Monday, May 13, 2013

வருமானவரி என்றால் என்ன?

வருமானவரி என்றால் என்ன?

 

வருமான வரி கட்ட உங்களுக்கு வருமானம் இருக்கவேண்டும். வருமானம் இல்லாதவர்கள் வருமான வரி கட்டவேண்டியதில்லை. இந்த உண்மை அந்த பெயரிலிருந்தே உங்களுக்கு விளங்கியிருக்கவேண்டும். இருந்தாலும் ஒரு ஆசிரியன் என்கிற முறையில் இதைச் சொல்வது என் கடமையாகிறது.

நான் சம்பாதிக்கிறேன். அதற்கு அரசுக்கு எதற்கு வரி செலுத்தவேண்டும் என்று சிலர் கேட்பார்கள். இது ஒரு சிறுபிள்ளைத்தனமான கேள்வி. அரசு இல்லாவிட்டால் உனக்கு வேலை ஏது? சம்பளம் ஏது? நீயே இருக்க முடியாதே? இதைப் புரிவது கொஞ்சம் கடினம்தான்.

எவ்வளவு வருமானம் இருப்பவர்கள் வருமான வரி கட்டவேண்டும்? இது ஒரு சிக்கலான கேள்வி. நம் நாட்டில் சட்டம் ஒன்று சொல்லும். ஆனால் மக்கள் ஒரு விதமாக நடப்பார்கள். முதலில் சட்டத்தை சொல்கிறேன். பிறகு நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

சிலருடைய வருமானத்தை துல்லியமாக கணக்குப் போட்டுவிடலாம். மாத வருமானத்திற்கு வேலை பார்ப்பவர்களின் சம்பளம் இவ்வளவு என்று மாதாந்திர சம்பள பட்டியலைப் பார்த்தால் தெரிந்து விடும். இவர்கள்தான் நம் நாட்டின் அச்சாணி. இவர்களுக்காகத்தான் பெரும்பாலான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சட்டங்களைப் பார்த்து பயப்படுபவர்களும் இவர்கள்தான்.

இவர்களுக்கான வருமானவரிச் சட்டம் என்ன சொல்லுகிறதென்றால்,  வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் இரண்டு லட்சத்திற்கு மேல் வாங்கும் சம்பளத்திற்கு வருமான வரி செலுத்தவேண்டும். வரி விகிதம் இவர்களுக்கு ரூபாய்க்கு பத்து பைசா மட்டுமே. இவர்கள் ஐந்து லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினால் அந்த அதிக சம்பளத்திற்கு வரி ரூபாய்க்கு இருபது பைசா. சம்பளம் பத்து லட்சத்திற்கு மேல் இருந்தால் வரி ரூபாய்க்கு முப்பது பைசா. இதுதான் அதிக பட்ச வரி விகிதம்.

வருமானவரி சட்டத்தின்படி வருடம் என்பது ஏப்ரல் 1 ந்தேதி ஆரம்பித்து அடுத்த வருடம் மார்ச் 31 ந்தேதி முடிவடையும் வருடமாகும். இதை கணக்கு வருடம் என்பார்கள் அதாவது "Accounting Year" என்பார்கள். அதற்கு அடுத்த வருடத்தை "Assessment Year" சுருக்கமாக "AY" என்பார்கள். இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவே சில வருடங்கள் ஆகும்.

நீங்கள் பிராவிடண்ட் பண்ட்டில் பணம் போடுபவராக இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமான வரி கட்டவேண்டியதில்லை. அதே போல் மெடிகல் இன்சூரன்ஸ் செய்திருந்தால் 15000 ரூபாய்  வரை வரி இல்லை. பல டொனேஷன்களுக்கும் இவ்வாறு சலுகைகள் உண்டு.

சொந்தமாக வீடு கட்டியிருந்தால், அதற்கு கடன் வாங்கியிருந்தால், அந்தக் கடனின் வட்டிக்கு வரி இல்லை. வாடகை வீட்டில் குடியிருந்தால் அந்த வாடகைப் பணத்தின் ஒரு பகுதிக்கு வரி விலக்கு கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் யாராவது ஊனமுற்றிருந்தால் அவர்கள் பராமரிப்புக்கு என்று ஒரு தொகைக்கு வரி விலக்கு உண்டு.

இப்படியாக இன்னும் பல விலக்குகள் உண்டு. அவைகளைப் பற்றி இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்டில் வேலை செய்பவர்களுக்கே சரியாகத் தெரியாது. நாமும் தெரிந்து கொள்ளவேண்டியதில்லை.

இப்படி இந்த சட்டதிட்டங்களை எல்லாம், எல்லோரும் தெரிந்து வைத்திருப்பது கடினம். ஒவ்வொரு ஆபீசிலும் இந்த சட்டதிட்டங்களைக் கரைத்துக் குடித்தவர் ஒருவர் இருப்பார் (என்னை மாதிரி). அவரிடம் போனால் அவர் உங்களுக்கு எவ்வளவு டாக்ஸ் வரும் என்று ஐந்து நிமித்தில் கணக்குப் போட்டு சொல்லிவிடுவார். என்ன, அவருக்கு ஒரு பார்ட்டி வைக்கவேண்டி வரும். அவ்வளவுதான்.

நீங்கள் ஆபீசில் வேலை செய்பவராக இருந்தால் உங்கள் வருமான வரியை அவர்களே பிடித்தம் செய்து அரசுக் கணக்கில் கட்டிவிடுவார்கள். அதற்கான ஒரு சர்டிபிகேட்டும் கொடுப்பார்கள். இந்த சர்டிபிகேட் பின்னால் தேவைப்படும்.

நீங்கள் ரிடையர் ஆகியிருந்தாலோ அல்லது வியாபாரம் செய்பவராகவோ இருந்தால் இந்த வரியை நீங்களே பேங்கில் கட்டவேண்டும். அதற்கு அவர்கள் ரசீது கொடுப்பார்கள்.

இப்படி நீங்கள் மார்ச் 31ந் தேதிக்குள் அந்த வருடத்திற்கான வருமான வரியைக் கணக்குப்போட்டு கட்டிவிட்டால் பாதி கிணறு தாண்டிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

இந்த வரி கட்டின விபரங்களை அதற்குரிய படிவத்தில் சரியாக எழுதி அதை வருமானவரி அலுவலகத்தில் ஒப்படைத்து அதற்குண்டான படிவத்தில் ஒப்புதல் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும். இதைத்தான் இன்கம்டாக்ஸ் ரிடர்ன் சமர்ப்பிப்பது என்று சொல்வார்கள். நாம் வாங்கும் ஒப்புதலுக்கு "Acknowledgement" என்று பெயர். இது மிகவும் முக்கியமான தஸ்தாவேஜு. இந்த வேலையை ஜூலை 31க்குள் செய்து முடித்துவிடவேண்டும்.

நீங்கள் பாட்டுக்கு வரி கட்டிவிட்டு, நாம்தான் வரி கட்டிவிட்டோமே என்று இருந்தீர்களானால், நீங்கள் வரி கட்டாதவராகத்தான் வருமானவரி இலாக்கா உங்களைக் கருதும். இந்த ரிடர்ன் பல பக்கங்களுடையதாய் சில வருடங்கள் முன்பு வரை இருந்தது. அத்தகைய படிவங்களை வைப்பதற்கு போதுமான இடம் வருமானவரி அலுவலகங்களில் இல்லாமையால் இப்போது இந்த படிவங்களை ஒரு சிங்கிள் காகிதமாக மாற்றிவிட்டார்கள்.

இந்த சிங்கிள் காகிதத்தை அச்சடிக்கத்தான் அவர்களுக்கு நேரம் இல்லை.

இத்துடன் வருமான வரி சமாச்சாரம் முடிந்து விடாது. உங்கள் கர்மவினை சரியாக இல்லாவிட்டால், உங்கள் வருமானவரிப் படிவம் ஒரு கிளார்க் கண்ணில் பட்டு அவனுக்கு அதில் ஏதாவது சந்தேகம் வரும். அப்போது அவன் உங்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்புவான். அதில் ஒரு தேதியில் வருமானவரி ஆபீசுக்கு வரச்சொல்லி இருக்கும். அன்று நீங்கள் நேரில் போய் விளக்கம் கொடுக்கவேண்டி இருக்கும்.

இந்த நடைமுறைகளெல்லாம் நம் போன்ற சாதாரண பிரஜைகளுக்குத்தான். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெரிய பெரிய வியாபாரிகள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் ஆகியோருக்கு இந்த வருமானவரிச் சட்டங்கள் எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும்.

நீங்கள் மந்திரியாக இருந்தால், நான் வருமானவரி படிவம் தாக்கல் செய்ய மறந்துவிட்டேன் என்று கூட சொல்லிக்கொள்ளலாம். தேச சேவையில் இந்த மாதிரி சாதாரண விஷயங்கள் நினைவில் இருப்பது கடினம்தானே.

பின்சேர்க்கை:

சில வார்த்தைகளுக்கு வருமானவரி இலாக்காவில் அர்த்தம்.

1. Financial Year:
இது ஏப்ரல் 1 ம் தேதி முதல் அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதி முடிய உண்டான வருடம். இதை Accounting Year என்றும் சொல்லுவார்கள்.

2. Assessment Year:
உங்கள் வருமான வரியை கணிப்பது, ரிடர்ன் சமர்ப்பிப்பது ஆகியவைகளுக்கு உண்டான வருடம். 31-3-2013 அன்று முடிவடைந்த கணக்கு வருடத்திற்கு 1-4-2013 முதல் 31-3-2014 வரை உண்டான வருடம்தான் Assessment year.

3. FY 2012-13
 என்றால் 1-4-2012 முதல் 31-3-2013 வரை. இதற்கான Assessment Year = AY 2013-14.

4. AY 2013-14
 என்றால் 1-4-2013 முதல் 31--3-2014 வரை.

இந்த வருடக் கணக்கை சரியாகப் புரிந்து கொள்ள எனக்கு 78 வயது தேவைப்பட்டது. உங்களில் அநேகர் என்னைவிட கெட்டிக்காரர்களாக இருப்பீர்கள். ஆகவே இந்தக் கணக்கை சீக்கிரம் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

AY 2013-14
வருடத்திற்கான வருமான வரிப் படிவம் இன்டர்நெட்டில் வந்துவிட்டது. அதை டவுட்லோடு செய்து பிரின்டிங் சென்டரில் கொடுத்தால் பிரின்ட் செய்து கொடுப்பார்கள். நம்மைப்போல் சாதாரணர்களுக்கு உண்டான படிவம் ITR 1 என்பதாகும். இது இரண்டு பக்கம் உள்ளது. இதை ஒரே காகிதத்தில் பிரின்ட் செய்யவேண்டும். தவிர இது  கண்டிப்பாக கலர் பிரின்ட்டாக இருக்கவேண்டும்.

கூடவே ITR V என்று ஒரு படிவம் இருக்கிறது. அதை கருப்பு வெள்ளையில் பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் வருமானவரி அலுவலகத்தில் ITR1 படிவத்தைக் கொடுத்ததும், இந்தப் படிவத்தில்தான் வரி ரிடர்ன்ஐ பெற்றுக்கொண்டதற்கான கம்ப்யூட்டர் ரசீதை ஒட்டிக்கொடுப்பார்கள். இதுதான் வரி ரிடர்ன் சமர்ப்பித்ததற்கான அத்தாட்சி. பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்தப் படிவங்களில் உள்ள எல்லா விவரங்களையும் தவறாமல் கொடுக்கவேண்டும். குறிப்பாக உங்கள் பேங்க் அக்கவுன்ட் நெம்பர். பேங்கின் IFSC  கோட் ஆகியவை கண்டிப்பாக வேண்டும்.  IFSC என்றால் Indian Financial System Code  என்பதின் சுருக்கம். இது அந்தந்த பேங்கிலோ அல்லது இன்டர்நெட்டிலோ கண்டு பிடிக்கலாம்.
http://swamysmusings.blogspot.com/2013/05/blog-post_10.html



--
*more articles click*
www.sahabudeen.com


No comments: