. நம் உடல்நலத்திற்க்கு பழங்கள் சாப்பிடுவது என்பது மிக முக்கியம்.அதிலும் இந்த ஆப்பிளை தினமும் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது என்ற பழமொழிகள் கூட உண்டு.
(அதான் தெரியுமே... விஷயத்துக்கு வா,,ன்னு யாரும் சொல்லாதீங்கப்பா...) இந்த ஆப்பிளை சாப்பிடுவது சிலருக்கு மிகவும் கஷ்ட்டமான விஷயம்.வெளிநாட்டில் ஸ்கூலுக்கு போகும் குழந்தைகளுக்கு காலையில் பாக்ஸிற்க்கு தினமும் சிறிது சிறிதாக கட் செய்து வைத்து அனுப்பினால் அவர்கள் ஸ்கூலில் சாப்பிடுவதற்க்கு மிகவும் நன்றாக இருக்கும்.ஆப்பிள் கட் செய்து வைத்த சில மணிகளில் கருத்து விடும் இல்லையா...அதை சிலருக்கு பார்த்தாலே சாப்பிட தோன்றாது.குறிப்பாக குழந்தைகள்.. - அய்யே...என்னமா இது பார்க்கவே அழுக்காக இருக்கு”ன்னு சாப்பிட மாட்டாங்க... அது போன்று கறுத்து போகாமல் இருக்கதான் இந்த குறிப்பு... (அம்மாடி ஒரு வழியா... பாய்ண்ட்டுக்கு வந்துட்டாம்மா...)
ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீரை வைத்துக் கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி நிறைய உப்பு போட்டு கலக்கி கொள்ளவும்.பின்பு முழுதாக நன்கு ஒரு முறை ஆப்பிளை கழுவி விட்டு,பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை அந்த உப்பு தண்ணியில் போட்டு நன்கு எல்லா துண்டுகளிலும் படுவது போல் பிரட்டி பிறகு தண்ணீரை விட்டு எடுத்து பாக்ஸிற்க்குள்ளோ,அல்லது ப்ளேட்டிலோ வைத்தால் ஒரு நாள் ஆனாலும் அதன் நிறம் மாறாமல் இருக்கும்.
2. அடுத்து மாதுளைப்பழம் இருக்கே அது நம் இரத்த ஓட்டத்திற்க்கு மிகவும் நல்ல மருந்து என்றே சொல்லலாம்.ஆனால் அதை தோலை உரித்து அந்த முத்துக்களை உதிர்ப்பது இருக்கே... ஸ்ஸ்ஸ்..அப்பா... போதும் போதுமென ஆகிவிடும்.அதற்க்கான சுலபவழி இருக்கு....
மாதுளைப்பழத்தை இரண்டாக அரிந்து விட்டு ஒரு அகலமான பாத்திரமோ ப்ளேட்டோ வைத்து கொண்டு அதன் மேல் ஒரு கைய்யில் பாதி மாதுளையை குப்புற வைத்துக் கொண்டு மற்றொரு கைய்யில் கனமான மாவு கரண்டி(அகப்பை என்பார்கள்) கொண்டு அந்த மாதுளையின் பின் பக்கத்தை இரண்டு தட்டு தட்டி பாருங்களேன்.பொல பொல வென்று அத்தனை முத்துக்களும் உதிர்ந்து விடும்.உதிராத பக்கத்தில் ஒரு தட்டு தட்டினாலும் விழுந்து விடும்.இதே போல் மற்றொரு பாதியையும் செய்தால் அவ்வளவுதான்....அப்புறம் ஒரு நிமிஷத்தில் முழு மாதுளையையும் உதிர்த்து வைத்து விடலாம்.சீக்கிரம் ஜூஸ் போடுவதற்க்கெல்லாம் இந்த முறை உதவும்.செய்துதான் பாருங்களேன்...
3. பூண்டு உரிப்பது என்பது பலருக்கும் பெரிய வேலை.பூண்டின் விலையும் இப்பல்லாம் ஊரில் ஏறுவதும் இறங்குவதுமாக தான் இருக்கின்றது.நம்மை போன்ற வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இஞ்சி,பூண்டு அரைக்க நிறைய பூண்டு உரிக்க வேண்டி வரும்.பூண்டை மலிவாக விற்க்கும் போதோ...அல்லது நான்கு பேர் சேர்ந்து இருக்கும் போதோ (எங்கள் கிராமங்களிளெல்லாம் பெரிய விருந்துக்காக நிறைய பூண்டு உரிக்கணும்னா வாசலில் வைத்து உரிப்பார்கள்.அப்படியே அக்கம் பக்க உள்ளவர்கள் மூன்று நான்கு பேர் சேர்ந்து கை வைக்க சீக்கிரம் உரித்தாகி விடும்) நிறைய வாங்கி தோலுரித்து ஒரு மஞ்சள் துணி பைய்யில் வைத்து நன்கு சுற்றி ஃப்ரிட்ஜில் வெஜிடபுள் பாக்ஸில் வைத்து கொண்டோமேயானால் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.நெடுங்காலம் வரை ஃப்ரஷ்ஷாக இருக்கும்.முளைத்து கொண்டு வராது.
4. நாம் வெள்ளை அல்லது கறுப்பு கொண்டைகடலையை இரவே ஊற வைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்திருப்போம்.ஆனால் மறந்து விடுவோம்.அல்லது திடீர் என்று யாரும் விருந்தாளிகள் இரவு சாப்பாட்டிற்க்கு வருகிறேன் என்று சொல்வார்கள்.இல்லை வந்து விடுவார்கள்.ஒரு இரண்டு மணி நேரத்திற்க்குள் நாம் சமைத்து விட வேண்டும் என்றே வைத்துக் கொள்வோம்.ஒரு சப்பாத்தியுடன் சன்னா மசாலா வைத்தாலே முடிந்து விட்டது.ஆனால் சன்னா ஊறை வைக்காமல் எப்படி?என்கிறீர்களா..... எவ்வளவு சன்னா வேண்டுமோ அதை எடுத்துக் கொண்டு,ஒரு பெரிய ஃப்ளாஸ்க்கில் போட்டு தள தளவென்று கொதிக்கும் வெந்நீரை ஃப்ளாஸ்க் முழுவதும் ஊற்றி மூடி வைத்து விடுங்கள்.ஒரு மணி நேரம் கழித்து திறந்து பார்த்தீர்களேயானால்... ஆறு,ஏழு மணிநேரம் ஊறிய சன்னா போல் இருக்கும் அதன் பின் எடுத்து வேக வைத்து சமைக்க வேண்டியத்துதான்.
5. இந்த குறிப்பு பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்பதால் அதை தெரியபடுத்த விரும்புகிறேன்.உருளைகிழங்கை சீக்கிரம் வேக வைத்து சமைக்க ஒரு சுலப வழி.தோலுடன் 3 உருளைகிழங்கை நன்கு கழுவி விட்டு 3 டிஸ்யு பேப்பர் கொண்டு தனி தனியே நன்கு சுற்றி மைக்ரோவேவ் மீடியம் ஹைய்யில் (அதாவது 90 வெப்பநிலையில்) மூன்று நிமிடம் வைத்து ஆன் செய்து விடவும்.அது நின்றதும் ஒரு பத்து நிமிடம் கழித்து எடுத்தால் சூப்பராக வெந்த உருளை தயார்.வேளியே போய் விட்டு டிபன் செய்ய இது போன்று கிழங்கை வைத்து விட்டு அதற்க்கு தேவையான வெங்காயம் வெட்டி வதக்கி கிழங்கு பாஜி செய்யலாம்
No comments:
Post a Comment