Showing posts with label STORY. Show all posts
Showing posts with label STORY. Show all posts

Tuesday, November 1, 2011

புது ம‌னை புகுவிழா ந‌கைச்சுவை சிறுக‌தை




 “ஏன்டா கோபாலு,......பசு மாட்டுக்கு சொல்லிட்டு வந்துட்டே இல்லே...? எப்போ ஓட்டிட்டு வரேன்னான்?" 

வாசல் பந்தலில் வாழைமரம் கட்டுவதை மேற் பார்வை பார்த்துக்கொண்டே என்னைப் பார்த்துக் கத்தினார் மாமா.
 

“சொல்லிட்டேன் மாமா....... விடியக்காலை நாலு மணிக்கே மாட்டோட வந்துடுறேன்னான். ஃபங்ஷன் அஞ்சு மணிக்குத்தானே ஆரம்பிக்குது மாமா...?”
 

“நோ..நோ...ராத்திரியே மாட்டை ஓட்டிக் கிட்டு வந்து கட்டிடச்சொல்லுடா! விடியக்காத்தாள அவன எங்கே தேடிப் பிடிக்கறது? கிரஹப்பிரவே சத்துக்கு பசுமாடு கேட்டா இப்படித்தான் பிகு பண்ணிப்பானுங்க!”
 

மாமாவுக்கு எந்த விஷயத்திலும் அட்வான்ஸாக இருக்கவேண்டும். அவர் ரெயிலுக்கு முன்னதாக ரிஸர்வ் பண்ணியிருந்தால்கூட, நாலுமணி நேரம் முன்னதாகவே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் போய் உட்கார்ந்துகொண்டு, ஸ்டேஷன் மாஸ்டரை நச்சரித்துக் கொண்டேயிருப்பார். ஸ்டேஷன் பக்கம் இவரது தலையைக் கண்டாலே டியூட்டியிலிருந்து லீவுபோட்டுவிட்டு வீட்டுக்கு ஓடும் ஸ்டேஷன் மாஸ்டர்களும் உண்டு!
 

என் அண்ணன் கட்டிய வீட்டுக்கு நாளை விடியற்காலை கிரஹப்பிரவேசம். வேலைகள் எல்லாம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. கிரஹப்பிரவேசத்துக்கான பொறுப்பை மாமாவின் தலையில் கட்டிவிட்டான் அண்ணன். ஒரு வாரம் முன்னதாகவே தன் குடும்பம் சகிதமாக வந்து இறங்கிய மாமா, வழக்கமான தன் அதிகாரத் தோரணையோடு
 
எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்தார்.
 

முகூர்த்த மாதமாகையால் புரோகிதம் செய்ய அய்யர் கிடைக்காமல் நான் ஒருவாரம் ஊரெல் லாம் தேடியலைந்து நான் பிடித்து வந்த அந்த அய்யரை, மாமா ‘இண்டர்வியூ” செய்ததில் பாவம், அந்த அய்யர் டென்ஷனாகிப்போய், கோபித்துக் கொண்டு, துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு ஓடியே போய்விட்டார்!
 

‘எந்தெந்த மந்திரம் சொல்லி கடவுளரை ஆசீர் வாதத்துக்கு அழைக்கப்போகிறீர்? சம்பந்தப் பட்டவர் ‘பிஸி” யாக இருந்தால், அதற்கு மாற்று ஏற்பாடு என்ன? ‘சீஃப் கெஸ்ட்’டான ‘வாஸ்து பகவானுக்கு’ தனியாக விசேஷ பூஜை உண்டா? ஒவ்வொரு தடவையும் ‘ஒண்ணே கால் ரூபா’ தட்சணை வைக்கச்சொல்லி அரிக்காமல், ஒட்டு மொத்தமாக எவ்வளவு வேண்டும்? - என்று பல கேள்விகளை அந்த புரோகிதரிடம் கேட்டு அவரைத் தொந்தரவு செய்தால் அவர் ஓடாமலா இருப்பார்?
 
நானும் அண்ணனும் போய் அவர் தாடையைப் பிடித்துக் கெஞ்சி மீண்டும் அழைத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது!

இரவு மணி ஒன்பது ஆகிவிட்டது. சாப்பிட்டுவிட்டு கொஞ்சநேரம் மாமாவின் பார்வையிலிருந்து மறைந்துபோய் படுக்கலாம் என்று நான் ஒதுங்கியபோது, “ஏன்டி விமலா, கோபால் எங்கே போய்த்தொலஞ்சான்?” என்று அண்ணியிடம்
 
விசாரித்துக்கொண்டு வந்துவிட்டார் மாமா.

“கோமியத்துக்கு சொல்லியிருக்கானா? இந்த ஏரியா வுல அது கிடைக்கறது கஷ்டம்னு அய்யர் சொன்னாரே ....ராத்திரியே போய் அத விசாரிச்சு வச்சுடச் சொல்லு!”
 

பாதிச் சாப்பாட்டில் கையை அலம்பிக் கொண்டு மாமாவின் முன்னால் ஆஜரானேன்.
 
“தாசில்தார் வீட்டு மாமிக்கிட்ட சொல்லி யிருக்கேன். விடியக்காலை போய் வாங்கிக்கலா முல்ல?” என்றேன்.
 

மாமா எதிலுமே ஒரு க்வாலிட்டி இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதக்காரர். ‘பசுவானது நல்ல நேரத்துல, நல்ல திசையப் பாத்து நின்னு, ரிலீஸ் பண்ணுன சுத்த கோமியமா இருக்கணும்! அதுவும் பொன்னிறமா, சுடச் சுட இருக்கணும்!’ என்று அவர் ஏதாவது கண்டிஷன் போடுவாரோ என்று நினைத்தேன். நல்லவேளை, அவர் அப்படி ஒன்றும் சொல்லாமல், “விடியறதுக்கு முந்தியே ஓடிப்போய் கோமியத்த வாங்கி வந்துடுடா. முதல்ல போற கோமியமா இருந்தா ரொம்ப விசேஷம்!” என்று மட்டும் கண்டிஷன் போட்டார். விடிகாலையில் அந்த மாட்டிற்கு ‘சிறுநீர் உபாதை’ ஏற்படும் நேரத்தை எதிர்பார்த்து நானும் அந்த மாட்டுத் தொழுவத்திலா படுத்துக் கிடக்கமுடியும்?
 

நீபாட்டுக்கு தூங்கிடாதேடா! விடியற துக்கு முந்தியே புரோகிதருக்கு வேண்டிய எல்லா அயிட்டங்களையும் ரெடி பண்ணி வெச்சிடணும் ...புரியுதா?” நான் தூக்க அசதியால் கொட்டாவி விடுவதைப் பார்த்து, சரி சரி, நீ போய்ப்
 
படு! விடிகாலை முழிச்சுடு!” என்று எனக்கு விடுதலை கொடுத்தார்.
 

விடியற்காலை நான் விழித்தபோது, மாமாவின் சத்தம் கேட்டது. தூங்கிக்கொண்டிருந்தவர்களையெல்லாம் எழுப்பி குளியலறைக்கு
 
விரட்டிக்கொண்டிருந்தார். அவர் பார்வையில் படாமல் நழுவிவிட எண்ணி, முகம் அலம்பிக்கொண்டு, தெருவில்
 
இறங்கியபோது........ “என்னடா கோபாலு, இப்பத்தான் எழுந்திருச்சியா? போய் அந்த கோமிய வேலைய
 
முதல்ல முடிச்சிட்டு வா!” என்று என்னைப் பிடித்துக்கொண்டார்.
 

“இத பாருடா.....இருட்டுல அந்த கொட்டில்ல வித்தியாசம் தெரியாம நீ எருமை, காளை எதுகிட்டேயாச்சும் பிடிச்சுட்டு வந்து தொலையாதே!” என்ற அட்வைஸ் வேறு!
 

தாசில்தார் வீட்டை அடைந்து, அந்த விடியற்காலை நேரத்தில் கதவைத் தட்டி அவர்களை எழுப்பியபோது, தாசில்தார் மாமா ஒரு கையில் டார்ச் லைட்டும், மற்றொரு கையில் ஒரு தடிக்கம்பு சகிதமாக வந்து கதவைத் திறந்தார். அந்த ஏரியாவில் ‘திருட பகவான்கள்’ திருவுலா வரும் நேரம் அது ஆகையால், ஒவ்வொரு வீட்டிலும் இந்த முன் ஜாக்கிரதை வழக்கமான ஒன்று.
 

தூக்கமயக்கத்தில் என்னை அடையாளம் கண்டு கொள்ளாமல், இசகு பிசகாக அவர் என் மீது ஒரு போடு ட்டுவிட்டாரென்றால்......
 
......கிரஹப்பிரவேசத்துக்கு இருக்க வேண்டிய நான், ஆஸ்பத்திரி பிரவேசமோ, எனது விதியின் கொடுமை ரொம்ப மோசமாக இருக்கும் பட்சத்தில் ‘எம லோகப் பிரவேசமோ’ அல்லவா போகவேண்டியிருக்கும் என்ற அச்சத்தில், “மாமா!....நான்
 
நடராஜ் தம்பி கோபால் வந்துருக்கேன்” என்று முன்ஜாக்கிரதையாக குரல் கொடுத்தேன்.
 

அவர் முகத்தில் தூக்கக்களையும், எரிச்சலின் சாயலும் படர்ந்திருந்ததை அந்த மங்கிய வெளிச்சத்திலும் கண்டுகொண்டேன்.
 
தலையைச் சொறிந்தவாறு உள்ளே போனார். பெட்ரூமிலிருந்த மாமியுடன் ஏதோ பேசிவிட்டு, கையில் ஒரு பாட்டிலுடன் வந்தவர், அதை என் கையில் தந்தார்.
 

‘ராத்திரியே பிடிச்சு வச்சிட்டாங்க போலிருக்கு! பரவாயில்லை, அவசரத்துக்கு இதுவாவது கிடைத்ததே! கோமியப் பிரச்னை தீர்ந்ததில் எனக்கு திருப்தி. இருந்தாலும், மாமா ஒரு சந்தேகப்பிராணி. கோமியத்தின் நிறம், மணம் இவற்றில் சந்தேகப்பட்டு, ஏதாவது குறுக்கு விசாரணை செய்தால் என்ன செய்வது?
 

......”இப்ப......இப்பத்தான் சுடச் சுட பிடிச்சது!” என்று ஓட்டல் சர்வர் பாணியில் பொய் சொல்லி. அவர் வழுக்கைத் தலையில் அடித்துச் சத்தியம் செய்யவேண்டும். தாசில்தார் மாமா கதவைச் சாத்தும் போது, “காலையில் மாமியை அழைச்சுக்கிட்டு கணபதி ஹோமத்துக்கே வந்துடுங்க மாமா!” என்று அழைப்பு விடுத்தேன்.

“காத்தாள நான் வந்துடுறேன்டா. மாமிக்கு உடம்பு சரியில்லே. அவள டாக்டர்கிட்ட அழைச்சிண்டு போகணும். நடராஜன்கிட்ட சொல்லிடு!” அவ‌ரிடமிருந்து விடைபெற்று வீட்டுக்குத் திரும்பிய போது, மாமா சமையல் கட்டில் நின்றுகொண்டு சுடச் சுட காபியை உறிஞ்சிகொண்டிருந்தார், அவருக்குப் பயந்து ஒவ்வொரு வேலையையும் நான் செய்து வந்தாலும், அவரிடமிருந்து கிடைத்த ஏச்சுக் களினால் மனம் புழுங்கிக் கொண்டிருந்தேன்.
 

அவர் ஊருக்குப் போவதற்குள், ஒருநால் அவர் குடைமிளகாய் மூக்கு உடைந்து போகும்படி ஒரு ‘நோஸ்கட்” நிகழ்ச்சியை நடத்திக்காட்ட வேண்டும் என்பது என் திட்டம். புது வீட்டுக்குள் நுழையவிட ஒரு பசுவும் கன்றும் கொண்டுவருவதற்காக நான்
 
மாடாய் அலைந்து, கடைசியில் ஒரு மாட்டுக் காரனைப் பிடித்தேன். அவனிடம் பேரம் பேசி அவனை முந்திய நாள் இரவே மாடு, கன்றுடன் வந்து கொல்லைப்புறத்தில் படுக்கச் சொல்லிவிட்டார் மாமா.
 

‘தண்ணியடித்துவிட்டு’ படுத்த அவனை விடியற் காலையில் நான் தண்ணியை அவன் மூஞ்சியில் அடித்து எழுப்ப வேண்டியாகிவிட்டது! ‘புதுமனைப் புகுவிழா’ நிகழ்ச் சிகள் நடந்து கொண்டிருந்தன. பசுவும், கன்றும் வீட்டுக்குள் நுழையும்போது அது நடுவீட்டில் சாணம் போட்டால்தான் ‘மங்களகர’ மாய் இருக்கும் என்று மாமா கண்டிஷன்போட, மாட்டுக்காரன் அவரிடம் சண்டைக்கு வந்து விட்டான்!
 

சரியான தீவனமின்றி கருவாடாய்க் காட்சியளித்த பரிதாபத்துக்குரிய அந்த கோமாதா, மூச்சுவிடவே திராணியற்ற நிலையில் தள்ளாடியவாறு நிற்கும்போது, அது சாணம் போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என எனக்குப் புரிந்தது. மாமாவோ “சாணச் சம்பிரதாய”த்தில் பிடிவாதமாய் நின்றார். மாட்டுக்காரனை தனியே அழைத்துப்போய் அவனிடம் பேசினேன். அவனோ ஒரு ‘தண்ணி கேஸ்’. மாமாவின் மேல் அவனுக் கிருந்த கோபத்துக்கு, அவரை மிதித்து, ‘வரட்டி’ தட்டிவிட்டுத்தான் போவான் என்று புரிந்தது! அவனை சமாதானப்படுத்தி, எனக்குத் தோன்றிய ஒரு ஐடியாவை அவனிடம் சொல்ல. அவனும் சம்மதித்தான்.
 

‘இன்ஸ்டண்ட்’ சாணத்துடன் கூடிய ஒரு பாலிதீன் பையை மாட்டின் பின்புறம் வாலுக்குக் கீழே மறைவாகக் கட்டிவிடவேண்டியது. (மாமாவின் பார்வைக்குப் படாமல் தான்!) மாடு, வீட்டுக்குள் நுழையும்போது, மாட்டுக்காரன் மாட்டைத் தட்டிக் கொடுப்பதுபோல் அந்த சாணப்பையை நசுக்கி, சாணம் வீடெங்கும் பீச்சியடிக்குமாறு செய்ய வேண்டியது. இதுதான் எங்கள் திட்டம்!
 

அப்படியே எல்லாம் நடந்து, பீச்சியடிக் கப்பட்ட சாணமானது, ஹாலில் உட்கார்ந்திருந்த பட்டுச்சேலைப் பெண் மணிகள் மேலெல் லாம் “சாண அபிஷேகம்’ செய்துவிட்டது! சாணத்தால் ஏற்பட்ட நாணத்தால் அவர்கள் ஓடி ஒளிந்த காட்சியும் விழாவுக்கு
 
களைகட்டியது!
 

புரோகிதரின் பக்கத்திலேயே மாமா உட்கார்ந்து கொண்டு அவரை “பெண்டு” எடுத்துக் கொண்டி ருந்தார். கிரஹப்பிரவேசம் சுபமாய் முடிந்தது. தனது ஏற்பாடு களைப் பற்றிப் பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார் மாமா. காலையிலேயே வருவதாகச் சொன்ன அந்த தாசில் தார் மாமா ஏன் நிகழ்ச்சிக்கே வராமலிருந்து விட்டார் என்று புரியாமல் குழம்பினேன். அந்த குண்டு மாமிக்கு உடம்புக்கு ஏதேனும் கோளாறு ஆகிவிட்டதோ?
 

மறுநாள். மதுரை மாமாவை ரயிலேற்றிவிட்டு நான் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, வழியில் பார்த்த தாசில்தார் மாமாவைக் கேட்டேன்: “என்ன மாமா, ஃபங்ஷனுக்கு வராமலேயே இருந்துட்டீங்க?” “வரமுடியாமப் போச்சுடா!....மாமிய டாக்டர்கிட்ட கூட்டிண்டு போகணும்னு சொன்னேனில்லியோ....” என்று சொல்லி அவர் நிறுத்த, “என்ன மாமா ஆச்சு?”
 
என்று பட படப்புடன் கேட்டேன். அவர் சொன்னதைக் கேட்டதும் எனக்குத் தலை சுற்றியது!
 

டாக்டரின் க்ளினிக்கில் மாமியின் “லேப் டெஸ்ட் ரிஸல்ட்”டைப் பார்த்துவிட்டு அந்த டாக்டரே மூர்ச்சையாகி விழுந்துவிட்டாராம்! மாமிக்கு இது “தலைச்சன் ஈற்று” என்றும், வீட்டுக் கால்நடைகளை எளிதில் தாக்கும் ‘கோமாரி நோய்’ அவளைப் பீடித்திருப்பதாகவும், இந்த தலைச்சன் கன்றுக்குட்டியை மாமி பிரசவிப்பதே ரொம்பக் கடினம் என்றும் அந்த ரிஸல்ட்’
 
டில் இருந்ததைப் பார்த்த டாக்டர் மயக்கமுற்று விழுந்ததில் ஆச்சரியமில்லையே!
 

நடந்ததை மாமா விளக்கினார். “கோபாலு, நேத்திக்கு காத்தாள இருட்டுல நான் உங்கிட்ட பாட்டிலை மாத்திக் குடுத்துத் தொலச்சிட்டேன்! அதுல இருந்தது மாமியோட டெஸ்ட்டுக்காக பிடிச்சு வெச்சதுப்பா! ‘தன்னோடது’ன்னு மாமி அந்த
 
பசுவோட கோமிய பாட்டிலை லேப்’ல குடுத்துட்டதால இவ்வளவு கோளாறு!...மன்னிச்சுடுடா!” எனக்குத் தலை சுற்றியது! அப்படியானால்......
 

மதுரை மாமா பக்திசிரத்தையுடன், இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு, புரோகிதர் கொடுத்த கோமிய தீர்த்தத்தை பவ்யமாக வாங்கி, தன் தலையில் தெளித்துக் கொண்டு, வாயிலும் ஊற்றிக்கொண்டாரே....அது...... அது......?

Saturday, November 20, 2010

ரயில் பயணங்களில்..! : சிறுகதை

"ம்ம்ம்... டாக்ஸி வந்தாச்சு... நகரு... நான் கொண்டு போறேன். பெரிய பெட்டியை இப்படி வை... தண்ணி கேம்பர் எங்கே? பூட்டு எங்க..? சாவி எங்க? ஏறுங்க... கதவை அடித்து மூடுங்க..."
கேள்விகளும் அறிவுரைகளுமாய் ஒருவழியாய் ஏறியாயிற்று...
"என்னங்க? பூட்டை வெளிலே போட்டீங்களா? உள்ளேயுள்ள கொக்கியில் போட்டீங்களா?"
"ஆரம்பிச்சிட்டியா?"
"சரி விடுங்க!"
இரண்டு தெரு தாண்டியதும், "ஏங்க... வெளி லைட் போட்டீங்களா?"
இப்போ போட்டேன்னு சொல்லவா? போடலைன்னு சொல்லவான்னு குழம்பியதிலே போட்டேனா போடலையான்னே குழப்பம்...
அடுத்த 10 நிமிடம் சுமுகமாக நகர்ந்தது...
"என்னங்க கேஸ் கீழே உள்ள ஸ்விட்சை மூடினீங்களா?"
"ஆமாம்மா..."
அடுத்த ஐந்தாவது நிமிடம்.
"ஏங்க.."
"என்னம்மா?"
"கிச்சன்லே குழாயை மூடினீங்களா?"
இப்படிக் கேல்வி மேல கேள்வி கேட்டாலே பதிலைப் பற்றிய குழப்பமும் கை நடுக்கமும் ஆரம்பிச்சுடுதே எனக்கு...
"இல்லைங்க... பாத்ரூம்லே யார் கடைசியா போனது?"
"குழாயை மூடினீங்களா?"
"லைட் ஆஃப் செய்தீங்களா?"
"ஹாலில் ஃபேன் ஆஃப் செய்தீங்களா?"
இந்தக் கேள்விக் கொண்டாட்டத்தையெல்லாம் வீட்டிலேயே கேட்டுக் கொண்டாடியிருக்கக் கூடாதா?
கொலை வெறியுடன் ஆனால் பரிதாபமாகப் பார்த்தேன்...
நிறைய தடவை என்னுடைய குழப்பமான பதில்களால் வீட்டுக்குத் திரும்பிப் போய்ச் சரிபார்த்த அனுபவம் கூட உண்டு எனக்கு...
அப்பாடா!! ஸ்டேஷன் வந்தாச்சு. இனிமேல் வீட்டுக்கு அனுப்ப மாட்டாள்.
ரொம்ப நம்பிக்கையுடன் ரயிலில் ஏறியாச்சு.
"சாவியைக் கொண்டா... பெட்டிக்கெல்லாம் சங்கிலி போட்டுரலாம்..."
"அச்சோஓஓஓஓஓஓ...."
"என்னம்மா... சாவி கொண்டு வரலியா? ஒண்ணும் பிரச்னையில்லை. பூட்டு சாவி ரிப்பேர் பண்றவன் வருவான் திறந்திடலாம்..."
நான் வீட்டுக்குப் போவதைத் தடுப்பதிலேயே குறியாயிருந்தேன்.
"இல்லைங்க டிக்கெட்டை வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டேன். சரி சரி இறங்குங்க... ஒரு நடை போய் டிக்கெட்டை எடுத்திட்டு அப்பிடியே கேஸ் திறந்திருக்கான்னு செக் பண்ணிட்டு, பாத்ரூம், கிச்சன் குழாயைத் திறந்திருக்கான்னு பார்த்துட்டு, ஃபேனை அணைத்து விட்டு, வெளி லைட்டைப் போட்டுட்டு... வீட்டை உள்ளேயுள்ள கொக்கியில் பூட்டைப் போட்டுப் பூட்டிட்டு வாங்க... பதறாதீங்க... இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு..."
'கிராதகி... இப்படி எல்லாத்தையும் செக் பண்ணுவதற்கே டிக்கெட்டை வீட்டில் விட்டு வந்தாளோ?'
முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டே இரண்டடி வைத்திருப்பேன்.
"என்னாங்க... வீட்டுச் சாவி எடுத்துக்கிட்டீங்களாஆஆஆஆஆஆ..?"
நான்... ஙே!!!

Monday, November 15, 2010

மென்பொருள் வல்லுனர்களின் கவலைகள்...


கற்றது தமிழ் படம் பாக்கலைனாலும் அதை பற்றி படித்த விமர்சனங்கள் மென்பொருள் துறையினரை சாடுவதாக தெரிகிறது. இன்னைக்கு விலைவாசி ஏறனதுக்கு சாப்ட்வேர் இஞ்சினியர்கள் தான் காரணம்னு நிறைய பேர் சொல்லி கேட்டிருக்கேன். ஒரு வகைல அது உண்மையும் கூட. போன தடவை நான் இந்தியா போயிருந்தப்ப என் அண்ணன் (பெரியம்மா பையன்) இதை தான் சொன்னான் (அவன் சாப்ட்வேர் இல்லை). 

மெட்ராஸ்ல இருந்து திருச்சி போகறதுக்கு ஏர் பஸ்ல போகலாம்னு போய் விசாரிச்சிருக்கான். ஒரு சீட் தான் இருக்குனு சொல்லியிருக்காங்க. அதே சமயம் ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரும் அங்க வந்திருக்கான். உடனே பஸ் கண்டக்டர் (ஏர் பஸ்ல இருக்கறவர் பேரு கண்சக்டரா இல்லை க்ளீனரா?) 100 ரூபாய் அதிகமா சொல்லியிருக்கான். உடனே என் அண்ணன் சாதாரண பஸ்ல போனா அந்த 100 ரூபாய்க்கு திருச்சிக்கே போயிடலாம்னு ஏர் பஸ்ல போகாம சாதாரண பஸ்லயே போயிருக்கான். நம்ம ஆளு (சாப்ட்வேர் தான்) நூறு ரூபா அதிகமா செலவு பண்ணி ஏர் பஸ்ல போயிருக்கான். 

இந்த இடத்துல தப்பு யார் மேலனு எனக்கு தெரியல. ஏமாந்தவன் ஒருத்தன் வரான், நூறு ரூபாய் ஏத்தி சொன்னாலும் சேர்த்து வாங்குவானு சொன்ன அந்த பஸ்காரன் மேல ஏங்க யாருமே தப்பு சொல்ல மாட்றீங்க? ஏமாத்தறவனைவிட ஏமாறவன் மேல ஏன் உங்களுக்கு எல்லாம் இந்த கோபம்? யாரும் விருப்பட்டு ஏமாறதில்லைங்க. 

பெங்களூர்ல வீட்டு வாடகை ஏறிடுச்சினு எல்லாரும் சாப்ட்வேர் இஞ்சினியரை திட்றாங்க. ஆனா தலைக்கு ரெண்டாயிரம். நாலு பேர் தங்கினா எட்டாயிரம், இன்னொருத்தவன் வந்தா பத்தாயிரம்னு சொல்ற வீட்டு ஓனருங்க மேல ஏன் உங்க கோபம் போகலை? இன்ஃபோஸிஸ் இருபத்தைந்தாம் ஆண்டு விழாக்கு போனஸ்னு தராங்கனு சொன்னவுடனே பெங்களூர்ல வீட்டு வாடகையை ஏத்தனவங்க நிறைய பேர். ஆனா அவுங்க பேப்பர்ல கொடுத்த விளம்பரமும் கைல கொடுத்த காசும் கணக்கு பண்ணா மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்யாசம். 

இது மட்டுமில்லை. இந்த ஹோட்டல் எல்லாம் அதுக்கு மேல. ஒரு சிக்கன் பிரியாணி அறுபது ரூபாய். சைட் டிஷ் எல்லாம் நூறு நூத்தியிருபது. இப்படி தான். ஒரு ட்ரீட்னு 5 பேரோட போனா ஆயிரத்துல இருந்து இரெண்டாயிரம் வரைக்கும் தாராளமா செலவு ஆகும்.நம்ம ஆளுங்களுக்கு வாரத்துக்கு ஒரு தடவை இப்படி போயாகனும். ஆனா இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு கொடுத்த ஐட்டத்தையே அறுபது ரூபாய்க்கு ஏத்தனவங்க மேல ஏன் யாருக்குமே கோபம் வரல? 

சாப்ட்வேர் இஞ்சினியர் இவ்வளவு சம்பாதிக்கிறானு சொல்றீங்களே. அவன் எவ்வளவு சேமிக்கிறானு யாருக்காவது தெரியுமா? ஒரு கிராமத்துல இருக்குற கவர்மெண்ட் பள்ளிக்கூட ஆசிரியர் சேமிக்கிறதைவிட கொஞ்சம் அதிகமா அவன் சேர்த்து வைக்கலாம். அவ்வளவு தான். அவனோட வாழ்க்கை முறை அவனை அதுக்கு மேல சேமிக்க விடறதில்லை. அதுல அவன் தப்பு எதுவுமில்லைனு நான் சொல்லலை. ஆனா அவன் தப்பு மட்டுமேனு எல்லாரும் சொல்றது தான் கஷ்டமா இருக்கு. 

இருபத்தியொரு வயசுல எப்படியோ படிச்சி முடிச்சிட்டு வரான். கேம்பஸ்ல வேலை கிடைச்சா பரவாயில்லை. ஆனா அப்படி கிடைக்கலைனா அந்த வேலை கிடைக்க அவன் படற கஷ்டம் வேற எந்த துறைக்கும் குறைவானதில்லை. அப்படியே கஷ்டப்பட்டு வேலைக்கு போனவுடனே அவன் வாங்கற சம்பளம் அவனுக்கு ஒரு பெருமையையும், தலை கனத்தையும் தருது. நம்ம அப்பா இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு வாங்கறதைவிட அதிக சம்பளம் வாங்கறோம்னு ஒரு பெருமிதமும் (தெரியாமலே கொஞ்சம் கர்வமும் தானா வந்துடுது) வருது. ஆனா அவனுக்கு அந்த காசோட அருமை அவ்வளவா தெரியாது என்பது தான் உண்மை. அதுவுமில்லாம அந்த வயசும் அப்படி தான். ஜாலியா இருக்கனும். அவ்வளவு தான். 

ஆனா அந்த வயசுக்கே உரிய இரக்க குணமும் அவன்கிட்ட தாராளமா இருக்கும். சுனாமி வந்தப்ப காசை அள்ளிக்கொடுத்தவங்க நிறைய பேர். அதே மாதிரி நிறைய பசங்களுக்கு படிக்க உதவி செஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. நண்பர்களிடமிருந்து இந்த மாதிரி மெயில் வந்தா, அது உண்மைனு தெரிஞ்சா குறைஞ்சது ஆயிரம் ரூபாயாவது யோசிக்காம செய்யறவங்க நிறைய பேர். பத்து பேர் தங்கியிருக்குற இடத்துல ரெண்டு மூணு பேர் வேலைக்கு போனா அடுத்து எல்லாருக்கும் வேலை கிடைக்கிற வரைக்கும் அந்த வேலைக்கு போற மூணு பேர் மொத்த வாடகையையும் சாப்பாட்டு செலவையும் ஏத்துக்குவாங்க. வேலைக்கு சேர்ந்தவுடனே அந்த பசங்க எந்த ஊருக்கு போவாங்கனு யாருக்கும் தெரியாது. இங்கயும் அவன் காசை அதிகமா நேசிக்கறதில்லை. 

சாப்ட்வேர் இஞ்சினியருங்க வாங்கற சம்பளமெல்லாம் மொத்தமா ரியல் எஸ்டேட்காரவங்ககிட்டயும், செல் போன் கம்பெனிகளிடமும், ஹோட்டல் ஓனருங்ககிட்ட தான் போய் சேருது. கொஞ்சம் கொஞ்சம் தியேட்டர் ஓனருங்ககிட்டயும், ஏர் பஸ்காரங்கட்டயும் போய் சேருது. இன்னைக்கு நம்ம பார்க்கிற ஏற்றத்தாழ்வுக்கு இது தான் முக்கிய காரணம். பணக்காரன் ரொம்ப பெரிய பணக்காரன் ஆகறதுக்கு இது தான் காரணம். இப்படி சாப்ட்வேர் இஞ்சினியருங்ககிட்ட வர பணம் மொத்தமாக வேற ஒரு கும்பலால் பெறப்படுகிறது. 

இதை கண்டிப்பா சாப்ட்வேர் மக்களால சரி செய்ய முடியாது. அரசாங்கம் ஏதாவது செஞ்சாதான் உண்டு. நம்ம அரசியல்வாதிகள்ல நிறைய பேருக்கு இதை புரிய வைக்கவே ரொம்ப கஷ்டப்படனும். சரி அதி புத்திசாலிங்களான மன்மோகன் சிங்கும், பா.சிதம்பரமும் இதையெல்லாம் பத்தி ஏதாவது செய்யறாங்களானு தெரியல. 

கார், Furnished 3 BHK (Bed Room, Hall, Kitchenஆம்), சிக்கன் பிரியாணி இதையெல்லாம் விட ஒரு டூ-வீலர், அப்பா, அம்மாவோட இருக்குற வீடு, அம்மா கைல சமைச்ச ரசம், துவையல் இதெல்லாம் தாங்க சொர்க்கம். பெரு நகரங்களிலிருக்கும் சாப்ட்வேர் கம்பெனியெல்லாம் கொஞ்சம் சிறு நகரங்களுக்கு கொண்டு வந்து பாதி சம்பளம் கொடுத்தாக்கூட போதும். நம்ம ஆளுங்க எல்லாம் ஓடி வந்துடுவாங்க. அதை விட்டுட்டு நீ எப்படி நாற்பதாயிரம் சம்பாதிக்கலாம்னு சண்டை போடறதோ, புலம்பறதோ சரியில்லைங்க.

திருநெல்வேலி அல்வாவும், மல்லிகைப்பூவும்


சாயங்காலத்து வெயில் மென்மையாக இருக்கும். ஒரு அலாதியான் அமைதியைத் தந்து கொண்டிருப்பது போல தோற்றம் அளிக்கும். எல்லோரும் வீடு திரும்புகிற காட்சி. பறவைகள் கூட, மனிதர்களைபோல கூட்டமாயும், தனித்தனியாகவும் தங்கள் உறைவிடங்களுக்குத் திரும்புவதைக் காணலாம். மகிழ்ச்சியோடு பலர் வீடு திரும்புகிறார்கள். பலர் திருப்தியடையாமல் கவலையோடு இல்லம் திரும்புகிறார்கள். மாளிகையில் வசித்தாலும், பல சுகங்கள் கைக்குள் அடங்கியிருந்தாலும், மனதில்தான் ஒருவன் அல்லது ஒருத்தி உண்மையாய் வாழும் மாளிகை அடங்கியிருக்கிறது. கோபுரத்தில் இருந்தாலும், மனம் அமைதியின்றித் தவித்தால், எதையும் அனுபவிக்க முடியாது. மனம் தொந்தரவிலிருந்து விடுபட்டு ஒரு நல்ல துணைவியிடம் இன்புற்றிருத்தல் ஒரு உன்னத வாழ்ககை அனுபவம்.

ராம்குமாரும், ராதிகாவும் திருமணமாகி ஆறு மாதம் கழிந்துவிட்டது. எல்லாப் பொருத்தமும் பொருந்திவிட்ட ஜோடி எனலாம். காண்பவர்கள் அனைவரும் இவர்கள் ஜோடி பொருத்ததைக் குறித்து வியக்காமல் இல்லை. ராம்குமார் தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக பதவிவகிக்கிறார். நல்ல கல்வித் தகுதி, நல்லத் திறமை. இதனால், இளம் வயதிலேயே, நல்ல உத்தியோக உயர்வைப் பெற்று, வட இந்தியாவில் கான்பூர் நகரத்தில் உள்ள கிளையில் பொறுப்பேற்குமாறு சமீபத்தில் வங்கி மேலிடம் அனுப்பி வைத்தது.

ராம்குமார் தன்னுடைய வாழ்க்கையில் வேகமாக முன்னேறியிருக்கிறார். நல்ல மனைவி. ராதிகாவும் நல்ல படித்தவள்தான். ஆனால் ராம்குமார் அவளை வேலைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ராம்குமார் மனைவியை கான்பூருக்கு அழைத்துவந்து குடியேறினார்.

முதல் ஒரு மாதம் அவர்கள் அனுவத்த தனிமைகூடிய நெருக்கத்திற்கு நேர்மாறாக இப்பொது கடந்த சில வாரங்களாக அவர்களுக்குள் ஒரு தளர்வு ஏற்பட்டுவிட்டது. காரணம் ராம்குமார் அலுவலகம் முடிந்து வீடு வரும்போது சலிப்புடனும், சோர்வுடனும் வருவது வாடிக்கையாகிவிட்டது. ராதிகாவிடம் மனம்விட்டு பேசுவது குறைந்து ஏதோ கடமைக்கு வீட்டுக்கு வந்து செல்வது போலாகிவிட்டது.

"ஏங்க, முன்பு மாதிரி கலகலப்பா பேசுறது இல்லை…எப்போதும் ஆழ்ந்த சிந்தனைல இருக்கிறாப்ல தெரியுது."

"நாம நல்லாத்தானே இருக்கோம். என்ன குறை?"

"குறைவு ஒன்றுமில்லை. நல்லாத்தான் என்னை வச்சிருக்கிங்க. ஆனால், நாம் இதுவரை அனுவத்துவந்த பரஸ்பர நிறைவில் குறைவுபடுகிறது, உங்களுக்குப் புரியாமலில்லை..."

"இல்லை. ராதிகா. எனக்கு அலுவலகத்தில் கொஞசம் வேலை அதிகமா இருக்கு. அதுதான் வீடு வந்து சேருமுன் அலுப்புத் தட்டுறது மாதிரி ஆகிடுது. இன்னும் அலுவலகத்தில் வடநாட்டவர்தான் அதிகம். தென்னாட்டைச் சேர்ந்தவன் என்பதால் எனக்குப் பலவிதத்திலும் வேதனைத் தருகிறார்கள். போலி ஆவணங்களைத் தயார் செய்துகொண்டு வங்கிக் கடன், மேலதிகாரியின் சிபாரிசோடு என் அனுமதிக்கு வருகிறார்கள். மிகவும் கவனமாகவும், கடமையுணர்வுடன் எப்போதும் வேலை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறேன்."

"எதுவாயிருந்தாலும், அலுவலக கவலைகளை வீட்டுக்கு சுமந்துகிட்டு வரவேண்டாம். நீங்க கவலைப்படுறதுனால என்ன செய்ய முடியும், எதைக் கூட்டமுடியும், எதைக் குறைக்க முடியும்? எங்கப்பா போலிஸ் அதிகாரி. எவ்வளவோ பிரச்ச்னைகளைத் தினமும் சந்திப்பார். ஆனா, வீட்டுக்கு வரும்போது எந்தப் பாதிப்பும் இல்லாம சகஜமா நடந்துக்குவார். எல்லாருக்கும் நேரம் தந்து பேசி, சந்தோசப்படுத்துவார். எப்படிப்பா இப்படி முடியுது என்று கேட்டால், 'எல்லாம் ஆண்டவன் பாத்துக்குவான். ஏன்னா நான் மனசாட்சிய சுத்தமா வச்சிருக்கேன். நேர்மை தவறாமல் என் கடமையைச் செய்றேன்.' என்பார். இந்தாபாருங்க, நீங்க நேர்மையோடு வேலைச் செய்யும் போது ஏன் கலங்கணும்? நீங்கத்தான் உறுதியா இருக்கணும்."

ராதிகா, சூடாக காபி கொண்டு வந்து கொடுத்தாள். என்றாலும் ராம்குமார் இறுக்கமாகவே இருந்தான். வாடிக்கையாக இரண்டு பேரும் சேர்ந்து இருக்கையில் அமர்ந்து ரசிக்கும் டிவி சீரியலையும் அவனால் மனமொன்றி பார்க்க இயலவில்லை.

ராம்குமார் வழக்கமாக பக்கத்து வீட்டு சிறுவன் ராஜாவை சாயங்கால வேளையில் சாலையோரம் அழைத்துச் சென்று நடந்துவருவான். எப்போதெல்லாம் சிறுவன் ஒடும் பேருந்தைக் காண்பானோ அப்போதெல்லாம், தன் கையை உயர்த்தி ஆனந்தமாக சத்தமிட்டு, "அங்கிள், அங்கிள் 
தெர் இஸ் ய நைஸ் பஸ் கோயிங்." என்று மழலையில் அழகாகச் சொல்லிக் குதிப்பான். ராம்குமாரின் கைகளைச் செல்லமாக வருடி பிடித்துக்கொள்வான். இன்று மாலை அந்தச் சிறுவன் வரவில்லை. ராம்குமார், முதலில் ராதிகாவை அழைத்துச் செல்ல நினைத்தான். ஆனால் மனசு சரியில்லை; போகும்போது அவளிடம் இயல்பாக பேசயியலாது என்று நினைத்துத் தனியாக சாலையோரம் நடக்க ஆரம்பித்தான். 

சாலையில் ஊர்திகள் பரப்பரப்பாகச் சென்றுகொண்டிருந்தன. நடையாய் ஒரு பக்கமாக சென்றுகொண்டிருந்தாலும், அவனுடைய சிந்தனையோட்டம் ஒன்றையொன்றை யோசித்தப்படி, கலங்கியபடி இருந்தது. அவ்வாறு நடக்கையில் ஒரு பஸ் அவனை வேகமாகக் கடந்து சென்றது. ராம்குமார் அவனையாமல், அந்த பஸ்சை நோக்கி கையை உயர்த்தினான். இது ஒரு அனிச்சை செயல்தான்? சிறுவன் ராஜாதான் வழக்கமாக இவ்வாறு செய்வான். இன்று அவனில்லை..அனால் அந்த சிறுவனைப் போன்றே இவன்...மட்டுமன்றி அந்த பஸ் கண்ணைவிட்டு மறையும் வரையிலும், ராம்குமார் தன்னை மறந்து அதிலே லயித்துவிட்டான்.

ஒரு கணம் இந்த உலகக் கவலைகளிலிருந்து விடுபட்டவனாய், கண்ணில் காணும் பொருட்களை சுவாரசியமாய் ரசித்து ஆனந்திப்பது போல ஒரு உச்ச உணர்வை அவனால் அனுபவிக்க முடிந்தது. குழந்தைகள் அல்லது கவலைகளைப் புறம் தள்ளி வாழ பழகிக்கொண்டவர்கள் எவ்வளவு பேறுபெற்றவர்கள்! இப்படிப்பட்ட்வர்களால்தான் மனமொன்றி வாழ்க்கையை, இயற்கையை ரசிக்க முடியும். மற்றவர்களிடம் முழுமையாய் அன்பு காட்டமுடிய்ம். ஏன் மற்றவர்களின் அன்பையும் ருசிக்க முடியும். இந்த ஒருகணம் விடுபட்ட நிலையில் அனுபவித்த மகிழ்ச்சி எங்கிருந்த்து வந்தது? கவலையும், களிப்பும் வெவ்வேறு இடத்திலிருது பிறக்கவில்லை. எல்லாம் இந்த ஒரே மனத்தில்தான் உறங்கிக்கிடக்கிறது.

"ராதிகா சொல்வதுபோல, நான் நேர்மையாகத்தான் நடந்து வருகிறேன். அவள் ஆலோசனைத் தந்தாளே; வரும் சோதனைகளை ஆண்டவனிடம் ஒப்படைத்துவிட்டு, வாழ்க்கையை ரசிக்கத் தொடங்கவேண்டியதுதான். எல்லாவற்றையும் நம் தலையில் சுமந்துகொண்டால், நமக்கும் நிம்மதியில்லை, நம்மைச் சார்ந்தவர்களுக்கும் சந்தோசம் தர முடியவில்லை." இவ்வாறு ராம்குமார் யோசித்தபடி, கடந்து செல்லும் ஒவ்வொரு பேருந்தையும், கார்களையும், மிதிவண்டிகளயும், பாதசாரிகள் ஒவ்வாருவரையும் புதுமையாகப் பார்த்தான். எல்லாவற்றிலும் ஒரு அழகு, ஒரு நிறைவைக் கண்டான். சாலையோரத்து மரங்கள், அந்தியில் அடையும் பறவைகள் அனைத்தும் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

மேலே உற்று நோக்கினான். மேகங்கள் தடைசெய்தபோதும், தளராமல் வெளிச்சம் தந்து கடந்து செல்லும் நிலாவின் அழகே தனிதான். இயற்கை அனுமதித்த எதிலும் தடையிருக்கவில்லை. கவலை ஏன் தடையாக இருக்கவேண்டும்? சாலையில் உள்ள பரபரப்பையும் பொருட்படுத்தாது, அருகில் வசிக்கும் குடிசைவாசிகள் எவ்வளவு மகிழ்ச்சியோடு அளவளாவுகிறார்கள். அவர்களுக்கு கவலையிருக்கவில்லையா? 

வாழ்கையில் புதிய பாடம் புரிந்துவிட்ட மகிழ்ச்சியில், ராம்குமார் இதயம் பூரித்தது. நேரம் ஆகிவிட்டது. ராதிகா காத்திருப்பாள். எப்படி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது?

வழியில் மல்லிகைப்பூ விற்கும் பெண்ணிடம் மல்லிகைச்சரத்தையும், கான்பூரில் தமிழர் வாழும் பகுதியில் பிரபலமான திருநெல்வேலி கடைக்காரிடம் புதிதாக செய்த அல்வாவையும் வாங்கிக்கொண்டு, ராதிகாவை நினைத்தபடி, ராம்குமார் வேகமாக வீட்டுக்கு நடந்தான்.

சர்க்கரை கசக்குற சர்க்கரை...!!!


"ன்னங்க பேயறைஞ்ச மாதிரி மொகமெல்லாம் வெளுத்துபோய் வரீங்க? காலங்காத்தால காப்பிகூட குடிக்காம போனீங்க.....எங்க போனீங்க என்ன ஆச்சு, ஏன் இப்படி இருக்கீங்க? சொல்லுங்க...."

பதில் பேசாமல் மௌனமாய் இருந்த கணேசனை உலுப்பி மீண்டும் கேட்டாள் சரோஜா.

"அட என்னதான் ஆச்சு ஏன் இப்படி பேய்புடிச்ச மாதிரி இருக்கீங்க...சொல்லித் தொலைங்க.."

"பேய் இல்லடி சரோ....நோய் புடிச்சிடிச்சி..."

குரலில் சுரத்தேயில்லாமல் கணேசன் சொன்னதும்....

"அடப்பாவி மனுஷா....ஒனக்கு பொம்பளைங்க சகவாசம் வேற இருந்திச்சா....பகவானே...அப்பவே எங்கப்பா சொன்னாரு...மாப்பிள்ளை முழியைப் பாத்தாலே சரியில்லைன்னு....இப்ப வந்து நோய் வந்துடிச்சின்னு சொல்றியேய்யா....நான் என்ன செய்வேன்...யார்கிட்ட சொல்வேன்..இந்த வயசுல இது தேவையா? வயசுக்கு வந்த பொண்ணையும் பையனையும் வெச்சுக்கிட்டு ஒரு ஆம்பிளை செய்யற காரியமா இது...கடவுளே..எங்கப்பா வேற போய் சேந்துட்டாரே...நான் யார்கிட்டா போய் சொல்லுவேன்"

சரோஜா ஏன் இப்படி சாமியாடுகிறாள் என்று ஒன்றும் புரியாமல் அந்த முழியை வைத்து முயன்றவரைக்கும் உருட்டி, உருட்டி சிந்தித்தாலும் எதுவும் புலப்படாமல்,

'சரோ...நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி குதிக்கற. புருஷனுக்கு நோய் வந்துடிச்சின்னு கேட்டா பொண்டாட்டியா லட்சணமா, என்ன ஆச்சுங்க எப்படி இருக்கீங்கன்னு ஆறுதலா கேக்காம, பொம்பள அது இதுன்னுகிட்டு..."

"ஆமாய்யா...நீ நோய் வந்து கெடப்ப...நான் உனக்கு நளாயினி மாதிரி கூடையில சுமந்து கிட்டு போகனுமா?"

"அடிப்பாவி....உலகத்துல நோய்ன்னா அது ஒண்ணுதானா...ஏதோ சின்னச்சின்ன கவிதையெல்லாம் எழுதறமே...நீ பேய்ன்னு சொன்னதும் ரைமிங்கா நோய்ன்னு சொன்னா........டைமிங் தெரியாம ஏதேதோ பேசறியே....இது உனக்கே நியாயமா சரோ.."

பரிதாபமான அவன் முகத்தைப் பார்த்ததும், மனம் இளகிப்போய்,

"அடடா....நான்தான் அவசரப்பட்டுட்டேனா...என்னங்க ஆச்சு..என்ன நோய் அது இதுன்னு சொல்லி பயமுறுத்துறீங்களே...சீக்கிரம் சொல்லுங்க..."

"என்னத்த சொல்றது சரோ...ம்...நேத்து ஆபீஸ்லருந்து வரும்போது ஒரு நோட்டீஸ் குடுத்தாங்க. ஜெயம் மெடிகல் செண்ட்டர்ல ஃப்ரீ டயாபடிக் பரிசோதனை பண்றாங்கன்னு போட்டிருந்திச்சி. அதுல வேற 40 வயசுக்கு மேல ஆனவங்க கட்டாயம் பரிசோதனை பண்ணிக்கனுன்னு எழுதியிருந்ததப் பாத்ததும், போய் செக் பண்ணித்தான் பாப்பமேன்னு நெனைச்சேன். உன்கிட்ட சொன்னா....நிஜமாவே இருக்குமோன்னு நீ கவலைப் படுவியோன்னுதான் உன்கிட்ட சொல்லல."

"செக் பண்ணிக்கறது நல்லதுதானே...அது சரி என்ன சொல்றாங்க..இப்ப"

"அதான் சரோ சொன்னேனே....வெறும் வயித்துல செக் பண்ணூம்போது 90 தான் இருக்கனுமாம். இந்த வயசுக்கு 100 இல்லன்னா 110 இருந்தாலும் பரவால்ல...ஆனா எனக்கு 130 இருந்திச்சி. அத பாத்துட்டு டாக்டர், நீங்க சர்க்கரை வியாதியோட பார்டர்ல இருக்கீங்கன்னு, நான் ஏதோ பாகிஸ்தான் பார்டர்ல இருக்குற மாதிரி சொன்னாரு"

"அய்யய்யோ அப்புறம் என்ன சொன்னார்?"

"பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல. இப்ப இந்த வியாதி நிறைய பேருக்கு வருது. கிட்டத்தட்ட இது நம்ம தேசிய வியாதி மாதிரி ஆயிடிச்சின்னு ஜோக்கடிக்கறார். அப்புறம் மாத்திரையெல்லாம் இப்ப வேணாம், சாப்பாட்ல கண்ட்ரோலும், கொஞ்சம் உடற்பயிற்சியும் போதும், தினமும் காலையில மூணு கிலோமீட்டர் நடங்க, ஸ்வீட் சாப்பிடாதீங்க, எண்ணை அதிகம் சேத்துக்காதீங்க, உருளைக்கிழங்கு சாப்பிடாதீங்கன்னு....சொன்னார். வரிசையா அவர் சொன்னதை வெச்சுப் பாத்தா, நான் வெறும் பச்சைப்புல்லையும், பச்சைத்தண்ணியையும்தான் சாப்பிடவேண்டியிருக்கும்" 

"அப்ப உங்களுக்கு சக்கரை வியாதியா....அப்படீன்னா இனிமே நம்ம வீட்டுக்கு ஒரு கிலோ சக்கரை வாங்கினா போதுமில்ல. எங்களுக்கு மட்டுன்னா அரைக்கிலோவுக்கு பதிலா கால் கிலோ உருளைக்கிழங்கு போதும்...."

"அடியே ராட்சசி....புருஷனுக்கு சர்க்கரை வியாதி வந்துடிச்சேன்னு கொஞ்சம்கூட கவலப் படாம...ஒருகிலோ சர்க்கரைக்கும், கால் கிலோ உருளக்கிழங்குக்கும் சந்தோஷப்படறியா..."

"சரி விடுங்க வந்தத போன்னு வெரட்டவா முடியும். அதான் எல்லாருக்கும் வர்றதுதான்னு டாக்டரே சொல்லிட்டாரே. இனிமே வாயைக் கட்டுங்க. எங்களுக்கு தெரியாம ஆபீஸ் விட்டு வரும்போது கால் கிலோ பால் அல்வா வாங்கி சாப்பிடற வேலையெல்லாம் இனிமே வெச்சுக்காதீங்க. சரி வாங்க சூடா இட்லி செஞ்சு தரேன்..."

சொல்லிவிட்டு அடுக்களைக்குள் போன தர்மபத்தினியையே பார்த்துக்கொண்டிருந்த கணேசன், டாக்டர் சொன்ன கூடாதுகள்ல இட்லி இருக்கான்னு யோசிச்சிப் பாத்துட்டு, இல்லைன்னு தெரிஞ்சதும் ஆறுதலோட சாப்பிடப்போனார். 


ட்னிகூட கொலஸ்ட்ரால் என்று சொல்லி தடைவிதித்துவிட்டு வெறும் சாம்பாரில் மூன்றே மூன்று இட்லிகளை மட்டுமே சாப்பிட அனுமதித்த சரோவை மனசுக்குள் மானாவாரியாய் திட்டிக்கொண்டே தன் அலுவலகம் வந்து சேர்ந்த கணேசன் இருக்கையில் அமர்ந்ததும், சீனு அவரருகே வந்தார். சீனு கணேசனின் நெடுநாள் அலுவலகத் தோழர். ஆத்மார்த்த நண்பன்.

"என்னடா கணேசா..ஒரு சுஸ்த்தில்லாம இருக்க. வீட்ல சண்டையா?"

கேட்ட சீனுவிடம் மீண்டும் ஒருமுறை தனக்கு வந்த சர்க்கரையைப் பற்றி ஒரு பாட்டம் சொல்லி பெருமூச்சு விட்டார்.

"இனிமேத்தாண்டா ஜாக்கிரதையா இருக்கனும்.42 வயசாச்சு. டாக்டர் சொன்ன மாதிரி மாத்திரையை அவாய்ட் பண்றதுதான் நல்லது. இல்லன்னா வாழ்க்கைபூரா மாத்திரை சாப்பிட வேண்டியதுதான். அரிசி சாதம் அதிகம் சாப்பிடாத, ஸ்வீட் சுத்தமா கூடாது. பாவக்காய் ஜூஸ் சாப்பிடு, ஐஸ் கிரீம், மாம்பழம் இதெல்லாம் கூடவே கூடாது...."

சீனு சொல்வதைக் காது கேட்டுக்கொண்டிருந்தாலும், கணேசனின் மனது தன் வசந்தகாலங்களுக்கு ஒருமுறை போய்விட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை ஆனால் மட்டன் பிரியாணி,(சரோஜா தம் பிரியாணி செய்யறதுல எக்ஸ்பர்ட்) கூடவே ஒரு கப் நிறைய ஐஸ்கிரீம், தினமும், வேலை முடிந்து போகும்போது ஆரியபவனில் பால் அல்வா, கோதுமை அல்வா, ஹார்லிக்ஸ் பர்ஃபி என சாப்பிட்டது, சரோ சுட்டுப் போடப் போட...வரிசையாய் வெட்டிய தோசைகள்...அய்யோ இந்த ருசி கண்ட நாக்கை எப்படி அடக்கப்போறேனோ... பெருமாளே...உன் லட்டு கூட சாப்பிட முடியாம ஆயிடிச்சே...

நினைவுகளிலிருந்து வெளிவரும்போதே புலம்பலுடன்தான் வந்தார்.



ன்றைக்கு வீட்டுக்கு சரோவின் மாமா வந்திருந்தார். கணேசனும் அவரை மாமா என்றுதான் அழைப்பார். 

"மாமாவுக்கு காஃபி குடு சரோ அப்படியே எனக்கும் கொஞ்சம்..ஹி...ஹி...."

இந்த சாக்கிலாவது சர்க்கரை போட்ட காஃபி கிடைக்குமே என்ற நப்பாசையில் கணேசன் சொன்னாலும் சரோஜாவின் முறைப்பைப் பார்த்ததும் அந்த ஆசையை அப்படியே அடக்கிக்கொண்டார்.

திரும்ப வந்த சரோஜாவின் கையில் இரண்டு கோப்பைகளைப் பார்த்ததும், மீண்டும் அந்த ஆசை வந்துவிட்டது. தர்மபத்தினியை காதலோடு பார்த்துக்கொண்டே ஒரு கோப்பையை எடுக்க நீட்டியக் கையை சரோஜா தட்டிவிட்டு,

"இதான் உங்களுக்கு. இது மாமாவுக்கு..."

என்று சொன்னவளைப் பார்த்து மாமா,

"ஏம்மா சரோஜா...ரெண்டும் காப்பிதான...எத வேணுன்னா எடுத்துக்கட்டுமே...அதுக்கு ஏன் கையை தட்டி விடறே...."

"இல்ல மாமா...அவருக்கு ஷுகர் இருக்கு...அதான் அவருக்கு சக்கரையில்லாத காப்பி..."

என்னவோ எனக்கு 100 ஏக்கர்ல டீ எஸ்டேட் இருக்குன்னு சொல்ற மாதிரி எவ்ளோ சந்தோஷமா சொல்றா..என நினைத்துக்கொண்டே அந்த சர்க்கரையில்லாத காஃபியை கஷ்டத்தோடு எடுத்துக் குடிக்கத் தொடங்கினார் கணேசன்.

" என்னது....கணேசனுக்கு ஷுகரா...அடக்கடவுளே.."

சோபாவிலிருந்து துள்ளியெழுந்து கேட்ட மாமாவை பார்த்து,

"என்ன மாமா இதுக்குபோய் இப்படி பதட்டப் படறீங்க...இப்பதான் இது எல்லாருக்கும் வருதே...இன்ஃபேக்ட்...இத நம்ம தேசிய வியாதின்னுகூட..."

சரோஜாவின் முறைப்பைப் பார்த்ததும் பாதியில் விழுங்கிக்கொண்டார்.

"இல்ல கணேசா...இதை அவ்ளோ சாதாரணமா எடுத்துக்க முடியாது. இது சைலண்ட் கில்லர். இது வந்தா ப்ளட்ப்ரெஷரும் சேந்து வரும். ரெண்டும் அக்கா தங்கச்சிங்க மாதிரி."

ஆமா....வந்துட்டாரு...சொந்தங்கள சேத்து வெக்குறவரு....மனசுக்குள் திட்டிக்கொண்டே மாமாவின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்த கணேசனைப் பார்த்து,

"இங்க பாரு கணேசா...எதுக்கும் வருத்தப்படாத. கொஞ்சம் கண்ட்ரோலா இருந்தா போதும். நம்ம பார்வதி வீட்டுக்காரர்கூட அப்படித்தான். வாயைக் கட்டமுடியாம, ஷுகர் அதிகமாகி, ஒரு காலையே எடுக்க வேண்டியதாப் போச்சி..."

"அய்யய்யோ என்ன மாமா சொல்றீங்க....அப்ப இவர் காலையும் எடுத்துடுவாங்களா....அப்ப கடை கண்ணிக்கெல்லாம் நான் தான் போகனுமா.."

கணேசன் சரோஜாவை எரித்துவிடுவதைப்போலப் பார்த்தான். 

மாமாவும் சரோஜாவை வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டே தொடர்ந்தார்...

"அதனால ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. டெய்லி வாக் போகனும். அப்புறம் முக்கியமான விஷயம்...நம்ம சொந்தக்காரங்களுக்கு யாருக்கும் இந்த மேட்டர் தெரியக்கூடாது.."

"அது ஏன் மாமா...நான் என்னவோ கற்பழிப்பு கேஸ்ல ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவன் மாதிரி சொல்றீங்க"

"அட அதுக்கில்ல கணேசா....இப்ப நம்ம மக்களுக்கு நல்ல அவேர்னஸ் இருக்கு. இந்த வியாதி பரம்பரையா வர்றதுன்னும், அப்பாவுக்கோ அம்மாவுக்கோ இருந்தா பிள்ளைங்களுக்கும் வருங்கறதோ எல்லாருக்கும் தெரியும். ஸோ.....உனக்கு டயாபடீஸ் இருக்குன்னு தெரிஞ்சா உன் பொண்ணுக்கு மாப்பிள்ளை கிடைக்காது, உன் பையனுக்கும் பொண்ணு கொடுக்கமாட்டாங்க....அதான் சொன்னேன்"

மாமா பயமுறுத்திவிட்டுப் போன அன்று இரவு கணேசனின் கனவில், காலில்லாத கணேசனைப் பார்த்தான்,கக்கத்தில் கட்டையை ஊன்றிக்கொண்டு அசோகனைப் போல ‘போனால் போகட்டும் போடா....' என்று பாட்டு பாடிக்கொண்டே மலைமேல் அலைவதைப்போல, மகள் தலைவிரிகோலமாய் குளோசப்பில் வந்து, என் வாழ்க்கையை கெடுத்திட்டீங்களேப்பா...நான் கன்னியாவே கண்ணை மூட வேண்டியதுதானா என்றும், மகன் கையில் அருவாளைத் தூக்கிக்கொண்டு அவரை விரட்டுவதைப் போலவும் காட்சிகள் மாறி மாறி தோன்ற கட்டிலிலிருந்து கீழே விழுந்தார்.


ரண்டு நாட்களுக்குப் பிறகு அலுவலகம் வந்தவர், நேரே சீனுவிடம் சென்று,

"சீனு...எனக்கு இந்த ஷுகரைவிட...அதனால ஏற்படற பயம்தாண்டா கொல்லுது. இதுல ஆளாளுக்கு அட்வைஸ்ங்கற பேர்ல, எதையெதையோ சொல்லி மேல மேல பயமுறுத்துறாங்க..."

"ச்சே ச்சே....இதுக்கெல்லாம்போய் ஏண்டா பயப்படற...இப்பதான் நீ ரொம்ப கண்ட்ரோல்ல இருக்கல்ல....ஒண்ணும் ஆகாது. கவலப்படாத."

"இல்லடா சீனு..எனக்கு என்ன ஆச்சுன்னே தெரில...நேத்து ரொம்பநாளைக்கப்புறம் சரோவுக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்...ஹி..ஹி..."

'ம்...ம்...சொல்லு...சொல்லு..."

" அவளுக்கு ஒரே வெக்கம்...ஆனா பாரு... அசந்தர்ப்பமா அந்த சமயத்துல ஒரு கவிதை தோணுச்சி....

'என் முத்தம் இனிப்பது
உன்மேல் உள்ள அக்கறையால் மட்டுமல்ல
என் ரத்தத்தில் உள்ள சர்க்கரையாலும்தான்'

அப்படீன்னு அபத்தமா ஒரு கவிதை. இந்த ஷுகர் என்னை மனசளவுல இப்படி பாதிச்சிடிச்சேடா..."

நண்பனின் நிலையைப் பார்த்த சீனு, மெள்ள ஆதரவாக அவனது கைகளைப் பிடித்தபடி,

"சரி. இத்தனைநாள் நீ கண்ட்ரோலா இருந்திருக்க, தெனம் வாக்கிங் போயிருக்க...அப்ப நிச்சயமா ஷுகர் கொறைஞ்சிருக்கும் எதுக்கும் நாளைக்கு மறுபடியும் போய் இன்னொரு வாட்டி செக் பண்ணிப்பாரு. கண்டிப்பா கொறைஞ்சிருக்கும்."

"நிஜமாத்தான் சொல்றியாடா...நீ சொல்ற மாதிரியில்லாம, ஒருவேளை பார்டரை கிராஸ் பண்ணியிருந்தா...பாகிஸ்தான்காரன் சுடறமாதிரி இந்த ஷுகர் என்ன சுட்டுடாதே..."

"ஹா...ஹா...ஹா...நல்லா ஜோக்கடிக்கறே..."

"சீரியஸா சொல்றேண்டா..."

"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நீ போய் செக் பண்ணிப் பாரு"


டுத்தநாள் காலை எழுந்து குளித்துவிட்டு, வழியில் ஐந்துமுகப் பிள்ளையாரை தரிசனம் செய்து பிரசாதத்தை வாங்கி பையில் வைத்துக்கொண்டு டாக்டரைப் பார்க்கப்போனார்.

பரிசோதனை முடிந்து முடிவு தெரியும்வரை, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, ஏதோ மந்திரத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தவரை ஒரு நர்ஸம்மாவின் குரல் கலைத்தது.

"யாருங்க கணேசன்...டாக்டர் கூப்பிடறாரு"

வாழ்வா சாவா எனும் போராட்டத்தில் முடிவு தெரியப்போகும் நாளில் ஏற்படும் பதட்டத்தோடு அறைக்குள் சென்றவரை டாக்டரின் சிரித்தமுகம் வரவேற்றது.

"உக்காருங்க கணேசன். உங்க ஷுகர் ரொம்ப நார்மலா இருக்கு. இந்த வயசுல இவ்ளோ நார்மலா இருக்கறது நல்ல விஷயம். 85தான் இருக்கு."

கணேசனுக்கு குபீர் என்று ரத்தப்பாய்ச்சல் உடலெங்கும் சந்தோஷமாய் பரவியது.

"ரொம்ப நன்றிங்க டாக்டர். அப்ப நான் சர்க்கரை போட்ட காப்பி குடிக்கலாங்களா?"

'என்ன இப்படி கேக்கறீங்க அப்ப இவ்ளோநாள் நீங்க அப்படித்தான் குடிச்சீங்களா?"

"எப்பவும் இல்ல டாக்டர். பதினைஞ்சு நாளாத்தான் அப்படி. பதினைஞ்சு நாளைக்கு முன்னால டெஸ்ட் பண்ணிப் பாத்தப்ப 130 இருந்திச்சி...அதுலருந்துதான் டாக்டர்..."

"சான்ஸே இல்லையே...வெறும் வயித்தோடத்தானே போனீங்க?"

"ஆமாங்க டாக்டர்.பச்சைத்தண்ணிக்கூட குடிக்கல..."

"ஸ்ட்ரேஞ்ச்.....ரிசல்ட் தப்பா இருந்திருக்கும். எனிவே...நீங்க இப்ப பரிபூரண ஆரோக்கியமா இருக்கீங்க...பெஸ்ட் ஆஃப் லக்"

வெளியே வந்ததும் முதல் வேலையாய் பிரசாதத்தை எடுத்து சாப்பிட்டார். 

அப்போதுதான் அவருக்குத் தோன்றியது......அன்னைக்கும் இப்படித்தானே கோவில் பிரசாதம் வாங்கிக் கொண்டு போனேன்....இன்னைக்கு மாதிரி ரிசல்ட் தெரிஞ்சப்பறம் சாப்பிட்டிருந்தா...அன்னைக்கே நல்ல ரிசல்ட் கிடைச்சிருக்குமோ....அதுக்கு முன்னாடியே சாப்பிட்டுட்டேனே....அதான் பகவான் சோதிச்சிட்டார். என்று நினைத்துக்கொண்டே நடந்தவரின் வாயில் ஒரு பிடி கல்கண்டு பிரசாதம் கரைந்துகொண்டிருந்தது.