How to Use Old Newspapers in a Home - Tips for Women
மாவு சலிக்க, வெயிலில் பொருட்களை உலர்த்த பொட்டலம் கட்ட... என்று நாம் பல வகைகளில் பயன்படுத்தும் பழைய செய்தித்தாள்களுக்கு இன்னும் பல உபயோகங்களை சொல்லி அசத்தியிருக்கிறார்கள் நம் வாசகிகள்.
எப்போதாவது பயன்படுத்தும் ஃபிளாஸ்க்குகள், ஹாட் பேக்குகள், வாடை அடிக்கும் டப்பாக்கள் போன்றவற்றின் உள்ளே பேப்பரை சுருட்டி வைத்து விட்டால், சில நாட்கள் கழித்துத் திறந்தாலும் நாற்றம் இருக்காது.
வாழை இலை, மஞ்சள் கொத்து முதலியவற்றை பேப்பரில் சுற்றி வைத்தால் இரண்டு நாட்கள் வரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
வீட்டுக்குள் செயற்கை செடிகளை வைக்கும்போது மணலுக்குப் பதிலாக செய்தித்தாள்களை கிரிக்கெட் பந்துகள் போல சுருட்டி, பூந்தொட்டியில் போட்டு விடுங்கள். மேலே சிறு சிறு கற்கள் போட்டு நிரப்பினால் தொட்டி அதிக கனமிருக்காது.
ஜன்னல்களின் கண்ணாடிப் பகுதி அழுக்காக இருக்கிறதா? பழைய நியூஸ் பேப்பரை எடுத்து தண்ணீரில் நனைத்து, ஜன்னல் கண்ணாடி முழுவதும் மறையும்படி விரித்து ஒட்டி, சில நிமிடங்களுக்குப் பிறகு எடுத்து, துணியால் துடைத்து விட்டால் உங்க வீட்டுக் கண்ணாடி பளபளக்கும்.
பட்டு மற்றும் டிசைனர் புடவைகளை பீரோவில் அடுக்கும் போது, நியூஸ் பேப்பர் சுற்றி, இடையில் உலர்ந்த வேப்பங்கொழுந்தையோ அல்லது வசம்புத்துண்டையோ வைத்து அடுக்கி விட்டால் பூச்சி, கறையான் போன்றவை கிட்டவே நெருங்காது.
வீட்டில் ஏ.சி பொருத்தும் இடங்களில் அல்லது கேபிள் ஒயர் நுழைக்கும் இடங்களில் இருக்கும் இடைவெளிகளில் நியூஸ் பேப்பரை நன்றாக சுருட்டி உள்ளே வைத்து, வெளியே நீட்டி கொண்டிருக்கும் பேப்பரைக் கத்தரித்து விடுங்கள். பின்னர் செல்லோ டேப் கொண்டு ஒரு வெள்ளைத் தாளால் அந்த இடத்தை மூடி விட்டால் பூச்சிகள் அடையாது.
பேப்பரை இரண்டு அங்குல அளவுள்ள சதுரங்கள் அல்லது செவ்வகங்களாக வெட்டிக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு பாத்திரம் அல்லது டப்பாவின் வெளிப்புறம் கொஞ்சம் எண்ணைய் பூசிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீரும் ஃபெவிகாலும் சேர்த்து கரைத்துக் கொண்டு ஒவ்வொரு பேப்பர் துண்டுகளாக அதில் தொட்டு டப்பாவின் மேல் ஒட்டி விடுங்கள். இப்படி டப்பாவின் வெளிப்புறம் முழுவதும் ஒட்டி அதன் மேல் கலர் பேப்பர் ஒட்டி அலங்கரித்து அப்படியே 12 மணி நேரம் வைத்து விடுங்கள். பிறகு பேப்பரை பிரித்தெடுத்தால் அந்த டப்பாவின் வடிவத்திலேயே பூஜாடி அல்லது பேனா ஸ்டாண்டு அழகாக நிற்கும்.
No comments:
Post a Comment