Monday, February 29, 2016

எல்லா வயதினருக்கும் பயன் தரும் பிராணாயாமம்! உடற்பயிற்சி!

'எல்லா வயதினருக்கும் பிராணாயாமம் ஏற்றது. அதில் ஆசனத்துடன் தியானமும் சேரும்போது, மூச்சும் மனமும் 'ரிலாக்ஸ்' ஆகும். மனதுக்கும் மூச்சுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மூச்சைக் கட்டுப்படுத்தும்போது, மனமும் கட்டுக்குள் வந்துவிடும். பிராணாயாமங்களில் பல வகைகள் உள்ளன.

அவரவர் உடல் பிரச்னைக்கு ஏற்ப, பிராணாயாமங்களைச் செய்ய வேண்டும். இதில் மிகவும் எளிமையானது வயிறு வரை செய்யும் பிராணாயாமம் தான்!. 'தினமும் பிராணாயாமம் செய்து வந்தால், சாதாரணமாக நாம் வெளிவிடும் மூச்சே, ஒருசில மாதங்களில் ஆழமான மூச்சாக மாறிவிடும்.

அதிக நேரம் மூச்சை உள்ளே இழுக்கும்போது, அதிக அளவு பிராண வாயு கிடைக்கிறது. அதிக நேரம் வெளியே விடும்போது, நம் உடலிலுள்ள மொத்த அசுத்தக் காற்றும் வெளியேறுகிறது. பிராண வாயுவுக்கு எரிக்கும் சக்தி உண்டு. மிக ஆழமாக மூச்சை இழுக்கும்போது ஆக்சிஜன், உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் அதிக அளவில் கிடைக்கிறது.

இது திசுக்களின் செயல்பாட்டை விரைவுபடுத்தி நச்சுக்களை அப்புறப்படுத்துகிறது. வயிறு உள்ளே போவதால், வயிற்றுப் பகுதி தசைகள் சுருங்கும். இந்தத் தசைப் பயிற்சியை, தினமும் செய்யும்போது வயிற்றுப் பகுதியின் தசை வலுப்பெறும். தொடர்ந்து செய்யும்போது, இவை இரண்டும் சேர்ந்து எடையைக் குறைத்துவிடும்.
'பிராணாயாமம்' பயிற்சி முறை!

முதுகை நேராக நிமிர்த்தியபடி அமர்ந்துகொள்ளவும். இடது கையை வயிற்றின் மேல் வைக்கவும். கண்களை மூடி, மூச்சில் கவனம் செலுத்தவும். நிதானமாக மூச்சை, எவ்வளவு நேரம் இழுக்க முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளே இழுக்கவும். தோள்களைத் தூக்கவோ, உடலை அசைக்கவோ வேண்டாம்.

சாதாரணமாக மூச்சுவிடுவதையே, சற்று நீளமாக்கினால் போதும். வயிற்றின் மேல் இருக்கும் கைகள், மேலெழும்புவதை உணரலாம். பிறகு, அதே நிதானத்துடன் எவ்வளவு நேரம் முடியுமோ, அவ்வளவு நேரம் மூச்சை வெளியேவிடவும்.

அதே சமயம், வயிறு நன்றாக உள்ளே சுருங்குமாறு பார்த்துக்கொள்ளவும். மறுபடியும் மூச்சை வெகு நேரம் உள்ளே இழுத்து, அதே நிதானத்துடன் வெளியேவிடவும். முதல் நாள், மூச்சை இழுக்க எத்தனை நொடி, வெளியேவிட எத்தனை நொடி ஆயிற்று என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டும்.

இதேபோல் ஒருவேளைக்கு 20 முறை செய்ய வேண்டும். அன்றாடம் காலை, மாலை என இரு வேளைகள் செய்யலாம். வெறும் வயிற்றில்தான் செய்ய வேண்டும். மூச்சை உள்ளே வைத்திருக்கவோ, மூக்கைப் பிடிக்கவோ தேவையில்லை. தினமும் செய்யும்போது, நாம் உள்ளிழுக்கும் நேரமும் வெளியேவிடும் நேரமும் சிறிது சிறிதாக அதிகரிப்பதை உணரலாம்.

http://pettagum.blogspot.in/2014/03/blog-post_8061.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Sunday, February 28, 2016

கணினியில் இருந்து கண்களைக் காக்க

கணினியில் இருந்து கண்களைக் காக்க

கணினி இன்று நம் வாழ்க்கையில் இணைந்த விஷயமாகி விட்டது. ஆனால் அதிக நேரம் கணினியில் செலவிடுவோர், கண்களில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான குறிப்புகள் இதோ...

1.
முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20 டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதேபோல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்களை வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தாதவண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

2.
அறையில் ஒளி அமைப்பு பல நேரம் நம் கண்களுக்குப் பலவகையில் சோதனைகளைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப்படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும்.

நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணிபுரிவீர்கள் என்று கூறவும். அப்போது மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியை வடிவமைப்பார்கள்.

3.
மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணிபுரிந்து கொண்டிருந்தால், அதிகபட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்குப் புத்துணர்வைத் தரும்.

பொதுவாக ஒரு நிமிடத்திற்கு நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறைதான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை கண் சிமிட்டவும்.

ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.

4.
கணினியில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள்.

இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண்களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.

5.
இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

6.
ஊட்டச்சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடலாம்

http://pettagum.blogspot.in/2014/01/blog-post_8997.html



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com



ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்

ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்


உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.

முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு
மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.

ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.

மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.

1
மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.

உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர்.http://pettagum.blogspot.in/2014/01/blog-post_8130.html




--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com



துணியை சுலபமாக துவைத்து சலவை செய்ய சில எளிய வழிகள்

துணியை சுலபமாக துவைத்து சலவை செய்ய சில எளிய வழிகள்

சலவை என்று சொல்லும் போது ஒற்றை எளிய வார்த்தையாகத் தான் இருக்கும். ஆனால் உங்கள் துணியை நீங்களே துவைத்து சலவை செய்யும் போது தான் அந்த ஒற்றை வார்த்தையில் இருக்கும் கஷ்டம் உங்களுக்கு தெரியும். துணியை ஊற வைத்தல், துவைத்தல், உலர்த்துதல், மீண்டும் அதனை பயன்படுத்துவதற்கு தயார் படுத்துதல் என இவை அனைத்துமே சலவையின் அங்கமாகும். உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், சலவை செய்யும் வேலை பளு அதிகரிப்பதோடு மட்டுமல்லாது பல விதமான கரைகளுக்கும் துணிகள் ஆளாகும். 

 

 உங்கள் துணிகளை தொழில் ரீதியான சலவைகாரர்களிடம் கொடுத்தும் கூட சலவை செய்யலாம். ஆனால் அதற்கு அதிக அளவில் செலவாகும். ஏன் நீங்களே எளிய முறைகளை பின்பற்றி சலவை செய்து, சலவை செலவுகளை குறைக்க கூடாது? கண்டிப்பாக இதற்கு சற்று நேரத்தை நீங்கள் செலவு செய்து தான் ஆக வேண்டும். ஆனால் வேலை முடிந்து விட்டால் உங்களை நினைத்து நீங்களே பெருமை அடைவீர்கள். மேலும் உங்கள் துணிகளும் கூட தூய்மையாகவும் நற்பதமாகவும் விளங்கும்.

 

துடைக்கும் துண்டு பளிச்சென்று மின்னுவதற்கு, இதோ சில எளிய வழிகள்!!!

 

 இந்த மிகப்பெரிய வேலையை செய்து முடிக்க பல வழிகள் இருக்கிறது. உங்கள் தேவைக்கு எது வசதியாக உள்ளதோ அந்த வழிமுறையை நீங்கள் உங்கள் அனுபவத்தில் தேர்ந்தெடுத்து விடலாம். நாங்கள் இங்கே உங்களுக்கு சொல்லப்போவது ஒன்றும் ராக்கெட் செய்யும் வித்தையல்ல. சொல்லப்போனால், எளிய முறையில் சிறப்பாக சலவை செய்ய சில அடிப்படை வழிகளே இவைகள். சிறப்பாக செயல்படாவிட்டால் எளிய முறையை பின்பற்றி பயந்தான் என்ன?

  

 வாஷிங் மெஷின் (சலவை இயந்திரம்) 

 

சலவை செய்ய சிறந்த வழிகளில் ஒன்றாக விளங்குகிறது வாஷிங் மெஷின். இது உங்கள் நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற டென்ஷன் மற்றும் மன உளைச்சலை நீக்கும். சந்தையில் பல வகையான வாஷிங் மெஷின் உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், டாப் லோட், ஃப்ரண்ட் லோட், ஆட்டோமாட்டிக் (தானியங்கி), செமி ஆட்டோமாட்டிக் (பகுதித் தானியங்கி), சிங்கிள் டப் மற்றும் ட்வின் டப். 

 

  

 லேபிலை படியுங்கள் 

 

 ஆடையை பராமரிக்க அதனுடன் சேர்ந்து வரும் பராமரிப்பு லேபிலை படிக்க தவற விடாதீர்கள். பொக்கிஷமான உங்கள் ஆடைகளை பற்றிய முக்கிய தகவல்களை அது வைத்திருக்கும். உங்கள் ஆடை நல்ல தரத்துடன் நீண்ட நாட்களுக்கு நீடிக்க வேண்டுமானால், அதில் துவைப்பதற்கு கொடுத்திருக்கும் அறிவுரையை கண்டிப்பாக பின்பற்றுங்கள். இல்லையென்றால் தவறான தண்ணீர் வெப்ப நிலை அல்லது தவறான சோப்பு தூளால் உங்கள் ஆடைகள் பாழாகி விடும். 

 

 வகைப்படுத்துங்கள் 

 

ஒரு முறை துவைக்கப் போகும் போது அதில் நிறம், துணி வகை மற்றும் பயன்பாட்டு வகை என பல வகையான ஆடைகள் கலந்திருக்கும். உங்கள் சலவையை சுலபமாக்க வேண்டுமானால் உங்கள் ஆடைகளை கண்டிப்பாக வகைப்படுத்த வேண்டும். வெண்ணிற ஆடைகளை பிற நிற ஆடைகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். முக்கியமாகவும் முதன்மையாகவும் கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸ் இது. அதே போல் மென்மையான ஆடைகளை எல்லாம் தனியாக துவைக்க வேண்டும். 

 

கறைகள் 

 

சில நேரங்களில், முக்கியமாக குழந்தைகள் இருக்கும் வீட்டில், கையாளுவதற்கு கடினமாக இருக்கும் கறைகள் உண்டாகும். உங்கள் சலவையை சுலபமாக்க, கரையை நீக்கும் பொருட்களின் பட்டியலை எப்போதும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இந்த பட்டியலில் அடிப்படியான பொருட்களாக வினீகர், பேக்கிங் சோடா அல்லது கறைகளை அகற்ற சந்தையில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சுத்தப்படுத்துவதற்கு தேவையான பிற பொருட்கள் கருதப்படுகிறது. கறைகளை நீக்க பல வலைத்தளங்கள் பல விதமான டிப்ஸ்களையும் அளித்து வருகிறது. 

 

டிடர்ஜெண்ட் 

 

திரவ வடிவில் இருக்கும் டிடர்ஜெண்டை பயன்படுத்துவது உங்கள் ஆடைகளுக்கு நல்லது. இதனால் ஆடைகளில் சோப்பு தூளின் எச்சம் தேங்குவதில்லை. சலவையை சிறந்த முறையில் செய்ய வேண்டுமானால், நீங்கள் எவ்வளவு ஆடைகளை துவைக்க போகிறீர்களோ அதற்கேற்ப அளவில் டிடர்ஜெண்டை பயன்படுத்துங்கள். டிடர்ஜெண்டை அதிகமாக பயன்படுத்தினால் கூடுதல் சுத்தம் கிடைக்கும் என்பதெல்லாம் உண்மையல்ல. 

 

உலர்த்தி இஸ்திரியிடுதல் 

 

ஆடைகளை வரிசையாக தொங்கப்போட்டு காய வைப்பதே சலவையில் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. இது உங்கள் ஆற்றலை திறனை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் ஆடைகளையும் நற்பதமாக வைக்கும். இதை செய்த பின்னரும் உங்கள் ஆடைகள் சுருக்கமாக இருந்தால், அவைகளுக்கு இஸ்திரி போடுங்கள். இந்த கட்டத்தில் நீராவி பயன்படுத்த தேவையில்லை என்பதால், இஸ்திரி போடுவதும் சுலமபாக இருக்கும். 

 

சிறிதளவு உழைப்பு மற்றும் மேற்கூறிய அடிப்படை வழிகளை பின்பற்றினால் துவைப்பதனால் ஏற்படும் உடல் மற்றும் மன உளைச்சலை தவிர்க்கலாம். சலவையை சுலபமாக்க உங்களுக்கு எது சுலபமாக உள்ளதோ அந்த வழிமுறைகளை பின்பற்றி பயனை அடையுங்கள்.

http://pettagum.blogspot.in/2014/01/blog-post_1538.html

H



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com



Saturday, February 27, 2016

கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!!

உடற்பயிற்சி என்பது எத்தனை அவசியம் என்று நமக்கு தெரியும். யோகா, நீச்சல், ஜாக்கிங் போன்ற விஷயங்களை செய்து உடலை சரியாக வைத்து கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே போல் கண்களுக்கும் சரியான உடற்பயிற்சி மிகவும் முக்கியம். ஏனெனில் உடற்பயிற்சியானது கண்களை ஆரோக்கியமாக வைத்து கண்களில் ஏற்படும் களைப்புகளை குறைக்கும்.

இந்த உடற்பயிற்சி இழந்த பார்வையை மீண்டும் கொண்டு வருவதற்கு அல்ல, கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருப்பதற்கு தான். சரி இப்போது கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கண்களுக்கு பயிற்சி செய்ய வேண்டிய முறைகள்:

1. ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து, உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டான பின் கண்களை மூடி, உள்ளங்கையால் கண்களை மூடிகொள்ளவும். அவ்வாறு செய்யும் போது கருவிழிகளின் மேல் அதிகம் அழுத்த வேண்டாம். மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும். முக்கியமாக கண்களை மூடும் போது இருட்டாக இருப்பதால், அந்த நேரம் பல மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத்து, மெதுவாக விட வேண்டும். இதை போல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை செய்தல் வேண்டும்.

2. கண்களை 3-5 விநாடிகள் இறுக்கமாக மூடிகொண்டும், பின் 3-5 விநாடிகள் திறந்தும் வைத்திருத்தல் வேண்டும். இதனை 7 அல்லது 8 முறை செய்யவும்.
3. கண் மசாஜ்:

   * வெப்பம் மற்றும் குளிர்ந்த நீர் மசாஜ்: குளிர்ந்த மற்றும் சூடான நீரில் துண்டை நினைத்து புருவம், மூடிய இமைகள், மற்றும் கன்னங்கள் மீது அழுத்தவும். இரண்டையும் மாற்றி மாற்றி செய்யவும். ஆனால் குளிர்ந்த நீரில் அழுத்துவதை கடைசியாக அமையும்படி செய்யவும்.

   * முழு முக மசாஜ்: சூடான நீரில் ஒரு துண்டை ஊற வைத்து, கண்களை தவிர, கழுத்து, தலை மற்றும் கன்னங்கள் என அனைத்து பகுதிகளிலும், தேய்த்தல் வேண்டும். பின்னர், விரல்களால் மெதுவாக நெற்றி மற்றும் மூடிய கண்களை மசாஜ் செய்யவும்.

  * கண்ணிமை மசாஜ்: கண்களை மூடி 1-2 நிமிடங்கள் விரல்களால் வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும். பின் கைகளை கழுவி சுத்தமாகவும், அதிகமாக அழுத்தாமல் சாதாரணமாக அழுத்துவது அவசியம்.

4. மெதுவாக மூன்று விரல்களால் இரண்டு கைகள் கொண்டு மேல் கண் இமைகள் மீது அழுத்தவும். பின்னர், 1-2 வினாடிகளில் அப்படியே அழுத்தியவாறு இருந்து பின் விடுவிக்கவும். இதை தொடர்ந்து 5 முறை செய்யவும்.

5. அமைதியாக உட்கார்ந்து, பின்னர் கண்களை இடஞ்சுழியாகவும் பின் வளஞ்சுழியாகவும் சுழற்ற வேண்டும். 5 முறை செய்யவும், அதன் இடையே ஒவ்வொரு முறையும் கண்களை சிமிட்டவும்.

6. 10-15 வினாடிகள் ஒரு தொலைதூர பொருளைப் (150 அடி அல்லது 50 மீட்டர் மேல்) பார்க்கவும். பின்னர், மெதுவாக கண்களை அருகில் உள்ள பொருள் மீது ( 30 அடி அல்லது 10 மீட்டர் தூரத்தில்) 10-15 வினாடிகள் நோக்கவும். மீண்டும் தொலைதூர பொருளை பார்க்கவும். இதனை 5 முறை செய்யவும்.

7. முழங்கை நீட்டி ஒரு பென்சில் வைத்து, மூக்கின் முன் மெதுவாக நகர்த்தி வரவும். கண்களை அந்த பென்சிலைப் பார்த்தபடியே நகர்த்துவதை கவனம் செலுத்தவும். இதனை 10 முறை செய்யவும்.

8. எதிரில் உள்ள சுவர் மீது நோக்கியபடியே உங்கள் கண்களால் எழுத முயற்சிக்கவும் அதுவும் தலையை நகர்த்தாமல் எழுத வேண்டும். இது முதலில் கஷ்டமாக இருக்கும் மீண்டும் மீண்டும் செய்தல், பின் பழகிவிடும்.

9. கண் அசைவுகளை கீழ், மேல் என செய்யவும். இதனை 8 முறை செய்தல் வேண்டும். பின்னர் இடது வலது என அசைக்கவும். இதையும் 8 முறை செய்தல் வேண்டும். கண்களை அதன் போக்கில் போகும் போது அதனை கட்டாயப்படுத்தி, நம் திசையில் பார்ப்பது தவறு. அப்படி செய்தல் பார்வை மோசமாகிவிடும்.

10. எப்போதும் கண் உடற்பயிற்சியை முடிக்கும் போது, உள்ளங்கையால் தடவி முடிப்பது நல்லது.

நீண்ட நேரம் தொடர்ந்து பயிற்சிகள் செய்வதை விட, தினமும் சிறிது நேரம் செய்தல் நல்லது. இந்த மாதிரியான பயிற்சிகள் குறிப்பாக கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோருக்கு சிறந்ததாக இருக்கும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Thursday, February 25, 2016

சொந்த வீடு : வசதிக்கேற்ப அமைக்கலாம் வாட்டர் டேங்க்! கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்... !

கடந்த சில வாரங்களாக நாம் பேசிவரும் மரவேலைகள், வண்ணம் பூசுவது, டைல்ஸ் ஒட்டுவது, வொயரிங், தண்ணீர் இணைப்பு என எல்லா வேலைகளும் கிட்டத்தட்ட ஒருசில நாட்களுக்குள், அதாவது ஒரே சமயத்தில் செய்துமுடிக்கவேண்டிய வேலைகள். இவற்றைத் தனித்தனியாகப் பேசவேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு வாரமாகக் கொடுத்து வருகிறோம். டைல்ஸ் ஒட்டியபிறகு மர வேலைகளைச் செய்வதோ, வண்ணம் பூசுவது, வொயரிங் வேலைகள் செய்வது என்பதோ அவரவர் வேலை தன்மையைப் பொறுத்தது.

தவிர, பூச்சு வேலைகள், கதவு ஜன்னல் வைத்தபிறகு வண்ணம் பூசுவது, வொயரிங் வேலைகளை முடித்துக்கொண்டு இறுதியாக டைல்ஸ் ஒட்டும் வேலைகளைச் செய்யலாம். ஒவ்வொரு வாரமாகக் கொடுத்துவருவதால் இதுதான் வரிசை என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். இதுபோல கீழ்நிலைத் தண்ணீர் தொட்டி அமைத்தபிறகு மேற்கண்ட வேலைகளைச் செய்துகொள்ளவும்.

நாம் கட்டிவரும் கனவு வீடு ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளது. இப்போது மிச்சமிருக்கும் வேலைகளாக வீட்டுக்கான மேல்நிலைத் தண்ணீர் தொட்டி அமைப்பது மற்றும் மேல்தள ஓடு ஒட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

மேல்நிலைத் தொட்டிகளைப் பொறுத்தவரை, மொட்டை மாடியில் அமைத்துக்கொள்வதுதானே... அதில் என்ன புதிதாக இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால், அதை எப்படி அமைக்கப்போகிறோம் என்பதில்தான் நமது நுட்பங்கள் உள்ளது. வீட்டில் எத்தனைபேர் வசிக்கப்போகிறோம், தினசரி தண்ணீர் தேவை எவ்வளவு என்பது குறித்துத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப தண்ணீர் தொட்டி அமைத்துக்கொள்ள வேண்டும்.

இதிலும் முக்கியமாக, தண்ணீர் தொட்டியின் கொள்ளளவும் அதன் எடையும் எவ்வளவு இருக்கலாம் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டி அமைப்பதில் கட்டடத்தோடு சேர்த்து காங்க்ரீட் தொட்டியாக அமைக்கப் போகிறோமா அல்லது ரெடிமேடாகக் கிடைக்கும் தொட்டிகளைப் பயன்படுத்தபோகிறோமா என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
காங்க்ரீட் தொட்டிதான் என்று முடிவானபின் அதை எப்படி எங்கே அமைப்பது என்பதையும் கவனிக்க வேண்டும். ஒருவேளை கட்டட பிளானில் குறிப்பிடப்படவில்லை என்றால் தன்னிச்சையாக இறங்க வேண்டாம்.
காங்க்ரீட் தொட்டிதான் என்றால், மேல்தளத்தில் தளமட்டத்தில் அமைப்பது அல்லது தாங்கு அமைப்புகள் ஏற்படுத்திக்கொண்டு அதன்மேல் அமைப்பது என இரண்டு வழிகள் உள்ளது.

காங்க்ரீட் தொட்டி என்று முடிவெடுத்துவிட்டோம் என்றால் தளத்தோடு ஒட்டாமல் இரண்டடி உயரம் தாங்கு கொடுத்து அதன்மீது அமைத்துக்கொள்ளலாம். 
குறைந்த பட்சம் இரண்டு அடி உயரம் காங்க்ரீட் தாங்குகள் கொடுத்து அதன்மீது சிறியதாக காங்க்ரீட் தளம் அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தளத்தின் மீதுதான் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும். 
தொட்டியின் உட்பக்க சுவரில் 3 இன்ச் அளவுக்குக் கம்பி வலை வைத்துப் பூசிக்கொள்வது கூடுதல் பாதுகாப்பு. மேலும், காங்க்ரீட் தொட்டியில் கசிவை சிறு துளைகளை அடைக்க இதற்கென்று உள்ள சிமென்ட் கலவையை வாங்கி உட்பக்கமாகப் பூசிக்கொள்ள வேண்டும். 
அதாவது, இந்த வேலைகள் அனைத்தும் வீட்டின் உள்வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போதே தொடர்ச்சியாக நடக்கவேண்டும்.

தவிர, இப்படி காங்க்ரீட் தொட்டி கட்டுவதைவிடத் தற்போது கொள்ளவுக்கு ஏற்ப பிளாஸ்டிக் தொட்டிகள் சந்தையில் கிடைக்கிறது. அவற்றை வாங்கியும் பயன்படுத்தலாம். 
இதற்கும் தாங்கு கொடுத்துதான் அமைக்கவேண்டும். காங்க்ரீட் தொட்டியில் தண்ணீர் சேமிப்பதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. மேலும், தரமான தொட்டிகள் 10 வருடங்களுக்கும் அதிகமாகவே உழைக்கும் திறன் கொண்டது. 1000 லிட்டர் கொள்ளளவுகொண்ட தொட்டிகள் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கிறது. இரண்டுக்குமான பட்ஜெட்டை பொறுத்தும் முடிவெடுக்கலாம்.  

மேல்நிலைத் தொட்டி தவிர, தரைதளத்தில் தண்ணீர் தொட்டி அமைப்பது அவசரகாலத்துக்கு உதவும். நிலத்தடி நீர் தவிர, குடிநீர் இணைப்புப் பெற்றிருந்தால் அந்தத் தண்ணீரை இதில் தேக்கி வைத்துக்கொள்ளலாம். இந்தக் கீழ்நிலை தொட்டியிலிருந்து மேல்நிலை தொட்டிக்கு நீரை ஏற்றுவதற்கு ஏற்ப மோட்டார் இணைப்பு தருவதும் முக்கியம்.
குடிநீர் இணைப்புகளைப் பொறுத்தவரை, வீட்டுக்கு உட்பக்கம் ஏற்கெனவே அமைத்திருக்கிறோம். 
வீட்டுக்கு வெளியில் ஒரு தண்ணீர் குழாய் இணைப்புத் தருவதும் முக்கியம். வீட்டில் மேற்கண்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கும் போதே மேல்தள வெளிப்பக்க வேலைகள் நடக்க வேண்டும். மேல்தள வேலைகளைப் பொறுத்தவரை, மேல்தளத்தில் பதிப்பதற்கு என்றே தனிப்பட்ட ஓடு வகைகள் உள்ளன. (weathering tiles)  இந்த ஓடுகளைப் பதித்துக்கொள்வது கட்டடத்துக்கு கூடுதல் பாதுகாப்பு.

இந்த ஓடுகளைப் பதிப்பதன் மூலம் மேல்தளத்தில் பாதுகாப்பும், வெயிலைக் கட்டுப்படுத்திக் கொடுக்கும் தன்மையும் இதற்கு உண்டு. இதுவும் கிட்டத்தட்ட டைல்ஸ் பதிப்பது போலத்தான். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம், ஓடு ஒட்டுவதில் இடைவெளிகள் இல்லாமல் இருக்க வேண்டும். தளம் சீராக இருப்பதும், மழைநீர் வெளியேற்ற குழாய் அமைந்துள்ள இடங்களில் சற்று சரிவாகவும் அமைத்துக்கொள்ளலாம்
http://pettagum.blogspot.in/2014/03/blog-post_5426.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Tuesday, February 23, 2016

கிட்னி தினம் கவனி!

 நமது உடலின் துப்புரவுத் தொழிற்சாலை சிறுநீரகங்கள். இடுப்புப் பகுதியில் பீன்ஸ் விதை போன்ற தோற்றத்தில் அமைந்திருக்கும், கையடக்க அளவே கொண்ட சிறுநீரகங்கள் செய்யும் பணி மகத்தானது.
நம் உடலுக்குள் பல்வேறு வேலைகள் நடக்கின்றன. நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆனதும், அது சத்துக்களாகக் கிரகிக்கப்படுகிறது. இந்தச் சத்துக்கள் உடைக்கப்பட்டு உடலுக்குத் தேவையான விதத்தில் மாற்றப்படுகின்றன. இப்படி புரதம் உடைக்கப்படும்போது அமோனியா உருவாகிறது. இதை அப்படியே விட்டால் உயிரிழப்பு ஏற்படும். எனவே, அமோனியாவைச் சிதைத்து யூரியாவாக மாற்றி அதை ரத்தத்தில் சேர்க்கிறது, கல்லீரல். சிறுநீரகம் இதைப் பிரித்து சிறுநீராக வெளியேற்றுகிறது.

நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு திசுவுக்கும் ஆற்றல் அளிக்கவும், தன்னைத்தானே பராமரித்துக்கொள்ளவும் உணவு தேவைப்படுகிறது. ரத்தத்தில் இருந்து உணவைப் பெறும் திசுக்கள், கழிவுகளை ரத்தத்தில் கலந்துவிடுகின்றன. இவற்றைப் பிரித்து வெளியேற்றாவிட்டால் நம் உடல் பாதிக்கப்படும். கழிவுகளை அகற்றும் மிக முக்கியமான பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரகத்தினுள் நெப்ரான் என்ற நுண்ணிய வடிகட்டிகள் உள்ளன. ஒரு சிறுநீரகத்தில் 10 லட்சம் நெப்ரான்கள் உள்ளன. இந்த நுண்ணிய வடிகட்டிகள்தான் நம்முடைய ரத்தத்தில் உள்ள அணுக்கள் மற்றும் தேவையான அளவு புரதம் உள்ளிட்ட ஊட்டச் சத்துகளை அனுமதித்து, அளவுக்கு அதிகமானவற்றைப் பிரித்து வெளியேற்றுகின்றன.
கழிவுகளை அகற்றி, உடலில் சத்துகள், நீரின் அளவைப் பராமரிப்பதைத் தவிர்த்து மேலும் சில வேலைகளையும் சிறுநீரகம் செய்கிறது. இதில் முக்கியமானது ஈ.பி.ஓ. என்ற ஹார்மோன் சுரப்பதாகும். இந்த ஹார்மோன்தான் எலும்பு மஜ்ஜையில் ரத்த செல்கள் உற்பத்தியைத் தூண்டுகிறது. ரினின் என்ற ஹார்மோன் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. கால்சிட்ரோல் (calcitriol), எலும்பில் கால்சியம் அளவைப் பராமரிக்கவும், உடலின் ரசாயன சமன்நிலையைப் பராமரிக்கவும் உதவுகிறது.
சிறுநீரகங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், அதைத் தவிர்க்கும் வழிகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டோம்.

சிறுநீரகக் கற்கள்
டாக்டர் விஜயகுமார், சிறுநீரகவியல் மருத்துவர்
சிறுநீரகத்தில் படியும் கடினமான தாது உப்புப் படிவங்கள் சிறுநீரகக் கற்களாக மாறுகின்றன. ஆரம்பத்தில் சிறியதாக ஆரம்பிக்கும் இந்தப் படிவம் நாளடைவில் பெரிய கல்லாக உருவெடுக்கிறது. சிறுநீரகம் ரத்தத்தில் இருந்து கழிவைப் பிரித்து வெளியேற்றும்போது கழிவுகள் முழுமையாக வெளியேறவில்லை என்றால் படிவங்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள் தோன்றும் வாய்ப்பு அதிகரிக்கிறது. சிறுநீரகக் கற்கள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இது பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே அதிக அளவில் தோன்றுகிறது.

காரணம்
சிறுநீரகத்தில் கல் தோன்றுவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், சிறுநீரகப் பாதையில் நோய்த் தொற்று, போதுமான அளவு நீர் அருந்தாமை, சிறுநீரகப் பாதையில் அடைப்பு, உணவில் அதிகப்படியான உப்பு, மசாலாப் பொருட்களைச் சேர்த்துக்கொள்வது போன்ற பல்வேறு காரணங்களால் சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
சிறுநீரகத்தில் கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும்போது சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

சிறுநீரகக் கற்கள் வகை

 கால்சியம் கற்கள்
சிறுநீரகத்தில் தோன்றும் பெரும்பான்மையான கற்கள் கால்சியம் கற்கள்தான். இது கால்சியம் ஆக்சலேட் என்ற வடிவத்தில் இருக்கிறது. ஆக்சலேட் என்பது சில வகையான காய்கறி, பழங்கள், சாக்லேட் போன்ற உணவுப் பொருட்களில் காணப்படுகிறது. இது தவிர, நம்முடைய கல்லீரலும் ஆக்சலேட்டை உற்பத்தி செய்கிறது. செரிமானப் பிரச்னை, சில மெட்டபாலிக் குறைபாடுகள் காரணமாக சிறுநீரில் கால்சியம் அல்லது ஆக்சலேட் அளவு அதிகரிக்கிறது. இதனால் கால்சியம் கற்கள் உருவாகின்றன.

 ஸ்ரூவைட் கற்கள்  (Struvite stones)
நோய்த் தொற்று, சிறுநீர்ப் பாதையில் நோய்த் தொற்று காரணமாக இந்தக் கற்கள் தோன்றும். இந்த வகையான கற்கள் மிக விரைவிலேயே பெரிதாகும்.

 யூரிக் ஆசிட் கற்கள்
எக்ஸ்ரேவில் தெரியாது. புரதச் சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்பவர்களுக்கும், போதுமான அளவு நீர் அருந்தாதவர்களுக்கும் இந்தக் கல் உருவாகிறது. கீல் வாதப் பிரச்னை உள்ளவர்களுக்கு யூரிக் ஆசிட் கல் உருவாகலாம்.

 சிஸ்டின் கற்கள்
மரபியல் ரீதியாகத் தோன்றக்கூடியது.

 அறிகுறிகள்
  சிறுநீரகக் கற்கள் இருந்தால் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தென்படாது. அது பெரிதாகி நகரும்போது அல்லது சிறுநீர் வெளியேறும் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போது வலி ஏற்படும். சிறுநீரகக் கல்லின் அளவுக்கும், வலிக்கும் தொடர்பு இல்லை. கல் உருவாகிவிட்டால் ஒருவருக்கு கீழ் முதுகு அல்லது வயிறும் இடுப்பும் சேரும் இடத்தில் வலி இருக்கலாம்.
  அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும்.
  முதுகுப் பகுதியில் பக்கவாட்டில், பின்பகுதியில் கடுமையான வலி இருக்கும்.
  கீழ் வயிற்றுப் பகுதி மற்றும் இடுப்புப் பகுதியில் வலி பரவும்.
  சிறுநீர் கழிக்கும்போது தாங்க முடியாத வலி இருக்கும்.
  சிறுநீர் சிவப்பு, பிங்க் அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும்.
  சிறுநீரில் நாற்றம் இருக்கும்.
  குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படலாம்.
  நோய்த் தொற்று காரணமாக கல் ஏற்பட்டிருந்தால் காய்ச்சல் அல்லது குளிர் காய்ச்சல் போன்றவை ஏற்படும்.

  எப்படிக் கண்டறியலாம்?
கவலைப்படும்படியான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
பாதிப்பினால் ஏற்படும் வலி மற்றும் வாழ்க்கை முறை பற்றி விசாரிக்கும் மருத்துவர், அதைத் தொடர்ந்து பரிசோதனைகள் செய்து சிறுநீரகக் கற்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவார். இந்தப் பரிசோதனையின் மூலம் கல் இருந்தால் அது எந்த இடத்தில் இருக்கிறது, அதன் அளவு என்ன, எந்த வகையான கல் என்பது கண்டறியப்படும்.

 எக்ஸ்ரே கே.யு.பி
பொதுவாகத் தோன்றக்கூடிய 75 சதவிகிதக் கற்கள் எக்ஸ்ரே ஊடுருவ முடியாததாக உள்ளது. இதனால் எக்ஸ்ரே கதிர்வீச்சைச் செலுத்துவதன் மூலம் இதை எளிதாகக் கண்டறியலாம்.

 அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை
25 சதவிகிதக் கற்கள் எக்ஸ்ரே ஊடுருவக்கூடியதாகவும், ஒலி அலைகளைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளன. எனவே, அல்ட்ரா சவுண்ட் ஒலி அலையைச் செலுத்தி கற்களைக் கண்டறியலாம்.
இன்ட்ராவீனஸ் பைலோகிராம் (ஐ.வி.பி): ரத்தக் குழாயில் டை செலுத்திய பிறகு எக்ஸ்ரே கதிர்வீச்சைச் செலுத்தி சிறுநீரகக் கல் கண்டறியப்படுகிறது.

 சி.டி.ஸ்கேன்:
வயிற்றுப் பகுதியில் சி.டி.ஸ்கேன் செய்து சிறுநீரகத்தைப் பரிசோதிப்பதன் மூலம் சிறுநீரகக் கல் எங்கே உள்ளது, அதன் அளவு என்ன என்பதை மிகத் துல்லியமாகக் கண்டறியலாம்.

 சிகிச்சை
சிறுநீரகக் கல்லின் அளவு மற்றும் அதன் தன்மையைப் பொறுத்து ஒவ்வொருவருக்குமான சிகிச்சை முறை மாறுபடும். சிறிய கல்லாக இருந்து, அறிகுறிகள் தென்பட்டால் அதற்கு துளையிட்டு கல்லை அகற்றும் சிகிச்சை எல்லாம் தேவைப்படாது. சிறிய கற்களை சிறுநீரிலேயே வெளியேற்றிவிட முடியும்.

 நீர் அருந்துவது
நாள் ஒன்றுக்குக் குறைந்தது இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது சிறுநீரகத்தைத் தூய்மைப்படுத்தி, கல்லை வெளியேற்ற உதவும். டாக்டரே தண்ணீர் அருந்த வேண்டாம் என்று கூறாதவரை, தாராளமாகத் தண்ணீரை அருந்தவேண்டும். சிறுநீர் தெளிவானதாக வெளியேறும் அளவுக்கு தண்ணீர் அருந்துவது நல்லது. அதிக அளவில் நீர் அருந்துவது, திரவ உணவை எடுத்துக்கொள்வது போன்றவை கல்லை வெளியேற்றும் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.

இப்படிச் செய்யும்போது பெரும்பாலான சிறிய கற்கள் தானாகவே சில மணி நேரங்களுக்குள் அல்லது சில நாட்களில் வெளியேறிவிடும்!

 மருந்து மாத்திரை
சிறிய கற்களை வெளியேற்ற சில மாத்திரை மருந்துகளை டாக்டர் பரிந்துரைக்கலாம். இது நம் சிறுநீரகக் குழாய்களில் தற்காலிகத் தளர்வை ஏற்படுத்தி கல் வெளியேறுவதை எளிமையாக்கும். சிலருக்கு சிறிய கற்கள் வலியை ஏற்படுத்தலாம். வலியை மறக்க டாக்டர் மருந்துகளை அளிப்பார். எந்தக் காரணத்துக்காகவும் சுயமாக மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்ளகூடாது.

 பெரிய கற்கள்
கல்லின் அளவு, தன்மையைப் பொருத்து டாக்டர் என்ன மாதிரியான சிகிச்சையைப் பெறலாம் என்று பரிந்துரைப்பார். கல்லின் அடிப்படையில் பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. அவை,

 எக்ஸ்ட்ராகார்போரியல் ஷாக் வேவ் லித்தோடிரிப்ஸி (ESWL)
வெளிப்புறத்தில் இருந்து ஒலி அலை செலுத்தி கல் உடைக்கப்படுகிறது. 1 முதல் 1 1/2 செ.மீ. அளவுக்கு மேல் கல் இருந்தால் இந்த முறையைப் பயன்படுத்தி கல் உடைக்கப்படும். ஒலி அலையானது சிறுநீரகக் கல்லின் மீது ஒருவித அதிர்வை ஏற்படுத்தி, சிறுசிறு துண்டுகளாக உடைக்கும். இப்படிச் செய்யும்போது தாங்க முடியாத வலிகூட ஏற்படலாம். எனவே, அந்த நேரத்தில் மயக்க மருந்து எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படும். கல் உடைந்து வெளியேறுவதால் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறலாம்.

 பெர்கியூட்டேனிஸ் நெப்ரோலித்தோட்டமி (பி.சி.என்.எல்.)
இந்த முறையில் 2.5 செ.மீ. அளவுள்ள கல்லைக் கூட உடைத்து வெளியே எடுக்கலாம். இந்த முறையில், விலா எலும்புப் பகுதியில் சிறிய துளை இட்டு நெப்ரோஸ்கோப்பி கருவி செலுத்தப்படும். இந்தக் கருவி சிறுநீரகத்தில் துளையிட்டு கல்லை அடையும். இந்த கருவியுடன் உள்ளே செலுத்தப்படும் கேமரா இந்தச் செயல்பாடுகள் அனைத்தையும் வெளியே காண்பிக்கும். கல்லை நெருங்கியதும் அது லேசர் கதிர்வீச்சால் உடைக்கப்பட்டு வெளியே உறிஞ்சப்படும்.
முந்தைய அறுவைசிகிச்சை முறைகளைக் காட்டிலும் மேலானது; வெற்றிகரமானது; பாதுகாப்பானது. இந்த முறையில் ரத்தக்கசிவுக்கு வாய்ப்பு இல்லை.
இந்த முறையில் மூன்று முதல் நான்கு நாட்கள் மருத்துவமனையில் தங்கவேண்டி இருந்தது.

 யுரிட்ரோஸ்கோப்பி (யு.ஆர்.எஸ்.)
உறுதியான வளைந்துகொடுக்கக்கூடிய ஸ்கோப்பியானது சிறுநீர் வெளியேறும் வழியாக உள்ளே செலுத்தப்பட்டு கல் இருக்கும் இடத்தை அடையும். கல்லை அடைந்ததும் லேசர் கதிர்வீச்சைச் செலுத்தி கல் உடைக்கப்பட்டு வெளியே எடுக்கப்படும். இந்தக் கருவியைப் பயன்படுத்தி ஒரு செ.மீ. அளவுள்ள கல்லைக்கூட எடுக்க முடியும். ஆனால், சிறுநீர்ப் பை மற்றும் சிறுநீர்ப் பையில் இருந்து சிறுநீர் வெளியேறும் குழாயில் கல் இருந்தால் மட்டுமே இந்த முறையில் கல் எடுக்க முடியும். சிறுநீரகத்தில் இருக்கும் கல்லை இந்த முறையால் எடுக்க முடியாது!

 ரிட்ரோகிரேட் இன்டர்னல் ரிஸ்ட்ரோஸ்கோப்பி (ஆர்.ஐ.ஆர்.எஸ்.)
வளையக்கூடிய யு.ஆர்.எஸ். என்ற ஃபைபரால் ஆன மெல்லிய டெலஸ்கோப் பைப், பிறப்புறுப்பு வழியாக உள்ளே செலுத்தப்படுகிறது. இந்த பைப் சிறுநீர்ப் பையைத் தாண்டி சிறுநீரகம் வரை செல்லும். இதன், உள் முனையில் வெளிச்சத்துக்கு சிறிய லைட் பொருத்தப்பட்டிருக்கும். அதை வெளியே இருந்து இயக்கும்போது உள்ளே சிறுநீரகத்தில் உள்ள காட்சிகள் வெளியே திரையில் தெரியும்.
அதைக்கொண்டு கல் எங்கே உள்ளது என்று தெரிந்துகொள்ள முடியும். சிறிய கல்லாக இருப்பின், இந்த மெல்லிய குழாயில் இருக்கும் கூடையை வைத்து வெளியே எடுத்துவந்துவிடலாம். பெரிய கல்லாக இருந்தால், அதை லேசர் கொண்டுதான் உடைத்து வெளியே எடுக்க முடியும்.

   சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க
  ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்ற ரை லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். இது சிறுநீரகக் கல் உருவாவதை மட்டுமல்ல, சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றுக்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
 குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து சிறுநீரகச் செயல்பாட்டை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
 ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
 வலி நிவாரணி மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய மாத்திரைகள் சிறுநீரகத்தைப் பாதிக்கும்.
 வயிற்றுப்போக்கு, வாந்தி என நீர் இழப்பு ஏற்பட்டால் உடனடியாகப் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுதல் அவசியம். நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
 நீராகாரம், சிட்ரஸ் பழங்களின் அளவை அதிகரிக்கவேண்டும்.
 இறைச்சி, உப்பு, சாக்லெட், உலர் பழங்களில் அதிக அளவில் ஆக்சலேட் இருக்கும். இத்தகைய உணவுப் பொருள்களைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.

  சிறுநீரகக் கல் வந்துவிட்டால்...

உணவில் உப்பு, காரம், மசாலா குறைக்க வேண்டும். பழச்சாறு, இளநீர், வாழைத்தண்டை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை, சிறுநீர் கழிப்பைத் துண்டும். இதனால் சிறு சிறு கற்கள் எல்லாம் வெளியேறிவிடும். எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களின் சாறைக் குடிப்பதன்மூலம் சிறுநீரில் அமிலத்தன்மை குறைந்து கல் உருவாவது தடுக்கப்படும். ஒருமுறை கல் உருவானவர்களுக்கும் மீண்டும் மீண்டும் கல் உருவாக 50 சதவிகித வாய்ப்பு உள்ளது. எனவே, இவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

 கல் இருப்பவர்களுக்கு...

கால்சியம் கல் உள்ளவர்கள், பூசணிக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆக்சலேட் கல் இருப்பவர்கள், எல்லாக் காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். சோயா மற்றும் கோகோ, சாக்லெட், பிளாக் டீ போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பசலைக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.

சிறுநீரகச் செயல் இழப்பு
டாக்டர் எம்.ஜி.சேகர், சிறுநீரக மருத்துவர், சென்னை
சிறுநீரகங்கள் நம் ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்ற முடியாத நிலையை 'சிறுநீரகச் செயல் இழப்பு' என்கிறோம். நம்முடைய சிறுநீரகங்கள் கழிவுகளை வடிகட்டி, வெளியேற்றும் திறனை இழக்கும்போது, ரத்தத்தில் கழிவுகள் தேங்குகின்றன. கேடு விளைவுக்கும் நச்சுக்களின் அளவு அதிகரிக்கும்போது அது உயிரிழப்பைக்கூட ஏற்படுத்தலாம்.

சிறுநீரகங்கள் செயல் இழப்பு கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது திடீரென்றோ கூட ஏற்படலாம். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் காரணமாகச் சிறுநீரகத்தின் பணித்திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். இதை 'நாள்பட்ட சிறுநீரக நோய்' என்போம்.
சில வேளைகளில், எதிர்பாராத விதமாகச் சிறுநீரகத்தின் பணி இரண்டு நாட்களுக்குள்ளாக நின்றுவிடும். இதை 'உடனடி சிறுநீரகச் செயல் இழப்பு' என்கிறோம்.

விபத்தில் ரத்த இழப்பு, சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு, சுய மருத்துவம், சிறுநீர்ப் பாதையில் அடைப்பு, மாரடைப்பு ஆகியவையே உடனடி சிறுநீரகச் செயல் இழப்புக்குக் காரணம். ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுதல், தீக்காயம், அதிகப்படியான நீர் இழப்பு, காயம் போன்ற காரணங்களால் ரத்த அழுத்தம் குறைந்து சிறுநீரகத்துக்கு ரத்தம் செல்வது குறையும் அல்லது தடைபட்டுப்போகும். சில சமயம், நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியே நம் உடல் உறுப்பைத் தாக்கும் போதும் (ஆட்டோ இம்யூன்) சிறுநீரகத்துக்கு ரத்தம் செல்வதில் பிரச்னை ஏற்படும். விந்துச் சுரப்பியில் வீக்கம், சிறுநீர்ப்பாதையில் கல் அல்லது கட்டியினால் அடைப்பு ஏற்படுவது போன்ற காரணங்களாலும் உடனடி சிறுநீரகச் செயல் இழப்பு ஏற்படலாம்.

  அறிகுறிகள்
 சிறுநீர் அளவு குறைதல், திடீரென்று இயல்பு நிலைக்குத் திரும்புதல்
  நீர் வெளியேறாததால் கால், மூட்டு, பாதத்தில் நீர்கோத்தல்
  மயக்கம்
 மூச்சு விடுவதில் சிரமம்
  கவனச் சிதறல்
 குழப்பம்
 சோர்வு
 குமட்டல் மற்றும் வாந்தி
 கடுமையான வயிற்றுவலி
 வயிற்றுப் போக்கு
 நெஞ்சு வலி
அறிகுறிகளைப் புறக்கணிக்கும்போது அது கோமா நிலைக்குக்கூட கொண்டுசெல்லலாம்.

பரிசோதனை
மேலே சொன்ன அறிகுறிகள் தோன்றினால் தாமதிக்காமல் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். அவர் ரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்து அவற்றில் உள்ள யூரியா, க்ரியாடின், எலக்ட்ரோலைட், பொட்டாசியம், சோடியம், குளோரைட் ஆகியவற்றின் அளவுகளை ஆராய்ந்து, சிறுநீரகச் செயல் இழப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவார். சிறுநீர்ப்பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்ற பரிசோதனை செய்வார்கள்.

நாள்பட்ட சிறுநீரக நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால், அதன் தாக்கத்தைப் பொருத்து, நோயின் வேகத்தைக் குறைக்கலாம். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரிய சிகிச்சைகளைத் தொடங்க வேண்டும். உடனடியாக சிறுநீரகத்தின் பணிகளை மீண்டும் செய்யத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும். உடலின் நீர் அளவு சமநிலைப்படுத்தப்படும். சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவும் சரி செய்யப்படும். இதுபோன்ற சிகிச்சைகளுக்குப் பிறகும் சிறுநீரகம் தன்னுடைய பணியைச் சரியாகச் செய்யவில்லை என்றால், அவர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் உடனடியாக வெளியேற்றப்படும்.

  தடுக்கலாம்
சிறுநீரகச் செயல் இழப்பைத் தவிர்க்க மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். வலி நிவாரணிகள், சுய மருத்துவம் கூடாது. சீரான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். புகைத்தலை நிறுத்த வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து உடல் நிலையைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
  

  சர்க்கரை நோயும் சிறுநீரகமும்...
சர்க்கரை நோய் தாக்கும் உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தத் தவறும்போது, அவர்களின் சிறுநீரகங்களில் உள்ள நெப்ரான்கள் தடிமனாகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டி அகற்றும் அதன் திறன் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும். இதனால், நெப்ரானில் கசிவுகள் ஏற்படுகின்றன. அல்புமின் அதிக அளவில் சிறுநீரில் கலந்து வெளியேறுகிறது.

பிரச்னையை ஆரம்பநிலையிலேயே கண்டறிவதன் மூலம், பாதிப்பின் வேகத்தைக் குறைக்கலாம். அதிக அளவில் புரதம் வெளியேறினால் சிறுநீரகம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். இன்சுலின் மற்றும் இதர பரிந்துரைக்கப்பட்ட மாத்திரை, மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வப்«பாது ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதித்து கட்டுக்குள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

  உயர் ரத்த அழுத்தமும் சிறுநீரகமும்...
சிறுநீரகங்களின் செயல்பாடானது அதற்கு ரத்தத்தைக் கொண்டுவந்து சேர்க்கும் ரத்தக் குழாயின் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உயர் ரத்த அழுத்தமானது சிறுநீரகங்களுக்குச் செல்லும் ரத்தக் குழாயைப் பாதிக்கிறது. சர்க்கரை நோயோடு, உயர் ரத்த அழுத்தமும் சேரும்போது நிலைமை இன்னும் சிக்கலாகிவிடுகிறது.

  சிறுநீரகச் செயல் இழப்பு: உயர் ரத்த அழுத்தத்தின் மிக மோசமான விளைவுகளுள் ஒன்று சிறுநீரகச் செயல் இழப்பு. உயர் ரத்த அழுத்தமானது சிறுநீரகத்தின் திறனைப் பாதித்து உடலில் நச்சுக்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலைக்கு முற்றிவிடுகிறது.

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று
டாக்டர் வீரமணி, சிறுநீரகவியல் மருத்துவர், சென்னை
பெண்களை அதிக அளவில் தாக்கும் சிறுநீரகப் பிரச்னை சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று. இது சிறுநீரகம், சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப் பை வரையுள்ள குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் வெளியேறும் பாதை என எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

நம்முடைய சிறுநீரக மண்டலம் பாக்டீரியா போன்ற கிருமிகள் உள்ளே நுழைந்தாலும், அதை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தத் தற்காப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்படும்போது கிருமித் தொற்று ஏற்படுகிறது.
பொதுவாக ஈ-கோலை பாக்டீரியாவால் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று ஏற்படுகிறது. இந்தக் கிருமி நம்முடைய குடலில் இருக்கக் கூடியது. மலம் கழிக்கும்போது இந்தக் கிருமி வெளியேற்றப்படுகிறது. பெண்களுக்கு அவர்கள் உடல் அமைப்பு காரணமாக இந்தக் கிருமித் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகமிக அதிகமாக உள்ளது. உடல் உறவின்  மூலமும் இந்தக் கிருமித் தொற்று ஏற்படுகிறது.

  பொதுவான அறிகுறிகள்:
 சிறுநீர் கழிக்கும்போது கடுமையான வலி
 சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்
 சிறிய அளவு சிறுநீர் கழித்தல். அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
 சிறுநீர் மங்கலாக இருப்பது
 சில சமயங்களில் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல்
 சிறுநீரில் நாற்றம்
 பெண்களுக்கு இடுப்பு வலி
 ஆண்களுக்கு மலக்குடல் சார்ந்த வலி
 காய்ச்சல்
 சிறுநீரகத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டால், மேல் முதுகு மற்றும் பக்கவாட்டில் வலி இருக்கும். கடுமையான காய்ச்சல் இருக்கும். வாந்தி, குமட்டல் இருக்கலாம்.
 சிறுநீர்ப் பையில் நோய்த் தொற்று ஏற்பட்டால் இடுப்புப் பகுதியில் அழுத்தம், கீழ் வயிற்றுப் பகுதியில் அசௌகரியம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும்போது கடுமையான வலி, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் போன்றவை இருக்கும்.

  பரிசோதனை
இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

  சிறுநீர் பரிசோதனை:
சிறுநீர்ப் பாதையில் நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் சிறுநீர் பரிசோதனைக்கு (யூரின் கல்சர்) பரிந்துரைக்கப்படும். இந்தப் பரிசோதனையில், சிறுநீரில் ரத்த சிவப்பு அணு, வெள்ளை அணு அல்லது பாக்டீரியா கிருமி உள்ளதா என்று பரிசோதிக்கப்படும். இதன் அடிப்படையில் பாக்டீரியா எவ்வளவு உள்ளது என்று கண்டறியப்பட்டு அதற்கு ஏற்ப ஆன்டிபயாடிக் மருந்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். டாக்டர் எவ்வளவு காலத்துக்கு மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறாரோ அதுவரை கட்டாயம் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

  சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றைத் தவிர்க்க...
போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வை ஏற்படுத்தும். இதனால், சிறுநீர்ப் பாதையில் உள்ள பாக்டீரியா அடித்துச் செல்லப்படும்.

பெண்கள் காலைக்கடன் முடித்தபிறகு மிகுந்த கவனத்துடன் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் ஆசனவாயில் இருந்து கிருமி, பெண்ணின் பிறப்பு உறுப்புக்குள் நுழைவது தடுக்கப்படும்.

உடலுறவில் ஈடுபட்டதும், சிறுநீர் கழித்துவிட வேண்டும். இதனால், பாக்டீரியா தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

சிறுநீரகத்தைக் காக்க...
    
டாக்டர் செழியன், சிறுநீரகவியல் மருத்துவர், சென்னை
சிறுநீரகப் பிரச்னை ஆரம்பத்திலேயே தெரியாது. பிரச்னை முற்றிய நிலையில்தான் அதன் அறிகுறிகள் தெரியவரும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிட்டால், அது சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கையையே மாற்றிவிடும். ஆனால், சிறுநீரகத்தைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. இது எளிதானதும்கூட. சிறுநீரகத்தைப் பாதுகாக்க ஏழு முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும்.

  ரத்த அழுத்தத்தைக் கண்காணியுங்கள்
உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம். சராசரி ரத்த அழுத்தம் என்பது 120/80 மில்லி மீட்டர் மெர்க்குரி (mmHg) என்று இருக்க வேண்டும். வாழ்க்கைமுறை மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ரத்த அழுத்தம் 140/90 அல்லது அதற்கு மேலே இருந்தால், டாக்டரிடம் சென்று ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆலோசனை பெற வேண்டும்.

  சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்
சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் பாதிப் பேருக்கு சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படுகிறது. அதில் 30 சதவிகிதத்தினருக்கு முழுமையாகச் செயலிழப்பு ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் மற்றும் மரபியல் ரீதியாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து சிறுநீரகச் செயல்பாடு குறித்த பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

  ஆரோக்கிய உணவுப் பழக்கம் அவசியம்

உடல் உழைப்பு இன்றி, உடற்பயிற்சி இன்றி இருப்பது, கொழுப்புமிக்க உணவுகளை எடுத்துக்கொள்வது, நேரம்கெட்ட நேரத்தில் சாப்பிடுவது போன்றவை உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்தல், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும். ரத்த அழுத்தத்தை உப்பு தூண்டுகிறது. எனவே, உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். 

ஒரு நாளில் ஒருவருக்குத் தேவையான உப்பின் அளவு ஐந்தில் இருந்து ஆறு கிராம் மட்டுமே. இதைவிடவும் குறைவான அளவு உப்பு எடுத்துக்காள்வதும் நல்லதுதான். கடைகளில் விற்கப்படும், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு அளவுக்கு அதிகமாக இருக்கும். இத்தகைய உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். வாழைத்தண்டு சாப்பிடுவது சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் என்று மாற்று மருத்துவத்தில் கூறப்படுகிறது. வாழைத் தண்டு சிறந்த சிறுநீர் பிரிக்கும் தன்மை கொண்டது. (Diuretics) அதிக சிறுநீர் கழித்தலைத் தூண்டி, சின்னச் சின்னக் கற்களை வெளியேற வைக்கிறது!  

  போதுமான அளவு நீர் அருந்த வேண்டும்
  வெப்பப் பிரதேசமான நம் நாட்டில் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அளவு முறை பொருந்தாது. எனவே அவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவிலேயே தண்ணீர் குடிக்க வேண்டும்). அதற்காக ஒரே மூச்சில் லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்துவதும் தவறு. ஒரு நாளில் அவ்வப்போது அளவான முறையில் தண்ணீர் அருந்துவதுதான் சரியான முறை. ஏ.சி. அறையில் இருந்தாலும் சரி, தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரகத்தில் சோடியம், யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருள்கள் வெளியேற்றம் சீராக நடக்க இது பெரிதும் உதவும்.

  புகை பிடிக்காதீர்கள்!
புகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். குறைந்த அளவிலான ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்லும்போது, அது சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். மேலும், புகைப் பழக்கம் சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் நீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

  வேண்டாமே சுய மருத்துவம்
தலைவலி, மூட்டு வலி, முதுகு வலிக்கு எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சாதாரணமாக சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்போதும் அல்லது அவசரக் காலத்தின்போதும், உரிய ஆலோசனையுடன் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். எனவே, நீண்ட நாட்களாக முதுகு வலி அல்லது மூட்டு வலி என்று தவிப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே வலி நிவாரணிகளைச் சாப்பிட வேண்டும்.

  சிறுநீரகத்தைக் கண்காணித்தல்
சிறுநீரக நோய் வரும் என்பதை முன்கூட்டியே கண்டறிய எந்தத் தொழில்நுட்பமும் இல்லை. எனவே,  40 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள், மரபுரீதியான சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வரும் பிரச்னை உடையவர்கள் மற்றும் ஒரு முறைக்கு மேல் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டவர்கள் - சீரான கால இடைவெளியில், சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com