"மலம் அடைத்தல்" ஏன் எவ்வாறு? அடைத்தால் என்ன செய்யலாம்?
"கொஞ்சம் கொஞ்சமாப் போய் கொண்டிருக்கு. கெட்ட மணம். ரொயிலட்டுக்கு போய்ப் போய் வாறதிலை களைச்சுப் போனன்" என்றாள் அந்தப் பெண். சோர்வும் மன உளைச்சலும் அவள் முகத்தில் தெரிந்தன. மருந்துகள் எடுத்தாளாம். "கொஞ்சமும் சுகமில்லை" எனக் கவலைப்பட்டாள்.
கடுமையான மூட்டு வாதம். பெரிதாக நடமாட முடியாதிருக்கிறாள். வோக்கரின் உதவியுடன் வீட்டுக்குள் நடமாடித் திரிவாள். மிகுதி பெருமளவு நேரம் படுக்கைதான்.
"இது வயிற்று உளைவு அல்ல. வேறு பிரச்சனை" எனப் புரிந்தது.
படுக்கையில் விட்டுப் பார்த்தபோது இடதுபுற அடி வயிற்றில் திட்டுத் திட்டாகக் கட்டிகள். பிரச்சனையை நிச்சயப்படுத்த மலவாயிலில் கையுறை போட்டுப் பரிசோதித்தபோது பாறை போன்று மலம் கட்டிபட்டுக் கிடந்தது.
காரணம் என்னவாகும் என யோசித்தேன். மலம் கசிந்தபோது வயிற்றோட்டம் என நினைத்து மலத்தைக் கட்டும் மருந்துகளையும், மலம்போகாத போது மலத்தை இளக்கும் மருந்துகளையும் மாறி மாறி உட்கொண்டதுதான் காரணம் எனப் புரிந்தது. மருத்துவர்களைக் காணாமல் தெரிந்த மருத்துவர்களிடம் போனில் பேசி எடுத்ததால் வந்த வினை.
"இது வயிற்று உளைவு அல்ல. வேறு பிரச்சனை" எனப் புரிந்தது.
படுக்கையில் விட்டுப் பார்த்தபோது இடதுபுற அடி வயிற்றில் திட்டுத் திட்டாகக் கட்டிகள். பிரச்சனையை நிச்சயப்படுத்த மலவாயிலில் கையுறை போட்டுப் பரிசோதித்தபோது பாறை போன்று மலம் கட்டிபட்டுக் கிடந்தது.
காரணம் என்னவாகும் என யோசித்தேன். மலம் கசிந்தபோது வயிற்றோட்டம் என நினைத்து மலத்தைக் கட்டும் மருந்துகளையும், மலம்போகாத போது மலத்தை இளக்கும் மருந்துகளையும் மாறி மாறி உட்கொண்டதுதான் காரணம் எனப் புரிந்தது. மருத்துவர்களைக் காணாமல் தெரிந்த மருத்துவர்களிடம் போனில் பேசி எடுத்ததால் வந்த வினை.
மற்றொருவர் நடமாட முடியாது படுக்கையிலேயே கிடக்கும் நோயாளி. அங்கங்கள் இயக்கமிழந்து சோர்ந்தது போல மலக்குடலும் இயல்பாக வேலை செய்யவில்லை. முக்கி வெளியேற்ற இவளிடம் திராணியில்லை. மலம் இறுகிப் பாறையாகக் கிடந்தது.
மலம் அடைத்தல்
மலம் அடைத்தல் என்பது மலம் காய்ந்து இறுகி மலக் குடலினுள் (Rectum) பெரிய கட்டியாக வெளியேற முடியாது கிடப்பதுதான். நீண்ட நாட்களாக மலச்சிக்கலால் துன்பப்படுபவர்களில் இது ஏற்படுவதுண்டு.
சாதாரண மலச்சிக்கல் என்பது வழமைபோல மலங் கழிக்க முடியாமல் இருப்பது மட்டுமே. ஆனால் மலம் அடைத்தலின் போது மலங் காய்ந்து இறுகுவதால் அதனை சுலபமாக வெளியேற்ற முடிவதில்லை.
மலங்கழிப்பதற்கான மருந்துகளை (Laxatives) தொடர்ந்து நீண்டகாலம் உபயோகித்த ஒருவர் அதனை சடுதியாக நிற்பாட்டும்போதும் இவ்வாறு மலம் அடைபடுவதற்கான சாத்தியம் அதிகம். மலம் இளக்கிகளை தொடர்ந்து உபயோகித்ததால் மலக்குடலில் உள்ள தசைநார்கள் தாமாக இயங்குவதை மறந்துவிடுவதே இதற்குக் காரணமாகும். மருந்துகளை துஷ்பிரயோகம் செய்வதற்கு இதனையும் ஒரு உதாரணமாகக் கூறலாம்.
யாருக்கு அதிகம் ஏற்படுகிறது
நடமாட்டம் குறைந்து படுக்கையிலும் கதிரையிலும் தமது பெருமளவு நேரத்தை செலவளிப்பவர்களையே அதிகம் பாதிக்கிறது. பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டவர்கள், எழுந்து நடமுடியாத நோய்களால் பீடிக்கபட்டவர்கள், முதுமையால் இயங்க முடியாது படுக்கையில் முடங்கியவர்கள் போன்றவர்களை உதாரணம் கூறலாம்.
மூளை, மூண்நாண் நரம்புகள் அல்லது ஏனைய நரம்புகளின் பாதிப்புகளால் மலக் குடலின் தசைநார்கள் இயங்க முடியாமல் போவதும் காரணமாகும்.
வேறு காரணங்கள்
சில மருந்துகளும் காரணமாகலாம்.
முக்கியமாக Anticholinergics மருந்துகள். இவை தசைகளுக்கும் நரம்பிற்கும் இடையேயான தொடர்பாடலைப் பாதிப்பதால் உணவுக்கால்வாய் மற்றும் மலக்குடலின் இயல்பான செயற்பாட்டை பாதித்து மலச்சிக்கலை ஏற்படுத்துகின்றன.
சில வலி நிவாரணி மருந்துகள் உதாரணமாக கொடேன் என்ற மருந்து மலச்சிக்கலை ஏற்படுத்தும். இது பனடீன், ரபிடீன் போன்ற மாத்திரைகளிலும் கொரக்ஸ், பென்செடைல், கொவ்னில் போன்ற இருமல் மருந்துகளிலும் கலந்துள்ளன. இவற்றை வலிக்காவவோ இருமலுக்காகவோ தொடர்ந்து பாவித்து வரும்போது கடுமையான மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
அதன் தொடர்ச்சியாக மலம் அடைத்தலும் ஏற்படலாம். கொடேன் மாத்திரமின்றி பெத்திடீன், மோர்பீன், போன்ற வேறு பல மருந்துகளும் காரணமாகின்றன.
வயிற்றோட்டத்தை தற்காலிகமாகக் கட்டுப்படுத்துவதற்கு loperamide ன்ற மருந்தைச் சிலர் உபயோகிப்பதுண்டு. இது வயிற்றோட்டத்தை குணமாக்கும் மருந்தல்ல. அன்ரிபயோரிக்கும் அல்ல. அடிக்கடி மலங் கழிவதைத்; தடுக்கும் மருந்தாகும்.
"ரொயிலட்டுக்கு போய் வாறதிலை களைச்சுப் போன" பெண்மணி இதை அடிக்கடி உபயோகித்ததால்தான் மலச்சிக்கலும் பின்னர் மல அடைப்பும் ஏற்பட்டது. இமோடியம், லோமோடில் போன்ற பல்வேறு வியாபாரப் பெயர்களில் இவை மருந்தகங்களில் தாரளமாகக் கிடைக்கிறது. மருந்துகளில் அரைகுறையாக பரிச்சயம் உள்ள பலர் இதை கண்டபடி உபயோகித்து சிக்கலில் மாட்டுவதை மருத்துவர்கள் அறிவார்கள்.
அறிகுறிகள்
தெளிவான மனநிலையில் உள்ள நோயாளியால் தனக்கிருக்கும் மலச்சிக்கலை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதில் பிரச்சனை இருக்காது. ஆனால் அப் பிரச்சனை தொடர்ந்து அதன் பலனாக மலம் அடைபட்டிருந்தால் நோயாளியாலோ மற்றும் அவரைப் பரமரிப்பவர்களாலோ இப்பிரச்சனையை இனங் காண்பது சிரமம்.
கீழ் கண்ட அறிகுறிகள் இருந்தால் மலம் அடைபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கலாம். மருத்துவரிடம் தெரிவித்தால் அவரால் பிரச்சனையை கண்டறிய முடியும்.
- வயிற்றுப் பொருமல் இருக்கும். அடி வயிற்றில் வலியும் இனந்தெரியாத உளைவும் இருக்கலாம்.
- கடுமையான மலச்சிக்கலின் பின் இடைக்கிடையே மலக்கசிவு ஏற்படலாம். அல்லது வயிற்றோட்டம் ஏற்படலாம். இது உண்மையான வயிற்றோட்டம் அல்ல. காய்ந்து கிடக்கும் மலத்தில் பிறகிருமிகள் விழுவதால் மலவாயின் அருகே உள்ள மலம் அவ்வாறு கழியும். ஆனால் மிகுதி அப்படியே உள்ளே இருக்கும்.
- சிலருக்கு இடையிடையே கொஞ்ச மலம் இளக்கமாக வெளியேறலாம்.
- மலத்தை முக்கி முக்கி வெளியேற்ற அவர் முயலக் கூடும்.
- மலவாயிலில் இரத்தக் கசிவு ஏற்படலாம்.
நோயாளியின் மலச் சிக்கலோடு எந்தவித தொடர்பும் அற்றது போன்ற வேறு சில அறிகுறிகளுக்கான அடைப்படைக் காரணம் அதுவாகவே இருக்கலாம்.
- சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படலாம். சிறுநீரில் கிருமித் தொற்றா அல்லது நீரிழிவா என பராமரிப்பவர்கள் யோசிப்பார்கள். ஆனால் உருண்டு திரண்டு பெருகிக் கிடக்கும் மலமானது சிறுநீர்ப்பையை அழுத்துவதனாலேயே அத்தகைய உணர்வு அவர்களுக்கு ஏற்படும்.
- மலக் கட்டியானது உறுப்புகளை அழுத்துவதனால் அடிநாரி உளைவும் சிலருக்கு ஏற்படும்.
- முக்கி முக்கி மலங் கழிக்க முனைவதால் இருதயம் வேகமாக அடித்தல், படபடப்பு, வியர்வை போன்ற அறிகுறிகள் ஏற்படுவதுண்டு. இவற்றின் தொடர்ச்சியாக தலைபாரம், தலைச்சுற்று போன்ற அறிகுறிகளும் தோன்றலாம்.
பரிசோதனைகள் தேவைப்படுமா
மலம் அடைத்திருப்பதை அறிய பெரும் பரிசோதனைகள் தேவையில்லை. நோய் பற்றிய விபரங்களை விளக்கமாகக் கேட்டறிவதாலும், வயிற்றைப் பரிசோதிப்பதாலும் மலக்குடலை விரல் விட்டுப் பரிசோதிப்பதும் போதுமானது.
ஆயினும் மலம் அடைப்பதற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிய மலவாயில் ஊடாக குழாய் விட்டுப் பரிசோதிப்பது (Colonoscopy) அவசியமாகலாம்.
சிகிச்சை
வேறென்ன இறுகிக் கிடக்கும் மலத்தை வெளியேற்றுவதுதானே. அவ்வாறு வெளியேற்றிய பின்னர் மீண்டும் அவ்வாறு இறுகாமல் தடுப்பதும்தான்.
ஆனால் வெளியேற்றுவது எப்படி?
மலக்குடலைக் கழுவது
எனிமா கொடுக்கலாம். அதாவது மலக்குடலைக் கழுவுவதுதான். நீர், எண்ணெய் போன்றவற்றை அதற்கு உபயோகிப்பதுண்டு. இப்பொழுது இவற்றை தாங்களே வீட்டில் வைத்துச் செய்வதற்கு ஏற்ப (Ready made) உடனடிப் பாவனைக்கு ஏற்ற வகையில் தயாரித்து விற்கிறார்கள்.
சாதாரண மலச்சிக்கலுக்கு இவை யாவுமே பெருமளவு உதவக் கூடும். ஆனால் பல நாட்களான அடைபெற்றுக் கிடக்கும் மலம் வெளியேறுவது சிரமம்.
கையால் அகற்றுவது
மருத்துவர் அல்லது உதவியாளர் தனது கைகளுக்கு கையுறை அணிந்து உள்ளே இறுகிக் கிடக்கும் அகற்ற முடியும். உள்ளே கட்டியாகக் கிடக்கும் மலத்தை விரல்களால் சிறு சிறு கட்டிகளாக உடைத்து வெளியேற்ற வேண்டும்.
இதைப் படிப்படியாகவும் அவதானமாகவும் செய்ய வேண்டும். இல்லையேல் மலக்குடல் மலவாயில் ஆகியவற்றில் காயங்களும் உரசல்களும் ஏற்பட்டுவிடும்.
ஒரே முறையில் அகற்றவது சில தருணங்களில் முடியாது போகலாம். மலக் கால்வாயின் மேற்பகுதியில் உள்ளதை உடனடியாக அகற்ற முடியாது. மலம் வெளியேறுவதை ஊக்குவிப்பதற்கு உட்கரையும் மாத்திரைகளை (Suppository) மலவாயிலில் வைத்து மலம் மலவாயில் அருகே நெருங்கி வந்த பின்னர் மீண்டும் அகற்ற நேரலாம்.
மிக அரிதாக சத்திரசிகிச்சையும் தேவைப்படலாம்.
மலம் வெளியேற்ற மீள் பயிற்சி
ஒரு முறை மலத்தை வெளியேற்றுவதுடன் அவர்களது பிரச்சனை தீர்ந்துவிடாது. மீளவும் மலம் இறுகவிடாது தடுக்கவேண்டும். அதற்கான அறிவுரைகளையும் செய்ய வேண்டிய நடைமுறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
உணவு முறைகளில் மாற்றம், மருந்துகள் காரணமாயின் அவற்றை மாற்றுவது, மலமிளக்கி மருந்துகள், எனிமா போன்றவற்றை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விடயங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
இயக்கமின்றிப் படுக்கையில் கிடப்பவர்களில் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுவதால் அவர்களைப் பராமரிப்பவர்கள்; இவை பற்றி அறிந்திருப்பது பயன் தரலாம்.
முதலில் கூறிய இரு நோயாளிகளுக்கும் கைகளாலே மலத்தை அகற்ற நேர்ந்தது. அதுவும் நகர முடியாத நோயாளிகள் என்பதால் அவர்களது வீட்டிலேயே அவர்களது படுக்கையிலேயே.
"உங்கள் அம்மாவிற்கு இப்ப எப்படி" சில நாட்களுக்குப் பின்னர் எனது மருத்துமனைக்கு அவரது மகள் வந்தபோது வினவினேன்.
"இப்ப பிரச்சனையில்லை. நீங்கள் செய்ததைப் பார்த்துக் கொண்டு நிண்டனான்தானே. மருந்து கொடுத்தும் மலம் இறுகினால் நீங்கள் செய்ததுபோல அகற்றிவிடுகிறேன்."
"சாமர்தியமான மகள்" பாராட்டினேன். இப்படி ஒவ்வொரு பிள்ளைகளும் பிரச்சனையைப் புரிந்து வயதானவர்களின் துன்பங்களைக் களைந்தால் பெற்ற அவர்களது மனம் மகிழும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
--
No comments:
Post a Comment