Tuesday, February 19, 2013

ஆஸ்பத்திரிக்குப் போறீங்களா?

ஆஸ்பத்திரிக்குப் போறீங்களா?


உங்கள் நண்பர்களோ உறவினர்களோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்களா? நலம் விசாரிப்பதற்காக நீங்கள் அவர்களைப் பார்க்கப் போகிறீர்களா? உங்களுக்காகத்தான் இந்த டிப்ஸ்! நலம் விசாரிக்கப் போகும் நாமே சம்பந்தப்பட்டவர்களின் நலத்துக்கு பங்கம் விளைவித்துவிடக் கூடாது அல்லவா?

Ù பார்வை நேரம் ஒன்றே போதுமே!

'பார்வையாளர் நேரம்' என்று குறிப்பிட்டு உள்ள நேரத்தில் மட்டுமே நோயாளியைப் பார்க்கச் செல்லுங்கள். உங்களைப் பார்க்க அவர் விருப்பப்படுகிறாரா இல்லையா என்பதை முடிந்தமட்டும் புரிந்துகொள்ளுங்கள். பார்வையாளர் நேரத்திலும் அவருக்கு விருப்பம் இல்லை என்பதை மறைமுகமாக அறிந்தாலும் பார்ப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.

Ù பூக்களைத்தான் கொடுக்காதீங்க!

நோயாளிக்குப் பூங்கொத்துக் கொடுத்து, 'விரைவில் நலம்பெற வாழ்த்துகள்' என்று சொல்பவர்கள் இப்போது அதிகம். சிலருக்குப் பூக்களின் மணம் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். எனவே, பூக்களுக்குப் பதிலாகப் புத்தகங்களையோ, தேவையான  பழங்களையோ கொடுக்கலாம். நோயாளிக்கு ஒப்புக்கொள்ளாத உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்.

Ù செல்லுங்கள்பாருங்கள்புறப்படுங்கள்!

பார்த்தோமா, நலம் விசாரித்தோமா, புறப்பட்டோமா என்றுதான் உங்கள் விஜயம் இருக்க வேண்டுமே தவிர, மணிக்கணக்கில் அங்கே அமர்ந்துவிடாதீர்கள். நோயாளி தூங்கவோ அல்லது அமைதியாக இருக்கவோ விரும்புவார். அதைக் கெடுக்க வேண்டாம். 'நீங்கள் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தேவலாம்' என நோயாளி சொன்னால் மட்டுமே, நேரம் ஒதுக்குங்கள்.

Ù ஆலோசனை வேண்டாம்ஆறுதல் போதும்!

நோயாளியைப் பார்க்கச் செல்லும்போது தயவுசெய்து உங்களுக்குத் தெரிந்த அனுபவக் குறிப்புகளைச் சொல்லாதீர்கள். 'இந்த டாக்டரைப் பார்க்க ஏன் வந்தீங்க? இவரைவிட அவர் ரொம்ப கெட்டிக்காரர் ஆச்சே!' என ஒருபோதும் கருத்துச் சொல்லாதீர்கள். சிகிச்சைமுறை குறித்தும் உங்களுக்குத் தெரிந்த மருத்துவ ஞானத்தை அள்ளிவிடாதீர்கள். மருத்துவம் பார்ப்பதை டாக்டரின் கைகளில் விட்டுவிட்டு, ஆறுதல் வார்த்தைகள் சொல்வதை மட்டுமே நீங்கள் செய்தால் போதும்.

Ù சொல்லாதே யாரும் கேட்டால்

கண்களை மூடியபடி நோயாளி இருந்தால், தூங்குகிறார் என்று அர்த்தம் அல்ல. 'பார்க்கச் சகிக்கலை' என்றோ, 'ஆண்டவன் ஏன்தான் இந்த நல்ல மனுஷனுக்கு இவ்வளவு சோதனைகளைக் கொடுக்கிறார்?' என்றோ பக்கத்தில் இருப்பவர்களிடம் 'உச்சு'க்கொட்டாதீர்கள். நோயாளி கேட்டுவிட்டுக் கிலேசம் அடையக்கூடும்.

Ù இங்கே அரசியல் பேசாதீர்!

"போன மாசம் இதே நேரம் என்னோட ஃப்ரெண்டுக்கும் பைக் ஆக்ஸிடென்ட் ஆகி, கையில் மல்டிபிள் ஃப்ராக்ச்சர் ஆயிருச்சு!' என்பன போன்ற உதாரணக் கதைகள் நோயாளியைக் கலவரப்படுத்தவே செய்யும். தயவுசெய்து தவிர்க்கலாமே!

Ù வாசம் வேண்டாம்பாசம் போதும்!

தூக்கலான மேக்கப், வாசனைத் திரவியங்களைத் தவிர்க்கலாம். நோயாளி இருக்கும் சூழ்நிலைக்கு அவை பொருத்தம் அற்றவையாக இருக்கும். எளிமையான ஆடை அலங்காரங்கள் போதும். ஆறுதல் வார்த்தைகளே அருமருந்து.

Ù இது மருத்துவமனை!

நோயாளிக்கு அருகில் அமர்ந்து பேசும்போது செல்போனின் அலுவலக அழைப்புகளுக்குச் செவிகொடுக்க வேண்டாம். தவிர்க்கமுடியாத அழைப்பாக இருந்தால், வெளியே சென்று பேசுங்கள். நோயாளியுடன் பேசும்போது அங்கிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஐக்கியமாகவோ, புத்தகங்களைப் புரட்டவோ செய்யாதீர்கள். நோயாளியைப் புறக்கணிப்பதைப் போன்ற செயல் அது.

Ù உற்சாகம் ஊட்டுங்கள்!

நோயாளிக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய விஷயங்களைப் பேசுங்கள். மறந்தும்கூட உணர்ச்சிவசத்தையோ, கோபதாபங்களையோ அவரிடம் கொட்டாதீர்கள். குணமாவதற்குப் பதில் நோய் முற்றிவிடக்கூடும். நோயாளியின் படுக்கையில் அமருவதைத் தவிருங்கள்.

Ù வேண்டாம்வேண்டாம்!

நோயாளியைப் பார்க்கக் குழந்தைகளையோ, முதியவர்களையோ அழைத்துச் செல்லாதீர்கள். அதேபோல இருமல், சளி, காய்ச்சல் போன்ற நோய்த்தொற்று இருந்தால், மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்க்கப் போக வேண்டாம்.

- லதானந்த்

நன்றி:- டாக்டர் விகடன்.

http://azeezahmed.wordpress.com/2013/02/17/apaik/



--
*more articles click*
www.sahabudeen.com


No comments: