பேரு 'அங்கு ராஜ்'
பாக்கி : இங்கு என்ன பேர் வச்சிருக்கீங்க?
அரசியல்வாதி 1 : கட்சியில எந்தத் தொண்டரும் சரியா வேலை செய்ய மாட்டேங்குறாங்க.
அரசியல்வாது 2 : அப்ப 'தொண்டர்கள்' னு சொல்லுங்க.

சர்வர் : முதலாளி சதாம் உசேன உங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கலாம் அதுக்காக போர்டுல இப்படியா எழுதறது.
முதலாளி : என்ன எழுதியிருக்கேன்?
சர்வர் : தயிர் சதாம் தக்காளி சதாம் லெமன் சதாம் ரெடி அப்படீன்னு எழுதியிருக்கீங்க.

பாக்கி : ஏன் சார் நீங்களோ வீணை வித்வான் பின்ன ஏன் குரல் சரியில்லைன்னு கச்சேரி வேணாண்டீங்க?
ரமனன் : நான் பாடிக்கிட்டே தான் வாசிப்பேன் அதனால தான்.

வேலு : கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா
பாக்கி : நீ என்னாவே....?
வேலு : காலியாயிருவேன்.

சிலுக்கு சீனி : "படம் சக்கைப்போடு போடுறமாதிரி ஒரு தலைப்பு சொல்லுங்க"
விச்சு : "கரும்பு".

ரமனன் : புத்தகக் கடைக்காரர்கிட்ட வம்பிழுத்தது தப்பாப் போச்சு.
வேலு : ஏன்?
ரமனன் : நல்லா புரட்டி எடுத்துட்டாரு.

டாக்டர் : அந்தப் பேசண்டுக்கு என் மேல கோபம் போல தெரியுது.
நர்ஸ் : எப்படிச் சொல்றீங்க ?
டாக்டர் : நாக்கை நீட்டச் சொன்னா, அந்த சாக்குல நாக்கைத் துருத்துறாரே.

வேலு : கைலி வியாபாரி எப்படி சிரிப்பாரு?
பாக்கி : கு'லுங்கி' கு'லுங்கி' த்தான்.
அவர் : வியாபாரத்துல என்னோட பிரதிபலிப்பு என் மகனிடமும் தெரியுது.
இவர் : என்ன வியாபாரத்துல?
அவர் : கண்ணாடி வியாபாரத்துல.

பாக்கி : வாக்கு மூலம் குடுக்கும்போது உட்கார முடியாது
ரமனன் : ஏன்?
பாக்கி : அது வாக்கு 'மூலம்' ஆச்சே.

வேலு : "அங்கே என்ன பட்டிமன்றம்?"
விச்சு : "வீரப்பனா? அதிரடிப்படையா? ன்னு தான்.

வேலு : "என்னப்பா சர்வர் மெதுவடைல ஓட்டை இவ்வளவு பெரிசா இருக்கே."
பேட்டை மாமா : "நான்தான் சார் தவறுதலா கால் கட்டை விரலால ஓட்டை போட்டுட்டேன்"

நிருபர் : உங்க பேர்ல ரசிகர் மன்றம், நற்பணி மன்றம்னு வைக்கிறாங்களே, அது பத்தி என்ன நினைக்கிறீங்க?
நடிகை : அதைவிட என்பேர்ல நீதி 'மன்றம்' வச்சா ரொம்ப சந்தோசப்படுவேன்.

நண்பர் 1 : என்ன சார் ஸ்டூல் பாக்கவே வினோதமா இருக்கு.
நண்பர் 2 : இது ஸ்டூல் இல்ல மைசூர்பாகு சரியா வரல்ல. அதனால வீணா போக வேண்டாமேன்னு ஸ்டுலா பண்ணிட்டா யாராவது வந்தா உக்கார வச்சுக்கலாம் பாருங்க.

பாஸ்கி : புதுசா ஒரு சின்ன வீடு செட்டப் பண்ணலாம்னு இருக்கேன்.
ஜோதிடர் : அதுக்கு நான் என்ன பண்ணனும் ?
பாஸ்கி : வாஸ்து சாஸ்திரப்படி வயசு குறிச்சுக் குருத்தீங்கன்னா நல்லா இருக்கும்.

பாஸ்கி : அந்த ஹோட்டல் கோகோ கோலா ஃப்ரீ அப்படீன்னு போட்டிருந்தத பாத்துட்டு ஏமாந்துட்டேன்!
ஏன்?
பாக்கி : ஸ்ட்ராவுக்கு 10 ரூபா சார்ஜ் பண்ணிட்டாங்களே!
வேலு : நேத்து பல்லே விலக்கலை .. ..
ரமனன் : ஏன் .. ..
வேலு : என் மனைவி பக்கத்திலே இருந்ததால் வாயே திறக்க முடியலை ..

கணவன் : நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்னு சொன்னான்,,, நீ ஏண்டி முழிக்கிறே ?
மனைவி : அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு மார்க் வாங்கியிருக்கிறதை.

பாக்கி : நேற்று ஏன் லீவு ?
ரமனன் : ஒரு சேஞ்சுக்கு வீட்டிலேயே தூங்கிட்டேன் சார்

கணவன் : "உங்க அப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம். அதுக்காக தங்க நகைக்கு பதிலா வெங்கல நகை செஞ்சு போட்டா என்ன அர்த்தம்?"
மனைவி : "நீங்க எனக்கு மூணாவதா வந்த புருஷன்னு அர்த்தம்."

வேலு : அந்த விமான விபத்து எப்படி நடந்தது ?
பாக்கி : யரோ ஒரு பாராசூட் வீரர் விமானம் பறந்துகிட்டு இருந்தப்ப குறுக்க நின்னு லிஃப்ட் கேட்டாராம் .. ..

ரமனன் : சதா வாந்தி வருது டாக்டர்
முராரி : சாதா வாந்தியா... ஸ்பெஷல் வாந்தியா

காதலன் : அன்பே ,,, இந்த கடற்கரை ,,, குளிர்ந்த காற்று தனிமை இதெல்லாம் என்ன தோண்றது ?
காதலி : வாய்க்கு ருசியா சாப்பிட ஒரு சுண்டல்காரனைக்கூட காணலையேன்னு தோணுது ,,,

கோச் : அவ்வளவு ஊக்க மருந்து எடுத்துக்கிட்டும் எப்படி உன்னால ஓட்டப்பந்தயத்துல பதக்கம் எடுக்க முடியாம போச்சுன்னு தெரில்ல."
வீரர் : "அங்கதான் என்னோட புத்திசாலித்தனம் இருக்கு முதல்ல வந்திருந்தா நான் மருந்து எடுத்துக்கிட்டது தெரிஞ்சுருக்கும் அதனால கடைசியா வந்தா சந்தேகம் வராது பாருங்க."

நீங்கள் எந்த வகை?



'எம்புள்ள நல்லவனா, வல்லவனா வளரணும்!' என்பதுதான் இங்கு எல்லா பெற்றோர்களின் பொது விருப்பமும்! ஆனால், அதற்கான சரியான சூழ்நிலையை, மனநிலையை எத்தனை பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தித் தருகிறார்கள் என்பதற்கான விடை, திருப்திகரமானதாக இல்லை!

''ஏன்... நல்ல ஸ்கூல், கம்ப்யூட்டர், கராத்தே, டிரெஸ், டூர்னு என்ன குறை வச்சோம் அவங்களுக்கு...?" என்று பொங்கும் பெற்றோர்களிடம்,
 

''நீங்க அவங்களுக்கு என்னல்லாம் பண்ணிக் கொடுத்திருக்கீங்கனு 'மெட்டீரியலிஸ்டிக்'-ஆ பட்டியல் போடாம, நீங்க அவங்ககிட்ட எவ்வளவு தூரம் புரிதலோட நடந்திருக்கீங்கறதை யோசிச்சுப் பாருங்க. குறிப்பா, பருவ வயதுப் பிள்ளைங்ககிட்ட..." என்று சொல்லும் சென்னை, 'போதி' கவுன்சிலிங் நிறுவனத்தின் மனநல ஆலோசகர் பாரதி ராஜ்மோகன், டீன் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அந்த மனவித்தையைப் பற்றிப் பேசினார்!

''பெற்றோர்களில் நான்கு வகையுண்டு. பிள்ளைகள் செய்வதற்கெல்லாம் 'சரி' சொல்லும் சப்மிஸ்ஸிவ் பேரன்ட் (Submissive Pஅரென்
ட்),
 

பிள்ளைகளை தங்களின் விருப்பங்களுக்கு அடிபணிய வைக்கும் அரகன்ட் பேரன்ட் (Arrogant Parenட்),
 

பிள்ளைகளின் விருப்பத்துக்கும் இடம் தரும் சப்போர்ட்டிவ் பேரன்ட் (supportive pareந்ட்)

அதெல்லாம் உனக்குத் தெரியாது' என்று ஒதுக்காமல், எல்லாவற்றிலும் பிள்ளைகளை முழுமையாக ஈடுபட வைத்து, அவர்களின் முடிவெடுக்கும் திறனை வளர்க்கும் டைரக்ட்டிவ் பேரன்ட் (Directive Parenட்).
 

இதில் 'டைரக்ட்டிவ் பேரன்ட்'-ஆக இருப்பதுதான், டீன் பிள்ளைகளின் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களை தன்னிச்சையான, அதேசமயம் சரியான முடிவெடுக்கும் மனிதர்களாக உருவாக்கும்!

இந்த காலப் பிள்ளைகள் விரும்புவது மரியாதைக்குரிய பெற்றோரை அல்ல, ஃப்ரெண்ட்லியான பெற்றோரை. அப்படியிருக்கும் பெற்றோர்களிடம்தான் அவர்கள் பயம், தயக்கங்கள் இன்றி தங்களின் பட்டாம்பூச்சி வயது நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்வார்கள்'' என்று சொன்ன பாரதி,

"வீட்டுக்குப் புதிதாக நண்பர், தூரத்து உறவினர், தெரிந்தவர்கள் என்று யாராவது ஒருவரை அம்மா அல்லது அப்பா அழைத்து வரும்போது, அவர்களைப் பற்றிய விவரங்களை குழந்தைகளுக்கு கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும். 90 சதவிகிதம் பேர் நல்லவர்களாக இருக்கலாம். மீதி 10 சதவிகிதத்தைப் பற்றி நமக்குத் தெரியாதே! அப்படிப்பட்டவர்களால் சமயங்களில் விபரீதமாக ஏதாவது நடக்கும்போது... 'அன்னிக்கு வந்தாரே' என்று குழந்தைகள் ஈஸியாக அடையாளம் காட்டுவதற்கு வசதியாக இருக்கும். நடை, உடையில் தவறான நபராக தெரிந்தால், 'அந்த அங்கிளை இனிமே வீட்டுக்கு வரச் சொல்லாதப்பா' என்றுகூட தைரியமாக குழந்தைகள் சொல்வதற்கு வாய்ப்பாகவும் இருக்கும்'' என்று உருப்படியான சில உஷார் டிப்ஸ்களையும் தந்தார்!

புது ம‌னை புகுவிழா ந‌கைச்சுவை சிறுக‌தை




 “ஏன்டா கோபாலு,......பசு மாட்டுக்கு சொல்லிட்டு வந்துட்டே இல்லே...? எப்போ ஓட்டிட்டு வரேன்னான்?" 

வாசல் பந்தலில் வாழைமரம் கட்டுவதை மேற் பார்வை பார்த்துக்கொண்டே என்னைப் பார்த்துக் கத்தினார் மாமா.
 

“சொல்லிட்டேன் மாமா....... விடியக்காலை நாலு மணிக்கே மாட்டோட வந்துடுறேன்னான். ஃபங்ஷன் அஞ்சு மணிக்குத்தானே ஆரம்பிக்குது மாமா...?”
 

“நோ..நோ...ராத்திரியே மாட்டை ஓட்டிக் கிட்டு வந்து கட்டிடச்சொல்லுடா! விடியக்காத்தாள அவன எங்கே தேடிப் பிடிக்கறது? கிரஹப்பிரவே சத்துக்கு பசுமாடு கேட்டா இப்படித்தான் பிகு பண்ணிப்பானுங்க!”
 

மாமாவுக்கு எந்த விஷயத்திலும் அட்வான்ஸாக இருக்கவேண்டும். அவர் ரெயிலுக்கு முன்னதாக ரிஸர்வ் பண்ணியிருந்தால்கூட, நாலுமணி நேரம் முன்னதாகவே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் போய் உட்கார்ந்துகொண்டு, ஸ்டேஷன் மாஸ்டரை நச்சரித்துக் கொண்டேயிருப்பார். ஸ்டேஷன் பக்கம் இவரது தலையைக் கண்டாலே டியூட்டியிலிருந்து லீவுபோட்டுவிட்டு வீட்டுக்கு ஓடும் ஸ்டேஷன் மாஸ்டர்களும் உண்டு!
 

என் அண்ணன் கட்டிய வீட்டுக்கு நாளை விடியற்காலை கிரஹப்பிரவேசம். வேலைகள் எல்லாம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. கிரஹப்பிரவேசத்துக்கான பொறுப்பை மாமாவின் தலையில் கட்டிவிட்டான் அண்ணன். ஒரு வாரம் முன்னதாகவே தன் குடும்பம் சகிதமாக வந்து இறங்கிய மாமா, வழக்கமான தன் அதிகாரத் தோரணையோடு
 
எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்தார்.
 

முகூர்த்த மாதமாகையால் புரோகிதம் செய்ய அய்யர் கிடைக்காமல் நான் ஒருவாரம் ஊரெல் லாம் தேடியலைந்து நான் பிடித்து வந்த அந்த அய்யரை, மாமா ‘இண்டர்வியூ” செய்ததில் பாவம், அந்த அய்யர் டென்ஷனாகிப்போய், கோபித்துக் கொண்டு, துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு ஓடியே போய்விட்டார்!
 

‘எந்தெந்த மந்திரம் சொல்லி கடவுளரை ஆசீர் வாதத்துக்கு அழைக்கப்போகிறீர்? சம்பந்தப் பட்டவர் ‘பிஸி” யாக இருந்தால், அதற்கு மாற்று ஏற்பாடு என்ன? ‘சீஃப் கெஸ்ட்’டான ‘வாஸ்து பகவானுக்கு’ தனியாக விசேஷ பூஜை உண்டா? ஒவ்வொரு தடவையும் ‘ஒண்ணே கால் ரூபா’ தட்சணை வைக்கச்சொல்லி அரிக்காமல், ஒட்டு மொத்தமாக எவ்வளவு வேண்டும்? - என்று பல கேள்விகளை அந்த புரோகிதரிடம் கேட்டு அவரைத் தொந்தரவு செய்தால் அவர் ஓடாமலா இருப்பார்?
 
நானும் அண்ணனும் போய் அவர் தாடையைப் பிடித்துக் கெஞ்சி மீண்டும் அழைத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது!

இரவு மணி ஒன்பது ஆகிவிட்டது. சாப்பிட்டுவிட்டு கொஞ்சநேரம் மாமாவின் பார்வையிலிருந்து மறைந்துபோய் படுக்கலாம் என்று நான் ஒதுங்கியபோது, “ஏன்டி விமலா, கோபால் எங்கே போய்த்தொலஞ்சான்?” என்று அண்ணியிடம்
 
விசாரித்துக்கொண்டு வந்துவிட்டார் மாமா.

“கோமியத்துக்கு சொல்லியிருக்கானா? இந்த ஏரியா வுல அது கிடைக்கறது கஷ்டம்னு அய்யர் சொன்னாரே ....ராத்திரியே போய் அத விசாரிச்சு வச்சுடச் சொல்லு!”
 

பாதிச் சாப்பாட்டில் கையை அலம்பிக் கொண்டு மாமாவின் முன்னால் ஆஜரானேன்.
 
“தாசில்தார் வீட்டு மாமிக்கிட்ட சொல்லி யிருக்கேன். விடியக்காலை போய் வாங்கிக்கலா முல்ல?” என்றேன்.
 

மாமா எதிலுமே ஒரு க்வாலிட்டி இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதக்காரர். ‘பசுவானது நல்ல நேரத்துல, நல்ல திசையப் பாத்து நின்னு, ரிலீஸ் பண்ணுன சுத்த கோமியமா இருக்கணும்! அதுவும் பொன்னிறமா, சுடச் சுட இருக்கணும்!’ என்று அவர் ஏதாவது கண்டிஷன் போடுவாரோ என்று நினைத்தேன். நல்லவேளை, அவர் அப்படி ஒன்றும் சொல்லாமல், “விடியறதுக்கு முந்தியே ஓடிப்போய் கோமியத்த வாங்கி வந்துடுடா. முதல்ல போற கோமியமா இருந்தா ரொம்ப விசேஷம்!” என்று மட்டும் கண்டிஷன் போட்டார். விடிகாலையில் அந்த மாட்டிற்கு ‘சிறுநீர் உபாதை’ ஏற்படும் நேரத்தை எதிர்பார்த்து நானும் அந்த மாட்டுத் தொழுவத்திலா படுத்துக் கிடக்கமுடியும்?
 

நீபாட்டுக்கு தூங்கிடாதேடா! விடியற துக்கு முந்தியே புரோகிதருக்கு வேண்டிய எல்லா அயிட்டங்களையும் ரெடி பண்ணி வெச்சிடணும் ...புரியுதா?” நான் தூக்க அசதியால் கொட்டாவி விடுவதைப் பார்த்து, சரி சரி, நீ போய்ப்
 
படு! விடிகாலை முழிச்சுடு!” என்று எனக்கு விடுதலை கொடுத்தார்.
 

விடியற்காலை நான் விழித்தபோது, மாமாவின் சத்தம் கேட்டது. தூங்கிக்கொண்டிருந்தவர்களையெல்லாம் எழுப்பி குளியலறைக்கு
 
விரட்டிக்கொண்டிருந்தார். அவர் பார்வையில் படாமல் நழுவிவிட எண்ணி, முகம் அலம்பிக்கொண்டு, தெருவில்
 
இறங்கியபோது........ “என்னடா கோபாலு, இப்பத்தான் எழுந்திருச்சியா? போய் அந்த கோமிய வேலைய
 
முதல்ல முடிச்சிட்டு வா!” என்று என்னைப் பிடித்துக்கொண்டார்.
 

“இத பாருடா.....இருட்டுல அந்த கொட்டில்ல வித்தியாசம் தெரியாம நீ எருமை, காளை எதுகிட்டேயாச்சும் பிடிச்சுட்டு வந்து தொலையாதே!” என்ற அட்வைஸ் வேறு!
 

தாசில்தார் வீட்டை அடைந்து, அந்த விடியற்காலை நேரத்தில் கதவைத் தட்டி அவர்களை எழுப்பியபோது, தாசில்தார் மாமா ஒரு கையில் டார்ச் லைட்டும், மற்றொரு கையில் ஒரு தடிக்கம்பு சகிதமாக வந்து கதவைத் திறந்தார். அந்த ஏரியாவில் ‘திருட பகவான்கள்’ திருவுலா வரும் நேரம் அது ஆகையால், ஒவ்வொரு வீட்டிலும் இந்த முன் ஜாக்கிரதை வழக்கமான ஒன்று.
 

தூக்கமயக்கத்தில் என்னை அடையாளம் கண்டு கொள்ளாமல், இசகு பிசகாக அவர் என் மீது ஒரு போடு ட்டுவிட்டாரென்றால்......
 
......கிரஹப்பிரவேசத்துக்கு இருக்க வேண்டிய நான், ஆஸ்பத்திரி பிரவேசமோ, எனது விதியின் கொடுமை ரொம்ப மோசமாக இருக்கும் பட்சத்தில் ‘எம லோகப் பிரவேசமோ’ அல்லவா போகவேண்டியிருக்கும் என்ற அச்சத்தில், “மாமா!....நான்
 
நடராஜ் தம்பி கோபால் வந்துருக்கேன்” என்று முன்ஜாக்கிரதையாக குரல் கொடுத்தேன்.
 

அவர் முகத்தில் தூக்கக்களையும், எரிச்சலின் சாயலும் படர்ந்திருந்ததை அந்த மங்கிய வெளிச்சத்திலும் கண்டுகொண்டேன்.
 
தலையைச் சொறிந்தவாறு உள்ளே போனார். பெட்ரூமிலிருந்த மாமியுடன் ஏதோ பேசிவிட்டு, கையில் ஒரு பாட்டிலுடன் வந்தவர், அதை என் கையில் தந்தார்.
 

‘ராத்திரியே பிடிச்சு வச்சிட்டாங்க போலிருக்கு! பரவாயில்லை, அவசரத்துக்கு இதுவாவது கிடைத்ததே! கோமியப் பிரச்னை தீர்ந்ததில் எனக்கு திருப்தி. இருந்தாலும், மாமா ஒரு சந்தேகப்பிராணி. கோமியத்தின் நிறம், மணம் இவற்றில் சந்தேகப்பட்டு, ஏதாவது குறுக்கு விசாரணை செய்தால் என்ன செய்வது?
 

......”இப்ப......இப்பத்தான் சுடச் சுட பிடிச்சது!” என்று ஓட்டல் சர்வர் பாணியில் பொய் சொல்லி. அவர் வழுக்கைத் தலையில் அடித்துச் சத்தியம் செய்யவேண்டும். தாசில்தார் மாமா கதவைச் சாத்தும் போது, “காலையில் மாமியை அழைச்சுக்கிட்டு கணபதி ஹோமத்துக்கே வந்துடுங்க மாமா!” என்று அழைப்பு விடுத்தேன்.

“காத்தாள நான் வந்துடுறேன்டா. மாமிக்கு உடம்பு சரியில்லே. அவள டாக்டர்கிட்ட அழைச்சிண்டு போகணும். நடராஜன்கிட்ட சொல்லிடு!” அவ‌ரிடமிருந்து விடைபெற்று வீட்டுக்குத் திரும்பிய போது, மாமா சமையல் கட்டில் நின்றுகொண்டு சுடச் சுட காபியை உறிஞ்சிகொண்டிருந்தார், அவருக்குப் பயந்து ஒவ்வொரு வேலையையும் நான் செய்து வந்தாலும், அவரிடமிருந்து கிடைத்த ஏச்சுக் களினால் மனம் புழுங்கிக் கொண்டிருந்தேன்.
 

அவர் ஊருக்குப் போவதற்குள், ஒருநால் அவர் குடைமிளகாய் மூக்கு உடைந்து போகும்படி ஒரு ‘நோஸ்கட்” நிகழ்ச்சியை நடத்திக்காட்ட வேண்டும் என்பது என் திட்டம். புது வீட்டுக்குள் நுழையவிட ஒரு பசுவும் கன்றும் கொண்டுவருவதற்காக நான்
 
மாடாய் அலைந்து, கடைசியில் ஒரு மாட்டுக் காரனைப் பிடித்தேன். அவனிடம் பேரம் பேசி அவனை முந்திய நாள் இரவே மாடு, கன்றுடன் வந்து கொல்லைப்புறத்தில் படுக்கச் சொல்லிவிட்டார் மாமா.
 

‘தண்ணியடித்துவிட்டு’ படுத்த அவனை விடியற் காலையில் நான் தண்ணியை அவன் மூஞ்சியில் அடித்து எழுப்ப வேண்டியாகிவிட்டது! ‘புதுமனைப் புகுவிழா’ நிகழ்ச் சிகள் நடந்து கொண்டிருந்தன. பசுவும், கன்றும் வீட்டுக்குள் நுழையும்போது அது நடுவீட்டில் சாணம் போட்டால்தான் ‘மங்களகர’ மாய் இருக்கும் என்று மாமா கண்டிஷன்போட, மாட்டுக்காரன் அவரிடம் சண்டைக்கு வந்து விட்டான்!
 

சரியான தீவனமின்றி கருவாடாய்க் காட்சியளித்த பரிதாபத்துக்குரிய அந்த கோமாதா, மூச்சுவிடவே திராணியற்ற நிலையில் தள்ளாடியவாறு நிற்கும்போது, அது சாணம் போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என எனக்குப் புரிந்தது. மாமாவோ “சாணச் சம்பிரதாய”த்தில் பிடிவாதமாய் நின்றார். மாட்டுக்காரனை தனியே அழைத்துப்போய் அவனிடம் பேசினேன். அவனோ ஒரு ‘தண்ணி கேஸ்’. மாமாவின் மேல் அவனுக் கிருந்த கோபத்துக்கு, அவரை மிதித்து, ‘வரட்டி’ தட்டிவிட்டுத்தான் போவான் என்று புரிந்தது! அவனை சமாதானப்படுத்தி, எனக்குத் தோன்றிய ஒரு ஐடியாவை அவனிடம் சொல்ல. அவனும் சம்மதித்தான்.
 

‘இன்ஸ்டண்ட்’ சாணத்துடன் கூடிய ஒரு பாலிதீன் பையை மாட்டின் பின்புறம் வாலுக்குக் கீழே மறைவாகக் கட்டிவிடவேண்டியது. (மாமாவின் பார்வைக்குப் படாமல் தான்!) மாடு, வீட்டுக்குள் நுழையும்போது, மாட்டுக்காரன் மாட்டைத் தட்டிக் கொடுப்பதுபோல் அந்த சாணப்பையை நசுக்கி, சாணம் வீடெங்கும் பீச்சியடிக்குமாறு செய்ய வேண்டியது. இதுதான் எங்கள் திட்டம்!
 

அப்படியே எல்லாம் நடந்து, பீச்சியடிக் கப்பட்ட சாணமானது, ஹாலில் உட்கார்ந்திருந்த பட்டுச்சேலைப் பெண் மணிகள் மேலெல் லாம் “சாண அபிஷேகம்’ செய்துவிட்டது! சாணத்தால் ஏற்பட்ட நாணத்தால் அவர்கள் ஓடி ஒளிந்த காட்சியும் விழாவுக்கு
 
களைகட்டியது!
 

புரோகிதரின் பக்கத்திலேயே மாமா உட்கார்ந்து கொண்டு அவரை “பெண்டு” எடுத்துக் கொண்டி ருந்தார். கிரஹப்பிரவேசம் சுபமாய் முடிந்தது. தனது ஏற்பாடு களைப் பற்றிப் பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார் மாமா. காலையிலேயே வருவதாகச் சொன்ன அந்த தாசில் தார் மாமா ஏன் நிகழ்ச்சிக்கே வராமலிருந்து விட்டார் என்று புரியாமல் குழம்பினேன். அந்த குண்டு மாமிக்கு உடம்புக்கு ஏதேனும் கோளாறு ஆகிவிட்டதோ?
 

மறுநாள். மதுரை மாமாவை ரயிலேற்றிவிட்டு நான் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, வழியில் பார்த்த தாசில்தார் மாமாவைக் கேட்டேன்: “என்ன மாமா, ஃபங்ஷனுக்கு வராமலேயே இருந்துட்டீங்க?” “வரமுடியாமப் போச்சுடா!....மாமிய டாக்டர்கிட்ட கூட்டிண்டு போகணும்னு சொன்னேனில்லியோ....” என்று சொல்லி அவர் நிறுத்த, “என்ன மாமா ஆச்சு?”
 
என்று பட படப்புடன் கேட்டேன். அவர் சொன்னதைக் கேட்டதும் எனக்குத் தலை சுற்றியது!
 

டாக்டரின் க்ளினிக்கில் மாமியின் “லேப் டெஸ்ட் ரிஸல்ட்”டைப் பார்த்துவிட்டு அந்த டாக்டரே மூர்ச்சையாகி விழுந்துவிட்டாராம்! மாமிக்கு இது “தலைச்சன் ஈற்று” என்றும், வீட்டுக் கால்நடைகளை எளிதில் தாக்கும் ‘கோமாரி நோய்’ அவளைப் பீடித்திருப்பதாகவும், இந்த தலைச்சன் கன்றுக்குட்டியை மாமி பிரசவிப்பதே ரொம்பக் கடினம் என்றும் அந்த ரிஸல்ட்’
 
டில் இருந்ததைப் பார்த்த டாக்டர் மயக்கமுற்று விழுந்ததில் ஆச்சரியமில்லையே!
 

நடந்ததை மாமா விளக்கினார். “கோபாலு, நேத்திக்கு காத்தாள இருட்டுல நான் உங்கிட்ட பாட்டிலை மாத்திக் குடுத்துத் தொலச்சிட்டேன்! அதுல இருந்தது மாமியோட டெஸ்ட்டுக்காக பிடிச்சு வெச்சதுப்பா! ‘தன்னோடது’ன்னு மாமி அந்த
 
பசுவோட கோமிய பாட்டிலை லேப்’ல குடுத்துட்டதால இவ்வளவு கோளாறு!...மன்னிச்சுடுடா!” எனக்குத் தலை சுற்றியது! அப்படியானால்......
 

மதுரை மாமா பக்திசிரத்தையுடன், இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு, புரோகிதர் கொடுத்த கோமிய தீர்த்தத்தை பவ்யமாக வாங்கி, தன் தலையில் தெளித்துக் கொண்டு, வாயிலும் ஊற்றிக்கொண்டாரே....அது...... அது......?

மனை (ப்ளாட்)வாங்க ஆலோசனை தேவை



1.நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட இடத்தில் ஒரு இடம் வாங்கினால்,இடத்தை விற்பரிடம் என்னென்ன ஆவணங்களை கேட்டு சரிபார்க்கவேண்டும்?

2.இடத்தை விற்பனை செய்வரின் இடம்தானா அது?அல்லது வேறொருவரின் இடத்தை நம்மை ஏமாற்றி நம்மிடம் போலியாக விற்பனை செய்கிறாரா?என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

3.நாம் வாங்கும் இடம் அரசின் தேவைகளுக்காக ஒதுக்கப்படாத இடம் என்றும்,அந்த இடம் வீடுகட்ட தகுதியான அதாவது விவசாய நிலம் அல்ல என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

4.பத்திர பதிவின்போது கடைபிடிக்கவேண்டிய நடைமுறை என்ன?

5.எப்போது பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவேண்டும்? பட்டா மாற்றம் செய்ய என்னென்ன விதிமுறைகள் உள்ளன?

6.பட்டாவிற்கும் பத்திரத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

7.குறிப்பாக நிலத்தை விற்பவர்தான் அதன் உரிமையாளர் என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

8.ஒரு நிறுவனம் 20,30 மனைகளை போட்டு விற்பனை செய்கிறார்கள்.அப்படிப்பட்ட மனைகளை நாம் வாங்கும்போது சட்டரீதியாக என்னென்ன அம்சங்களை பார்க்கவேண்டும்.அந்த மனைக்கு என்னென்ன அனுமதியை விற்பவர்கள் பெற்றிருக்கவேண்டும்?லே அவுட் என்கிறார்களே,அதைப்பற்றியும் விளக்கவும்.
நகராட்சி என்றில்லை. எந்த நிலமாக இருந்தாலும் முதலில் மூல ஆவணங்கள் தேவை. உங்களிடம் விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது? விற்பவருக்குத் தந்தவருக்கு எப்படி வந்தது? ஆகிய இரு மூல ஆவணங்கள் இருந்தால் நல்லது. அதுவும் நகல் ஆவணமாக இல்லாமல் அசல் ஆவணமாக இருந்தால் சரி. 

விற்பவர் பெயரில் பட்டா இருக்கின்றதா என்று பார்க்கவேண்டும். இதற்கான ஆவணத்தை 10(1) என்பார்கள்.

ஏற்கனவே அந்த நிலத்தில் கட்டிடம் இருந்தால் அந்தக் கட்டிடத்திற்கான சமீபத்திய தீர்வை ரசீது மற்றும் மின்கட்டண ரசீதுகள் பார்க்க வேண்டும். நகராட்சி அனுமதித்த கட்டிட வரைபடமும் வாங்கி அதன்படி கட்டிடம் இருக்கின்றதா என்றும் காண்பது நல்லது.

நகராட்சியாக இருந்தால் சர்வே எண் மற்றும் ப்ளாட் எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கின்றதா என்று காண வேண்டும். கிராமப் புறம் என்றால் சர்வே எண் மட்டுமே இருக்கலாம்.

இடத்தின் விஸ்தீரணம் சரியாக எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளவேண்டும். இடத்தைச் சுற்றி இருப்பவர்கள் பெயர்களும் இருக்கும். நான்கு திசைகளில் இருப்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.
 

இடத்துக்குச் செல்லும் பாதையின் அளவு என்ன? அது தனிப்பாதையா பொதுப்பாதையா? அல்லது பங்குப் பாதையா? இவையனைத்தும் முக்கியம். பாதையில்லா நிலத்தால் எந்தப் பயனுமில்லை. 

2.இடத்தை விற்பனை செய்வரின் இடம்தானா அது?அல்லது வேறொருவரின் இடத்தை நம்மை ஏமாற்றி நம்மிடம் போலியாக விற்பனை செய்கிறாரா?என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

மூல ஆவணத்தைச் சரி பார்த்த பின்னால், குறைந்த பட்சம் 20 ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் வாங்க வேண்டும். அதில் சொத்து பற்றிய அனைத்து உரிமை மாற்றங்களும் இருக்கும். அதை வைத்து உண்மையிலேயே இந்தச் சொத்து யாருடையது என்று கண்டறியலாம். 

3.நாம் வாங்கும் இடம் அரசின் தேவைகளுக்காக ஒதுக்கப்படாத இடம் என்றும்,அந்த இடம் வீடுகட்ட தகுதியான அதாவது விவசாய நிலம் அல்ல என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

வீடு கட்டுவதற்கான இடம் என்றால், மாநகராட்சி/நகராட்சி/ஊராட்சி/பஞ்சாயத்து ப்ளாட் அப்ரூவல் இருக்கும். 

4.பத்திர பதிவின்போது கடைபிடிக்கவேண்டிய நடைமுறை என்ன?

இடத்தின் அரசு உத்தேச‌ மதிப்புக்கு பத்திரங்கள் வாங்கப்பட்டிருக்கின்றதா? மூல ஆவணத்தில் குறிப்பிட்டவர்கள்/ தேவைப்பட்டால் அவர்களது வாரிசுகள் அனைவரும் வந்து கையெழுத்து இடுகின்றனரா? போன்றவற்றைக் காண வேண்டும். வருமான வரி பற்றிய பிரச்னைகள் ஏதுமிருக்குமா என்பதைப் பற்றியும் யோசிக்கவேண்டும். 

5.எப்போது பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவேண்டும்? பட்டா மாற்றம் செய்ய என்னென்ன விதிமுறைகள் உள்ளன?

நம் பெயருக்குப் பத்திரம் பதிந்து கையில் வந்ததும் மாற்றம் செய்யலாம். நகராட்சி/கிராம நிர்வாக அலுவலரிடம் மாற்றிக் கொள்ள விண்ணப்பிக்க வேண்டும்.

6.பட்டாவிற்கும் பத்திரத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

பத்திரம் நமக்கு யார் எழுதிக் கொடுத்தார்கள் என்பதற்கான உரிமை சாசனம். பட்டா என்பது நகராட்சி அல்லது கிராம நிர்வாக அலுவலகத்தில் யார் பெயரில் சொத்து இருக்கின்றது என்று பதிந்து கொள்ளும் ஆவணம். இரண்டும் வெவ்வேறு அரசு இயந்திரங்கள். இரண்டிலும் பதிந்து கொள்வது நமக்கு நல்லது.

7.குறிப்பாக நிலத்தை விற்பவர்தான் அதன் உரிமையாளர் என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

மூல ஆவணம் மற்றும் சொத்து வில்லங்கச் சான்றிதழ், தேவைப்பட்டால் வாரிசுச் சான்றிதழ்.

8.ஒரு நிறுவனம் 20,30 மனைகளை போட்டு விற்பனை செய்கிறார்கள்.அப்படிப்பட்ட மனைகளை நாம் வாங்கும்போது சட்டரீதியாக என்னென்ன அம்சங்களை பார்க்கவேண்டும்.அந்த மனைக்கு என்னென்ன அனுமதியை விற்பவர்கள் பெற்றிருக்கவேண்டும்?லே அவுட் என்கிறார்களே,அதைப்பற்றியும் விளக்கவும்.

வரவும் செலவும் வரைமுறையோடுதானா.....!!!!



ஒஹோ என்றிருந்த அமெரிக்காவின் பொருளாதாரம் சில வருடங்களுக்குமுன் சடசடவென சரிந்தபோது, அதற்கு முக்கிய காரணமாக நிபுணர்கள் சுட்டிக் காட்டியது அந்நாட்டு மக்களின் ஊதாரித்தனத்தைத்தான். கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி வாங்கிக் குவித்ததால் வந்த அவல நிலை இது என்றார்கள். வீண்செலவுகள் ஒரு நாட்டை எப்படி பதம் பார்த்து விடுகிறது என்பதற்கு வாழும் உதாரணமாகிப் போனது அமெரிக்கா.

இப்போது இந்தியா விலும் அந்த மனப்போக்கு குடியேறி வருவதாக எச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் விஷயம் தெரிந்த நிபுணர்கள். நம் கண்முன்னே நடப்பதைப் பார்த்தால் அது உண்மைதானோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு நம் மக்கள் செலவு செய்யும் விதத்தில் சமீப காலமாக பயங்கர மாறுதல்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சில ஆடம்பர செலவுகளைத் தவிர்க்க முடியாதே! செலவு செய்யாமல் காசை மூடி மூடி வைத்தால் என்ன பிரயோஜனம் என இன்றைய இளைய தலை முறையினர் கேட்பதில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும், நம்மவர்கள் செய்கிற செலவுக் கணக்கை பார்த்தால் நமக்கு மலைப்பே ஏற்படுகிறது. இன்றைய நிலையில் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை அநாவசிய செலவு செய்வதாக புள்ளிவிவரங்கள் சொல்வது கொஞ்சம் அச்சமூட்டுவதாகவே இருக்கிறது.

இந்தச் சூழலில், தமிழக மக்களின் மனப்போக்கு எப்படி இருக்கிறது, எதையெல்லாம் அநாவசிய செலவு என்று கருதுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள தமிழகம் முழுவதும் களமிறங்கியது நமது நாணயம் டீம். கிடைத்த தகவல்கள் தமிழர்கள் செல்லும் பாதையை பளிச்சென்று வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே இருக்கிறது.

வயது, சம்பளம் போன்ற வற்றின் அடிப்படையில் அனைத்து தரப்பினரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டது. விதவிதமான பதில்கள் வந்தன. சில பதில்கள் சொல்லும் விதத்தில் நகைச்சுவை யாகக்கூட இருந்தன என்றாலும், அதன் பின்னால் இருந்த காரணங் கள் சீரியஸ் ரகம்.

திருமணம் செய்வது, குழந்தைக்கு டியூசன் கட்டணம் செலுத்துவது போன்றவற்றைக்கூட அநாவசிய செலவு என்று குறிப்பிட்டிருந்தனர் சிலர். இளைஞர்களில் பலர் சிகரெட் மற்றும் மதுபானத்தை குறிப்பிட்டாலும், அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் வருத்தப்பட்டனர். பெண்களைப் பொறுத்தவரை சூப்பர் மார்க்கெட்டுகளிலும், ஷாப்பிங் மால்களிலும் தேவைக்கு அதிகமாக செலவு செய்வதாகத் தெரிவித்தனர். இன்டர்நெட் பிரவுஸிங், பைக், கார்களில் நெடுந்தூரப் பயணம், டீ, காபி குடிப்பது, பார்ட்டிக்குப் போவது, அழகு சாதனப் பொருட்களை வாங்கிக் குவிப்பது என தமிழக மக்களின் அநாவசிய செலவுகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அழகுக்காக அதிக அளவு செலவு செய்வதாக பதில் சொல்லியிருக்கிறார்கள்.

டாப் 5 அநாவசிய செலவுப் பட்டியல்:

1. ஷாப்பிங்:

ஷாப்பிங் செய்வதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள் ஆண், பெண் இரண்டு தரப்பும். சம்பளம் வாங்கிய முதல் நாளே ஷாப்பிங் கிளம்பிவிடுவோம் என பலரும் சொல்லியிருக்கிறார்கள். கூடுதலாக வரும் போனஸ் மற்றும் இதர வருமானங்களை கொண்டு எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்குகிறார்களாம். இது குடும்பத்திற்கு அவசியமில்லாத செலவுதான் என்றாலும் ஆசைக்காக வாங்குவதாக ஒப்புக் கொள்கிறார்கள். குறிப்பாக ஆடம்பர, அழகு சாதன பொருட்கள் வாங்குவதை வீண் செலவாகக் கருதி முதலிடம் கொடுத்திருக்கிறார்கள் பெண்கள்.

2. செல்போன்:

செல்போனுக்கான செலவை அடுத்ததாகச் சொல்லியிருக்கின்றனர். ரீசார்ஜ் செய்வதிலேயே பர்ஸில் முக்கால் வாசி பணம் காலியாகிவிடுகிறதாம். அதுவும் பத்து ரூபாய், ஐந்து ரூபாய்க்குக்கூட ரீசார்ஜ், டாப் அப் போன்ற வசதிகள் இருப்பதால் சில்லறை சில்லறையாகவே ஒரு மாதத்திற்குள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிவிடுகிறதாம். ரீசார்ஜ் தவிர, லேட்டஸ்ட் சினிமா பாடல்களை டவுன்லோட் செய்வது, அடிக்கடி காலர் டியூன் பாட்டுகளை மாற்றுவது, அடிக்கடி மொபைல் போனையே மாற்றுவது போன்றவற்றுக்கும் எக்கச்சக்கமாக செலவு செய்வதாக தெரிவித்தனர். செல்போன் செலவு விஷயத்தில் நகர்ப்புறம், கிராமப்புறம் என்கிற பாகுபாடே பார்க்க முடியவில்லை என்பது முக்கியமான விஷயம்.

3. சினிமா:

அடிக்கடி சினிமா தியேட்டருக்கு செல்வதை முக்கியமான அநாவசியச் செலவாக சொல்லியிருக்கிறார்கள் ஆண்கள். தங்களுக்குப் பிடித்த ஹீரோவின் திரைப்படம் வந்தால் முதல்நாள் முதல் 'ஷோ’விற்கு அதிகப்படியான பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் பழக்கம் இன்னும் பலரிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பெண்கள் இந்த விஷயத்தில் பரவாயில்லை; புதுப்படத்தை தியேட்டருக்குச் சென்று பார்க்க வேண்டும் என்பதில் அவர்கள் ஓரளவுக்கு மட்டுமே ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். எப்படியும் கொஞ்சநாளில் இதே திரைப் படத்தை டி.வி.யிலோ அல்லது சிடி வாங்கியோ பார்த்துக் கொள்வோம் என்கிறார்கள்.

4. ஓட்டல்:

ஆண், பெண் என பேதமில்லாமல் இருவரின் அநாவசிய செலவு பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது ஓட்டல். முன்பெல்லாம் எப்போதாவது ஒருமுறை ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டவர்கள் இப்போது வாரத்தின் இறுதிநாளில் ஓட்டலுக்குப் போவது கட்டாயமான விஷயமாகி விட்டதாகச் சொல்கிறார்கள். நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் சிறிய ஊர்களிலும் இந்தப் பழக்கம் வேகமாக பரவி வருகிறது. நகர்ப்புறங்களில் பீட்ஸா, சைனீஸ், ஃபாஸ்ட் புட் போன்ற உணவு விடுதிகளுக்குப்போவதால் செலவு றெக்கை கட்டிவிடுகிறது.

5. நொறுக்குத் தீனிகள்:

இந்த செலவுகளுக்கு இரண்டு தரப்பினருமே முக்கியத்துவம் தருகின்றனர். என்றாலும் இதில் ஆண்களின் செலவு அதிக மாக இருக்கிறது. டீ, காபி மற்றும் நண்பர்களோடு சேர்ந்து இருக்கும்போது செய்யும் சில்லறை செலவுகள் அநாவசியமாக இருப்பதாகச் சொல்லியுள்ளனர். பாக்கெட் மணியை காலி செய்வதில் டீ கடைகளின் பங்குதான் பிரதானம் என்கிறார்கள் ஆண்கள். பெண்கள் டீ கடைகளை குறிப்பிடவில்லை என்றாலும் நொறுக்குத் தீனிகளுக்கு அநாவசியமாக செலவு செய்வதாகச் சொல்கிறார்கள்.
 

மக்களின் மனப்போக்கு இப்படி இருக்க, பொருளாதார அறிஞர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய சிலரிடம் கேட்டோம்.. கோவை பாரதியார் பல்கலைக் கழக மேலாண்மை தொழில் முனைவோர் துறையக இயக்குநர் வேங்கடபதியிடம் பேசினோம்.

''நமக்கு எது தேவையோ, நம்மால் எவ்வளவு செலவழிக்க முடியுமோ அதற்குள் வாழப் பழகுவதும், செலவுகளில் ஓர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதும் பல அநாவசிய செலவுகளைத் தவிர்க்க உதவும். எந்த வேலையையும் சரியான நேரத்தில்

செய்து முடித்தால் தேவையற்ற செலவுகளைக் குறைக்கலாம். மின்சாரக் கட்டணம், கல்லூரி, பள்ளிக் கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்திவிட்டால் அபராதத் தொகை போன்ற அநாவசிய செலவுகள் ஏற்படாது.

திட்டமிடலும், அதனை உரிய நேரத்தில் செயல்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்வதும் நம்மை அறியாமல் செய்யப்படும் செலவுகளைக் குறைப்பதும், கணிசமான தொகை நம் கையில் நிற்க உதவும். உதாரணமாக, ஊருக்குச் செல்லவேண்டும் எனில் முன்பே டிக்கெட் புக் செய்துவிட்டால் அந்த செலவு மட்டும்தான் ஆகும். கடைசி நேரத்தில் அவசரமாக டிராவல்ஸ் மற்றும் தத்கல் முறைகளில் டிக்கெட் எடுத்துப் போவது கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும். இதுவும்கூட அநாவசிய செலவுதான். அவசர காலங்களில் இது போன்று செய்யலாமே தவிர மற்ற நேரங்களில் திட்ட மிடலே நமக்கு பணத்தை மிச்சப்படுத்திக் கொடுக்கும்.

பிராண்டட் பொருட்களை வாங்கும்போது கூடுதல் பணம் செலவு செய்ய நேரிடும். எந்த ஒரு பொருளையும் ஆசைக்காக வாங்காமல் அவசியத்திற்காக வாங்கினாலே பல ஆயிரங்கள் மிச்சப்படும். ஒழுக்கமான வளர்ப்பு முறையே இந்த அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த சிறந்த வழி'' என்றார்.
 

சென்னை ஐ.ஐ.டி.-யில் எம்.பி.ஏ. பேராசிரியராக இருக்கும் தேன்மொழி, ''அளவுக்கு அதிகமாக வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது, மற்றவர்களுக்கு பார்ட்டி கொடுப்பது, அதிகப்படி யான உணவுப் பொருட்களை வாங்குவது, அதிகளவில் டிரஸ் எடுப்பது மற்றும் வெளியில் சென்று உணவு உண்பது இவைதான் அநாவசிய செலவு களாக நான் சொல்வேன். புதிதாக எது வந்தாலும் உடனே வாங்கிவிடுவதுகூட அநாவசிய மான செலவுதான். அந்தப் பொருள் நமக்கு தேவையா என்றுகூட நாம் பார்ப்பது கிடையாது. மற்றவர்கள் நம்மை கண்டு ஆச்சரியப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் பல பொருட்களை வாங்கிக் குவிக் கிறோம். இதெல்லாம் அநாவசியச் செலவுகள்தான்!'' என்றார்.
 

பல நெருக்கடிகளையும் சமாளித்து ஈட்டப்படும் வருமானத்தை ஏன் அநாவசியமாக செலவு செய்ய வேண்டும் என்று ஒருசாராரும், வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமெனில் சில செலவுகளை செய்வதில் தப்பே இல்லை என்று இன்னொரு சாராரும் கூறுவது தவறில்லை தான். ஆனால், எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தையும் சேமிக்க வேண்டும்; அதே நேரத்தில் சந்தோஷமான ஒரு வாழ்க்கை யையும் வாழவேண்டும் என்பது நம்மக்களின் விருப்பமாக இருக்கிறது. எல்லை மீறாத செலவுகளும், பாதுகாப்பான சேமிப்புமே அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இதைப் புரிந்து செயல்பட்டால் எந்த செலவும் அநாவசிய செலவில்லை.