வெற்றி தொட்டுவிடும் தூரம்தான் !
இளைஞனே! நீ சுய தொழில் செய்பவனா?
பாராட்டுக்குரியவன் நீ,
உன்னையொத்த பலரும் வேலையைத் தேடிக் கொண்டிருக்கும் போது, நாலு பேருக்கு நீ வேலை கொடுத்தாயே, அதற்காக இந்த பாராட்டு.
எல்லோரும் வேலையைத் தேடிக் கொண்டிருக்கும் போது, துணிந்து நீ ஒரு வேலையைத் தொடங்கினாயே, அதற்காக இந்த பாராட்டு.
உனக்கு சில வார்த்தைகளை சொல்லட்டுமா?
- சுய தொழிலுக்கு முதல் முக்கியம், கடும் உழைப்பு. வேலைக்குப் போகிறவனுக்கு எட்டுமணி நேரம்தான் உழைப்பு. சுயதொழில் செய்யும் உனக்கோ இருபத்திநான்கு மணி நேரமும் உழைப்பு இருக்க வேண்டும். மூளை உழைப்பையும் சேர்த்துத் தான் சொல்கிறேன். ஏனென்றால், இதில் நீ போட்ட முதலீடு, உன் சொந்தப் பணம். கடன் வாங்கியதாக இருந்தாலும் வட்டி கட்ட வேண்டியவன் நீதானே. அடைக்க வேண்டியவன் நீதானே.
- இரண்டாவது முக்கியம், கணக்கு வழக்குப் பார்ப்பது. ரொம்பவும் பிஸியாக அங்குமிங்கும் அலைவது ரொம்ப உழைப்பது மாதிரி தெரியும். தொழிற்கூடம் அல்லது கடையில் பரபரவென்று வேலைகள் நடப்பது, மனதுக்கு ரொம்ப தெம்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். வாரக்கடைசியில், மாதக்கடைசியில், வருடக்கடைசியில் என்ன மிஞ்சியது? அதுதான் முக்கியம். அதைத்தான் நீ பார்க்க வேண்டும். அடிக்கடி பார்க்க வேண்டும்.
- மூன்றாவது முக்கியம், வாடிக்கையாளர்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறுமுகமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, இறங்குமுகமாகவும் இருக்கக்கூடாது. அப்படியே ஒரே நிலையில் நின்று விடவும் கூடாது. அதற்கு வாடிக்கையாளர்களிடம் கனிவும் உபசரிப்பும் கட்டாயம் காட்ட வேண்டும். நீ மட்டுமல்ல, உனது உதவியாளர்களும் தான். வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் எல்லாப் பொருள்களும், எல்லாக் கம்பெனி பொருள்களும் உன் கடையில் இருக்க வேண்டும். ஏதோ ஒன்றிரண்டு பொருட்கள் உன் கடையில் இல்லை என்ற சாக்கை வைத்து, அடுத்த கடைக்கு அவர்கள் போய்விடக் கூடாது.
- நான்காவது முக்கியம், உனது உதவி யாளர்களை நீ நடத்தும் விதம். அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு, அடுத்த நிறுவனத்தை அவர்கள் நாடக்கூடாது. அந்த அளவுக்கு, குடும்பத்தில் ஒருவனைப் போல நீ அவர்களை நடத்த வேண்டும். சதா சர்வ காலமும் உனது மேற்பார்வை தேவைப்படாத அளவுக்கு, அவர்களின் வேலைத்திறமை உயரும்படி வாய்ப்பு களை அளிக்க வேண்டும்.
அவர்களுடைய நாணயத்தில் என்னதான் நம்பிக்கை இருந்தாலும், கொஞ்சம் எச்சரிக்கையும் வேண்டும். அதாவது, சுதந்திரமும் கொடு. வேலியும் போடு. - ஐந்தாவது முக்கியம், போட்டியாளர் களின் போக்கை கவனித்துக் கொண்டிருப்பது.
சுயதொழில் என்பதே போட்டிகள் நிறைந்ததுதானே. அவர்களை நீ முந்திச் செல்லாவிட்டாலும், பின் தங்கிவிடக் கூடாது. அது முக்கியம். அதற்கு, அவர்களுடைய தொழில் யுக்திகள் என்ன என்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். தவிர, நீயும் புதுப்புது யுக்திகளை புகுத்திவர வேண்டும்.
இதுபோதும், உன்னை வளர்ச்சிப் பாதையில் வைத்திருக்க. இவைகளைப் பின்பற்றினாலே, மேலும் மேலும் வளர்வதற்கு உனக்கே யோசனைகள் உதித்து விடும். வெற்றிகளை நோக்கி நீ ஓடத்தேவையில்லை! வெற்றி உன்னை நாடிவரும்.
வெற்றி தொட்டுவிடும் தூரம்தான் !
--
No comments:
Post a Comment