குழந்தைகளுக்குக் கஷ்டம் தராமல் உலகமே புரியாமல் வளர்த்தது அந்தக் காலம். வாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்தியசாலிகளாகக் குழந்தைகளை வளர்ப்பதே இந்தக் காலம்! வெங்கட்டுக்கு இப்போது நாற்பது வயது. நல்ல உத்தியோகம், கைநிறையச் சம்பளம். ஆனாலும், நாளுக்குநாள் ஏறிக்கொண்டே போகும் விலைவாசியில் திண்டாட்டமாகத்தான் இருக்கிறது. வீட்டு லோன், கார் லோன், பர்சனல் லோன் என்று கடன் கட்டி மாளவில்லை. எவ்வளவோ திட்டமிட்டுச் செலவு செய்தாலும் மாத கடைசியில் கஷ்டம்தான். வாழ்க்கை ஏன் இப்படியே போகிறது? விலை ஏற்றம்தான் காரணமா? அல்லது பணத்தை நிர்வாகம் பண்ணுவதில் நமக்குத்தான் கொஞ்சம் சூட்டிகைப் போதவில்லையோ? கார் வாங்குவதைக் கொஞ்சம் தள்ளிப்போட்டு இருக்கலாமோ? எல்லாரும் வாங்குகிறார்களே என்று வாங்கியது தப்போ? பர்சனல் லோன் வாங்காமல் சமாளித்திருக்கவேண்டும். இப்படி மனதில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள். சரியான நேரத்தில் எடுத்துச்சொல்ல யாரும் இல்லாததால் நேர்ந்த தவறுகள். இந்தக் கஷ்டங்கள் வருங்காலத்தில் நம் பிள்ளைகளுக்கு வரக்கூடாது. சிறு வயதில் இருந்தே அவர்களுக்குப் பணத்தைக் கையாளுவதில் நல்ல விழிப்பு உணர்ச்சியை உண்டாக்கவேண்டும். வாழ்க்கைக்குப் பணம் எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவு முக்கியமானது அதனைச் சரியாக நிர்வாகம் செய்வது என்பதைப் புரியவைக்க வேண்டும் என்று நினைத்தார். பண நிர்வாகத்தில் உள்ள சூட்சுமங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லித்தர என்ன செய்யலாம்? மூளையைக் கசக்கிக்கொண்டு யோசித்தவர், முதலில் கடைக்கு ஓடிப்போய் ஓர் உண்டியலை வாங்கி வந்து தன் குழந்தைகளிடம் கொடுத்தார் ஆனால், அது மட்டும் போதுமா? சேமிக்கச் சொல்லித் தருவது நல்ல பழக்கம்தான். உண்டியலை மட்டும் வைத்துக்கொண்டு குழந்தைகள் பணத்தை நிர்வகிக்கக் கற்றுக்கொள்ள முடியுமா என்ன என்கிறீர்களா? வேறு என்னவெல்லாம் வழிகள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், பண நிர்வாகம் என்பது ஒரு நாளில் கற்றுக்கொள்ளக்கூடிய சமாசாரம் இல்லை என்பதுதான். வெறும் உண்டியலை வாங்கித் தருவதாலோ அல்லது ஒருமுறை சொல்வதினாலோ பணத்தை நிர்வகிப்பதில் உள்ள நுணுக்கங்களை ஒருவர் முழுமையாக உள்வாங்கிவிட முடியாது. இது வாழ்நாள் முழுவதும் தொடரவேண்டிய கல்வி. குழந்தையில் ஆரம்பித்து டீன்-ஏஜ் ஆகி பெரியவர் ஆகும் வரை தொடர்ச்சியாகப் பயில வேண்டிய விஷயம். பண நிர்வாகம் என்கிற விஷயத்தைப் பொறுத்தவரை, குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்பதைவிடவும், நம்மைக் கவனித்துக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாக நாம் வாழ்ந்து காட்டினாலேபோதும், பண நிர்வாகத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்குவார்கள். குழந்தைகள் எல்லோரும் ஒரே சிந்தனைப்போக்குக் கொண்டவர்கள் கிடையாது. வயதுக்கேற்ப உலகம் பற்றிய அவர்களின் பார்வை மாறும். பணத்தைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எனவே, குழந்தைகளின் வயதுக்கேற்ப ஒவ்வொரு கட்டத்திலும் என்ன வழிமுறைகளைப் பயன்படுத்தி அவர்களுக்குப் பண நிர்வாகம் பற்றிச் சொல்லித் தரலாம் என்பதை இனி விளக்கமாகச் சொல்கிறேன். 6 - 10 வயது வரை: சேமிக்கப் பழக்குங்கள்! இந்த வயது குழந்தைகளுக்கு முதலில் அடிப்படை விஷயமான சேமிப்பைப் பழக்கினாலே போதும். பெற்றோர்கள் தங்களுக்குத் தருகிற பணத்தில் பாதியை சேமித்துவிட்டு, மீதியைத்தான் செலவழிக்க வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அதாவது, ரூ.10 தந்தால், அதில் ரூ.5 சேமிப்புக்கு, மீதி ரூ.5தான் செலவுக்கு என்று பழக்குங்கள். இதனால் என்ன லாபம்? கையில் வரும் காசு எல்லாமே செலவழிக்கத் தான் என்ற எண்ணம் சிறு வயதில் இருந்தே தோன்றாது. முதல்பகுதி சேமிப்புக்கு, அடுத்த பகுதிதான் செலவுக்கு என்று மனதில் படிந்துவிடும். 'Pay yourself first' என்று சொல்வார்கள். முதலில் உங்கள் எதிர்காலத்துக்கு வேண்டிய பணத்தை எடுத்துவைத்துவிடுங்கள் என்று இதைத் தமிழில் சொல்லலாம். இந்தப் பழக்கம் குழந்தைகளின் அடிமனதில் பதிந்துவிட்டால் பெரியவர்களாகி வேலைக்குப் போன பின்னால் தீபாவளி போனஸ், இன்க்ரிமென்ட் என்று ஒரு தொகை கிடைக்கும்போதெல்லாம் முதலில் சேமிப்பில் சேர்த்துவிடுவார்கள். இலக்கு அவசியம்! வெறும் சேமிப்பு என்கிற கட்டத்தைத் தாண்டியபிறகு, அதாவது, சேமிக்கத் தொடங்கிய ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட இலக்கை வைத்து சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். 100 ரூபாய் சேமித்தால் பொம்மை வாங்கலாம்; 500 ரூபாய் சேமித்தால் செஸ்போர்டு வாங்கலாம் என்று இலக்கு நிர்ணயிக்கலாம். நீங்கள் நிர்ணயிக்கும் இலக்கை உண்டியல்மேல் எழுதி ஒட்டிவிடுங்கள். அப்போதுதான் ஓர் இலக்கை நோக்கிப் பயணிக்கிறேன் என்பதைக் குழந்தைகள் மறக்காமல் இருப்பார்கள். அந்த இலக்கை அடைந்தவுடன் அந்தப் பொருளை வாங்க உதவி செய்யுங்கள். கஷ்டப்பட்டதற்குப் பலன் கைமேல் தெரிந்தால்தான் குழந்தைகள் பெரிய இலக்குகளை நோக்கி ஓடுவார்கள். சிலசமயம் அவர்கள் வாங்கிய பொம்மை உடைந்துவிடக்கூடும். அது நல்லதுக்குத்தான். கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தை எளிதில் உடைந்துவிடக்கூடிய பொருளை வாங்கிவிட்டோமே என்று நினைத்து, அடுத்தமுறை, இலக்குகளைச் சரியாக நிர்ணயம் செய்ய குழந்தைகளுக்கு அது உதவும். நீண்டகாலம் சந்தோஷம் தரும் விஷயத்துக்குப் செலவு செய்யவேண்டும் என்று புரிந்துகொள்வார்கள். இதனால் என்ன லாபம்? பெரியவர்களானதும் சொந்த வீடு உள்பட நீண்டகாலத்துக்கு நன்மை தரும் விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். 10 வயதுக்கு மேல்: வங்கிக் கணக்குத் தொடங்குங்கள்! வங்கியில் குழந்தைபேரில் சேமிப்புக் கணக்குத் தொடங்குங்கள். உண்டியலில் சேமித்ததை வங்கியில் போட்டுவைக்கப் பழக்குங்கள். குழந்தையை வங்கிக்கு அழைத்துக் கொண்டு போவது, அவர்களின் கையாலேயே பணத்தை டெபாசிட் பண்ணுவது, பணத்தை எடுப்பது, செக் போடுவது போன்ற விஷயங்களைச் சொல்லிக்கொடுங்கள். இதனால் என்ன லாபம்? * வங்கிகளில் சேமித்தால் லாபம் அதிகம். ஏனென்றால் வட்டி, கூட்டு வட்டி கிடைக்கும். உண்டியலில் சேமித்தால் இது கிடைக்காது என்பதைக் குழந்தைகள் புரிந்துகொள்வார்கள். * வங்கிகளில் நடப்பது என்ன, அங்குப் புழங்கும் டெக்னிக்கல் வார்த்தைகள் என்ன என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் அத்துபடியாகும், பயமும் விலகும். * தங்கள் சேமிப்புக்கு அதிக வட்டி எங்கே கிடைக்கும், வங்கிகளின் சேவை பற்றியெல்லாம் அலச கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள். * தவறு நேர்ந்தால் எப்படிப் புகார் செய்வது என்று தெரிந்து கொள்வார்கள். * காலேஜ் போகும்போது கல்விக் கடன் வாங்கவேண்டி இருந்தால் தைரியமாகப் பேங்க் மேனேஜரிடம் பேசுவார்கள். அதன் லாபநஷ்டத்தைக் கணக்குப் போடத் தெரிந்துகொள்வார்கள். செலவுக் கணக்கு எழுதப் பழக்குங்கள்! தினமும் செலவு விவரங்களை அப்பா, அம்மாவிடம் கேட்டு நோட்டில் எழுதிவைக்கப் பழக்குங்கள். இது அவர்கள் சேமிப்புக்கு மட்டுமல்ல, வீட்டுச் செலவுக்கும்தான். இதனால் என்ன லாபம்? குழந்தைகளுக்கும் வீட்டின் வரவு, செலவுகள் எழுதுவது பிடிபட்டுவிடும். செலவுகளைப் பற்றித் துல்லியமாகத் தெரிந்தால்தான் பிற்காலத்தில் சரியாகப் பட்ஜெட் போட முடியும். பட்ஜெட் போட்டுச் செலவு செய்தால், பணம் எல்லாமே நம் கட்டுக்குள் இருக்கும். பெற்றோரின் சிரமம் புரியாமல் குழந்தைகள் எதாவது வாங்கித்தரச் சொல்வதும் குறையும். டீன்-ஏஜ் பிரிவினருக்கு: மினி பட்ஜெட் போட பழக்குங்கள்! 'அவனுக்கு என்ன தெரியும்? சின்னக் குழந்தை. அவன் படிப்புல கவனமா இருந்து நல்ல மார்க் வாங்கினாலே போதும்' என்று தயவுசெய்து நினைக்காதீர்கள். கல்வி முக்கியம்; அதைவிட முக்கியம், வாழ்க்கைக் கல்வி என்கிற பண நிர்வாகம். இதற்கு ஒரு சின்ன ப்ராஜெக்டாக ஒரு மினி பட்ஜெட் போட பழக்குங்கள். திருப்பதி, பழநி ட்ரிப் அல்லது பர்த்டே பார்ட்டி போன்ற எல்லா நிகழ்ச்சிகளுக்கான செலவுக்கு உங்கள் டீனேஜ் மகன்/மகளை உட்கார வைத்துப் பட்ஜெட் போடுங்கள். என்னென்ன தலைப்புகள், எந்தெந்த விஷயங்களுக்குச் செலவு செய்யவேண்டும் என்று நோட்டில் எழுதச் சொல்லுங்கள். நோட்டில் எழுதி வைத்தால்தான் மனதில் பதியும். வெறும் மனக்கணக்கு போடுவது தப்புக் கணக்காகவே முடியும். பின்னர் எங்கெங்கே அசல் செலவு பட்ஜெட்டைத் தாண்டும் என்று கணிக்கச் சொல்லுங்கள். அந்தப் பயணம் முழுவதும் பிள்ளையின் கையில் நோட்டு இருந்து உடனுக்குடன் எழுதிக்கொண்டே வந்தால் நல்லது. எல்லாம் முடிந்தபின் ஏற்கெனவே போட்ட பட்ஜெட்டை குடும்பமாக அமர்ந்து அலசுங்கள். எங்கே செலவு அதிகமானது, ஏன் என்று அலசினால் அடுத்தமுறை இன்னும் கச்சிதமாகப் பட்ஜெட் போட முடியும். இதனால் என்ன லாபம்? பிற்காலத்தில் எதையும் திட்டமிட்டுச் செலவு செய்யப் பழகுவார்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பட்ஜெட்டுக்குள் குடும்பம் நடத்தினால் ஒவ்வொரு இலக்காக விரைவில் அடையலாம். திடீர் பணவரவு வந்தால் தாம்தூம் என்று செலவழிக்க மாட்டார்கள். ஆய்வு செய்யப் பழக்குங்கள்! டீன்- ஏஜ் மகன்/மகள் ரொம்ப நாளாக மொபைல் போன் வேண்டுமென்று நச்சரிக்கிறார்களா? என்ன மாடல் போன், எந்த நெட்வொர்க், என்ன ஸ்கீம், என்ன ஆஃபர் என்று விசாரித்து வரச் சொல்லுங்கள். அதைக் கச்சிதமாகச் செய்கிறார்களா என்பதைப் பாருங்கள். கோச்சிங் க்ளாஸில் சேரவேண்டுமா? அடிப்படை தகவல்களைத் திரட்டிவரப் பழக்குங்கள். கட்டணம் எவ்வளவு, ஆசிரியர்கள் தேர்ந்த பயிற்சியாளர்களா, வகுப்பறை எப்படி, லைட்டிங்க், பாத்ரூம் வசதிகள் எப்படி என்று விசாரிக்கச் சொல்லுங்கள். ஸ்போர்ட்ஸ் ஷூ வேண்டுமா? எங்கே டிஸ்கவுன்ட் சேல்? கம்ப்யூட்டர் வாங்கவேண்டுமா? என்ன மாடல், என்ன கான்ஃபிகரேஷன், என்ன விலை என்று கேட்கச் சொல்லுங்கள். ஒரு விஷயத்தைப் பற்றி ஆய்வு செய்வது என்பது ஏதோ கம்பச் சூத்திரமல்ல; அது பற்றிய அடிப்படையான எல்லா விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்வதுதான் ரிசர்ச். பணம் செலவு செய்யப்போகிறோம் என்றால் நாலு விஷயமும் விசாரிக்கவேண்டும். இதனால் என்ன லாபம்? ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்த்து, தகவல் திரட்டி, தீர்க்கமாக அலசி ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். பிற்காலத்தில் வீடு, கார், முதலீடு என்று எதையும் ஒன்றுக்கு பத்து தடவை அலசி ஆராய்ந்து வாங்குவார்கள். 'என்னாலே எல்லாம் நாலு கடை ஏறி இறங்க முடியாது. முதல் கடையிலேயே பர்ச்சேஸை முடிச்சிருவேன்' என்று சொல்லமாட்டார்கள். அடுத்தவர், கார் வாங்கினால் தானும் உடனே அதே மாடல் கார் வாங்கி வாசலில் நிறுத்துவேன் என்று வெட்டி பந்தா பண்ணாமல், நம் குடும்ப அங்கத்தினர் எண்ணிக்கைக்கு, நிதி நிலைமைக்கு ஏற்ற மாதிரி வாங்குவார்கள். குழந்தைகளுக்குக் கஷ்டம் தராமல் உலகமே புரியாமல் வளர்த்தது அந்தக் காலம். வாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்தியசாலிகளாகக் குழந்தைகளை வளர்ப்பதே இந்தக் காலம்! நீங்கள் இந்தக் காலத்துப் பெற்றோர்தானே? பண நிர்வாகம் பற்றி உங்கள் குழந்தைக்குக் கற்றுத் தருவீர்கள்தானே! வழிகாட்டும் இங்கிலாந்து! இங்கிலாந்தில் நடந்த சமீபத்திய ஆய்வின்படி அங்கே உள்ள 10 வயதான குழந்தைகளில் 98% பேர் சேமிக்க ஆரம்பித்துவிட்டனராம். அதிலும், 43% பிள்ளைகள் (10 வயதானோர்) எங்கெங்கே டிஸ்கவுன்ட் சேல் போடுகிறார்கள் என்று கவனித்து வாங்குகிறார்களாம். ''உலகப் பொருளாதார மந்தநிலை ஆரம்பித்தபோது பள்ளிக்குள் முதல்முதலில் காலடி எடுத்துவைத்தவர்கள் இந்தக் குழந்தைகள். வீட்டில் பெற்றோர் சிக்கனமாக இருப்பதைப் பார்த்து இவர்களும் சிக்கனமாக இருப்பதுதான் பெஸ்ட் என்று புரிந்துவைத்திருக்கிறார்கள்'' என்கிறார், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜேன் ஹம்ஃப்ரீஸ். இங்கிலாந்துக் குழந்தைகளைப் பார்த்து நம் குழந்தைகளும் ஃபாலோ பண்ணலாமே! ''குடும்ப பட்ஜெட்டை குழந்தையுடன் போடுவோம்!'' மதுரையில் சேது பொறியியல் கல்லூரி யில் துணைப் பேராசிரியராக இருக் கிறார் மலைச்சாமி. 'என் மூத்த பையன் சரணேஸ்வரன், மூன்றாம் வகுப்புப் படிக்கிறான். நாங்கள் ஒவ்வொரு மாதமும் அவனை வைத்தே பட்ஜெட் போடுவோம். இந்த மாதம் எதில் துண்டு விழுந்திருக்கிறது, எதில் பணம் மிச்சமாகியிருக்கிறது என்பதையெல்லாம் அவனே விமர்சனம் செய்வான். பள்ளிக் கட்டணத்தை அவனிடமே தந்து கட்டச் சொல்வோம். எதற்கெல்லாம் செலவு செய்யலாம், செய்யக் கூடாது எனவும் குடும்பத்தின் பொருளாதார நிலையை அவனே கணிப்பதால், சிக்கனம் பற்றி அவனுக்கே அருமையாகத் தெரிகிறது'' என்றார். ''புத்தாண்டு முதல் எங்கள் இளைய மகன் மகாப்ரணேஷ§க்கும் மண் உண்டியல் வாங்கித் தருவதாக முடிவெடுத்திருக்கிறோம். அடிக்கடி திறந்து பார்த்துப் பணம் எடுக்காமல் இருக்கத்தான் இந்த மண் உண்டியல்!'' என்று 'கணக்காக'ப் பேசினார் மலைச்சாமியின் மனைவி கவிதா. ''பயம் போயிடுச்சு!'' 12 வயது கோகுல் தன் வங்கி அனுபவத்தைப் பற்றிச் சொன்னான்: ''புதுசா என் பேரில் சேவிங்க்ஸ் அக்கவுன்ட் ஆரம்பிச்சு அதில் காசு போட போனோம். அப்பா எல்லாத்தையும் நீயேதான் எழுதித் தரணும்னு சொல்லிட்டார். கைநடுங்கி கையெழுத்து கோணல்மாணலா வந்தது. தப்பா வேற எழுதிட்டேன். கிழிச்சுப் போட்டுட்டு மறுபடியும் எழுதினேன். வேர்த்துப்போய்க் கவுன்டர்ல தந்தப்ப, ஆன்டி சிரிச்சுக்கிட்டே வாங்கிக்கிட்டாங்க. கையெழுத்து சரியில்லைன்னு திட்டுவாங்களோன்னு நினைச்சேன், ஆனா, ஒண்ணும் சொல்லலை. காசு வாங்கிட்டு ஸ்டாம்ப் வச்சு கொடுத்துட்டாங்க. இப்ப எனக்குப் பயம் போயிடுச்சு. அடுத்தமுறை தைரியமா பேங்குக்குப் போயி பணம் போடுவேன்.'' ''வீட்டுக் கணக்கை எழுதுவேன்!'' தினமும் வீட்டுக் கணக்கை எழுதும் தருண் சொல்வதைக் கேளுங்கள்: 'நான் வீட்டுக் கணக்கை எழுதுறதால, டாடி, பெட்ரோல் போட்ட செலவைச் சொல்ல மறந்துட்டீங்களே, உங்களுக்கு ரொம்பக் கவனக்குறைவுன்னு கேக்க முடியுது. மம்மி, வீட்டுலேருந்தே தண்ணிக்கொண்டு போயிருந்தா வெயில்ல கூல் ட்ரிங்ஸ், மினரல் வாட்டர் செலவை கம்மி பண்ணியிருக்கலாமேன்னு சொல்ல முடியுது. கூடவே ஒவ்வொரு செலவையும் பார்த்து பார்த்து செய்யணுங்கிறதையும் நான் கத்துக்கிறேன் |
--
No comments:
Post a Comment