Saturday, September 3, 2016

உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா?


நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் ப்ரீத்தி - சூரி தம்பதி இருவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கின்றனர். கை நிறையச் சம்பளம். ஏராளமான சலுகைகள். இளமையில் ஓடி ஓடி உழைத்தவர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் சிரிப்பையும் ஒவ்வோர் அசைவையும் வளர்ச்சியையும் பார்த்து ரசிக்க முடியவில்லையே என்ற வேதனை. ஒரு கட்டத்தில் சம்பாதித்தது போதும் என்று வேலையை உதறிவிட்டனர். வருமானத்துக்காக உழைத்த காலத்தில் தங்கள் குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டுவிட்டு அலுவலகத்துக்கு ஓடும் இந்தப் பரபரப்பான வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்பட்ட சிக்கலான அனுபவமே 'காஞ்சனா பாட்டி குழந்தைகள் காப்பகங்கள்' உருவாவதற்கு இவர்களுக்கு விதையாக அமைந்து இருக்கிறது. இன்று சென்னையில் 14 இடங்களில் குழந்தைகள் காப்பகங்களை நடத்திவருகிறார்கள் ப்ரீத்தி-சூரி.   

பிறந்து மூன்றே மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைகளைத் தாயின் அரவணைப்புடன் பாதுகாக்கும் குழந்தைக் காப்பகங்கள் எப்படி இருக்க வேண்டும்? என்னென்ன வசதிகள் தேவை? என்பது பற்றி ப்ரீத்தி - சூரியும், ஆயாவின் மடியில் தவழும் குழந்தைகளின் ஆரோக்கியம்குறித்துக் குழந்தைகள் நல மருத்துவர் ஸ்ரீனிவாசனும் இங்கே விரிவாகப் பேசுகின்றனர்.
''இரண்டு மாதக் குழந்தை தனது அம்மாவின் முகம் பார்த்துச் சிரிக்கும். மூன்று மாதங்களில் தலை நிற்கும். நான்கு முதல் ஐந்து மாதங்களில் கவிழ்ந்து படுக்கும். ஏழு முதல் எட்டு மாதங்களில் உட்காரும். ஒன்பது, பத்து மாதங்களில் நிற்கும். ஒரு வயதில் நடக்க ஆரம்பிக்கும். ஒரு சில குழந்தைகளுக்கு இந்தச் செயல்பாடுகளுக்கான காலம் வேறுபடலாம். இப்படிக் குழந்தை படிப்படியாக உடல் வளர்ச்சியில் முன்னேறி, தத்தித் தத்தி நடந்து வரும் அழகை இன்றைய பெற்றோர்கள் ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. உடல் மற்றும் மனரீதியான வளர்ச்சிக்கான பருவம் இந்த மழலைப் பருவம். உடல் நல்ல ஆரோக்கியமாக இருந்தால்தான், அந்தக் குழந்தையின் வருங்காலம் நன்றாக இருக்கும். எனவே, குழந்தையுடன் செலவிட முதல் ஐந்து வருடங்களை ஒதுக்குங்கள். ஒருவேளை தவிர்க்கவே முடியாமல் காப்பகங்களில் கொண்டுபோய்விட நேரிட்டால், இந்தப் பாதுகாப்பான வழிகளைக் கடைப்பிடியுங்கள்'' என்றவர்கள் காப்பகத்தில் குழந்தைகள் நலமாக இருப்பதற்கான வழிகளைப் பட்டியலிட்டனர்.
குழந்தை எப்போதும் குதூகலமாக இருக்க...
 பிறந்து ஆறு மாதங்கள் வரை குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே கட்டாயம் தர வேண்டும்.
 
முடிந்தவரை ஆறு மாத விடுப்பைக் கட்டாயமாக்கிக்கொள்வது நல்லது.
  
 குழந்தை எட்டு மணி வரைக்கும் தூங்கட்டும் என்று விட்டுவிட்டு எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு பிறகு அவசர அவசரமாக எழுப்பிக் குளிக்க வைத்து, பால் மற்றும் உணவைக் கொடுத்துக் காப்பகத்தில் கொண்டுவிடும் பெற்றோர்கள்தான் அதிகம். இதனால் குழந்தையும் சரியாகச் சாப்பிடாது. ஆற அமரக் குழந்தையுடன் விளையாட்டுக் காட்டியபடியே சாப்பாட்டை ஊட்டுங்கள். குழந்தையும் ஆர்வமாகச் சாப்பிடும்.
 சூடான சாதத்தைக் குழையப் பிசைந்து ஊட்டும்போது, குழந்தை நன்றாகச் சாப்பிடும். மதியம், மாலை உணவுகளையும் தயாரித்துத் தரும் காப்பகங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
 மருத்துவ ஆலோசகர்கள் இருக்கிறார்களா அங்கு இருக்கும் ஒவ்வொரு குழந்தையைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் பதிவு செய்திருக்கிறார்களா என்பனவற்றைக் கவனியுங்கள். உங்கள் குழந்தையின் ரத்த வகை, ஒவ்வாமை, குடும்ப மருத்துவர், உணவு முறைகள், கொடுக்கும் மாத்திரை மருந்துகள்பற்றிய அனைத்து விவரங்களையும் நீங்களே, ஒரு ஃபைலில் போட்டுத் தந்துவிடலாம்.  
பிஞ்சுக் குழந்தைகளுக்கு அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படும். மூக்கில் சளி, இருமல், லேசான காய்ச்சல் இருந்தால், அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்று கவனிப்பது உத்தமம்.
குழந்தைகள் உடுத்துவதற்குத் தளர்வான மெல்லிய பருத்தி ஆடைகளைப் பயன்படுத்தினால், குழந்தைகளுக்குத் தோல் தொடர்பான பிரச்னை வராமல் இருக்கும். காய்ச்சி ஆறவைத்த நீரை, நன்கு கிருமி நீக்கம் செய்யப்பட்ட பாட்டிலில் ஊற்றிக்கொடுக்கலாம்.
ஒரு வயதைக் கடந்துவிட்டால், குழந்தையைக் குடும்பத்தினருடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடப் பழக்குங்கள். இதனால் காப்பகத்துக்குச் செல்லும்போது மற்ற குழந்தைகளுடன் அது சேர்ந்து சாப்பிடும்.
  மண்ணில் விளையாடும்போது குழந்தைகளுக்குத் தோலில் அரிப்பு, கொப்புளங்கள் வரலாம். காப்பகத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் தனி சோப்பைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.  
குழந்தைக் காப்பகத்தைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க மேலும் சில யோசனைகள்...
தரை தளத்தில் இயங்கும் காப்பகங்களைத் தேர்ந்தெடுங்கள்.
 குழந்தைகள் ஓடி விளையாடக்கூடிய அளவுக்கு இடம் தாராளமாக இருக்க வேண்டும். வெளிச்சமும் காற்றோட்டமும் நன்கு இருக்க வேண்டும். காப்பகத்தில் இருக்கும் கதவு, ஜன்னல், டேபிள் எல்லாவற்றின் முனையும் கூர்மையாக இருக்கக் கூடாது என்பதைக் காப்பகம் நடத்துபவர்களிடம் வலியுறுத்துங்கள்.
 ஏ.சி. இல்லாமல் இருப்பதே குழந்தைகளின் உடல் நலத்துக்கு நல்லது.
 சிறிய அறையில் அளவுக்கு அதிகமான குழந்தைகள் இருக்கின்றன என்றால், அந்தக் காப்பகத்தைத் தவிர்ப்பது நல்லது.  
 மூன்று குழந்தைகளுக்கு ஓர் ஆயா என்கிற ரீதியில் இருந்தால்தான் அவரால் ஒவ்வொரு குழந்தையின்மீதும் அக்கறையுடன் தனிக் கவனம் செலுத்த முடியும்.
காப்பகத்தில் உள்ள ஆயாக்கள், முதலுதவிப் பயிற்சி பெற்று இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
  
ஆயாக்களின் உடை மற்றும் விரல் நகங்கள், கை, கால்களைச் சுத்தமாக வைத்திருக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள்.
 உங்கள் வீடு, அலுவலக நேரம், பயணத்துக்காக ஆகும் நேரம் போன்றவற்றையும் கணக்கிட்டு, அதற்கேற்ப காப்பகத்தைத் தேர்ந்தெடுங்கள்.
 காப்பங்களின் சுவர்கள் வண்ண மயமாக இருந்தால், குழந்தைகள் கூடுதல் உற்சாகத்துடன் இருப்பார்கள்.  
ஓடியாடி வரும் குழந்தைகளுக்கு உடம்பில் சின்னச் சின்னச் சிராய்ப்புகள் ஏற்படலாம். இதற்காகக் காப்பக நிர்வாகிகளிடம் சண்டை போடுவது நல்லது அல்ல.
 குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேசுங்கள். காப்பக ஆயாக்களைப் பற்றி விசாரியுங்கள். மற்ற குழந்தைகளைப் பற்றியும் பேசுங்கள். அந்த மழலைக் குரலில் புகாரும் இருக்கலாம். புகழ்ச்சியும் இருக்கலாம். இதை வைத்துக் குழந்தையின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியும்!
குழந்தைகள் காப்பகம் நடத்துவோர் கவனத்துக்கு...
 நல்ல மற்றும் கெட்ட பழக்கவழக்கங்களைக் குழந்தைகள் தங்களைச் சுற்றி நடப்பதைப் பார்த்தே கற்றுக்கொள்கிறார்கள். காப்பக ஆயாக்கள் ஒருவரிடம் மற்றொருவர் உரையாடும்போது, மரியாதைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லது.
  கண்களுக்கு எது தென்பட்டாலும், உடனே அதை வாயில் வைத்துக்கொள்ளும் பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. எனவே, கைக்கு எட்டும் தூரத்தில் எதையும் வைக்காதீர்கள்.
 பற்கள் முளைப்பதால் கடிக்கும் பழக்கம் வரும். மற்ற குழந்தைகளைக் கடிப்பதைத் தவிர்க்க, டீத்தர், நிப்புள் போன்ற பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
 ஒரு குழந்தை கையை நீட்டிப் பேசும்போது மற்றொரு குழந்தையின் கண்ணில் குத்த நேரிடலாம். பென்சில், பேனா, பிரஷ் போன்ற பொருட்களைக் குழந்தைக்குக் கொடுக்கும்போது, ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடைவெளி விட்டு உட்காரவைப்பது நல்லது.
http://www.puthiyatamil.net



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: