Sunday, September 25, 2016

உங்கள் செல்லக் குழந்தைகள் கோபம் கொள்கின்றனரா? இதோ கையாள வழிகள்

குழந்தைகளை கையாளுவது அவ்வளவு சுலபமான விடயமல்ல.

கோபத்தில் அவர்களைச் சமாளிப்பது வெறுப்படைய வைப்பதுடன் சற்றும் சுவாரஸ்யமாக இருக்காது. அதே நேரம் அவர்களை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம்.

இதோ குழந்தைகள் கோபம் கொள்ளும்போது அவர்களை எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம்.

கோபத்தில் அமைதியாக கவனித்தல்

குழந்தைகள் கோபம் கொண்டு அழும்போதோ அல்லது ஏதாவது பொருட்களை தூக்கி உடைக்கும்போதோ, பதிலுக்கு நாம் அவர்கள் மேல் கோபம் கொள்ள கூடாது.

அந்த நேரங்களில் அமைதி காப்பது வேண்டாத விளைவுகளைத் தடுப்பதுடன், குழப்பங்களையும் குறைக்கும். உங்கள் அமைதியான நிலை, கோபத்தில் இருக்கும் உங்கள் குழந்தையை அமைதிப்படுத்தும்.

குழந்தைகள் அமைதியடைந்தவுடன் அவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள்.

உடல் ரீதியான அடக்குமுறைகள் கூடாது

குழந்தைகள் கோபத்தின் உச்சிக்கு செல்லும்போது பதிலுக்கு நீங்களும் கோபத்தின் உச்சிக்கு சென்று அவர்களை அடிக்க கூடாது.

அவ்வாறு உடல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டால், பின்னர் குழந்தைகளை அமைதிப்படுத்தும் உங்கள் முயற்சியில் நீங்கள் நம்பிக்கையிழக்க வேண்டியிருக்கும். கலவரம் புகுந்து கொண்டு அமைதி என்பது பெற முடியாத ஒன்றாக ஆகிவிடும்.

உடல் ரீதியான உணர்வு வெளிப்பாடுகள் உங்கள் குழந்தையின் உணர்வுகளைத் தூண்டும் விதமாக அமைந்து, உங்கள் எதிர்ப்பார்ப்பிற்கு நேர்மாறாக அவர்கள் செயல்பட வழிவகுக்கும்.

அவ்வாறு கோபம் கொள்வது எந்த விதத்திலும் நிலைமையை சரிசெய்யவோ அல்லது அமைதியை ஏற்படுத்தவோ உதவாது என்பதால், இந்த வழிமுறை பயனற்றுவிடுகிறது.

எடுத்துக் கூறுங்கள்

கோபத்திற்குப் பிறகு அமைதி திரும்பியவுடன், நடந்தவற்றைக் குறித்துப் பேசுவது மிகவும் முக்கியம்.

குழந்தையை அரவணைத்துப் பேசுவதன் மூலம் அந்தக் குழந்தை தான் கவனிக்கப்படுவதை உணர்கிறது. கோபத்தின் போது உணர்வுகளை வெளிக்காட்ட உள்ள பல்வேறு வழிமுறைகள் குறித்து குழந்தைக்கு அறிவுறுத்துவது ஒரு சிறப்பான தொடக்கமாக அமையும்.

நீங்கள் கோபத்தை எப்படி சமாளிப்பீர்கள் என்று காண்பியுங்கள்

மற்றவர்களை பார்த்து தெரிந்து கொள்வதில் குழந்தைகள் கில்லாடிகள்.

இதனால் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கோபத்தை சமாளிப்பது எப்படி என்பதைக் காண்பிப்பது அவசியமாகிறது. உங்களை வெறுப்படையச் செய்யும் விஷயங்களைக் குறித்துப் பேசுங்கள்.

நீங்கள் அதை எப்படிச் சமாளிப்பீர்கள் என்பதை எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி அவர்களுக்குக் காட்டுங்கள். குழந்தை தேவையான போது உங்களை அரவணைக்க ஊக்கப்படுத்துங்கள்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Friday, September 23, 2016

வேலையிலிருந்து விலகுபவர்கள் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

திறமையும் அனுபவமும் இருந்தால் ஒரு நிறுவனத்திலிருந்து விலகி வேறொரு நிறுவனத்தில் வேலைக்கு சேருவது என்கிற போக்கு இன்றைக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 'நிறுவனத்துக்கு விசுவாசமாக இருப்பது என்கிற போக்கு' இப்போது கிடையாது. எல்லாமே கார்ப்பரேட் மயம். எனது பணிக்கு இவ்வளவு சம்பளம் எதிர்ப்பார்க்கிறேன் என்று தெளிவாக சொன்னால்தான் நிறுவனங்கள் வேலை கொடுக்கின்றன. முன்பு போல ஒருவரே எல்லா வேலையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்வதில்லை. குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்தால் போதும் என்கிற 'ஸ்பெசாலிட்டி' கான்செப்ட் வந்துவிட்டது.
ஒரு நிறுவனத்தில் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் இருப்பதே அபூர்வமாக பார்க்கப்படுகிறது. அதேபோல அடுத்தடுத்த வாய்ப்புகளை தேடிக்கொண்டே இருப்பதுதான் புத்திசாலித்தனம் என்கிறது இந்த ஐடி யுகம். ஆண்டு சம்பள உயர்வை எதிர்பார்த்து வேலை செய்வதை விட, அனுபவத்தைக் கொண்டு அடுத்தடுத்த நிறுவனங்கள் மாறும்போது ஊதிய அளவும் இரண்டு மடங்கு உயர்ந்து விடுகிறது. வேலை மாறுவதில் இப்போதைய டிரண்ட் இதுதான் என்கின்றன மனிதவள நிறுவனங்கள்.        
 
புதிய நிறுவனத்தில் பணிக்கு சேரும்போது நம் மீதும், நமது வேலையின் மீதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த எதிர்பார்ப்புகளை அறிந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்வோம். ஆனால் வேலையை விட்டு விலகுகிறோம் என்று முடிவெடுக்கும் பணியாளர்கள் பக்குவமாக நடந்து கொள்வதில்லை என்கிறது ஒரு ஆய்வு. அதாவது வேலையை விட்டு விலக முடிவெடுக்கும் பணியாளர் தன்னிடம் உள்ள நிறுவன வேலைகளை முடித்து கொடுக்காமல் இருப்பது அல்லது வேலைகள் குறித்த விவரங்களை எடுத்துக் கொள்வது, கடைசி நாட்களில் ஆர்வமில்லாமல் வேலை பார்ப்பது என்பதாக இருக்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.

'வேலையை விட்டு விலகும் முடிவு எடுத்துவிட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற குழப்பம் இருக்கவே செய்யும். இந்த நேரங்களில் பொறுப்பாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்கின்றனர் மனிதவள துறையினர். இது குறித்து ஸ்ரீஹெச்.ஆர் கன்சல்டிங் இயக்குநர்
 
விக்னேஷ்வரன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
  

''ஒரு நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு விலகும் முடிவு எடுத்துவிட்டால் அதை வெளிப்படையாக அறிவிப்பதும், வேலையிலிருந்து விலகும் நாள் வரை கொடுக்கபட்ட வேலையை முடித்து கொடுப்பதும் அவசியம். குறிப்பாக நிறுவனத்திலிருந்து விலகும் எண்ணம் கொண்ட பணியாளர் தற்போது பார்த்துவரும் வேலைகளை புதியவர்களிடம் ஒப்படைப்பது கூட அவர்களது கடமை என்று உணர வேண்டும். நிறுவனத்திலிருந்து சுமூகமாக வெளியேறுவதன் மூலம் துறை சார்ந்தவர்களிடம் உங்கள் நற்பெயர் நிலைக்கும். எனவே வேலையை விடும் சூழலில் நற்பெயரோடு வெளியேறுங்கள் என்றவர். இது போன்ற சூழலில் செய்யக்கூடாத 10 தவறுகள் என்ன என்பதையும் சுட்டிக்காட்டினார்.
 

திருடுவது அல்லது சேதப்படுத்துவது
வேலையை விடப்போகிறோம் என்று முடிவெடுத்தவுடன், நிறுவனத்தின் மீது அல்லது சக பணியாளர்கள் மீது பழிவாங்கும் உணர்ச்சிகளுக்கு ஆட்படுவார்கள். வரவேண்டிய சம்பளம் அல்லது பிற பலன்கள் நிறுத்தப்படுகிறது என்பதற்காக சொத்துக்களை சேதப்படுத்துவது அல்லது திருடுவது போன்ற செயல்களையும் செய்வார்கள். இதுபோன்ற செயல்கள் கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

உணர்ச்சிவசப்படுதல்
நிறுவனத்திலிருந்து வெளியேறும் சூழ்நிலையில், உங்களிடமிருந்து நிறுவனம் தொடர்ச்சியான உதவியை எதிர்பார்க்கலாம். இதுபோன்ற நிலைமைகளில் உணர்ச்சிவசப்படாமல் பொறுமை காக்க வேண்டும். வெளியேறப்போகிறோம் என்பதற்காக கோபப்படுவதோ அல்லது வேலைகளை புறக்கணிப்பதோ கூடாது. நீங்கள் அந்த வேலையில் ஏற்கனவே காட்டிய முனைப்பு, சாதனைகள் எல்லாவற்றையும் மறந்து விட வேண்டாம்.
 

மனம் தளரக்கூடாது
வேலையிலிருந்து விலகி கொள்ள அறிவித்து விட்டீர்கள். கடைசி நாட்கள் நெருங்கி வருகிறது. ஏற்கனவே நீங்கள் பார்த்து வரும் வேலைகளை உங்கள் சக பணியாளர்கள், உங்கள் பங்களிப்பு இல்லாமல் பணியாற்ற தொடங்கலாம். இதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. வாய்ப்பு இருக்கும்போது கடைசி நாளாக இருந்தாலும் உங்கள் பங்களிப்பைப் கொடுக்க வேண்டும்.
 

மாற்றத்தைத் திட்டமிடல்
வேலையிலிருந்து வெளியேறியப் பிறகும் உங்கள் உதவி நிறுவனத்துக்கு தேவைப்படும். உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு புராஜெக்டிலிருந்து நீங்கள் திடீரென விலகியிருக்கலாம். அதுபோன்ற நிலைமையில் உங்களுக்கு பின்னால் வருபவர்களுக்கு நிலைமையை சமாளிக்க உங்களது அனுபவம் தேவைப்படும். இதற்கு ஏற்ப உதவி மற்றும் ஆலோசனைகள் கொடுக்கல் வேண்டும். அவசரத்துக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண், இமெயில் முகவரிகள் கொடுப்பது நல்லது. இது உங்கள் மீது நன்மதிப்பை உயர்த்தும்.
பணி விலகல் கடிதம்
பணியைவிட்டு வெளியேற முடிவெடுத்த பிறகு, அந்த நிறுவனத்தில் நீங்கள் மேற்கொண்ட வேலை தொடர்புடையை அனைத்து ஆவணங்களையும் முறையாக ஒப்படைக்க வேண்டும். மேலும், நிறுவனத்தில் நீங்கள் சம்பந்தபட்ட அனைத்து துறைகளுக்கும் தெரியப்படுத்தி எந்த நிலுவையும் இல்லை என சான்றிதழ் வாஙகிக்கொள்ள வேண்டும். அதாவது ஹெச்.ஆர்., அக்கவுண்ட்ஸ், ஐடி, மற்றும் உங்களது அணி தலைவர் என அனைவரிடமிருந்தும் உங்கள் தனிப்பட்ட மெயில் ஐ.டி.க்கு இந்த சான்றிதழ் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.
 

நிலுவைத் தொகைகள்
நிறுவனத்திலிருந்து உங்களுக்கு வரவேண்டிய நிலுவைகளளை பெற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக பயணப்படி, மெடிக்கல் பில், நிலுவை ஊதியம் அனைத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட புராஜெக்டிற்காக வெளியிலிருந்து பெற்றுத்தர வேண்டுமெனில் அதற்கு முன்பணம் அல்லது பின் தேதியிட்ட காசோலை வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது குறிப்பிட்ட தேதிக்குள் செட்டில்மெண்ட் செய்து கொள்வது போல எழுதி வாங்கி கொள்ள வேண்டும்.
 

எஃக்ஸிட் இண்டர்வியூ
எஃக்ஸிட் இன்டர்வியூ என்கிற நடைமுறை சில நிறுவனங்களில் இருக்கும். இதில் கலந்து கொண்டு உங்கள் கருத்தை தெரிவிக்கலாம். இந்த நேர்காணலில் அளவறிந்து, தேவையறிந்து மட்டும் பேசினால் போதும். வேலையின் மீதும், தனிநபர்கள் மீதும் குற்றம் சாட்டும் விதமாக இல்லாமல், நீங்கள் பார்த்த வேலையில் அடைந்த திருப்தி, அதை மேம்படுத்த செய்ய வேண்டியது என்ன என்பதாக இருக்க வேண்டும் அல்லது அந்த அணி, வேலை சிறப்பாக செயல்பட ஆலோசனைகள் கொடுப்பதாக இருக்க வேண்டும்.
 

பி,எஃப் கணக்கு
நிறுவனத்திலிருந்து வெளியேறும் முன் உங்களது சேமநல நிதி கணக்கு விவரங்களை தெளிவாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த வேலையில் சேர காலதாமதம் ஆகும்பட்சத்தில், சேமநல நிதி தொகையை எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் இது உங்கள் ஓய்வுகால சேமிப்பு என்பதால் அவசரப்பட்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டாம். இது உங்களது சேமிப்பு அல்லது சொத்து என்று கருதிக் கொள்ளுங்கள். அடுத்த நிறுவனத்தில் சேர்ந்தாலும் சேமநல நிதி கணக்கை அப்படியே மாற்றிக் கொள்ளலாம் .
எதிர்காலம் குறித்து விவாதம் வேண்டாம்
தற்போது இணைந்து வேலைபார்க்கும் சக பணியாளர்களுடம் உங்களது எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அடுத்த வேலையில் சேரும் நாள் வரையிலும் உங்களது அடுத்த திட்டம் குறித்து பேசக் கூடாது. வேலை உறுதியான பிறகு, அதாவது அடுத்த வேலைக்கான உத்திரவாதமான கடிதம் வந்த பிறகு சொல்லுங்கள். அதுவும்கூட பிரமாதமான வேலை என்கிற ரீதியில் இருக்க கூடாது. இது அதிருப்தி அல்லது எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும். அல்லது எதிர்பாராதவிதமாக அந்த வேலை கைவிட்டுப் போகிறது எனில் நீங்கள் கேலி பேச்சுக்கு ஆளாகலாம்.

தன்விவர குறிப்பு
உங்களுடைய தன்விவரக் குறிப்பு உண்மை கொண்டதாக இருக்க வேண்டும். புதிய வேலையை எடுத்துக் கொள்வதற்காக உத்வேகம் கொண்டதாக இருக்க வேண்டும். தற்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை மற்றும் அதில் காட்டிய ஈடுபாடு, சாதனைகள் குறிப்பிடுவதாக இருந்தால் போதும். தெரியாத வேலைகள் குறித்து தகவல்கள் இருக்கக்கூடாது. பெரும்பாலான நிறுவனங்கள் தன்விவர குறிப்பை, அதற்கென்று உள்ள ஆய்வு நிறுவனங்கள் மூலம் சோதிக்கின்றன. அவர்களின் அறிக்கை அடிப்படையிலேயே வேலைவாய்ப்பை வழங்குகின்றன. தவிர 'குயிக் ரெஃபரன்ஸ்' என்கிற அடிப்படையில் நீங்கள் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் நிறுவனத்திலும் விசாரிப்பார்கள். இந்த குயிக் ரெஃபரன்ஸ் அறிக்கையின் அடிப்படையிலும் புதிய வேலைவாய்ப்பு தீர்மானமாகலாம்" என்றார்.

பணியாற்றிய காலத்தில் எத்தனை நல்ல பெயர் எடுத்திருந்தாலும், வேலையை விடுவது என முடிவெடுத்த பிறகு எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களது நல்ல பெயர் நிற்கும். எனவே இந்த தவறுகளை தவிர்த்தால், நிறுவனத்தின் கடைசி நாளிலும் கைக்குலுக்கி விடை பெறலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Wednesday, September 21, 2016

எழுபது பெரிய பாவங்கள்!

1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்)
எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் தங்குமிடம் நரகம்தான். (இத்தகைய) அக்கிரமக்காரர்களூக்கு (மறுமையில்) உதவி செய்வோர் ஒருவருமில்லை. (5:72)

எவன் பிறரின் பாராட்டுக்காக நற்செயல் புரிகிறானோ அவனை அல்லாஹ் அவ்வாறே ஆக்கிவிடுகிறான். (அந்த நற்செயல்களுக்கு அல்லாஹ்விடம் நன்மை கிடையாது) என நபி(ஸல்) அவர்;கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ)
2. கொலை
எவர் ஒரு விசுவாசியை (அவர் விசுவாசி என்று நன்கறிந்திருக்கும் நிலையில்) வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான். அதில் அவன் (என்றென்றும்) தங்கியும் விடுவான். அவன் மீது அல்லாஹ் கோபங்கொண்டு அவனைச் சபித்தும் விடுவான் (இதனை) அன்றி மகத்தான வேதனையையும் அவனுக்குச் தயாராக்கி வைத்திருக்கின்றான். (4:93)

ஒரு விசுவாசியைக் கொலை செய்வது இவ்வுலகம் அழிவதை விட அல்லாஹ்விடம் பயங்கரமானதாகும் என நபி(ஸல்) அவர்;கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம், திர்மிதி, நஸயீ, பைஹகீ, இஹ்பானீ, இப்னுமாஜா)
3. சூனியம்
அழிவின்பால் உங்களை இட்டுச் செல்லக் கூடிய ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்ற நபி மொழியில் இரண்டாவது இடத்தைப் பெறுவது சூனியமாகும். (புகாரி, முஸ்லம், அபுதாவூத், நஸயீ)

மூவர் சுவர்க்கம் நுழையமாட்டார்கள்: மதுவில் மூழ்கியிருப்பவன், உறவினரை வெறுப்பவன்,சூனியத்தை உண்மைப்படுத்துபவன் என நபி(ஸல்) அவர்;கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத், ஹாகீம், இப்னுஹிப்பான், அபூயஹ்லா)
மந்திரித்தலும், தாயத்துக் கட்டுவதும், நூல் கட்டுவதும் ஷிர்க்காகும் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத், இப்னுஹிப்பான், ஹாகிம்)
4. தொழுகையை வீணாக்கி விடுதல்
ஷதங்கள் தொழுகையில் பாராமுகமாயிருக்கும் (நயவஞ்சகமான) தொழுகையாளிகளுக்கு கேடுதான்.(107:4,5)

மறுமையில் முதலாவதாக மனிதனிடம் தொழுகையைப் பற்றித்தான் கேள்வி கேட்கப்படும் தொழுகை ஒழுங்காக நிறைவேற்றப்பட்டிருந்தால் வெற்றியடைந்த நற்பாக்கியவானாவான். தொழுகையில் குறைபாடுள்ளவன் நஷ்டமடைந்த துர்ப்பாக்கியவானாவான் என நபி(ஸல்) அவர்;கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத், திhமிதீ, இப்னுமாஜா, அஹ்மத்)
5. ஸக்காத்தை கொடுக்க மறுத்தல்
அல்லாஹ் தன் அருளைக் கொண்டு அவர்களுக்கு அளித்த பொருட்களில் எவர்கள் உலோபித்தனம் செய்கின்றார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிவிடவேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே முடியும். எதை அவர்கள் உலோபித்தனம் செய்தார்களோ அதைக் கொண்டு மறுமை நாளில் அவர்கள் கழுத்தில் மாலையாக மாட்டப்படுவார்கள். (3:180)

கொடுமை புரியும் தலைவன், ஸக்காத்து கொடுக்காதவன், பெருமையடிக்கும் ஏழை ஆகிய மூவரும் தான் நரகில் முதலாவதாக நுழைவார்கள் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு குஸைமா, இப்னுஹிப்பான்)
6. நோன்பை விடுதல்
விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டிருந்த பிரகாரமே உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதியாக்கப்பட்டிருக்கின்றது (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம். இவ்விதம் விதிக்கப்பட்ட நோன்பு சில குறிப்பிட்ட நாட்களில் (நோற்பது கடமையாகும்).. (2:183,184)

எவன் ஒருவன் எவ்வித காரணமுமின்றி ரமழான் மாதத்தில் நோன்பை விடுகிறானோ அவன், ஏனைய நாட்கள் எல்லாம் நோன்பு வைத்தாலும் அதற்கு சமமாகாது என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, இப்னுகுஸைமா)
7. ஹஜ்ஜு செய்யாமை
…..எவர்கள் அங்கு யாத்திரை செல்ல, சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அவ்வாலயத்தை ஹஜ்ஜு செய்வது கடமையாகும்… (3:97)

8. பெற்றோரைத் துன்புறுத்துதல்
…… (மனிதனே!) நீ எனக்கும் உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்துவாயாக! (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதாயிருக்கிறது. (31:14)

பொற்றோரின் திருப்தி அல்லாஹ்வின் திருப்தியாகும். பெற்றோரின் வெறுப்பு அல்லாஹ்வின் வெறுப்பாகும் (திர்மிதீ, இப்னுஹிப்பான், ஹாகிம்)
தாயின் காலடியில் சுவர்க்கமிருக்கிறது என நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (நஸயீ, இப்னுமாஜா)
9. உறவினர்களை வெறுத்தல்
உறவினர்களை வெறுப்பவன் சுவனம் புக மாட்டான் (புகாரி, முஸ்லிம்)

எவன் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டானோ அவன், தன் உறவினர்களை இணைத்து நடப்பானாக! (புகாரி, அபூதாவூத், திர்மிதீ)
10. விபச்சாரம்
(விசுவாசிகளே!) நீங்கள் விபச்சாரத்தின் அருகேகூட நெருங்க வேண்டாம். ஏனென்றால் அது மானக் கேடானதாகவும் தீய வழியாகவுமிருக்கிறது (17:32)

கண்ணின் விபச்சாரம் அந்நியப் பெண்ணைப் பார்த்தல், நாவின் விபச்சாரம் (அவளுடன்) பேசுதல், கையின் விபச்சாரம் (பெண்ணைப்) பிடித்தல், காலின் விபச்சாரம் (அவளைத் தேடி) நடத்தல். மர்மஸ்தானங்கள் இவைகளை உண்மைப்படுத்துகின்றன அல்லது பொய்யாக்குகின்றன என நபி அவர்கள் கூறியுள்ளார்கள.; (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)
11. ஆண் புணர்ச்சி
லூத் நபியின் கூட்டத்தினர் செய்த கொடிய (ஆண் புணர்ச்சி) எனும் பாவத்தைச் செய்பவர்களைக் கண்டால் இருவரையும் கொலை செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)

ஆணுடைய அல்லது பெண்ணுடைய பின் துவாரத்தில் புணர்ந்தவனை அல்லாஹ் மறுமையில் கருணைக் கண்கொண்டு பார்க்கமாட்டான் எனவும் நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, நஸயீ, இப்னுஹிப்பான்)
12. வட்டி
விசுவாசிகளே! (அசலுக்கு அதிகமாவும், வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக் கூடிய வட்டியை (வாங்கி) உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதனைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். (3:130)

வட்டியின் பாவங்கள் எழுபது பிரிவுகளையுடையன. அதில் மிகவும் இலேசானது ஒருவன் தன் தாயைப் புணர்வது போன்ற பாவமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா, பைஹகீ)
13. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுதல்
எவர்கள் அனாதைகளின் பொருட்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கிறார்கள். பின்னர் (மறுமையில்) அவர்கள் கொழுந்து விட்டெரியும் நெருப்பிளும் நுழைவார்கள். (4:10)

அனாதைகளின் பொருளை அவர்கள் பிராயமடையும் வரையில் நியாயமான முறையிலன்றி, தொடாதீர்கள்… (6:152)
அனாதையைப் பொறுப்பேற்பவனும் நானும் சுவர்க்கத்தில் இணைந்து இருப்போம் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
14. அல்லாஹ்வின் மீதும் ரசூலின் மீதும் பொய்யுரைத்தல்
(நபியே!) அல்லாஹ்வின் மீது பொய் கூறும் இவர்களின் முகங்கள் மறுமை நாளன்று கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்… (39:60)

பொய்யெனத் தெரிந்தும் என் மீது பொய்யுரைப்பவன் பொய்யனாவான் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
15. யுத்த களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடுதல்
….உங்களில் (பொறுமையும்) சகிப்புத்தன்மை(யும்) உடைய இருபது பேர்களிருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொண்டு விடுவார்கள். (8:65)

16. தலைவன் அநீதி செய்தல்
எந்தத் தலைவனாவது தன் கீழுள்ளவர்களுக்கு எதிராக, சதி செய்தால் அவன் நரகவாதியாவான் (தப்ரானி)

எவனுக்கு அதிகாரமளிக்கப்பட்டு அதை அவன் முறையாக நிறைவேற்றவில்லையோ அவனுக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கிவிடுவான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)
17. பெருமை
நிச்சயமாக அவன் கர்வங்கொண்டவர்களை விரும்பமாட்டான். (16:23)
பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, மனிதர்களுக்கு அது எவ்வகையிலும் பொருந்தாது. கண்ணியம் எனது ஆடை, பெருமை எனது போர்வை என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
18. பொய்ச்சாட்சி கூறல்
பொய்ச் சாட்சியம் கூறுபவனின் பாதமிரண்டும் மறுமையில் அவன் நரகம் போகும் வரை அசையாமலிருக்கும் என நபி அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா, ஹாகிம்)

19. மது அருந்துதல்
எவன் இவ்வுலகில் மது அருந்துகிறானோ அவன் மறுமையில் நரகவாதிகளின் ஊணைக் (சீழை) குடிப்பான் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ)

அல்லாஹ் என்னுடைய உம்மத்திற்கு மதுவை மருந்தாக ஆக்கவில்லை. (மது சேர்ந்த மருந்தும்கூட ஹராம்) என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (பைஹகீ, அஹ்மத், ஹாகிம்)
20. சூது
விசுவாசிகளே! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமும், விக்கிரக ஆராதனையும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.

21. கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லல்
எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி (அதனை நிரூபிக்க) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையோ அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அ(த்தயைக)வர்கள் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள் (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் (வரம்பு மீறிய) தீயவர்கள். (24:4)

22. மோசடி செய்தல்
"மோசம்" செய்வது எந்த நபிக்கும் தகுதியன்று. எவரேனும் மோசடிசெய்தால் அவர் அந்த மோசடி செய்த பொருளையும் மறுமை நாளில் (தம்முடன்) கொண்டு வரவேண்டியிருக்கும்… (3:161)
23. களவு
ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் இ(த்தீ)ச் செயலுக்கு அல்லாஹ்விடமிருந்து உள்ள தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தோனும் ஞானமுடையோனுமாகியிருக்கிறான். (5:38)

24. வழிப்பறி
ஒருவன் திருடினால் கையை வெட்டுங்கள், மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால் காலை வெட்டுங்கள், மீண்டும் செய்தால் மற்றக் கையை வெட்டுங்கள், மீண்டும் செய்தால் மற்றக் காலை வெட்டுங்கள் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (அபூதாவூத், நஸயீ)

25. பொய்ச் சத்தியம்
மறுயைமில் அல்லாஹ் மூவரின் பாவத்தை மன்னிக்கமாட்டான், அவர்களோடு பேசவும் மாட்டான் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு அவர்கள் யாவரெனில்

1. தரையில் படும்படி உடை உடுப்பவன்,
2. கொடுத்ததைச் சொல்லிக்காட்டுபவன்,
3. பொய்ச்சத்தியம் செய்து தன் பொருளை விற்பவன் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)
26. அநீதி இழைத்தல்
அடியார்களே! எனக்கு நானே அநீதத்தை ஹராமாக்கியுள்ளேன். அதை உங்களுக்கிடையிலும் ஹராமாக்கியுள்ளேன். ஒருவருக்கொருவர் அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்! என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதீ)

27. கப்பம் பெறல்
(குற்றம் சுமத்த) வழி ஏற்படுவதெல்லாம் மனிதர்களுக்கு அநியாயம் செய்து நியாயமின்றி, பூமியில் கொடுமை செய்கிறார்களே, அவர்கள் மீதுதான், அத்தகையோர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. (42:42)

28. தகாத உணவு
நீங்கள் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் உண்ணவேண்டாம் (2:188)

அனஸ்! உன் உழைப்பைச் சுத்தமானதாக்கிக் கொள்! தகாத உழைப்பிலிருந்து ஒரே ஒரு கவளம் உடலினுள் சென்றால் நாற்பது நாட்களுக்கு பிரார்த்தனைகள் ஒப்புக் கொள்ளப்படமாட்டாது (தப்ரானீ)
29. தற்கொலை
எவன் இரும்பு ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்வானோ அவன் அதே ஆயுதத்தால் நரகில் துன்பமனுபவிப்பான். விஷமருந்தி உயிரைப் போக்கியவன் தன் கையில் விஷத்தை வைத்துக் கொண்டே நரகில் துன்பப்படுவான். மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்தவன் நரகக் குழியில் குதித்துக் கொண்டேயிருப்பான். எப்பொழுதும் மீட்சியைக் காணவே மாட்டான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ)

30. பொய்
யார் வரம்பு மீறுவதுடன் பொய்யராகவும் இருக்கிறாரோ அவரை நிச்சயமாக அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான். (40:28)

மாபெரும் சதியாதெனில் மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
31. கெட்ட நீதிபதி
எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே (5:44)

32. அதிகாரியின் இலஞ்சம்
இலஞ்சம் வாங்குபவனையும், கொடுப்பவனையும் அல்லாஹ் சபிப்பானாக என நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, ஹாகிம்)

33. ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேஷமிடுதல்
ஆணுக்கொப்பாகும் பெண்ணையும், பெண்ணுக்கொப்பாகும் ஆணையும் அல்லாஹ் சபிப்பானாக! என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா)

34. கூட்டிக் கொடுத்தல்
(கேவலமான) ஒரு விபச்சாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபச்சாரியை அல்லது இணை வைத்து வணங்குபவளை அன்றி (வேறு ஒருத்தியையும்) மணந்து கொள்ள மாட்டான். ஒரு விபச்சாரி ஒரு விபச்சாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி வேறு எவரையும் மணந்து கொள்ள மாட்டாள். இத்தகைய திருமணம் விசுவாசிகளுக்கு தடுக்கப்பட்டிருக்கிறது. (24:3)

35. ஆகாததை ஆகுமாக்குபவன்
36. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை
(நபியே!) உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும்: அசுத்தங்களை வெறுத்து விடும் (74:4,5)

37. முகஸ்துதி
சிறிதளவாவது முகஸ்துதி சேர்ந்தால் அச்செயல் ஷிர்க்கை ஒத்ததாகும். அது பாவமுமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (ஹாகிம், தப்ரானி)

38. கற்ற கல்வியை மறைத்தல்
'அறிஞர்களிடம் வாதிட்டு வெல்வதற்கும்', பாமரமக்களிடம் 'அறிவாளி' எனப் பெயர் எடுப்பதற்கும், 'மக்களைத் தன்பக்கம் திருப்புவதற்கும் கல்வி கற்பவனை' அல்லாஹ் நரகில் நுழையவைப்பான் என நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

39. சதி செய்தல்
நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெறவிட மாட்டான் (12:52)

சதியும், பொய்யும் இல்லாத எல்லா விஷயங்களையும் அல்லாஹ் பதிந்து கொள்கிறான் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
40. செய்த நன்மைகளை சொல்லிக் காட்டுதல்
"சதி செய்பவனும், உலோபியும், செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும்" சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (நஸாயி, திர்மிதி)
41. விதியைப் பொய்ப்படுத்துதல்
எல்லாச் சமூகத்தவர்களிலும் மஜுஸிகள் (நெருப்பை வணங்கும் மிகக் கெட்டவர்கள்) உள்ளனர். என் உம்மத்தின் மஜுஸிகள் விதியைப் பொய்யாக்குபவர்களாவர் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

42. மற்றவர்களின் இரகசியம்
ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: நாங்கள் அப்போது சிறுவர்களாக இருந்தோம். எங்களிடம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு என்னை ஒரு தேவையின் நிமித்தம் (ஒரு இடத்துக்கு) அனுப்பினார்கள். நான் திரும்பி வரும் வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாதையில் ஓரிடத்தில் அமர்ந்து என்னை எதிர்ப்பார்த்தார்கள். நான் என் தாயார் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சற்று தாமதித்து விட்டேன். அப்போது அன்னையவர்கள் எங்கு சென்றாய்? என விசாரித்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு தேவையின் நிமித்தம் அனுப்பியுள்ளார்கள் எனக் கூறினேன்.

அது என்ன? என என் தாயார் வினவினார்கள்.
உடனே நான் அது இரகசியம். (சொல்ல மாட்டேன்) என்றேன். அப்போது உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்; ரஸூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரகசியத்தைப் பேணிக் கொள் (சொல்ல வேண்டாம்) எனக் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திரிமிதீ)

43. கோளுரைத்தல்
இழிந்தவனான, அதிகம் சத்தியம் செய்யக்கூடிய ஒவ்வொருவனுக்கும் நீர் கீழ்படியாதீர். (அவன் மனிதர்களின் தன்மானங்களில்) குறைபேசித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். (68:10,11)

44. திட்டுதல் (சபித்தல்)
ஒரு முஸ்லிமைத் திட்டுவது கெட்டதாகும். அவனைக் கொலை செய்வது குஃப்ராகும் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி)

45. வாக்கு மாறுதல்
விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள் (5:1)

நயவஞ்சகனின் அடையாளம் மூன்று: அவன் தொழுதாலும், நோன்பு பிடித்தாலும் தான், ஒரு முஸ்லிம் என எண்ணிக் கொண்டாலும் சரியே (நயவஞ்சகனேயாவான்)
1. பேசினால் பொய்யுரைப்பான்
2. வாக்களித்தால் மாறு செய்வான்
3. நம்பினால் மோசடி செய்வான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
46. ஜோதிடனை உண்மைப்படுத்துதல்
எவரொருவர் ஜோதிடனை அணுகி, எதைப்பற்றியாவது கேட்டு அவன் கூறியதை உண்மை என நம்பிக்கை கொள்வாராயின் அவரது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

47. கணவனுக்கு மாறு செய்தல்
எவளும் (கணவனுக்கு) மாறுசெய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையிலிருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள், (அதிலும் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு வழிப்பட்டு விட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும், மிகப்பெரியவனுமாக இருக்கிறான். (4:34)

48. உருவப் படம் வரைதல்
நாயும், உருவப்படங்களுமுள்ள வீட்டில் மலக்குகள் நுழையமாட்டார்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

49. ஒப்பாரி வைத்து அழுதல்
ஓலமிட்டு அழுபவள் மரணத்திற்கு முன் தௌபாச் செய்யவில்லையானால் தாரினால் ஆன சட்டை போடப்பட்டு நரகில் வேதனை செய்யப்படுவாள் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், இப்னுமாஜா)

50. கொடுமை செய்தல்
(அளவு மீறி) மனிதர்கள் மீது அக்கிரமங்கள் செய்து நியாயமின்றி பூமியில் கொடுமை செய்வோருக்கு எதிராகத்தான் (குற்றஞ் சாட்ட) வழி இருக்கிறது. இத்தகையோருக்கு மிகத்துன்புறுத்தும் வேதனையுண்டு. (42:42)

51. வரம்பு மீறுதல்
எவன் பெருமைக்காக ஆடையை பூமியில் படும்படி (உடுத்தி) இழுத்து (நடக்கின்றானோ) அவனை மறுமையில் அல்லாஹ் கருணைக் கண்கொண்டு பார்க்கமாட்டான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸாயி)

52. அயல் வீட்டாரைத் துன்புறுத்துதல்
அபூதர்ரே! நீர் கறி சமைத்தால் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கொடுப்பதற்காக அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அண்டை வீட்டார் பசித்திருக்கும்போது வயிறாற உண்பவன் மூஃமினல்லன் என நபி அவர்கள் கூறினார்கள். (ஹாகிம், பைஹகீ)
53. முஸ்லிம்களைத் துன்புறுத்துதல்
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் சகோதரராவார் சகோரத முஸ்லிமுக்கு அநீதமிழைப்பதோ அவரை அவமானப்படுத்துவதோ பழிப்பதோ கூடாது என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதீ)

54. துறவிகளைத் துன்புறுத்துதல்
எவன் என் நேசர்களைத் துன்புறுத்துகிறானோ அவனோடு நான் சண்டையிடுவேன் என அல்லாஹ் கூறியதாக நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

55. மமதையும், தற்பெருமையும்
பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! கர்வங்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதேயில்லை. (31:18)

56. ஆண்கள் பட்டும், தங்கமும் அணிதல்
தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் உண்பதையும், குடிப்பதையும் பட்டாடைகளை அணிவதையும், அதில் உட்காருவதையும் நபி அவர்கள் தடுத்துள்ளார்கள் என அபூஹுதைபா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

ஒரு மனிதரின் கையில் தங்கத்தினாலான மோதிரம் இருப்பதை நபியவர்கள் கண்டு அதனைக் கழற்றிவிட்டு, யாரும் நரகத்து நெருப்புத் துண்டிலிருந்து ஒரு துண்டை அணிந்து கொள்வார்களா? எனக் கேட்டார்கள். (முஸ்லிம்)
ஒரு கையில் தங்கத்தையும், மற்றொரு கையில் பட்டாடையையும் எடுத்துக் காண்பித்து, இவையிரண்டும் என் உம்மத்திலுள்ள ஆண்களுக்கு ஹராமானதாகும் (விலக்கப்பட்டதாகும்) என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், நஸாயி)
57. அடிமை ஒளிந்தோடல்
நபி அவர்கள் காலத்தில் இந்த அடிமைப் பிரச்சினை இருந்தது. அவர்களுக்கென்று சில சட்டங்களும் இருந்தன. இப்போது உலகில் எங்குமே அடிமைகள் இல்லையாகையால் இதுபற்றிய விளக்கமும் தேவையில்லை என்றே எண்ணுகிறோம்.

58. அல்லாஹ்வுக்கன்றி பிறருக்கென அறுத்தல் (பலியிடுதல்)
அல்லாஹ் அல்லாதவருக்கு யார் அறுத்துப் பலியிடுகின்றாரோ அவருக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ் அல்லாதவருக்கு நேர்ச்சை செய்யவும் கூடாது. அறுத்துப்பலியிடுவதும் கூடாது. இப்படிப்பட்ட இறைச்சியை உண்பதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும்.
59. அந்நியனைத் தகப்பனாக ஏற்றல்
தன் சொந்த, தகப்பனைப் புறக்கணித்து விட்டு வேறொருவனைத் தகப்பனாக ஏற்றுக் கொள்பவன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

60. மேலதிக நீரைத்தடுத்தல்
'மற்றவனுடைய பயிர் செழிப்பாக வளரக்கூடாது' என்பதற்காக மேலதிக நீரைத் தடுத்து விடாதீர்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) எனவும்,

61. அளவை, நிறுவைகளில் மோசடி செய்தல்
நீங்கள் அளந்தால் பூரணமாக அளவுங்கள் நிறுத்தால் சரியான எடையைக்கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) நன்மையையும் மிக்க அழகான பலனையும் தரும். (17:35)

62. வாக்கு வாதம் புரிதல், மயக்கும் பேச்சுக்கள்
அல்லாஹ்விடத்தில் மிகக் கோபமான மனிதர்கள் வீண் விதண்டாவாதம் பண்ணுபவர்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

63. அல்லாஹ்வின் சோதனையில் அவநம்பிக்கை வைத்தல்
(சொல்லுங்கள் நபியே!) அல்லாஹ் எங்களுக்கு விதித்துள்ளதைத் தவிர (வேறொன்றும்) நிச்சயமாக எங்களை அணுகவே அணுகாது (9:51)

64. அல்லாஹ்வின் நேசர்களைத் துன்புறுத்துதல்
யார் என் நேசரை பகைக்கின்றாரோ அவரோடு நான் "யுத்தப் பிரகடனம்" செய்வேன் என அல்லாஹ் கூறியதாக நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

65. தனித்துத் தொழுதல்
ஜமாஅத்தோடு தொழும் தொழுகை, தனிமையில் தொழும் தொழுகையை விட இருபத்தி ஏழு மடங்கு சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

66. ஜும்ஆவைத் தவற விடல்
எவன் அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களைத் தவற விடுகிறானோ (நேர்வழியைத் தவறவிட்டவன் என்பதாக) "அவனது உள்ளத்தில் முத்திரையிடப்பட்டுவிடும்" என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

67. மரண சாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்
(மரண சாசனத்தைக் கொண்டு வாரிசுகளில் எவருக்கும்) நஷ்டத்தை உண்டு பண்ணாதவனாக இருக்க வேண்டும். (இது) அல்லாஹ்வுடைய கட்டளையாகும். அல்லாஹ் நன்கறிந்தோனும், மிகப்பொறுமை உடையோனுமாக இருக்கிறான். (4:12-14)

68. சூழ்ச்சி செய்தல், வஞ்சித்தல்
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்து விடுவான். (4:142)

69. உளவு பார்த்தலும், துப்புக் கொடுத்தலும்
யுத்த காலங்களில் எதிரியின் நிலைகளை அறிவதற்காக மட்டும் உளவு பார்க்க அனுமதியுண்டு. ஒரு தளபதி இதற்காகச் சிலரை உளவாளிகளாக ஊதியங்கொடுத்து வைத்துக் கொள்ளவும் முடியும். நபிÉ அவர்கள் உளவு பார்க்க சில தோழர்களை யுத்த காலங்களில் அனுப்பியுள்ளார்கள்.

70. நபித் தோழர்களைத் தூஷித்தல்
முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாத்தில்) முதலாவதாக முந்திக்(கொண்டு விசுவாசங்) கொண்டார்களோ அவர்களையும், நற்கருமங்களில் அவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகிறான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். (9:100)



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Monday, September 19, 2016

நல்லறம் செய்வோம் நமக்காக!

ஸலாம் கூறுதல்!
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், '(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி.
நாவைப் பேணுதல்!
'
முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது 'எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களே அவரே!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), ஆதாரம் : புகாரி.

வாக்குறுதியை நிறைவேற்றுதல்!
"(நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்" (அல்-குர்ஆன் 17:34)
கோபத்தை அடக்குதல்!
"(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்" (அல்-குர்ஆன் 3:134)
பொறுமையைக் கடைபிடித்தல்!

"முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (அல்-குர்ஆன் 3:200)
நயவஞ்சகத் தன்மைகளை விட்டும் விலகியிருத்தல்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முனாபிஃக்கின் அடையாளம் மூன்று. 1) பேசினால் பொய் பேசுவான்,2) வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான், 3) நம்பினால் மோசம் செய்வான். அறிவிப்பவர்:அபுஹுரைரா(ரலி), ஆதாரம் புகாரி,முஸ்லிம்.
பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுதல்!
"(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்" (அல்-குர்ஆன் 24:30)
வறியவர்களுக்கு உதவுதல்!
"மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்" (அல்-குர்ஆன் 76:8)
விருந்தினரைக் கண்ணியப்படுத்துல், மற்றும் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழுதல்!
"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.
பிறர் வீடுகளில் நுழைவதற்கு முன் வீட்டில் உள்ளவர்களிடம் அனுமதி பெறுதல்!
"ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது)" (அல்-குர்ஆன் 24:27)
பெற்றோர்களைப் பேணுதல்!
"அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், 'என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!' என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்-குர்ஆன் 17:23-24)

மனைவியிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுதல்!
குணத்தில் அழகானவரே ஈமானில் முழுமையானவர். தன் மனைவியிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்பவரே உங்களில் சிறந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : திர்மிதி.
குடும்பத்தினர்களுக்கு செலவு செய்தல்!
தனது பொறுப்பிலுள்ளவர்களை ஒருவன் கவனிக்காமலிருப்பது அவன் பாவி என்பதற்கு போதுமான சான்றாகும். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ஆதாரம் : அஹ்மத், அபூதாவுத்.

உறவினர்களைப் பேணுதல்!
"நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்" (அல்-குர்ஆன் 16:90)
உறவினர்களுடன் சேர்ந்திருத்தல்!
தமது வாழ்வாதாரம் (பொருளாதாரம்) விசாலமாக்கப்படுவதும்,வாழ்நாள் நீடிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) மற்றும்அனஸ் இப்னு மாலிக் (ரலி) ஆதாரம்:புகாரி
சகோதர முஸ்லிமுடன் நட்புறவு கொள்ளுதல்!
"அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.
முஸ்லிம்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துதல்!
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்-குர்ஆன் 49:10)


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Saturday, September 17, 2016

தலைமுடி பராமரிக்கும் முறை!

வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலாம்.

இரண்டு முட்டைகளை உடைத்து அதில் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்த்தபின். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

செம்பருத்தி (செவ்வரத்தை) இலையை அரைத்து அதனை தலையில் தேய்த்து ஊறவிட்டு பின்னர் நன்கு அலசி விடலாம்.

இரவில் லேசான சூட்டில் தேங்காய் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு பின்னர் காலையில் தலைக்கு குளிக்கலாம்.

ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும். அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம் .

வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும் .

சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் .
வெந்தயம் ,வேப்பிலை, கறிவேபிள்ளை, பாசிபருப்பு, ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பளபளக்கும்.

ஹேர் ரையர் (hair dryer) அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு, முடியின் வேர்கள் பழுதடைந்து விடும். அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .

ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் கூந்தல் பளபளக்கும்.

முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன் ,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும் .

இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. .அது முற்றிலும் தவறு .தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் . அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.

எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும் . முடி உதிர்வதையும் தடுக்கலாம்.
கறிவேபிலை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.
 
http://pettagum.blogspot.in/2014/10/blog-post_48.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Thursday, September 15, 2016

தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது?

மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துமே ரசாயனக் கலப்பாகிவிட்டது.

வீட்டில் காய்ச்சி ஆறிய தண்ணீரைக் குடித்துவிட்டு வேறு இடங்களுக்கோ, விசேஷங்களுக்கோ செல்லும்போது அங்குள்ள தண்ணீரைக் குடித்தால், அடுத்த நாளே சளிபிடித்துவிடுகிறது.

மினரல் வாட்டர் என்று பாட்டில்களில், கேன்களில் கிடைக்கும் தண்ணீரைக்  குடித்துப் பழகிவிட்டோம். உண்மையில் அதில் ஊட்டச் சத்துக்கள் உள்ளனவா, சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் தண்ணீரில் உள்ள சத்துக்கள் நீக்கப்பட்டு வெறும் சக்கையான நீரைத்தான் பருகுகிறோமா என்று பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. நீரின் தன்மை பற்றி  சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் எழிலனிடம் கேட்டோம்.

'நம் உடலில் 50 முதல் 60 சதவிகிதம் வரை நீர்தான். ஒரு மனிதனுக்கு சராசரியாகத் தேவைப்படும் தண்ணீரின் அளவு என்பது அவனுடைய உடல், வாழும் இடத்தின் சுற்றுச்சூழல், வேலை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும். ஒருவருடைய உடல் எடையை வைத்து, அவருக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவைக் கணக்கிடலாம்.    அந்தக் காலத்தில் இயற்கையிலேயே மூலிகைகள் கலந்த, சூரிய ஒளிபட்ட, கிருமிகளை மீன் தின்று சுத்தம் செய்த நீரைத்தான் குடித்து வந்தோம். அப்படிப்பட்ட சுத்தமான தண்ணீர், இன்று மனிதர்
களால் மாசுபட்டுள்ளது.  நம் நாட்டில், சுத்தமான குடிநீர் என்பது வெறும் 33 சதவிகிதம் மட்டுமே. இதனால்தான் கிருமியால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது'' என்றார் டாக்டர் எழிலன்.

நாம் பருகும் நீர் எப்படி சுத்திகரிக்கப்படுகிறது என்பது பற்றி அக்வா டெக் சிஸ்டம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மூர்த்தியிடம் கேட்டோம்... 'வீட்டில் பொருத்தப்படும் வாட்டர் பியூரிஃபையரிலும், தண்ணீர் கேன் நிரப்பும் தொழிற் கூடங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்படுகிறது.  முதலில் கேண்டில் பில்டர் என்று சொல்லப்படும் தொழில்நுட்ப முறையில், இயற்கை மாசு வெளியேற்றப்பட்டு தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. 

எதிர்சவ்வூடு பரவல் தொழில் நுட்பத்தின்படி மைக்ரான் அளவிலான சவ்வு வழியாக சுத்திகரிக்கப்பட்ட நீர் செலுத்தப்படுகிறது. அதையடுத்து கார்பன் ஃபில்டர் செய்யப்படுகிறது. பின்னர் ஒரு மைக்ரான் சவ்வு வழியாகவும், அதனையடுத்து 0.0001 மைக்ரான் அளவிலான சவ்வு வழியாகவும் அனுப்பப்பட்டு, தண்ணீரில் இருக்கும் மாசுக்கள் அகற்றப்படுகின்றன. இப்படிக் கிடைக்கும் தண்ணீர் மிகவும் சுத்தமானது.

வீட்டில் பயன்படுத்தும் சில சுத்திகரிப்பான்களிலும், தொழிற்கூடங்களிலும் அல்ட்ராவயலட் கதிர்களால் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் கிருமிகள் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. இந்த முறையில் இருந்து பெறப்படும் நீரின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.

கேன் நிறுவனங்களில் தண்ணீர் சுத்திகரிக்கப்படும் முறை
இந்தியத் தர நிர்ணய விதிகளை, சில  நிறுவனங்கள் முறையாகக் கடைப்பிடிக்கின்றன. ஆனால், சில நிறுவனங்கள், தரமற்ற கேன்களை உபயோகப்படுத்துவதும் நடக்கிறது. சுத்திகரித்த தண்ணீர் சுகாதாரமற்ற கேன்களில் சேரும்போது, மீண்டும் தண்ணீரின் தரம் கெட்டுவிடுகிறது.

மினரல் வாட்டர் என்றால் என்ன?
காசு கொடுத்து வாங்கும் பாட்டில்களில் உள்ள தண்ணீர்தான் மினரல் வாட்டர் என்று நினைக்கிறோம். ஆனால், அது உண்மை  இல்லை. நாம் வாங்கும் பாட்டில்களில் இருக்கும் தண்ணீர்  'சுத்திகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட குடிநீர்' (packaged Drinking water) அவ்வளவு தான்.  மினரல் வாட்டர் என்பது கனிமங்கள் சரியான அளவில் கலக்கப்பட்ட சத்தான குடிநீர். ஒரு லிட்டர் தண்ணீரைத் தயாரிக்கவே 100 ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும்' என்றார்.
'தண்ணீரைச் சுத்தம் செய்ய, பல நவீன வசதிகள் வந்து விட்டாலும், அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் தண்ணீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படுத்திய முறைகள், அவற்றுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல' என்கிறார்  சித்த மருத்துவர் திருநாராயணன்.

மேலும் அவர் கூறுகையில் 'தண்ணீரின் கடினத்தன்மையை மாற்றுவதற்கு, அந்தக் காலத்தில் நெல்லிமரக் கட்டையையும் தேற்றாங் கொட்டையையும் (தேத்தா விதை) பயன்படுத்தினார்கள். அதில் இருக்கும் பாலிபீனால் என்னும் பொருள், தண்ணீரில் இருக்கும் தாதுக்களை மென்மையாக்குவதால், நீரின் கடினத்தன்மை குறைந்துவிடுகிறது.

முன்பெல்லாம் வீட்டுக் கொல்லையில் இருக்கும் கிணற்றில், நெல்லிமரக் கட்டையைப் போட்டுவைப்பது வழக்கம். அல்லது, தேற்றாங் கொட்டைகளைப் பொடித்து, ஒரு துணியில் கட்டி இறக்கிவிடுவார்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றுவார்கள். கிணற்றில் மட்டுமல்ல, பானையில் கூட தேத்தா விதைகளைப் பொடித்து, துணியில் கட்டிப் போட்டுவைக்கலாம்.இப்போதும் நம் வீடுகளில் வரும் நீர் கடின நீராக இருந்தால், சம்ப் மற்றும் மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகளில் நெல்லிக் கட்டை அல்லது தேத்தாங் கொட்டையைப் போட்டுவைக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.  

நீரைக் குடிக்கும் முறை
மோர் பெருக்கி, நீர் சுருக்கி, நெய் உருக்கி உண்பவர்தம் பேர் சொல்லப்போகுமே பிணி' என்பது தேரையர் பாடல்.
நீர் சுருக்கி' என்பது நீரைக் காய்ச்சி (அதாவது வற்ற வைத்து) குடிக்க வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. எனவே, காய்ச்சிய தண்ணீரைக் குடிக்கும் பழக்கமும் பாரம்பரியமாக   இருந்துவந்ததுதான். அதிலும், செம்புப் பாத்திரத்தில் காய்ச்சிக் குடித்தால், உடலில் இருக்கும் நிறமிகள் மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது.

தண்ணீர் சில மருத்துவப் பலன்கள்
  மருதம்பட்டையை, வெதுவெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, காலையில் அருந்தினால், இதயம் பலப்படும். ரத்தம் உறையாமைப் பிரச்னையைத் தடுக்கும் நல்ல மருந்து இது.
  சுத்தமான சந்தனத்தை உரைத்து, அதை மிளகு அளவு எடுத்து, 60 மி.லி. தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும்.
  பெருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வைத்திருந்து, மறுநாள் முழுக்கக் குடிப்பதற்கு அந்த நீரையே பயன்படுத்தி வந்தால், போதைப் பொருட்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும். மேலும், செரிமானத்தையும் சீராக்கும்.
  ஓமம் ஊறவைத்த தண்ணீரை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், செரிமானக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்போக்கு இருந்தாலும் கட்டுப்படுத்தும். நம் வீடுகளில் முன்பெல்லாம் 'ஓமவாட்டர்' கண்டிப்பாக இருக்கும். பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வயிற்றுப் பிரச்னைகள் ஏற்பட்டால், நல்ல மருந்து அது.
  நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் சதகுப்பையை, கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அருந்தினால் செரிமானத்தைச் சீராக்குவதுடன், வயிற்றை இழுத்துப் பிடித்து வலிப்பதற்கும் நல்ல மருந்தாகும். அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் 'கிரைப் வாட்டர்' போன்று செயல்படும்.
  கொதிக்கும் தண்ணீரில் புதினா இலையைப் போட்டு வைத்திருந்து, அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், கிருமிகள் வராமல் தடுக்கும். வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய மவுத்வாஷ் இது.
  வில்வ நீர், துளசி நீர் இரண்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த உதவும்.

காய்ச்சிய தண்ணீர்
தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள்' என்கிறார்கள். தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது, 99.9 சதவிகிதம் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் அழிகின்றன. ஆனால், பலருக்கு முறையான கொதிக்கவைத்தல்' பற்றிச் சரியான புரிதலோ வழிகாட்டுதலோ இல்லை. தண்ணீரை அடுப்பில் வைத்து, லேசாகச் சூடு வந்ததுமே அடுப்பை அணைத்துவிடுகின்றனர். நீரை நன்றாகக் கொதிக்கவைத்து, குமிழ்கள் வரும்போது, அந்தக் கொதிநிலையிலேயே 10 நிமிடங்கள்் இருக்கவேண்டும். இந்த நீரை ஆறவைத்து, வடிகட்டி அன்றே குடித்துவிட வேண்டும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் பருகுவதால், எந்த நன்மையும் இல்லை. மேலும், பானையில் வைத்திருக்கும் நீராக இருந்து, ஒவ்வொரு முறையும் கையை விட்டு்த் தண்ணீரை எடுக்கும்போது, நம் கை மூலம் சில கிருமிகளை உள்ளேவிடுகிறோம். எனவே, தண்ணீரை முகந்து குடிக்காமல், ஊற்றிக் குடிப்பதுதான் நல்லது' என்கிறார்  டாக்டர் எழிலன்.
http://pettagum.blogspot.in/2014/10/blog-post_99.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com