Friday, June 12, 2015

நோன்பை முறிப்பவையும் முறிக்காதவையும்

நோன்பை முறிப்பவையும் முறிக்காதவையும்

 முன்னுரை
நோன்பை சில செயல்கள் முறிக்கும் சில செயல்கள் முறிக்காது. அதோடு சில செயல்களை தவிர்ந்தும் இருக்க வேண்டும். அவற்றையும் தெரிந்து கொண்டால் தான் நோன்பின் முழுமையான பலனை அடைந்து கொள்ள முடியும்.
1. உண்பதும் பருகுவதும்:
'இன்னும் ஃபஜ்ர் எனும் வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள் பருகுங்கள். பின்னர் இரவு வரும் வரை நோன்பை முழுமையாக்குங்கள்' (அல்குர்ஆன் 2:187)
ஃபஜ்ரு வரை உண்ணலாம் பருகலாம் என்பதிலிருந்து அதற்கு மேல் உண்டாலோ பருகினாலோ நோன்பு முறிந்து விடும் என்பதை விளங்கலாம்.
2. தாம்பத்திய உறவு கொள்வது:
'நோன்புகால இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது' (அல்குர்ஆன் 2:187)
இந்த வசனம் நோன்புகால இரவில் உடலுறவில் ஈடுபட அனுமதிக்கிறது, பகலில் அனுமதி இல்லை என்பதை தெரிவிக்கிறது. அதாவது பகலில் உடலுறவில் ஈடுபட்டால் நோன்பு முறியும்.
3. பொய்யும் செயலும்:
'யார் பொய்யான பேச்சையோ பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் குடிப்பையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி1903, அபூதாவூது 2355)
நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம் இறையச்சம் உடையவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக என்றிருக்கும் போது பொய்யும் நடிப்பும் இதற்கு இசைவான செயல்கள் அல்ல. அதனால் நோன்பு நோற்பவர் இவற்றை விட வேண்டும். இவற்றை விடாதவர் நோன்பின் பயனை அடைந்தவராக கருதப்பட மாட்டார்.
4. கெட்ட வார்த்தையும் சண்டையிடுவதும்:
'உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம். கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 1904, முஸ்லிம் 2118, அபூதாவூது 2356)
நோன்பு நோற்பவர் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதையும் சண்டை சச்சரவு செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். நோன்பின் போது எடுக்கும் பயிற்சி அதன் பின்வரும் நாட்களிலும் தொடர வேண்டும்.
5. மறதியாக உண்பதும் குடிப்பதும்:
'ஒருவர் நோன்பாளியாக இருக்கும் போது மறந்து சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான்' நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, அபூதாவூது, திர்மிதி, இப்னுமாஜா)
'களாச் செய்ய வேண்டியதில்லை' என்று தாரகுத்னி, பைஹக்கீ, ஹாக்கிம் ஆகிய நுல்களில் பதிவாகியுள்ளது.
உண்டாலும் குடித்தாலும் நோன்பு முறிந்து விடும் ஆனாலும் மறதியாக உண்டாலும் குடித்தாலும் நோன்பு முறியாது. நினைவுக்கு வந்ததும் உண்பதையும் குடிப்பதையும் நிறுத்தி விட்டு தொடர்ந்து நோன்பாக இருந்து கொள்ள வேண்டும்.
6. மனைவியை முத்தமிடுவது:
'நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு தம் மனைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்!' என்று சொல்லி விட்டு ஆயிஷா (ரலி) அவர்கள் சிரித்தார்கள். (நூல்: புகாரி 1928)
நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது முத்தமிடுவார்கள், கட்டிப்பிடிப்பார்கள். ஏனெனில் அவர்கள் தம் உணர்வுகளை அவர்கள் அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)
உணர்களை கட்டுப்படுத்திக் கொள்பவர்கள் நோன்பிருக்கும் போது மனைவியை முத்தமிடலாம் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.
7. தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்படுதல்:
நபி (ஸல்) அவர்கள் உடலுறவின் மூலம் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள். ரமளானில் நோன்பு நோற்பார்கள். (அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி), ஆயிஷா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மது)
இந்த ஹதீஸ் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டு குளிக்காமல் கூட நோன்பு வைத்துக் கொண்டதை தெரிவிக்கிறது. அதே போல தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டு குளிப்புக் கடமையானவருக்கும் இதே ஹதீஸ் பொருந்தும். நோன்பு முறியாது.
'வாந்தியோ, ஸ்கலிதமோ, இத்தம் குத்தி எடுப்பதோ ஒருவரது நோன்பை முறிக்காது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு நபித்தோழர் அறிவிக்கிறார். (நூல்: அபூதாவூது 2370)
8. குளிப்பது:
நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டதை நான் பார்த்திருக்கிறேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மது, அபூதாவூது 2359, நஸயீ)
9. பல் துலக்குவது:
நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது என்னால் எண்ணிச் சொல்ல முடியாத அளவு பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். (அறிவிப்பவர்: ஆமிர் பின் ரபிஆ (ரலி), நூற்கள்: அபூதாவூது, திர்மிதி)
10. வாய் கொப்பளிப்பது:
'…பின்பு ஒரே கையில் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள்….' இதுதான் நபி (ஸல்) அவர்களின் உளூ என்று அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூற்கள்: புகாரி 1911, இப்னுமாஜா 405)
ஒலுவின் போது வாய் கொப்பளிக்க வேண்டும் என்பது நபி (ஸல்) அவர்களின் கட்டளை. அது நோன்பு நோற்றிருந்தாலும் சரி, நோன்பு வைக்காமல் இருந்தாலும் சரி, ஒலுவின் போது வாய் கொப்பளிக்க வேண்டும்.
11. மூக்குக்கு தண்ணீர் செலுத்துதல்:
'நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் சமயத்தில் தவிர மற்ற சமயங்களில் மூக்கை நன்றாக தண்ணீர் விட்டு சுத்தம் செய்யுங்கள்' என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: லகீத் பின் ஸபுரா (ரலி), நூற்கள்: நஸயீ, அபூதாவூது 2360, திர்மிதி 718, இப்னுமாஜா 407)
நோன்பு நோற்றிருக்கும் போது மூக்குக்கு தண்ணீர் செலுத்தி சுத்தம் செய்தால் தண்ணீர் தொண்டையை அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
12. எச்சிலை விழுங்குவது:
உண்பதும் குடிப்பதும் இல்லறத்தில் ஈடுபடுவதும் தான் நோன்பை முறிக்கும், எச்சிலை விழுங்குவது நோன்பை முறிக்காது. ஏனெனில் அது உணவோ குடிப்போ இல்லை.
13. உணவை ருசி பார்ப்பது:
நோன்பாளி உண்பதற்குத் தான் தடுக்கப்பட்டுள்ளார். உணவு சமைப்பவர்கள் அந்த உணவை ருசி பார்க்க தடை இல்லை. எண்ணிச் சொல்ல முடியாத அளவு பல் துலக்கிய நபி (ஸல்) அவர்களின் ஹதீஸே இதற்கும் ஆதாரமாகும். பற்குச்சியில் ஒரு வகை ருசி இருக்கத்தான் செய்கிறது. அந்த ருசியை நாக்கு உணர்வது நோன்பை முறிக்காது என்றால் உணவின் ருசியும் நோன்பை முறிக்காது. ஆனால் ருசி பார்த்த உணவை துப்பிவிட வேண்டும்.
14. இரத்த தானம் செய்வது:
'நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டார்கள்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார். (நூல்: புகாரி 1939)
';;;…நோன்பாளி இரத்தம் கொடுப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்' (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: தாரகுத்னீ)
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதனை வெறுத்தோம்' என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: ஸாபித் அல் புன்னானி (ரலி), நூல்: புகாரி)
மருத்துவ சோதனைக்காகவும் உயிர்காக்கும் நோக்கத்தில் இரத்த தானம் செய்வதற்கும் இந்த ஹதீஸில் ஆதாரம் இருக்கிறது.
15. வாந்தி எடுப்பது:
'தானாக ஒருவருக்கு வாந்தி வந்தால் அவர் (நோன்பைக்) களாச் செய்ய வேண்டியதில்லை. யார் வேண்டுமென்றே வாந்தி எடுக்கிறாரோ அவர் களாச் செய்ய வேண்டும்' என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: அஹ்மது, அபூதாவூது, திர்மிதி, இப்னுமாஜா, இப்னுஹிப்பான், தாரகுத்னி, ஹாக்கிம்)
16. ஊசி போட்டுக் கொள்வது:
நோயாளி நோன்பை விட்டு விட்டு வேறோரு நாளில் அதை களாச் செய்ய வேண்டும் என்பதற்கு அனுமதி இருந்தாலும், ஊசி போட்டுக் கொண்டால் அல்லது மருந்து தடவிக் கொள்வது போன்ற சிறு மருத்துவ உதவி அளித்தால் நோய் நீங்கி விடும் என்ற நிலையில் இருப்பவர்கள் நோன்பிருந்து கொண்டே செய்து கொள்ளலாம். ஆனால் மாத்திரை டானிக் போன்ற மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் நோன்பு திறந்த பிறகு மருந்துகளை உட்கொள்ள வேண்டும் அல்லது நோன்பை விட்டு விட்டு களாச் செய்ய வேண்டும்.
17. சொட்டு மருந்து இட்டுக் கொள்வது:
நோன்பிருந்து கொண்டே கண், காது, மூக்கு போன்ற உறுப்புகளுக்கு சொட்டு மருந்து இட்டுக் கொள்ள முடியும் அதனால் நோன்பு முறியாது. மூக்குக்கு இடும் சொட்டு மருந்து தொண்டையை கடந்து விடும் என்றிருந்தால் அதை தவிர்ப்பது நல்லது. நோன்பு திறந்த பிறகு அதை இட்டுக் கொள்ள வேண்டும்.
முடிவுரை
நோன்பு வைப்பவர்களுக்கு இதுபோன்ற செயல்களினால் நோன்பு முறிந்து விட்டதோ என்ற சந்தேகம் அடிக்கடி நிகழ்வதை நாம் கண்டுவருகிறோம். அவற்றை நாம் இங்கே பட்டியல் இட்டுள்ளோம். இவற்றை அறிந்து நோன்பை பூரணமாக நிறைவேற்றவோமாக!
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: