Wednesday, June 25, 2014

உங்க வீட்டு செல்லம் அடம் பிடிக்கிறதா ?

உங்க வீட்டு செல்லம் அடம் பிடிக்கிறதா ?

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் அழுகையை நிறுத்தவும், அவர்களின் மனதில் தைரியத்தை வளர்க்கும் சில வழிமுறைகளையும்,கோவை அரசு கல்லூரி உளவியல் பேராசிரியர் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார். பள்ளிக்கூடங்கள் திறந்து மூன்று வாரங்களுக்கும் மேலாக ஆன நிலையில் பலரது குழந்தை தினமும் அழுது கொண்டே பள்ளிக்கு செல்கிறது. பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடிக்கிறது.
கோவை அரசு கலைக்கல்லூரி உளவியல்(சைகாலஜி)பேராசிரியர் செல்வராஜூ கூறியதாவது : குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் அழுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மனோதத்துவ காரணங்களே முக்கியமாகும். சிறு குழந்தைகளுக்கு உணவுக்கு அடுத்த முக்கிய தேவை காப்புணர்ச்சியாகும். வீட்டில் பெற்றோருடன் பாதுகாப்பாக இருக்கிறோம் என்னும் உணர்வே காப்புணர்ச்சி ஆகும்.சிறு குழந்தைகளுக்கு தங்கள் வீட்டிலும், சுற்றுப்புறத்தலும் இவ்வுணர்ச்சி ஏற்படுதல் அவசியம்.
முதன்முதலில் குழந்தைகள் பெற்றோரை விட்டு பிரிந்து பள்ளிக்கு செல்லும்போது இக்காப்புணர்ச்சி சிறிது பாதிக்கப்படலாம். இது எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி இருக்காது.சற்று அதிக பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளே பள்ளிக்கு நீண்ட நாட்கள் அழுது கொண்டே செல்லும். தீவிர பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகள் மனதில் காரணமற்ற கிலி உருவாகி, பள்ளிக்கு செல்வதை தவிர்க்க முயற்சிக்கும். இக்குழந்தைகள் அடம்பிடித்தல், தூங்கி எழுவதில் காலதாமிப்பை ஏற்படுத்தும். மேலும், இவர்களுக்கு பரந்த வெளியிடங்களை கண்டு இனம்புரியாத பயம் ஏற்படும். பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை பார்த்து கூட பயம் ஏற்படலாம். இதற்கு "அகோரபோபியா' என்று பெயர்.
சில குழந்தைகள் சிறிய குடும்ப சூழ்நிலையில் பிறந்து வளர்ந்திருக்கும். இக்குழந்தைகள் கூட்டத்தைப் பார்த்தவுடன் மனதில் பயம் ஏற்பட்டு விடும். பள்ளிக்கூடத்திலும், வகுப்பறைகளிலும் காணப்படும் மாணவர் கூட்டத்தை பார்த்தாலே மனதில் பயம் தோன்றிவிடும். இந்த வகை பயத்துக்கு "டைமோபோபியா' என்று பெயர்.
இதேபோல் ஒரு சில குழந்தைகள் கூட்டுக் குடும்ப சூழ்நிலையில் பிறந்து, பெரிய வீட்டில் விளையாடி மகிழ்ந்து வளர்ந்திருக்கும். இத்தகைய குழந்தைகள் நெருக்கமான சூழலில், சிறிய வகுப்பறைகளை பார்க்கும் போது கூட மனதில் பயம் தோன்றி விடும். இந்த வகை பயத்துக்கு "கிளஸ்ட்ரோபோபியா' எனப் பெயர். இதுபோன்ற பயம் தோன்றும் போது,  சிறு குழந்தைகள் அழும்.  அந்த இடத்தில் இருந்து விலகி ஓடத்துவங்கும். சில வேளைகளில் எதுவும் செய்யத்தோன்றாமல் செயலற்று ஒரே இடத்தில் நிற்பது உண்டு.
மேலும், பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்த பின்னர், மாலையில் குழந்தை அழுவதற்கு காரணம் பரபரப்பான பள்ளிசூழ்நிலை முடிந்து, வீட்டுக்கு வந்தவுடன் அமைதியான சூழ்நிலையில் அதன் மனதில் பயம் தோன்ற ஆரம்பிப்பது தான்.இவர்களிடம் ஏற்படும் தீவிர பயம் சில சமயம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். உடல்நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு ஆகியன ஏற்படலாம். இவற்றை தவிர்க்க குழந்தைகளிடம் பயத்தை குறைக்க பெற்றோரும், ஆசிரியர்களும் ஆவன செய்ய வேண்டும்.
இப்பிரச்னைகளை தீர்க்க சில வழிகள்: தொடக்கத்தில் இருந்த பள்ளிக்கூடம் செல்வதை கட்டாயமாக்க வேண்டும். குழந்தை அழுகிறதே என ஓரிரு நாட்கள் விடுமுறை எடுப்பதை தவிர்த்து விட வேண்டும். சிறிது நாட்களில் பழக்கத்தின் காரணமாக குழந்தைகளுக்கு பயம் தானாக குறைந்து விடும்.அழும் குழந்தைகளை ஆசிரியர் தன் அருகில் அமர வைத்து, பாதுகாப்புணர்வை அளிக்க வேண்டும். அன்புடன் கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும். ஓரிரு வாரங்கள் பெற்றோர் பொறுமையுடன் குழந்தைகளை கையாள வேண்டும்.
மற்ற குழந்தைகளின் தைரியமான நடத்தைகளை காண்பித்து விளக்க வேண்டும். பள்ளி நேரம் முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வராமல், பள்ளி பூங்காவில் சிறிது நேரம் விளையாட வைக்கலாம். இதனால் குழந்தைகளின் பயம் வெகுவாக குறைந்து, அவர்களின் மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் வளரும். இவ்வாறு உளவியல் பேராசிரியர் செல்வராஜூ தெரிவித்துள்ளார்.


--
*more articles click*
www.sahabudeen.com


No comments: