சாஃப்ட்வேர் இன்ஜினீயர் எழுதிய ஒரு கட்டுரை...
கைநிறைய சம்பளம், நினைச்சா வெளிநாட்டுப்பயணம், குளு குளு அலுவலகம், நுனிநாக்கு ஆங்கிலம், சொகுசான வாழ்க்கை... இதுதான் ஐ.டி. துறை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை கசப்பானது. ஐ.டி. துறையால் நம் நாட்டில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும் நாம் அதற்குக் கொடுத்த விலை சற்று அதிகம் என்றுதான் தோன்றுகிறது. ஐ.டி. நுழைந்ததால் ஏற்பட்ட மாற்றங்களில் முக்கியமான
வை சமூகமாற்றங்களே. அதிலும் சிதைந்துவரும் குடும்ப உறவுகள், அதிகரித்துவரும் விவாகரத்துகள், அலுவலகம் சார்ந்த தவறான உறவுகள், சிதைந்து வரும் தனிநபர் வாழ்க்கை, வேலைநிரந்தரமின்மை, அந்நிய வாழ்க்கைமுறைகளான 'லிவிங் டுகெதர்', 'டிஸ்கொதே,' நுகர்வு கலாசாரம், குடி மற்றும் 'வீக் எண்ட்' கொண்டாட்டங்கள். அதில், போதைப் பொருட்களை உபயோகிப்பது ஆகியவை தற்பொழுது அதிகமாகியிருக்கிறது.
குடும்ப உறவுகளின் சிதைவுக்குக் காரணம், தம்பதிகள் சந்திக்கும் நேரம் மிகக்குறைவு - புரிந்துகொள்ள வாய்ப்புகள் குறைவு. மற்றொரு காரணம் இருவருக்கும் இடையே ஏற்படும் நானா, நீயா மனப்பான்மை. ஊடகங்கள் பெண்ணுரிமையைத் தவறான வடிவில் பெண்களுக்குக் கற்பித்தது, பெற்றோர்களும் அறியாமை காரணமாக, 'சின்னஞ்சிறுசுங்க தனியா இருக்கட்டும்' என்று, புதிதாகத் திருமணமானவர்களை அருகிலிருந்து நெறிப்படுத்தத் தவறுகின்றனர். அவர்கள் அதை உணர்ந்து சரிசெய்ய முயலும்போது காலம் கடந்துவிடுகிறது.
அலுவலகம் சார்ந்த தவறான உறவுகள் ஏற்படக் காரணம், பெரும்பாலும் நம் பிரச்னைகளுக்கு செவிசாய்க்க வீட்டில் உள்ளவர்களுக்கு நேரமின்மை, சக அலுவலர்கள் காட்டும் சிறு பரிவு, இரவு நேரப் பணி, கண்டுகொள்ளவும் கண் காணிக்கவும் யாரும் இல்லாதது போன்றவை. கண்காணிப்பு இல்லாததால் அலுவலகத்திலேயே சிலர் தவறான உறவு கொள்கின்றனர்.
ஐ.டி. துறையில் தனிமனித வாழ்க்கைக்கு மரியாதையே இல்லை. அலுவலக வேலை காரணமாகப் போகத் தவறிய நண்பர்களின் திருமணங்கள், குடும்ப துக்கங்கள், இழந்த சந்தோஷங்கள் என்று எந்த ஒரு ஐ.டி-யாளனிடமும் சொல்ல ஆயிரம் கதைகள் இருக்கும். தொழிலாளிகளுக்கு இவ்வளவு நாட்கள் விடுமுறை அவ்வளவு நாட்கள் விடுமுறை என்று கம்பெனிகள் சொன்னாலும், அதை சுலபமாக எடுக்க விட மாட்டார்கள். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த என் நண்பன் பெற்றோரை சந்தித்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. தெலுங்குப் புத்தாண்டுக்கு ஊருக்குப் போகவேண்டும், பெற்றோர்களோடு கழிக்கவேண்டும் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக முயன்று வருகிறான். முடியவில்லை. காரணம் வேலைப்பளு. இதெல்லாம் சிறு சிறு உதாரணங்களே. தனி மனித வாழ்க்கை சிதைவதால் பணியில் கவனப்பிசகு ஏற்படு வதுடன் மன அழுத்தமும் ஏற்படுகிறது.
தகவல் தொழில்நுட்பத்தில் சமீப காலப் பிரச்னை பணி நிரந்தரமின்மை. ஒரு நிறுவனம் ஒரு தொழிலாளியை எப்பொழுது வேண்டுமானாலும் வேலையைவிட்டு விலக்கலாம். காரணம் தேவையில்லை. ஊழியனின் performance சரியில்லை என்பார்கள். வேலையை விட்டுத் தூக்கினால் கேட்க வலுவான சட்டங்களோ, நாதியோ இங்கு இல்லை. கோடி கோடியாக இந்த சமுதாயத்துக்கும் அரசுக்கும் எங்களால் வருவாய் இருந்தாலும், எங்களுக்கென்று பணி பாதுகாப்புச் சட்டங்கள் இல்லை. என் நண்பனின் அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம், கணினியில் அவனுடைய பயோடேட்டா இருந்த காரணத்தால் (வேறு வேலைக்கு விண்ணப்பிக்க முயல்கிறான் என்று) அவனை வேலையைவிட்டுத் தூக்கிவிட்டனர். சமீபத்தில் ஒரு கம்பெனியில் ஒரு வருடம் முதல் 10, -15 வருடங்களாக வேலை செய்தவர்களைக் கும்பல் கும்பலாக வேலையைவிட்டுத் தூக்கினார்கள். காரணம், சம்பந்தப்பட்டவர்கள் முன்னர் வேலை செய்ததாகக் கூறிய கம்பெனி பொய்யானது என்று அவர்கள் கண்டுபிடித்தது. ஏன், இவர்களை வேலைக்குச் சேர்க்கும்போது இதையெல்லாம் சரி பார்த்துத்தானே வேலைக்கு எடுத்தார்கள்? கம்பெனிகளுக்கு சலுகைகளை வாரியிறைக்கும் அரசு, எங்களையும் கண்டுகொள்ள வேண்டும்.
குடி, வார இறுதிக் கொண்டாட்டங்கள் போன்றவற்றுக்கு ஐ.டி. துறையில் உள்ளவர்களை மட்டும் குறை கூறுவது சரியல்ல. இந்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டும். பெரும்பாலான ஐ.டி-யாளர்கள் வேலை காரணமாக வெளி ஊர், வெளி மாநிலங்களில் வாழ்பவர்கள். 20, -22 வயது வாலிபனுக்கு மாதம் 15, -20 ஆயிரம் கையில் வரும்பொழுது என்ன செய்வது என்று தெரிவதில்லை. அவனுக்கு வழிகாட்ட சமூகமோ பெற்றோர்களோ சக ஊழியர்களோ முயல்வதில்லை. மாறாக, சமூகம் அவனை ஒரு நுகர்வாளனாக மாற்ற முற்படுகிறது. அலுவலகமோ அவனை அந்நிய நாட்டில் மணிக்கு இவ்வளவு என்று விலை பேசுவதுடன் தன் கடமையை முடித்துக்கொள்கிறது. பெற்றோர்கள், 'இவ்ளோ சின்ன வயசுல இவ்ளோ சம்பாதிக்கிறான். அடுத்து வெளிநாடு வேற போகப்போறான்' என்கிற ஆனந்த களிப்பிலேயே அவனைக் கண்காணிக்கும் கடமையை மறந்துவிடுகிறார்கள். கை நிறையக் காசு, கட்டற்ற சுதந்திரம்... இது போதாதா இந்த வயதில் தடம் மாறிப்போக?
சமூகம் தன் போக்கை மாற்றிக் கொண்டு எங்களைப் போன்ற தொழி லாளர்கள் மீது நிஜமான அக்கறை செலுத்தவேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை நம் நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடாக மாறினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
No comments:
Post a Comment