Thursday, January 5, 2012

ஒசாமா பின்லேடன் கொலையில் தொடரும் மர்மங்கள்


ஒருங்கிணைந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவால் வளர்த்து எடுக்கப்பட்ட பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது கொலையில் பல்வேறு சந்தேகங்கள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றன.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காயிதாவின் நிறுவனரும் தலைவருமான பின்லேடன், சிஐஏ துணையுடன் அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா சில தினங்களுக்குமுன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் அவரது உடல் கடலில் வீசி எறியப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

பின்லேடன் கொல்லப்பட்டதற்கு ஆதாரமாக சர்வதேச ஆங்கில ஊடகங்களில் ஒரு புகைப்படமும் வெளியானது. அது வெளியாகும்வரை, ஒபாமா அறிவித்த பின்லேடன் மரணச் செய்தியினை அப்படியே உள்வாங்கியிருந்த சர்வதேச சமூகம், அப்புகைப்படம் போலியானது என்பதை வெகு எளிதில் கண்டுகொண்டது. அந்நிமிடத்திலிருந்து பின்லேடன் கொலை குறித்த பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் சர்வதேச சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. அவையாவன:

* அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பின்லேடனின் உடலை அவசரம் அவசரமாக கடலில் வீசி எறியவேண்டிய காரணமென்ன?

* தாக்குதல் நடத்திய வீரர்கள் யார் யார் என்ற விபரம் இதுவரை வெளியிடப்படாதது ஏன்?

* உலகின் மிகப்பெரும் தீவிரவாதி என்று கூறப்படும் ஒரு நபரைத் தாக்கும்போது, தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிர் தாக்குதலில் ஒரு சிறு காயம்கூட ஏற்படாமல் போனது எப்படி?

* சோவியத் ரஷ்யாவையே எதிர்த்து போரிட்டு வெற்றி பெறக்கூடிய அளவிற்குப் படைப் பட்டாளத்தை கொண்டிருந்த ஒருவருக்கு, அமெரிக்க வீரர்கள் தாக்குதல் நடத்தும்போது பாதுகாவலுக்கு அவரின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மூன்று நபர்களைத் தவிர வேறு ஆளில்லை என்பதையும் நம்ப முடியவில்லையே?

* பின்லேடன் கொலை செய்யப்பட்டபின் அது குறித்த ஆதாரங்கள் ஏதும் அமெரிக்க அரசின் சார்பில் வெளியிடப்படவில்லையே, ஏன்?

* பின்லேடன் முகத்தில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ளதுபோல் ஒரேயொரு புகைப்படம் வெளியிடப்பட்டது. அதுவும் போலியானது என அறியப்பட்ட உடனேயே, பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி உட்பட பிரபல சர்வதேச ஊடகங்களிலிருந்து அவசரம் அவசரமாக அப்படம் நீக்கப்பட்டுள்ளது. இப்போது, "பின்லேடன் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியிட முடியாது" என ஒபாமா அறிவித்துள்ளார். காரணம் என்ன?
* பின்லேடன் தங்கியிருந்த படுக்கையறையின் வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கட்டில் பக்கத்தில் ரத்தம் உறைந்துள்ள காட்சியினை மட்டும் சுற்றிக் காண்பிக்கப்படுகிறது. அந்த அறையின் ஜன்னல்களிலோ சுவர்களிலோ தாக்குதல் நடந்ததற்கான குண்டுகள் பாய்ந்த எந்த ஒரு அடையாளத்தையும் காணமுடியவில்லை. வெளியிலிருந்து உள்ளேயிருப்பவர்களுடன் துப்பாக்கிச் சண்டை நடக்கும்போது, உள்ளேயிருப்பவர் குண்டு தாக்குதலுக்கு இரையானால், அவரின் இரத்தம் ஜன்னல் பக்கத்திலிருந்தே சிதற வேண்டும். ஆனால், அந்த வீடியோவில் கட்டிலின் பக்கத்தில் மட்டும் இரத்தம் உறைந்து கிடப்பது காட்டப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம்?

* இரவில் தாக்குதல் நடத்தியது போன்று ஒரு வீடியோ அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்டது. அந்த வீடியோவில் கட்டிடத்தின் பல பகுதிகளிலும் (குண்டுகள் வெடித்ததால் ஏற்படும்) நெருப்பு பிளம்புகள் பற்றி எரிவது போன்று காட்டப்படுகிறது. ஆனால் தாக்குதலுக்குப்பின் கட்டிடத்தின் எந்தப் பகுதியிலும் தாக்குதலாலோ தீயினாலோ ஏற்பட்ட சேதத்தைக் காண முடியவில்லையே? அது எப்படி?
உலகில் பல்வேறு குண்டுவெடிப்புகளை நடத்தி வந்ததாக தொடர்ந்து கூறப்பட்டு வந்த அல்காயிதா இயக்கத்தலைவர் பின்லேடன், ஐந்து வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தானின் ஒரு முக்கிய நகரில் ஒரே இடத்தில் குடும்பத்தினரோடு தங்கியிருந்திருக்க வாய்ப்பு உண்டா? ஒன்று அவர்மீது இதுவரை கூறப்பட்டு வந்த பயங்கரவாத தாக்குதல் செய்திகள் பொய்யாக இருக்க வேண்டும். அல்லது, இச்செய்தி பொய்யாக இருக்க வேண்டும். இரண்டில் எது உண்மை?

* பின்லேடன் சுடப்படும்போது, நிராயுதபாணியாக இருந்ததாக ஒரு செய்தி கூறுகிறது. இன்னொரு செய்தியோ, ஒரு பெண்ணைக் கேடயமாக பின்லேடன் பயன் படுத்தியதால் அவரை உயிரோடு பிடிக்க முடியாமல், சுட நேர்ந்ததாகக் கூறுகிறது. நிராயுதபாணியாக, பாதுகாப்புக்கு எவரும் இல்லாமல் இருந்த ஒருவரை உயிரோடுப் பிடிக்க முடியாதா?

பின்லேடன் கொல்லப்பட்டதாக மிகுந்த உற்சாகத்துடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தப்பின்னர் வெளியான புகைப்படம் மற்றும் வீடியோக்களிலிருந்தும் அமெரிக்க அதிபரின் முரண்பாடான அறிவிப்புகளிலிருந்தும் இத்தனை சந்தேகங்களும் எழுந்துள்ளன. பின்லேடன் விஷயத்தில் இதற்கு முன்னர் அமெரிக்க சிஐஏ செய்த சில தில்லுமுல்லுகளும் இதற்கு முன்னரே பின்லேடன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் இங்கு நினைவுகூரத் தக்கவை.

இன்று 2011, மே மாதம் பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா உரிமை கோரும் நிலையில், 2003லேயே பின்லேடன் இறந்து விட்டதாக அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பேனசிர் பூட்டோ அதிகாரப்பூர்வமாக அறிவித்த செய்தியினை முதலில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.
இரு நாட்டு அதிபர்களின் 8 ஆண்டுகள் இடைவெளியிலான இந்த இரு அறிவிப்புகளில் எந்த அறிவிப்பு உண்மை? எந்த அறிவிப்பு பொய்? இருவரில் யார் பொய்யர்?
பின்லேடனைக் கொலை செய்யும் விஷயத்தில் பொய்யுரைத்து உலக மக்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் என்ன? உண்மையில் பின்லேடன் கொல்லப்பட்டாரா? இல்லை, அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு நல்ல உரமிட்டு வளர்த்துவிட்டதற்குப் பிரதிபலனாக, ஒரு பக்கம் கொல்லப்பட்டதாக மேட்டரை மூடிவிட்டு, மறுபக்கத்தில் பின்லேடன் சுதரந்திரமாக உலவ வழிவகை செய்யப்பட்டுள்ளதா?

ஒரு காலத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் சவாலாக இருந்த ஒருங்கிணைந்த கம்யூனிச சோவியத் ருஷ்யாவை வீழ்த்த, அரபுக் கோடீஸ்வரரும் விடுதலைத் தாகம் கொண்டிருந்தவருமான பின்லேடன், இதே அமெரிக்காவாலேயே ஆயுதமும் பணமும் வாரி இறைத்து வளர்க்கப்பட்டார். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், உலகில் தன்னை எதிர்க்க யாருமில்லை என்ற அகந்தையில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த அமெரிக்கா, தான் வளர்த்தெடுத்த பின்லேடனே தனக்கு எதிராகத் தலைவேதனையாக மாறுவார் என கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

அரபுலகின் எண்ணெயின் மீது ஏகாதிபத்தியத்தை நிறுவத் துவங்கிய அமெரிக்காவுக்கு நேரடியாகவே பின்லேடன் மிரட்டல்கள் விடத்துவங்கினார்.

உலகம் முழுவதும் ஆங்காங்கே அமெரிக்கத் தூதரகங்கள் பின்லேடனின் அல்காயிதா இயக்கத்தினரால் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் 2001, செப்.11 இரட்டைக் கோபுர தகர்ப்பு நிகழ்வு நடந்தது.

சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்த அமெரிக்கா, "தீவிரவாதத்துக்கு எதிரான போர்" என்ற அறைகூவலுடன் பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த தாலிபான் அரசுக்கு எதிராக போரைத் துவங்கியது - அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஒருதலைபட்சமாக ஆப்கான்மீது அத்துமீறி போர் அறிவித்தார்.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவமே அமெரிக்காவின் உள்நாட்டு தயாரிப்புதான் என்றொரு தர்க்கவாதம் LOOSE CHANGE என்ற டாக்குமெண்டரி மூலமாக இன்று உலகின் எண்ணவோட்டத்தையே மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது கவனிக்கத் தக்க மற்றொரு விஷயம்.
இதற்கிடையில், 2003 ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் பேனசீர் பூட்டோவால் பின்லேடன் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்காவின் வாதத்துக்கு, ஒசாமாவிடமிருந்து அவ்வப்போது வந்ததாகக் கூறப்பட்ட மிரட்டல் வீடியோ டேப்புகள் வலு சேர்த்தன.

ஆனால், அந்த வீடியோக்கள் அமெரிக்க சிஐஏவால் தயாரிக்கப்பட்ட போலி வீடியோ டேப்புகள் என்று நுட்பரீதியாகவும் தர்க்கரீதியாகவும் நிரூபிக்கப்பட்டன.
பின்லேடன் மிரட்டல் விடுவதாகவும் பின்லேடன் அறிக்கை என்ற பெயரிலும் வீடியோவே வெளியிட்டு உலகை முட்டாளாக்கிய அமெரிக்க சிஐஏவுக்கு, இல்லாத ஒருவரை இருப்பதாகவும் இருப்பவரை இறந்து விட்டவராகவும் ஒரு செட்டப் நாடகத்தை நடத்திக்காட்டுவதும் அதற்கு ஆதாரமாக எல் கே ஜி மாணவனுக்குரிய தகுதிகூட இல்லாத நபர்களை வைத்து, போட்டோஷாப் கைங்கர்யத்தில் போட்டோக்களைத் தயாரித்து உலாவிடுவதும் பின்னர் குட்டு உடைந்தால், உடனேயே அதனை அதிகாரம் பயன்படுத்தி நீக்க வைப்பதும் பெரிய காரியங்களா என்ன?

இதற்கு இந்திய காவல்துறையினரால் அவ்வபோது திறமையான செட்அப்களோடு நடத்தப்படும் போலி என்கவுண்டர் நாடகங்கள் எவ்வளவோ மேல் என கூறத்தோன்றுகிறது!எது எப்படியோ 
இன்றுவரை அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பை அல் காயிதா இயக்கம்தான் நடத்தியது என்பதற்கு ஆதாரமாக ஒரு ஆதாரம்கூட வெளியிடாத அமெரிக்காவின், கோபுர தகர்ப்பில் ஈடுபடுத்தப்பட்ட விமானத்தின் கறுப்புப்பெட்டியினைக் கண்டெடுக்கக்கூட இயலாத அளவு அது அழிந்துவிட்ட நிலையில் அவ்விமானத்தை இயக்கிய விமானியின் எரியாமல் கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்தான், இரட்டைக் கோபுர தகர்ப்பில் பின் லேடனின் தொடர்புக்கான ஆதாரம் என்றதை அப்படியே நம்பி இன்று உலகின் அனைத்து தரப்பினரும் உள்வாங்கிவிட்டதைப் போன்று, போலி போட்டோஷாப் புகைப்படத்தை நோக்கி இன்று கேள்விகள் எழுந்தாலும் நாளை இது மறக்கடிக்கப்பட்டு, பின்லேடனை ஒபாமாதான் கொன்றார் என்று வரலாற்றில் குறிக்கப்படும்!

அதுதான் அமெரிக்காவில் சரிந்து வரும் ஒபாமாவின் பிம்பத்தை அடுத்த தேர்தலில் தூக்கி நிறுத்துவதற்கான ஒபாமாவின் உடனடித் தேவை! அதற்கு ஆதரவாக உலகளாவிய சாட்சியங்களும் தேவை - மௌன சாட்சியங்கள்!

ஆனால், அபோதாபாத்வாசிகளின் கூற்று என்னவெனில்,

"இங்கு ஒஸாமாவும் வசிக்கவில்லை; குஸாமாவும் வசிக்கவில்லை. எல்லாம் அமெரிக்கா நடத்தும் நாடகம்!

No comments: