Saturday, August 31, 2013

அறிவியல் செய்திகள் - கேள்வியும் பதிலும்

அறிவியல் செய்திகள் - கேள்வியும் பதிலும்

1)பெட்ரோலில் இயங்கும் பொறிகளை (engines) டீசலைப் (disel) பயன்படுத்தி இயக்க முடிவதில்லை ஏன்?
 

     பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் (fuels) கொண்டு இயங்கும் இரு பொறிகளும் உட்கனற்பொறிகளே (internal combustion engines). ஆயின் இரண்டும் வெவ்வேறு வடிவ அமைப்புகளைக் கொண்டவை. ஒவ்வொரு எரிபொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் தான் எரியத் துவங்கும். இதனைப் பற்றல் வெப்பநிலை (ignition temperature) என்பர். இது பெட்ரோலுக்குக் குறைவாகவும், டீசலுக்கு மிகுதியாகவும் தேவைப்படும். அடுத்து பெட்ரோல் பொறியில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்றவைக்கும் செயலை மேற்கொள்வது தீப்பொறிச்செருகி (spark plug) ஆகும். மேலும் இப்பொறியில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்ற வைப்பதற்கு முன்னால் தேவைப்படும் அழுத்த அளவு அதாவது அழுத்த விகிதம் (compression ratio) குறைவு. இந்நிலையில் பெட்ரோல் பொறியில் டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது பற்ற வைக்கும் வெப்பநிலை போதுமான அளவு இல்லாத காரணத்தால் எரிபொருள் பற்றவே பற்றாது. அடுத்து டீசல் பொறிகளில் பெட்ரோல் பொறிகளில் இருப்பது போல் தீப்பொறிச்செருகி கிடையாது. இங்கு எரிபொருள் பற்றவைப்பு மிகுந்த அழுத்தத்தின் விளைவாக நடைபெறும். இவ்வாறு பெட்ரோல், டீசல் பொறிகளுக்கு இடையேயுள்ள வடிவமைப்பு வேறுபாட்டினாலும், பற்றவைப்பு வெப்பநிலை வேறுபாட்டினாலும் பெட்ரோலுக்குப் பதிலாக டீசலையோ, டீசலுக்குப் பதிலாகப் பெட்ரோலையோ பயன்படுத்த இயலாது.
 

2)உயர் அழுத்த(EHT) மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கம்பிகளில் இருந்து ஒரு வகை ஒலி உண்டாவது ஏன்?
 

             உயர் அழுத்த மின்சாரத்தைத் தாங்கிச் செல்லும் கம்பிகளை உடைய கோபுரக் கம்பங்களின் அருகே நின்றால் ஒரு வகை ஒலி கேட்பது உண்மையே. இவ்வொலி உண்டாவதற்கு கம்பியில் செல்லும் மின்னோட்டம் காரணமல்ல. நரம்பிசைக் கருவிகளில் உள்ள தந்திகளில் தடையுண்டாகும்போது ஒலி எழும்புவதை நாம் அறிவோம். கோபுரங்களுக்கு இடையே செல்லும் மின்கம்பிகள் மிக விரைந்து வீசும் காற்றின் காரணமாக ஒத்ததிர்வுக்கு (Resonant vibration) ஆட்படுகின்றன. இந்த நிலையில் மின்கம்பிகளில் ஒலி உண்டாகிறது. இவ்வொலியே வண்டுகள் ரீங்காரம் செய்யும் ஒலியைப் போல நமக்குக் கேட்கிறது.
 

3)நீண்ட தூரம் செலுத்துவதற்கு மாறுதிசை மின்னோட்டத்தைப் (Alternating current-AC) பயன் படுத்துவது ஏன்?

             நீண்ட தூரச் செலுத்துகைக்கு மாறுதிசை மின்னோட்டத்தைப் பயன்படுத்துவதற்கு இரு காரணங்கள் உள்ளன. முதலாவது மாறுதிசை மின்னோட்டத்தின் அழுத்தத்தை (Voltage) மின் மாற்றிகளைப் (Transformer) பயன்படுத்திக் கூட்டவோ, குறைக்கவோ இயலும். எடுத்துக்காட்டாக 400,000 வோல்ட் மின்னழுத்தமுள்ள மாறு மின்னோட்டத்தை 220 வோல்ட் அழுத்தமுள்ள மின்னோட்டமாக, இறக்கு மின்மாற்றியைப் (Step down transformer) பயன்படுத்தி, வீட்டுப் பயன்பாட்டிற்காகக் குறைத்திட இயலும். அடுத்து மாறு மின்னோட்டத்தை உயர் அழுத்தத்தில் நீண்டதூரம் செலுத்தும்போது ஏற்படும் இழப்பு மிகவும் குறைவு.
 

4)விண்வெளிக் கலங்களை ஏவும்போது, இறங்குமுகமாக எண்களைக் கூறுவது ஏன் ?

     விண்வெளிக் கலங்களை ஏவுவதற்கு முன்னர் அதனுடைய எல்லா அமைப்புகளும் சரியாக உள்ளனவா என்பதை ஐயத்திற்கு இடமின்றி அறிந்திடுவது மிக முக்கியம்; ஏதேனும் ஒரு நிலையில் (stage) நிகழும் சிறு தவறும் பேரிழப்பை உண்டாக்கிவிடும். எனவே பொறியாளர்கள் விண்கலங்களைச் செலுத்தும் முறையைப் படிப்படியாக மேற்கொள்ளுகின்றனர். இந்தப் படிநிலைகளின் எண்ணிக்கையை 10, 9, ..................... 0 என இறங்குமுகமாக (count down) கணக்கிடுகின்றனர். இதில் ஒவ்வொரு எண்ணும் ஒரு படிநிலையைக் குறிப்பதாகும். கடைசி எண்ணான பூஜ்யத்தைக் குறிப்பிடும் போது கலம் விண்வெளியில் செலுத்தப்பட்டுவிட்டது எனப் பொருள்படும். இந்த இறங்குமுக எண்ணிக்கையின்போது கலத்தில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால் எண்ணுவது நிறுத்தப்பட்டு, தவறை நீக்கியபின் மீண்டும் எண்ணுவது தொடரும். ஒவ்வொரு படிநிலையிலும் விண்கலம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கும், பூஜ்யத்தை அடைந்தபின் கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்பதை அறியவும் இறங்குமுகமாக எண்ணும் முறை மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பூஜ்யம் என்பது ஒரு இறுதி நிலை. மாறாக பூஜ்யம் தொடங்கி வளர்முகமாக எண்ணத் தொடங்கினால் இறுதிநிலை என்று எந்த எண்ணைக் கூற இயலும்; எல்லாப் படிநிலைகளும் சரிபார்க்கப்பட்டனவா என்பதை அறுதியிட்டுக் கூற இயலாமல் குழப்பம்தான் மிஞ்சும்; எனவேதான் இறங்குமுக எண்ணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

5)கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் ஏன் வேகமாக ஓட முடிவதில்லை?
 

             கைகள், கால்கள் ஆகியவை முன்னும், பின்னும் ஒருங்கிணைந்து இயங்குவதால் நம்மால் நடக்கவும் ஓடவும் முடிகிறது. சாதாரணமாக நின்றுகொண்டிருக்கும் போது உடலின் ஈர்ப்பு மையம் (Centre of gravity) நமது காலடியில் விழும்; இதனால் நமது உடல் சமநிலையில் நிற்க முடிகிறது. நடக்கும்போதும், ஓடும்போதும் கால்கள் இயல்பு நிலையில் இருந்து மாற்றமுறுவதால் ஈர்ப்பு மையம் முன்னோக்கிச் செல்லும். இந்நிலையில் நமது கைகள் கட்டப்பட்டிருக்குமானால், உடலின் சமநிலை தடுமாறி கீழே விழ நேரிடும். இயல்பாக நடக்கும்போதோ, ஓடும்போதோ, இந்நிலை ஏற்படாதற்குக் காரணம், நமது கை கால்கள் முன்னும் பின்னும் மாறி மாறி இயங்குவதனால், ஈர்ப்பு மையம் உடலின் அடிப்பகுதியிலேயே நிலைபெற்றிருக்குமாறும், அதனால் உடலின் சமநிலை தடுமாறாதவாறும் பார்த்துக்கொள்ளப் படுகிறது. ஆனால் கைகள் கட்டப்பட்ட நிலையில் நடக்கும்போதும், ஓடும்போதும் மேற்கூறிய சமநிலை பராமரிக்கப்படுவதில்லை. எனவே அந்நிலையில் ஓடுவதோ அல்லது நடப்பதோ மிகவும் கடினமான செயலாகிவிடுகிறது. 
 

6)சோப்பு பல நிறங்களில் இருப்பினும், அவற்றின் நுரை மட்டும் வெண்மையாகவே இருப்பது ஏன்?
 
 
      சோப்பு நுரை என்பது நுண்ணிய சோப்புக் குமிழ்களின் கூட்டமே. சோப்புக் குமிழ் என்பதோ சிறு அளவு காற்றை உள்ளடக்கி அமைந்திருக்கும் சோப்புக் கரைசலின் மெல்லிய படலம். சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையின் (surface tension) காரணமாக, அதன் படலம் நீண்டு பரவிட முடிகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள நுரையினால் கவரப்படும் பரப்பு, அதே கன அளவுள்ள நீரினால் கவரப்படும் பரப்பைவிட மிகுதி எனலாம். சோப்பு நுரை இவ்வாறு பரவுவதன் காரணமாக அதில் ஏதேனும் சிறு அளவு வண்ணம் இருப்பினும் அது மங்கிப்போகிறது. மேலும் சோப்புப்படலம் ஒளி புகக்கூடியது; சோப்புக்குமிழ்களின் கூட்டமான நுரையை அடையும் ஒளி பல்வேறு திசைகளில் சிதறிப் பரவுவதால் நுரை வெண்மையாக மட்டுமே காட்சியளிக்கிறது. பல்வேறு நிறம் கொண்ட சோப்புகளின் நுரைக்கும் இது பொருந்தும்.  www.sahabudeen.com

 

7)ஓசோன் (ozone), காற்றைவிட கனமானதாக இருப்பினும், அது காற்று வெளிக்கு (atmosphere) மேலே இருப்பது ஏன்? 

        காற்று வெளியில் மேலே செல்லச் செல்ல, ஓசோன் பல்வேறு அளவுகளில் அமைந்துள்ளது. புவிக்கு அருகிலும் கூட மிகக் குறைந்த அளவில் அது உள்ளது. இருப்பினும் காற்று வெளியில் தரையிலிருந்து 25 கி.மீ. முதல் 45 கி.மீ. வரை உயரமுள்ள பகுதியில் ஓசோன் மிக அதிகமாகச் செறிந்திருக்கிறது. இப்பகுதிக்கு ஓசோன் படலம் என்று பெயர். மூன்று உயிர்வளி (oxygen) அணுக்கள் ஒருங்கிணையும் போது ஒரு ஓசோன் மூலக்கூறு உருவாகிறது. சாதாரணமாக உயிவளி அணுக்கள் இரண்டிரண்டாக இணைந்து உயிர்வளி மூலக்கூறுகளாக விளங்கும். காற்று வெளியின் மேற்பகுதியில் உயிர்வளி மூலக்கூறுகள் கதிரவனின் ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சினால் தாக்குறும் போது அவை பிளவுற்று ஓசோன் மூலக்கூறுகள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. அடுத்து ஓசோன் படலத்திற்குக் கீழே புவிக்கு அருகிலும் உயிர்வளி மிகுதியாக உள்ளது என்பது உண்மையே. கதிர் வீச்சினால் உயிர்வளி மூலக்கூறுகள் அணுக்களாகப் பிளவுறும் வாய்ப்பும் அதனால் இங்கும் ஓசோன் மூலக்கூறுகள் உருவாகும் நிலைமையும் ஏற்படாதா என ஐயம் எழலாம். கதிரவனின் கதிர்கள் காற்று வெளியில் நீண்ட தூரம் வரவேண்டியிருப்பதால் ஆற்றல் குறைந்து அதனால் உயிர்வளி மூலக்கூறுப் பிளவும் மிகக் குறைந்த அளவிலேயே நடைபெறும். இதனால் ஓசோன் மூலக்கூறுகளும் குறைவாகவே உருவாகின்றன. மேலும் ஓசோன் படலத்திலும் கூட உருவாகும் ஓசோன்கள் அவ்வாறே இருப்பதில்லை. கதிர்வீச்சின் காரணமாக ஓசோன் மூலக்கூறுகளும் அணுக்களாகப் பிளவுற்று உயிர்வளி மூலக்கூறுகளாக மாறுகின்றன. மீண்டும் உயிர்வளி மூலக்கூறுகள் பிளவுற்று ஓசோன் மூலக்கூறுகள் உருவாகின்றன. இவ்வாறு ஓசோன்/உயிர்வளி மூலக்கூறுகள் அணுக்களாக மாறிமாறிப் பிளவுற்று, ஒருங்கிணைவதால் ஓசோன் படலத்தில் ஓசோன் செறிவு ஏறக்குறைய சமமான அளவில் மாற்றமின்றி அமைவதுடன், அது ஓசோன் படலத்திற்குக் கீழே இறங்கிச் செல்வதும் தவிர்க்கப் படுகிறது.

 

8)வளி அடுப்பைப் (gas stove) பற்றவைக்கும்போது உருளைகளில் (cylinders) அடைக்கப்பட்டுள்ள நீர்மப் பெட்ரோலிய வளி (liquefied petroleum gas-LPG) எவ்வாறு தீப்பற்றிக்கொள்ளாமல் இருக்கிறது? 
 

        வளி அடுப்பைப் பற்றவைத்தவுடனே, அதிலுள்ள வளிப்பொருள், உலையைச் (burner) சுற்றியுள்ள காற்றுடன் கலப்பதால் உடனே தீப்பிடித்து எரியத் தொடங்குகிறது. தேவையான அளவு காற்று கலக்காவிட்டால் தீப்பிடிப்பது தவிர்க்கப்பட்டு எரியும் நிகழ்ச்சியும் நடைபெறாது. உருளையின் வாய்ப்பகுதி மிகவும் குறுகி இருப்பதாலும், உருளையையும் அடுப்பையும் இணைக்கும் குழாயினுள் காற்று நுழையும் வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதாலும் நீர்மப் பெட்ரோலிய வளி தீப் பிடித்துக்கொள்வது பெருமளவு தவிர்க்கப்பட்டு விடுகிறது. அடுத்து உருளையின் வாய்ப்பகுதியில் உள்ள சீரியக்கி (regulator) நீர்மப் பெட்ரோலிய வளியை வெளியே செல்ல அனுமதிக்குமே ஒழிய வெளியே உள்ள காற்றை உருளையின் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. இதனால்தான் உருளையில் அடைக்கப்பட்டுள்ள வளி தீப்பிடிக்காமல் பாதுகாப்பாக இருக்கமுடிகிறது. மேலும் வளி தீப்பிடிப்பதற்கு அதன் சில மூலக்கூறுகளின் வெப்ப நிலையை மிகுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காகவே தீக்குச்சி அல்லது தீக்கொளுவியினால் (lighter) தீப்பொறிகளை உண்டாக்கி வளியை விரைந்து தீப்பிடிக்கச் செய்யவேண்டியுள்ளது

http://goodluckanjana.blogspot.com/2013/08/blog-post_4291.html



--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Fwd: ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்



 

 

 

நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து

ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 

 

20 ஆக உயர்த்த முடியும்



நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க 

 

முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.

சுதேசி சிந்தனைகள்.......

டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய தினம் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தது. அதாவது ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 68.xx.

இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி:

இன்னும் ஒரே வாரத்தில் டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயரலாம். தினசரி உபயோகிக்கும் அந்நிய நாட்டுப் பொருட்கள் விலை ஏறலாம். (அவ்வாறு ஏறாவிட்டால் அவர்களின் இலாபம் எத்தனை என்பதை எண்ணிப் பார்க்கலாம்). மோட்டார் வாகன உதிரிபாகங்களின் விலை ஏறும். அதே நேரம், ஏற்றுமதியாளர்களுக்கு இது பொன்னான வாய்ப்பு. தங்களுக்கு கிடைக்கும் டாலர் ஆர்டர்கள். அரசாங்கத்தின் புண்ணியத்தில், தானாகவே கிடைக்கும் 10% அதிக லாபம்.

புதிய ஏற்றுமதி ஆர்டகளை விலை குறைத்து எடுக்கலாம். இதனால் வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியக் கம்பெனிகளை விட அதிகமாக பாதிக்கப்படுவார்கள். இது ஒன்றும் கட்டுப்படுத்த முடியாத விஷயம் அல்ல. அரசாங்கம் ஒரு மாத காலத்திற்கு கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்தால், விரைவில் நிலைமை சரியாகி விடும்.

தங்க இறக்குமதியை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும். மிகப் பெரிய அளவில் அந்நிய செலாவணியாக டாலர் வீணாவது இதில் தான்.
உள்நாட்டில் மக்களை பெட்ரோல் மற்றும் டீசலை குறைத்து உபயோகிக்கும் முறைகளை அறிமுகப்படுத்தலாம். பூலிங் எனப்படும் கூட்டுப் பிரயாண முறை, ஒற்றைப் படை எண் மற்றும் இரட்டைப் படை எண் கொண்ட வண்டிகளை சுழற்சி முறையில் சாலையில் ஓட விடலாம்.

வாரம் ஒரு முறை அனைவரும் தமது சொந்தப் பிரயாணங்களை பொதுத்துறை வண்டிகளில் பிரயாணிக்க நிர்ப்பந்திக்கலாம். வாரம் இரண்டு நாள் நகைக் கடைகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்கலாம். ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டைப் போன்ற யுனிக் அடையாள அட்டை கொண்டு பெட்ரோல், தங்கம், மற்றும் இறக்குமதி சார்ந்த பொருள்களுக்கு தனி மனித உச்ச வரம்பு கொண்டு வந்து, இறக்குமதியைக் கட்டுப்படுத்தலாம்.
ரூபாயின் டாலருக்கு எதிராக மதிப்பை அரசாங்கமே நிர்ணயித்து, அதற்கான விலையை நிலை நிறுத்தலாம்.

ரூபாய் டிவேல்யுவேஷன் எனும் பொருளாதார உத்தியை இதுவரை அரசாங்கம் கையாண்டதாகத் தெரியவில்லை. அதையும் முயற்சி செய்யலாம். FDI க்கான டிவிடெண்டுகள் மற்றும் வெளிநாட்டு பங்கீடுகளின் லாபங்களை ஆறு மாதம் கழித்தே இந்தியாவிலிருந்து வெளியே அனுப்ப தடை போடலாம். இதற்கெல்லாம் வெளிப்படையான உலக வர்த்தகம் மற்றும் திறந்து விடப்பட்ட சந்தைதான் காரணம். பின் விளைவுகளை ஆராயாமல் செய்யப்பட்ட முடிவுகளால் ஏற்படுகிறது. அதே நேரம் வெளிப்படையான மற்றும் சுதந்திரமாக திறந்து விடப்பட்ட சந்தைகளால் உண்டான இலாபம் மற்றும் பொருட்களால் நாள் நிறைய அனுபவிக்கப் பழகி விட்டோம்.

வெளிநாட்டுக் கார்கள், பெப்சி, கோலா, சீனப் பொருட்கள், கம்ப்யூடர், மடிக்கணினி, சோப்பு, என்று வரிசையாக நிறைய சொல்லலாம். இவைகள் இல்லாமல் நம்மால் வாழ முடியமா? இது தான் திறந்த வெளி சந்தையின் சோக முடிவு. பழக்கப்பட்ட பின் இவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது.

இந்த சந்தைகளால் அழிந்து கெட்ட நாடுகள், லெபனான் மற்றும் பிரேசில் . இதில் இரண்டாவது நாடு தங்களின் தொழில் புரட்சியால் முன்னேறி விட்டது. ஓரு டாலருக்கு நிகரான பிரேசில் ரியல் 2.17. லெபனான் மட்டுமே இன்னமும் அப்படியே இருக்கிறது. ஒரு டாலரின் மதிப்பு அங்கே 1511 லெபனான் லிரா. நாம் எவ்வளவோ பரவாயில்லை.

நம் நாட்டிற்கு இப்போது தேவை, நல்ல ஒரு நிதி அமைச்சர்.

சாதாரண ஒரு குடிமகனான எனக்கே இவ்வளவு விஷயம் தெரிகிறது என்றால் ஒரு கஜானாவை நிர்வகிக்கும் அமைச்சருக்கு எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும்? பங்குச் சந்தையை மட்டும் அளவு கோலாக வைத்து செயல்படும் மத்திய நிதி அமைச்சருடைய அளவு கோலும் பீர்பாலுக்கு முகம் மழிக்கும் நாவிதனின் அளவுகோலும் ஒன்றாகவே இருக்கிறது என்பது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட ஒற்றுமையா?

நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.

சோப்பு என்றால் சந்திரிகா , சிந்தால், மைசூர் சாண்டல், ஷாம்பு என்றால் டாபர், குளிர் பானம் என்றால் இளநீர், மற்றும் சாத்துக்குடி ஜூஸ். இப்படி பல வழிகளில் நீங்களும் அந்நிய பொருள்களை சிறுக சிறுக நிராகரித்து, நாட்டு நலனில் அமைச்சரை விட அதிகமாக பங்கு கொள்ளலாம்.

இன்றைய நாளில் நீங்கள் உபயோகிக்கும் வெளிநாட்டுப் பொருள்களில் ஒன்றையேனும் தவித்து, ஒரே ஒரு டாலரை மிச்சப்படுத்துங்கள். ஒரு வேளை இந்தியர்கள் அனைவரும் ஒரு சேர அப்படியே செய்தால் ஒரே நாளில் நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Thursday, August 29, 2013

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A,D,E, K மேலும் பீட்டா கரோட்டின் மேலும் ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளது. இது புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள மேனோ ஆன்சாச்சுலேரேட்டர்ஃபேட்டி ஆசிட் MUFA ஆனது கெட்ட கொழுப்புகளையும் மேலும் டிரைகிளிசரைட்ஸ் போன்றவைகளையும் இது குறைக்கிறது. இது உயர் இரத்தம் அழுத்தத்தையும் இதய நோய்களையும் பாதுகாக்கிறது.
ஆலிவ் ஆயிலில் மிக உயர்ந்த போலிக் அமிலம் உள்ளது. இது மார்பகப்புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கவும் கற்கள் உருவாவதையும் கட்டுப்பத்துகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆலிவ் எண்ணெயின் மருத்துவ குணம் தொடர்பாக ஸ்பெயினின் கிரோனா பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனம் சார்பில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. டாக்டர் ஜோசப் ட்ருயிட்டா தலைமையில் 2 ஆண்டுகள் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆலிவ் எண்ணெய் எலும்புகளுக்கு வலுவளிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  எலும்பு பாதிப்பால் அவதிப்படுபவர்கள் பட்டியல் மருத்துவக் குறிப்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டது. இந்த ஆய்விற்காக 55 முதல் 80 வயதுவரை உடைய 127 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆலிவ் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது எலும்பு தொடர்பான பாதிப்புகளில் உள்ளவர்களின் எலும்புகள் வலுவடைந்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து எலும்புகளை உறுதிப்படுத்தும் குணம் ஆலிவ் ஆயிலுக்கு இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்துள்ளனர்.
ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பக புற்று நோயை தடுக்கும்.
கட்டித் தங்கத்தின் விலை எட்டிப்பிடிக்க முடியாத அளவு உயரத்தில் இருக்கிறது. இப்பொழுது தங்கம் என்று கூற வாய் திறந்து மூடும் நேரத்தில் எவ்வளவு ஆயிரம் விலை ஏறும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த நேரத்தில் என்ன விபரீத விளையாட்டு, திரவத்தங்கம் இருக்கிறதா என்று ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று கொலைவெறியுடன் பார்ப்பது தெரிகிறது. கூல் கூல். அந்தத் தங்கத்தை விடுங்க. நாம் வேறு தங்கத்தைப் பற்றி கொஞ்சம் பேசலாம்.
ஆலிவ் எண்ணெய்க்கும் தங்கம் என்று மற்றொரு பெயர் உண்டுங்கோ. ஆமாங்கோ. இது திரவ நிலையில் இருப்பதால் இதற்கு திரவத் தங்கம் என்று பெயர். ஆலிவ் எண்ணெய் கண்களுக்குக் குளிர்ச்சியும், சருமத்திற்கு வெண்மையும், தலைமுடிக்கு போஷாக்கும் அளிக்கிறது என்பது பல நாட்களாக நாம் அறிந்த செய்திஆனால் மார்பகப் புற்று நோய்க்கு மாமருந்து என்பது தற்போதைய ஆய்வு முடிவு.
ஆலிவ் ஆயில் விஹிதிகி (Mono Unsaturated Farty Acid) தேவையற்ற கொழுப்புகளையும், டிரைகிளிசரைட்ஸ் (Triglycerides) ஆகிய வகைகளையும் குறைக்கவல்லது.
தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு அதனைக் குணப்ப டுத்துவதற்கும் உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்றும் கண் டறியப்பட்டுள்ளது. இதனை ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
பாலிஃபீனால் என்னும் திரவப்பொருள் ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டி எடுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அது திடப் பொருளாக்கப்பட்டது. அத் திடப்பொருளான பாலிஃபீனால் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் அதில் இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே, மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம் என்று அறிவி த்துள்ளது.
இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய் என்று இதனைச் சொல்கின்றனர். இதன் விலை என்ன அந்த அளவிலா உள்ளது என்னும் வினாவும் பலரிடம் உள்ளது. அது குறித்துச் சிந்திக்கும் முன்னர் புற்று நோய் வந்து சிகிச்சை எடுக்கும் செலவைக் குறித்துச் சிந்திக்க வேண்டி உள்ளது. முக்கியமாக புற்றுநோய் அறிகுறி உள்ளவர்கள், ஆரம்ப நிலை புற்று நோயாளிகள் ஆகியோர் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
ஏனெனில், இது கண்டிப்பாக மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் என்றும் கூறுகின்றனர். பெண்கள் நாள்தோறும் உணவில் 10 மேஜைக்கரண்டி வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.
புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களைத் தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத் தினர். முதலில் மனித உடலுக்குப் பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர். கொடுத்து வைத்த எலிகள். ஆலிவ் உணவு அவற்றிற்கு.. அதில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித் தொழிப்பது தெரிய வந்தது. மேலும் மரபணுவை சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதிலும் பாலிஃபீனால் பெரும் பங்கு வகிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்மூலம், மரபணு பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்ற புற்றுநோய்களையும் ஆலிவ் எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ஆராய்ச்சியாளர் எஜ §ர்ட் எஸ்ரிச் கூறுகையில், ''பெண்கள் தினசரி உணவில் 10 மிலி முதல் 50 மிலி ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம்'' என்றார். உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பகப் புற்றுநோய், அதைக் கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார்.
ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார். இதயத்துக்கு ஏற்ற மிகச் சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெயைத்தான் (ளிறீவீஸ்மீ ளிவீறீ) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெயாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.
இந்த எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக் குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.
உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம் என்கிறது
மற்றொரு ஆய்வு.
ஆலிவ் மரத்தின் பழத்தின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். பழங்கள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும். இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும், அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது க ருப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் '', வைட்டமின் 'சி' முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இவ்விதையில் இருந்து எடுக்கப்படும். எண்ணெய் 'திரவத்தங்கம்' என்று மருத்துவ உலகினரால் அழைக்கப்படுகிறது.
இவ்விதையில் இருந்து முதல் முறை வடிகட்டி எடுக்கும் கன்னி எண்ணெய் எக்ஸ்ட்ரா விர்ஜின் (EXTRA VIRGIN) எனப்படும். இந்த எண்ணெய் கலப்படமில் லாதது. இது நல்ல மணத்துடன் இருக்கும். (ஆனால் அந்த மணம் நமக்குப் பிடிக்குமா என்பதுதான் இங்கே கேள்வி) சுத்திகரிப்பு செய்து, இரண்டாம் முறை வடிகட்டும் எண்ணெய் சற்று மணம் குறைந்ததாக இருக்கும். ஏனெனில், இது சுத்திகரிப்புக்கு உட்பட்டு கிடைப்பதால்.
மூன்றாம் முறை வடிகட்டப்படும் எண்ணெய்தான் இந்தியச் சந்தையில் கிடைப்பதாகக் கூறுகின்றனர். இதில் குறைந்த அளவே மணம் இருப்பதால் இதனையே மக்கள் பயன்படுத்துவதாகவும் கன்னி எண்ணெயான முதல் முறை வடிகட்டும் எண்ணெயை, அதன் மணம் காரணமாகவும் அந்த எண்ணெயில் சமையல் செய்து சாப்பிட்ட பி ன்பு செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது என்பதாலும் இங்கே அதன் பயன்பாடு குறைவாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.
ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தும் போது அதன் சத்து குறையாமல் பயன்படுத்த நினைத்தால் அதனை அதிகமாகச் சூடாக்கக் கூடாது. கண்டிப்பாகப் பொரிப்பதற்கு (Deep Fry) ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்த இயலாது. இந்தக் காரணத்தினாலும் அதனைச் சமையலுக்குப் பயன்படுத்த முடிவதில்லை என்கின்றனர் பலர். நம்மவர்கள்தான் பஜ்ஜி, போண்டா, வடை என்று எண்ணெயில் குளிக்கும் உணவுகளைப் பொரித்துக் (Deep Fry) கொறிக்கும் வழக்கம் உள்ளவர்கள் ஆயிற்றே. அதனாலும் ஆலிவ் எண்ணெயின் பயன்பாடு அயல்நாடுகளை நோக்க இங்கே மிகக் குறைவே. நம்மவர்கள் பெரும்பாலும் சமையல் முடித்த பிறகு அதன் மீது ஆலிவ் எண்ணெயை டிரஸ்ஸிங் போல சிறிதளவு சேர்த்துப் பயன்படுத்துகின்றனர்.
ஆலிவ் எண்ணெயைக் காலையில் இரு சொட்டுகள் வாயில் இட்டு நன்கு ஆயில் புல்லிங் செய்துவிட்டு வெளியில் துப்பாமல் முழுங்கிவிட்டால் வயிற்றில் அமிலம் சுரப்பது (Acidity) அறவே நீங்கி விடும் என்று ஆலிவ் எண்ணெய் சூப்பர் மார்க்கெட் கூறுகிறது. 10 சொட்டு ஆலிவ் எண்ணெய் சிறுநீர்ப்பையில் ஏற்படும் நமைச்சல், கல் போன்றவற்றை அகற்றி விடும் என்றும் விளம்பரம் செய்துள்ளது.
அதிக வெளிச்சமும் அதிக சூடும் ஆலிவ் எண்ணெயின் ஆயுளைக் குறைத்து விடும். (கெட்டுப் போவதற்கு வாய்ப்புண்டு) அதனால் ஆலிவ் எண்ணெயை மிதமான சூடும் மிதமான வெளிச்சமும் உள்ள இடத்தில் வைத்துப் பாதுகாப்பது நல்லது.
ஆலிவ் எண்ணெய் பயன்பாடு: 10 ஆயிரம் டன்னாக உயரும.
புதுடில்லி:மருத்துவக் குணம் நிறைந்த, ஆலிவ் எண்ணெய் பயன்பாடு, இந்தியாவில் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே, நடப்பாண்டில், உள்நாட்டில் இதன் பயன்பாடு, 10 ஆயிரம் டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, ஆலிவ் எண்ணெய் பயன்பாடு, படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த 2010ம் ஆண்டில், இந்தியாவில் ஆலிவ் எண்ணெய் பயன்பாடு, 4,000 டன்னாக இருந்தது.
இது, சென்ற 2011ம் ஆண்டில், 6,000 டன்னாக உயர்ந்துள்ளது என, இந்திய ஆலிவ் எண்ணெய் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.முன்பு, ஆலிவ் எண்ணெய் மசாஜ் உள்ளிட்ட வெளிப்புற பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, இந்த எண்ணெய், சமையலறையில், உணவுப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆலிவ் எண்ணெய், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில்இருந்துதான், இறக்குமதி செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில், ஆலிவ் எண்ணெய் உற்பத்தி, 32 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. இதில், மேற்கண்ட இரு நாடுகளின் பங்களிப்பு மட்டும், 90 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2003ம் ஆண்டில், இந்தியாவில், ஆலிவ் எண்ணெய் பயன்பாடு மிகவும் குறைந்து காணப்பட்டது. அதேசமயம், சீனாவில், இதன் பயன்பாடு, 30 ஆயிரம் டன் என்ற அளவில் உள்ளது. சர்வதேச அளவில், மற்ற சமையல் எண்ணெய்களுடன் ஒப்பிடும் போது, இதன் பயன்பாடு குறைவாக உள்ளது. என்றாலும், தற்போது, மக்களின் செலவிடும் வருவாய் உயர்ந்து வருவதால், ஆலிவ் எண்ணெய் பயன்பாடும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
ஆலிவ் எண்ணெயில் ஏராளமான சத்துகள் அடங்கி இருப்பதை இன்றைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன 1400 வருடங்களுக்கு முன்பே அவைகளில் அதிக சத்துகள் இருப்பதாகவும் அவைகளை உங்களுக்காகவே (மனிதர்களின் நலன் கருதியே உருவாக்கியதாகவும் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். இனிவரும் காலங்களில் இதன் ஆராய்ச்சியில் இன்னும் பல நன்மைகள் அடங்கி இருப்பதை கண்டு பிடித்து அறிவிக்கலாம்.
6:141. படர விடப்பட்ட, மற்றும் படர விடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்று பட்டும் (தன்மையில்) வேறு பட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவமரங்களையும்அவனேபடைத்தான். அவைபலன்தரும்போதுஅதன்பலனைஉண்ணுங்கள்!அதை அறுவடை செய்யும் நாளில்அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்கமாட்டான்.
16:11. அதன் மூலம் பயிர்களையும், ஒலிவ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காகஅவன்முளைக்கச்செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று இருக்கிறது
http://mfathima.blogspot.in/2012/11/blog-post_6120.html

--
*more articles click*
www.sahabudeen.com


Wednesday, August 28, 2013

நீங்கள் சவுதியில் வாழ்பவரா? அப்படியானால் நீங்கள் உடனே செய்ய வேண்டியது...

நீங்கள் சவுதியில் வாழ்பவரா? அப்படியானால் நீங்கள் உடனே செய்ய வேண்டியது... 

கீழ் கண்ட லிங்கிற்க்கு 'ENGLISH" தேர்வு செய்து அதன் பின்பு வரும் பகுதில் மேல் பாகம் வலது பக்கம் New user? என்பதை கிளிக் செய்தால் இக்காமா நம்பர், மொபைல் நம்பர், e-mail முகவரி, நீங்கள் தொடர்பு கொள்ள விரும்புகின்ற மொழி போன்றவற்றை பதிவு செய்து விட்டு Terms and condition னில் ஒரு கிளிக் செய்து விட்டு OK செய்தால். 

உங்கள் மொபைலுக்கு ஒரு நம்பர் மெசேஜில் வரும் அந்த நம்பரை enter செய்தால்...

உங்களுக்கான Login செய்ய வேண்டிய "User Name" & "Pass word" என்ன வென்று கொடுக்கப்பட்டுள்ள format பிரகாரம் அதை பூர்த்தி செய்தால் 

நீங்கள் பிரிண்ட் செய்வதற்க்காக ஒரு term & condition னுடன் கூடிய ஒரு டாக்குமெண்ட் display யாகும் அதை PRINT எடுத்து

அந்த print out - ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் உங்கள் பெயர், இக்காமா நம்பர் தியதி உங்கள் கையெப்பமிட்டு பக்கத்தில் உள்ள ஜவாஸாத் சென்று அங்கு இதைக் கொடுத்தால் 24 மணிக்கூருக்குள் உங்களால் இந்த பகுதியில் login செய்ய் முடியிம். 

http://www.epassport.gov.sa/

இதனாலான நன்மைகள். 

- உங்களைப் பற்றிய முழு விபரத்தையிம் நீங்கள் ஆறிந்து கொள்ள முடியிம், உங்கள் விசா, இக்காமா, நீங்கள் வந்தது (exit/re-entry) 
- நீங்கள் ஏதாவது traffic rules violate செய்திருந்தால் அது பற்றிய fine விபரங்கள்...
- உங்கள் குடும்பத்தினர் உங்களோடு இருந்தால், அவர்களுக்காக exit/re-entry அடிக்க நீங்க ஜவாஸாத் சென்று கீயூவில் நிற்க்க வேண்டாம், அதற்காக ஒரு நாளை loss of pay - ல் தீர்க்கவும் வேண்டாம், நீங்களே ஒரு நிமிடத்தில் நெட்டில் செய்து விடலாம். 

- இன்னும் நிறைய சலுகைகள் இருக்கிறது, இன்னும் அதிக சலுகைகளும் வரலாம்.

ஒரு சமயம் இனி வரும் நாட்களில் எந்த காரியத்திற்க்கும் ஜவாஸாத் போக வேண்டாம் என்ற நிலை வருவதற்க்கு முன்பு இந்த விசயங்களைச் செய்து உங்கள் user ID password ஐ activate செய்து கொள்ளுங்கள்! 

அன்புடன்.
B M SAINUDDIN

குறிப்பு: இந்த தகவலை பகிர்ந்து கொள்வதன் மூலம் மற்றவர்களுக்கு நாம் உதவலாம். செய்வீர்களா.. அல்லது வழக்கம் போல் படித்துவிட்டு நமகென்ன என்று இருபீர்களா..?

Courtest : Sainudeen B ..



--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Tuesday, August 27, 2013

கொழுப்பைக் குறைக்கும் கொள்ளு!

புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு ஆங்கிலத்தில் `ஹார்ஸ்கிராம்' என்று அழைக்கப்படுகிறது. அதன் பெயருக்கேற்ப குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்க வல்லது கொள்ளு. நம் ரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க வல்லது என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். அதோடு சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் வல்லமையும் வாய்ந்தது.
ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடும் உழைப்பிற்குப் பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் உடனடியாக குறைக்க உதவும்.
கொள்ளுவை பயன்படுத்தும் முன் பொரித்துக் கொள்ள வேண்டும். `எள்ளும், கொள்ளும் பொரிவதுபோல்…' என்று பழமொழி உண்டு. அதற்கேற்ப வெறும் வாணலியில் கொள்ளுவை படபடவெனப் பொரியும் வரை மெல்லிய தீயில் நிதானமாக வறுக்க வேண்டும். ஏனெனில் கொள்ளு பொரிகையில் அதனுள் பொதிந்து கிடக்கும் சக்திகள் மிக சுலபமாக நம் உடலால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.கொள்ளுவை பொடி செய்து கொள்ளவும்.
இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். பயன்படுத்தும்போது பொடியுடன் சிறிது நெய் அல்லது நல்லெண்ணை கலந்து சாப்பிடலாம்.
சாம்பார், கொள்ளு ரசம், பிசிபேளாபாத் போன்றவை செய்கையில் இந்தப்பொடி சிறிது சேர்த்து கொதிக்க விடலாம்.
இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.
இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது. அதாவது, மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும்.மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும்.ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.
மருத்துவ குணம்: கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள்.கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.
குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள்.
சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.
கொள்ளை ஆட்டி பால் எடுத்து(தண்ணீர்க்குப் பதில்)அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.(நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும்)இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம்,கொ‌ள்ளு துவைய‌ல்,கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.
கொள்ளு சூப்:1
தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
தக்காளி – 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 12 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிது
கறிவேப்பிலை சிறிது
தாளிக்க:
நல்லெண்ணெய் சிறிது
கடுகு சிறிது
வரமிளகாய் – 2
செய்முறை: மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.
கொள்ளு மசியல்:
கொள்ளு – 1 கப்
வரமிளகாய் – 3
மல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 12 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 12 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் – 12 அல்லது சின்ன வெங்காயம் – 8 நறுக்கியது
பூண்டு – 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு
செய்முறை: கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி, சீரகம்,மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும். அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.
கொள்ளு மசியல்:
கொள்ளு – 200 கிராம்
சீரகம் – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 5 பல்
சிறிய வெங்காயம் – 10
புளி நெல்லிக்காய் அளவில் பாதி
கறிவேப்பிலை – 10 இலைகள்
கொத்தமல்லி இலை சிறிது
உப்பு தேவையான அளவு
செய்முறை: மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.(ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.
நன்றி: திருக்குறள்

--
*more articles click*
www.sahabudeen.com