Sunday, April 7, 2013

சுவாரஸ்யமான 25 கிச்சன் டிப்ஸ்

சுவாரஸ்யமான 25 கிச்சன் டிப்ஸ்

  1. கட்லெட் செய்வதற்கு பிரெட் தூள் இல்லையா? பிரெட் ஸ்லைஸை தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் உதிர்த்து உபயோகிக்கலாம். கொஞ்சம் ஓட்ஸ் சேர்த்தால் கட்லெட்டின் சுவை கூடும்.
  2. பக்கோடா செய்ய கடலை மாவுக்கு பதில் கடலைப்பருப்பைப் பயன்படுத்தலாம். கடலைப்பருப்பை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய் கலந்து, பக்கோடா செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
  3. பூசணி அல்வா செய்யும் போது, பூசணியைத் துருவி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, பிறகு செய்தால் அல்வா பொலபொலவென அருமையாக வரும்.
  4. சாம்பார் பொடிக்கு அரைக்கும்போது, ஒரு கப் புழுங்கலரிசி சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியைக் கொண்டு சமைக்கும் போது, சாம்பார் குழைவாகவும் கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.
  5. துவரம் பருப்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைத்துக்கொண்டால் சமைக்கும்போது பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். கேஸ் மிச்சமாகும்.
  6. பலகாரம் செய்ய எண்ணெய் காய வைக்கும் போது, முதலில் கொய்யா இலையைப் போட்டு எடுத்துவிட்டு, பிறகு முறுக்கு, வடை, அதிரசம் போன்ற பலகாரங்களைச் செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது.
  7. சிறிதளவு சர்க்கரை தூவி வைத்தால் மிக்சர் நமத்துப் போகாமல் இருக்கும்.
  8. மளிகைக் கடையில் 'தையல் இலை' என்ற பெயரில் விற்கப்படும் மந்தார இலையை பானையில் போட்டு, அதன் மேல் புளியை வைத்தால் நெடுநாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
  9. சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது... நீர்த்தும் போகாது.
  10. உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது, நறுக்கிய வில்லைகளின் மேல் சிறிது பயத்தம் மாவு தூவிவிட்டுப் பொரித்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.

  11. வெங்காயத்தை வெறும் வாணலியில் சிறிது வதக்கிவிட்டு, பிறகு எண்ணெயில் வதக்கினால் சீக்கிரம் சிவந்து வதங்கிவிடும்.
  12. சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது அரிசியில் சிறிது நெய் கலந்து வேக வைத்தால் சுவையும் மணமும் கூடும்.
  13. குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு, அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் அப்போது பறித்தது போல ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
  14. ஆம்லெட் செய்யும் போது சிறிது வெண்ணெயையும் முட்டையில் நன்றாகக் கலக்கி செய்து பாருங்கள்... டேஸ்ட்டாக இருக்கும்.
  15. பச்சரிசியை வெந்நீரில் நனைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
  16. இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால், உளுந்து வடை சுவையாக இருக்கும்.
  17. பால் அல்லது கஞ்சி ஆறினால் மேலே ஏடு படியும். லேசாக தண்ணீர் தெளித்து வைத்தால் ஏடு படியாது.
  18. தோசை மாவு புளித்துப் போனால், அதில் அதிக அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து தண்ணீர் மேலே நிற்கும். அதை வடித்துவிட்டு தோசை ஊற்றினால் சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.
  19. நீங்கள் வதக்கிச் செய்திருக்கும் காய்கறியில் ஒரே எண்ணெய் மயமா? கவலையே வேண்டாம். கொஞ்சம் கொள்ளு மாவைத் தூவினால் போதும். கொள்ளுக்கு எண்ணெயை உறிஞ்சும் தன்மை உண்டு.
  20. பிரெட் பக்கோடா செய்வதற்கு முன் வெட்டி வைத்திருக்கும் பிரெட் ஸ்லைஸ்களை பாலில் முக்கி எடுத்த பிறகு பக்கோடா மாவில் போடுங்கள். அட்டகாசமான சுவை கிடைக்கும்.
  21. கமலா ஆரஞ்சு பழத் தோல்களை எறிந்து விடாமல் பத்திரப்படுத்தி வையுங்கள். தேநீர் தயாரிக்கும் போது அந்தத் தோலை துளியூண்டு கிள்ளி, தேயிலையுடன் சேர்த்து டிகாஷன் தயாரித்தால் மணம் தூக்கலாக இருக்கும்.
  22. கேஸ் ஸ்டவ்வை சமையல் முடித்து, ஆறியபின், சுத்தமாகத் துடைத்து, நியூஸ் பேப்பரால் துடைக்க "பளிச் பளிச்"
    தான்!
  23. வாழைப்பழங்கள் வெளிபடுத்தும் வாயுக்கள் பிற பழங்களை விரைவாக பழுக்கவைத்துவிடும், ஆதலால் வாழைப்பழங்களை தனியே வைப்பது உகந்தது.
  24. ஆம்லெட் செய்ய முட்டையை அடிக்கும்போது அதோடு சிறிதளவு பால் அல்லது சோள மாவு சேர்த்தால் ஆமலேட் பெரியதாகவும், மிருதுவாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.
  25. கொத்தமல்லி மற்றும் புதினா நீண்ட காலத்திற்கு வாடாமல் இருக்க, அவற்றை அலுமினியம் ப்ஹாயிலில் (Aluminium Foil) சுற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

http://kolipaiyan.blogspot.in/2013/04/Kitchen-tips.html



--
*more articles click*
www.sahabudeen.com


No comments: