Thursday, December 19, 2013

ரெடி... ரெடி... படி... படி! -- பரீட்சை சுலபமாக,

ரெடி... ரெடி... படி... படி! -- பரீட்சை சுலபமாக,


மார்ச் மாசம் வந்தாச்சு... கூடவே எக்ஸாம் ஃபீவர்! ஆனாலும், கவலைகொள்ளத் தேவை இல்லை. மாணவர்கள் நல்ல முறையில் படித்து, படித்ததை மறவாமல் பாதுகாக்கக்கூடிய வழிமுறைகளைச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ராஜ்மோகன். 
 படிக்கும்போதும், படிக்கும் இடங்களிலும் உங்களது கவனத்தைச் சிதைக்கும் டி.வி. இன்டர்நெட், மொபைல் போன்ற விஷயங்களை அனுமதிக்காதீர்கள். 'ஃப்ரெண்ட்கிட்ட சாட் பண்ணிட்டே படிக்கலாம்' என்ற வேலையே கூடாது.
 அதிகாலை நேரம், படிப்பதற்கு உகந்த நேரம்தான் என்றாலும், அதிகாலைதான் படிக்க வேண்டும் என்று இல்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே 'பீக் ஹவர்ஸ்' எனப்படும், நாம் அதிக சுறுசுறுப்புடன் செயல்படும் நேரம் என்று ஒன்று இருக்கும். உங்களுடைய 'பீக் ஹவர்ஸ்' எது என்பதைக் கண்டுகொள்ளுங்கள். கவனமாகப் படிப்பது என்பது மிக முக்கியம். தூங்கி வழிந்துவிடக் கூடாது.

 மணிக்கணக்கில் தொடர்ந்து படிக்காதீர்கள். மூளை பாவம் பசங்களா! சிறிது நேரம் இடைவெளிவிட்டே படியுங்கள். அதாவது ஒவ்வொரு 20 நிமிடப் படிப்பிற்கும் ஐந்து நிமிடங்கள் இடைவெளி விடுங்கள். அந்த இடைவேளையில் சின்னதாக ஒரு 'வாக்' போகலாம், மூச்சுப்பயிற்சி செய்யலாம். இதெல்லாம் மூளையின் சோர்வைத் தடுப்பதோடு, படிக்கும் விஷயம் ஆழமாய் மனதில் பதியவும் உதவும்.
 பரீட்சைக்கு 20 நாட்கள் இருக்கிறதே என அலட்சியமாக இருக்காதீர்கள். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் படிக்கிறீர்கள் என்றால், 20 ஜ் 3 = 60 மணி நேரம், 60/24 = 2.5 நாட்கள். இத்தனை நாட்கள்தான் படிப்பதற்கு என உங்கள் கையில் இருக்கிறது என்பதை மறவாதீர்கள். அதற்கு ஏற்றவாறு முன்கூட்டியே திட்டமிட்டுப் படியுங்கள். இதனால் தேவை இல்லாத டென்ஷனைத் தவிர்க்க முடியும். தேவை இல்லாத டென்ஷன், மறதியை உண்டுபண்ணும் என்பது தெரியும்தானே?
 இந்த நேரத்தில் வழக்கத்தைவிட உடல் நலம் மீது அதிகமாக அக்கறைகொள்ளுங்கள். கைக்குட்டையை வைத்துக்கொண்டு மூக்கை உறிஞ்சிக்கொண்டே படித்தால், கொஞ்சம் சிரமம்தானே. எனவே உடல்நலனில் கவனம் தேவை.
 'மைண்ட் மேப்பிங்' முறை தெரியுமா? மைண்ட் மேப்பிங் என்பது முக்கியமான விஷயங்களைச் சிறு சிறு குறிப்புகளாக எடுத்துப் படிக்கும் முறை. படித்த அனைத்தையும் எளிதில் நினைவுபடுத்திக்கொள்ள இது பயன்படும். உதாரணமாக அசோகர் பற்றிய பாடம் என்றால், அவரது பிறப்பிடம், பெற்றோர் பெயர், செய்த போர்கள், சாதனைகள் போன்றவற்றைப் பகுதி பகுதியாகப் பிரித்துப் படியுங்கள். அப்படிப் படித்தால், தேர்வு அறையில் பிறப்பிடம் என்ற குறிப்பு ஞாபகம் வந்தாலே, உங்களுக்கு கூடவே, அவர் பிறந்த வருடமும், பிறந்த தேதியும், அவரது பிறப்பு தொடர்பான இன்னும் பல விஷயங்களும் ஞாபகத்தில் வந்து விழும்.
 காட்சிப்படுத்திப் படிக்கலாம். உதாரணமாக சச்சின் டெண்டுல்கர் பற்றிய பாடமாக இருந்தால், ஒரு மரத்தை வரைந்துகொண்டு, அதற்கு சச்சின் எனப் பெயர் வைத்துவிட்டு, அந்த மரத்தில் ஒரு பெரிய கிளையில் ஆரம்ப கால வாழ்க்கை என எழுதிவிட்டு, அதில் இருந்து பிரியும் சிறு சிறு கிளைகளில் பிறந்த வருடம், படித்த இடம், கிரிக்கெட்டில் சேர்ந்த வயது, வருடம் போன்ற தகவல்களைச் சிறு சிறு குறிப்புகளாக எழுதிவைத்துப் படிக்கலாம். இப்படிப் படித்ததைப் படமாக வரைந்து படித்தால், எளிதில் மனப்பாடம் ஆவதோடு எளிதில் மறக்கவும் செய்யாது.

 படிப்பதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடம் ரொம்ப முக்கியம். அமைதியான சூழலில் படியுங்கள். தெருக்குழாய் சண்டை நடக்கும் இடத்திற்கு அருகில் இருந்து, எவ்வளவுதான் கஷ்டப்பட்டு படித்தாலும் மனதில் ஏறாது என்பதைச் சொல்வதற்கு, நிபுணர் தேவை இல்லை.
 படிக்கும் நேரத்திற்கு முன்பு, அசைவ உணவுகளையும் ஜங்க் ஃபுட்ஸையும் சாப்பிடாதீர்கள். இப்படிச் செய்வதால் உடலோடு மூளையும் சோர்வு அடைவதைத் தடுப்பதோடு, உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். சுத்தமான சைவ உணவுகள் மூளைக்கு ரொம்பவே நல்லது.
 படிக்கிறேன் பேர்வழி எனத் தூங்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளாதீர்கள். தினமும் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் கண்டிப்பாகத் தூங்க வேண்டும். போதுமான தூக்கம் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். தூக்கமின்மை மறதியை ஏற்படுத்தும்.
 நேரம் கிடைக்கும்போது, யோகா, தியானம் போன்ற மனம் ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபடலாம். இவை எல்லா வகையிலும் நல்லது.
- உ.அருண்குமார்
 படம்... பாடம்!
பொதுவாகவே மனிதர்கள் அனைவருக்குமே ஞாபக சக்தி என்பது அதிகமாகத்தான் இருக்கும். அதனால்தான் போன மாதம் பார்த்த படத்தின் கதையை ஒரு சீன் தவறாமல் நம்மால் விவரிக்க முடிகிறது. ஆனால், போன மாதம் நடத்திய பாடம் பல மாணவர்களுக்கு மறந்துபோய்விடுகிறது. காரணம் இரண்டிலும் இருக்கும் கவனக்குவிப்பில் ஏற்படும் வித்தியாசங்களே. எந்த ஒரு செயலையுமே நம் மொத்த கவனத்தையும் குவித்துச் செய்யும்போது, நீண்ட காலத்துக்கு நம் மனதில் பதிந்துவிடும். எனவே, கவனத்தோடு படியுங்கள்.
http://pettagum.blogspot.in/2013/03/blog-post.html

--
*more articles click*
www.sahabudeen.com


No comments: