Saturday, January 18, 2014

நடுநிலை – இஸ்லாம் எளிமையான மற்றும் மிதமானமார்க்கம்


நடுநிலை – இஸ்லாம் எளிமையான மற்றும் மிதமானமார்க்கம்

 

. 'நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
- 39 -ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
"அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குவேன்" என்று நான் கூறுகூதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'நீங்கள் தான் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குவேன்" என்று கூறியதா என்று கேட்டார்கள். 'நான் அப்படிச் சொல்லத் தான் செய்தேன்" என்று நான் பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், 'உங்களால் அது முடியாது. எனவே, (சில சமயம்) நோன்பு வையுங்கள். (சில சமயம்) நோன்பை விடுங்கள். (இரவில்) நின்று வணங்குங்கள். தூங்கவும் செய்யுங்கள். மாதத்தில் மூன்று நாள்கள் நோன்பு வையுங்கள். ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அதைப் போன்று பத்து மடங்கு பிரதிபலன் அளிக்கப்படும். அதுவே காலம் முழுவதும் நோன்பு வைத்ததாகும்" என்று கூறினார்கள். நான், 'இதை விட அதிக நாள் நோற்பதற்கு எனக்கு சக்தியுண்டு இறைத்தூதர் அவர்களே!" என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'அப்படியென்றால் ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாள்கள் நோன்பைவிட்டு விடுங்கள்" என்று கூறினார்கள். நான், 'அதை விட அதிகத்திற்கு எனக்கு சக்தியுண்டு, இறைத்தூதர் அவர்களே!" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'அப்படியென்றால், ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பைவிட்டு விடுங்கள். அதுதான் (நபி) தாவூதுதின் நோன்பாகும்; அதுதான் நடுநிலையானதாகும்" என்று கூறினார்கள். நான், 'அதை விடச் சிறந்ததற்கு எனக்கு சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'அதை விடச் சிறந்ததேயில்லை" என்று கூறினார்கள்.
3418- .ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களில் யாரையும் அவரின் நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப்படுவார்)' என்று கூறினார்கள். மக்கள் 'அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களின் நற்செயல் காப்பாற்றாது?)' என்று வினவினார்கள். நபி(ஸல்) அவர்கள் '(ஆம்) என்னையும்தான்; அரவணைத்துக் கொண்டால் தவிர' என்று கூறிவிட்டு, '(எனவே, நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்.) காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரமும் நற்செயல் புரியுங்கள். (எதிலும்) நடுநிலை (தவறாதீர்கள்) நடுநிலை(யைக் கடைபிடியுங்கள்.) (இவ்வாறு செய்தால் இலட்சியத்தை) நீங்கள் அடைவீர்கள்' என்றார்கள்.
6463.-ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்) அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. (எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

6464-.ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: