Wednesday, October 5, 2011

குழந்தைக்குப் பசிக்கும் போது...




குழந்தைகளின் ஜீரணம் குறித்து கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. 

‘‘இப்பவெல்லாம் இவனுக்கு பசியே எடுக்கறதில்லே, " "பாலை வாய்கிட்டே எடுத்துக் கொண்டுபோனாலே குமட்டுகிறது இவளுக்கு,’’ ‘‘டாக்டர், இப்போதெல்லாம் இவன் சரியாகவே சாப்பிடுவதில்லையே’’ _ இவையெல்லாம் மிகப் பெரும்பாலான இளம் அம்மாக்கள் மருத்துவர்களிடம் கேட்கும் கேள்விகள்.
 

குழந்தைக்கு சிகிச்சை இருக்கட்டும். அம்மா முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை அன்னை மிகவும் ஜாக்கிரதையாகத்தான் குழந்தைகளைப் படைத்துப் பாதுகாக்கிறாள். ஒரு குழந்தை பிறக்கும்பொழுதே அதன் உடலில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஜீரண சுரப்பிகளிலிருந்து எல்லாமே வேலை செய்கின்றன. எனவே அம்மா மேற்படி புகார்களை அடிக்கடி கூறி அல்லல் படவேண்டாம்.
 

குழந்தையைச் சாப்பிட வைக்க அம்மா பலவித யுக்திகளைப் பயன்படுத்துகிறாள். ‘‘ப்ளீஸ் சாப்பிடு கண்ணா, அம்மாவுக்கு வேறே வேலை இருக்குது ராஜாத்தி’’ என்பதுபோல் அவள் கொஞ்சக் கூடும். ‘‘நீ இதை சாப்பிட்டாதான் இன்னிக்கி வீட்டிலே டி.வி. போடுவேன்’’ என்பது போன்ற பயமுறுத்தல்களாக அவைகள் இருக்கலாம். ‘‘நீ இதைக் காலி பண்ணினால் நான் உனக்கு ஒரு சாக்லேட் வாங்கித்தருவேன்’’ என்பது போன்ற லஞ்ச பேரத்தில் அவள் இறங்கலாம்.
 

இவ்வளவு பாடுகளும் வேண்டாமே!
 

குழந்தை தன் உடலின் தேவையை _ அதாவது உணவு தேவை என்ற உணர்வைதானே வெளிப்படுத்தும். அப்போது உணவளித்தால் போதுமானது. இதைப் புரிந்து கொள்ளாமல் அம்மா தன் முழுக் கற்பனை சக்தியையும் செலவழித்து குழந்தையின் வாயில் தொடர்ந்து உணவை அடைத்தால் அது வாந்தி எடுக்கக்கூடும். அல்லது வயிற்றை வலிக்குது என்ற பொய்க் காரணங்களைக் கூறலாம். தலைவலி நாடகம் கூட போடலாம். இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால் பசிக்கும்போது (உங்களுக்கு அல்ல, குழந்தைக்கு) மட்டுமே பிள்ளைகளுக்கு உணவளித்து சந்தோஷப்படுங்கள்.
 

இதைவிடுத்து குழந்தையின் பசியை அம்மா தானாக அதிகப்படியாக கணித்து வருத்தப்படுவதோ, வாழ்க்கையில் கட்டுப்பாடு வேண்டாமா என்றபடி (அதாவது வேளாவேளைக்குக் குறிப்பிட்ட நேரத்தில் உணவாம்!) தவறு செய்வதும் வேண்டாமே.
 

போதாக்குறைக்கு சில அம்மாக்கள், குழந்தையை எடைபார்க்கும் இயந்திரத்தின் மீது நிற்க வைத்து, அட்டவணைப்படி இருக்க வேண்டிய எடைக்குக் கொஞ்சம் குறைந்தாலும் ஏதோ குடிமுழுகியதுபோல் கவலைப்படுவதும், அதிகப்படி உணவைத் திணிப்பதும்... தவிர்க்க வேண்டிய செயல்கள் என்பதைத் தவிர, வேறென்ன சொல்ல?
 

குழந்தையின் எடை என்பது பெரும்பாலும் அவனது தாத்தா போன்றவர்களால் நிர்ணயக்கப்படுகிறது. அதாவது பரம்பரைதான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது புரியாமல் குழந்தையின் வாயில் உணவைத் திணிக்கும்போது, அது உணவைக் கக்குகிறது. அல்லது வாந்தி வருவதுபோல் பாவனை செய்கிறது.
 

கவலைப்படாதீர்கள். தனக்குத் தேவையான உணவைச் சாப்பிட்டு உங்கள் குழந்தை நன்றாகவே வளருவான்.
 

ஆனால் குறிப்பிட்ட காலகட்டங்களில் குழந்தைக்கு மருத்துவப்பரிசோதனை செய்து நோய்கள் எதுவும் பாதிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
 

ஜீரணம் என்பது வாயிலிருந்தே தொடங்கிவிடுகிறது என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். டைலின் என்ற சுரப்பி எச்சிலில் கலக்கிறது. இது ஜீரணத்துக்குப் பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாகத்தான் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். வாயில் சிறிது நேரம் உணவு இருந்தால்தான் இதுபோன்ற திரவங்கள் போதிய அளவு உணவோடு கலந்து ஜீரணத்துக்கு வழிவகுக்கும்.
 

உணவுப்பாதையைப் பற்றி நாம் ஓரளவு தெரிந்து கொள்வது நல்லது. நாம் சாப்பிடும் உணவு சிறுகுடலில் நான்கிலிருந்து ஆறுமணி வரை தங்குகிறது. அங்கு உணவு நன்கு அரைக்கப்படுகிறது. அதிலுள்ள புரதம் போன்ற சத்துக்கள் ரத்தத்தினால் உறிஞ்சிக்கொள்ளப்படுகின்றன. உடலுக்குத் தேவையில்லாத அநாவசியப் பொருளும் அதிகப் படியான நீரும் பெருங்குடலுக்குச் செல்கின்றன. அங்கே நீர் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ள திடப்பொருள்கள் ஆசனவாய் வழியாக வெளியேறுகின்றன.
 

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய ஒரு அவஸ்தை மலச்சிக்கல். உணவில் நீர்ச்சத்து அதிகமில்லாத போது மலச்சிக்கல் ஏற்படும். அப்போது மலம் இறுகிவிடுவதால், இந்த அவஸ்தை மேலும் மேலும் அதிகமாகவும் வாய்ப்புண்டு. குழந்தைக்கு அதிக அளவில் சுத்தமான நீரைக் குடிக்கக் கொடுத்தாலே இந்த சிக்கல் தீர்ந்துவிடும். இல்லையென்றால் நார்ச்சத்து நிரம்பிய உணவை அளிக்க வேண்டும். வாழைத்தண்டு, கீரைவகைகள், பீன்ஸ் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகமுண்டு.
 

எனவே மருந்துகள் மூலம் குழந்தையின் மலச்சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்று நினைப்பதை அம்மா மாற்றிக்கொள்ளவேண்டும். முதலில் மேலே குறிப்பிட்டபடி இயல்பான, இயற்கையான முறையில் மலச்சிக்கலைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். நம் உடலில் ஆசனவாய் உட்பட சுருங்கிவிரியும் தன்மை கொண்ட வால்வுகள் உண்டு. இவை முழுசக்தியுடன் செயல்பட முடியாமல் போனாலும்கூட மலச்சிக்கல் ஏற்படலாம்.

‘‘டாக்டர், என் பொண்ணு அடிக்கடி நிறைய இனிப்புகளாக உள்ளே தள்றா. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா. அவ வயித்தில நிறைய பூச்சி வளர்ந்திருக்குமோன்னு கவலையா இருக்கு’’ என்று பல தாய்மார்கள் முறையிடுவதுண்டு.
 

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் இனிப்புகள் மூலமாகத்தான் குழந்தையின் வயிற்றில் பூச்சிகள் வரவேண்டும் என்றில்லை. மாறாக அசுத்தமான சூழல் காரணமாக இந்த நிலை ஏற்படவே வாய்ப்பு மிக மிக அதிகம். காய்கறிகளைச் சரியாகக் கழுவாமல் சமைப்பதன் மூலமாகக் கூட குழந்தையின் வயிற்றில் பூச்சிகள் சேரலாம்.
 

‘‘பேதி மாத்திரையைக் கொடுத்து என் மகன் வயிற்றிலே இருக்கிற பூச்சிகளையெல்லாம் எடுத்துடுங்க டாக்டர்’’ என்று கேட்டுக் கொள்ளும் அம்மாக்களுக்கு ஒரு ஆலோசனை. உடலில் சேர்ந்துவிட்ட புழுக்களை நீக்கிவிடுவது நல்லதுதான். ஆனால் குழந்தைக்கு ஒரு வயதாவது ஆனபிறகு இப்படிச் செய்வது நல்லது. அதற்குப் பிறகு வருடத்துக்கு மூன்றுமுறை இப்படிச் செய்தால் போதுமானது.
 

வயிற்றில் பூச்சி இருந்தால் அது மலத்தில் தெரியவரும் என்று சொல்லிவிட முடியாது. நாக்குப்பூச்சி மட்டுமே இப்படித் தென்படும். பிறவகைப் பூச்சிகள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்தே வேதனையை ஏற்படுத்தும்.
 

‘‘கண்ட இடத்திலே சொறிஞ்சிக்கிட்டே இருக்கா. ஆகையினாலே அங்கெல்லாம் விளக்கெண்ணெய் பூசலாமா?’’ என்று சில அம்மாக்கள் சுற்றி வளைத்துக் குறிப்பிடுவது ஆசவாயைத்தான். எண்ணெய் தடவுவது தவறில்லை. ஆனால் குழந்தை தொடர்ந்து சொறியும்போது அதன் கவனத்தைத் திசைத் திருப்புவதும் உள்ளுக்குள் பூச்சி ஒழிப்பு மருந்தை அளிப்பதும்தான் சரியான தீர்வுகள்.
 

இரண்டு அல்லது மூன்று வேளைகள் குழந்தை மலம் கழிக்காமலே இருந்தால் அதில் கவலைப்பட எதுவுமில்லை. சொல்லப்போனால் தாய்ப்பாலை மட்டுமே உட்கொள்ளும் காலகட்டத்தில் இதெல்லாம் வெகுசகஜம். குழந்தைக்கு ஒருவருடம் நிறைந்தவுடனேயே உட்கார்ந்து டாய்லெட் போகப் பழக்க வேண்டும்.
 

சிலசமயம் ஆசனவாயில் ஏதாவது கீறல் (நகத்தினால் ஏற்பட்டிருக்கலாம்) ஏற்பட்டிருந்து, டாய்லெட் போகும்போது வலிக்கிறது என்கிற காரணத்தினாலேயே குழந்தை டாய்லெட் போவதைத் தள்ளிப்போட்டு இதன் காரணமாக மலச்சிக்கல் உண்டாகி இருக்கக்கூடும். மலத்தை இளக்கச் செய்ய பலவித மருந்துகள் உண்டு. அவற்றை வேறுவழியில்லை என்றால் பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு எண்ணெய்க் குளியல் தேவையா




மற்ற உறுப்புகளைப் போலவே குழந்தையின் தோலும் பிறக்கும்போதே ஓரளவு பக்குவப்பட்டிருக்கும். 

ஆனால், உரிய காலத்துக்கு முன்பே பிறந்துவிடும் குழந்தைகளின் (அதாவது குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின்) தோல் ஓரளவு ‘ட்ரான்ஸ்பரன்ட்டாக’ இருக்கும். அதாவது மிகவும் மென்மையானதாக அமைந்து உள்ளேயிருக்கும் ரத்தநாளங்களைக்கூட வெளியிலிருந்தே ஓரளவு பார்க்கமுடியும் என்கிற அளவில் இருக்கும். அதன் தோல் சிவப்பாகவும் இருக்கும். காரணம் உரிய கொழுப்புச் சத்து அதன் தோலுக்குக் கீழே சேரத் தொடங்காததுதான்.
 

இதற்கு நேர்மாறாக, உரியகாலம் கடந்து பிறக்கும் குழந்தையின் தோல் கரடுமுரடாக இருப்பதுடன் அங்கங்கே லேசான வெடிப்புகளும் தோலில் காணப்படலாம்.
 

பொதுவாக வைட்டமின் டி குறைவாக இருந்தால் தோல் பளபளப்பின்றி ‘டல்’லாகக் காணப்படும்.
 

பிறந்த குழந்தையின் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் நீலமாக இருந்தால் சில உறவினர்கள் பதறிவிடுவார்கள். குழந்தையின் இதயத்தில் ஏதோ பாதிப்பு என்று அவர்களுக்கு பயம். கவலைப்பட வேண்டாம். குழந்தையின் உடலை நன்கு போர்த்திவிடுவதன் மூலமும், பயிற்சியுள்ள செவிலியர் குழந்தையைத் தேய்த்துவிடுவதன் மூலமும் இந்த நீலநிறத்தை மாற்றி நார்மலான நிறத்துக்குக் கொண்டுவரலாம். ஆனால் குழந்தையின் நாக்கு நீலமாக இருந்தால், அதற்கு இதயநோய் என்று அர்த்தம். மருத்துவரின் கவனத்துக்கு மறக்காமல் இதைக் கொண்டு செல்லுங்கள்.
 

பிறந்த குழந்தையின் கன்னம், நெற்றி, ஆகிய பகுதிகளில் திட்டுத் திட்டாக சிவந்திருக்கலாம். இதற்குக் காரணம் அம்மாவின் வயிற்றுக்குள் இருந்த கதகதப்பு சூயூழல் மாறி மாறுபட்ட வெப்பத்துக்கு குழந்தை உள்ளாவதுதான். குழந்தை பிறந்த சில மாதங்களில் இவை தானாகவே சரியாகிவிடும்.
 

சில குழந்தைகளின் தோல் அங்கங்கே உரியத்தொடங்கி இருக்கும். ‘திரவத்தில்’ சுமார் ஒன்பது மாதங்கள் மிதந்துவிட்டு, வெளி உலகத்துக்கு வந்திருப்பதால் இப்படி நடக்கிறது. பிறந்த சில நாட்களில் இதெல்லாம் சரியாகிவிடும்.
 

அக்காலப் பாட்டிகள், குழந்தை பிறந்த சில நாட்களிலேயே அதன் உச்சந்தலையில் விளக்கெண்ணையை பரபரவென்று தேய்ப்பார்கள். சூடு தணியுமாம். மண்டையோட்டில் உள்ள தோல்பகுதி செதில்செதிலாக நிற்பது இதனால் குறைகிறது என்பதுமட்டும் உண்மை. ஒருவயதுவரை குழந்தையின் தலைப்பகுதியிலிருந்து தோல் உதிர்வது இயற்கைதான். ஆனால், மிக அதிகமாக உதிர்ந்தாலோ, ஒரு வயதை தாண்டிய பிறகும் உதிர்ந்தாலோ மருத்துவரின் உதவியை நாடவேண்டும்.
 

சிறுநீரில் ஒருவித அமிலம் உண்டு. இது அருகிலுள்ள தோல்பகுதியை பாதிக்கக்கூடும். சின்னக்குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது. சிறுநீர் தொடர்ந்து படும் இடங்களில் மேல்தோல் வழன்றுபோகக்கூடும். அல்லது மிகவும் சிவந்து போகும். இதை ‘டையபர் ராஷ்’ (Diaper Rash)என்று குறிப்பிடுவோம். டையபர் பயன்படுத்தாத குழந்தைகளுக்கும் இந்த தோல் பாதிப்பு ஏற்படலாம்.
 

இந்தப்பகுதியில் பாக்டீரியா வளர்ந்து ஃபங்கஸ் உருவாகலாம். சிறுநீர் அதிகம் படக்கூடிய தோல்பகுதியில் வாஸலின் தடவிவைப்பது நல்லது.
 

பிளாஸ்டிக் மேலுறை கொண்ட டையபரை பயன்படுத்தாதீர்கள். துணியினாலான டையபர்தான் நம்நாட்டு வெப்பநிலைக்கு ஏற்றதாக இருக்கும். இதுபோன்ற டையபர்களை மீண்டும் உபயோகித்தால் சும்மா நனைத்து உலர்த்தினால் மட்டும்போதாது. வெயில்படும் இடத்திலும் சிறிது நேரம் வைக்க வேண்டும். குழந்தைகளின் துணிகளை டெட்டால் கலந்த நீரில் அலசலாம். சக்தி மிகுந்த டிட்டர்ஜெண்ட் பயன்படுத்தி குழந்தைகளின் துணிகளைத் துவைக்க வேண்டாம். அதில் ஒரு பகுதி துணியிலே தங்கிவிட்டால்கூட குழந்தையின் தோலுக்கு ஆபத்து.
 

இரவில்கூட டையபரை ஒருமுறை மாற்றுவது நல்லது. இல்லையென்றால் குழந்தையின் தோல் பாதிக்கப்படலாம்.
 

முக்கியமாக கழுத்துப்பகுதியில் குழந்தைக்கு வியர்த்துப்போக வாய்ப்பு அதிகம். கொஞ்சம் வளர்ந்த குழந்தை என்றால், அதாவது இரண்டிலிருந்து பத்துவயது கொண்ட குழந்தை என்றால், சிரங்கு வரலாம். தோலில் தோன்றும் வியர்க்குருவை சொரிந்துவிட்டுக் கொள்வதாலும் இந்த சிரங்கு உண்டாகலாம்.
 

வெளியில் விளையாடிவிட்டு வந்தவுடன் சோப்புப் போட்டு நன்கு அவர்கள் கைகால்களைக் கழுவச் சொல்லுங்கள். அல்லது கழுவிவிடுங்கள்.
 

இந்த வயதில்தான் குழந்தைகளின் தோலில் ஒவ்வாமை அதிகமாகிறது. கொசுக்கடிகூட பெரிய அளவில் தோல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
 

ஒரு குழந்தையின் கை முட்டியின் கீழே அம்மைபோல் இருந்ததைக் கண்டு அதன் அம்மாவிடம் கேட்க, பிறகுதான் அது கொசுக்கடியினால் வந்தது என்று தெரியவந்தது.
 

சொரியவேண்டும் அல்லது வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று டீன் ஏஜர்களின் மனதைத் தூண்டிவிடுவதில் பருவுக்குப் பெரும் பங்கு உண்டு.
 

பன்னிரண்டிலிருந்து பதினெட்டு வயதுவரையில் உடலில் பலவித ஹார்மோன் மாறுதல்கள் நடைபெறுகின்றன. இவற்றின் விளைவு முகம், முதுகு ஆகிய இடங்களில் தெரிகிறது.
 

‘‘பருவைக் கிள்ளக்கூடாது, தழும்புகள் உண்டாகும்’’ என்பதை சம்பந்தப்பட்ட அப்பாவும் அம்மாவும் கூறுவதை விட, சமவயதுச் சிறுமிகள் கூறினால் பலன் அதிகமாக இருக்கும். சரியான உணவுப்பழக்கங்கள் இல்லையென்றால் பருக்கள் அதிகளவில் உண்டாகும் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் ஏற்கனவே முகத்தில் பரு இருக்கும்போது அதிக எண்ணெய்ப் பசையுள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டால் பருக்கள் அதிகமாகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.
 

சிலருக்கு சூரிய ஒளி என்றாலே அலர்ஜியாக இருக்கும். இது அவர்களுக்கே தெரியாமல்கூட இருக்கும். வெளியில் போய்விட்டு வந்தால் அவர்கள் முகத்திலும், நேரடியாகச் சூரியஒளி படக்கூடிய பிற இடங்களிலும் சிகப்பு சிகப்பாக திட்டுக்கள் தெரியலாம்.
 

தோலில் மெலனின் என்கிற நிறமிகள் குறைவாக இருந்தாலோ அவை சரியாக செயல்படவில்லை என்றாலோ இப்படி நேரிடலாம். மெலனின் நிறமிகள் தோலின்மீது விழும் சூரியஒளியைப் பிரித்துப் பாதுகாப்பான வெப்பத்தை மட்டும் உள்ளே அனுப்பக்கூடியவை. அதனால்தான் அவை சரியாகச் செயல்படாதபோது தோல் அங்கங்கே சிவந்து போகிறது. விளக்கெண்ணெய் அல்லது திரவ பாரஃபினை இதுபோன்ற இடங்களில் தடவிக் கொண்டு முடிந்தவரை வெயிலில் அலையாமல் இருந்தால் இதைத் தவிர்க்கலாம்.
 

பொதுவாக சிறுகுழந்தைகளின் தோல் உலர்ந்துதான் இருக்கும். மிருதுவாக இருக்கும் என்றாலும் தோலுக்குத் தேவையான எண்ணெய் குறைவாகவே சுரக்கும். இதன் காரணமாகத்தான் பெரியவர்கள் பயன்படுத்தும் சோப்பை குழந்தைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது என்கிறோம். குழந்தையின் தோலில் இருக்கிற ஓரளவு எண்ணெய்ப் பசையையும் இது போக்கிவிடக் கூடாது இல்லையா? இதற்காக ஸ்பெஷல் சோப்புகள் கட்டாயம் என்பதில்லை. இப்போதெல்லாம் சோப்புகள் எண்ணெய் வடிவத்திலேயே கிடைக்கின்றன. குழந்தைகளுக்கு இதைப் பயன்படுத்தலாம்.
 

குழந்தைக்கு எண்ணெய்க் குளியல் தேவையா இல்லையா? எங்களைக்கேட்டால் அவசியம் இல்லை என்றுதான் சொல்வோம். எண்ணெய்க் குளியல் உடல் வெப்பத்தைத் தணிக்கும் என்பது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. கண்கள் பொங்குவதற்கு காரணம் பலர் நினைப்பதுபோல் உஷ்ணம் அல்ல. ‘நாசோ_லாக்ரீமல் டக்ட்’ என்கிற கண்ணுக்கு அருகே அமைந்துள்ள பகுதியில் ஏதாவது சிறிய அடைப்பு ஏற்பட்டிருந்தால் இப்படி கண் பொங்கும். ‘‘எண்ணெய்க் குளியல் சிறப்பே சிறப்பு’’ என்று வாதிடுபவர்கள், அப்படியே இருந்தாலும் குழந்தை சோப்புகள்கூட எண்ணெயை அடிப்படையாகக் கொண்டவை (Oil Based) என்பதை எண்ணி ஆறுதல் அடையலாம்.
 

குழந்தை வளர்ந்து டீன் ஏஜ் பருவத்தை அடையும் போது அவர்கள் உடலில் ஒருவித துர்நாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. உடலின் பலபகுதிகளில் உரோமங்கள் முளைக்கும் பருவம் இது. வியர்வை அங்கே தங்கி இந்த நாற்றத்தைக் கிளப்பும். டீன் ஏஜ். சிறுவர்களின் பனியனில் அவ்வப்போது மஞ்சள் கறைகூட தெரியலாம். இதற்குக் காரணம், அந்தக் காலகட்டத்தில் வெளிப்படும் வியர்வைகூட லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும். சுத்தமாக இருப்பது, அடிக்கடி குளிப்பது, அல்லது முகம் கழுவிக்கொள்வது, கொழுப்புச் சத்து கொண்ட உணவுப் பொருள்களைத் தவிர்ப்பது ஆகியவற்றின் மூலம் இந்த பிரச்னையைத் தவிர்க்க முடியும்.

குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணுமா ?




குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. வெகு சகஜமாக அம்மாக்கள் சலித்துக் கொள்வது இது. குழந்தைகளுக்கு எதையாவது கற்றுக் கொடுப்பது ஒரு மாபெரும் கலை. சில அம்மாக்கள் அதில் வெகு கெட்டிக்காரர்கள். பல அம்மாக்களுக்கு அந்த சூட்சுமம் பிடிபடுவதில்லை. குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல சுவாரஸ்யம் வேறு எதிலும் இல்லை. “அம்மா..” என குழந்தை மழலை வாயால் அழைக்கும் போது சிலிர்க்காத அம்மாக்கள் இருக்கவே முடியாது. 

சில பிள்ளைகள் வெகு சீக்கிரம் பேசி விடுவார்கள். சிலர் ரொம்ப தாமதமாகத் தான் பேசவே ஆரம்பிப்பார்கள். தாத்தா பாட்டி இருக்கும் வீடுகளில் பிள்ளைகள் சீக்கிரம் பேசுவார்கள். காரணம் பாட்டிகள் குழந்தைகளுக்கு எதையாச்சும் சொல்லித் தந்து கொண்டே இருப்பது தான். குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் கலையைப் பற்றி அமெரிக்காவின் என்.ஐ.எஃப்.எல் (National Institute for Literacy ) சுவாரஸ்யமான பல விஷயங்களை விளக்குகிறது.

ஒரு இடத்தில் உட்கார்ந்து படிப்பதெல்லாம் குழந்தைகள் விஷயத்தில் ஒத்து வராது. அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க நாமும் குழந்தைகளாக மாற வேண்டும். தாத்தா. பாட்டி, மாமா என உறவுகளில் ஆரம்பித்து, பார்க்கின்ற பொருட்களின் பெயர்களையெல்லாம் முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தையின் கண்ணுக்குத் தட்டுப் படும் பொருட்கள் பற்றியெல்லாம் சொல்வது தான் கல்வியின் முதல் நிலை.

சில குழந்தைகள் தெளிவாகப் பேசுவார்கள். சிலருக்கு வார்த்தைகள் தெளிவாய் வராது. சிலருக்குத் தொடர்ச்சியாய் பேச வராது. எந்தக் குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொள்வது பெற்றோரின் சாமர்த்தியம். அதற்குத் தக்கபடி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க எக்கச் சக்கப் பொருட்கள் எல்லார் வீட்டிலும் உண்டு. டிவி முதல் மிதியடி வரை எல்லாம் சொல்லிக் கொடுங்க. அவர்களுக்கு நிறைய விஷயங்கள் மனதில் தங்கி விடும்..

வார்த்தைகள் பழக்கியாச்சா ? இப்போது குழந்தைகளே வீட்டுக்குள் உள்ள பொருட்களின் பெயரை சொல்லிச் சொல்லி சந்தோசப்படும். இப்போது அவர்களுக்கு கதைகள் சொல்லிக் கொடுங்கள். கதை பேசுவது கற்காலக் கலை. பலர் இதில் நடிகையர் திலகங்கள் தான். ஏற்ற இறக்கமாய், ஆக் ஷனுடன், தாள லயத்துடன் கதை சொல்வார்கள். கணவர்களே குழந்தைகளாய் மாறி ரசிப்பார்கள். குழந்தைகளுக்கோ சுவாரஸ்யம் தாங்காது. திரும்பத் திரும்ப கதைகளைக் கேட்பார்கள். குழந்தைக் கல்வியின் மிக முக்கியமான சங்கதி குழந்தைகளிடம் ஆர்வத்தைத் தூண்டுவது தான் !

கதையை சொல்லிக் கொடுத்தாச்சா. இப்போ அவர்களிடம் கதைகளைத் திரும்பச் சொல்லச் சொல்லுங்கள். அவர்கள் அப்படியே உங்களை இமிடேட் பண்ணுவார்கள். ரசியுங்கள். தடுமாறும் இடத்தில் சொல்லிக் கொடுங்கள். கதை சொல்லி முடித்து விட்டு எதையோ சாதித்ததாய் குழந்தைகள் கர்வத்துடன் பார்ப்பார்கள். அவர்களைப் பாராட்ட மறந்து விடாதீர்கள், அது ரொம்ப முக்கியம்.
 
குழந்தைகளை அடிக்கடி வெளியே அழைத்துச் செல்லுங்கள். அப்படிப் போகும்போது அவர்களுடைய மூளைக்கு சுவாரஸ்யமான வேலை கொடுங்கள். அதாவது தோட்டத்துக்குப் போகிறீர்கள் என்றால், இங்கே என்னென்ன பச்சை கலர் பொருட்கள் இருக்கிறது ? சதுர வடிவில் என்னென்ன இருக்கின்றன ? இப்படி கொஞ்சம் கேள்விகளைக் கேளுங்கள். இங்கே என்னென்ன பொருட்கள் “A” எனும் எழுத்தில் ஆரம்பிக்கின்றன என ஒரு புதிர் போடுங்கள். அவர்களுக்குத் தெரியவில்லையெனில் நீங்கள் துவங்கி வையுங்கள். எறும்பு என்றால் Ant – A யில் தான் ஆரம்பிக்கும் என எறும்பு தேடுங்கள். 

குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்து விட்டார்களா ? இப்போது அடுத்த நிலைக்குத் தாவி விடுங்கள். பள்ளியில் என்னென்ன நடந்தது என கேளுங்கள். அவர்கள் உற்சாகமாய் கதை பேசுவார்கள். நீங்களும் அதே உற்சாகத்தில் கேளுங்கள். இங்கே நீங்கள் வாக்கியங்களைக் கவனியுங்கள். குழந்தைகளுக்கு “இது தப்பு” என்று சொல்வதை விட சரியானதை நீங்கள் பேசிக் காட்ட வேண்டும். அது தான் சரியான வழிமுறை என்கிறார் ஷானன் எம் கேனன் (Shannon M. Cannon) எனும் எழுத்தாளர்.

குளிர்பானங்களால் காத்திருக்கும் பயங்கர ஆபத்து குழந்தைகளே... உஷார்




குழந்தைகள் அதிகளவில் குளிர்பானங்கள் குடிப்பது பெரும் ஆபத்தை ஏற் படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.கண்ணாடி பாட்டில், பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் டின்களில் அடைத்து குளிர்பானங்கள் விற்கப்படுகின்றன. இதே போல, ஜாம், பழச்சாறுகளும் பாட்டில்கள் மற்றும் டப்பாக்களில் அடைத்து விற்கப்படுகின்றன.இவை நாள் கணக்கில் ஸ்டாக் வைத்து விற்கப்படுகின்றன. எனவே, இவை ஈஸ்ட், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்றவற்றால் கெட்டுப் போகாமல் தடுக்க, சோடியம் பென்சோயேட் என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. 

இந்த ரசாயனம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.பிரிட்டனில் உள்ள ஷெப்பீல்ட் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இது குறித்து ஆய்வு நடத்திய பீட்டர் பைப்பர் என்ற விஞ்ஞானி அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். பீட்டர் பைப்பர் கூறியதாவது,குளிர்பானம் மற்றும் உணவுப் பொருள் கெட்டுப் போகாமல் தடுப்பதற்காக சேர்க்கப்படும் சோடியம் பென்சோயேட், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. இவை டி.என்.ஏ., அணுக்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியா என்ற பகுதியை பாதிக்கின்றன. மைட்டோகாண்ட்ரியா தான் இந்த அணுக்களுக்கு ஆக்சிஜன் பெற்றுத் தருகிறது. இவை கடுமையாக பாதிக் கப்படும் போது, டி.என்.ஏ., அணுக் களை முடக்கிவிடும். இதனால், பார் கின் சன்ஸ் மற்றும் நரம்பு தொடர் பான கடுமையான நோய்கள் ஏற்படக்கூடும். சோடியம் பென்சோயேட், கல்லீரலையும் பாதிக்கக்கூடியது.
 

சோடியம் பென்சோயேட் குறித்து ஐரோப்பிய யூனியனிலும், அமெரிக்காவிலும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நடத்திய ஆய்வுகள் மிகப் பழமையானவை. தற்போதைய நவீன ஆராய்ச்சி முறையில் பரிசோதிக்கும் போது தான், அந்த பழைய ஆய்வுகள், போதுமான பாதுகாப்பு கொண்டது அல்ல என்பது தெரிய வந்துள்ளது.பெரியவர்களை விட, குழந்தைகள் அதிகளவில் இத்தகைய குளிர்பானங்கள், ஜாம் மற்றும் பழச்சாறுகளை அதிகளவில் விரும்பி சாப் பிடுகின்றனர். அதிகளவில் இவற்றை உட் கொள்ளும் போது எதிர்காலத்தில் கடுமையான நோய்களுக்கு அவர்கள் ஆளாகக் கூடும். அந்த குழந்தைகளை நினைத்தால் தான் எனக்கு கவலையளிக்கிறது.இவ்வாறு பீட்டர் பைப்பர் தெரிவித்துள்ளார்.

தாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்படி?




குழந்தை பிறந்ததுமே தாய்க்கு முதன் முதலில் வரக்கூடிய பாலை சீம்பால் (Colostrum) என்கிறோம். இதன் அருமை பலருக்குப் புரிவதில்லை. இந்த சீம்பாலைக் குழந்தைக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். காரணம் பாப்பாவுக்கான நோயெதிர்ப்பு சக்தி இதிலிருந்துதான் அதிகப்படியாகக் கிடைக்கிறது. அதனால் தவறாமல் சீம்பால் கொடுங்கள்! 

தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் திருப்தியே தனிதான்!
 

தாய்ப்பால் கொடுப்பதால் தாய் ஒரு விதமான திருப்தியை உணர முடியும். அதைக் கொடுப்பதன் மூலம் தாயின் மன அழுத்த நிலை பெருமளவு குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
 

தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு மார்புப் புற்று நோயிலிருந்து இயற்கையான பாதுகாப்பும் கிடைக்கிறது.
 

பாப்பா தாயிடமிருந்து பாலை உறிஞ்சிக் குடிக்கும்போது அந்தச் செயலானது தாயின் மூளையிலிருந்து ஒரு ஸ்பெஷல் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. இதுதான் தாயின் மார்பகத்தின் மீது செயல்பட்டு பால் சுரக்கவே செய்கிறது! மேலும் இந்த ஹார்மோன் அம்மாவின் கர்ப்பப்பையின் மீதும் செயல்பட்டு அதை இயல்பாகச் சுருங்கச் செய்யவும் உதவுகிறது.
 

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிகவும் குறைகிறது என்கிறது இன்னொரு ஆராய்ச்சி.
 

சில குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே டயாபடீஸ் நோய் வந்து, அவர்களை வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்பட வித்திட்டு விடுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் இந்த Juvenile Diabetes வருவது வெகுவாகக் குறைவதாகவும் தெரிகிறது.
 

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை அதிபுத்திசாலியாக இருக்கும் வாய்ப்புகளும் அதிகம் என்றும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
 

எப்பொழுதெல்லாம் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது?
 

அம்மாவுக்கு சளி, ஜுரம் பிடித்து அதற்கான மருந்தை அவர் சாப்பிட்டு வந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். அதில் தவறெதுவும் இல்லை. காரணம், இன்று இதற்காக வரக்கூடிய பல மருந்துகள் பாதுகாப்பானவையாகவே இருக்கின்றன. ஆனால், தாய் எந்த மருந்து சாப்பிடுவதாக இருந்தாலும் (அது கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவர் பலமுறை பயன்படுத்திப் பழகிய மருந்தாக இருந்தாலும் கூட) டாக்டரின் ஆலோசனை பெற்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
 

தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்த முதல் சில நாட்களில் மார்பகக் காம்பில் (நிப்புள்) அம்மாவுக்குப் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வலி ஏற்பட்டு சிலர் குழந்தைக்குப் பால் கொடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவிடுகிறார்கள். இப்படிச் செய்வது தவறு. தொடர்ந்து பால் கொடுக்கத் தவறினால் அம்மாவுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அதுவும் பெரிய அவஸ்தையாகிவிடும். இதனால் தாய்க்கு ஜுரம் கூட வரும். அதை கவனிக்காவிட்டால் அங்கு சீழ் உருவாகிவிடும் அபாயமும் உள்ளது.
 

இப்படி நீங்கள் விஷயத்தை சீழ் வரை எடுத்துச் சென்றால் அதற்கான ட்ரீட்மெண்ட் கொடுக்க, ஒரு சின்ன அறுவை சிகிச்சையேகூட செய்ய வேண்டி வந்துவிடலாம். அதனால் விஷயத்தை சீழ்வரை எடுத்துச் செல்லாமல் ஜாக்கிரதையாக செயல்படுங்கள். ஆனால் இந்த நிலையிலும்கூட அம்மா, பாப்பாவுக்கு இன்னொரு மார்பகத்தில் தொடர்ந்து பால் கொடுத்து வரலாம்.
 

இப்படிப் பால் கட்டிக்கொண்ட சமயங்களில் மார்பகத்தில் சுடூநீர் ஒத்தடம் கொடுத்து, கட்டிக்கொண்ட பாலைப் பீய்ச்சி எடுக்கவேண்டும். குழந்தைக்கு சரியான நேர இடைவெளிவிட்டு ஒவ்வொரு தரமும் பால் கொடுக்க வேண்டும். இப்படி பால் கொடுக்கும் நேர இடைவெளி அதிகமாகும் சமயங்களிலும் கூட சில சமயம் அம்மாவுக்குப் பால் கட்டிக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
 

அதேசமயம் புண்ணாகிவிட்ட நிப்புளை என்னதான் செய்வது? அந்த அவஸ்தைக்கு விடிவுதான் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது...
 

பாப்பாவுக்கு பால் கொடுக்காத நேரங்களில் நிப்புளில் வேஸலின் போன்ற க்ரீமைத் தடவி (டாக்டரிடம் ஆலோசனை பெற்ற பிறகு) வரலாம். பால் கொடுக்கும் சமயத்தில் மார்பகத்தை தண்ணீர் மற்றும் மைல்டான சோப்பு கொண்டு சுத்தம் செய்த பிறகு பாப்பாவுக்குப் பால் கொடுக்கலாம்.
 

குறைப் பிரசவத்தால் பிறந்த குழந்தைக்கு எப்படி பாலூட்டுவது?

ஒரு சில நேரங்களில் குழந்தை சரியாகப் பாலைக் குடிக்கத் தெரியாமல் திணறலாம். அல்லது நிப்புள் புண்ணாகிவிட்டது போன்ற சில சங்கடமான நேரங்களில் அம்மாவும் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல் போகலாம். இந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்வது?
 

மேலும் சில சமயங்களில் குழந்தை ஃப்ரீ _ மெச்சூராக அதாவது, டெலிவரிக்கான தேதிக்கு வெகுநாட்கள் முன்பாகவே பிறக்கும் என்று சொல்லி இருக்கிறேன். அந்தக் குழந்தைகளை தாயிடம் உடனே கொடுத்துவிடாமல் பெரும்பாலும் இன்குபேட்டர் பெட்டியில் வைத்துதான் பராமரிப்போம். இன்னும் சில குழந்தைகள் பிறக்கும் போதே உதடு பிளந்தது போன்ற (CLEFT LIP) நிலையில் பிறக்கலாம். இப்படி சில பிரச்னைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கிடைக்கச் செய்ய இதோ ஒரு வழியிருக்கு..
 

இதுபோன்ற சமயங்களில் பாப்பாவுக்கு Expressed Milk கொடுக்கலாம்.
 

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை... தாய்ப்பாலைத் தாயிடமிருந்து வேறு வழிகளில் எடுத்துச் சேகரித்துக் கொடுப்பதுதான்.
 

இதை எப்படிச் செய்வது?
 

தாயின் மார்பகத்திலிருந்து பாலை ஒரு சுத்தமான பாத்திரத்தில் பீய்ச்சி எடுத்து பாப்பாவுக்குக் கொடுக்கலாம். அல்லது பாலை எடுப்பதற்கென்றே இன்று மார்க்கெட்டில் விற்கக் கூடிய பிரெஸ்ட் பம்புகள் வாங்கி அதைப் பயன்படுத்தியும் பாலைச் சேகரிக்கலாம்.
 

இந்த பிரெஸ்ட் பம்புகள் நாமே இயக்கக்கூடிய வகையிலும், பாட்டரியால் இயங்கக் கூடியதாகவும் இருவகையாகக் கிடைக்கின்றன. இப்படி எடுக்கப்படும் பாலை மூடிபோட்டு பத்திரப்படுத்தி வைத்துக் குழந்தைக்கு அவ்வப்போது கொடுத்துவரலாம்.
 

இந்தப் பாலை ஃப்ரிட்ஜில் (ஃப்ரீசரில் அல்ல..) 24_48 மணிநேரம் வரைக்கும் பத்திரப்படுத்தி பாப்பாவுக்குக் கொடுக்கலாம்.
 

இன்று தாய்ப்பாலை ஃப்ரீசரில் சுமார் மூன்று மாதங்கள் வரைக்கும் கூட ஃப்ரீஸ் செய்து வைத்து, அதன் தன்மை மாறாமல் பாப்பாவுக்குக் கொடுத்து வருகின்றனர்.
 

ஃப்ரிட்ஜிலோ ஃப்ரீசரிலோ வைத்து பத்திரப்படுத்திய பாலைப் பாப்பாவுக்கு எப்படி சூடுபடுத்திக் கொடுப்பது?
 

சேமிக்கப்பட்ட பாலை நேரடியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க வைக்கக் கூடாது. அகலமான ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதை லேசாக சூடுபடுத்தி, பால் இருக்கும் பாத்திரத்தை அதற்குள் வைத்து பதமாக சூடுபடுத்தி பாப்பாவுக்குக் கொடுக்கவேண்டும். அந்த சூட்டையும் விரல்விட்டெல்லாம் பார்க்கக்கூடாது.
 

ஃப்ரீஸ் செய்த பாலை முதலில் ஐஸ்கட்டி நிலையிலிருந்து கரையவிட்டுப் பிறகு மேற்கூறிய முறையிலேயே சூடுபடுத்திக் கொடுத்தால் போதும்.
 

பாலூட்டும் அம்மா எல்லாவற்றையும் சாப்பிடலாமா?
 

குழந்தை பிறப்பதற்கு முன் குழந்தைக்கு ஆகாது என்று சொல்லி ‘அதை சாப்பிடக் கூடாது... இதை சாப்பிடக் கூடாது’ என்று வீட்டுப் பெரியவர்கள் தடை விதிப்பது வழக்கம். குழந்தை பிறக்கும் வரையில்தான் இந்தக் கட்டுப்பாடெல்லாம் என்று நீங்கள் நினைத்தால்.. அதுதான் தவறு! குழந்தை பிறந்த பிறகுதான் இந்தக் கட்டுப்பாடுகள் இன்றுமே அதிகமாகும்..
 

அம்மா இளநீர் சாப்பிட்டாலோ அல்லது எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ் குடித்தாலோ குழந்தைக்கு சளி இருமல் வர வாய்ப்புள்ளது என்பார்கள். பேரீச்சம் பழம் போன்ற சில விஷயங்கள் சாப்பிட்டால் பேதியாகும் என்பார்கள். இதெல்லாம் உண்மை இல்லை.
 

அம்மா சாப்பிடும் எந்த விதமான உணவுமே பாப்பாவுக்கு நேரிடையாக. அதாவது, அதே உணவாகச் செல்வதில்லை. அந்த உணவெல்லாம் தாயின் உடலில் செரித்து கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து மற்றும் புரதச்சத்தாகப் பிரிந்து, பிறகு உடலால் கிரகிப்படுகிறது. இந்தச் சத்துக்கள்தான் பாப்பாவுக்குப் பாலாகக் கிடைக்கிறதே ஓழிய பாலிலிருந்து அவ்வளவு சுலபமாக எல்லாம் நோய்த் தொற்று ஏற்பட்டுவிடாது.
 

அம்மாவுக்கு சில சமயம் ஏதாவது நோய் தாக்கும்போது அது பாப்பாவுக்கும் பரவுவதற்குக் காரணம், இருவரும் எந்நேரமும் ஒன்றாகவே ஒரே அறையில் இருப்பதுதான்! மற்றபடி வேறொன்றும் இல்லை.

தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை



ஒரு குழந்தை பிறந்து, முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இந்த மூன்று மாத காலத்தில் குழந்தையைப் பராமரிக்கும் முறை சரியாக இருந்தால் பிற்காலத்தில் குழந்தையின் உடல் நலம், வளர்ச்சி குறித்த பல பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம்.

இந்தக் காலகட்டத்தில் ஒரு தாய் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றைச் சமாளிக்கும் வழிகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தை பிறக்கும் காலம்

ஒரு குழந்தை கருவில் உருவான காலத்தில் இருந்து 37 முதல் 40 வாரங்களில் பிறக்க வேண்டும்.
 இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் முழுவளர்ச்சி பெற்ற, குறித்த காலத்தில் பிறந்த குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றன.

37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்கு முன் பிறந்த குழந்தைகள்.
41 வாரங்களுக்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்குப் பின்பிறந்த குழந்தைகள்.
குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் முழுமையான வளர்ச்சி நிலையை அடையாததால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

பிறக்கும் குழந்தையின் எடை

ஒரு இந்தியக் குழந்தை பிறக்கும் போது இருக்க வேண்டிய சராசரி எடை 2.5 முதல் 3.5 கிலோ கிராம் ஆகும்.
எடை 2 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் இந்தக் குழந்தைகளை ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகள் என்று அழைக்கிறோம்.
உடல் எடை அதிகரித்து, உடல் இயக்கங்கள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படும் வரை, இந்தக் குழந்தைகளை NEONATAL INTENSIVE CARE UNIT (NICU) என்று அழைக்கப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
எடை 1.5 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் அந்தக் குழந்தைகள் மிக ஆபத்தான நிலையில் உள்ளவையாகக் கருதப்பட்டு மிகப் பிரத்தியேகக் கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும்.

பராமரிப்பில் முக்கியமானவை:

தாய்ப்பால் கொடுத்தல்
மசாஜ்
குளிப்பாட்டுதல்,
தோல் பராமரிப்பு
கண்கள், தொப்புள் கொடி பராமரிப்பு
எடை
தடுப்பு ஊசிகள்
பிற உணவுகள் கொடுத்தல்

தாய்ப்பால்

தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன.
இன்றைய சமுதாயச் சூழலில் பல தாய்மார்களுக்குப் பாலூட்டும் பலம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பிற்காலத்தில் குழந்தைகள் பல நோய்களை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.

தாய்ப்பால் ஊட்டுவதால் உள்ள நன்மைகள்:


தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது.
தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது.
குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது.
கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.
குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லா சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது.
பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் செரிமானம் ஆகும்.
அலர்ஜி ஆகும் வாய்ப்புகள் குறைவு.
குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை, தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள் பல நோய்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.
தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்’ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் ஊட்டுவதை எப்போது துவங்குவது?


குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் துவங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.
நார்மல் டெலிவரி எனில் பிரசவம் ஆன 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக பாலூட்டத் துவங்கலாம்.
சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளி வந்த உடன் பாலூட்டத் துவங்கிவிடலாம்.
சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும்.
ஒரு சராசரி இந்தியத் தாயின் உடலில் ஒரு நாளில் சுரக்கும் பாலின் அளவு 700 மி.லிட்டர் முதல் 1000 மி. லிட்டர் வரை உள்ளது.
குழந்தைக்கு 1 வயது ஆகும் வரையிலும் தாய்ப்பால் ஊட்டுவது அவசியம். 1 ஒன்றரை வயதுவரை ஊட்டுவது நன்று.

சில தகவல்கள்.....

கொலஸ்ட்ரம்

பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த கொலஸ்ட்ரம் என்ற வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும்.

தாய்ப்பால்

பிரசவம் ஆன மூன்று நாட்களுக்குப் பின் சுரக்கத் துவங்கும் பாலில் குழந்தைக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரிவிகித அளவில் இருக்கும்.

ஊட்டும் போது முதலில் வரும் பால்
பாலூட்டத் துவங்கும் போது முதலில் வரும் பாலில் புரதம், மாவுச் சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் ஆகியவை அதிகம் இருக்கும்.

கடைசியில் வரும் பால்
பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.

தடுப்பூசி: பிற உணவுகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கலாம்

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஒற்றை தலைவலி : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை


தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பிரச்னைகளால் பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்' என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
குடும்ப சுமை, வேலைப்பளு போன்றவற்றால், பெரியவர்களுக்கு தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பிரச்னை ஏற்படுவதாக கருதப்படுகிறது. ஆனால் இந்த பிரச்னைகளால் தற்போது பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குழந்தைகள் மற்றும் மூளை நரம்பியல் மருத்துவ நிபுணர் ஆண்ட்ரூ ஹெர்சி கூறியதாவது:
 

தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்காக அதிகாலையிலேயே எழுந்து விடுகின்றனர். பள்ளியில் நீண்ட நேரம் பாடங்களை கூர்ந்து கவனிக்கின்றனர். மேலும் வீடு திரும்பும் அவர்கள் வீட்டு பாடங்களை முடித்துவிட்டு வெகு நேரம் கழித்து தூங்க செல்கின்றனர். இதுதவிர காலையில் பள்ளிக்கு செல்லும் பதட்டத்தில் அவர்கள் சாப்பிடுவதில்லை.போதிய தண்ணீர் குடிப்பதில்லை. இதனால் அவர்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. ஒற்றை தலைவலி பரம்பரையாக வரக்கூடிய பிரச்னை.அடிக்கடி ஏற்படும் தலைவலியும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது.

ஹார்மோன்களில் மாற்றம், இரத்த நாளங்களை விரிவடைய செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். தற்போது 10 சதவீத குழந்தைகளுக்கும், 28 சதவீத பெரியவர்களுக்கும் இந்த பிரச்னை உள்ளது.
 

பெரியவர்களுக்கு 4 மணி நேரமும்,குழந்தைகளுக்கு ஒரு மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை கூட ஒற்றை தலைவலி தொடர்ந்து இருக்கும். பெரியவர்களுக்கு தலையின் ஒரு பகுதியிலும் குழந்தைகளுக்கு நெற்றியிலும் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது.மூன்று வயது குழந்தைகளுக்கு கூட ஒற்றை தலைவலி பிரச்னை ஏற்படுகிறது. சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாற்றங்களாலும் அவர்களுக்கு தலைவலி பிரச்னை ஏற்படுகிறது. இவ்வாறு ஆண்ட்ரூ ஹெர்சி கூறினார்.
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
படுக்கையில் சிறுநீர்

குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழித்து படுக்கையை நனைப்பது என்பது ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லா நாடுகளிலும் குழந்தைகளிடையே காணப்படும் ஒரு பொதுவான குறைபாடு ஆகும். 

பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கே அதிகம் இக்குறைபாடு காணப்படும். பிறந்ததிலிருந்தே படுக்கையை நனைத்துக்கொண்டிருக்கும் குழந்தைகளை ஒரு வகையாகவும், சிறுநீரைக் கட்டுப்படுத்தி வெளியேற்றும் திறமை வந்தபின்பு சில காலம் இந்தப் பிரச்சினை இல்லாமல் இருந்து திரும்பவும் ஆரம்பிக்கும் குழந்தைகளை மற்றொரு வகையாகவும் பிரிக்கலாம். இதில் முதல் வகை குழந்தைகளைக் காட்டிலும் இரண்டாம் வகை குழந்தைகளை விரைவில் குணப்படுத்த முடிகிறது.
 

பெரும்பாலான குழந்தைகள் ‘நாம் படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றோம்’ என்ற உணர்வு இல்லாமலேயோ அல்லது கனவில்தான் நாம் சிறுநீர் கழித்துக்கொண்டு இருக்கின்றோம் என்ற உணர்விலோ படுக்கையை நனைக்கின்றனர். அதே சமயம் பல குழந்தைகளுக்கு நாம் படுக்கையில்தான் சிறுநீர் கழித்துக்கொண்டு உள்ளோம் என்ற உணர்வு இருந்தபோதும் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் போகின்றன.
 

காரணங்கள்:
குழந்தைகள் படுக்கையை நனைப்பதற்கான காரணங்களை இரண்டு வகைப்படுத்தலாம்.
 
1. உடலியல் காரணங்கள்
 
2. மனதியல் காரணங்கள்.
 
காரணங்கள் பல்வேறாக இருந்தாலும் குழந்தைகளுக்குத் தகுந்த வயது வந்த உடன் முறையான டாய்லெட் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்காமல் போவதே அடிப்படைக் காரணமாக அமைகின்றது.
 

உடலியல் காரணங்கள்:
 
சிறுநீர் வழிப்பாதை நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டு இருப்பது, முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படும் சில நரம்பியல் குறைபாடுகள், சிறுநீர் வழிப்பாதையில் பிறப்பிலிருந்தே காணப்படும் குறைபாடு, சிறுநீர்ப்பை வீக்கமும், சிறு வயது சர்க்கரை நோய், குடலில் காணப்படும் பூச்சிகள் போன்றவை உடலியல் காரணங்களாகும். இருந்தாலும் மிகமிகக் குறைவான அளவு குழந்தைகளே இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
 

மனதியல் காரணங்கள்:
 
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கான காரணங்களில் மனதியல் காரணங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
 
குழந்தைகளின் மனதை பாதிக்கும் வகையில் நடக்கும் சுற்றுப்புற நிகழ்ச்சிகள், ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக் கூடத்திற்கு அல்லது புது வீட்டுக்கு மாறுவது, வீட்டிற்குப் புதிதாக ஒரு குழந்தை (தம்பி அல்லது தங்கை) வருவது, குழந்தையிடம் நெருக்கமாக இருக்கும் யாராவது இறந்து போவது போன்ற நிகழ்ச்சிகள் குழந்தையின் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி அதன் வெளிப்பாடாக படுக்கையை நனைக்கும் பழக்கம் ஏற்படுகின்றது.
 
குழந்தைகளின் அடி மனதில் பதிந்து போன சில பய உணர்வுகள் (குழந்தையை பயப்படுத்தி சாப்பிட வைப்பதற்காகக் கூறப்படும் பயங்கர கதைகள் மற்றும் சில விலங்குகளைப் பற்றிய பயம்), குழந்தையின் மனதில் தோன்றும் பாதுகாப்பற்றத் தன்மை, குழந்தையை மிகவும் கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்பதற்காக சிறிய தவறுகளுக்குத் தரப்படும் பெரிய தண்டனைகள், பெற்றோர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகள், குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் போவது, குழந்தையை எப்போதும் கேலி செய்து கொண்டு இருப்பது, அவர்களைத் தாழ்த்திப் பேசிக் கொண்டு இருப்பது போன்ற செயல்கள்கூட குழந்தையின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்குக் காரணமாக அமைகின்றன.
 

நமது விருப்பு, வெறுப்புகளைக் குழந்தைகளின் மேல் திணிப்பதும், யார் மீதோ இருக்கும் கோபத்தைக் குறைப்பதற்குக் குழந்தைகளை வடிகாலாக (அடிப்பது, கடுமையாகத் திட்டுவது) பயன்படுத்துவது போன்ற செயல்களால், படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்ற சிறிய குறைபாடுகள் முதல், ஒரு குடும்பத்தை மட்டுமல்லாமல், சமூகத்தையும் சேர்த்து பாதிக்கும் நடத்தைக் குறைபாடு போன்ற மனதியல் பாதிப்புகள் வரை ஏற்படலாம். Acid phos, Aconite, Cimicifuga, Aloes, Sulphur போன்ற ஹோமியோபதி மருந்துகளை அறிகுறிகளுக்கு ஏற்ப மாற்றி, மாற்றி கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். படுக்கையை நனைக்கும் பரிதாபக் குழந்தைகளும் பலன் பெறும்

மாடிப்படி ஆபத்து



வீட்டை கட்டும் போதே அது குழந்தைகளுக்கு எல்லாவகையிலும் பாதுகாப்பு தரும் விதத்தில் வடிவமைக்க வேண்டும். எவ்வாறு வீட்டை அமைத்துக் கொண்டால் குழந்தை களுக்கு ஆபத்து இல்லாமல் இருக்கும்?
* குழந்தைகள் மாடிப்படிகளில் ஏறுவதை தவிர்க்க, மாடிப்படியின் கீழ் பகுதியில் சேப்டிகேட் அமை யுங்கள். அந்த கேட் 80 செ.மீட்டர் உயரம் இருந்தால் போதும். அலுமினியத்தால் அதை உருவாக்கினால் செலவு குறையும்.
* மாடிப்படிகளில் கைப்பிடி சுவர் அல்லது கைப்பிடி பலகைகள் அமைக்கும் போது அவை 1.2 மீட்டர் உயரம் இருக்கவேண்டும். அதைவிட உயரம் குறை வாக இருந்தால் குழந்தை கள் அதில் ஏறி- இறங்கி குதித்து விளையாடும்.
* மாடிப்படிகளுக்கு வளவளப்பான டைல் பதிக்கக் கூடாது. கிரானெட், மார்பிள் போன்றவை வழுக்கு தன்மை கொண்டது. கால்களுக்கு நன்றாக பிடிப் புள்ள ஓடுகளை பதியுங்கள்.
* குழந்தைகளுக்கு எட்டும் தூரத்தில் கண்ணாடி யால் ஆன ஷோகேஸ் எதுவும் அமைக்கவேண் டாம். அவைகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகம்.
* மேஜைகளில் பதிக்கும் கண்ணாடிகள் மிக பலமானதாக இருக்கவேண்டும். பலம் குறைந்தவைகளாக அவைகள் இருந்தால் ஆபத்திற்கு வழிவகுக்கும்.
* குழந்தைகளின் மேஜைப்பகுதிகள் கூர்மையாக இருக்கக்கூடாது. அவைகளின் மூலை யில் குழந்தைகளின் தலையோ, உடலோ பட்டாலும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்கவேண்டும்.
* குழந்தைகள் படுக்கும் கட்டில் அதிக உயரமாக இருக்கக்கூடாது. கட்டிலின் ஓரத்தில் தடுப்பு கம்புகள் வைத்திருந்தால், குழந்தை தூக்கத்தில் புரண்டு கீழே விழுவதை தவிர்த்துவிடலாம்.
* குழந்தைகளுக்கு எப்போதுமே தண்ணீர் மீது ஈர்ப்பு அதிகம். அவர்கள் தண்ணீர் மூலம் ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றி அறியாமல் அதைத் தொட்டு விளையாட முன்வருவார்கள். அது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக ஆகிவிடுகிறது. குழந்தைகள் செல்லும் இடங்களில் அல்லது அவர்களால் சென்றுவிட முடியும் என்று நம்பப்படுகிற இடங்களில் தண்ணீரை வைக்காமல் இருக்க வேண்டும். தொட்டி, பாத்திரங்களில் இருக்கும் தண்ணீரையும் சரியாக மூடிவைக்கவேண்டும். குழந்தைகள், சிறுவர்கள் இருக்கும் வீடு களில் உள்ள கிணறுகளுக்கு மூடி அல்லது வலை போட்டு வைப்பது நல்லது. தண்ணீர் மட்டுமின்றி கொதி நீராலும், சுடுநீராலும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும். அவை களாலும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படாத அளவிற்கு பார்த்துக் கொள்ளவேண்டும்.
* கூர்மையான முனைகளைக் கொண்ட வீட்டு உபயோகப் பொருட்களையும், பொம்மைகளையும் குழந்தைகள் பயன்படுத்தாத அளவிற்கு கவனித்துக் கொள்ள வேண்டும். மூன்று மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு ஈறு பலம் இருக்காது. அவர் களுக்குரிய பொம்மைகளை தேர்ந்தெடுக்கவேண்டும். பாட்டரி மூலம் செயல்படும் பொம் மைகளை மூன்று வயதான பின்பே விளையாட கொடுக்கவேண்டும். துள்ளும் பந்துகளை மூன்று வயதிற்கு பிறகே விளையாட கொடுக்கவேண்டும். அதற்கு பதில் மென்மையான பந்துகளை விளையாட கொடுப்பது நல்லது. ரோமங்கள், துரும்புகளாலான பொம்மைகளை குழந்தைகளுக்கு விளையாட கொடுக்காமல் இருப்பது நல்லது.