Friday, July 13, 2012

Click Forward புத்தி.

எழுதியவர்: ஹாஜா முஹையத்தீன்

சீசன் இல்லாத நேரங்களில் பாடாவதி பிரஸ்ஸை ஓட்டுவதற்காக முன்பெல்லாம் ஒரு ஐடியா வைத்திருந்தார்கள். ஒரு பிட் நோட்டீசை அச்சடித்து வெளியிடுவார்கள். இன்ன மாதிரி கடவுளின் புகழைச் சொல்லி - இல்லாவிட்டால் ஒரு செய்தியை எழுதி, "இதை ஏழு நாட்களுக்குள் 500 நோட்டீஸ் எடுத்து ஒழுங்காக டிஸ்ட்ரிப்யூட் பண்ணு இல்லாட்டா உன் மண்டை வெடிக்கும். பேதியில போவாய்  இப்படித் தான் ஆண்டிப்பட்டியில் ஒருத்தருக்கு  ஆச்சு. அரசம்பட்டியில ஒருத்தருக்கு ஆச்சு. இதை மதிச்சு ஒழுங்காக விநியோகம் செய்த இன்னார் பெரிய பணக்காரர் ஆனார். கார் வாங்கினார்.பங்களா வாங்கினார்."  என்று பயமுறுத்தும். என்னடா இது வம்பா போச்சு? எதுக்கு ரிஸ்க் என்று அப்பாவிகள் போனால் போகிறது என்று அந்த பிரஸ் போய் 500 அடிப்பார்கள். 
 
டெக்னாலஜி வளர்ந்து இப்ப ஈமெயில் வந்த பிறகும் கூட பழைய சம்ப்ரதாயம் (?) மாறவில்லை. இன்பாக்ஸை திறந்தால் வாரத்துக்கு ஒரு மிரட்டல் வந்துவிடுகிறது.


மவனே, மரியாதையாய் உன் பிரண்ட்சுக்கு பார்வார்ட் செய் இல்லாட்டா நடக்கிறதே வேறு என்கிறது!!


மியூசிக் சேர் விளையாட்டு மாதிரி ஒரு விளையாட்டு இருக்கிறது. ரவுண்டு கட்டி உட்காந்து கொள்வார்கள். கையில் ஒரு பந்து அல்லது தலையணை மாதிரி ஏதாவது. பாட்டு ஒலிக்கும். கையில் உள்ள பந்தை கையில் கிடைத்த மாத்திரத்தில் அடுத்தவருக்கு மாற்ற வேண்டும். நம் கையில் பந்து இருக்கும் நேரம் பார்த்து ம்யூசிக்கை நிறுத்தினால் நாம் அவுட்.


இந்த ரேஞ்சுக்கு நண்பர்கள் படுத்துகிறார்கள். அவர்களுக்கு ஏதாவது மெயில் வந்துவிட்டால் லிஸ்டில் உள்ள பத்து பேருக்கு forward செய்துவிடுகிறார்கள்.

இப்படி நிறைய ஆர்வக்கோளாறுகள்
அதில் உள்ள செய்தி எத்தனை முக்கியம் - ஸ்பாமா,
 யாரோ அடிச்சு விட்டதா என்றெல்லாம் பார்ப்பதில்லை, யோசிப்பதில்லை.


சில நேரம் நமது சிற்றறிவுக்கு எட்டாத விஷயங்கள் எல்லாம் அனுப்பி வைப்பார்கள்.


இப்படித்தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஹார்ட் அட்டாக் வந்தா ஆஸ்பத்திரி வரும் வரை இருமிக்கிட்டே வாங்க அப்பத் தான் இதய துடிப்பு நின்னுபோவாதுன்னு ஒரு மெயில் வந்தது. ஒ! இப்படி ஒரு வழி இருக்கா. நமக்கு ஹார்ட் அட்டாக் வரும்போது ட்ரை பண்ணி பார்க்கலாம் என்று தனி போல்டர் எல்லாம் போட்டு SAVE
  பண்ணி வைத்திருந்தேன். ஒரு வாரம் கழித்து இன்னொரு மெயில் வருகிறது. ஹார்ட் அட்டாக்கின் போது இருமினால் சீக்கிரம் போய்ச் சேர்வாய் என.


இதில் எதை நம்புவது?


சுஜாதா முன்பு "கற்றதும் பெற்றதும்" எழுதிக் கொண்டிருந்தபோது இலக்கியம் பற்றி எல்லாம் விலாவாரியாக எழுதுவார். இதை படித்து புல்லரித்துப் போன தமிழ் இலக்கிய படைப்பாளிகளும் பண்டிட்டுகளும் அவருக்கு தலையணை தலையணையாக புத்தகங்கள் அனுப்பி வைகக ஆரம்பித்துவிட்டார்கள். கொரியர்காரனிடம் இதை கையெழுத்து போட்டு வாங்கவே திருமதி சுஜாதாவுக்கு நேரம் இல்லாமல் போனது. படிக்கவும் நேரம் இல்லாமல் - தூக்கி போடவும் மனசு இல்லாமல் - அடுக்கி வைக்கவும் இடம் இல்லாமல் அவர் திண்டாடியதை எழுதி
இனிமே எனக்கு தேவைப்பட்டா துட்டு போட்டு வாங்கி படிக்கிறேன். தயவு செய்து அனுப்பாதீர்கள் என்று SLIDE எல்லாம் போட்டார்.


படைப்பாளிகள் (?) கேட்டால் தானே? நான் படைத்ததை (?) நீ படித்து தான் ஆக வேண்டும். அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன் என்று சவால் விடாத குறையாக அனுப்பிக் கொண்டிருந்தார்களாம்.


இன்னும் சில பேருக்கு மத ரீதியான விஷயங்கள் எதாவது புதுமையாக கிடைத்தால் போதும். சிலிர்த்து விடுவார்கள். உடனே click forward தான்.


அதை படித்து பார்த்தாலே மாஜிக் மாதிரி தான் இருக்கும். இந்த மெயிலை வைத்து பார்த்தாயா அற்புதங்களை என்று சொல்ல வருகிறார்களாம்.(கொஞ்ச நாளைக்கு முன்னாடி குழந்தை உடம்பில் இறைவசனம் வருன்றது என்று ஒரு மடல் அடுத்து வானத்திலிருந்து பார்த்தால் புனிதத் தலங்கள் ஜொலிக்கின்றன என்று ஒரு மெயில்) இதெல்லாம் பாசிடிவ் Effect வருவதற்கு பதிலாக மூட நம்பிக்கை வர வர ஜாஸ்தி ஆயிட்டே வருது என்று நெகடிவ் ஆக யோசிக்க வைக்கும்.

கிடைக்கும் செய்தியை ஆராயாமல் பரப்புவது எத்தனை பெரிய பாவம் என்பது தெரிந்தால் இப்படியெல்லாம் செய்வார்களா இந்த ஆர்வக் கோளாறுகள்?


நன்கு அறிமுகமானவர்கள் - நண்பர்களே இப்படி மெயில் போட்டு விடுவதால் இதை பில்டரிலும் போட்டு தொலைய முடியாது. சில நேரம் பெர்சனல் மெயிலும் அனுப்பி வைப்பார்கள்.


கொடுமையின் உச்சப்பட்சமாக ஒரு துபாய் நண்பன்
  நான் பதிலே போடுவதில்லை என்று குறைபட்டுகொண்டான். நீ மெயில் போட்டால் நான் பதில் போட்டிருப்பேனே என்றேன்.


நேத்து கூட மீனா கல்யாண போட்டோ அனுப்பினேன். நீ நாலு வரி எழுதி இருக்கலாமே என்கிறான். , என்ன கொடுமை, பாருங்கள்!


ஈமெயில் படிப்பதால் வாழ்க்கையின் 10 வருஷம் வீணாகிறது என்று யாரோ ஆராய்ச்சி முடிவு போட்டிருந்தார்கள். நண்பர்கள் கொஞ்சம் மனது வைத்து இந்த கெட்ட பழக்கத்தை மாற்றிக்கொண்டால் அதில் ஏழு வருஷம் எனக்கு விட்டு தரலாம். :-)


சமீபத்தில் ஒருரூபாய் செலவில் சிறுநீரகங்களைச் சுத்தம் செய்ய Parsley இலைகள் உதவும் என்று ஒரு மெயில் எல்லாக் குழுமங்களிலும், எல்லாராலும் forward செய்யப்பட்டுவந்தது. அதற்கு மல்லித் தழைகள் என்று
 பெயரில் குழப்பிக்கொண்டும்.

 அதற்கு ஒரு குழுமத்தில் ஒருவர் நாம் மருத்துவக் குறிப்புகளைத் தருகையில் ஆதாரங்களோடு தர வேண்டும் என்று அழுத்தமாகக் கோரியிருந்தார்.  Forward செய்தவரிடமிருந்து பதில் இல்லை. அவரே யாரையோ Forward செய்திருக்கிறார் என்னும்போது, Scientifically proved ஆதாரம் தர எப்படி முன்வருவார்? 

 ஆக, செலவில்லாமல், ஃப்ரீயாக கிடைக்கிறது என்பதற்காக இமெயிலில் கண்டதையும் forward செய்கிற வியாதியை விட்டும், (சில பேர் புத்திசாலித்தனமாக கட் அண் பேஸ்ட் செய்வார்க்ள்-அதுவும் 'நன்றி' மறந்து) - நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.


நன்றி
--
 
BABUJI


--
*more articles click*
www.sahabudeen.com



No comments: