Sunday, July 29, 2012

5 இருந்தால் ஆளலாம்

வாழ்க்கையில் எளிதாக முன்னேறுவதற்கு மால்டி போஜ்வாணி என்ற நிபுணர் தரும் 5 வழிகள்...


1. இணக்கமான உறவு: உங்களிடம் பேசும் நண்பர்கள், வாடிக்கையாளர்களை பேசவிட்டு அவர்களின் மனநிலையை நன்றாக புரிந்து கொண்டு அவர்களுக்கு தகுந்தவாறு நீங்கள் பேச வேண்டும். இந்த இணக்கமான உறவினை மேற்கொள்ள விரும்புபவர்கள் சில அத்தியாவசியமான நுட்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது ஒருவர் பேசும் பேச்சுக்களில் இருந்தே பேசுபவர் எந்த துறையை சேர்ந்தவர், அவர் எப்படிப்பட்டவர், எந்த வழியில் பேசினால் அவரை ஈர்க்க முடியும் என்பது குறித்து தெரிந்து கொள்ளும் திறமையை வளர்க்க வேண்டும். இந்த வகையில் வாடிக்கையாளர்களை பேசவிட்டு அவர்களின் கருத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி பேசப்படும் நடவடிக்கை மூலம் உங்கள் வியாபார வெற்றி பெருகும்.

2. குழப்பங்களை நீக்கும் தெளிவு: நம் மனதை எப்பொழுதும் தூய்மையானதாகவும், தன்னம்பிக்கையுடனும் குழப்பங்களை நீக்கி தெளிவாகவும் வைத்திருக்க வேண்டும். எந்த காரியத்தையும் நம்மால் செய்ய முடியும் என்கிற மனோதிடம் வேண்டும். நாம் ஏதேனும் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்ட நிலையிலும் அதைப்பற்றி பெரிதுபடுத்தாமல், அந்த இடத்தில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று நினைத்து அந்த சிக்கலை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் சிக்கல் நிறைந்த வேலைகளை செய்யப்போகும்போது `அய்யோ இந்த வேலையை எப்படி செய்யப் போகிறோமோ!' என்று தயக்கத்துடன் செல்லாமல் ஏதோ விளையாட்டாக அந்த வேலையை செய்வது போன்ற எண்ணத்துடன் செய்தால் அது சிறப்பாக முடியும்.

ஒரு வேலையை ரசித்து செய்யும்போது மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதுமையான ஒரு செயல் அல்லது திட்டம் தீட்டும்போது ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், நம் மனதிற்குள் நாமே ஆழமாக பல வழிகளில் சிந்திக்கும்போது பல புதிய வழி முறைகள் தோன்றும். எப்பொழுது நமக்குள் நாமே சிந்திக்க ஆரம்பிக்கின்றோமோ அப்போது மனதில் உள்ள குழப்பங்கள் மாறி முழுமையான சக்தியுடன் கூடிய பல வழிகள் உருவாகும்.

3. ஒருநிலைப்படுத்துதல்: எப்பொழுது ஒருவர் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, மனதை ஒருநிலைப்படுத்தி செயலில் ஈடுபடுகின்றாரோ அப்பொழுது அவரால் எளிதில் வெற்றி பெற முடியும். குழப்பமான நேரங்களில் எல்லாம் மனதை ஒருநிலைப்படுத்தி சிந்திப்பதன் மூலம் குழப்பங்கள் நீங்கி புதிய வழி பிறக்கும்.

முதன் முதலில் நீங்கள் முழுமூச்சாக ஒரு காரியத்தில் ஈடுபட்டு அதில் முழுமையான சந்தோஷம் மற்றும் வெற்றியை பெறும்பொழுது நீங்கள் உங்கள் உண்மையான மகிழ்ச்சி உணர்வை வெளிப்படுத்தும் விதமாக உங்கள் கை விரல்களை மடக்கி முழங்கையை கீழ்நோக்கி இழுத்து உங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்துவீர்கள். இது மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் தானாக வெளிப்படும் உணர்வுகளின் செயல்பாடாகும். ஆனால் எப்பொழுது உங்கள் வேலை சரியாக அமையவில்லையோ அப்போது உங்களுக்குள் இது போன்ற உணர்வுகள் தோன்றாது.

4. ஒருங்கிணைத்து முடிவெடுத்தல்: ஒவ்வொருவருக்கும் தங்கள் வேலையை செய்யும்போது சில குழப்பங்கள் ஏற்படும். இந்த சமயங்களில் தங்கள் நண்பர்களிடம் இருந்தோ அல்லது ஏற்கனவே இந்த வேலையை செய்து முடித்துள்ள அனுபவசாலிகளிடம் இருந்தோ உதவிகளை பெற வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் அந்த வேலையில் உள்ள அனைத்து செயல்களையும் ஒருமுகப்படுத்தி சிந்தனை செய்து முடிவெடுக்கும்போது நல்ல தீர்வு கிடைக்கிறது.

எடுத்துக்காட்டாக உங்களுக்கு உங்கள் உடலை ஒல்லியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதேநேரத்தில் சாக்லேட் தின்பதற்கும் ஆசை உள்ளது என்று வைத்துக் கொள்வோம். சாக்லேட் தின்பதால் உடல் எடை அதிகரிக்கும். இதனால் உங்கள் உடல் ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாது. இதில் சாக்லேட் தின்பதை விட உங்கள் உடல் ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. எனவே இரண்டு ஆசைகளையும் ஒரே நேரத்தில் சிந்தித்து அதில் எது சிறந்ததோ அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

5. சிறந்த மொழி வெளிப்பாடு: பேசும்போது சில வார்த்தைகள் எதிர்மறையான கருத்துக்களை உருவாக்கிவிடும். குறிப்பாக ஆனால் என்ற வார்த்தையானது எதிர்மறையான ஒரு விளைவை ஏற்படுத்தும் வார்த்தையாகும். எடுத்துக்காட்டாக நீங்கள் உங்கள் நண்பரிடம் பேசும்போது `நான் உங்கள் நலனை விரும்புகிறேன் ஆனால்....' என்று கூறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வார்த்தையில் இருந்தே அவரது உடல்நலனில் நீங்கள் அக்கறையில்லாமல் இருப்பதுபோல் ஆகிவிடுகிறது.

இதை கேட்டதுமே உங்கள் நண்பருக்கு இதுவரை பேசியது அனைத்தும் பயனற்று போய்விட்டது என்ற எண்ணம் தோன்றிவிடும். இதனால் நீங்கள் எந்த காரியத்தை பேசிக் கொண்டிருந்தீர்களோ அதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுவிடும். எனவே அந்த மாதிரியான பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். மேலும் எதற்கெடுத்தாலும் இல்லை, தெரியாது என்று சொல்லுவதை தவிர்த்து ஆம், தெரியும் என்று பேசுங்கள் வெற்றி பெறலாம்.

 


--
*more articles click*
www.sahabudeen.com



No comments: