Wednesday, October 5, 2011

அம்மாக்கள் கவனிக்க…




குழந்தைகளுக்கு அஜீரணம் ஏற்படாமல் இருக்க அம்மாக்கள் செய்ய வேண்டியவை:-
  • குழந்தைகள் அவசர அவசரமாக உணவு சாப்பிடுவதை தவிர்க்க உதவுங்கள்.
  • வாயு தொந்தரவு தரும் உணவுகளை குறைத்துக் கொடுங்கள்.
  • குழந்தைகளை அடிக்கடி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட்டு பழக்கப் படுத்தாதீர்கள்.
  • காரம் மிகுந்த உணவுகளை அதிகம் கொடுக்காதீர்கள்.
  • சுத்தம், சுகாதாரம் இல்லாத இடங்களில் குழந்தைகளை சாப்பிட அனுமதிக்காதீர்கள்.
  • குழந்தைகளை தினமும் சரியான நேரத்திற்கு சாப்பிட வையுங்கள்.
  • நிறைய சத்து கிடைக்கும் என்று எண்ணி அதிகமாக பசும்பால் கொடுப்பது தவறானது என்பதை உணருங்கள்.
  • நிறைய தண்ணீர் குடிக்க பழக்கப்படுத்துங்கள். குழந்தைகள் தினமும் நான்கு அல்லது ஐந்து தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட வையுங்கள். சாப்பிட்ட உடன் தூங்கிவிடாமல் கொஞ்ச தூரம் நடந்து செல்ல வைப்பது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
  • என்ன உணவு கொடுக்கலாம்?


  • இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.

    என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் "கொஞ்சமாக கொடுங்கள்" என்பார்கள், சிலர் "எல்லாமே கொடுக்கலாம்" என்பார்கள். 'கொஞ்சமாக' என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.

    குழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.

    குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி என் அனுபவத்தில் கற்றுக் கொண்டதை, எனது குழந்தைகளின் மருத்துவர் உதவியோடு இங்கு எழுதுகிறேன். 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.

    பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.

    திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.

    குழந்தைக்கு முதன்முறையாக உணவை கொடுக்கும்போதே இந்த அளவு கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு திணிக்கக்கூடாது. சில குழந்தைகள் 6 மாதங்கள் வரை திட உணவு சாப்பிட தயாராகாது. குழந்தையின் விருப்பத்தை புரிந்து கொண்டு உணவு புகட்ட வேண்டும். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும். ரெடிமேட் உணவுகளை விட, வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே எப்போதும் சிறந்தது. அரிசி கூழ் முதல் உணவாக கொடுக்க ஏற்றது. நன்கு வெந்த சாதத்தை 1/2 கப் தண்ணீரில் நன்கு அடித்து, வடிகட்டி கஞ்சி போல் செய்து முதல் நாள் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்கலாம். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி வரை கொடுக்கலாம். அதனையே முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதனை மெல்ல 4 மேசைக்கரண்டி என்ற அளவில் அதிகப்படுத்தி கொடுக்கலாம். முதல் சில வாரங்களுக்கு காலை வேளையில் மட்டும் கொடுத்து, பின்னர் மெல்ல இரவிலும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.

வேக வைத்த சாதத்தை மசித்து கஞ்சி போல கொடுக்கலாம். இட்லி, தோசை சாம்பார் கொடுக்கலாம். ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம். சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம். காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக்காய் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்.

குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.

பலவகையான தானியங்களை கலந்து சத்து மாவு காய்ச்சி கொடுப்பார்கள். அதனுடன் சீவி காயவைத்த மரவள்ளி கிழங்கு மற்றும் சீவி காயவைத்த நேந்தரன் காயையும் சேர்த்து பொடித்து கூழ் காய்ச்சினால் மிகவும் நல்லது. மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம். பிறகு மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம். குழந்தையின் உணவில் இனிப்பு சேர்ப்பது நல்லதல்ல. அப்படி சேர்க்க விரும்பினால் வெல்லத்தை சேர்த்துக் கொடுக்கலாம். 7 மாதம் முடிந்தபிறகு கேரள நேந்தரன் பழத்தை வேக வைத்து, நடுவில் உள்ள விதையை நீக்கி அரைத்து கொடுக்கலாம். இது மிகவும் சத்தானது.

முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் செய்து (ஆப்பம் மாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.
  • குழந்தைக்கு ஏற்ற பழ வகைகள்

    வாழைப்பழம் - ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.

    ஆப்பிள் - ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.

    அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.
    அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.

    பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.

    சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழ வகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம். constipation க்கு பப்பாளிப் பழத்தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்
ஒவ்வாமை

குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.

குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த குழந்தைக்கு முட்டை சேராது. முதன் முறையாக முட்டை கொடுக்கும்போது அழத் தொடங்கி, பிறகு தொண்டை அடைத்து மூச்சு திணறத் தொடங்கிவிட்டது. அதனால் அது போன்ற உணவுகளை முதல் நாள் 1/2 ஸ்பூன் மட்டுமே கொடுத்து பார்க்க வேண்டும். தேனை குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்.

உணவு சாப்பிட மறுத்தால்

சில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடும். இந்த செய்கையினால் சோர்ந்து போகாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை முழுங்கத் தொடங்கும்.

சில குழந்தைகளுக்கு முதன்முறை ஸ்பூனால் கொடுக்கும்பொழுது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.
ஸ்பூன்கள் கொண்டு உணவு கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறுகுழந்தைகள் படுவேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில், முகத்தில் பட்டுவிட வாய்ப்புள்ளது. அதனால் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகித்தல் கூடாது. குழந்தைகளுக்கென்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

சில குழந்தைகள் கூழாகவே சாப்பிட விரும்புவார்கள். சிறிய கட்டிகள் தென்பட்டால் அல்லது சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட மறுப்பார்கள். மெல்ல அரைத்து ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாலும், கெட்டியான உணவை விடாப்பிடியாக ஊட்ட முயன்றால் குழந்தைக்கு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். அது சாப்பிட மறுத்து, அதனால் அதற்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே எதையும் கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இப்போது அரைத்த உணவையே கொடுத்து மூன்று நாட்களுக்கொருமுறை ஒவ்வொரு ஸ்பூன் கெட்டியாக மசித்ததையும் கொடுத்து பழக்க வேண்டும்.

நன்றாக சாப்பிடும் சில குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் இருப்பது அல்லது விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை திடீரென சாப்பிட மறுப்பது என்பது குழந்தையின் சுபாவம். குழந்தை மறுத்து தலையை திருப்பவோ, துப்பவோ, அழுகவோ செய்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கொடுத்து பார்க்க வேண்டும். உணவில் ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் அமர வைத்து சாப்பிட்டால், அதை பார்த்து அவர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.

குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும் வேக வைத்து மசித்த காய்கறிகள்:

பழங்களைக் கொடுத்து பழக்கி, 2 வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித்தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி பழங்களை இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.

இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.

ஒரு வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு வயது வரை மிளகாயை அறவே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் மிளகையோ(pepper), குடை மிளகாயையோ சிறிதளவு சேர்க்கலாம்.

எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிபேஷன் ஆகும். அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும். பழுத்த மாம்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை கெட்டியாக அடித்து, கூழ் போல் ஊட்டி விடலாம். சரியாகிவிடும்.

குழந்தை நல குறிப்புகள்!




நோய்த்தடுப்பு:-

தற்போதைய காலகட்டத்தில் ஒரு குழந்தை பிறந்துவிட்டது என்றால் அவ்வீட்டில் ஒரு 'மினி மெடிக்கல் ஷாப்' உருவாகிவிடுகிறது என்றே கூறலாம். காய்ச்சல், சளி, வயிற்றுவலி ஆகியவைகளுக்கு மருந்து கொடுப்பது போன்றே ஒவ்வொறு காலகட்டத்திலும் பலவிதமான நோய்த் தடுப்பூசிகள் குழந்தைகளுக்குத் தருதலும் பெற்றோரின் இன்றியமையாத கடமையாகும்.
 

குழந்தை பிறந்தது முதல் மூன்று ஆண்டுகள் வரை நோயிலிருந்து பாதுகாத்து எடுப்பதே பெற்றோர்களுக்கு சிரமம் ஆகிவிடுகிறது. சற்று அசாதாரணமாக கவனிக்காமல் இருந்துவிட்டால் சில சமயங்களில் விளைவுகள் விபரீதமாகவும் நடந்துவிடுகிறது. குழந்தைகள் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு பல மருத்துவர்கள் தரும் ஆலோசனைகளை பெற்றோர்கள் செயல்படுதல் மிகஅவசியம். குறிப்பாக குழந்தைகளுக்குத் தரப்படும் தடுப்பூசிகளில் கவனம் கொள்வது மிகவும் அவசியம்.
 

காசநோய் மற்றும் போலியோ:-

குழந்தை பிறந்த இருவாரங்களுக்குள் காசநோய் தடுப்பு மருந்தைக் கொடுக்கவேண்டும். போலியோ சொட்டு மருந்தை பிறந்ததும் ஒருமுறை, ஆறு, பத்து மற்றும் பதினான்காவது வார இறுதியில் ஒவ்வொரு முறை, ஒன்றரை வயதில் ஒருமுறை, நான்கரை வயதில் ஒருமுறை என்றாக முறையே இந்தத் தடுப்பு மருந்தை அளிக்க வேண்டும். பெரியம்மை நோய்க்கு அடுத்ததாக உலகிலிருந்தே ஒழிக்கப்படவேண்டிய நோய் என்று உலக சுகாதார நிறுவனம் தேர்ந்தெடுத்திருப்பது போலியோவைத்தான்.
 

முத்தடுப்பு ஊசி:-
 

டிப்தீரியா, கக்குவான் இருமல், டெடனஸ் ஆகிய மூன்று கடுமையான நோய்களைத் தடுக்கிறது. இதையும் ஐந்து முறை அளிக்கவேண்டும். 6, 10, 14 ஆவது வாரங்களின் இறுதியில் ஒவ்வொரு முறையும், 18 மாதம் முடியும்போது ஒரு முறையும் ஐந்து வயதை நிறைவு செய்யும்போது ஒருமுறையுமாக அளிக்கவேண்டும்.
 

ஹெபடிடிஸ் 'பி':-

எய்ட்ஸைவிட அதிகம் பேர் இறப்பது ஹெபடிடிஸ் 'பி' எனப்படும் மஞ்சள் காமாலை நோய்ப் பிரிவில்தானாம். நல்லவேளையாக இதற்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டார்கள். குழந்தைக்கு எவ்வளவு வயதாக இருந்தாலும் இந்தத் தடுப்பு மருந்தை அளிக்கலாம். முதல் டோஸ் அளிக்கப்பட்ட அடுத்த மாதத்தில் இரண்டாவது டோஸும், முதல் டோஸ் அளித்த ஆறாவது மாதம் மூன்றாம் டோஸையும் கொடுக்க வேண்டும். ஹெபடிடிஸ் 'ஏ' விற்கும் இப்போது தடுப்பு மருந்து வந்துவிட்டது. ஒரு வயதில் ஒருமுறையும், பிறகு ஒன்றரை வயதில் அடுத்த முறையும் இதற்கான தடுப்பு மருந்து அளிக்கலாம்.
 

தட்டம்மை மற்றும் எம்.எம்.ஆர்:-

குழந்தைக்கு ஒன்பது மாதங்கள் ஆனபிறகு தட்டம்மைக்கான நோய்த்தடுப்பு மருந்தையும், ஒன்றேகால் வயதானபிறகு எம்.எம்.ஆர். எனும் தடுப்பு மருந்தையும் அளிக்கவேண்டும். இரு வருடங்களுக்குப் பிறகு டைபாய்டுக்கான தடுப்பு மருந்தையும் பத்து மற்றும் பதினாறு வருடங்களின் முடிவில் டி.டி. (டெடனஸ்) நோய்க்கெதிரான தடுப்பு மருந்தையும் அளிக்கலாம்.
 

முன்னெச்சரிக்கை:-

தடுப்பு மருந்தை அளிப்பதற்கு முன் உங்கள் பரம்பரையில் யாருக்காவது வலிப்புநோய் வந்திருந்தால் அதை டாக்டரிடம் மறக்காமல் கூறுங்கள். அதேபோல் வயிற்றுப்போக்கு, அதிக ஜுரம் போன்றவை குழந்தைக்கு அப்போது இருந்தால் அதையும் மறக்காமல் மருத்துவரிடம் தெரிவியுங்கள். அப்போது ஒருவேளை டாக்டர் இந்தத் தடுப்பு மருந்தை அளிப்பதை தள்ளிப்போடலாம். காரணம், சிலவகை தடுப்பு மருந்துகளுக்கு பக்கவிளைவுகள் உண்டு.
 

குழந்தைகளின் சின்னச் சின்ன உடல் அசௌகரியங்களுக்கு வீட்டிலேயே சில நிவாரணிகள்.
 

தலைக்குள் நீர் கோர்த்துக் கொள்ளுதல்:-

நீலகிரி தைலம் எனப்படும் யூகலிப்டஸ் எண்ணெயின் ஆவி பயனளிக்கும். மிகவும் சிறிய குழந்தை என்றால் தலையணையைச் சுற்றி யூகலிப்டஸ் எண்ணெய் நனைக்கப்பட்ட துணி உருண்டைகளை வைக்கலாம்.
 

காய்ச்சல்:-

க்ரோசின், ப்ரூஃபென் போன்ற மாத்திரைகளை நாடுவதற்கு முன் நீரினால் ஸ்பான்ஞ் பாத் கொடுங்கள். நேரடியாக ஐஸ் தண்ணீரில் உடலை ஒத்தியெடுக்கக்கூடாது. குளிரால் நடுக்கம் வந்துவிடலாம். சாதாரணமான தண்ணீரில் ஈரத்துணியை நனைத்து உடலைத் துடைக்க வேண்டும். டர்க்கி டவலாக இருந்தால் மேலும் நல்லது. முக்கியமாகப் பெரிய ரத்தக்குழாய்கள் உள்ள அக்குள் மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் நன்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். பதினைந்து முறையாவது இப்படிச் செய்ய வேண்டும்.
 

தசைப்பிடிப்புகளும் சுளுக்கும்:-

விரல்களால் அந்தப் பகுதியை அழுத்தி நீவுவது, எண்ணெயைக் கொதிக்க வைத்து அந்தப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பது என்பதெல்லாம் விஷயத்தைச் சிக்கலாக்கிவிடும். ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி அந்தப் பகுதியில் ஒத்தி ஒத்தியெடுங்கள். பெரும்பாலும் சரியாகிவிடும். (ஐஸ் கட்டியை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கவேண்டாம்).
 

விஷப்பூச்சிக்கடி:-

டாக்டரிடம் குழந்தையை எடுத்துச் செல்லுங்கள். ஆனால் அதற்குமுன் கடிவாய்ப் பகுதியை பலமுறை சோப்புத் தண்ணீரால் நன்கு கழுவிவிடுங்கள். இது அவசியமான முதலுதவி.
 

கீழே விழுந்து அடி:-

பஞ்சு மற்றும் பாண்டேஜ் துணி ஆகியவற்றால் மட்டும் அந்தப் பகுதியை அழுத்திக் கட்டினால்போதும். பெரிய காயம் என்றால் மருத்துவ உதவி தேவை. (மஞ்சள் பொடி, சர்க்கரை, காபி பொடி என்று அப்புவது வேண்டாம்.)
 

உங்கள் குழந்தைக்கு ஜீரணக் கோளாறா? -காரணமும்… நிவாரணமும்…!




காலை உணவு கட்டாயம்:

பள்ளி செல்லும் நிறைய குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். அல்லது அவசர அவசரமாக அள்ளி விழுங்கி விட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். இந்த இரண்டுமே அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.

காலை உணவு தான் அந்த நாள் முழுவதும் உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. மூளையும், உடலும் சிறப்பாக இயங்க உதவுகிறது. எனவே காலை உணவைத் தவிர்க்கக்கூடாது. காலை உணவு சாப்பிடாவிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.

பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும்பாலும் 6 முதல் 7 மணிக்குள்ளாக காலை உணவை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த நேரத்தில் வயிறு பசிப்பதில்லை என்று குழந்தைகள் சாப்பிடாமல் செல்கிறார்கள். பெற்றோரும் குழந்தை சாப்பிட மறுக்கிறது என்று நினைத்து அவர்கள் சாப்பிடாமல் சென்றாலும் கண்டு கொள்வதில்லை.

உண்மையில் உடலானது குறிப்பிட்ட நேரத்துக்கு பசிக்கத் தொடங்கும். அதே போல குறிப்பிட்ட நேரத்தில் உணவு கொடுத்து பழக்கம் ஏற்படுத்திவிட்டால் சில நாட்களில் அதே நேரத்தில் பசிக்கத் தொடங்கிவிடும். எனவே குழந்தைகள் காலையில் சாப்பிட மறுத்தாலும் சில நாட்களுக்கு பழக்கம் வருவதற்காக கட்டாயமாக சாப்பிட வைத்தால் பிறகு தானாகவே காலை 7 மணிக்குள் வயிறு பசிக்கத் தொடங்கிவிடும். சாப்பிடத் தொடங்கி விடுவார்கள்.

நிதானமாக சாப்பிடுதல்:

காலையில் ஏதாவது `ஹார்ன்’ சத்தம் கேட்டாலே பள்ளி பஸ் வந்துவிட்டதோ என்று எண்ணும் குழந்தைகளும், பெற்றோரும் ஏராளம். அதனால் அவசரம் அவசரமாக சாப்பிட்டு விட்டு பள்ளி வாகனத்தைப் பிடிக்க கிளம்பிவிடுகிறார்கள்.

அவசர கோலத்தில் சாப்பிடுவது அஜீரணத்திற்கு காரணமாகிறது. உணவை நன்கு மென்று நிதானமாக சாப்பிடும் போது தான் ஜீரணம் எளிதாக நடைபெறுகிறது. உணவானது உமிழ் நீருடன் சேர்க்கப்பட்டு பற்களால் அரைக்கப்படுவதுதான் ஜீரண பணியின் தொடக்கம். மீதி செரிமானம்தான் வயிற்றில் நடைபெறுகிறது. அப்படி இருக்கும்போது வேக வேகமாக சாப்பிடுவதால் எளிதில் அஜீரணம் தொற்றிக் கொள்கிறது.

செலியாக் நோய்:

அஜீரணத்தை உருவாக்கும் ஒரு நோய் செலியாக். கோதுமை மற்றும் கோதுமை உணவுகள், பால் மற்றும் பால் உணவுகளில் `குளூட்டன்’ என்ற புரதம் இருக்கிறது. இது ஜீரண பிரச்சினையை உருவாக்கும் புரதமாகும். இந்த புரதத்தால் உருவாகும் நோய் `செலியாக்’ எனப்படுகிறது.

இதன் அறிகுறிகளாக அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். மலம் கெட்டவாடை வீசும். வயிறு உப்புசம் உருவாகும். இவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தைகளின் வளர்ச்சி தடைபடும். உடல் எடை குறையும். இந்தப் பிரச்சினையை தவிர்க்க அந்த புரதம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப்போக்கு:

அஜீரணத்தால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. உணவு சாப்பிடும் பழக்கம் மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபாடு ஆகியவை வயிற்றுப்போக்கிற்கு காரணமாகிறது. கோடைகாலங்களில் அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. கோடையில் சுத்தம், சுகாதாரமற்ற பழச்சாறு, பானங்கள் பருகுவது, சுகாதாரமற்ற உணவுகளைச் சாப்பிடுவது போன்றவை வயிற்றுப்போக்கை உருவாக்குகிறது.

பால் மற்றும் பால் உணவுப் பொருட்கள் சில குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். பாரம்பரியமாகவே சில குழந்தைகளுக்கு பால் பிடிக்காது. அவர்கள் பசும்பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர்களுக்கு சோயா பால் கொடுக்கலாம். இப்படி பால் ஒத்துக் கொள்ளாத பிரச்சினையை
 `லாக்டோஸ் இன்டால ரன்ஸ்’ என்று குறிப்பிடுவார்கள்.

வயிற்று வலி:

நாம் பொதுவாக வயிற்றில் எங்கு வலித்தாலும் வயிற்று வலி என்று சொல்கிறோம். ஆனால் வயிற்றின் ஒவ்வொரு பாகத்தில் ஏற்படும் வலிக்கும் வேறு வேறு காரணங்கள் உண்டு. அதிக பசியாலும், வயிற்று எரிச்சலாலும் தொப்புள் பகுதிக்கு மேல்புறமாக வலிக்கும். காலை உணவு சாப்பிடாவிட்டாலும், அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிடு பவர்களுக்கும் மேற்கண்டதுபோலவே வலி ஏற்படும்.

அஜீரண கோளாறாலும் வயிற்று வலி ஏற்படும். பயறு, கோஸ், பீன்ஸ் போன்ற உணவுகள் நைட்ரஜன் சத்து அதிகம் கொண்டவை. இவை அஜீரணத்தை ஏற்படுத்தும்.

காரம் அதிகம் உள்ள உணவுகளை குறைத்துக் கொண்டு, வாயு தொந்தரவு தரும் உணவுகளை தவிர்த்தால் வயிற்று வலியை தவிர்க்கலாம். அஜீரணத்தை தடுக்கலாம்.

துரித உணவுகள்:

குழந்தைகளுக்கு பசியின்மை இப்போது அதிகமாக உள்ளது. காய்ச்சல் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக பசிக்காது. அதேபோல `ஜங் புட்’ எனப்படும் உணவுகளை சாப்பிடும் குழந்தைகளுக்கும் அதிகம் பசி வராது. துரித உணவுகள் எளிதில் வயிற்றை நிரப்பிவிடும். எனவே வழக்கமாக சாப்பிடும் நேரத்தில் சாப்பிட முடியாது. மேலும் ஜீரணத்தை சிதைத்துவிடும். எனவே அஜீரணம் ஏற்படுகிறது.

குழந்தை பசியின்மையாக இருந்தால் பிரச்சினைக்கான காரணத்தை தெரிந்து சரி செய்யப் பாருங்கள். உங்களுக்கு காரணம் தெரியாவிட்டால் மருத்துவரை அணுகுங்கள்.

பெரும்பாலும் குழந்தைகளை அடிக்கடி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட்டு பழக்கப்படுத்தாதீர்கள்.
   அவர்கள் அந்த உணவின் ருசிக்கு அடிமைப்பட்டுப் போய்விடுவார்கள். அதனால் வீட்டில் எவ்வளவு ருசியாக உணவு சமைத்தாலும் அதை விரும்பமாட்டார் கள். எனவே எப்போதாவது ஓட்டல் உணவு, எப்போதுமே வீட்டு உணவு என்று பழக்கப் படுத்துங்கள்.
தண்ணீர்:

தண்ணீர் பருகுவது பலவித பிரச்சினைகளை தடுக்கும். போதுமான தண்ணீர் பருகா விட்டால் ஜீரணம் பாதிக்கும். ஜீரணம் சரியாக இல்லாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும். மலச்சிக்கல் அதிகரித்தால் மலத்தோடு கோடு போல ரத்தம் வெளியேறும். இது மலத்துவாரத்தின் கீழ்ப்பகுதி கிழிவதால் ஏற்படுகிறது. இதனால் `ஆனல் பிஷர்’ நோய் உண்டாகும்.

தண்ணீர் அதிகம் குடிக்காமல் சாப்பிடுவது, பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் `டாய்லெட்’ செல்லப் பழக்க வேண்டும். பழங்கள், நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகம் சாப்பிட வைக்க வேண்டும்.

குழந்தை மருத்துவம் - தொகுப்பு




குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக கிடைக்கும் மருத்துவ கட்டுரைகள், ஆலோசனைகள், மற்றும் தகவல்களை இங்கே தொகுத்தளிக்க இருக்கிறேன். 

குழந்தைக்கு எது நல்லது?

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.
 

தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!
 

நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும்.
 

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.
 

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும்.
 

குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.
 

குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.
 

தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்

குழந்தை வளர்ப்பின் பத்து கட்டளைகள்




(குழந்தை வளர்ப்பு)

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. பொதுவாக எல்லோருமே குழந்தைகள் தாங்கள் நினைப்பது போல செயல்பட வேண்டும் என்றும், தாங்கள் விரும்புவது போல வளரவேண்டும் என்றும் நினைக்கின்றனர்.
 

குழந்தைகள் நமது கையில் இருக்கும் களிமண் போல. அதை நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ப வனைய முடியும். அதற்கு முக்கியமாக கீழ்க்கண்ட பத்து விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
 
1
 

பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல ஒரு முன்மாதிரியாக விளங்க வேண்டும். பெற்றோரின் செயல்களை உள் வாங்கியே குழந்தை வளரும்.
 

தினமும் தன் தந்தையிடம் பர்சைக் கேட்டு அடம்பிடிக்கும் ஒரு குழந்தையிடம் தந்தை பர்சை தூர எறிவது போல பாவ்லா காட்டுவது வழக்கம். இதை கவனித்து வளர்ந்தது குழந்தை.
 

ஒருநாள் ரயிலில் பயணம் சென்று கொண்டிருந்தபோது குழந்தை தந்தையிடமிருந்த பர்சை எடுத்து சன்னல் வழியேவெளியே எறிந்து விட்டது.

குழந்தைகள் பெற்றோரின் செயல்களை உள்வாங்கி செயல்படும் என்பதற்கு இந்தச் சிறு நிகழ்வை ஒரு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.
 

குழந்தைகளுடன் அமைதியாகவும், தெளிவாகவும் அன்பாகவும் பேசுங்கள். குழந்தைகளும் அதையே பின்பற்றும். குழந்தைகளிடம் நீங்கள் கோபமாகவும், எரிச்சலுடனும் பேசினால் குழந்தைகளும் அதையே கற்று வளரும்.
 

2
 

குழந்தைகளின் செயல்கள் உங்களை எப்படிப் பாதிக்கின்றன என்பதை அமைதியாகவும் தெளிவாகவும் அவர்களுக்கு உணர்த்துங்கள். மூன்று வயதான ஒரு குழந்தை உங்கள் இடத்திலிருந்து உங்கள் மனநிலையைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தைப் பெற்று விடுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
 

நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் தொந்தரவு செய்யாமல் போய் விளையாடு என்று சொன்னால் அதைப் புரிந்து கொள்ளும் மனநிலை அந்த சிறு வயதிலேயே குழந்தைக்கு வாய்த்து விடுகிறது.
 

3
 

குழந்தைகள் செய்யும் சிறு சிறு செயல்களுக்கும் அவர்களைப் பாராட்ட வேண்டும். ஆறுமுறை பாராட்டினால் ஒரு முறை தவறை சுட்டிக் காட்டலாம் என்னும் கணக்கு சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.
 

அதிக எதிர்மறை கருத்துக்கள் குழந்தைகளைப் பாதிக்கும். ஆனால் பெற்றோர் தங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதை விட திட்டுவது மேல் என்றே குழந்தைகள் நினைக்கின்றனவாம்.
 

குழந்தைகளைக் கண்டு கொள்ளாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தால் குழந்தை ஓடிச் சென்று தொலைக்காட்சியை அணைப்பது இதனால் தான். எப்படியேனும் கவனத்தைத் தன்பக்கம் திருப்ப வேண்டும் எனும் குழந்தையின் ஆதங்கம் தான் அது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
 

எனவே குழந்தையின் செயல்களை ஆழமாகக் கவனியுங்கள். ஒவ்வொரு சரியான செயலையும் தவறாமல் பாராட்டுங்கள்.
 

4
 

குழந்தைகள் விளையாடும் இடத்திற்கு இறங்கிச் சென்று குழந்தையோடு குழந்தையாக உரையாடுவதே சிறந்தது. அவர்கள் தரையில் அமர்ந்தாலும், வெளியே மணலில் புரண்டாலும் அவர்கள் அருகில் அமர்ந்திருந்து உரையாடுங்கள்.
 

குழந்தைகள் பேசுவதை கவனமுடன் கேட்டு பதிலளியுங்கள். அதை குழந்தைகள் மிகவும் அதிகமாக விரும்புகின்றனவாம். குழந்தைகளின் பேச்சுகள் கவனிக்கப்படாமல் போகும்போது அவை மனரீதியான பாதிப்பை அடைகிறதாம்
 

5
 

நீங்கள் கொடுக்கும் உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். அது மிக மிக முக்கியம். குழந்தைகளுக்கு உங்கள் வார்த்தைகளின் மீது நம்பிக்கை எழவும், உங்களிடம் குழந்தை பாதுகாப்பை உணரவும் அது வழி வகுக்கும்.
 

வெறுமனே உங்கள் விருப்பம் நிறைவேறுவதற்காக போலி வாக்குறுதிகளை வழங்காதீர்கள். ‘ஒழுங்கா சாப்பிட்டா கடைக்குக் கூட்டிப் போகிறேன்’, ‘அமைதியா இருந்தா சாக்லேட் வாங்கி தரேன்’ என எது சொன்னாலும் அதை நிறைவேற்றுங்கள்.
 

நிறைவேற்ற வேண்டும் எனும் சிந்தனையில் நீங்கள் உறுதிமொழிகள் வழங்கும் போது உங்கள் உறுதிமொழிகளும் நேர்மையாய் இருக்கும். குழந்தைகளும் உங்களிடம் நம்பிக்கை வளர்க்கும்.
 

6
 

குழந்தைகளுக்கு சில பொருட்கள் மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கும். கண்ணாடி அணிந்திருக்கையில் கண்ணாடியைப் பிடுங்கி எறிவது குழந்தைக்குப் பிடிக்கும் என்றால் கண்ணாடியை மறைவாக வைத்திருக்க முயலுங்கள், முடிந்த மட்டும்.
 

7
 

உங்கள் குழந்தை ஏதேனும் சுவாரஸ்யமாய் செய்து கொண்டிருந்தால் அது உங்களைப் பாதிக்காதவரையில் கண்டு கொள்ளவேண்டாம். உங்கள் சட்டங்களை குழந்தைகளின் விளையாட்டில் வரையறை செய்ய வேண்டாம்.
 

குழந்தை ஒரு எறும்பை பின் தொடர்வதை பெரிதும் விரும்பினால் விட்டு விடுங்கள். அதை விடுத்து ‘அதெல்லாம் பண்ணாதே’ என்ற அதட்டல் தேவையில்லை.
 

குழந்தையின் போக்கில் குழந்தையை வளர விடுவது குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பெற்றோருடன் அதிக கருத்து வேற்றுமை, மன வருத்தம் வருவதையும் தவிர்க்கும்.
 

8
 

குழந்தையிடம் ‘செய்யாதே’ என்று ஒரு செயலை வலியுறுத்துகிறீர்கள் எனில் அதில் நீங்கள் உறுதியாய் இருங்கள். மனைவி ‘செய்யாதே’ என்று சொல்ல, கணவன் ‘செய்யட்டும் பரவாயில்லை’ என்று சொல்லி குழப்பாதீர்கள். சொல்ல வேண்டியதை நேரடியாகவும், எளிமையாகவும் சொல்லுங்கள்.
 

செய்யாதே என்று சொல்லப்படுவதைச் செய்வதில் எல்லோரையும் விட குழந்தைகள் ஆர்வமாய் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
 

சில விஷயங்களை குழந்தைகளின் தவறுகளிலிருந்து குழந்தைகளே கற்றுக் கொள்ளும். அதை தடுக்க வேண்டாம். வீட்டுப் பாடம் எழுத ஒரு நாள் மறந்தால், அதற்குரிய தண்டனை பெறட்டும். மறு நாளிலிருந்து நினைவில் வைத்திருப்பார்கள்.
 

9
 

குழந்தைகள் முக்கியமானவர்கள் எனும் நிலையை குடும்பங்களில் உருவாக்க மறக்க வேண்டாம். சற்று வளர்ந்த குழந்தைகளை வீட்டின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்தாலோசிப்பதும், கலந்து பணிகளைச் செய்ய வைப்பதும் சிறந்தது. அது குழந்தைகளின் தன்னம்பிக்கையையும், இருப்பையும் வலிமையாக்கும்.
 
கிண்டல், காயம் இல்லாத நகைச்சுவை உணர்வை குடும்பத்தில் குழந்தைகளோடு பகிர்ந்து கொள்ளுங்கள். சேர்ந்து உண்பதும், சேர்ந்து சிரிப்பதும் பலமான குடும்ப உறவின் பாலங்க
 

10
 

குழந்தைகளுக்கு தோல்விகளையும் பழக்குங்கள். கேட்பதை எல்லாம் கொடுப்பதோ, சொல்வதை எல்லாம் செய்வதோ மிகவும் தவறானது. அத்தகைய குழந்தைகள் திடீரென பள்ளித் தேர்வில் வரும் ஒரு தோல்வியைக் கூட சந்திக்க முடியாமல் முடங்கி விடுவார்கள்.
 

எனவே தோல்விகளையும் பழக்குங்கள். தோல்விகளும், வெற்றிகளும் கலந்ததே வாழ்க்கை எனும் தத்துவம் அவர்களுக்குப் புரிய வேண்டியது அவசியம்.

குழந்தை வளர்க்க பெற்றோர்களுக்கு சில டிப்ஸ்:




குழந்தைகளுக்கு சிறு வயது முதலே சூப், ஜுஸ், போ‎ன்றவைகளுக்குப் பதிலாக பச்சைக் காய்கறிகள் பழங்களை அதிகமாக சாப்பிடக் கொடுங்கள். இது நல்ல செரிமானத்தை ஏற்படுத்தி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். 

எப்போதும் குழந்தைகளை விமர்சிக்கும் போது நெகடி
‎வ் அணுகுமுறையைக் கையாளாதீர்கள். அவர்களூடைய பல‎ங்களை எடுத்து சொல்லி இன்னும் சிறப்பாக எ‎ன்னென்ன செய்யலாம் , என்னென்னவற்றைத் தவிர்க்கலாம் என்று எடுத்து சொல்லி ஊக்கம் கொடுங்கள். 

அதே சமயத்தில் ஊக்கம் கொடுத்து, உற்சாகப்படுத்துவது அவசியம் எ
‎ன்பதற்காக சின்ன சின்ன விஷயங்களை ஏதோ உலக சாதனை போல் புகழ்ந்து தள்ளாதீர்கள். உங்கள் பாராட்டு என்பது, தேவையான அளவிலான நிஜமான பாராட்டாக இருக்க வேண்டும். 

வீட்டில் வேலை செய்பவர்களை ஒரு போதும் மரியாதை குறைவாக பேசாதீர்கள். குழந்தைகளும் அதையே பி
‎ன்பற்றுவார்கள். இது ரொம்ப தவறு. சக மாணவர்கள் தொடங்கி, எல்லோரிடமும் அ‎ன்பாய் இருக்கவும், அதே சமயம் மதிக்கவும் கற்றுத் தாருங்கள்.
குழந்தைகள் மட்டுமே குறிப் பிட்ட அறையை பயன்படுத்தினால், அந்த அறை வண்ணமயமாகக் காட்சி தர வேண்டும். குழந்தைகளுக்குப் பிடித்தவை கலர் கலரான பொருட்கள். நம் ஆசைகளை சிறிது விலக்கி விட்டு, குழந்தைகள் ஆசைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அவரவர் குழந்தைகள் எதை விரும்புகின்றனரோ அந்த சூழலைத் தர நாம் முயற்சிக்கலாம். 

இதன் மூலம் குழந்தைகள் தங்களின் பாடங்களை அல்லது வேலைகளை குறிப்பிட்ட இடத்தில் செய்யப் பழகுவர்.
 

குழந்தைக்கு "கார்ட்டூன்' இஷ்டம் என்றால் அந்த படங்களைப் போடலாம்.
 

இயற்கையை விரும்பினால் அது சம்பந்தமான படங்களைப் போட்டு அழகுபடுத்தலாம். விளையாட்டில் ஆர்வம் கொண்ட குழந்தைகளை, விளையாட்டு வீரர்களின் படங்களைப் போட்டு அவர்களை மகிழ்விக்கலாம்.
 

இப்படியாக, குழந்தைகளின் எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் தருவதன் மூலம் அதை தங்களின் அறையாக பாவித்து பாடங்களை கருத்துடன் படிக்க ஆரம்பிப்பர். படிப்பில் மட்டும் நாட்டம் கொண்ட குழந்தைகளாக இருந்தால் உலகப் படங்கள் போன்ற கல்வி சம்பந்தமான சாதனங்களை வைத்து அவர்களை ஊக்கப்படுத்தலாம்.
 

ஓரளவு வசதியிருந்தால், இரண்டு குழந்தைகள் இருக்கும் அறையில் "பங்க் பெட்' என்று சொல்லக்கூடிய அடுக்குக் கட்டில் போன்ற அமைப்பைத் தரலாம். "டிரெயின்' பர்த் போல் ஆசையுடன் படுத்து உறங்குவர்.
 

குழந்தைகளுக்கென தனி ஷோகேஸ், ரீடிங் டேபிள், வார்டுரோப், லான் கார்ப்பெட் என அனைத்தும் கிடைக்கின்றன. தனி இடம் இருந்தாலும் அவரவர் பட்ஜெட் படி அமைத்துக் கொள்ளலாம்.
 

அலமாரிகளில் இருக்கும் இடத்தைப் பொறுத்து, கதைப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், விளையாட்டுச் சாமான்கள், தினமும் பயன்படுத்தும் துணிகள், புதிய துணிகள், யூனிபார்ம் வகைகள் என்று பிரித்து தனித் தனியாக அடுக்கித் தரலாம். இதன் மூலம் அறை வெளியில் மட்டுமல்லாமல், அலமாரியின் உள்ளேயும் திறக்கும் பொழுதெல்லாம் அழகாக சுத்தமாக இருக்கும்.
 

இடம் சிறியதாக இருப்பவர்கள் இதுபோல் பல்வேறு வேலைகளை ஒரே இடத்தில் வசதியுடன் செய்வதோடு கலையம்சத்தையும் காட்ட முடியும்.
 

ஒரு சிறிய அறையை பேச்சலர்ஸ் ரூமாக, குழந்தைகள் அறையாக, ரீடிங் ரூமாக, ஆபீஸ் ரூமாக அமைப்பதுடன் விருந்தினர் வந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

நம் வீட்டின் அமைப்பு, நம் குடும்ப நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்துத் தான் அமைகிறது. என்றோ வரும் விருந்தினர்களை நாம் கணக்கிட முடியாது. அனைத்து அம்சங்களும் கொண்ட அறையில், இரண்டு அல்லது மூன்று குஷன் மற்றும் நல்ல கவர்கள், நல்ல தரமான படுக்கை விரிப்புகள் கைவசம் வைத்துக் கொண்டால் போதும். எப்பொழுது விருந்தினர் வந்தாலும் ரெடிமேட் "பெட்' தந்து விடலாம். கீழே ஒரு சிறிய ஜமக் காளம், அதன் மேல் ஒரு மெத்தை, நல்ல ஒரு "சாடின்' விரிப்பை போட்டு விட்டு இரண்டு அதே கலர் கவர் போட்ட குஷன்களை வைத்தால் போதும். பகலில் உட்காரவும், இரவில் படுக்கவும் பயன்படுத்தலாம்.
 

இதேபோல் இட வசதியோ, போதிய பண வசதியோ இல்லாதவர்கள் நல்ல "ஐடியா'வுடன் ரசனையோடு செயல்பட் டால் எந்த இடத்தையும் சுத்தமாக அழகாகக் காட்ட முடியும்.
 

1) குழந்தைகள் அறையில் மருந்து, மாத்திரைகளை கைக்கு எட் டாத இடத்தில் வைப்பது நல்லது.
 

2) கேசட், "சிடி' போன்றவைகளை ஒரு ஸ்டாண்டு வாங்கித் தந்து சிறிய குழந்தைகளை அடுக்கச் செய்து பழக்கினால் சிறு வயதிலேயே அவர்கள் பொருட்களை சரிவர வைக்கக் கற்றுக் கொள்வர்.
 

3) படிக்கும் குழந்தைகள் வாரம் ஒருமுறை தன் அலமாரிகளை தானே துடைத்து பொருட் களை அடுக்கவும், புத்தகங் களை வரிசைப் படுத்தவும் சொல்லித் தரலாம்