Sunday, August 11, 2013

எலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகள்!!!

எலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகள்!!!

தினமும் உண்ணும் உணவில் ஏதேனும் ஒரு பழ வகையை சேர்த்து கொள்ளுதல் மிகவும் சிறந்தது. ஏனெனில் பழங்களானது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய கடவுள் தந்த ஒரு பெரிய வரப்பிரசாதம். அதே போல் எலுமிச்சை பழமும் உடலுக்கு பல நலன்களை கொடுக்க கூடியது ஆகும். மேலும் இது விலை மலிவான பழமும் கூட. மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காணப்படும் இப்பழம், உணவில் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டிய, நன்மைகள் பல நிறைந்த ஒரு பழ வகையாகும்.உணவில் ஃபிரஷ்ஷான எலுமிச்சையை சேர்த்து கொள்ளாதவரும் கூட, இங்கு கூறப்படும் எலுமிச்சை, எலுமிச்சை சாறு, அதன் சதை பகுதி மற்றும் அதன் தோல் ஆகியவற்றின் நலன்களை அறிந்து கொண்டு, எலுமிச்சையை உணவில் சேர்த்து கொள்ளலாமா என்று மறுபரிசீலனை செய்வர். எலுமிச்சை என்றாலே அனைவருக்கும் அதன் புளிப்புச்சுவை தான் நினைவுக்கு வரும். ஆனால் அந்த புளிப்புச்சுவை நிறைந்த சாற்றில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. மேலும் எலுமிச்சை உடல் நலத்தை மட்டுமல்லாமல் சரும அழகையும் பாதுகாக்க கூடியது. இப்படி பல மருத்துவ பயன்பாடுகளை உள்ளடக்கிய எலுமிச்சையின் சில நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைத் தெரிந்து, இனிமேல் அதனை உணவில் அதிகம் சேர்த்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

 

 1. குடலை சுத்தப்படுத்துதல்: எலுமிச்சையின் கசப்பு சுவை, குடல் தசையின் இயக்கம் திறனை அதிகரித்து, குடலில் இருந்து கழிவை அகற்றும் முறையை மேம்படுத்துகிறது. அதற்கு எலுமிச்சையின் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, தினமும் காலையில் முதல் வேலையாக குடிக்க வேண்டும்.

 

2. புற்றுநோய்: லிமொனின் (Limonene) உட்பட 26 வகை புற்றுநோய் எதிர்ப்பு கலவைகள் எலுமிச்சையில் உள்ளன. இவற்றில் இயற்கையாகவே இருக்கும் எண்ணெய், உடலில் புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கின்றன. எலுமிச்சையில் உள்ள ஃப்ளேவோனால் க்ளைகோசைட் (Flavonal Glycoside) புற்று கட்டியில் உள்ள அணுக்கள் அதிகரிக்காமல் தடுக்கின்றன.

3. ஜலதோஷம் மற்றும் காய்ச்சல்: எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவோனாய்டு (Flavanoid) அதிகம் உள்ளன. இவைகள் நோய் தொற்றுக்கு எதிரான கலவைகள். ஆகவே எலுமிச்சையை அதிகம் சேர்த்தால், ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை தடுக்கலாம்.

 

4. கல்லீரல் பிரச்சனைகள்: ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் எலுமிச்சை சாற்றை கலந்து, காலையில் குடித்து வந்தால், கல்லீரலில் இருக்கும் நச்சுதன்மை நீங்கும்

 

5. ஊட்டச்சத்துக்கள்:  எலுமிச்சையில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம், ஃப்ளேவோனாய்டுகள், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், கால்சியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை.

 

6. உடல் வேதியியல் இருப்புகள்: எலுமிச்சை அதிக அமிலத்தன்மை உடையது என்பதால், ஜீவத்துவ பரிணாமத்துடன் சேர்ந்து உடல் திரவங்களின் கார நிலையை சமன்படுத்துகிறது. www.sahabudeen.com

 

7. ஒவ்வாமை/அலர்ஜி: எலுமிச்சையில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், உடலில் ஏற்படும் அலர்ஜி அறிகுறிகளை தடுக்க உதவுகிறது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

8. மூளை மற்றும் நரம்பு மண்டல சீர்குலைவுகள்: எலுமிச்சையின் தோல் பகுதியில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டு டாங்கரெட்டின் (Phytonutrient Tangeretin) பார்கின்சன் நோய் (Parkinson's Disease) போன்ற மூளை கோளாறுகளை சரிசெய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

9. கண் / பார்வை கோளாறுகள்: எலுமிச்சையில் காணப்படும் இரசாயன கலவையான ருட்டின் (Rutin), நீரிழிவால் ஏற்படும் விழித்திரை நோயை கூட குணபடுத்தும்.

 

10. ஆன்டி வைரஸ் (Anti Virus): எலுமிச்சை ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கு எதிராக இருப்பதைத் தவிர, அதில் இருக்கும் டெர்பின் லிமினாய்டு (Terpin Liminoids) எனப்படும் தாவர இரசாயனங்கள் மற்ற வகை வைரஸ்களுக்கு எதிரானவை என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது

 

11. நீரிழிவு நீரிழிவு: நோயால் ஏற்படும் கண் கோளாறுகளை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், எலுமிச்சையில் இருக்கும் ஹேஸ்பரெட்டின் (hesperetin) இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, அதை குறைக்க உதவுகிறது.

 

12. பித்தப்பை மற்றும் சிறுநீரக கற்கள்: எலுமிச்சையில் காணப்படும் சிட்ரிக் அமிலம் பித்தப்பை கற்கள், கால்சியம் படிகங்கள் மற்றும் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.

 

13. முதுமை தடுக்கும்: எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, முதுமையை ஏற்படுத்தும் அணுக்களை சமன்படுத்தி, இளமையை நீண்ட நாட்கள் தக்க வைக்கும்

நன்றி: http://tamil.boldsky.com/health/wellness/2013/13-healing-powers-of-lemons-003698.html



--
*more articles click*
www.sahabudeen.com


மின்சக்தியினை சேமித்திட

வீட்டு உபயோகம் மின் விளக்கு அமைப்புகள்:
1) தேவையற்று ஒளிர்ந்து கொண்டிருக்கும் மின் விளக்குகள் மற்றும் கருவிகளை
நிறுத்துவதே மின்சேமிப்பில் சிறந்த வழி.
2) எங்கெல்லாம், எப்பொழுதெல்லாம் சூரிய ஒளி கிடைக்குமோ, அப்பொழுதெல்லாம் உபயோகிக்கவும்.
3) வீடுகட்டும் போதே போதிய வெளிச்சமும் காற்றும் வீட்டிற்கு கிடைக்குமாறு வடிவமைக்கவும்.
4) அனைத்து சுவர்களுக்கும் அடர்த்தியற்ற வண்ணம் பூசப்பட வேண்டும்.
5) வேலை செய்யும் இடத்திற்கு மட்டுமே வெளிச்சம் தரக்கூடிய வகையில்
மின்விளக்குகளை பொருத்தி பயன்படுத்தலாம்.
6) சாதாரண குமிழ் விளக்குகளுக்குப் பதிலாக கச்சிதமான சிறுகுழல்
விளக்குகளைப் பயன்படுத்தவும்.
7) சாதாரண 40 வாட்ஸ் குழல் விளக்குகளை மாற்றிவிட்டு அதேபோல் ஒளி
வழங்கும் 36 வாட்ஸ் மெல்லிய குழல் விளக்குகளைப் பொறுத்தவும்.
8) குழல் விளக்குகளில் சாதாரண சோக்குகளை மாற்றிவிட்டு எலக்ட்ரானிக்
சோக்குகளை உபயோகிக்கவும்.
9) பூச்சியம் வாட்ஸ் விளக்குகளில் கூட 10 முதல் 12 வாட்ஸ் வரை மின்சாரம்
செலவாகிறது. அதற்கு பதிலாக அதைவிட அதிக வெளிச்சம் தரக்கூடிய
5/7/9/11 வாட் சிறுகுழல் விளக்குகளை பயன்படுத்தவும்.
10) அகச்சிவப்பு கதிர் மின்விளக்குகள், இயக்க உணர் கருவிகள்,
நேரக்கட்டுப்பாட்டுடன் கூடிய மின்னமைப்புகள், ஒளியின் அளவினை
முறைப்படுத்திடும் மின்னமைப்புகள் மற்றும் சூரிய மின்கலம் ஆகியவைகளின்
மூலமாக தானே இயங்குகிற மின்கருவிகளை பயன்படுத்தினால் அவை
மின்னமைப்புகளை தேவைக்கேற்ப இயங்கச் செய்து மின்சேமிப்பிற்கு பெரிதும்
உதவுகின்றன.
11) தூசு படிந்த பல்புகள் மற்றும் குழல் விளக்குகளை அவ்வப்போது நன்றாக சுத்தம் செய்வதன் மூலம் வெளிச்சம் குறைவதை தவிர்க்கலாம்.

மின்விசிறி
1) குறைந்த எடையுடைய மின்திறன் மிக்க மின்விசிறிகளை உபயோகிக்கவும்.
2) மின்விசிறிகளில் ரெகுலேட்டர்களை
உபயோகிக்கப்பதால் மின்செலவு குறைகிறது.
3) மோட்டர்களை ரீவைண்ட் செய்வதை தவிர்க்கவும்.
4) மின்விசிறி பிளேடுகளை அடிக்கடி சுத்தம் செய்யவும்.
5) மின்விசிறியிலுள்ள பேரிங்குகளுக்கு அவ்வப்போது எண்ணெய் விடவேண்டும்.

கிரைண்டர்
1) மின்திறன் மிக்க மோட்டார்களையே கிரைண்டர்களில் பயன்படுத்தவும்.
2) கிரைண்டர்களில் நைலான் பெல்ட்களையே எப்பொழுதும்
உபயோகிக்கவும்.
3) கிரைண்டர்களை எப்பொழுதும் அதன் முழுதிறனுக்கே
உபயோகிக்கவும்.
4) கிரைண்டரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தேவையான பகுதிகளில்
அவ்வப்போது எண்ணெய் விட வேண்டும்.

வாஷிங் மெஷின்
1) வாஷிங் மெஷின்களை எப்பொழுதும் அதன் முழுதிறனுக்கே
உபயோகிக்கவும்.
2) வாஷிங் மெஷினில் உலர வைக்கும் கருவிகளை
தேவையானால் மட்டுமே உபயோகிக்கவும்.

குளிர்சாதனக் கருவி
1) அறையின் பரப்பளவுக்கேற்ப சரியான அளவிலான குளிர்சாதனக் கருவியை
தேர்ந்தெடுத்து உபயோகிக்கவும்.
2) குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையின் கதவுகளை
கூடிய வரையில் திறந்தவுடன் மூடிவிட வேண்டும்.
3) குளிர்சாதனக் கருவிகளின் வடிகட்டும் அமைப்பை
அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.
4) குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறை காற்று வெளியேறாத வண்ணம்
அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
5) மின்செலவினை குறைத்திட தேவையான வெப்பம், 25 டிகிரி சென்டிகிரேடு
அளவில் அறையின் குளிர்சாதனக் கருவி இயங்கும் வகையில் அதன்
தெர்மோஸ்டேட் அமைக்கப்பட வேண்டும்.
6) பழுதடைந்த பழைய குளிர்சாதனக் கருவியை சரி செய்வதற்கு பதிலாக, மிகுந்த
எரிசக்தி செயல்திறன் (நட்சத்திர குறியீடு) கொண்ட குளிர்சாதனக் கருவியை
வாங்கி உபயோகப்படுத்த வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------
1) தினமும் ஒன்றிரண்டு துணிகளை "அயர்ன்" செய்வதை தவிர்த்து,
ஒரே நேரத்தில் மொத்த துணிகளை "அயர்ன்" செய்யவும்.

குளிர்பதனப் பெட்டி
1) குளிர்பதனப் பெட்டியினை, சுவற்றில் இருந்து சற்று தள்ளி நல்ல காற்றோட்டம்
ஏற்படும் வண்ணம் அமைக்க வேண்டும்.
2) குளிர்பதனப் பெட்டியின் கதவினை அடிக்கடி
திறந்து, மூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
3) சூடான மற்றும் வெதுவெதுப்பான உணவுப்
பொருட்களை அறையின் வெப்ப நிலைக்கு
கொண்டு வந்து, அவற்றை நன்கு மூடி
குளிர்பதன பெட்டியினுள் வைத்திட வேண்டும்.
4) குளிர்பதனப் பெட்டியின் உள்ளே படியும்
உறைபனி அவ்வப்போது நீக்கப்பட வேண்டும்.
5) மின்சேமிப்பு நட்சத்திர குறியீடு அதிகமுள்ள குளிர்பதனப் பெட்டியை வாங்கி
பயன்படுத்துதல் வேண்டும்.
6) குளிர்பதனப் பெட்டியிலுள்ள தெர்மோஸ்டாட் கருவியை சீதோஷ்ண நிலைக்கு
ஏற்றவாறு தேவையான அளவில் வைக்க வேண்டும்.

நீர் ஏற்றும் பம்பு
1) மின்திறன் மிக்க பம்புகளையே நீரேற்றத்திற்கு உபயோகிக்கவும்.
2) சரியான அளவிலான பி.வி.சி பைப்புகளையே
உபயோகிக்கவும், ஜி.ஐ பைப்புகளை தவிர்க்கவும்.
3) குழாய்கள் மற்றும் இணைப்புகளில் நீர் கசிவதை கவனித்து
தவிர்க்கவும்.
4) நீர் ஏற்றும் பம்பு செட் மோட்டார்களில் கெபாசிட்டர்களை இணைக்கவும்.
5) தண்ணீர் தொட்டி நீர் நிரம்பி வழிவதை தவிர்க்க, தண்ணீர் அளவை
தெரிவிக்கும்/கட்டுப்படுத்தும் கருவியை பொருத்தவும்.

நீர் சூடேற்றி
1) குழாய்கள் மற்றும் இணைப்புகளில் நீர் கசிவதை கவனித்து
தவிர்க்கவும்.
2) தேவையான இடங்களில் மின்சார நீர் சூடேற்றிக்கு பதிலாக
சூரியசக்தி நீர் சூடேற்றியை பயன்படுத்தவும்.
3) வெப்ப இழப்பினைத் தவிர்த்திட சுடுநீர் செல்லும் குழாய்களுக்கு தகுந்த வெப்ப
பாதுகாப்பு உறை அமைக்கப்பட வேண்டும்.

கணினி
1) பயன்பாடு இல்லையெனில் வீடு மற்றும் அலுவலக கணினிகளின் இயக்கத்தை
நிறுத்த வேண்டும். மாறாக 24 மணி நேரம் ஒரு கணினி இயங்கினால், அது ஒரு
திறன் மிக்க குளிர்பதனப் பெட்டியினை விட அதிக மின் சக்தியினை
வீணடிக்கிறது.
2) கணினியின் மானிட்டர் தேவைக்குப்பின் நிறுத்தம்
செய்யப்பட வேண்டும், ஏனெனில் அது கணினி
பயன்படுத்தும் மின்சக்தி அளவில் பாதி அளவினை
செலவழிக்கிறது.
3) தூங்கும் நிலையில் கணினிகள், மானிட்டர்
மற்றும் நகலெடுக்கும் கருவி போன்றவை நாற்பது
சதவிகித மின் செலவினை மிச்சப்படுத்த உதவி புரிகின்றன.
4) திரைகாப்பவை கணினியின் திரைகளை பாதுகாக்க மட்டுமே பயன்படுகின்றன.
அவை மின்சக்தியினை சேமித்திட உதவுவதில்லை. மாறாக கணினியினை
தேவைக்கேற்ப இயக்கியும் நிறுத்தியும் பயன்படுத்தினால் அவை
மின்சக்தியினை வீணாக்காமல் மின்சேமிப்பிற்கு உதவுவதோடு கணினிகளுக்கு
நீண்ட பாதுகாப்பு அளிக்கிறது.

--
*more articles click*
www.sahabudeen.com


Saturday, August 10, 2013

Friday, August 9, 2013

பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல

பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.

பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது ; உணவை செரிப்பிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது ; பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.
 

உபயோகங்கள் :
 இது ஒரு நல்ல வாய்வகற்றி ; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது, வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 
நீரேற்றத்தையும் - சவ்வுகளின் வீக்கத்தையும், காசத்தையும் நீக்குகிறது. சுவாச நோயில் இசிவகற்றியாகவும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகட்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது.
 

இது, குடலின் உப்புதலை குறைக்கிறது. இதன் சிறப்புச் செய்கையினால் வலி உள்ள மாத விடாயின்போது தீட்டை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது.
 

நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது.
 
பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.

இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும்.
 

இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.
 

பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.

கோழி முட்டை மஞ்சட் கருவுடன் காயத்தைக் கூட்டிக் கொடுக்க வறட்டிருமல், பக்க வலி நீங்கும். எண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்.

--
*more articles click*
www.sahabudeen.com


Wednesday, August 7, 2013

ஸ்கிப்பிங்கை ஸ்கிப் பண்ணாதீங்க

'ஸ்கிப்பிங்கா? அட அதெல்லாம் சின்னப் பசங்க சமாச்சாரம்''னு நெனைச்சுப் பக்கத்தைப் புரட்டாதீங்க... சும்மா ஜாலியா 10 நிமிஷம் ஸ்கிப்பிங் செய்தாலே 100 கலோரிகள் வரை எரிக்க முடியும். கயிறாட்டம் எனத் தமிழில் சொல்லப்படும், செலவே இல்லாத இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை முறையாக எப்படிச் செய்வது? விரிவாகச் சொல்கிறார் ஃபிட்னஸ் பயிற்சியாளர் மகேந்திரன்.

''நமக்கு ஏற்ற ஸ்கிப்பிங் கயிறை எப்படித் தேர்ந்தெடுப்பது?'' 
''ஒரு ஸ்கிப்பிங் கயிறை எடுத்து அதைத் தரையில் நீள வாக்கில் கிடத்தி, பாதி அளவு நீளம் இருக்கும் இடத்தில் கயிற்றின் மீது நின்றுகொண்டு, கயிற்றின் இருமுனைகளையும் இரு கரங்களாலும் மேல்நோக்கி உயர்த்த வேண்டும். கயிற்றின் இரு முனைகளும் உங்கள் அக்குள் பகுதிவரை இருந்தால் அந்தக் கயிறுதான் உங்களுக்கு ஏற்ற கயிறு.''

''எப்படி ஸ்கிப்பிங் செய்ய வேண்டும்?'' 
''முதலில் நேராக நிற்க வேண்டும். பின்பு உங்களது ஸ்கிப்பிங் கயிறை உங்களது குதிக்காலின் கீழ் வைத்துக்கொள்ளவும். பின்பு மெதுவாகக் கயிறைச் சுழலவிட்டு அதன் வேகத்திற்கு ஏற்பக் கயிறைத் தாண்டித் தாண்டிக் குதிக்கவும்.
  முதலில் மெதுவாக ஆரம்பித்து, பிறகு வேகத்தை சீராகக் அதிகரிக்க வேண்டும்.''

''ஸ்கிப்பிங்கில் எத்தனை வகைகள் உள்ளன?'' 
''சாதாரணமாகத் தாண்டி விளையாடுதல் தவிர்த்து, முன்புறமாகத் தாண்டுதல், பின்புறமாகத் தாண்டுதல், ஓடிக்கொண்டே தாண்டுதல், குறுக்கு வாக்கில் தாண்டுதல் எனப் பல வகைகள் உண்டு. சாதாரணமாகக் குதித்தல் தவிர மற்ற முறைகளை உரிய பயிற்சியுடன்தான் செய்ய வேண்டும்.''

''ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளும்போது கருத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?'' 
''இதய நோயாளிகள், இடுப்பு மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் ஸ்கிப்பிங் செய்யவேண்டும். புல்தரை, மணல் போன்ற மிருதுவான தரைப்பரப்பில்தான் ஸ்கிப்பிங் செய்ய வேண்டும். கான்கீரிட் போன்ற கடினமான தளங்களில் ஸ்கிப்பிங் செய்யக்கூடாது. அப்படிச் செய்யும்போது மூட்டுகளில் பிரச்னைகள் ஏற்படும். கட்டாயமாக ஷூ அணிந்து இருக்க வேண்டும். அவை பொருத்தமான அளவிலும் தரமானதாகவும் இருக்கவேண்டும். நாள் ஒன்றுக்குக் குறைந்தது 100 முறை தாண்டலாம். ஸ்கிப்பிங் செய்யும் இடம் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும்.

பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன் குறைவான ஆகாரம் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டாகச் செய்யும்போது மற்றவர்களைவிட அதிகமுறை செய்கிறேன் பேர்வழி என மல்லுக்கட்டி நிறைய முறை செய்ய வேண்டாம். இறுக்கமான ஆடைகளை அணிந்து ஸ்கிப்பிங் செய்யக்கூடாது.''

''ஸ்கிப்பிங் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?''
''10 நிமிட ஸ்கிப்பிங் பயிற்சி, எட்டு நிமிடங்களில் ஒரு மைல் தூரம் ஓடியதற்குச் சமம். ஒரு மணி நேரத்தில் 1300 கலோரிகள் வரை எரிக்கலாம். உடல் வலிமை அதிகரிக்கும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரையும். கூன் விழாமல் தடுக்கலாம். உடலுக்கும் மனதுக்கும் ஒரு சேரப் பயிற்சி கிடைப்பதால் மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற பிரச்னைகள் நீங்கி மனம் ஒருமுகப்படும்.
அதனால், சின்ன வயசுக்காரங்க யாரும் ஸ்கிப்பிங்கை ஸ்கிப் பண்ணக்கூடாது.'

--
*more articles click*
www.sahabudeen.com


Monday, August 5, 2013

வெளிநாட்டிற்கு படிக்கச் செல்பவரா நீங்கள்?

வெளிநாட்டிற்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் பலரும், கடைசிநேர நெருக்கடிகளுக்குள்ளாகி, வாய்ப்பை கோட்டைவிடும் நிலை வரை செல்வது பாஸ்போர்ட் விஷயத்தில்தான். ஏனெனில், பல மாணவர்கள், தங்களின் பாஸ்போர்ட் என்ன நிலையில் இருக்கிறது, அதன் செல்லத்தக்க காலம் எவ்வளவு? என்பன போன்ற விஷயங்களை கவனிக்கத் தவறி விடுகின்றனர்.
செல்லத்தக்க காலம் முடிந்துபோதல், பாஸ்போர்ட் மோசமாக சேதமடைந்திருத்தல் உள்ளிட்ட பல காரணங்களால், அவர்களுக்கு கிடைத்த பல அரிய வாய்ப்புகள் நழுவி விடுகின்றன. பாஸ்போர்ட் விஷயத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், அதிலிருக்கும் புகைப்படம். பல வருடங்களுக்கு முன்பாக அது எடுக்கப்பட்டிருந்தால், கட்டாயம் மாறுதல் தேவை. ஏனெனில் அதில் நீங்கள் சிறுவனாகவோ அல்லது சிறுமியாகவோ இருப்பீர்கள். இப்போது, உங்களின் தோற்றம் மிகவும் மாறுபட்டிருக்கும்.

பாஸ்போர்ட் மற்றும் விசா விஷயத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
நீங்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது, உங்களின் பாஸ்போர்ட் குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். பல நாடுகளில் இதுதான் நடைமுறை.
தேர்வு முடிவுகள் வெளியாகி, சேர்க்கைக் கிடைப்பது 100% உறுதியான பிறகுதான், விசா நடைமுறைப் பணிகளைத் துவங்க வேண்டும் என்று பல மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது தவறு. பல நாடுகள், அவற்றின் மாணவர் விசாவுக்காக விண்ணப்பித்தலை, குறைந்தபட்சம், படிப்பு தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாக அனுமதிக்கின்றன. வெளிநாட்டுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை குறைந்தது 6 மாதங்களுக்கு முன்பாகவே துவங்க வேண்டும். அதன்மூலம், உங்களின் விசாவுக்கான ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்ள முடியும்.

அப்படியே நம்பிவிட வேண்டாம்
மாணவர் விசா விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்களை சரியான முறையில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். விசா விதிமுறைகள் அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும். எனவே, சில வருடங்களுக்கு முன்பாக அல்லது ஒரு வருடத்திற்கு முன்பாக வெளிநாட்டிற்கு படிக்க சென்ற உங்களின் நண்பர்கள் கூறுவதை அப்படியே நம்பிவிட வேண்டாம். ஏனெனில், அவர்கள் அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கும் விதிமுறைகள் பற்றி முழுமையாக அறிந்திருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை.
எனவே, ஒரு சிறந்த வழிமுறை என்னவெனில், நீங்கள் எந்த நாட்டிற்கு கல்வி கற்பதற்காக செல்ல விரும்புகின்றீர்களோ, அந்த நாட்டின் குடியேற்ற மற்றும் கல்வி தொடர்பான இணையதளத்திற்கு சென்று, விதிமுறைகள், தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் சமீபத்திய மாற்றங்கள் பற்றி அறிந்துகொள்ளவும்.

எந்த ஆலோசகரை நாடலாம்?
வெளிநாட்டு கல்வி தொடர்பாக ஆலோசனை வழங்க, ஏராளமான ஆலோசகர்கள் கடைவிரித்து காத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால், யாரை நம்புவது? யார், வாங்கும் கட்டணத்திற்கு முறையாக சேவை செய்கிறார்கள் என்பதை எப்படி அறிவது? ஒரு ஆலோசகர் நல்லவரா என்பதை, அவரால் ஏற்கனவே பயன்பெற்ற நபர்கள் சொல்வதை வைத்தும், அவரின் தொழில்ரீதியிலான சாதனை மற்றும் அனுபவத்தை வைத்தும் நம்பலாம்.
மேலும், நீங்கள் படிக்கச்செல்லும் கல்வி நிறுவனத்தின் இணையதளம் சென்றால், அதிலேயே, அவர்களின் அங்கீகாரம் பெற்ற ஆலோசகர்களின் விபரங்கள் இருக்கும். அதன்மூலம் பயன்பெறலாம். தொலைக்காட்சியில் பேட்டி வருகிறது என்பதற்காகவோ, அதிகளவில் விளம்பரங்கள் தருகிறார்கள் என்பதற்கோ, யாரையும் நம்பிவிட வேண்டாம்.

நீங்களே பொறுப்பு
வெளிநாட்டுக் கல்விக்கென்று நீங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பம் மற்றும் ஆவணங்களில் கூறப்படும் தகவல்களின் நம்பகத்தன்மைக்கு முற்றிலும் நீங்களே பொறுப்பு. அதில் எந்த சிறு தவறு நேர்ந்தாலும், உங்களின் பொன்னான வாய்ப்பு பறிபோய்விடும்.
எனவே, அந்த செயலை மேற்கொள்ளும் முன்பாக, சரியான நபர்களிடம் ஆலோசனைக் கேட்டு, நுணுக்கமாகவும், சிறப்பாகவும் செய்து முடித்தல் வேண்டும். இதற்கு நீங்களே 100% பொறுப்பு.

விசா விபரங்கள்
பல நாடுகளில், மாணவர் விசா என்பது, ஒரு குறிப்பிட்ட பல்கலையில், குறிப்பிட்ட படிப்பிற்காக வழங்கப்படுகிறது. உங்களது பாஸ்போர்ட்டில் ஒட்டப்பட்ட மாணவர் விசாவில், நீங்கள் அந்நாட்டில் நுழையும் தேதி குறிப்பிடப்படும்.

சரி பார்க்கவும்
விசாவைப் பெற்றவுடன், அதில் ஏதேனும் பிழைகள் இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். பதிவுக்காக, அதை ஸ்கேன் செய்து நகலெடுக்கவும். ஏதேனும் ஒரு காரணத்திற்காக, நீங்கள் பல்கலையை மாற்ற விரும்பினால், தூதரகத்திடம் அது தொடர்பாக தெரிவித்து, முறையான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும்.
பல நாடுகள் multiple - entry student விசாவை வழங்குகின்றன. இதன்மூலம், ஒரு மாணவர், தான் படிக்கும் காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த நாட்டிற்குள் சென்று வரலாம். ஆனால் சில நாடுகள், single - entry விசாவை வழங்குகின்றன. எனவே, தேவைப்படும்போது அதைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

போர்ட் ஆப் என்ட்ரி
நீங்கள் முதன்முதலில் ஒரு நாட்டிற்கு படிக்கச் செல்கையில், அந்நாட்டில் எந்த விமான நிலையத்தில் முதலில் தரையிறங்குகிறீர்களோ, அந்த இடம்தான் Port of entry எனப்படும். அந்த இடத்தில்தான் immigration மற்றும் customs நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

விசா விண்ணப்பத்திற்கு தேவையானவை
பல்கலையிடமிருந்து, பொருத்தமான அசல் சேர்க்கை ஆவணங்கள்
அசல் கல்விச் சான்றிதழ்கள்(அது ஆங்கிலத்தில் இல்லையெனில், மொழிபெயர்ப்பு தேவை)
அசல் தேர்வு முடிவுகள்
அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பெறப்பட்ட நிதி ஆவணங்கள்
வங்கிக் கடன்
தங்குமிடம்
அட்வான்ஸ் ட்யூஷன் டெபாசிட் சான்று
உதவித்தொகை கடிதம்
புகைப்படங்கள்
விசா கட்டணங்கள்

--
*more articles click*
www.sahabudeen.com


Saturday, August 3, 2013

பற்களை பாதுகாக்க டிப்ஸ் ...!-

பற்களை பாதுகாக்க டிப்ஸ் ...!-

பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும், முக அழகும் கெட்டுப் போய்விடும். பல் சொத்தையைக் கண்டு கொள்ளாமல் விட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்க செய்து பல்லை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும். தற்பொழுது உள்ள சிகிச்சை முறைகளின் மூலம் பல்லின் வேர்ப்பகுதியை பாதுகாத்து பல்லை விழாமல் காத்துக் கொள்ள முடியும். சொத்தைப் பல்லுக்கு ஆரம்பத்திலேயே வேர் சிகிச்சை செய்வதன் மூலம் 20 ஆண்டுகள் வரை பல்லை பாதுகாக்க முடியும் என்கிறார் பல் டாக்டர் கைலின். 
சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது. குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் இருமுறை பல்துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும். 

சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்யம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது. எச்சிலில் உள்ள ஏசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகிறது. பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும். www.sahabudeen.com


 பல்லில் சொத்தை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது பல் சொத்தை வாயில் தொந்தரவை ஏற்படுத்தும் போதே பல் மருத்துவரிடம் காட்டி வேர் சிகிச்சை மூலம் பாதுகாத்துக் கொள்ள லாம். வேரின் தன்மையைப் பொறுத்து பல்லின் ஆயுள் கூடும். பல்லின் வேர்ப்பகுதியில் பாதிப்பு ஆரம்பித்த உடன் கண்டறிந்தால் செயற்கை வேர் வைத்து பல்லை உறுதியாக்கி அதன் மீது உரை போட்டு பல்லை உயிருடன் காப்பாற்றி விட முடியும். இந்த வேர் சிகிச்சையின் மூலம் 20 ஆண்டுகள் வரை பல்லை காப்பாற்றலாம். வேர் சிகிச்சை என்பது எந்த வயதினருக்கும் செய்யலாம். சிறு வயது குழந்தைகளுக்கு கடைவாய்ப்பல் சொத்தை ஏற்பட்டால் அந்தப் பல் 12 வயது வரை அவர்களுக்குத் தேவைப்படும். அதற்கும் வேர் சிகிச்சை உள்ளது. 

பொதுவாக வயதானவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் ஏற்கனவே உடலில் உள்ளவர்களுக்கும் அதற்கான அடிப்படை பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர் வேர் சிகிச்சை செய்யப்படும். வேர் சிகிச்சையின் பின்னர் பல்லில் வலி மற்றும் சேதம் எதுவும் இன்றி நார்மலான பல் போலவே பயன்படுத்தலாம். இதே போல் பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்யத்தையும், முகத்தில் அழகையும் பாதுகாக்க முடியும். 

பாதுகாப்பு முறை: சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்லை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தினமும் இரண்டு முறை கட்டாயம் பல் துலக்க வேண்டும். மாதம் ஒரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். பல்லின் தன்மைக்கு தகுந்த பிரஷ்ஷை தேர்வு செய்வதும் அவசியம். பல் இடுக்குகளில் உணவுப் பொருட்கள் சேராமல் பாதுகாக்க வேண்டும். குளிர்ச்சியான பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும். மவுத் வாஷ் பயன்படுத்தியும் பல்லை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். இனிப்புகள் சாப்பிட்டால் கண்டிப்பாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும். பிரச்னையே இல்லாவிட்டாலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் காண்பித்து பல் ஆரோக்யத்தை பாதுகாக்க வேண்டும். கால்சியம் உள்ள உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் பல்லின் வலி மையை பாதுகாக்க முடியும். -ஸ்ரீதேவி

பாலக்கீரை சூப்: ஒரு கட்டு பாலக்கீரை, பெரிய வெங்காயம்- 1, தக்காளி- 1, பூண்டு-2 ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு சீரகம், மிளகு அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு தாளித்து தக்காளி, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, சீரகம் - மிளகுத்தூள் சேர்க்கவும். இத்துடன் கீரை, மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில்  ஒரு விசில் நேரத்திற்கு வேக வைத்து, பின் கடைந்து சூப்பாக அருந்தலாம். இதில் வைட்டமின், மினரல் சத்துகள் உள்ளன. 

ரெசிபி

வெண்டை பிரை: வெங்காயம், தக்காளி, ஒரு டேபிள் ஸ்பூன் பூண் டுத் துருவல் ஆகியவற்றை எண் ணெயில் வதக்கி மசித்துக் கொள் ளவும். இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பேஸ்ட் போல பிசைந்து, 10 வெண்டைக்காயை நீளவாக்கில் நறுக்கி உள்ளே ஸ்டப் செய்யவும். தோசை கல்லில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வெண்டைக்காய் பிரை செய்யலாம். இதில் வைட்டமின் சி சத்து உள்ளது. 

காலிபிளவர் கட்லட்: ஒரு காலிபிளவர் பூ கட் செய்து உப்புத் தண்ணீரில் போட்டு சுத்தம் செய்யவும். அரை கப் முட்டைக்கோசை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, கரம்மசாலாத் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி உருண்டை பிடித்துக் கொள்ளவும். கான்பிளவர் மாவு, ரொட்டித்தூள் ஆகியவற்றில் உருட்டி தட்டி தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும். இந்த கட்லட்டில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.

டயட்

பொதுவாக 30 வயதுக்கு மேல் பல காரணங் களால் பல் பாதிப்பு அதிகரிக்கிறது. மேலும் சிறு வயது முதல் கால்சியம், அயோடின் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக் குறைபாட்டினால் பற்கள் விரைவில் வலுவிழக்கின்றன. இவற்றை தடுக்க பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும். வைட்டமின்-சி சத்து அதிகம் உள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி , எலுமிச்சை, பப்பாளி, திராட்சை இவ ற்றில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிட வேண்டும். கேழ்வரகு, மீன், கீரை வகைகள், முட்டைக்கோஸ், காளிபிளவர், அடிக்கடி சேர்க்கவும். தினமும் இரண்டு டம்ளர் பால் அவசியம். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இனிப்பு, உப்பு, காரம் குறைத்து கொள்ளவும். சூடாகவும், காரமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். அப்படி சாப்பிட நேர்ந்தால் உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிக்கவும். இனிப்பு சாப்பிட்ட பின் கண்டிப்பாக பிரஷ் செய்யவும். வயதாகும் போது எதிர்ப்பு சக்தி குறைபாட்டின் காரணமாகவே பல் தேய்மானம் மற்றும் பல் இழப்புகள் ஏற்படும். பல்லை சுத்தமாகப் பராமரித்தல், சத்தான உணவு ஆகியவையே பல் ஆரோக்யத்தை பாதுகாக்க உதவும், என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. 

பாட்டி வைத்தியம்

*
  பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 
*
  ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரை த்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப்    புகள் குறையும். 
*
  ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும். 
*
  நல்லெண்ணெய் 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் கிருமித் தொற்று குணமாகும். 
*
  கிராம்பு, கொட்டைப்பாக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி குணமாகும். ஈறுகள் பலப்படும். 
*
  கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும். 
*
  கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி உள்ளிட்ட அனைத்து நோய்களும் விலகும்.

http://pettagum.blogspot.in/2012/07/blog-post_8582.html

--
*more articles click*
www.sahabudeen.com


நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?

நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?

 

'கொஞ்சம் அந்த சென்ட் பாக்டரியை மூடறியா?'' - நண்பர்களுக்குள் சகஜமான  'மூக்குப்பிடி' வசனம் இது. கூட்டம் நிறைந்த பஸ் பயணத்தின்போதோ, கோடைக் காலத்தில் அலுவலகத்திலோ சிலர் கையை உயர்த்தினாலே, வியர்வை நாற்றம் முகம் சுளிக்கவைக்கும்.

 அக்குள் பகுதியில் நாற்றம் வீசுவதற்கு முக்கியமான காரணம் வியர்வை. உடலில் சரியான காற்றோட்டம் கிடைக்காத பகுதிகளில் அதிகமாக வியர்வை தோன்றும். அப்படிப்பட்ட பகுதிதான் அக்குள். ஆனால், உண்மையில் வியர்வை என்பது நமக்கு நன்மை செய்வதுதான். தாங்க முடியாத வெயில், கடுமையான உடற்பயிற்சி, டென்ஷன் என்று எப்போதெல்லாம் நமது உடம்பு உஷ்ணம் ஆகிறதோ... அப்போதெல்லாம், 'கூல்... கூல்' என்று சொல்லாமல் சொல்லி நமது உடம்பைக் குளிர்விக்க உதவி செய்வதுதான் வியர்வை. ஆனாலும், அக்குளில் சுரக்கும் வியர்வை சங்கடத்தையே ஏற்படுத்துகிறது.

அக்குள் தூய்மைகுறித்து தோல் மற்றும் அழகியல் மருத்துவ நிபுணரான எஸ்.சுகந்தன் விரிவாகப் பேசினார்.
''
வயது வந்த அனைவருக்கும் இருக்கும் சாதாரணமான பிரச்னைதான் இது. பொதுவாக, வியர்வைக்கு - அது எங்கிருந்து சுரந்தாலும் - இயற்கையில் மணம் கிடையாது. தோலில் உள்ள எண்ணெய்ப் பசையிலும் வியர்வையிலும் வளரும் பாக்டீரியாக்களே வியர்வைக்கு நாற்றத்தைக் கொடுக்கின்றன'' என்று விளக்கம் கொடுத்த டாக்டர் சுகந்தன் தொடர்ந்து நமது சந்தேகங்களுக்குப் பதில் அளித்தார்.

'அக்குள் வியர்வை வாடையைத் தடுக்க என்ன வழி?'
'
ரோமம் மண்டிய அக்குள், அதிகப் படியான வியர்வைச் சுரப்பு, சிந்தடிக் ஆடைகளை அணிவது, நுண்கிருமித் தொற்று போன்றவை அக்குள் நாற்றத்துக்கு முக்கியக் காரணிகள். அக்குள் வாடையை முற்றிலுமாக நீக்க முடியாவிட்டாலும் பெருமளவு குறைப்பதற்குச் சிறந்த வழி அக்குள் முடியை நீக்கிவிடுவதுதான்.''

''அக்குள் முடிக்கும் நாற்றத்துக்கும் என்ன தொடர்பு?''
''
அக்குளில் வளரும் ரோமம் வியர்வையை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்கிறது. அப்போது பாக்டீரியாக்கள் அசுர வேகத்தில் பல்கிப் பெருகும். இந்தப் பாக்டீரியாக்கள்தான் அக்குள் வாடையைப் பரப்புகின்றன. ரோமத்தை நீக்கினால், மூன்று நன்மைகள் கிடைக்கும். பார்ப்பதற்கு அருவெறுப்பு இல்லாமல் இருக்கும். அடுத்து, வியர்வை வாடை குறைந்து மற்றவர்களுக்குச் சங்கடம் அளிக்காமல் இருக்கும். இவற்றை எல்லாம்விட மூன்றாவது காரணம் முக்கியமானது. தூய்மை இல்லாத அக்குளில் இருக்கும் வியர்வைச் சுரப்பிகளில் நோய்த் தொற்று ஏற்பட்டால் சுரப்பி, பெரிய கட்டியாக மாறி மிகுந்த சிரமத்தை ஏற்படுத்திவிடும். www.sahabudeen.com

 

''அக்குள் ரோம நீக்கம் செய்துகொள்ள என்னென்ன வழிகள் இருக்கின்றன? எது பெஸ்ட்?''
''
லேஸர், ரேஸர், வேக்ஸ் மற்றும் க்ரீம் என்று நான்கு முக்கியமான முறைகள் இருக்கின்றன. இதில் லேஸர் சிகிச்சையை ஒரு முறை செய்துகொண்டால் அக்குளில் ரோமம் வளரும் பிரச்னையே இருக்காது. ஆனால் இதற்கு 15,000 முதல் 20,000 ரூபாய் வரை செலவாகும். இது தவிர, அக்குள் பகுதியில் வியர்வையே சுரக்காமல் இருக்க விலை உயர்ந்த ஊசி மருந்துகள் இப்போது புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால், ஆயிரக்கணக்கில் செலவாவதோடு, நாலைந்து மாதங்கள் வரைதான் இது வேலை செய்யும்.''

''வாடையைத் தவிர்க்க டியோடரன்டுகளைப் பயன்படுத்துவது சரிதானா?''
''
பயன்படுத்தலாம். பலரும் பெர்ஃப்யூம்களையும் டியோடரன்டுகளையும் ஒன்று என நினைத்துக் குழப்பிக்கொள்கிறார்கள். பெர்ஃப்யூம்கள் நறுமணத்தை மட்டுமே தரக்கூடியவை. ஆனால், தரமான டியோடரன்டுகள் வியர்வைச் சுரப்பைக் குறைக்கும் ஆற்றலும் பாக்டீரியாக்களுக்கு எதிராகச் செயல்படும் திறனும்கொண்டவை. பெர்ஃப்யூம்களை ஆடைகளின்மேல் தெளிக்க வேண்டும். டியோடரன்டுகளை உடம்பின் மீது நேரடியாகப் படுமாறு ஸ்ப்ரே செய்ய வேண்டும். ஆனால், அலுமினியம் கலந்த டியோடரன்டுகளைத் தொடர்ந்து உபயோகித்தால் புற்றுநோய் வரும் ஆபத்து இருக்கிறது.''

''ரோமம் நீக்கப்பட்ட இடம் கருமையாய் இருப்பதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?''
''
கழுத்து, அக்குள் மற்றும் தொடைகளின் மேல் பகுதி ஆகியவை சற்றே கருமையாக இருப்பது இயற்கைதான். இந்த இடங்களில் பூஞ்சைக் காளான் தொற்று அடிக்கடி ஏற்படுவது சகஜம். அப்படி ஒரு முறை ஏற்பட்டுவிட்டால், தொற்று நீங்கிய பிறகும் கறுப்பு நிறம் அந்த இடங்களில் தங்கிப்போய்விடும். கூடுதல் எடை உடையவர்களுக்குக் கறுமை நிறம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இதை மாற்ற வேறு வழி இல்லை. முன்பே சுதாகரிப்பாக இருந்துகொள்ள வேண்டியதுதான்!''

 முடி மற்றும் தோல் பராமரிப்பு அழகியல் நிபுணரான  எம்.ஹஸீனா சையத் அக்குள் பராமரிப்புக்கு சில டிப்ஸ்களைச் சொன்னார்.
''
ஈரத்தை உறிஞ்சக்கூடிய பருத்தி இழைகளால் ஆன ஆடைகளை அணியலாம்.
இரவு உறங்கச் செல்லும் முன் அக்குளை நன்கு கழுவிச் சுத்தமாக ஈரம் போகத் துடைப்பது முக்கியம்.
உணவுக்கும் வியர்வை வாடைக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. உதாரணமாக வெங்காயம், பூண்டு மற்றும் மசாலாக்கள் நிரம்பிய உணவு வகைகளை அதிகமாக வியர்க்கும் காலத்தில் தவிர்க்கலாம்.
தினசரி இரண்டு முறை குளிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். காக்கைக் குளியல் உதவாது. அக்குளுக்கு அதிகக் கவனம் கொடுத்துக் கழுவி சுத்தமான துண்டுகொண்டு நன்கு துடைக்க வேண்டும். குளித்த பிறகு அக்குளை ஈரம் இல்லாமல் துடைத்துவிட்டு டியோடரன்டுகள், பேபி பவுடர் அல்லது டால்கம் பவுடரை போட்டுக்கொள்ளலாம்.
சிலர் ஒரு நாள் அணிந்த ஆடைகளை மடித்து பீரோவில் வைத்துவிட்டுச் சில நாட்கள் கழித்து அவற்றையே துவைக்காமல் சுழற்சி முறையில் மறுபடியும் அணிவார்கள். அந்த ஆடைகளில் ஏற்கெனவே படிந்துவிட்ட வியர்வையும் வியர்வை நாற்றமும் நிச்சயம் இருக்கும். ஆண்களாக இருந்தால் அதிகமாக வியர்வை சுரக்கும் காலங்களில் கை வைத்த பனியனை அணிவது நல்லது. இதனால் நேரடியாகச் சட்டையில் வியர்வைக் கறைபடுவதைத் தவிர்க்கலாம்.'


http://pettagum.blogspot.in/2012/07/blog-post_6347.html



--
*more articles click*
www.sahabudeen.com