Friday, March 28, 2014

கம்ப்யூட்டரின் திறவு கோலாக யு.எஸ்.பி. ட்ரைவ்

கம்ப்யூட்டரின் திறவு கோலாக யு.எஸ்.பி. ட்ரைவ்


உங்கள் கம்ப்யூட்டரைத் திறக்கும் திறவு கோலாக அல்லது மந்திரக் கோலாக, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவினைப் பயன்படுத்தலாம். பிரிடேட்டர் (Predator) என அழைக்கப்படும் புரோகிராம் இதற்கு உதவுகிறது. இது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதுவரை நீங்கள் பாஸ்வேர்ட் கொடுப்பதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக, பூட்டியும் திறந்தும் வைத்திடும் பணியை மேற்கொள்பவராக இருந்தால், இந்த வசதியையும் பயன்படுத்திப் பார்க்கலாம். சினிமாவில் வரும் ரகசிய போலீஸ் மாதிரி, யு.எஸ்.பி. ட்ரைவினைப் பயன்படுத்தலாம்.
இதனை, யு.எஸ்.பி. போர்ட்டில் நுழைத்தால் மட்டுமே, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம். எடுத்துவிட்டால் பயன்படுத்த இயலாது.


இந்த யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் இல்லாமல், யாரேனும் உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முயற்சித்தால், அனுமதி இல்லை (Access Denied) என்ற செய்தியைப் பெறுவார்கள். உங்கள் ப்ளாஷ் ட்ரைவினை, கம்ப்யூட்டரின் திறவு கோலாக மாற்ற, கீழ்க் குறித்துள்ள செயல்முறைகளின்படி செயல்படவும்.


1. முதலில்http://download.cnet.com/PredatorFree/30002144_410915340.htmlஎன்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து, Predator என்ற புரோகிராமினை டவுண்லோட் செய்திடவும். தொடர்ந்து கம்ப்யூட்டரில் அதனை இன்ஸ்டால் செய்திடவும்.
2.
பிரிடேட்டர் புரோகிராம் இயங்கத் தொடங்கியவுடன், ப்ளாஷ் ட்ரைவினை, உங்கள் கம்ப்யூட்டரில் இணைக்கவும். இதனால், உங்கள் கம்ப்யூட்டரின் ட்ரைவில் உள்ள எதுவும் மாற்றி அமைக்கப்படமாட்டாது. எனவே பயப்படாமல், இதனைப் பயன்படுத்தவும். இதனை இணைத்தவுடன், டயலாக் பாக்ஸ் ஒன்று கிடைக்கும். பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்குபடி உங்களைக் கேட்கும். ஓகே கொடுத்து தொடரவும்.
3.
இப்போது Preferences என்று ஒரு விண்டோ கிடைக்கும். இதில் உள்ள சில முக்கிய செட்டிங்ஸ் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள். "New password" என்ற பீல்டில் பாதுகாப்பான, யாரும் எளிதில் கண்டு கொள்ள முடியாத பாஸ்வேர்ட் ஒன்றைக் கொடுக்கவும். இங்கு கிடைக்கும் Always Required என்ற பாக்ஸில், டிக் அடையாளம் ஏற்படுத்தினால், பிளாஷ் ட்ரைவ் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரைத் திறக்க, உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்கப்படும்.
இறுதியாக, Flash Drives என்ற பிரிவில், சரியான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தேர்ந்தெடுக்கவும். இதனை முடித்த பின்னர், "Create key" என்பதில் கிளிக் செய்து, ஓகே அழுத்தி வெளியேறவும்.


4. இப்போது பிரிடேட்டர் புரோகிராம் முடிக்கப்படும். இது முடிந்தவுடன், டாஸ்க் பாரில் உள்ள பிரிடேட்டர் புரோகிராமின் ஐகானை அழுத்தவும். சில விநாடிகள் கழிந்த பின்னர், அந்த ஐகான் பச்சை நிறத்தில் மாறும். இதன் மூலம், பிரிடேட்டர் இயங்கத் தொடங்கியது குறித்து உங்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு 30 விநாடிகளுக்கொருமுறை, பிரிடேட்டர் உங்களுடைய ப்ளாஷ் ட்ரைவ் ப்ளக் செய்யப்பட்டுள்ளதா எனச் சோதனையிடும். இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சம் குறைந்து, இயக்கம் நின்றுவிடும்.


பிரிடேட்டர் இயக்கத்தினைத் தற்காலிகமாக நிறுத்த, டாஸ்க் பார் மெனுவில், "Pause monitoring" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் லாக் செய்யப்பட்டிருக்கையில், யாரேனும் பயன்படுத்த முயற்சி செய்தால், அதனை நீங்கள் கம்ப்யூட்டர் இயக்கு கையில் டாஸ்க் பார் மெனுவில் உள்ள "View log" மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இது மட்டுமின்றி, நீங்கள் பிரிடேட்டர் தரும் இணைய தளம் சென்றால், அதில் ஒவ்வொரு முறை யாரேனும் ஒருவர் உங்கள் கம்ப்யூட்டரை இயக்க முயன்று தோல்வி அடைந்தால், அதனை எத்தனை நிமிடங்களுக்கொருமுறை ஸ்கிரீன் ஷாட் எடுக்கலாம் என்பதனை செட் செய்வதற்கான புரோகிராம் வழி தரப்பட்டிருக்கும்.


இதில் என்ன பிரச்னை என்றால், பிரிடேட்டர் யு.எஸ்.பி. ட்ரைவ் இயங்கவென, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவினை நீங்கள் பயன்படுத்திய நிலையிலேயே வைக்க வேண்டும். மற்ற யு.எஸ்.பி ட்ரைவ்கள் பயன்படுத்துவதில் ஒன்றைக் குறைத்துக் கொள்ள வேண்டியதிருக்கும். அல்லது, ஒன்றில் இணைப்பு கொடுத்து, பல யு.எஸ்.பி. ட்ரைவ்களைப் பெறும் இணைப்பு ஒன்றை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Thursday, March 27, 2014

உடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவுகள்

உடல் பருமன் அதிகமான குழந்தைகள் தவிர்க்கவேண்டிய உணவுகள்

1.) முட்டையின் மஞ்சள் கரு (egg yolk)
மஞ்சளில் அதிகப்படியான கொழுப்புச்சத்து உள்ளது.ஒரு நாள் முழுக்க தேவையான அளவைவிட அதிக அளவில் ஒரே முட்டையில் உள்ளது. வெள்ளைக்கருவில் புரதம்(protein) அதிகமிருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு வெள்ளைக்கரு மட்டுமே போதுமானது

2.)
மைதா மாவில் செய்த உணவுகள் -
மைதா என்பது ஒரு சீரழிந்த கோதுமை. நார்சத்து அறவே அற்றது.எனவே குழந்தைகளின் உடல் பருமனைக்குறைக்க அறவே தவிர்க்கவேண்டும். உதாரணம்- பரோட்டா,பஃப்ஸ், பன் ,பிரட்

3.)
ஆட்டிறைச்சி தவிர்க்கப்படவேண்டும்..(எண்ணையில் பொரிக்காத கோழி மற்றும் மீன் தரலாம்-க்ரேவி அல்லது குழம்பு)

4.)
எண்ணையில் பொரித்த உணவுகள்

5.)
குளிர்பானங்கள் - கோலா பானங்கள் ; இவைகளில் empty calories தான் உள்ளன்.இவை கட்டாயம் உடல் பருமனை உண்டாக்கும்

6.)
நொறுக்குத்தீனிகள் -உருளை சிப்ஸ்

7.)
மாவுச்சத்து அதிகமுள்ள-உருளைக்கிழங்கு,வாழைக்காய்,வாழைப்பழம்

8.)
இரவில் அரிசி சோறு தவிர்க்கவும்

9.)
கேக், ஐஸ்கிரீம் -அடிக்கடி தருவதை தவிர்க்கவும்

10.)
காலை உணவினை தவிர்க்ககூடாது. இதனால் உடலில் சர்க்கரை அளவு குறைந்து பள்ளியில் உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு ஏற்படும். மேலும் பட்டினி இருப்பதால் அடுத்தவேளை உணவின் சத்துக்களை கொழுப்பாக மாற்றி சேமிக்கத்தொடங்கும்.இதுவே உடல் பருமனின் ஆரம்பப்புள்ளியாக மாறலாம்.சரியான வேளையில் மிதமான அளவில் சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் பருமன் வருவதில்லை


--
*more articles click*
www.sahabudeen.com


Wednesday, March 26, 2014

பாத்திரங்களாலும் உண்டு பலன்...!

உணவு, நீர், தானியங்கள், தயிர், மோர், நெய், சாறு, எண்ணெய் போன்ற பொருள்களைச் சேமிக்கவும், சமைக்கவும் பாத்திரங்கள் தேவைப்படுகின்றன.

பயன்படுத்தப்பட்டு வருகின்ற பாத்திரங்கள் காலத்துக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாறிக்கொண்டே வந்துள்ளன.
உலோகங்கள் கண்டறியபட்டாத காலத்தில் மண், கல், பீங்கான், மரப்பட்டை, மூங்கில், பரங்கி, சுரக்காய், தேங்காய், திருவோடு, இலைகள் போன்றவை பாத்திரங்களாகப் பயன்பட்டன. பின்னர் உலோகங்கள் கண்டறியப்பட்டன. தங்கம், வெள்ளி, பித்தளை, அலுமனியம், இரும்பு, வெண்கலம், எவர்சில்வர் முதலியவை பயன்படுத்தப்பட்டன. தற்போது, காகிதம், பிளாஸ்டிக் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

எளிதாகக் கிடைக்க வேண்டும்; பயன்படுத்தும்போது இலகுவாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, புத்தம்புது பாண்டங்கள் தோன்றின.

செல்வந்தர்களும், மன்னர் போன்றவர்களும் விலை மதிப்பை அடிப்படையாகக் கொண்டு பாத்திரங்களைச் சேர்த்துக்¢கொண்டனர்.
உதாரணமாக, தங்கம், வெற்றி பாத்திரங்கள் ஏழை எளிய மக்களால் பயன்படுத்த முடிவதில்லை. வருவாய் குறைந்தவர்கள், மட்பாண்டமோ, அலுமினிய பாத்திரமோ பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

பாத்திரங்களைப் பயன்படுத்தும் முன் அவற்றினால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை கருத்திற் கொண்டால், உடல் நலத்துக்கு ஏற்றதாக இருக்கும். பயன்கருதாது பயன்படுத்துவோர் ஏராளம். மாவீரன் நெப்போலியன், தான் உணவு உண்பதற்காக அலுமினியத்தினால் செய்யப்பட்டு தட்டு வைத்திருந்தாராம். அன்றைய காலத்தில் அலுமினியம் விலை மதிப்புடையதாக இருந்திருக்கிறது. இன்றைக்கு அது ஏழைகளின் பாத்திரமாக ஆகியிருக்கிறது.

செம்பு பாத்திரம்
தமிழர் நாகரிகம் செம்பு நாகரிகத்தில் தொடங்கியதாகக் கூறுவர். செம்பு அதிக அளவில் கிடைக்கப் பெற்றதால் தேவையான கருவிகளும் பாத்திரங்களும் செம்பினால் செய்து கொண்டனர். சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்திராவிட மக்கள் அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பய்னபடுத்தியுள்ளனர். அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்துவதனால், பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என்று இன்றைய அறிவியலார்கள் கண்டறிந்துள்ளனர். தண்ணீரைச் சேமித்து வைப்பதற்காகவும் செம்புப் பாத்திரங்களை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளார்கள். சித்தர்களும், முனிவர்களும் பயன்படுத்தி வந்த கமண்டலங்கள் செம்பினால் ஆனவை என்பது குறிப்பிடத்தது. இயற்கையாகவே செம்பினாலான பாத்திரங்களில் நீர் வைத்திருந்தால், நீரிலுள்ள தீய நுண்ணுயிர்கள் அழிந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், ரத்தத்திலுள்ள பித்த நோய்கள், சந்தி, கபம், பிலீகம், மந்தம், வெண்மேகம், அழலை, சூதக நோய், புண், பிரந்தி, சுவாசநோய்கள், கிருமி தாதுநட்டம், கண் நோய் ஆகியவை நீங்கிவிடும் என்பது தெரிகிறது. உலக நல நிறுவனம் குடிநீரைப் பற்றிக்கூறும் செய்தியில், குடிநீரில் கோலிஃபோர்ம் பாக்டீரியா உள்ள நீரைப் பருகினால் டைபாஃய்ட் சுரமும், வயிற்றுப் போக்கு நோய்களும் ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருந்தால் கோலிஃபார்ம் பாக்டிரியா முற்றிலும் அழிந்துவிடுகிறது.

தூக்கம்
உடல் நலமும் மன நலமும் நன்றாக இருக்க தூக்கம் ஒரு கருவி. அளவாக இருந்தால் அமைதி. அளவு மிகுந்தாலும் அமைதி. தூக்கம் கெட்டால் துக்கம் என்றெல்லாம் கூறக்கேட்கின்றோம். சான்றோர்கள், துறவிகள், வினையாளர்கள் தூக்கத்தைக் குறைத்துக்கொண்டே தாங்களாற்ற வேண்டிய பணியைக் கடமையைச் செய்வார்கள். கடமைக்காகவே வாழந்து வருகின்றவர்கள் உடல்சுகத்தை இழந்து புகழ் பெறுகின்றார்கள். அது எல்லோராலும் இயலுவதில்லை.

விதியாவது! மண்ணாவது! என்று, துண்டை விரித்துப் போட்டுக் கொண்டு படுக்கின்றவர்களுக்கும், படுத்த அடுத்த நிமிடத்தில் 'அம்மனோ சாமியோ! என்று ஆனந்த ராகத்தில் இசையமைத்து குறட்டை விடுபவர்களுக்கும் நோய் நீங்கும். எந்த வித நோயும் வராது, உடலும் நலமாக இருக்கும். தூங்குவதற்கான என்பது, சாலை விதி போல, கண்ணை விழித்துக் கொண்டு செயலாற்றுவதல்ல. படுக்கும்போது, எந்தத் திசையில் தலை வைக்க வேண்டும், கையை காலை எப்படி வைக்க வேண்டும். எப்படி படுக்க வேண்டும் என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

எவர் வீட்டுக்குப் போனாலும் அவர் வீட்டுக்குப் போக மாட்டேன் என்று சொல்வதைப் போல, எந்தத் திசையில் படுத்தாலும் படுக்கலாம், வடக்குத் திசையில் மட்டும்தலைவைத்துப் படுக்கக் கூடாது. பூமியின் வடமுனையிலிருந்து தென்முனைக்கு கதிரிழுப்பு விசை இயங்கிக் கொண்டிருக்கும. உறங்கும்போது வடக்கில் தலை இருந்தால், மூளைப் பகுதி அந்தக் கதிரிழுப்பு விசையால் ஓய்வு பெறுவது குறைந்துவிடும். எனவேதான் வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்கிறார்கள். குறிப்பாக, நோயாளிகள் தங்களுக்கு வந்துள்ள நோய்கள் விரைவாகக் குணமாக வேண்டும் என்பதற்காகவும் திசைகளைப் பற்றி தெரிவித்துள்ளார்கள்.

எக்காரணத்தைக் கொண்டும் கவிழ்ந்து குப்புறமாகவோ மல்லாந்தோ படுக்க கூடாது. ஏனென்றால், இரவு நேரத்தில்தான் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை கூடி கற்களை உருவாக்குகின்றன. குறிப்பாகக் குப்புறப்படுக்கும் போதே சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது நினைவிற் கொள்ளத்தக்கது.
எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகலில் துஹங்கினால், உடம்பிலுள்ள வெப்பம் தணியாமல் வாத நோய்கள் உருவாகும்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

தியாகத்தின் மறுபெயர் ஹஜ் கடமை..

தியாகத்தின் மறுபெயர் ஹஜ் கடமை..

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும், அல்லாஹுத்தஆலா நபி(ஸல்) அவர்கள் மூலமாக தன் அடியார்களுக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினான். நபி(ஸல்) அவர்கள் தன் உம்மத்தினருக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினாலும் இதன் பின்னணியில் நபி இபராஹீம்(அலை) அவர்களும், அவர்களின் குடும்பமும் செய்த மாபெரும் தியாகங்கள் மறைந்திருக்கின்றன. அவர்கள் செய்த பல தியாகங்க ள் இன்று நமக்கு ஹஜ்ஜின் கடமையான வணக்கமாக்கப்பட்டிருக்கின்றன.

கஃபா, ஜம்ஜம் கிணறு, ஸஃபா மர்வா மலை, ஜம்ராக்களில் கல்லெறிதல், குர்பானி கொடுத்தல் இவைகள் அனைத்தும் இக்குடும்பம் செய்த தியாகத்தை ஞாபகப்படுத்துகின்றன. கஃபாவை தவாஃப் செய்யாமல், ஸஃபா, மர்வா மலைகளுக்கு இடையில் தொங்கோட்டம் ஓடாமல் யாராவது ஹஜ், உம்ரா செய்ய முடியுமா? வருடத்தில் ஒரு முறை மாத்திரம் அல்ல. ஒவ்வொரு நாளும் இத்தியாகத்தை மக்கள் ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் செய்த தியாகங்களும் ஹஜ் கடமைகளும் ஜம்ஜம் கிணறும், ஸஃபா மர்வா மலையும் அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்: 'எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே- தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருக்கின்றேன். எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!' (14:37)
மனிதர்களின் வாடையையே உணர முடியாத நேரத்தில் மனித வர்க்கங்களின் ஒரு கூட்டத்தாரை அங்கு கொண்டு வரும்படியும், புற்பூண்டுகளே முளைக்க முடியாத பாலைவனப்பூமியிலே பழவகைகளைக் கொண்டு அம்மக்களுக்கு உணவளிக்கும் படியும் நபி இப்ராஹீம்அலை) அவர்கள் பிரார்த்தனை செய்தது அவர்கள் அல்லாஹுவின் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை பறைசாற்றுகின்றது. அப்பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்ட காரணத்தினால்தான் இன்று எங்கும் கூடாத அளவுக்கு மக்காவில் கூடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதே போல் உலகத்தில் உள்ள எல்லாப் பழவகைகளையும் மக்காவில் வருடமெல்லாம் பெறமுடிகின்றது.
அல்லாஹுவின் கட்டளைக்கு இணங்க, நீண்ட இடைவெளிக்குப் பின் கிடைத்த தன் மழலைக் குழந்தையையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு மனித சஞ்சாரமற்ற புற்பூண்டுகள்கூட முளைக்க முடியாத பாலைவனத்தில் (இன்று கஃபாவாக இருக்கும் இடத்துக்கு அருகாமையில்) விட்டுவிட்டு கொஞ்சம் பேரீத்தம் பழங்களையும், தண்ணீரையும் அங்கு வைத்து விட்டு நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்று விடுகின்றார்கள். எங்களை தன்னந்தனியே விட்டுவிட்டு எங்கே செல்கின்றீர்கள் என ஹாஜரா அம்மையார் அவர்கள் பல முறை கேட்டும் நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் எந்த விடையும் கொடுக்காத போது அல்லாஹ்வா உங்களை இவ்வாறு செய்யும்படி ஏவினான்? என ஹாஜரா அம்மையார் அவர்கள் மீண்டும் தன் கணவர் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் கேட்டார்கள். ஆம்! என்று அவர்கள் விடை கூறவே, அப்படியானால் அல்லாஹ் எங்களை கைவிடமாட்டான் என்று கூறியவாறு தன் குழந்தையோடு அங்கேயே தன்னந்தனியாக அமர்ந்து விடுகின்றார்கள். நபி இப்ராஹீம்(அலை) தன் குடும்பத்தைப் பார்க்க முடியாத அளவுக்குத் தூரமாகச் சென்று ஒரு மேட்டுப் பகுதியில் கிப்லாவை முன்னோக்கி நின்று மேற்கூறிய பிரார்த்தனையை செய்து விட்டு சென்று விட்டார்கள்.
இருந்த தண்ணீர் முடிந்ததும் தனக்கும் தன் பிள்ளைக்கும் தாகம் ஏற்படவே தண்ணீர் தேடி அலைகின்றார்கள் அன்னை ஹாஜரா அவர்கள், அப்போது அவர்களுக்கு பக்கமாக இருந்த மலை, ஸஃபா மலைதான், யாரையாவது அந்தப்பகுதியில் பார்க்கலாமா என்று நினைத்து ஸஃபா மலைமீது ஏறுகின்றார்கள், அங்கு யாரையும் காணவில்லை. அங்கிருந்து கீழே இறங்கி மர்வா மலைக்குச் செல்கின்றார்கள்.
அங்கு செல்லும் வழியில்தான் ஒரு ஓடையைக் கண்டார்கள். அந்த ஓடையைக் கடப்பதற்காக தன் ஆடையைச் சிறிது உயர்த்திய வண்ணம் வேகமாக அந்த ஓடயைக் கடந்தார்கள். இன்று அந்த இடத்தை சுட்டிக்காட்டுவதற்காக பச்சை நிற மின்விளக்கு பொருத்தப்பட்டிருக்கின்றது. அவ்விடத்தில் ஸஃயீ செய்யும் ஆண்கள் மாத்திரம் சிறிது வேகமாக ஓடுவது சுன்னத்தாக்கப்பட்டிருக்கின்றது. மர்வா மலையை அடைந்த போது அதன்மீது ஏறி மனிதர்களில் யாராவது இருப்பார்களா எனப்பார்த்தார்கள்.
அங்கேயும் யாரையும் காணவில்லை, இப்படி ஏழு முறை செய்தார்கள். கடைசியாக மர்வா மலையில் நிற்கும் போதுதான் தண்ணீர் சத்தத்தைக் கேட்டார்கள். தண்ணீர் சத்தம் எங்கிருந்து வருகின்றது என்பதை உற்றுநோக்கினார்கள். இப்போது ஜம்ஜம் தண்ணீர் கிணறு இருக்கும் இடத்தில் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் தன் இறக்கையால் தோண்டி அங்கே தண்ணீர் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அங்கே ஓடோடி வந்து தண்ணீர் வெளியில் செல்லாமல் தன் கையால் கட்டினார்கள். அதிலிருந்து தன் பாத்திரத்திலும் தண்ணீரை எடுத்து ஊற்றினார்கள். தண்ணீரை எடுத்து ஊற்றும் போதெல்லாம் தண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: இஸ்மாயீலின் தாய்க்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஜம்ஜம் தண்ணீரை கட்டாமல் விட்டிருந்தால் அல்லது தன் பாத்திரத்தில் அள்ளி ஊற்றாமல் இருந்திருந்தால் ஜம்ஜம் தண்ணீர் ஊற்றெடுத்து ஓடும் ஒன்றாக ஆகியிருக்கும் எனக்கூறினார்கள்.
தண்ணீர் தேடி வந்த 'ஜுர்ஹும்' கோத்திரத்தார் ஹாஜரா அம்மையார் அவர்களிடம் உத்தரவு பெற்று அங்கே குடிபெயர்ந்தார்கள். அல்லாஹ் இப்ராஹீம்(அலை) அவர்களின் துஆவை ஏற்று ஜம்ஜம் கிணறை அன்றிலிருந்து இன்றுவரை வற்றாத கிணறாக ஆக்கியிருக்கின்றான். கஃபா அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, 'எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்' (என்று கூறினார்) (2:127)
இந்த வசனத்தில் அல்லாஹ் இப்ராஹீம்(அலை) மற்றும் இஸ்மாயீல்(அலை) அவர்கள் கஃபாவை கட்டிய செய்தியைக் கூறுகின்றான். மேலே கூறப்பட்ட இரு வசனங்;களின் மூலம் இப்ராஹீம்(அலை) அவர்களின் குடும்பமாகிய இம்மூவரும் செய்த இத்தியாகத்தின் வெளிப்பாடாகவே கஃபா, ஜம்ஜம் கிணறு மற்றும் ஸஃபா மர்வா என்னும் மாபெரும் நினைவுச் சின்னங்கள் உருவாகியிருக்கின்றன. இவைகளை நினைவு கூறாமல் ஹஜ், உம்ரா கடமையை எந்த ஒரு ஹாஜியாவது நிறைவு செய்ய முடியுமா? இது அவர்கள் செய்த தியாகங்களின் பிரதிபலனாகும். மகாமு இப்ராஹீம் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் (இதையும் எண்ணிப் பாருங்கள்; 'கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்' (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் 'என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்' என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம். (அல்குர்ஆன்2:125)
இப்ராஹீம்(அலை) அவர்கள் கஃபாவை எந்தக் கல் மீது நின்று கட்டினார்களோ அதனையே அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான். அதைத் தொழும் இடமாக எடுத்துக் கொள்ளுங்கள் என அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டிருக்கின்றான். எந்த ஒரு ஹாஜியோ அல்லது உம்ராச் செய்பவரோ அல்லது தவாஃப் செய்பவரோ அவர்களின் தவாஃபை முடித்த பின் மகாமு இப்ராஹீமுக்குப் பின் (தவாஃபுக்காக) இரண்டு ரக்அத்துத் தொழுவது சுன்னத்தாக்கப் பட்டிருக்கின்றது. இவ்வாறு ஹஜ்ஜில் செய்யும் பெரும்பகுதியான வணக்கங்கள் அவர்களின் தியாகங்களை ஒவ்வொரு வருடமும் நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இன்னும் அல்லாஹ் அவ்விருவரையும் கஃபாவை தவாஃப் செய்ய வருபவர்களுக்கும், இஃதிகாப் இருப்பவர்களுக்கும் தொழுபவர்களுக்கும் சகல அசுத்தங்களிலிலுருந்தும் சுத்தப் படுத்தும்படியும் உறுதிமொழி வாங்கினான். குர்பானியும் ஜம்ராக்களும் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார் 'என்னருமை மகனே! நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!' (மகன்) கூறினார் 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவராகவே காண்பீர்கள்.' ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது நாம் அவரை 'யா இப்றாஹீம்!' என்றழைத்தோம். 'திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.' 'நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.' ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். (அல்குர்ஆன் 37:101 -107) அல்லாஹுத்தஆலா தன் அடியாரான நபி இப்ராஹீம்(அலை) அவர்களுக்கும், அவர்களின் மனைவியையும் மகனையும் மனித நடமாட்டமற்ற இடத்தில் விட்டுவிடும்படி சோதனை செய்து முடித்ததும் அதை விடப்பெரும் சோதனையைக் கொண்டு சோதிக்க ஆரம்பித்தான்.
அதாவது தன் மகன் இஸ்மாயீல்(அலை) அவர்கள் ஓடி விளையாடும் வயதிலே அவர்களை அறுக்கும்படி இப்ராஹீம்(அலை) அவர்கள் ஒரு கனவு கண்டார்கள். (நபிமார்கள் காணும் கனவும் வஹியின் ஒரு வகைதான்) அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக ஒரு கையில் கத்தியையும் மறு கையில் தன் மகனையும் பிடித்துக் கொண்டு இப்ராஹீம்(அலை) அவர்கள் சென்றார்கள். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் மகனின் பாசம் தன்னைத் தடுத்து விடுமோ என்ற அச்சத்தில் இஸ்மாயீல்(அலை) அவர்களை முகம் குப்புறக் கிடத்தி அறுப்பதற்கு முயலுகின்றார்கள்.
தன் அடியார் இப்ராஹீம்(அலை) அவர்கள் தனது இந்தக் கட்டளையையும் நிறைவேற்றுவதற்கு முன் வந்தபோது அறுப்பதை அல்லாஹ் தடுத்து விடுகின்றான். அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் 'இப்ராஹீமே!' என்றழைத்தோம்.'திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம். 'நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். அல்லாஹ் இதை ஒரு பெரும் சோதனை என்றும் கூறுகின்றான். இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப் பகரமாக சுவர்க்கத்திலிருந்து ஒரு ஆட்டையும் இறக்கிக் கொடுக்கின்றான்.
அதை இப்ராஹீம்(அலை) அவர்கள் அறுத்தார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றாகக் கட்டுப்பட்டார்கள். இதுதான் தியாகம், அல்லாஹ் ஒன்றை ஏவி விட்டால் ஏன் எதற்கு என்று கேட்காமல் உடன் அந்தக் கட்டளைக்கு கீழ் படிய வேண்டும். இதை இப்ராஹீம்(அலை) அவர்கள் முழுமையாக செயல்படுத்திக் காட்டினார்கள். இந்தத் தியாகத்தை ஞாபகம் செய்யும் விதமாக ஹாஜிகளும், ஹஜ்ஜு செய்யாதவர்களும் ஹஜ்ஜுப் பெருநாளன்று ஆடு, மாடு, ஒட்டகங்களை குர்பானி கொடுக்கின்றார்கள்.
இதனால்தான் ஹஜ்ஜுப் பெருநாளை 'தியாகப் பெருநாள்' என்று அழைப்பார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாளில் இவ்வாறுதான் அல்லாஹ்வின் கட்டளைக்கு மதிப்பளிக் வேண்டும். அல்லாஹ்வின் சில கட்டளைகளை நிறைவேற்றும் போது நமக்கோ அல்லது நமது குடும்பத்துக்கோ அல்லது நமது பொருளுக்கோ அழிவு வந்துவிடும் என ஷைத்தான் நமது உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடலாம். அந்த எண்ணங்களை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
ஒரு போதும் தன் கட்டளைகளை நிறைவேற்றுபவர்களை அல்லாஹ் இழிவாக்க மாட்டான் என்பது நபி இப்ராஹீம்(அலை) அவர்களும் அவர்களின் குடும்பமும் செய்த தியாகங்களினால் நமக்குக் கிடைக்கும் பெரும் பாடமாகும். ஆகவே அல்லாஹ்வின் அனைத்துக் கட்டளைகளுக்கும் மதிப்பளிப்போமாக.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Tuesday, March 25, 2014

அம்மை போட்டக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாமா?

அம்மை போட்டக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாமா?

அம்மை என்பது வைரஸ் (virus) கிருமியினால் ஏற்படும் தொற்றுவியாதி. காற்றின் மூலமும் ,தொடுவதின் மூலமும் வேகமாகப் பரவக்கூடியது .

இறைநம்பிக்கைக்கும் இதற்கும் தொடர்பில்லை.மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.

குழந்தைகளைத் தாக்கும் பொதுவான அம்மை நோய்கள்

1.)
மணல்வாரி அம்மை(Measles)

2.)
தாளம்மை(புட்டாலம்மை)(Mumps)

3.)
சிக்கன்பாக்ஸ் (நீர் குளுவான் அம்மை)(chickenpox )

4.)
ருபெல்லா அம்மை (Rubella)(German Measles)

மணல்வாரி அம்மை:
6
மாதம் முதல் 2 வயதுடைய குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.
முகம்,கழுத்து மற்றும் காதின் பின்புறம் ஆகிய இடங்களில் தொடங்கி பின் உடலின் கீழ்பகுதிகளுக்கு பரவும்.
இதற்கான தடுப்பூசி உள்ளது . 9 வது மாதமுடிவில் முதல் தவணை தனியாகவும், 15 மாதத்தில் MMR என்ற மூவம்மை ஊசியாக இரண்டாம் தவணையும் 5 வயதில் MMR மூலம் இறுதி தவணையும் போடவேண்டும்.

மணல்வாரி அம்மை வந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகவேண்டும்.காய்ச்சலைக்குறைக்கும் மருந்துகளும் ,வறட்டு இருமலை குறைக்க மருந்துகளும் தருவார். இதுபோல் மணல்வாரி அம்மை வந்த குழந்தைகளுக்கு விட்டமின் A நீர்மக்கரைசலை கட்டாயம் தரவேண்டும்.அதையும் மருத்துவர் தருவார் .

மணல்வாரி அம்மை வைரஸ் கிருமி என்றபோதிலும் அது உடலில் எதிர்ப்புசக்தியை வெகுவாகக் குறைப்பதால் பாக்டீரியா நோய்த்தொற்று எளிதில் ஏற்பட்டு நிமோனியா சளி,கடுமையான வயிற்றுப்போக்கு எற்படும்.எனவே மிகக்கவனம் தேவை .

தாளம்மை/புட்டாலம்மை
இது மம்(ப்)ஸ் எனப்படும் வைரஸ் கிருமியினால் வருவது. தாடையில் உள்ள உமிழ்நீர்சுரப்பியை பாதிப்பதால் தாடையின் இருபுறமும் காதிற்கு கீழ் உள்ள பகுதி வீங்கியிருக்கும் .காய்ச்சல் இருக்கும்.

இதற்கான தடுப்பூசி 15 மாதம் மற்றும் 5 வயதில் இரு தவணைகளாக MMR என்ற தடுப்புசி வழியாக போடப்படுகிறது

மருத்துவரை அணுகினால் காய்ச்சல் குறையவும்,தாடை வலி குறையவும் மருந்து தருவார்

ருபெல்லா அம்மை :
இது பொதுவாக மிதமான காய்ச்சல் , இருமல் மற்றும் கழுத்தைச் சுற்றிலும் சிறுசிறு நெறிகட்டிகளை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது

ஆனால் கர்ப்பிணிகளுக்கு ருபெல்லா வந்தால் பிறக்கப்போகும் குழந்தைக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்
1.
பிறவி காது கேளாமை
2.
இருதய குறபாடு
3.
கண் புரை நோய்
4.
வளர்ச்சியடையாத தலை

பெண்குழந்தக்கு கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும். 15 வது மாதம் மற்றும் 5 வயதில் இரு தவணைகளாக MMR என்ற தடுப்பூசி போடப்படுகிறது .

ஏற்கனவே போடவில்லையென்றாலும் பருவம் அடைந்தபின்னோ அல்லது திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்போ போட்டுக்கொள்ளவேண்டும் .

அதாவது தடுப்பூசி போட்ட 3 மாதங்களுக்குள் கருத்தரிக்கக்கூடாது


--
*more articles click*
www.sahabudeen.com


Monday, March 24, 2014

ஒட்டகம் – அல்லாஹ்வின் அற்புதப்படைப்பு

ஒட்டகம் – அல்லாஹ்வின் அற்புதப்படைப்பு

ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் 'பாலைவனக்கப்பல்'.
ஏனென்றால், 'சஃபீனத்-அஸ்-ஸஹாரா ' என்று எந்த பண்டைய அரபி இலக்கியங்களிலாவது எழுதப்பட்டு இருக்கிறதா?" என்றால்… அரபிகள் முழிக்கிறார்கள்.
ஏதோ சில ஆங்கில அறிவு பெற்றவர்களுக்கு மட்டும் 'தெ ஷிப் ஆப் தெ டெசெர்ட்' என்றால் தெரிந்திருக்கிறது. அநேகமாய், தங்கள் மகத்தான கண்டுபிடிப்பான 'கப்பலில்', மத்தியதரைக்கடலை கடந்து வடக்கு ஆப்பிரிக்காவில் கால்வைத்த ஐரோப்பியர்கள், ஒட்டகத்தையும் பாலைவனத்தையும் முதன்முதலாக பார்த்துவிட்டு.. 'கடலுக்கு கப்பல்பிரயாணம் – பாலைக்கு ஒட்டகபிரயாணம்' என்று மட்டுமே உணர்ந்து சொன்ன வாக்கியமாக இருக்கலாம்.
மழை, புயல், காட்டாற்று வெள்ளம், சூறாவளி, பனிப்பாறை, மணல்திட்டு, அடித்தள ஓட்டை, சுனாமி போன்ற எந்த ஒரு இயற்கைச்சீற்றத்துக்கும் திடீர் ஆபத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் இரண்டாக உடைந்து தலை குப்புறக்கவிழ்ந்து மூழ்கும் கப்பல் என்ற மனிதனால் கட்டப்பட்ட ஓர் உயிரற்ற வஸ்து என்பது…., கடும் குளிர், கடும் வெப்பம், கொதிக்கும் மணல், புழுதிக்காற்று, புல்பூண்டு & தண்ணீர் அற்ற வறட்சியில் மாதக்கணக்கில் பிரயாணம் என்று அனைத்து இயற்கை தாக்குதல்களையும் சளைக்காமல் வெற்றிகரமாய் எதிர்கொண்டு பீடுநடைபோடும் இறைவனின் நுண்ணிய படைப்பான ஒட்டகத்துக்கு…. எப்படி ஒப்பாகும்?
நிச்சயமாக பாலைவனத்தில், தனிச்சிறப்பு வாய்ந்த தனக்கு ஒப்புமை அற்ற ஒட்டகமானது, பொதுவாக தாவர உண்ணி வகையைச்சேர்ந்த பாலூட்டி பிரிவைச்சார்ந்த ஒரு வீட்டுவிலங்கு. 250 லிருந்து 680 கிலோ எடை வரை வளரும் இவை, பொதுவாக 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன..! ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல்… உணவில்லாமல்… பாலைவனத்தில் பலநாள் வாழக்கூடியது, அதுவும் மாமூலாக செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே..!
எப்படியென்றால், சூரியனின் வெப்பம் கொளுத்தும் கோடையில், கொதிக்கும் மணலில் 50° செல்சியஸ் வெப்பத்தில் உணவின்றி நீரின்றி 8 நாட்கள் வரை… தன் எடையில் 22% இழந்தபின்னும் உயிர் வாழும்..!
இதை ஒரு மனிதன் முயற்சித்தால், அவன் தன் உடலில் 8% எடையை எட்டாவது நாள் இழக்க வேண்டிவரும். ஆனால், அதற்கு முன்னரே… 36-வது மணிநேரத்திலேயே அவன் இறந்திருப்பான். காரணத்தை போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லும் :- 'அவன் உடம்பில் 88% நீர்ச்சத்துதான் இருந்தது' என்று..! ஏனென்றால், அநேக பாலூட்டிகள் தன் உடம்பில் 12% நீர்ச்சத்தை இழந்தாலே இறந்துவிடும். ஆனால், ஒட்டகமா, அப்போது தன் உடலில் உள்ள நீர்ச்சத்தில் 40%-ஐ இழந்தும் உயிர்வாழ்கும்..! இதல்லாம் கோடை காலத்திற்கு சொன்னதுதான். கடும் குளிர் காலத்திலோ ஆறுமாதம் வரை கூட ஒட்டகம் இப்படி நீரின்றி உணவின்றி உயிர்வாழும்..! அதேநேரம், அப்போது, மேய்வதற்குப் புல் போன்ற சிறிது உணவு கிடைத்தால் கூட போதும், அடுத்த 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது..! இடையில் சிறிது தண்ணீர் கிடைத்து விட்டால்… கேட்கவே வேண்டாம்… அந்த கால அளவு இன்னும் பலமடங்கு எகிறும்..!
சிலமாதம் நீர் அருந்தாமல் இருந்த உலர் நிலையில் இருந்து மீண்டு நீர் அருந்தும்பொழுது தன் உடலில் மூன்றில் ஒரு பங்கு எடை அளவிற்கு நீரை 10 நிமிடத்தில் குடித்துவிடும்..! (அதாவது 450 கிலோ எடைகொண்ட ஓர் ஒட்டகம் 150 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடத்தில் குடித்துவிடும்..!) அப்படி நீர் அருந்தியவுடன் 10 நிமிடங்களில் உடலில் நீர்ச்சத்து ஏறிவிடும்..! அதன் இரப்பையில் உள்ள நீர் அறைகளில் நீரை தற்காலிகமாக ஏற்றிக் கொள்கிறது..!
அங்கிருந்து உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் சிகப்பு அனுக்களில் ஏற்றி சேமித்துக் கொள்கிறது..! அப்போது அச்சிவப்பணுக்கள் அதன் உண்மையான அளவை விட 240% விரிந்து இடமளிக்கிறது..! பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வளவு விரைவாக நீரை இரத்தத்தால் உறிஞ்சிக்கொள்ள முடியாது. ஏனெனில் இரத்தத்தில் திடீர் என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் சிவப்பணுக்கள், வெடித்துவிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் 240% அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை..!
மனிதன் உட்பட எந்த ஒரு விலங்கும் அப்போதையை நிலையில் தேவைக்கு அதிகமாக இவ்வளவு தண்ணீர் குடித்தபின் தேவையற்ற அனைத்தையும் சிறுநீராகவே வெளியேற்றிக்கொண்டு இருக்கும். ஆனால், ஒட்டகமோ… தன்னுடைய சிறுநீரையும் குறைத்துக்கொள்ளும்..!
ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது..! நம்முடைய சிறுநீரில் அதிகபட்சமாக தாது கழிவுகள் 8 சதமும் 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40 சதத்திற்கும் அதிகமான கழிவுகளும், குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது அதன் சிறுநீரகம்..! நம்முடை கிட்னியாக இருந்தால் எப்போதோ செயலிழந்திருக்கும். அதுமட்டுமில்லை, இரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்து இறந்து விடுவோம். ஆனால், ஒட்டகம் மட்டும் எப்படி அதிக யூரியாவினால் பாதிப்படையவில்லை என்றால், அதன் 'விசேஷ லிவர்' ஆனது யூரியாவை மட்டும் இரத்தத்தில் இருந்து தனியே பிரித்து எடுத்து அதை புரோட்டீனாகவும் தண்ணீராகவும் மாற்றி விடுகிறது..!
ஒட்டகத்தின் சாணத்தை அது போட்ட ஒரு சில மணி நேரத்தில் எரிபொருளாக பயன்படுத்தி விடலாம், என்ற அளவிற்கு உலர்ந்த நிலையில் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது..! பசு… சிறுநீர்/சாணம் வழியாக 20 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு வெளியேற்றுகிறது. ஆனால் ஒட்டகம் 1 லிட்டர் நீரை கூட இழப்பதில்லை..! அவை அனைத்தையும் ஒட்டக பாலாக மனிதன் கறந்து கொள்ளலாம். கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு பத்து பசுமாடு கொடுக்கும் பாலை ஒரு ஒட்டகம் கொடுக்கிறது..!
பசுவின் உடல் சூடு ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி விட்டால் பால் சுரப்பு நின்று விடும். ஆகவே அதை கொட்டகையில் நிழலில் வைத்து அதன் மேல் நீரை ஊற்றியோ, அல்லது ஏ/சி செய்யப்பட்ட 'குளுகுளு' இடத்தில் வைத்தோ பராமரிக்க வேண்டும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. பலநாட்கள் வெயிலிலேயே நின்றாலும் கூட பால் கொடுக்கும்..!
பசுவிற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒன்று பால் நின்றுவிடும் அல்லது பாலில் கொழுப்பு 30% அதிகரித்து, பால் குடிக்க முடியாத நிலைமைக்கு மாறிவிடும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. கடுமையான கோடையில் கூட குறைந்த அளவு நீரை குடித்துவிட்டு தன் குட்டிக்கும் பாலை கொடுத்துவிட்டு 15லிருந்து 20 லிட்டர்வரை நமக்கும் பால் கொடுக்கும்..! மேலும் பத்து நாட்கள் வரை நீர் கிடைக்காவிட்டால் கூட அதே தரத்தில் அதே அளவு பாலை கொடுக்கும்..! ஒட்டகப் பாலில் பசும்பாலை விட மூன்று மடங்கு வைட்டமின் 'C' அதிகம் உள்ளது..! இது காய்கறிகள், பழங்கள் போன்றவை அரிதாக கிடைக்கும் பாலைவன மக்களுக்கு மிக்க அவசியமான உணவு..!
சரி… பாலைவனத்தின் கடும் குளிரையும் கடும் கோடை வெப்பத்தையும் ஒட்டகம் எப்படி தாங்குகிறது?.
ஒட்டகத்தின் ரோமமும், தோலும் அப்படி ஒரு தடிமனானது மட்டுமின்றி அதற்கு சிறந்த வெப்ப தடுப்பானாக பயன்படுகிறது..! அது மட்டுமல்ல. கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை 34°C லிருந்து 41.7°C வரை (93°F-107°F.) சுயமாக மாற்றிக்கொள்ளும்..!
இப்படி தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34° செல்சியஸ் வரை குறைத்துக்கொள்வதால், வெளியில் உறைபனி நிலையில் கடுங்குளிர் காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்கிறது..! அதேநேரம், கடும் கோடை வெப்பக்காலங்களில் வெளியில் 55° செல்சியஸ் என்று கொளுத்தும்போது, வெப்பம்கடத்தா தன் தடிமனான தோலினாலும், தன் உடல்வெப்பநிலையை 41° செல்சியஸ் வரை கூட்டிக்கொண்டும், தன் உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கிறது..!
இதனால் உடல்நீர் வியர்வை மூலம் விரயமாவதும் தடுக்கப்படுகின்றது..! இந்நிலையிலேயே, ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ 200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்கவும் செய்யும்..! சிறுதொலைவு ஓட்டப்பந்தயம் வைத்தால் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும் செய்யும்..!
நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டுவிட்டு கண்ணாடியை நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம்.
நாம் 1-லிட்டர் காற்றை சுவாசித்து வெளியேற்றினோம் என்றால் 16 மில்லி கிராம் நீரை இழந்திருப்போம். கடும் வெப்பக்காற்றை சுவாசிக்கும் ஒட்டகம் அக்காற்றை ஈரப்படுத்துகிறது..! ஆனால், அதேநேரம், ஒட்டகத்தின் வெளிவிடும் மூச்சில் ஈரம் மனிதனைவிட பல மடங்கு குறைவாக இருக்கும்..! ஏனென்றால் மற்ற எதற்குமில்லாத விசேட மூக்கமைப்பு தான் இதன் காரணம்..! அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில், மூன்றில் இரண்டு பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது..! மேலும், பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு..!
ஒட்டகத்தின் பாத அமைப்பு வித்தியாசமானது..! வெடித்த இரு குளம்புகளையும் சேர்த்து மிக அகன்ற வட்ட வடிவினாலான தட்டையான பாதத்தை கொண்டது. முன்புறம் அதன் இரு குளம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் 500 கிலோ வரை எடையுள்ள ஒட்டகம் 450 கிலோ வரை சுமையை சுமந்து கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் நிலைதடுமாறி கீழே விழுந்துவிடாமல் கொதிக்கும் மணலிலும் ஓட முடிகிறது..! அப்போது, அதன் பாத குளம்புத்தோல் மிகத்தடிமனானதால் கடும் வெப்பத்தினாலும் பாதிக்கப்படாது..!
மனிதர்கள் விலங்குகள் ஆகிய அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகளை மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று மடக்கும் இணைப்புகள் இருக்கும்..! அதனால் தான் ஒட்டகத்தால் எளிதாக பாலைவன மணலின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்க முடிகிறது..!
மனிதர்கள் அதன்மீது ஏறி இறங்க விரும்பினால், உடன் எவ்வளவு சூடாக கொதிக்கும் மணலிலும் உடனே முட்டிபோட்டு மண்டி இடும்..!
அப்படி மண்டி இடும்போது அதன் முட்டுக்காலிலும், கால் குளம்புத்தொளைப்போன்றே தடிமனான வெப்பத்தினால் பாதிக்கபடாத தோல் அங்கும் அமைந்துள்ளது..!
ஒட்டகத்தின் கால்கள் நல்ல உயரமானதாக இருப்பது ஏனென்றால், கடும் கோடையில் பாலைவனத்தில் ஒட்டகம் நடக்கும்போது கொதிக்கும் மணலின் அனல் உக்கிரம் அதன் வயிற்றுப்பகுதி உடம்பில் தாக்காமல் இருக்கத்தான்..! மேலும் உயரமான கால்கள் அதிக எடை சுமக்கவும் அவசியமாகிறது..!
அடுத்து பாலைவனம் என்றாலே புழுதிக்காற்று… மணற்புயல்… பிரசித்தம். அப்படி, மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது ஒட்டகம் (நாம் நம் வீட்டு ஜன்னலை மூடுவது போல்) மூக்கை மூடிக்கொள்ளும்..! தன் 'கை'யால் இல்லைங்க.. அதன் மூக்காலேயே..! அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும்
முடிகள் மணலோ தூசியோ காதுகளுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது..! அதன் இரண்டடுக்கு கண் இமையில் உள்ள நீண்ட சீப்பு போன்ற தடித்த நெருக்கமான முடிகள் ஒன்றன் உள் ஒன்றாக கோர்த்துக்கொண்டு மணற்புயலிலிருந்து கண்ணிற்கு முழுப்பாதுகாப்பு அளிக்கிறது..! கண்களுக்கு கீழே உள்ள இமை போன்ற திரை அமைப்பு வாகனத்தின் வைப்பர் போல செயல்பட்டு கண் பரப்பை சுத்தப்படுத்தி கூடுதலாய் கண்களுக்கு பாதுக்காப்பை அளிக்கிறது..! கண்ணிலும் அதன் கண்ணிற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பும், புருவமும் பாலைவனத்து சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்களைதாக்கி விடாமல் வெளிச்சத்தை பாதியாக தடுத்து விடுகிறது..! அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்து இருப்பதால் தலையை திருப்பாமல் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்..!
பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதாற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்..!
பாலைவனம் என்றாலே சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்ற முட்செடிகள் தான் அதிகமாக கிடைக்கும. அதை மேய்வதற்காக அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம்..! அதன் உதட்டில் குத்தும் முட்களே உடைந்து விடும் அளவுக்கு தடிமனானது அதன் உதடு..!
அந்த விசேஷ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது..! புழுதிக்காற்றில் கண்ணைமூடிக்கொண்டு சகட்டுமேனிக்கு பிளாஸ்டிக், தகரம், ஒயர், மண்ணாங்கட்டி என்று கண்டதையும் திண்ணும்..! அதையெல்லாம் தனித்தனியே பிரித்து செரிக்கும் வேலையை அதன் நான்கு அரை கொண்ட விசேஷ இரைப்பை பார்த்துக்கொள்கிறது..! அவசரமாக சாப்பிட்டதை ஆரஅமர நிதானமாய் மீண்டும் வாய்க்கு கொண்டுவந்து அசைபோட்டு உள்ளே தள்ளும்..!


மேலும், இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அவை தேவைக்கதிகமாக உண்ணப்பட்டு கொழுப்பாக மாற்றப்பட்டு அதன் முதுகில் திமில் அல்லது திமில்களாக சேமித்துக்கொள்கிறது..! சுமார் 45 கிலோ எடை இருக்கும் அந்த திமிலில் அதிகமாக கொழுப்பு இருக்கும்..! உணவோ, நீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப ஆக்சிகரணம் செய்து மாற்றிக் கொள்கிறது..! ஒரு திமில் அல்லது இரு திமில் கொண்ட இருவகையான ஒட்டகங்கள் உள்ளன..! அவற்றில் இரு திமில் ஒட்டகங்கள் அதிக சக்தி பெற்றவை என்று தனியாகவேறு சொல்ல வேண்டுமா?


"அதிலிருந்து இது தோன்றியது, இதிலிருந்து அது தோன்றியது" என்று மற்ற மிருகங்களைப் பற்றியெல்லாம் ஏதாவது ஒரு காமடி விளக்கமாவது கொடுக்கும் 'பரிணாம உலகம்', 'ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து பரிணாமம் பெற்றது' என்று கதை புனையவோ அல்லது புனைவை கதைக்கவோ இல்லையே, ஏன்?
இறைவனின் படைப்பாற்றலை புரிந்துகொள்ள இந்த ஒட்டகம் ஒன்று போதவில்லையா?


மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 50 கீ.மீ பயணம் செய்யும் ஒட்டகம்…, நீரும், உணவும், நல்ல சீதொஷ்ணமும் தாரளமாக கிடைக்கும் ஐரோப்பாவை நோக்கியோ, தெற்கு ஆப்ரிக்காவை நோக்கியோ முறையே, அரேபிய பாலைவனத்திலும், சஹாரா பாலைவனத்திலும் முட்டாள் ஒட்டகம் எப்போதோ ஓடிபோயிருக்கலாமே..!
இப்படி பாலைவனத்தில் கஷ்டப்பட வேண்டிய அவசியம் என்ன? இதை சிந்தித்தாலாவது, 'இது பாலைவாழ் மக்களுக்கு என்றே பிரத்தியேகமாய் இறைவன் படைத்து அளித்த அருட்கொடை' என்று உணரமுடியும்..!
அதனால்தான் இப்படி ஓர் அதிசய மிருகத்தை மானிடருக்கு படைத்தளித்த அல்லாஹ், முஹம்மத் நபி(ஸல்…) அவர்களிடம் இறை நிராகரிப்பாளர்களை சுட்டிகாட்டி தன் திருமறை குர்ஆனில்..
"(
நபியே) ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் பார்க்கவேண்டாமா?" (88:17) என்று கேட்கிறான்.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com