Monday, April 7, 2014

மிஃராஜ் இரவு வழிபாடு!

மிஃராஜ் இரவு வழிபாடு!

1. 'மிஃராஜ்' இரவை கொண்டாடுவது. அதாவது ரஜப் மாதத்தின் 27ம் இரவை 'மிஃராஜ்' சம்பவம் நடந்த இரவாக எண்ணி, அந்த இரவில் விஷேச வணக்கவழிபாடுகள், சிறப்புரைகள், நார்ஸா என்னும் பெயரில் உணவுப்பண்டங்கள் செய்து பங்கிடுவது இன்னும் இது போன்றவைகளில் ஈடுபடுவது.
2. 'இஸ்ராஃ' பிரயாணத்திற்காக நபி(ஸல்) அவர்களை ஏற்றிச் சென்ற, 'புராக்' என்ற பிராணியாக நினைத்து, இரண்டு இறக்கைகள் கொண்ட ஒரு குதிரையின் உருவப்படத்தை, வீட்டில் தொங்க விடுவது. அதனால் வீட்டினுள் அதிக அருள் கொட்டும்? என்பது சிலரின் நம்பிக்கை.
மிஃராஜ் இரவும் அனாச்சாரங்களும்
அனாச்சாரங்களுக்கு குறைவே இல்லையென்று சொல்லுமளவிற்க்கு, மாதத்திற்கு மாதம், ஏதாவது பித்அத்துக்களையும் அனாச்சாசாரங்களையும் இஸ்லாமிய சமுதாயத்தில் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அவைகளையெல்லாம் நமது சமுதாயத்திடமிருந்து களைந்து, நமது இஸ்லாமிய சமுதாயத்தை, தூய வடிவில் இஸ்லாத்தை பின்பற்ற வைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில், தேவைப்படும் போது, மக்கள் மத்தியில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவதில் சுவனப்பாதை தவறுவதில்லை. இந்த அடிப்படையில் ரஜப் மாதத்தில் மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 'மிஃராஜ்' இரவு பற்றியும் அதன் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அனாச்சாரங்கள் பற்றியும் ஒரு சில வரிகளை குறிப்பிட விரும்புகிறேன். நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று, 'இஸ்ராஃ, மற்றும் மிஃராஜ்' என்ற சங்கைமிக்க இரு சம்பவங்களும் நடந்தது என்பதில் எள்முனையளவு கூட ஒரு முஸ்லிமுக்கு சந்தேகமில்லாத ஒன்றாகும். ஆனால் அவ்விரு சம்பவமும் நடந்தது எப்போது என்பது பற்றி தெளிவான எந்தக் குறிப்பும் இல்லை. சில வரலாற்றுக் குறிப்புகள்தான் அதுபற்றி கூறியிருக்கின்றது. அதை வைத்து நாம் எந்த முடிவுக்கும் வரமுடியாது என்பது முதல் விஷயமாகும்.
ஒரு வாதத்திற்கு, அந்த இரவை நாம் தெரிந்து கொண்டாலும், அந்த இரவை, மற்ற இரவுகளை விட சிறப்புமிக்க இரவாக எண்ணி அமல்களை அதிகம் செய்வதற்கும், இன்னும் பல வணக்கங்களில் ஈடுபடுவதற்கும் இஸ்லாத்தில் அனுமதி இருக்கின்றதா? என்பது இரண்டாவது விஷயமாகும். ஒருநாளை மற்ற நாட்களைவிட, ஒரு மாதத்தை மற்ற மாதங்களைவிட, ஒரு இடத்தை மற்ற இடங்களைவிட சிறப்புக்குரியது என்று கூறுவதற்கும், அதில் செய்யப்படும் அமல்களுக்கும், மற்ற நாட்களில் மற்ற இடங்களில் செய்யப்படும் அமல்களைவிட அதிக நன்மைகள் கிடைக்கும் என்று கூறுவதற்கும் ஆதாரம் சமர்பிக்கப்பட வேண்டும் என்பது ஒரு முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றாகும்.
உதாரணத்திற்கு ஆஷுரா தினத்தில் வைக்கப்படும் நோன்பிற்கு மற்ற நாட்களில் நோற்க்கும் நோன்பை விட அதிக நன்மைகள் இருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ரமளான் மாதம், மாதங்களில் சிறந்தது, அதில் செய்யப்படும் அமல்கள் மற்ற மாதங்களில் செய்யப்படும் அமல்களைவிட சிறந்தது என்று திருமறை குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீதும் அறிவிக்கின்றது, மஸ்ஜிதுல் ஹராமில் (மக்காவில்) தொழுதால் மற்ற பள்ளிகளை விட ஒரு இலட்சம் நன்மைகள் அதிகம் கிடைப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ருடைய இரவு ஆயிரம் மதங்களைவிட சிறந்தது என அல்லாஹ் திருமறையிலும் நபி(ஸல்) அவர்கள் பொன்மொழிகளிலும் கூறியருக்கின்றார்கள்.
ஒரு நாளையோ, ஒரு மாதத்தையோ, ஒரு இடத்தையோ, மற்ற நாட்களைவிட, மாதங்களைவிட, இடங்களைவிட, சிறந்த நாள், மாதம், இடம் என்று சொல்வதற்கு அல்லாஹுவிற்கும் இன்னும் அவனுடைய தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு மாத்திரம்தான் அதிகாரம் உண்டு என்பதும், ஒரு முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றாகும். இதன் அடிப்படையில் 'மிஃராஜ்' நடந்த சம்பவம், மாதம், தேதி, அதில் அமல்கள் செய்வது, மற்ற நாட்களில் செய்யப்படும் அமல்களைவிட இத்தனை மடங்கு சிறந்தது என, குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீதிலோ கூறப்பட்டிருக்கின்றதா? இந்தக் கேள்விகளுக்கு விடை இருந்தால் மாத்திரம் 'மிஃராஜ்' இரவை கொண்டாடுங்கள், இல்லை என்றால், அப்படி ஒரு இரவை கொண்டாடுவது 'பித்அத்' என்னும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட மாபெரும் குற்றமாகும்.
மிஃராஜும் தொழுகையும்
தொழுகையைத் தவிர மற்ற எல்லா வணக்கங்களும், நபி(ஸல்) அவர்கள் பூமியில் இருக்கும் போதே கடமையாக்கப்பட்டது. ஆனால் தொழுகையோ, ஏழு வானங்களுக்கும் மேல் தனது தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை அழைத்து, முதலில் ஐம்பதாக கடமையாக்கி, பிறகு அதை பல தடவைகளில் குறைத்து, ஐந்தாக இலகுவாக்கப்பட்டது. இந்த ஹதீதை படித்த பின், இத்தொழுகை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளங்க முடியும். 'மிஃராஜ்' இரவை கொண்டாட வேண்டும் என்று சொல்பவர்களில் பலர், தொழுகையில் பொடு போக்குச் செய்பவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகவே, 'இஸ்ராஃ, மிஃராஜ்' சம்பவத்தின் மூலம், அல்லாஹ்வின் வல்லமையையும், தொழுகையின் முக்கியத்துவத்தையும் விளங்கி, அல்லாஹுவிற்கு முற்றிலும் அஞ்சி, அவன் கடமையாக்கிய தொழுகையை நிலைநாட்டி, மிஃராஜ் இரவாக, ஒரு இரவை ஏற்படுத்துவதை விட்டும், மற்றும் அவன் தடுத்தவைகள் அனைத்தையும் முற்றாக தவிர்ந்து, ஈருலக வெற்றி பெற நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக!
மிஃராஜ்
நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நடத்திக்காட்டிய பல அற்புதங்களில் ஒன்றுதான் 'அல் இஸ்ராஃ மற்றும் மிஃராஜ்' எனும் அற்புதப் பிரயாணம். 1400 ஆண்டுகளுக்கு முன் எவ்வித கண்டுபிடிப்புகளுக்கே வாய்ப்பில்லாத காலத்தில், இன்று வரையென்ன, உலகம் அழியும்வரை, யாராலும் எப்படிப்பட்ட கண்டுபிடிப்புக்களாலும் செல்லவோ, சிந்திக்கவோ முடியாத தொலை தூரத்தை ஒரு நொடிப்பொழுதில் நடத்திக்காட்டிய அற்புதப் பயணம் தான் 'அல் இஸ்ராஃ மற்றும் மிஃராஜ்'.
'இஸ்ராஃ' என்பதின் பொருள்: இரவில் பிரயாணம் செய்வது என்பதாகும். அதாவது கஃபத்துல்லாவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரை சென்ற பிரயாணத்திற்கு சொல்லப்படும். இந்த சம்பவம் பற்றி திருமறை குர்ஆன், இவ்வாறு கூறுகின்றது.
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:1)
இப்பிரயாணம் பற்றி, பின்வரும் ஹதீது மிகவும் தெளிவுபடுத்துகின்றது.
'மிஃராஜ்' என்பதின் பொருள்: மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து வானத்தை முன்னோக்கி செய்த பிரயாணத்திற்கு சொல்லப்படும். இந்த சம்பவம் பற்றி குர்ஆனில் சொல்லப்படவில்லை. ஆனால் ஆதாரப்பூர்வமான பல ஹதீதுகள் அறிவிக்கின்றது. பின்வரும் புகாரியின் அறிவிப்பு அதை தெளிவு படுத்துகின்றது.
'இஸ்ராஃ'  பிரயாணம்: புராக் என்னும், (கழுதையை விட பெரிதும் கோவேரு கழுதையை விட சிறிதான) பிராணியின் மீது ஜிப்ரயீல்(அலை) அவர்களின் உதவியோடு தரையில் நடந்தது. 'மிஃராஜ்'  பிரயாணம்: ஜிப்ரயீல்(அலை) அவர்களுடன் வான் நோக்கி செய்த பிரயாணமாகும். இந்த இரண்டு பிரயாணம் பற்றியும் புகாரியில் வந்திருக்கும் பின்வரும் ஹதீதைப் பாருங்கள்.
நான் இறையில்லம் கஅபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டபிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறு கழுதையை விடச்சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) 'ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர் 'முஹம்மது' என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி  கட்டளையிடப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது அவர் 'ஆம்' என்றார். 'அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான்  ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்கள், (என்) மகனும் இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக! என்று சொன்னார்கள்.
பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. அவர் 'ஜிப்ரீல்' என்று பதிலளிக்க, உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது' என்று பதிலளித்தார்.' (அவரை அழைத்து வரும்படி) கட்டளையிடப்பட்டுள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'ஆம்' என்று பதிலளித்தார். 'அவரது வரவு நல்வரகாட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும் 'சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்' என்று சொன்னார்கள்.
நாங்கள் மூன்றாவது வானத்திற்கு சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) 'ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர் 'முஹம்மது' என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி  கட்டளையிடப்பட்டுள்ளதா?' என்று கேட்கப்பட்டது. அவர் 'ஆம்' என்றார். 'அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் யூசுஃப்(அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு ஸலாம் கூறினேன் அவர்கள், சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) 'ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர் 'முஹம்மது' என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி  கட்டளையிடப்பட்டுள்ளதா?' என்று கேட்கப்பட்டது. அவர் 'ஆம்' என்றார். 'அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான்     இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் கூறினேன் அவர்கள், சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார்கள்.
பிறகு நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) 'ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர் 'முஹம்மது' என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி கட்டளையிடப்பட்டுள்ளதா?' என்று கேட்கப்பட்டது. அவர் 'ஆம்' என்றார். 'அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு ஸலாம் கூறினேன் அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று வாழ்த்துச் சொன்னார்கள்.
நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) 'ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர் 'முஹம்மது' என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி கட்டளையிடப்பட்டுள்ளதா?' என்று கேட்கப்பட்டது. அவர் 'ஆம்' என்றார். 'அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான்      மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) ஸலாம் கூறினேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று வாழ்த்துச் சொன்னார்கள். நான் அவர்களைக் கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.
பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) 'ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர் 'முஹம்மது' என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி கட்டளையிடப்பட்டுள்ளதா?' என்று கேட்கப்பட்டது. அவர் 'ஆம்' என்றார். 'அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது…. நான்  இப்ராஹீம்(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) ஸலாம் கூறினேன். அவர்கள் 'மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று சொன்னார்கள்.
பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' எனும் வளமான இறையில்லம் எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், 'இதுதான், அல்பைத்துல் மஃமூர் ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வரமாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகிவிடும்' என்று சொன்னார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜ்ர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர், ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான்   ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக்குறித்து கேட்டேன். அவர்கள்  'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்' என்று பதிலளித்தார்கள்.
பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தீர்கள்?' என்று கேட்டார்கள். நான், 'என் மீது ஐம்பது நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்கமாட்டார்கள். ஆகவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்' என்று சொன்னார்கள். நான் திரும்பிச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும்  (சென்று நான் கேட்க, இறைவன்  அதை) முப்பதாக (30) ஆக்கினான். மீண்டும் அதைப்போலவே நடக்க (அதை) இறைவன் இருபதாக (20) ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்ற போது அவர்கள் முன்பு போலவே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் ஐந்தாக (5) ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தீர்கள்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்' என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டு விட்டேன்' என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக) 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்' என்று அறிவிக்கப்பட்டது. (புகாரி) 3207
புகாரியின் இன்னும் ஒரு அறிவிப்பில்: ஒவ்வொரு முறையும், ஐந்து, ஐந்தாக குறைக்கப்பட்டதாக வந்திருக்கின்றது. இச்சம்பவத்தின் மூலம் நாம் பெறும் படிப்பினைகள்:
1. அல்லாஹ்வின் வல்லமை எவ்வளவு விசாலமானது என்பதை தெரிந்து கொள்வதாகும்.
2. முஹம்மது(ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் என்பதற்கு இது பெரும் சான்றாகும்.
3. தொழுகையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வதற்கு இச்சம்பவம் பெரிதும் உதவுகின்றது. அதாவது ஒவ்வொரு வணக்கத்தையும், நபி(ஸல்) அவர்களுக்கு, அல்லாஹ் வஹீ மூலம் கடமையாக்கினான். ஆனால் தொழுகையை மாத்திரம் இவ்வளவு நீளமான பிரயாணத்தை ஏற்படுத்தி, தன் பக்கம் அழைத்து கடமையாக்கினான். இது தொழுகையின் முக்கியத்துவத்தை காட்டுகின்றது.
நன்றி: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ – சுவனப்பாதை


--
*more articles click*
www.sahabudeen.com


Saturday, April 5, 2014

கோழி, ஆடு இறைச்சி உண்பவரா? உடனே படியுங்கள்!

கோழி, ஆடு இறைச்சி உண்பவரா? உடனே படியுங்கள்!

மௌளவி, அ. முஹம்மது கான் பாகவி

கோழி, ஆடு போன்ற கால்நடைகள், பறவைகள் ஆகியவற்றின் இறைச்சி மனிதர்களின் முக்கிய உணவாக விளங்குகிறது. இவற்றில் உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துகள் இயற்கையாகவே நிறைந்துள்ளன.

ஆயினும், கோழி, ஆடு போன்றவற்றை அறுப்பது முதல் சமைத்து உண்பதுவரை பயன்படுத்தும் முறையைப் பொறுத்து அதன் பயனும் விளைவும் அமைகிறது. முக்கியமாகப் பிராணியை அறுத்து, அதன் குருதியை வெளியேற்றுவதில் மிகவும் கவனம் தேவை.

இன்றைய மின்னணு உலகில், நிமிடக்கணக்கில் வேலைகளை முடித்துவிட்டு, அடுத்த கட்டத்திற்குப் பறக்கவே மனிதன் விரும்புகிறான். கோழி, ஆடுகளை அறுப்பதிலும் அதே அவசரம்தான். அதனால் விளையும் சேதங்களைப் பற்றிச் சிந்திக்க அவனுக்கு நேரமில்லை; மனமும் இல்லை.

முஸ்லிம்களும் அவசர உலகில் சிக்கிக்கொண்டு உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்வதோடு மார்க்க வரைமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டுவிடுகின்றனர் என்பதுதான் நமது கவலையெல்லாம்.

ஆடு, கோழிகளின் உடலில் மின்னதிர்வைச் செலுத்தி, அவற்றை நிமிட நேரத்தில் உயிரிழக்கச் செய்யும் முறையே தற்போதைய உலகில் அதிகமாகச் செயல்பாட்டில் உள்ளது. அல்லது முறையாக அறுக்காமல் அவசரகதியில் உயிரிழக்கச் செய்கின்றனர்.

இதனால், உயிரினத்தின் இரத்தம் முழுமையாக உடலிலிருந்து வெளியேறாமல், செத்த பிராணியின் உடலில் உறைந்து கெட்டியாகத் தேங்கிவிட அதிக வாய்ப்பு உண்டு. அத்துடன் பிராணியின் உயிர் படிப்படியாகப் பிரிந்து, கை, கால்களை உதறி உயிரிழக்காமல் ஒரே அதிர்வில் மூச்சு நின்றுபோகின்ற கோரமும் நேருகிறது.

ஷரீஅத் சொல்வதென்ன?

1. ஆடு, கோழி போன்ற இறைச்சிக்கான பிராணிகளை அறுக்கும்போது அறுப்பவர், அல்லாஹ்வின் திருநாமம் கூறி, அவனைப் பெருமைப்படுத்த வேண்டும். அதாவது "பிஸ்மில்லாஹி, அல்லாஹு அக்பர்" என்று கூற வேண்டும். இவ்வாறு சொல்லி அறுக்கப்படாத பிராணியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடுகின்றது. (அல்குர்ஆன், 6:121)

2. கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் அறுப்பதே விரும்பத் தக்க வழிமுறையாகும். இதனால் அறுக்கப்படும் பிராணிக்கு எளிதான முறையில் உயிர் பிரிய வழியேற்படும்; சித்திரவதை இருக்காது.

3. ஆட்டை அதன் இடப்பக்கமாகப் படுக்கவைத்து, அதன் குரல்வளை, உணவுக்குழாய், குரல்வளையைச் சுற்றியுள்ள எதிரெதிரான இரு நரம்புகள் ஆகியவற்றைத் துண்டிக்கும் வகையில் அறுக்க வேண்டும்.

4. கோழியைக் கையில் ஒருவர் பிடித்துக்கொள்ள மற்றவர் அறுக்கலாம்.

மார்க்கம் காட்டியுள்ள இந்த வழிமுறையின் பயனால், பிராணியின் உடலிலிருந்து முற்றாகக் குருதி வெளியேறிவிடும்; இறைச்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தமும் கழுவினால் போய்விடும். அத்துடன் சித்திரவதையின்றி உயிர் பிரிவதற்கான நல்ல வாய்ப்பும் இதில் கிடைக்கிறது. இதுவே இயற்கையான, ஆரோக்கியமான அறுக்கும் முறையாகும்.

இம்முறையில் அறுக்கப்படாத, தானாகச் செத்த பிராணியின் இறைச்சியையோ பொதுவாக எந்தப் பிராணியின் குருதியையோ உட்கொள்வதற்குத் திருக்குர்ஆன் தடை விதித்துள்ளது. (அல்குர்ஆன், 5:3)

நவீனத்தின் நாசம்

மின்னதிர்வால் ஒரு நொடியில் பிராணிகளைக் கொல்லும் இன்றைய நவீன முறையால் கேடுகள் பல விளையும் என்பதை மறந்துவிடக் கூடாது. இது அறிவியல் ஆராய்ச்சியால் நிரூபிக்கப்பட்டுள்ள பேருண்மை ஆகும்.

'விஜிடேரியன்ஸ் இண்டர்நேஷனல் வாய்ஸ் ஃபார் அனிமல்ஸ்'(VIVA) அமைப்பின் உறுப்பினர் டாக்டர் ஸ்மித் ரீபிக்கா செய்த ஆய்வு முக்கியமானது. மின்னதிர்வு முறையால் ஏற்படும் விளைவுகளை முழுமையாக ஆராய்ச்சி செய்த டாக்டர் ஸ்மித், மின்னதிர்வால் பெரும்பாலான பிராணிகள் உயிரிழப்பதற்கு முன்பே மூச்சுத்திணறி உணர்வை இழக்கின்றன என்று குறிப்பிடுகிறார்.

ஜெர்மன் நாட்டின் ஹானோஃபர் பல்கலைக் கழக டாக்டர் SCHULTZ, மின்னதிர்வால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள், ஷரீஅத் கூறும் அறுப்பு முறையால் ஏற்படுவதில்லை. மின்னதிர்வால் இதயத் துடிப்பு மிக வேகமாக நின்றுவிடுகிறது. இதனால் இறைச்சிக்குள் இரத்தம் ஊடுருவி பரவிவிடுகிறது என்று கண்டறிந்தார்.

இரத்தத்தை உட்கொள்வதும் இரத்தம் ஊடுருவி பரவிவிட்ட இறைச்சியை உண்பதும் உடலுக்குக் கேடு விளைவிக்கும். கிருமித்தொற்று என்பது முதலில் இரத்தத்தில்தான் ஏற்படும். இரத்தத்தில் நோய்க் கிருமிகள் இருந்தால், அவை சாகாமல் அப்படியே தங்கிவிடும். இந்நிலையில் இரத்தத்தைச் சமைத்தோ சமைக்காமலோ எப்படி உண்டாலும் அதிலுள்ள நோய்க்கிருமிகள் நம் உடலுக்குக் கேடு விளைவிக்கும். இதனால்தான், குருதியை முழுவதும் வெளியேற்றிவிட வேண்டும் என்று ஷரீஅத் கூறுகிறது.

முஸ்லிம்களுக்கு அன்பு வேண்டுகோள்

கோழி, ஆடு போன்றவற்றை ஷரீஅத் முறைப்படி அறுத்த பின்பே அதன் இறைச்சியை உட்கொள்ள வேண்டும். இல்லையேல், மார்க்க ரீதியாகப் பெரும் குற்றம் செய்தவர்களாவோம். அத்துடன் மருத்துவ ரீதியாக உடலுக்குத் தீங்கை விளைவித்துக்கொள்வோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஷரீஅத் முறைப்படி ஆடு, கோழி ஆகியவை அறுக்கப்படுகின்றனவா என்பதை இறைச்சி வியாபாரிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லையேல் ஹராமான பொருளை விற்பனை செய்த பாவம் உங்களுக்கு ஏற்படும்.

பொதுமக்களும் இறைச்சி வாங்கும்போது, ஷரீஅத் முறைப்படி அறுக்கப்பட்டதுதானா என்பதைத் தெரிந்துகொண்ட பின்பே வாங்க வேண்டும். ஷரீஅத் முறைப்படி அறுக்கப்படாத பிராணிகளின் இறைச்சியை விற்கும் கடையில் இறைச்சி வாங்காதீர்கள்! உணவகங்களில் உணவருந்தச் செல்லும்போதும் இதைத் தெரிந்துகொண்டே இறைச்சி உணவை வாங்குங்கள்! சந்தேகம் ஏற்பட்டால் தவிர்த்துவிடுங்கள்!

இதுவே மார்க்கத்திற்கும் நல்லது!

சுகாதாரத்திற்கும் நல்லது!

ஷரீஅத்தைப் பேணுவோம்!

உடல்நலம் காப்போம்!
http://khanbaqavi.blogspot.in/2013/05/blog-post.html

--
*more articles click*
www.sahabudeen.com


Thursday, April 3, 2014

உழைப்பின் சிறப்பு

உழைப்பின் சிறப்பு

இஸ்லாம் உழைக்காமல் சோம்பேரிகளாக வாழ்வதனை விரும்புவதில்லை. இதனால் அனைவரும் உழைத்து வாழ வேண்டும் என தூண்டுகின்றது. இதனை பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன.
"அவன் எத்தகையவனென்றால் உங்களுக்கு பூமியை வாழ்வதற்கு எளிதானதாக அவன் ஆக்கிவைத்தான். ஆகவே அதன் பல பாகங்களில் சென்று, அவன் உங்களுக்கு அளித்திருக்கும் உணவிலிருந்து உண்ணுங்கள். உங்களுடைய மண்ணறைகளிலிருந்து உயிர்பெற்றெழுதல் அவன்பாலே இருக்கிறது" (76:15)
"பின்னர் ஜும்ஆத் தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் பள்ளியிலிருந்து வெளிப்பட்டுப் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய பேரருளைத் தேடிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்" (62:10)
நபி (ஸல்) அவர்களும் உழைப்பின் முக்கியத்துவத்தை பல சந்தர்ப்பங்களில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
"தன்கையால் உழைத்து உண்பதை விட வேறு எந்தச் சிறந்த உணவையும் எவரும் உண்ணுவதில்லை" புகாரி
இதனாலேயே நபிமார்கள் எல்லோரும் தமது வாழ்க்கைத் தேவைக்காக ஏதோ ஒரு தொழிலை செய்பவர்களாக இருந்துள்ளனர். அவர்களில் சிலர் விவசாயம் செய்தனர். இன்று சிலர் கைத்தொழில், வியாபாரம், மந்தை மேய்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். முஹம்மது நபி (ஸல்) அவர்களும் வியாபாரம், ஆடு மேய்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டார்கள். ஸஹாபாக்களும் வியாபாரிகளாகவும் விவசாயிகளாகவும் இருந்துள்ளனர்.
நபி தாவூத் (அலை) கொல்லராகவும் ஆதம் (அலை) விவசாயியாகவும், நூஹ் (அலை) தச்சராகவும், இத்ரீஸ் (அலை) தையல் காரராகவும் மூஸா (அலை) இடையராகவும் இருந்துள்ளனர். – அல் ஹாகிம்
இஸ்லாம் ஒரு மனிதன் பிறரிடம் கை நீட்டாது. சுய மரியாதையுடனும் கெளரவத்துடனும் வாழ வேண்டும் என எதிர்பார்க்கின்றது. இதன் மூலம் உழைக்குமாறு தூண்டுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக உங்களில் ஒருவர் தனது கயிற்றை எடுத்துச் சென்று விறகு சேர்த்துத் தொழில் செய்து வருவதானது ஒரு மனிதன் கொடுத்தாலும் மறுத்தாலும் அவனிடம் சென்று கை நீட்டி யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். -புகாரி, முஸ்லிம்
உழைக்காமல் சோம்பேரிகளாக பிறரிடம் கை நீட்டி யாசகம் கேட்பவர்கள் நாளை மறுமையில் முகத்தில் கறுப்புப் புள்ளிகளுடன் வருவார்கள்.
ஒரு முறை ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். தமக்கு ஏதாவது தருமாறு கேட்டார். இது கேட்ட நபி (ஸல்) அவர்கள் 'உங்களுடைய வீட்டில் ஏதாவது இருக்கின்றதா" எனக் கேட்டார்கள்" ஒரு போர்வையும் ஒரு பாத்திரமும் இருப்பதாக அவர் பதிலளித்தார். இவற்றைக் கொண்டு வருமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள். இவ்விரு பொருள்களும் கொண்டு வரப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஏலத்தில் விற்றார்கள். அதற்கு இரண்டு திர்ஹம்கள் கிடைத்தன.
"இதில் ஒரு திர்ஹத்திற்கு உணவு வாங்கி குடும்பத்துக்கு கொடுக்குமாறும் அடுத்த திர்ஹத்துக்கு ஒரு கோடரி வாங்கி வாருங்கள் என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்கள். கோடரி வாங்கி வரப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட நபி (ஸல்) அவர்கள் அதற்கொரு பிடியைப் பொருத்தி இந்த மனிதரிடம் ஒப்படைத்தார்கள்.
"நீங்கள் விறகு வெட்டி விற்பனை செய்யுங்கள். பதினைந்து நாட்களுக்கு இந்தப் பக்கம் தலைகாட்டக் கூடாது" என்று கூறி அனுப்பி வைத்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்கள் கூறியபடி விறகு வெட்டி விற்பனை செய்து வந்தார். 15 நாட்களில் பின் நபி (ஸல்) அவர்களைச் சத்தித்து தனது வருமானத்தைப் பற்றிக் கூறித் திருப்தியடைந்து இதற்கு நன்றி கூறினார். அப்போது " இறுதி நாளில் முகத்தில் கறுத்த குறிகளுடன் வருவதைவிட இத் தொழில் உமக்கு மிகவும் சிறந்ததாகும்" திர்மிதி என்று நபி (ஸல்) அவர்கள் போதனை செய்து அவரை அனுப்பி வைத்தார்கள்.
உமர் (ரழி) அவர்கள் உழைக்காமல் அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்து விட்டோம் எனக் கூறிக்கொண்டு பள்ளிவாசலில் முடங்கிக் கிடந்த சிலரைக் கண்டு அவர்களை நோக்கித் தமது சாட்டையை உயர்த்தி 'உழைக்காமல் வருமானத்தைத் தேடி வெளியேறிச் செல்லாமல் உங்களில் எவரும் இருக்கக் கூடாது" அல்லாஹ்வே எனக்கு ரிஸ்கை வழங்கு' எனப் பிரார்த்தனை செய்தால் மாத்திரம் போதாது: வானம் தங்கத்தையோ வெள்ளியையோ மழையாகப் பொழியப் போவதில்லை" எனக் கூறினார். மேலும் அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குமாறும் தொழிலாளியின் வியர்வை உலருமுன் கூலியை கொடுத்து வருமாறும் பணிக்கின்றது.
அதன் மூலம் இஸ்லாம் வறுமை ஒழிப்புக்கான திட்டத்தை முன்வைக்கின்றது என்பது தெளிவாகின்றது. எனவே சமூகங்களிலுள்ள வசதிபடைத்த செல்வந்தர்கள் அனைவரும் அவரவர் வாழ்நாளில் காணப்படும் சுயதொழியை ஏற்படுத்தி கொடுப்பார்களாயின் எமது நாடு வறுமையற்ற நாடாக மாறுவது சந்தேகம் இல்லை.
ஆகவே, நாமும் இஸ்லாம் கூறியபடி உழைத்து வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போமாக!
ஏ. எம். அஸ்லம்…-
http://www.readislam.net/portal/archives/3495

--
*more articles click*
www.sahabudeen.com


Wednesday, April 2, 2014

இவங்களே இப்படித்தான்!!! குத்துங்க எசமான் குத்துங்க!!!

 

1) ஒரு வாரமாகப் புதிதாக வந்திருக்கும் சினிமாக்குப் போகலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் மனைவியிடம் இன்னைக்குக் கண்டிப்பா நாம ஈவ்னிங் படம் பாக்க போறோம் என்று தலையில் அடிக்காத குறையாகச் சத்தியம் செய்து விட்டு ஆபிஸுக்கு வந்து இருக்கிற வேலையெல்லாம் இழுத்து போட்டு எவ்வளவு சீக்கிரமா செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரமா செய்து விட்டு, பிடுங்கிய ஆணியை எல்லாம் ஒரு ரிப்போட்டா போட்டுவிட்டு வீட்டுக்குப் போகலாம் என்று மெயிலை திறந்தால் கிளைண்ட் அனுப்பிய மெயில் ஒரு நான்கை ஒபன் பண்ணி பார்க்கமலே "பிளீஸ் டூ நீட் புள்" என்று புராஜெக்ட் மேனேஜர் அனுப்பி வைத்திருப்பார். அதுல ஹை பிரியாரிட்டி கிளிக் செய்யப் பட்டிருக்கும், அது மட்டும் அல்லாமல் ஆபிஸில் இருக்கும் மொத்த பெரிய புள்ளிகளும் சிசியில் வைக்கப்பட்டிருக்கும்.

2) மூணு மாசத்துக்கு முன்பே, என்னோட மனைவின் தங்கச்சிக்குக் கல்யாணம் இருக்கிறது, நான் கண்டிப்பா போகணும், ஒரு வாரமாவது லீவு வேண்டும் என்று நேரம் கிடைக்கும் போது எல்லாம் சொல்லி இருப்போம். அப்பயெல்லாம் மூணு மாசம் கழிச்சி தானே, ஒண்ணும் பிரச்சனையில்லை தாராளமா நீங்க போகலாம் என்று சொல்லிவிட்டு, ஊருக்கு போறதுக்கு ஒரு வாரம் இருக்கும் போது அடுத்த வாரம் நான் கிளைன்ட் மீட்டிங்கு அவுட் ஆப் கண்டிரி போறேன் நீங்க தான் புராஜெக்ட்டை பார்த்க்கணும் என்று சீரியஸா பேசுவாரு. நான் இல்லனா நீங்க தான் புராஜெக்டை பார்த்துகிறீங்கனு மேனேஜர் கிட்ட சொல்லியிருக்கிறேன் என்று கொக்கியை போடுவாரு.

3)
 எல்லா நாளும் ஒன்பது மணி ஆபிஸுக்கு, எட்டே மூக்காலுக்கே போய் லைட் போடுற‌துல தொடங்கி, ஏசியை ஆன் செய்து ரூம் பிரஷ்னெர் அடிக்கிறது வரை நாமளா தான் இருப்போம். அப்பயெல்லாம் மேனேஜர் சீக்கிரம் வர மாட்டார், ஆனா ஒரு நாளு டிராபிக்ல வண்டி மாட்டி ஐந்து நிமிடம் லேட்டா வந்த அன்னைக்குத் தான் நம்மளை தவிர எல்லோரும் சிஸ்டம் முன்னாடி உக்கார்ந்து இருப்பார்கள், கிளாஸ் டோரை திறந்து உள்ளே பார்த்தால் மேனேஜர் கூடச் சீக்கிரம் வந்து இருப்பார். ஒரு நாளும் இல்லாமல் இன்றைக்கு முகத்துக்கு நேர் பார்த்துக் குட் மார்னிங் சொல்லுவார். அவர் சொல்லும் விதமே நீ இன்னைக்கு லேட்டா வந்திருக்க என்பதை உணர்த்தும்.

4)
 கம்பெனி நடத்தும் பார்மேசன் நாளில் மேனேஜர் உட்படப் பெரிய புள்ளிகள் அனைவரும் சொல்லிவைத்தார் போல், ஜப்பான்ல சான்சுகி கூப்டாக, அமெரிக்காவில் பில்கேட்ஸ் கூப்டாக, இவ்வளவு ஏன் இந்தியாவுல பா.சிதம்பரம் அவுங்களும் புராஜெக்ட் பண்ண கூப்பிட்டாக என்று கலர் கலரா சொன்னதை நம்பி மூணு மாசம் கழிச்சி போட போற இங்கிரிமென்ட் கனவு இப்பவே வர தொடங்கிவிடும். இங்கிரிமென்ட் கவர் கொடுக்கும் நாளில் மேனேஜர் ரூம்க்கு போனா, அந்தப் புராஜெக்ட்ல பணம் வர்ல, அந்தக் கிளைன்ட் ஏமாத்திட்டான், எக்னாமிக் கிரைசிஸ், புதுப் புராஜெக்ட் ஏதும் வரலனு கதற, கதற அழவைச்சிட்டுக் கையில் ஒரு குச்சி ஐஸு போல இங்கிரிமென்ட் கவரை தந்து விடுவார்.

5)
 புதுசா வர‌ போற புராஜெக்ட்டுக்குத் தேவையான பைல்களை மெயிலிலும், டாக்குமென்ட்களைப் பிரிண்ட் போட்டும் பெரிய பெரிய‌ கட்டா கொடுத்து வீட்ல இருந்து ரிபர் பண்ணுங்கனு சொல்லும் மேனேஜர், முடிச்சு கொடுத்த புராஜெக்ட்டுக்கு வர வேண்டிய இன்சன்டிவ் பற்றித் தவறா கூடப் பேச மாட்டார். நாம கேட்கலாம் என்று மேனேஜர் ரூம்க்கு போன ஏவனோ ஒரு புராஜெக்ட் மேனேஜர் பாதியில வுட்டுட்டு போன புராஜெக்ட்டுக்குப் பணம் வர்லனு மேனேஜிங் டைரக்டர் திட்டினார் என்று தலையில் கை வைப்பார்.

6) ஆறு மாசம் பண்ண வேண்டிய புராஜெக்டை, ஆர்வ கோளாரில் மூணு மாசத்துல முடிக்கலாம் என்று மைக்ரோசாப்ட் புராஜெக்ட்ல ஒவ்வொரு நாளும் முடிக்க வேண்டிய டார்கெட்டை பார் சார்ட் போட்டு கிளைண்டுக்கு பிளான் போட்டு கொடுத்துவிட்டு, நீங்க கொடுத்த பிளான் படி ஏன் புராஜெக்ட் முடிக்கவில்லை என்று கிளைன்ட் கேட்கும் போது மட்டும், அப்படியே நம்ம பக்கம் முகத்தைத் திருப்பிக் கேட்க வேண்டியது. நாமளும் வழக்கம் போலச் சர்வர் சரி இல்ல, கிளைன்ட கொடுத்த இன்புட் சரியில்லை, ஆன்சைட்ல இருந்து இன்பார்மேஷன் கரெட்ட வந்து சேரலனு ஒரு பக்க மெயில் டைப் பண்ணனும்.

7)
 தலை வலிக்குது என்று ஓர் அரை நாள் லீவு வாங்கலாம் என்று மேனேஜர் ரூம்க்குப் போனால், உக்கார வச்சு, நாம பண்ணிய புராஜெக்ட்டுக்குக் கிளைன்ட் கொடுத்திருக்கும் கமெண்டுகளை ஒவ்வொன்னா படிக்க ஆரம்பித்து விடுவார். இது போதாது என்று புராஜெக்ட்டுப் பிளானை வேறு ஓபன் செய்து வைத்துவிட்டு நாம் இன்னைக்கு இவ்வளவு டார்கெட் முடிச்சு இருக்கனும், ஆனா அதுல பாதிக் கூட முடிக்கவில்லை. எப்படி முடிக்கப் போகிறோம், புதுசா பிளான் ஏதும் வைச்சு இருக்கீங்கள?.. இப்படியே போய்ட்டு இருந்தா புராஜெக்ட்டை கிளைன்ட் கேன்சல் பண்ணிடுவான். நீங்க தான் ஏதாவது பண்ணனும் என்று கேப் விடாமல் பேசுவார். நமக்கு வந்த தலைவலி எப்பவோ ஓடி போயிருக்கும். அதுக்கு பதிலா பிபி ஏற துவங்கியிருக்கும்.

8)
 வெள்ளிக்கிழமை வந்தாலே முகத்தில் அவ்வளவு ஒரு சந்தோசமாக இருக்கும். இரண்டு நாளு லீவு இருக்கு நிம்மதியா தூங்கலாம், அவுட்டிங் போகலாம், சினிமா பார்க்கலாம் என்று நினைத்து கொண்டிருப்போம். அன்றைக்கு மதிய நேரத்திற்குப் பிறகு வேலை என்பது ஏதோ கடமைக்கு என்று தான் செய்து கொண்டிருப்போம். அப்பதான் கான்பிரன்ஸ் ரூம்க்கு எல்லோரும் வாங்க என்று மேனேஜரின் மெசேஸ் வரும். என்னவா இருக்கும் என்று உள்ள போனா முகத்தில் அப்படி ஒரு கடுமை இருக்கும். கிளைன்ட் கிட்ட இருந்து இப்ப தான் மெயில் வந்தது, நாம் கொடுத்த பிளான் படி டார்கெட்டை அச்சீவ் பண்ணலியாம், இப்படியே போனால் புராஜெக்ட் கான்டிராக்டை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும் என்று கடுமையாக எச்சரித்து இருக்கிறான். அப்படி ஒண்ணு நடந்த நீங்களும், நானும் வீட்டுக்கு தான் போகணும் என்று பீதியை கிளப்புவார் மேனேஜர். அப்புறம் என்ன "எல்லா நாளும் எங்கள் வீட்டில் கார்த்திகை" என்று விஜயகாந்த் உடன் கைகோர்த்துப் பாடுவதைப் போல், நாங்களும் "வாரத்தில் ஏழு நாளும் எங்கள் ஆபிஸில் சிவராத்திரி" என்று மேனேஜருடன் கை கோர்க்க வேண்டும்.

9)
 ஊருக்கு போயிட்டு வரும் போது ஏடிம் கார்ட்ல இருக்கிற மொத்த காசையும் காலி செய்துவிட்டு, பார்சையும் காலியா வைத்துக் கொண்டு எப்படியும் நாளைக்கு மாதத்தின் முதல் தேதி, சம்பளம் கார்ட்ல கிரெடிட் ஆகிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அப்ப தான் அட்மின் கிட்ட இருந்து மெசேஸ் வரும், எதிர்பாரத விதமா இன்னைக்குச் சம்பளம் பேங்க்ல போட முடியவில்லை, நாளைக்குத் தான் போடுவோம், மறுநாள் பேங்க் லீவு அதனால மண்டே தான் உங்களுக்குக் கிரெடிட் ஆகும் என்று. அப்புறம் என்ன வழக்கம் போலக் நல்ல‌ குடும்பஸ்தனா பார்த்து தேட வேண்டியது தான். ஏன்னா அவன் தான் மாச கடைசி ஆனாலும், அக்கவுட்ல பணம் வைத்திருப்பான். அதுல‌ என்ன "நல்ல குடும்பஸ்தன்" என்னைப் போலவும் எப்பவுமே அக்கவுண்டை காலியா வைத்திருக்கும் குடும்பஸ்தன் சில பேரு இருப்பாங்க தானே!!.

10)
 பொங்கலுக்கு ஊருக்கு போறதுக்கு மூணு மாசத்துக்கு முன்பே இரயில்ல டிக்கெட் புக் பண்ணி வைச்சுட்டு இருந்தா, பொங்கல் வர்றதுக்கு ஒரு வாரத்திற்கு முன்னாடி பொங்கலுக்கு நீங்க ஊருக்கு போக வேண்டாம்!! அது முடிஞ்ச பிறகு ஒரு வாரம் லீவு போட்டு போயிட்டு வாங்க, எல்லோரும் ஒரே டைம் லீவு போட்டா புராஜெக்ட்டை ரன் பண்ண முடியாது என்று தோளின் மீது தட்டுவார் மேனேஜர்.

http://nadodiyinparvaiyil.blogspot.com/2014/03/blog-post_27.html


இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Tuesday, April 1, 2014

விட்டமின் மாத்திரைகள் – அதிர்ச்சி தகவல்

விட்டமின் மாத்திரைகள் – அதிர்ச்சி தகவல்

ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. அதைப் போல விட்டமின் மாத்திரைகள் என்றவுடன், நம் மக்கள் சத்து மாத்திரை என்ற புனிதமான சொல்லைப் போட்டு, அதனை நேரந்தவறாமல் உண்டு வருவதை நாம் பார்த்திருக்கின்றோம். அம்மாக்கள் பிள்ளை நோஞ்சானாக இருந்தால் மருத்துவரிடம் சென்று, அய்யா எனது பிள்ளை நோஞ்சானாக இருக்கின்றான் ஏதாவது சத்து மாத்திரை அல்லது டானிக் எழுதித் தாருங்கள் என்பார். இவரும் தனக்குப் பிடித்தமான? கம்பெனியின் டானிக் அல்லது மாத்திரையை எழுதிக் கொடுப்பார்.
இவ்வாறாக, இன்று படித்தவர்களிலிருந்த பாமரன் வரை மயங்கிக் கிடக்கும் பொருட்களில் விட்டமின் மாத்திரைகள் ஒன்று. உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் இதை சாப்பிடத் தயங்குவதில்லை. இந்த மாத்திரைகளை சத்து மாத்திரைகள் என்று அறிந்து கொண்ட மக்களுக்கு, அதன் மறுபக்கத்தைப் பற்றியும், இது ஒரு உலக மகா மோசடி என்பது பற்றியும் அறிய வாய்ப்பில்லை.
இந்த சத்து மாத்திரைகளை உடல் ஏற்றுக் கொள்கிறதா? இதனால் ஏற்படும் கெடுதல்கள் என்ன?
நமது நாக்கை இறைவன் வெறும் சுவை உணரும் சதையாக மட்டும் படைக்கவில்லை. நாக்கில் படாமல், அதன் உமிழ் நீரில் கலக்காமல் உண்ணக் கூடிய எந்தப் பொருளும் முறையாக ஜீரணிக்கப்படு வதில்லை. முறையாக ஜீரணிக்கப்படாத உணவுச் சத்துக்கள் நேராக கிட்னியைப் பாதிக்கச் செய்கின்றன. இவ்வாறு முறையாக ஜீரணிக்கப்படாத உணவுப் பொருள் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் அவற்றை நம் உடல் நிராகரித்து விடுகின்றது.
நாக்கில் 9000 க்கு மேற்பட்ட சுவை உணர்வு மொட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் நாம் உண்ணும் உணவுகளிலிருந்து பெறப்பட்ட சத்துக்களை சுவையின் அடிப்படையில் பிரித்து சம்பந்தப்பட்ட உறுப்புக்கு அனுப்புகிறது. அதன் மூலம் அந்தந்த உறுப்புக்கள் பலமடைகின்றன. உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது. இவையெல்லாம் நாம் உணவை மிகவும் நன்றாக மென்று சுவைத்து (உமிழ் நீர்கலந்து) நிதானமாகச் சாப்பிடும் போது தான் நடைபெறும்.
உதாரணமாக பாகற்காயை சாப்பிடுகிறோம். அதன் கசப்பு சுவை நாக்கால் அறியப்பட்டு உடன் மூளைக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. இந்த தகவல் மூளைக்குக் கிடைத்தவுடன் கசப்புச் சுவையுடன் கூடிய சத்து எந்த உறுப்புக்குத் தேவையோ அவைகளுக்குத் தகவல் அனுப்புகிறது.
கசப்பு சுவை தேவைப்படும் உடல் உறுப்புக்கள் இதயம், இதய மேல் உறை, சிறுகுடல் ஆகியவைகளாகும்.எனவே இந்த தகவல் வந்ததும் இந்த உறுப்புக்கள் தயார் நிலையில் இருக்கின்றன. பாகற்காயை நாம் மென்று சுவைத்து சாப்பிட்ட அதன் சத்தை உடனடியாக அவை கிரகித்துக் கொள்கின்றன.
இது போன்றே இனிப்பு சுவையானது வயிறு மற்றும் மண்ணீரலுக்கும் – உவர்ப்பு சுவை சிறுநீரகம், சிறுநீர்ப்பைக்கும் – புளிப்பு சுவை பித்தப்பை, கல்லீரலுக்கும் – கார சுவை நுரையீரல், பெருங்குடலுக்கும் பயன்படுகிறது. மேற்குறிப்பிட்ட உறுப்புகளின் கீழ் செயல்படுபவையே மற்ற உறுப்புக்கள் என்பதையும் வாசகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இனிப்பு சுவை வயிற்றுக்கு சக்தியளிக்கும் என்பதால் இனிப்பைத் தின்பதோ, உப்பு சுவை கிட்னிக்கு சக்தியளிக்கும் என்பதால் நேரடியாக உப்பைத் தின்பதோ, சரியான அணுகுமுறையல்ல.
சாதாரணமாக நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகளும் கலந்து தான் இருக்கின்றன. ஒரு பிடி வெறும் சோற்றை வாயில் இட்டு நன்றாக மென்று பாருங்கள். முதலில் லேசான இனிப்பு சுவை தெரியும். பிறகு சிறிது உவர்ப்பு சுவை தெரியும். நன்றாக மென்று முடித்த பிறகு சப்பென்று ஒரு சுவையும் தெரியாது இருக்கும். இது போன்றே ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகள் கலந்து இருக்கிறது. சில உணவு பொருட்களில் சில சுவை அதிகமாக இருக்கும்.
உதாரணமாக பாகற்காயில் கசப்பு சுவையும், பழம், தேன் ஆகியவற்றில் இனிப்பு சுவையும் நாம் உணவை நன்றாக நிதானமாக சுவைத்துச் சாப்பிடும்போது தான் நாக்கால் சுவை உணரப்பட்டு மூளைக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்த சுவை சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு சிக்னல் அனுப்பப்பட்டு அவைகள் அந்த சத்தைப் பெறுகின்றன. அப்படியில்லாமல் விரைவாக சாப்பிடும் போது நாக்கின் உணர்வு மொட்டுக்களில் முழுமையாக அந்த உணவு படுவதில்லை. உமிழ்நீரிலும் கலப்பதில்லை. இதனால் நாக்கால் சுவைகளை தெளிவாகப் பிரித்து மூளைக்கு தகவல் தெரிவிக்க முடிவதில்லை. சரியான சிக்னல் கிடைக்காத காரணத்தினால் அந்த உணவின் சத்துக்கள் அனைத்து உறுப்புகளினாலும் நிராகரிக்கப்பட்டு, இறுதியில் வேறு வழியில்லாமல், கிட்னியைச் சென்று அடைகின்றன. கிட்னியில் ஓரளவே இந்த சத்துக்களைச் சேமிக்க முடியும். அளவைத் தாண்டும் போது கிட்னியும் தொடர்ந்து நிராகரிக்க ஆரம்பித்து விடுகின்றது. இதன் விளைவு தான் உடல் பெறுத்துப் போவது. மேலும் உடலின் பல உறுப்புகள் பலமிழந்து பல வியாதிகள் உருவாகின்றது. அதிகமாக சாப்பிடும் அவைகளை முறையாக சாப்பிடாத காரணத்தால் உடல் பெருக்கின்றது. பல நோய்கள் உருவாகின்றது.
விட்டமின் மாத்திரைகளை நாம் எப்படி சாப்பிடுகின்றோம். இப்போது யோசனை செய்து பாருங்கள்?
வாயில் போட்டு நாக்கில் கூடப் படாமல் விழுங்கி விடுகின்றோம். இந்த மாத்திரைகளை நம் உடல் உறுப்புக்கள் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இந்த மாத்திரைகளால் கிட்னியும்,மண்ணீரல், கல்;லீரல் என்று பாதிக்கப்பட்டு உடல் நோய்களைப் பெற்றுக் கொள்வது தான் மிச்சம்.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். விழுங்காமல் மென்று தின்றால் அந்த சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ளுமாவென்று? நாம் உடல் அமைப்பு இரசாயன கலவைகளையும், அதனால் உண்டான செயற்கைச் சுவைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை.
இறை நியதியுடன் சிந்திப்போமானால், படைத்த இறைவனை மடையனாக்கும் முயற்சிதான் விட்டமின் மாத்திரைகள். அந்த அளவற்ற அருளாளன் மனிதனுக்கு தேவையானதை அழகாக படைத்திருக்கின்றான். உதாரணமாக ஆரஞ்சுப் பழம்.
சிறு விதையிலிருந்து வளர்ந்து குறிப்பிட்ட காலத்தில் சுவையில்லா மண்ணிலிருந்து சுவையுள்ள ஆரஞ்சுப் பழத்தைத் தருகின்றது. அதன் தோளை உரித்து, அதன் சுளைகளை வாயில் இட்டு சுவைத்துச் சாப்பிடும் போது தான் அதன் உண்மையான சத்துக்கள் கிடைக்கின்றன. விட்டமின் சி மாத்திரைகளாக சாப்பிடும் போது அவைகள் மண்ணுக்குக் கூடப் பயன்படாமல் போகின்றன.
மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின் (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (30:41)
ஆரோக்கியமான இரண்டு நபர்களிடம் ஒருவரிடம் ஆரஞ்சுப் பழங்களை மட்டும் கொடுத்து ஒரு 3 நாள்கள் ஒரு தனியறையில் வைப்போம். மற்ற ஒருவரிடம் விட்டமின் சி மாத்திரையைக் கொடுத்து அவரையும் தனியறையில் வைப்போம். யார் ஆரோக்கியமாக இருக்கின்றார் என்பதை நான்காவது நாள் பாருங்கள்.
இதே போல் ஒருவரிடம் சாதாரண ரொட்டிகளை மட்டும் கொடுப்போம். மற்றவரிடம் ரொட்டியை விட பல மடங்கு சத்துள்ளதாக கருதப்படும் மல்டிவிட்டமின் மாத்திரைகளைக் கொடுப்போம். நான்காவது நாள் யார் ஆரோக்கியமாக வெளியே வருவார் என்றால், ஆரஞ்சு சாப்பிட்டவரும், சாதாரண ரொட்டி சாப்பிட்டவரும் ஆரோக்கியமாகவும், விட்டமின் சி யையும், மல்ட்டி விட்டமின் சாப்பிட்டவர்கள் ஆரோக்கியத்தை இழந்த நிலையிலும் வெளியே வருவார்கள்.
விட்டமின் மாத்திரைகளில் உடம்புக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கின்றன என்று கூறும் பொழுது, மருத்துவமனைகளில் ஏன் ரொட்டியும், பாலும், வெண்ணையையும் தருகின்றார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது!?
விட்டமின் மாத்திரைகள் தேவையான பலத்தைக் கொடுக்கும் என்றால், இராணுவ வீரர்கள் தங்களது முதுகில் ஏன் சோத்து மூட்டைகளைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும்? இந்த சோத்து மூட்டைகளுக்குப் பதிலாக எடை குறைந்த எளிதில் கொண்டு செல்லக் கூடிய இந்த சத்து மாத்திரைகளைச் சிரமமின்றி கொண்டு செல்ல முடியுமே என ஏன் சிந்திப்பதில்லை?
இந்த மாத்திரைகள் எவ்வளவு தான் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந் தாலும், அதிக சத்துள்ளவை என்று கூறப்பட்டாலும் தினமும் ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டிற்குப் பதிலாக இந்த மாத்திரைகளை உட்கொள்ள முடியுமா?
விவசாயி வானத்தையும், பூமியையும் மாறி மாறிப் பார்த்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபட்டு, உணவுப் பொருட்களை விளைவிக்க வேண்டிய தேவையில்லையே!
பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு பிரியாணிப் பொட்டலத்தையும், கஞ்சித் தொட்டியையும் காட்டுவதற்குப் பதிலாக விட்டமின் சத்து மாத்திரைகளை வழங்கி விட்டுப் போகலாமே!
இதற்கெல்லாம் பதில்கள் எங்கும் கிடையாது. விட்டமின்களையும் தாதுப் பொருட்களையும் நாம் உண்ணும் இயற்கையான உணவுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் தன்மையுடனேயே நம் உடல் உறுப்புக்கள் அமையப் பெற்றிருக்கின்றன. நம் உடலே நம் உடலுக்குத் தேவையான சில சத்துக்களைத் தானே தயாரித்துக் கொள்ளும் சக்தியையும் பெற்றிருக்கின்றது.
உதாரணத்திற்கு மாலை வெயிலில் நம் உடல் விட்டமின் டி யை தயாரித்துக் கொள்கிறது. இதே போல் கல்லீரல், தோல் போன்று மற்ற உறுப்புக்களும் தேவைக்கேற்றபடி செயல்பட்டு விட்டமின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன.
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட விட்டமின்களை உடல் ஏற்றுக் கொள்வதில்லை. அவைகளை புறக்கணித்து வெளித்தள்ளி விடுகின்றன. இப்படி ஒரு வலுவான ஆற்றல் நம் உடலுக்கு இருக்கின்றது. செயற்கை சத்துக்களை அந்நியப் பொருட்களாகக் கருதி கழிவுகளாக நினைத்து, நமது உடல் நிராகரித்து விடுகின்றது.
நிர்ப்பந்தமாக இவைகளை உடலில் செலுத்தும் போது உடல் உறுப்புக்கள் நன்மைக்குப் பதில் தீங்கையே பெற்றுக் கொள்கின்றன, அதன் மூலம் பழுதடைய ஆரம்பிக்கின்றன.
விட்டமின் மாத்திரைகளை மட்டுமல்ல, இதே போன்ற அணுகு முறையில் தயாரிக்கப்படும் சத்து மிக்க பானங்களுக்கான கலவைப் பொடிகள், மற்றும் குழந்தை உணவுகள் என்று பெயரிட்டு விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் இந்த வகையைச் சார்ந்தவையே.
எனவே, சாதாரணமாக இயற்கையான உணவுகளை உண்டு இன்பமாக வாழக் கற்றுக் கொள்வோம். கற்றுக் கொடுப்போம். இதன் மூலம் மருந்தில்லா உலகம் படைத்து மனித நேயம் காப்போம்.
நன்றி:-டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Medical Consultant Hospital (MC)
P.O.Box: 67963, Riyadh 11517,
Kingdom of Saudi Arabia Phone : 00966 – 505258645, 0505258645.

தக்கலை கவுஸ் முஹம்மத்


--
*more articles click*
www.sahabudeen.com