Saturday, February 7, 2015

பிள்ளைகளுக்கான உணவுகள், உண்ண வைப்பது எப்படி?

எதைக் குடுத்தாலும் ஓக் ஓக் என ஓங்காளித்துக் கொண்டிருக்கிறான். என்னத்தைக் கொடுக்கிறது எண்டு விளங்கவில்லை' என அப்பா கவலைப் பட்டார்.

 

கவலைப்பட வைத்தது மெலிந்து ஒல்லித் தேங்காய் போல காய்ந்து கிடந்த அவனது தோற்றம்.

'நான் சமைக்கிறது ஒண்டுமே இவனுக்குப் பிடிக்கிது இல்லை. ரோல்ஸ் பற்றிஸ் பிட்சா என கடைச் சாப்பாடுதான் பிடிக்கிறது' என்றாள் அம்மா கவலையுடன். அவனது தோற்றமும் கவலைப்பட வைத்தது.

பெல்ட்டுக்கு மேலாகப் பிதுங்கித் தொங்கிக் கொண்டிருந்த வயிறும், கழுத்தில் கரும் பட்டை போல பரவியிருந்த அக்கன்தோசிஸ் நயகரான்ஸ்சும் இவனுக்கு எப்ப நீரிழிவு வரப் போகிறதோ என என்னைக் கவலைப்பட வைத்தது.

சில நடைமுறைப் பிரச்சனைகள்
பிள்ளைகள் சாப்பிடுகிறார்கள் இல்லை என்பதே பல பெற்றோர்களின் ஆதங்கம். 

  • சிரமம்பட்டுச் சமைத்தாலும் பிள்ளைகளுக்கு அந்தச் சாப்பாடுகள் பிடிப்பதில்லை என்பது ஒரு காரணம். 
  • பெற்றோர்கள் இருவரும் வேலைக்குசெல்வதால் ஆன முறையில் சமைத்துக் கொடுக்க முடிவதில்லை என்பது மற்றொரு பிரச்சனை. 
  • மாறாக சில பிள்ளைகள் ஆரோக்கியமற்ற குப்பை உணவுகளே கதியாகக் கிடக்கிறார்கள்.

மாற்றும் வழி என்ன?
பிள்ளைகளின் உணவு முறையை மாற்ற என்ன செய்யலாம்?

ஊட்டமும் சுவையும் ஒன்று சேர வேண்டும்

ஊட்டச் சத்துள்ள இடமாக உங்கள் வீட்டு உணவுகளை மாற்றுங்கள்.

1.
    ஆரோக்கியமான உணவுகளைச் சமையுங்கள்.
2.
    இரண்டாவது முக்கிய விடயம் ஊட்டமுள்ள உணவாக நீங்கள் சமைப்பது பெரிதல்ல. அது பிள்ளைகளைக் கவர்வதாக, அவர்களை ஆர்வத்தோடு சாப்பிட வைப்பதாக இருக்க வேண்டும்.

இந்த இரண்டும் ஒன்றை ஒன்று எட்ட முடியாத இரு முனைகள் என்று தோன்றுகிறதா. இல்லை. சற்று முயற்சித்தால் நிச்சயம் முடியும்.

சில ஆலோசனைகள்

பிள்ளைகளின் கைகளுக்கு நினைத்தவுடன் அகப்படுமாறு ஊட்டமுள்ள உணவுகளை வசதியான இடங்களில் வையுங்கள்.

உதாரணத்திற்கு பழங்கள்

  • பழக் கூடையை ரீவீ மற்றும் கணனி உள்ள அறையில் கண்ணில் படுமாறு வையுங்கள். 
  • ப்ரிடிஜ்சின் கடும் குளிர் பகுதியில் அடைத்து வைக்க வேண்டாம். 
  • ஒரே விதமான பழமாக வைக்காமல் தினம் தினம் வெவ்வேறு நிறங்களுடைய கண்களைக் கவரும் பழங்களை மாற்றி வையுங்கள்.


உங்கள் பிளேட்

நீங்கள் சாப்பிடும்போது உங்கள் பிளேட்டில் அல்லது சைட் டிஸ்சில் அப்பிள் வாழைப்பம் போன்ற ஏதாவது பழத்தைச் சாப்பிடத் தயாராக வெட்டி வையுங்கள். தொண்டை கிழியக் கத்திச் சொல்வதை விட நீங்கள் அவற்றை உண்ணும் செயற்பாடானது பிள்ளைகளின் மனதில் ஆழப் பதியும். தாங்களாகவே உண்ண ஆரம்பிப்பார்கள்.

 

இந்த உணவு நல்லது அந்த உணவு கூடாது எனப் பிரித்து வைக்க வேண்டாம். அவை பற்றி ஆலாபனையான விளக்கங்களும் வேண்டாம்.

பேச்சோடு பேச்சாக

கொழுப்பற்ற இறைச்சிகள் சோயா கடலை போன்றவற்றில் உள்ள புரதங்களும் கல்சியம் சத்தும் அவர்கள் உயரமாக வளர்வதற்கும் எலும்புகள் திடமாக இருப்பதற்கும் உதவும் என்பதை பேச்சோடு பேச்சாகச் சொல்லி வையுங்கள். அதேபோல பழங்களிலும், கீரை இலைகளிலும் உள்ள அன்ரிஒக்சிடனற் சருமம் மிருதுவாகவும், முடி உதிர்வதைத் தடுக்கும் எனவும் அறியத் தாருங்கள். ஆனால் அவற்றைச் சாப்பிடு என நச்சரிக்க வேண்டாம்.

 

அங்கீகரித்துப் பாராட்டுங்கள்

அவர்கள் தாங்களாகவே ஊட்டச் சத்துள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடும்போது அதை அங்கீகரித்துப் பாராட்டுவது போல புன்னகை செய்யுங்கள். ஆயிரம் வாரத்தைகளைவிட அந்த ஒரு அமைதியான அங்கீகாரம் போதுமானது. வார்த்தைகளில் மயங்கும் பிள்ளை எனில் சுட்டிப் பிள்ளை, கெட்டிக்காரன், புத்திசாலி போன்ற சிறு பாராட்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஊட்டமற்ற உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது ...

அதே வேளை அவர்கள் ஊட்டமற்ற உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது

  •  நச்சரித்துக் கொண்டே இருக்காதீர்கள். 
  • கவனிக்காததுபோல அசட்டை செய்யுஙகள். 
  • அல்லது முகத்தில் சற்று ஏமாற்றத்தை வெளிப்படுத்துங்கள். 
  • அத்தகைய உணவுகளை வீட்டில் வாங்கி வைக்காதீர்கள்.


பிள்ளை வடை, மிக்சர், பொட்டற்றோ சிப்ஸ், போன்ற பொரித்த எண்ணெய் பற்றுள்ள உணவுகள்தான் வேண்டும் என அடம் பிடித்தால் அதற்குப் பதிலாக வீட்டில் செய்து கொடுங்கள்.

உதாரணமாக பொட்டற்றோ சிப்ஸ்க்குப் பதிலாக உருளைக் கிழங்குத் துண்டுகளை சற்று எண்ணெய் மட்டும் போட்டு அவனில் முறுக்கிக் கொடுங்கள்.

வெகுமதியாக குப்பை உணவு வேண்டாம்

பரீட்சையில் நன்றாகச் செய்தால் அல்லது வேறு ஏதாவதற்காக அவர்கள் விரும்பும் குப்பை உணவுகளை வெகுமதியாக ஒருபோதும் கொடுக்காதீர்கள். அது அவற்றை ஊக்கப்படுத்துவதில்தான் முடியும். பார்க்கிற்கு விளையாடப் போவது, நீந்தப் போவது அல்லது எங்காவது சுற்றுலாப் போவது போன்ற உடலுக்கும் மனதிற்கும் இனியவற்றையே பரிசாகக் கொடுக்கலாம்.

கூடியிருந்து சாப்பிடுங்கள்

குடும்பமாக சாப்பாட்டு மேசையில் கூடி இருந்து சாப்பிடுவது நல்லது. நல்ல உணவுப் பழக்கங்களைப் பிள்ளைகள் பழகிக் கொள்வதற்கு இரவு ஒருவேளையேனும் குடும்பமாகச் சேர்ந்திருந்து சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுத்ததாக ஒரு ஆய்வு கூறியது.

பரிமாறுதல்

உணவுகளைச் சாப்பாட்டு மேசையில் வைத்துப் பரிமாற வேண்டாம். சமையலறையில் வைத்து ஒவ்வொருவருக்குமான உணவை அவர்களது பிளேட்டில் போட்டு வந்து கொடுங்கள். ஒவ்வொரு உணவு வகையிலும் குறிப்பிட்ட அளவாவது போட வேண்டும். எதை எந்தளவு சாப்பிட வேண்டும் என்பது பற்றிய ஒரு புரிதலை அது குழந்தைகளில் ஏற்படுத்தும்.

பசிக்குச் சாப்பிடக் கொடுங்கள்  ஆனால் ...

உங்கள் பிள்ளையின் எடை அதிகமாக இருந்தால் உணவின் அளவைக் கட்டுப்படுத்தாதீர்கள். பசிக்குச் சாப்பிடக் கொடுங்கள். எடையை அதிகரிக்காத காய்கறிகள், பழங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவுகளை அதிகமாக அந்தக் குழந்தைக்குக் கொடுங்கள். வேண்டுமானால் ஒரு குழந்தை மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

சில அவசர உணவுகள்

இது அவசர யுகம் அதிகாலையில் பாடசாலைக்கு ஓட வேண்டும். அதற்கிடையில் உணவு தயாரிக்க சில தாய்மார்களால் முடியாது. பிள்ளைகள் பாடசாலையால் திரும்பி வந்ததும் அவசரமாக எதையாவது வயிற்றில் திணித்துவிட்டு ரியூசனுக்கு ஓட வேண்டும். அதற்கிடையில் ஏதாவது கொடுக்க வேண்டும்.

நின்று நிதானித்து ரசித்துச் சுவைத்துச் சாப்பிட நேரம் இல்லை. அவர்களுக்குப் பிடித்ததாக் கிடத்தால் அவசரமாகவாவது சாப்பிட்டுவிட்டு ஓடுவார்கள்.

சமையலறையில்  காலத்தை வீணடிக்காமலே அவசரமாக அதே நேரம் சுவையாகவும் குழந்தைகள் விரும்பும் வண்ணம் தயாரித்துக் கொடுப்பதற்கான குறிப்புகளை அமெரிக்காவின் Academy of Nutrition and Dietetics தந்திருக்கிறது. அத்தோடு அவை ஊட்டமான உணவுகளுமாகும்.

அது குளிர் உணவு. இது சூட்டு உணவு, சளி பிடிக்கும் என்றெல்லாம் நீர்த்துப்போன பழங்கதைகள் பேசாதீர்கள்.

இவை யாவுமே ஆரோக்கியமானவை. குழந்தைகளுக்கு நோயைக் கொடுக்கப் போவதில்லை. துணிவோடு கொடுங்கள். பழகிப் போகும். மாச் சத்து, கொழுப்பு, புரதம், விற்றமின்கள் யாவும் கலந்துள்ளன. குழந்தைகள் நலமாக வாழ்வார்கள்

சில ஆரோக்கிய அவசர உணவுகள்

  • உரித்த முழு வாழைப்பழத்தை யோகொட்டினுள் (yogurt) அமுக்கி எடுங்கள். அதை ஏதாவது crushed cereal அரிசிமாக் குருணல், அல்லது ரவை போன்ற ஒன்றில் போட்டு உருட்டி எடுங்கள். பிரிட்ஜில் வைத்து உறையவிட்டு பின் உண்ணக் கொடுங்கள். குளிரக் குளிர போஸாக்கான உணவு என்பதால் மறுக்காமல் விரும்பி உண்பார்கள். 
  • பப்பாசி, மாம்பழம், விளாம்பழம், வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒன்றின் குளிரவைத்த பழச்சாறை அரைக் கப் அளவு எடுங்கள், மீதி அரைக் கப்பிற்கு யோகட்டை எடுத்து நன்கு அடித்துக் கலவுங்கள். சுவையான இந்த fruit smoothie குழந்தைகளுக்கு விருப்பமானதாக இருக்கும் அதே நேரம் போசனை நிறைந்தது. 
  • அலங்கார சான்விட்ச் பிள்ளைகளுக்கு விருப்புடையதாக இருக்கும் வண்ணாத்துப் பூச்சி, டைனோசயர், இருதயம், நட்சத்திர வடிவிலான குக்கி கட்டரை உபயோகித்தால் விதவிதமாக அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்யலாம். பதனிடப்பட்ட இறைச்சி, கொழுப்புக் குறைந்த சீஸ், பாண் ஆகியவை கொண்டு செய்யலாம். 
  • பீநட் பட்டர், கோர்ன் பிளேக், பிறான் (Bran flake)  பிளேக் போன்ற யாவற்றையும் ஒரு கோப்பையில் இட்டு நன்கு கலவுங்கள். உருண்டையாக உருட்டி எடுத்த பின்னர் அவற்றை வறுத்த கச்சான், கடலை, அல்லது கஜீ குருணலில் உருட்டி எடுத்துச் சாப்பிடக் கொடுங்கள்.


பழகிப் போன பழைய உணவுகள்

இவை யாவும் பிரிட்ஜ் வசதியுள்ளவர்களுக்குத்தானே. இன்னமும் மின்சாரமும் பிரிட்ஜ்சும் கிடைக்காத குக்கிராமங்களில் உள்ளவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறதல்லவா?

பொரிச்ச அரிசிமா, உழுந்துமா புளுக்கொடியல்மா என எமது அம்மாக்கள், அம்மம்மாக்கள் தயாரித்து போத்தலில் போட்டு வைத்திருந்துதான் பிள்ளைகளுக்கு அவசர உணவுகளைக் கொடுத்தார்கள்.

இன்றைக்கும் கூட இவற்றைத் தயாரித்து வைக்கலாம்.



அவல் புட்டு பற்றி 'அடுப்பங்கரை இணையத் தளப் பதிவு

  • அவல் மற்றொரு சுலப உணவு. தேங்காயப்பூ சீனி போட்டுத் தயாரிக்கலாம்.
  • சற்றுப் போசனை அதிகம் வேண்டுமெனின் தயிர் அவலில் பழத்துண்டுகளைக் கலந்து கொடுக்கலாம். 
  • அவசரத்திற்கு புருட் சலட்டிற்கு ஐஸ்கிறீம் சேர்த்துக் கொடுக்கலாம். பழச்சத்துடன் பால் சீனி கலந்திருப்பதால் புரதம், இனிப்பு விற்றமின் அனைத்தும் அதில் கிடைக்கும்.


டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

http://hainallama.blogspot.in/2013/06/blog-post_11.html



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com


No comments: