Saturday, November 20, 2010

ரயில் பயணங்களில்..! : சிறுகதை

"ம்ம்ம்... டாக்ஸி வந்தாச்சு... நகரு... நான் கொண்டு போறேன். பெரிய பெட்டியை இப்படி வை... தண்ணி கேம்பர் எங்கே? பூட்டு எங்க..? சாவி எங்க? ஏறுங்க... கதவை அடித்து மூடுங்க..."
கேள்விகளும் அறிவுரைகளுமாய் ஒருவழியாய் ஏறியாயிற்று...
"என்னங்க? பூட்டை வெளிலே போட்டீங்களா? உள்ளேயுள்ள கொக்கியில் போட்டீங்களா?"
"ஆரம்பிச்சிட்டியா?"
"சரி விடுங்க!"
இரண்டு தெரு தாண்டியதும், "ஏங்க... வெளி லைட் போட்டீங்களா?"
இப்போ போட்டேன்னு சொல்லவா? போடலைன்னு சொல்லவான்னு குழம்பியதிலே போட்டேனா போடலையான்னே குழப்பம்...
அடுத்த 10 நிமிடம் சுமுகமாக நகர்ந்தது...
"என்னங்க கேஸ் கீழே உள்ள ஸ்விட்சை மூடினீங்களா?"
"ஆமாம்மா..."
அடுத்த ஐந்தாவது நிமிடம்.
"ஏங்க.."
"என்னம்மா?"
"கிச்சன்லே குழாயை மூடினீங்களா?"
இப்படிக் கேல்வி மேல கேள்வி கேட்டாலே பதிலைப் பற்றிய குழப்பமும் கை நடுக்கமும் ஆரம்பிச்சுடுதே எனக்கு...
"இல்லைங்க... பாத்ரூம்லே யார் கடைசியா போனது?"
"குழாயை மூடினீங்களா?"
"லைட் ஆஃப் செய்தீங்களா?"
"ஹாலில் ஃபேன் ஆஃப் செய்தீங்களா?"
இந்தக் கேள்விக் கொண்டாட்டத்தையெல்லாம் வீட்டிலேயே கேட்டுக் கொண்டாடியிருக்கக் கூடாதா?
கொலை வெறியுடன் ஆனால் பரிதாபமாகப் பார்த்தேன்...
நிறைய தடவை என்னுடைய குழப்பமான பதில்களால் வீட்டுக்குத் திரும்பிப் போய்ச் சரிபார்த்த அனுபவம் கூட உண்டு எனக்கு...
அப்பாடா!! ஸ்டேஷன் வந்தாச்சு. இனிமேல் வீட்டுக்கு அனுப்ப மாட்டாள்.
ரொம்ப நம்பிக்கையுடன் ரயிலில் ஏறியாச்சு.
"சாவியைக் கொண்டா... பெட்டிக்கெல்லாம் சங்கிலி போட்டுரலாம்..."
"அச்சோஓஓஓஓஓஓ...."
"என்னம்மா... சாவி கொண்டு வரலியா? ஒண்ணும் பிரச்னையில்லை. பூட்டு சாவி ரிப்பேர் பண்றவன் வருவான் திறந்திடலாம்..."
நான் வீட்டுக்குப் போவதைத் தடுப்பதிலேயே குறியாயிருந்தேன்.
"இல்லைங்க டிக்கெட்டை வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டேன். சரி சரி இறங்குங்க... ஒரு நடை போய் டிக்கெட்டை எடுத்திட்டு அப்பிடியே கேஸ் திறந்திருக்கான்னு செக் பண்ணிட்டு, பாத்ரூம், கிச்சன் குழாயைத் திறந்திருக்கான்னு பார்த்துட்டு, ஃபேனை அணைத்து விட்டு, வெளி லைட்டைப் போட்டுட்டு... வீட்டை உள்ளேயுள்ள கொக்கியில் பூட்டைப் போட்டுப் பூட்டிட்டு வாங்க... பதறாதீங்க... இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு..."
'கிராதகி... இப்படி எல்லாத்தையும் செக் பண்ணுவதற்கே டிக்கெட்டை வீட்டில் விட்டு வந்தாளோ?'
முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டே இரண்டடி வைத்திருப்பேன்.
"என்னாங்க... வீட்டுச் சாவி எடுத்துக்கிட்டீங்களாஆஆஆஆஆஆ..?"
நான்... ஙே!!!

No comments: