Saturday, November 29, 2014

நாற்றமடிக்கும் வியர்வையும் டியோடரன்டஸ்; பாவனையும்.

நாற்றமடிக்கும் வியர்வையும் டியோடரன்டஸ்; பாவனையும்.


டியோடரன்டஸ் Deodorants என்பது இப்பொழுது, சீப்புப் பவுடர் போலாகிவிட்டது. வீட்டுப் பாவனைப் பொருள் போல எங்கும் கிடைக்கின்றன. யாருக்குத்தான் மற்றவர்கள் முன்னால் தங்களது உடல் நாற்றத்துடன் போய் நிற்க மனதிருக்கும்.
நாற்றமும் நறுமணமும்

"அரசியின் கூந்தல் நறுமணம் இயற்கையானதா செயற்கையானதா" ஆராய்ந்து பார்த்த கதைகள் நினைவிற்கு வருகிறதா? அந்தக் காலத்தில் அரசிகள் முடிக்கு மட்டுமே தேடிய வாசனைத் திரவியங்கள் இன்று தொழிலாளர்களின் அக்குளுக்கும் அவசியமாகிவிட்டன. சந்தை வாய்ப்புகளும் விற்பனையும் அமோகமாக இருக்கின்றன.
அக்குள் மணத்திற்கும் பொதுவான உடல் மணத்திற்கு காரணம் வியர்வையாகும். ஆனால் இயற்கையாக வியர்வை மணப்பதில்லை. வியர்வையில் நீரும் சில உப்புக்களும் மட்டுமே இருக்கின்றன. இவற்றில் எந்த மணமும் கிடையாது. ஆனால் சுரக்கும் அந்த வியர்வையில் பக்றீரியா கிருமிகள் பெருகும்போதே மணம் ஏற்படுகிறது.

நாற்றமற்ற வியர்வைக்குக் காரணம் என்ன?

"எல்லோருக்குமே வியர்க்கிறது, எல்லோரது உடலிலும் கிருமிகள் இருக்கலாம் ஆனால் ஏன் எல்லோரது வியர்வையும் மணப்பதில்லை" என்ற எண்ணம் உங்கள் மனதில் எழுந்திருக்கும். வியர்வையில் மணம் ஏற்படுவதானது எமது மரபணு சார்ந்தது.
அதைக் கொடுப்பற்குக் காரணமாக இருப்பது ABCC11 என்ற மரபணுவாகும். ஆனால் சிலரில் இந்த மரபணுவானது சிறிய மாற்றங்களுடன் செயலற்று இருப்பதுண்டு. அவ்வாறான மரபணு மாற்றமுற்றவர்களின் வியர்வை மணப்பதில்லை. மிகுதியான பெரும்பாலானவர்களுக்கு மணக்கவே செய்யும்
University of Bristol  லில் ஒரு ஆய்வானது 6,495  பெண்களிடையே செய்யப்பட்டது. இந்த ஆய்வின் பிரகாரம் மிகச் சிறிய எண்ணிக்கையானோருக்கு மட்டும் (2% -117 out of 6,495) அவ்வாறான மாற்றமுற்ற மரபணு இருந்தமை கண்டறியப்பட்டது. அதன் அர்த்தம் அவர்களது அக்குள் வியர்வையில் நாற்றம் இல்லை என்பதாகும்.
ஆய்வின் ஆச்சரியமான அம்சங்கள் இனித்தான் காத்திருக்கிறது.
  • இந்த ஆய்விற்கு உட்பட்டவர்களில் 117 பேரது வியர்வை மட்டுமே நாற்றமற்றது. அதை விகிதாசார ரீதியில் நோக்கினால் ஒவ்வொரு 50 பேருக்கு ஒருவரது வியர்வையே உடல் நாற்றம் அற்றதாகும்.
  • நாற்றமான வியர்வை சுரப்பவர்களில் 5 சதவிகிதமானவர்கள் டியோடரன்டஸ்  எதையும் உபயோகிப்பதில்லை.
  • வியர்வையில் நாற்றம் அற்றவர்களில் சுமார் 20 சதவிகிதமானவர்களும் டியோடரன்டஸ்  எதையும் உபயோகிப்பதில்லை. அதற்கான அவசியம் அவர்களுக்கு இல்லாததால் அது ஓரளவு எதிர்பார்க்கக் கூடியதே.
  • ஆனால் வியர்வை நாற்றமற்றவர்களில் சுமார் 78 சதவிகிதமானவர்களும் டியோடரன்டஸ் உபயோகிப்பதாக ஆய்வு கூறியது.
இதை இலகுவான மொழியில் சொன்னால் எப்படி இருக்கும். சமூகத்தில் பெரும்பாலானவர்களின் வியர்வையில் நாற்றமிருக்கிறது. இருந்தபோதும் அவர்களில் சிலர் தமது அக்குள் வியர்வை நாற்றத்தை மறைக்க வாசனைத் திரவியங்களை உபயோகிப்பதில்லை. ஆனால் அக்குள் வியர்வை நாற்றம் அற்றவர்களில் மிகக் குறைந்தவர்களே தமக்கு நாற்றமில்லை என்பதை உணர்ந்து டியோடரன்டஸ் உபயோகிப்பதில்லை.
மந்தை ஆடுகள் போல மனிதர்களும்

ஆனால் மிகப் பெரும்பான்னையான வியர்வை நாற்றமற்றவர்கள் மந்தை ஆடுகளை போல மற்றவர்களை பின்பற்றுகிறார்கள். அதாவது எந்தத் தேவையுமற்று டியோடரன்ஸ்சை உபயோகிக்கிறார்கள் என்பதுதான்.

இவர்கள் இப்படியாக தேவையற்றபோதும் டியோடரன்டஸ் உபயோகிப்பதற்குக் காரணம் என்ன? சமூகப் பழக்க வழக்கங்கள்தான். சமூகத்தில் பலரும் நாகரீகம் எனக் கருதுவதை தாமும் மறுகேள்வியின்றிப் பின்பற்றுகிறார்கள் என நினைக்கிறேன். மற்றொரு காரணம் ஊடகங்களின் விளம்பர உத்திகளைப் புரிந்து கொள்ளாமல் கடைப்பிடிப்பதாகவும் இருக்கலாம்.

இது மேலை நாட்டில் செய்யப்பட்ட (University of Bristol) ஆய்வாகும். 'வடஆசிய நாட்டவர்கள் பெரும்பாலும் டியோடரன்டஸ் உபயோகிப்பதில்லை. அதற்கான தேவை அவர்களுக்கு இல்லை' என அந்த ஆய்வுக்குழுவின் தலைவரான Professor Ian Day கூறினார். தெற்காசிய நாட்டவர்களான எங்களைப் பற்றி அந்த ஆய்வு எதையும் தனியாக எடுத்துரைக்கவில்லை.

காதில் கற்குடுமி

இந்த ஆய்வின்போது வியர்வையுடன் தொடர்பற்ற மற்றொரு விடயமும் தெரிய வந்தது. அது காதுக் குடுமி பற்றியது. பொதுவாகக் காதுக்குடுமி என்பது பசை போன்ற தன்மையானதாகும். ஆனால் மிகச் சிலரில் அது எப்பொழுதும் காய்ந்து இறுகி 'கற்குடுமி' யாகத் தொல்லை கொடுக்கும். அவர்களுக்கும்

நாற்றமற்ற வியர்வையுள்ளவரின் அதே மாற்றமுற்ற ABCC11 மரபணு இருக்கிறதாம்.
ஆம் இயற்கை விசித்திரமானதுதான். கற்குடுமி என்ற தொல்லை ஒருசிலருக்கு கொடுத்துவிட்டு அதனை நட்ட ஈடு கொடுப்பதுபோல நாற்றமற்ற வியர்வையைக் கொடுத்திருக்கிறது.

தனித்துவமான உடல் மணங்கள்

பெரும்பாலானவர்களது உடலில் மணம் இருந்தாலும் எல்லோரது வியர்வையும் ஒரே மணத்தைக் கொடுப்பதில்லை. கைவிரல் அடையாளம்போலத் தனித்துவமானது. சில மணங்கள் மற்றவர்கள் ஆகர்ஸப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. ஆனால் சிலரது மணங்கள் மற்றவர்களை கிட்ட நெருங்க விடாது விலக வைத்துவிடுகின்றன.

அவ்வாறு கடுமையான உடல் நாற்றம் உண்டாவதை bromhidrosis என மருத்துவத்தில் கூறுவர்.

உடல் மணத்தைக் குறைக்க வழிகள்

உடல் மணமானது ஒவ்வொருவருக்கும் தனித்துவமான போதும் அதன்
வீச்சை நாம் சில நடைமுறைகள் மூலமாகச் குறையச் செய்யலாம்.

எடையைக் குறைப்பது முக்கியமானது. அதீத எடையானது உடலின் செயற்பாட்டிற்கு அதிக சிரமத்தைக் கொடுக்கிறது. சிரமப்படும் உடல் அதீதமாக வியர்க்கிறது. அதனால் உடல் மணம் மோசமாகும். எனவே எடையைக் குறைப்பதானது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதுடன் மணத்தையும் குறைக்கிறது.

தினமும் குளியுங்கள். முக்கியமாக வேலை முடிந்த பின்னர் குளிப்பது மிகவும் அவசியம். கிருமி கொல்லி சோப் வகைகளை உபயோகிக்க வேண்டியதில்லை. வழமையான சோப் போதுமானது. Soap free wash
மேலும் நல்லது

ஆடைகளை இயற்கையான துணியிலானதாக தேர்ந்தெடுங்கள். செயற்கை இழையத்திலான ஆடைகள் ஈரலிப்பை உறிஞ்ச முடியாதலால் வியர்வை தேங்கி நிற்கும் அதிக மணத்தைக் கொடுக்கலாம். தினமும் ஆடைகளை மாற்றுங்கள்.
உணவைப் பொறுத்த வரையில் ஆடு மாடு போன்றவற்றின் இறைச்சிகள்
(Red meat) அதிக மணத்தைக் கொடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதே போல இஞ்சி, மிளகு, மீன், போன்றவையும் உடல் மணத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. மதுபானமும் அவ்வாறே.

ஆனால் அதிகளவு நீர் அருந்துவதும், உணவில் அதிகளவில் பழங்களையும் காய்கறிகளையும் சேர்ப்பது நல்லது. தீட்டாத தானியங்களும் நல்லது என்கிறார்கள்.

அவற்றிற்கு மேலாக அவசரம், அந்தரம் பதற்றம், பதகளிப்பு போன்றவை மன அமைதியைக் குலைத்து வியர்வையை அதிகமாக்கி மணத்தை ஏற்படுத்தலாம். முன அமைதிப் பயிற்சிகள், யோகாசனம், தியானம் போன்றவையும் உதவும்.
'நீ என்ன Deodorants பாவிக்கிறாய். நல்ல வாசமாக இருக்கு' எனக் காதலியை முகத்திற்கு நேரே கேட்கும் அளவிற்குக் காலம் மாறிவிட்டது. அவற்றின் பாவனை அந்தளவிற்கு அதிகரித்துவிட்டது.

அழகிற்கு அழகு சேர்ப்பது என்றிருந்தவை அலங்கோலங்களை அலங்கரிப்பாக மாற்றவும் செய்கின்றன. தங்கள் அழகுகளை அலங்கோலமாக மாற்றுகிறோம் என்பது தெரியாமல் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

எங்களை நாங்களே அழகு படுத்தவும், மற்றவர்களைக் கவர்ந்து இழுப்பதற்கும் என பலவிதமான அழகுசாதனப் பொருட்கள் சந்தைகளை நிறைக்கின்றன.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
http://hainallama.blogspot.in/2013/10/blog-post_16.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Thursday, November 27, 2014

விண்டோஸ் கம்ப்யூட்டர் வேகமாக இயங்க டிப்ஸ்…

விண்டோஸ் கம்ப்யூட்டர் வேகமாக இயங்க டிப்ஸ்…!

வாங்கிய புதிதில் விண்டோஸ் சிஸ்டம் வேகமாக இயங்கும். அதுவே நாளாக நாளாக அதனுடைய வேகம் குறையும்.
 இந்த பிரச்னை விண்டோஸ் கணினி பயன்படுத்துபவர்கள் அனைவருமே எதிர்கொள்வதுதான்.
விண்டோஸ் வேகமாக புதிய கணினி போல் இயங்க என்ன செய்ய வேண்டும்?
விண்டோஸ் கம்பயூட்டர் வேகம் குறைய என்ன காரணம்?
1. தேவையற்ற புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து வைத்திருப்பது
2. அடிக்கடி பயன்படுத்தாத புரோகிராம்களை ஸ்டார்ட் அப் பட்டியலில் வைத்திருப்பது.
3. இந்த ஸ்டார்ட் அப் பைல்களை கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும்போது அதுவும் பின்னணியில் இயங்க ஆரம்பிக்கும் என்ற விஷயம் தெரியாமல் இருப்பது.
4. இப்படி எத்தனையோ புரோகிராம்கள் உங்களுக்குத் தெரியாமலே பின்னணியில் இயங்கிக்கொண்டு இருக்கதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவது.
5. இன்டர்நெட்டில் பயன்படுத்தும் புரோகிராம்கள் அனைத்தையும் இன்டால் செய்து செய்து சோதித்துப் பார்ப்பது.
6. சோதனை செய்த சாப்ட்வேர்களை அப்படியே நீக்காமல் விட்டுவிடுவது
7. விண்டோஸ் அப்டேட் செய்யாமல் இருப்பது.
8. டேட்டா கரப்ஷன், ஹார்ட் டிஸ்க் பிராக்மெண்டேஷன்
9. ஹார்ட் டிஸ்கில் போதுமான இடமில்லாமல் இருப்பது
இதைத் தடுப்பது எப்படி? இதற்கானதீர்வுதான் என்ன?
இதோ தீர்வு!
1. விண்டோஸ் விஸ்டா யூசர் என்றால் அதில் உள்ள யூசர் கண்ட்ரோல் என்ற புரோகிராம் தேவையில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும். அதை நிறுத்தலாம்.
2. அடிக்கடி இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் cookies, temporary file களை நீக்க வேண்டும். ஒவ்வொரு இணையதளமும் உங்களுடைய ஹார்ட் டிஸ்கில் தற்காலிக கோப்புகளை உருவாக்கி வைத்திருக்கும். அதை நீக்குங்கள்.
3. விண்டோஸ் இயக்கும் தொடங்குவதற்கான நேரத்தைக் குறைக்க அதனுடைய லோகோ தோன்றுவதை கூட நிறுத்திவிடலாம்.
4. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை நீங்களே சிஸ்டம் பேக்கப் செய்பவர் என்றால் System Restore Point வசதியை முடக்கி வைக்கலாம்.
5. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை வேறொரு டிரைவிற்கு மாற்றி வைக்கலாம்.
6. கம்ப்யூட்டரில் பயன்படுத்தாமல் இருக்கும் fort களின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.
7. பிரவுசிங் செய்யும்போது வெப் ஆக்சிலேட்டர்களை பயன்படுத்தலாம். இவைகள் நீங்கள் பார்க்கவிருக்கும் தளங்களை எடுத்து Cache Memoryயில் வைத்து உங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்தும்.
8. கம்ப்யூட்டர் வாங்கி அதிக நாட்கள் ஆகிவிட்டதென்றால் அதிலுள்ள வேகமாக இயங்கும் பாகங்கள் சோதனை செய்து மாற்றி அமைக்கலாம்.
9. விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்பி இயங்குதள கம்ப்யூட்டிரில் காப்பி செய்வதற்கு Tera Copy என்ற அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம். இதனால் சிஸ்டம் வேகமாக இயங்கும்.
10. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் 512 எம்பிக்கு குறைவாக ராம் மெமரி பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
11. விண்டோஸ் விஸ்டாவில் 8 ஜிபியில் 4 ஜிக்கு குறைவாக ராம் மெமரி பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
மேற்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்திப் பாருங்கள். கண்டிப்பாக உங்களுடைய விண்டோஸ் கம்ப்யூட்டர் முன்பை விட வேகமாக இயங்கும்.
http://kulasaisulthan.wordpress.com


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Tuesday, November 25, 2014

காது மடலில் தோட்டு துவாரப் பிரச்சனைகள்

காது மடலில் தோட்டு துவாரப் பிரச்சனைகள்


'காதும் காதும் வைச்சாப்போலை இரகசியம் பேசு'வதற்கு மட்டும் காதுகள் அவசியம் என்றில்லை. ஒலியை உணரும் திறன் உள்ளது என்பதால்தான் காதுகள் மிக முக்கிய உறுப்பாக இருக்கின்றன.
செவிப்புலன் இல்லாவிட்டால்?

பறவைகளில் கீச்சல்களும் வண்டுகளின் ரீங்காரங்களும், குழந்தைகளின் மழலைகளும் இல்லாத உலகில் வாழ்வது பற்றி என்றாவது சிந்தித்ருக்கிறீர்களா? 'அதிரும் இந்த ஒலிகளிலிருந்து விடுபட்டு நிசப்தமான உலகில் நிம்மதியாக இருக்க வேண்டும்' எனச் சொல்பவனின் காதுகளை ஒரு சில நிமிடங்களுக்கு செவிடாக்கிட்டால் வேண்டாம் இந்தச் சத்தமற்ற உலகு என அலறியடித்து ஓடுவான்.

ஆனால் காதுகள் செவிப்புலனுக்கான உறுப்பு மாத்திரமல்ல. அதற்கு வேறு பல பணிகளும் இருக்கின்றன. அவற்றில் சில அலங்காரத்திற்கானவை. சில அத்தியாவசியமானவை. எமது உடலின் சமநிலையைப்; பேணும் உறுப்பு காதின் உட்புறமாக உள்ளது. ஆனால் இன்று நாம் பேசப்போவது காதின் அலங்காரத்தோடு சம்பந்தப்பட்டது.

காதுமடல்

எமது முகத்தின் இரு பக்கங்களிலும் காது மடல்கள் இருக்கின்றன. குருத்தெலும்புகள் உள்ளே இருக்க அதைச் சுற்றி சிறிது கொழுப்பும், அதை மூடிய மென்மையான சருமமும் காது மடலில் இருக்கின்றன. மனிதக் காதுகளில்தான் எத்தனை அளவு வித்தியாசங்கள், மாறுபாடான நிறங்கள் தோற்றங்கள். இவற்றின் அமைப்புகள் மனிதர்களுக்கு தனித்துவமான அழகு சேர்க்கிறது.

அந்த அழகுக்கு அழகு சேர்க்க அணிகலன்கள் இணைந்து கொள்கின்றன. தோடுகளும் அவற்றை ஒத்த அணிகலங்களும் பெண்களின் தனியுடமையாக இருந்த காலம் மலையேறிப் போய்விட்டது. ஆண்கள் முக்கியமாக இளைஞர்களும் இப்பொழுது அணிந்து கொள்கிறார்கள். இவ்வாறு அணிவதற்கு பொதுவாக காதுமடலில் துளையிட வேண்டியுள்ளது. அதுதான் காது குத்தல்.

காது குத்திய துவாரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலுமாக காது மடலில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக
  1. அரிப்பு, கடி புண்ணாதல் போன்றவை ஓட்டையைச் சுற்றியுள்ள தோலில் ஏற்படுவதுண்டு. தோட்டில் கலந்துள்ள உலோகங்களால் சருமத்தில் அழற்சி ஏற்படும். தங்கம் அல்லாத உலோகங்களிலான அலங்காரத் தோடுகளாலேயே பெரும்பாலும் இது ஏற்படுகிறது. சிலர் காது பகுதிக்கு சோப் போட்டுவிட்டு நன்கு அலசிக் கழுவாதுவிடுவதால் அழற்சி ஏற்படுவதும் உண்டு. அத்தகைய தோடுகளைத் தவிர்பதுடன் மருத்துவர் சிபார்சு செய்யும் கிறீம் வகைகளை பூசுவதன் மூலம் குணமாகும்.

  1. தோடு கழன்று விடுமளவு ஓட்டை பெரிதாகிவிடுவதுண்டு.

     3. காது ஓட்டை அறுந்துவிடுவதுண்டு.

பிரிந்த அல்லது பெரிதான துவாரங்களைச் சரி செய்தல்

பாரமான தோடுகளைத் அணிவதே துவாரம் பெரிதாவதற்கு முக்கிய காரணமாகும். ஒவ்வாமையால் அழற்சி ஏற்பட்டு புண்ணாகிப் பெரிதாவதும் உண்டு. காதணி எங்காவது மாட்டுப்பட்டு இழுபடுவதால் அல்லது குழந்தைகள் காது வளையத்தை விளையாட்டாக இழுப்பதால் பெரிதாவதும் அறுபடுவதும் உண்டு.
பெரிதான துவாரங்களை மறைக்க சிலர் நிறமற்ற ரேப்புகளைக் கொண்டு தற்காலிமாக ஒட்டிவிடுவதுண்டு. இது நல்ல முறையல்ல. சில மணிநேரத்திற்கு அவ்வாறு ஒட்டுவதால் பிரச்சனை ஏற்படாது. நீண்ட நேரம் ஒட்டினால் அவ்விடத்தில் அழற்சி ஏற்பட்டு எக்ஸிமாவாக மாறும்; ஆபத்து உண்டு.

அவ்வாறு இல்லாமல் இலகுவான சத்திரசிகிச்சை மூலம் இவற்றை சரிசெய்து நிரந்தரமாகப் பழைய நிலைக்குக் கொண்டுவரலாம். இதைச் செய்வதற்கு சத்திரசிகிச்சைக் கூடங்களுக்கு செல்ல வேண்டும் என்றில்லை. அதேபோல பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர்களை நாட வேண்டியதும் இல்லை. பெரும்பாலான மருத்துவர்கள் தமது ஆலோசனை அறையோடு இணைந்த சிறு சத்திரசிச்சை அறையில் வைத்தே செய்துவிடுகிறார்கள். மயக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மரக்கச் செய்தல் போதுமானது.

துல்லியமும்
  நயமும் இணைந்த நுணுக்கமான சிகிச்சை இது. மென்மையான உறுப்பு என்பதாலும், காதின் அழகைக் கெடுக்கக் கூடாது என்பதால்தான் மிகுந்த அவதானம் தேவைப்படுகிறது.

அவ்விடத்தை சுத்தம் செய்து, மரக்கச் செய்வதற்கான ஊசியை ஏற்றுவார்கள். அறுந்த அல்லது பிரிந்து துவாரத்தைச் சுற்றியுள்ள இடத்தைக் கீறி, மறுத்
(Scar) திசுக்களை அகற்றிய பின்னர் வெட்டிய அவ்விடத்தைப் பொருத்தி நுண்ணிய நூலால் தையல் இடுவார்கள். ஒரு சில நிமிடங்களுக்குள் முடிந்துவிடும்.
காயத்தை மூடி காதில் பன்டேஸ் போடுவார்கள். சுமார் ஒரு வார காலத்தின் பின்னர் தையலிட்ட நூலையும் பன்டேஜையும் அகற்றிவிடலாம். இடைப்பட்ட காலத்தில் அது நனையாமல் இருப்பது அவசியம். சுமார் ஒரு வார காலத்திற்கு அவ்விடத்தை நனைக்கக் கூடாது என்பதால் முகம் கழுவும்போது பன்டேஜில் நீர் படாமல் அவதானமாக இருக்க வேண்டும். தலைமுடியைக் கழுவி சுத்தமாக்கிய பின்னர் இச் சத்திர சிகிச்சைக்கு செல்வது உசிதமானது. அக் காலப் பகுதியில் தலைக்கு எண்ணெய் தடவாதிருப்பதும் நல்லது.

பன்டேஸ் போட்டு காயத்தை மூடாது திறந்தபடி விட்டபடி அன்ரிபயோடிக் ஓயின்மன்ட் பூசி தையலிட்ட காயத்தை மாற வைக்கும் முறையும் உள்ளது. ஆனால் இங்கு பெரும்பாலானவர்கள் அவ்வாறு செய்வதில்லை.
பொதுவாக முன்னைய துவாரத்தை முழுமையாக மூடி விடுவார்கள். பழைய இடத்தில் சிறிய துவாரத்தை மிச்சம் விடுவதில்லை. சத்திரசிகிச்சை செய்த இடம் முழுமையான உறுதி இல்லாமல் இருப்பதால் அதேயிடத்தில் மீண்டும் தோட்டை அணிந்தால் மடலின் திசுக்கள்; நொய்ந்து மீண்டும் துவாரம் பெரிதாகமல் இருப்பதற்காகவே முழுமையாக மூடுவார்கள்.

புதிதாகத் துவாரம் இடுதல்

சுமார் 1 மாத காலத்தின் பின்னர் புதிய துவாரம் இட வேண்டி நேரும். புதிய துவாரத்தை பழைய இடத்திற்கு அருகில் அவரது விருப்பதிற்கும் தோற்றத்திற்கும் ஏற்ப தேர்ந்தெடுக்கலாம். அவ்விடத்தை மரக்கச் செய்ய மருந்து பூசி செய்யலாம். அல்லது விறைப்பதற்கான ஊசி மருந்தும் போடலாம். தோட்டு நுனியில் துளையிடுவதற்காக அதன் தண்டில் சிறிய கூர் உள்ள பாரமற்ற தோடுகள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தலாம். வேறு ஊசிகளால் துவாரமிட்டு அதில் தோட்டை அணியவும் முடியும்.

ஆயினும் மெல்லிய தண்டுள்ள பாரமற்ற தோடுகள் விரும்பப் படுகின்றன. பாரமற்ற காது வளையங்களும் உசிதமானவை. ஆனால் குழந்தைகள் இருப்பவர்களுக்கு இதனால் சிறிய ஆபத்தும் உண்டு. வளையத்திற்குள் கையை வைத்து குழந்தைகள் விளையாடும்போது இழுபட்டு துவாரம் கிழிவதையும் காது மடல் அறுந்துவிடுவதையும் காண முடிகிறது. இதைத் தடுக்க சிறிய ஸ்டற் போன்ற பாரமற்ற காதணிகளை சிறிது காலத்திற்கு அணிவது உசிதமானது.

குத்திய உடன் குருதி கசியும் காயம் இருக்கும் போதே தோடு அணிவதால் சிலருக்கு சிக்கல் ஏற்படுவதுண்டு. தோட்டில் உள்ள உலோகங்களால் ஒவ்வாமை அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதைத் தடுப்பதற்காக துவாரம் இடப்பட்டதும் உடனடியாகத் தோடு அணிவதை தவிர்த்து துவாரத்தில் சிறிய நைலோன் நூலைச் செலுத்தி முடிந்து வைப்பதும் உண்டு. புண் நன்கு காய்ந்த பின் தோடு அணிந்தால் ஒவ்வாமை ஏற்படாது.

'ஒரு மாதம் காத்திருக்க முடியாது. வாற கிழமை கலியாணம் வருகிறது, சாமத்தியச் சடங்கு ஒன்று இருக்கிறது' என பலர் அவசரப்படுத்துவார்கள். ஸடட் வைத்து அழுத்தக் கூடிய தோடுகளை தற்காலிகமாக அணிய வேண்டியதுதான்.

வேறு பிரச்சனைகள்

காது மடல் பெரிதாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். பிறப்பிலேயே பெரிதாக இருந்து வளரும்போது மேலும் பருத்திருக்கும். சிலருக்கு அதில் சதைகள் மடிப்புற்று அழகைக் கெடுக்கும். சமுத்திரத்தில் மணற் துளியைப் போட்டதுபோல பெரிய மடிந்த காதில் காதணி மறைந்து விடுகிறது என்ற கவலை சிலருக்கு ஏற்படும். அப்படியான காதின் அளவைச் சிறிதாக்கவும் சத்திரசிகிச்சைகள் உள்ளன. ஆனால் அவற்றை அதற்கான சத்திரசிகிச்சை நிபுணர்களே செய்வது நல்லது.

செயற்கைக் காதுகள்

செயற்கைக் கால், செயற்கை மூட்டு எல்லாம் வந்துவிட்டன. செயற்கைக் காதும் வருவதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை. இவை வெறுமனே ரோபோவின் உலேகக் காதுகள் போன்றவை அல்ல. இரத்தமும் சதையும் குருத்தெலும்புகளும் கூடிய காதுகள். வளைந்து மடியக் கூடிய உயிரோட்டம் உள்ள காதுகள். Harvard Medical School in Boston, and the Kensey Nash Corporation in Philadelphia இணைந்து எலிகளுக்கான காதுகளை தயாரித்துள்ளார்கள்.

இத் தொழில் நுட்பம் வளர்ச்சியும்போது, விபத்துகளில் காதுகளை இழந்தவர்கள் இதன் மூலம் எதிர்காலத்தில் பயன்பெறுவார்கள் என நம்பலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
http://hainallama.blogspot.in/2013/10/blog-post_8.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Sunday, November 23, 2014

உயில் எழுதுவது எப்படி?

ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்).

உயில் என்பதே உறவுகளைச்சிதற விடாமல் பார்த்துக் கொள்ளும் கவசம்தான்.அதைச் சரியாகப் பயன் படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை.

உயில் என்பது சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும் ஆவணம் அல்ல. உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம், பிறரின் மேல் உள்ள அன்பு போன்ற உள்ளுணர்வுகளையும் விளக்கும் உணர்வுப்பூர்வமான சாதனம் அது!

இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் எதிர்காலத்தில் யாரும் அதற்காகச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. எனவே, முறையாக உயில் எழுதி வையுங்கள்!

உயில் கட்டாயம் என்ன ?

உயில் எழுதியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், எழுதாவிட்டால் சிக்கல் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்ப-தால் எழுதிவிடுவது நல்லது.

''தன்னுடைய மரணத்துக்குப் பிறகு சொத்தின் உரிமை குறித்து பிரச்னை ஏற்படலாம் என்று குடும்பத்தின் சூழ்நிலையை நன்கு அறிந்த குடும்பத் தலைவர் கருதினால், சிறு சொத்துகளுக்குக் கூட உயில் எழுதலாம். ஆனால், பரம்பரையாக அவருக்குக் கிடைத்த சொத்துகள் குறித்து உயில் எழுத முடியாது. பாட்டன் சொத்து பேரனுக்கு என்ற அடிப்படையில் அது குடும்ப வாரிசுகளுக்குத்தான் போய்ச் சேரும்'' என்றார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரிஷிகேஷ் ராஜா.

உயில் எப்படி எழுதுவது?

''உயில் எழுதுவது மிகவும் எளிமையான நடைமுறைதான். முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. சாதாரண வெள்ளை பேப்பரில்கூட எழுதலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். கையால் எழுதுவது நல்லது. வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுதவேண்டும் என்ற அவசியம் இல்லை.

உயில் எழுதும்போது அடிப்படையாக சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதன் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலில் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். சாட்சிகள் வாரிசாக இருக்கக் கூடாது. அவர்களுடைய நிரந்தர முகவரியைக் குறிப்பிட வேண்டும்.

உயில் எழுதும்போது, சொத்துகள் பற்றிய விவரங்களை மிகத் தெளிவாக எழுத வேண்டும். அதில், முக்கியமாக சொத்தின் வாரிசுகள் யார் என்பதை விவரமாகவும், அவர்கள் ஏன் வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள் என்கிற காரணத்தையும் விரிவாக எழுத வேண்டும்''

உதாரணமாக

எனது மகள் பத்மாவுக்குத் தேவையான அனைத்தையும், அவளது கல்யாணத்தின் போதே நகை, சீர்வரிசை, பணம் போன்றவற்றின் மூலம் கொடுத்து விட்டதால், அவளுக்கு நான் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. என் மூத்த மகன் ரவியும் அவனது மனைவியும் பல ஆண்டுகளாக என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை. அவனை விட்டுப் பிரிந்து எனது இளைய மகன் ரமேஷ் வீட்டுக்குச் சென்றேன்.

கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டான். எனவே, ரமேஷை என் வாரிசாக அறிவிக்கிறேன். நான் இந்தியன் வங்கியில் வாங்கிய 2 லட்ச ரூபாய் கடன் இன்னமும் முழுவதும் திருப்பிக் கட்டவில்லை. நான் சொந்தமாகச் சம்பாதித்து அண்ணா நகரில் கட்டிய வீட்டை விற்று, வங்கிக் கடனை அடைத்துவிட்டு மீதம் இருப்பவற்றை ரமேஷிடம் கொடுக்க வேண்டும். மேற்கூறப்பட்ட விஷயங்கள் என் குடும்ப நண்பர் ராமமூர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்' என்கிற ரீதியில் தெளிவாக எழுதலாம்.

''சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும்போது, அவை எங்கு உள்ளன, எவ்வளவு பரப்பு என்பதையும் விரிவாக எழுத வேண்டும். வீடு, மனை, தோட்டம், வங்கிச் சேமிப்பு, பங்கு பத்திரங்கள் போன்ற தகவல்-களைத் தெரிவிக்கும்போது, அவற்றின் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் பாதுகாப்பாக உள்ள இடத்தையும் குறிப்பிட வேண்டும்'' என்றும் சொன்னார்.

உயிலில் தோன்றக் கூடிய சிக்கல்கள் பற்றிப் பேசிய சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் வெங்கடேஷ், ''உயிலைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. இருந்தாலும், இரண்டு சாட்சிகளோடு, சார் பதிவாளர் முன்னிலையில் உயிலைப் பதிவு செய்வதால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். பதிவுக்கான மொத்தச் செலவு 600 ரூபாய்தான்!'' என்றார்.

உயில் அமல்படுத்து-நராக ஒருவரை நியமிப்-பது அவசி-யம். உயிலில் குறிப்பிடப்-பட்டுள்ள விஷயங்கள் சரியாக நடைபெறுகிறதா என்பதை மேற்பார்-வையிடும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. குடும்ப நண்பர்கள், வக்கீல்கள் போன்றவர்-களை உயில் அமல்படுத்-துபவராக நியமிக்கலாம். அவரே சொத்தைப் பிரித்து கொடுப்பதற்கும், கடன்கள் இருந்தால் அதனை அடைப்பதற்கும் பொறுப்பு ஏற்கிறார்.

நம் நாட்டில் உயிலில் இரு முக்கியப் பிரிவுகள் உண்டு. ஒன்று, இந்து சட்டத்துக்கு உட்பட்ட உயில். மற்றொன்று, முஸ்லிம் சட்டத்துக்கு உட்பட்ட உயில். முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஒரு முஸ்லிம், தன் உயிலில் தான் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் 2/3 பகுதியைக் கட்டாயமாக தனது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும். மீதம் உள்ள 1/3 பகுதியை மட்டுமே தன் விருப்பப்படி பிறருக்கு உரிமை வழங்கி உயில் எழுத முடியும்.
உயில் மூலம் கிடைக்கும் சொத்துக்கு மூலதன ஆதாய வரி கிடையாது.

உயில்கள் பலவிதம்!

குறிப்பிட்ட விஷயங்களை நிறைவேற்றினால் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட உயில், கணவன், மனைவியோ அல்லது வேறு இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ எழுதும் கூட்டு உயில், போர்க்களத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கான சலுகைக்கு உட்பட்ட உயில் போன்ற பலவகையான உயில்கள் உள்ளன. இதில், சலுகை உயிலுக்கு, சாட்சியாக ஒருவர் கையெழுத்துப் போட்டால் போதும்.

உயில் எப்போது செல்லாமல் போகும்?

குடிபோதையில் அல்லது மனநிலை சரியில்லாத நிலையில் எழுதிய உயில் சட்டப்படி செல்லுபடி ஆகாது. மேலும் மைனர்கள் எழுதும் உயிலுக்கும் மதிப்பு இல்லை.

சில டெக்னிக்கலான வார்த்தைகள்!

Will உயில் (விருப்ப ஆவணம்)
Testator உயில் எழுதியவர்
Executor உயில் அமல்படுத்துநர்
Codicil இணைப்புத் தாள்கள்
Attested சரிபார்க்கப்பட்டது.
Probate
நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி, உயிலை செல்லுபடியாக்கல்.
Beneficiary, Legatee வாரிசு
Intestate உயில் எழுதாமல் இறந்து போனவர்
Succession Certificate வாரிசு சான்றிதழ்
Hindu Succession Act இந்து வாரிசு உரிமைச் சட்டம்
Muslim personal Act முஸ்லிம் தனிநபர் சட்டம்
Guardian முஸ்லிம் தனிநபர் சட்டம்
Witness சாட்சி

'ஆன் லைன்' உயில்

உயில் எழுதுவதன் முக்கியத்துவம் வெளிநாடுகளில் மிக அதிகமாகப் பரவியுள்ளது. தற்போது இன்டர்நெட்டின் மூலமாக உயில் எழுதும் முறைகூட வந்துவிட்டது. ஒரு வழக்கறிஞர், உயில் எழுத விரும்புவரிடம் இன்டர்நெட் மூலம் கலந்துரையாடல் நடத்துவார். அதன்பின்னர், உயிலை எழுதி விடலாம். 24 மணி நேரத்துக்குள் அந்த உயில் பதிவு செய்யப்பட்டுவிடும். இந்தியாவில் இந்த வசதி இன்னும் வரவில்லை.

ஒருவர் பல உயில்கள் எழுதலாம். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட உயில்கள் ஒரே சொத்துக்கு இருக்குமாயின், எந்த உயில் கடைசியாக எழுதியதோ அதுவே செல்லும். தேதி, நேரம் படி பார்ப்பார்கள்.

உயில்களை வருமான வரியை மிச்சப் படுத்தும் ஒரு சாதனமாகவும் கையாளலாம்!

ஒருவர் பல உயில்கள் எழுதலாம். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட உயில்கள் ஒரே சொத்துக்கு இருக்குமாயின், எந்த உயில் கடைசியாக எழுதியதோ அதுவே செல்லும். தேதி, நேரம் படி பார்ப்பார்கள்.

ஓருவர் தான் எழுதிய உயிலை எப்போது வேண்டுமானாலும் மாற்றி எழுத முடியும்.
-நன்றி: ராஜேஷ் ரெட்டி

http://kulasaisulthan.wordpress.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெளிநாட்டில் வேலை… ஏமாறாமல் இருக்க!!!

வெளிநாட்டில் வேலையா? எங்கே, எங்கே?' என்று கேட்டு ஓடியது அந்தக் காலம். வெளிநாட்டில் வேலை என்றாலே சந்தேகத்தோடு ஒதுங்குவது இந்தக் காலம். காரணம், வெளிநாட்டு வேலை என்று நம்பிப் போய், அடியும், மிதியும் பட்டு ஊருக்குத் திரும்புகிற அனுபவம் பலருக்கு. ஆனாலும், முறையான வழியில் உஷாராகப் போகிறவர்கள் கைநிறைய பணத்தோடு திரும்பவே செய்கிறார்கள்.

வெளிநாட்டு வேலைக்குத் தங்களை எப்படி தயார்படுத்திக்கொள்வது? யாரிடம் சென்று சரியான தகவல் பெறுவது? உண்மையான முகவர் என்பவர் யார்? அவரை எப்படி நாம் அடையாளம் காண்பது? என்கிற கேள்விகளுக்கு பதில் தேடி அலைந்தபோதுதான் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் கே.இளங்கோவனைச் சந்தித்தோம். அவரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டோம். தெளிவான விளக்கத்தைத் தந்தார் அவர்.

"தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் கடந்த 33 ஆண்டுகளாக, வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு உதவி செய்து வருகிறது. தொழிலாளர் அமைச்சகத்தின் நம்பகமான சான்றிதழுடன் இந்நிறுவனம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு செல்வதற்கான முக்கிய நோக்கம், அதிக சம்பளம் கிடைக்கும்; புது கலாசார சூழலில் வேலை செய்ய முடியும் என்பதால்தான். அவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யும் நாடுகள் சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா போன்றவை. இங்கு வேலை வாய்ப்புகள் அதிகம் என்பது மட்டும் காரணம் கிடையாது; அங்கு செல்வதற்கான விதிமுறைகளும் குறைவு" என்றவர், ஏஜென்ட்கள் மூலம் வெளிநாடுகளில் வேலைக்குச் சேரும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை அடுக்கினார்.

சரியான முகவரா?

"வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முடிவு செய்தபின்பு முதல் நடவடிக்கையாக, சரியான முகவரைத் தேர்வு செய்ய வேண்டும். சரியான முகவராக இருந்தால் அவரிடம் கண்டிப்பாக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் எம்.ஓ.ஐ.ஏ. (Ministry Of Overseas Indian Affairs) தரும் அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் லைசென்ஸ் நம்பர் இருக்கும். இந்த நிறுவனத்திடம் அங்கீகாரச் சான்றிதழைப் பெற்றால் மட்டுமே அயல்நாட்டுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் முகவராகப் பணியாற்ற முடியும்.

சரியான முகவர் யார் என்கிற விவரங்கள் www.poechennai.in என்ற வலைதளத்தில் நமது இந்திய அரசால் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் விவரங்கள், அவர்களின் பணி அனுபவம், முகவர்களின் தரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். சரியானவர்கள் யார் என்ற விவரம் இருப்பதுபோலவே கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் முகவர்கள் யார் என்பதையும் அதில் குறிப்பிட்டிருப்பார்கள். இதை முன்னதாகவே பார்ப்பதன் மூலம் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் முகவர்களை அணுகாமல் தப்பித்துக்கொள்ளலாம்.

சில முகவர்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் வேலை வாங்கித் தருபவர்களாக இருப்பார்கள். எந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறோமோ, அந்த நாட்டு முகவர்களை அணுகும்போது வேலை இன்னும் எளிமையானதாக முடியும். இப்போதெல்லாம் முகவர்கள் அவர்களின் விவரங்களுடன், எம்.ஓ.ஐ.இ.-ன் அங்கீகார எண்களுடன் செய்தித்தாள்களில் விளம்பரங்களை தருகிறார்கள். இதைக் கவனிப்பதன் மூலம் சரியான முகவர்களை எளிமையாக நம்மால் அடையாளம் காணமுடியும்.

நேர்முகத் தேர்வின்போது..!

நேர்முகத் தேர்வின்போது எலெக்ட்ரீஷியன், பிளம்பர் என ஒவ்வொரு வேலைக்கும் டிரேடு டெஸ்ட் இருக்கும். ஒவ்வொரு நாட்டிற்கும் சொந்தமான அல்லது தனியார் டிரேடு டெஸ்ட் சென்டர்கள் இருக்கின்றன. அங்கு வேலைக்குத் தேர்ந்தெடுப்பவர்களின் வேலை தரத்தைப் பரிசோதனை செய்வதற்காக டெஸ்ட்கள் நடத்தப்படும். நமது வளாகத்தில் அயல்நாட்டு வேலை வாய்ப்புக்காக நேர்முகத் தேர்வை நடத்தும்போது இங்கேயே டிரேடு டெஸ்ட்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

இந்த நேர்முகத் தேர்வின்போது வேலைக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயங்கள் வெளிநாட்டில் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு, பணி நேரம், வாரத்தில் எத்தனை நாட்கள் வேலை, அதிக நேரம் வேலை செய்தால் கூடுதல் சம்பளம் தரப்படுமா, தங்குமிடம் மற்றும் உணவு இலவசமா, மெடிக்கல் இன்ஷூரன்ஸ் வசதியை நிறுவனம் செய்து தருமா, விமானப் போக்குவரத்திற்கான செலவை நிறுவனம் ஏற்றுக்கொள்கிறதா என்பனவற்றை நன்கு கவனித்த பின்னரே ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்து போட வேண்டும். ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்திட்ட பிறகு அந்தப் படிவத்தின் நகல் ஒன்றை வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.

இ.சி.ஆர் (Emigration clearance required)

வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருந்தால் அவருக்கு தரப்படும் மதிப்பெண் சான்றிதழிலேயே இமிகிரேஷன் க்ளியரன்ஸ் சான்று தரப்பட்டுவிடும். ஆனால், பத்தாம் வகுப்பிற்கு கீழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பி.ஓ.இ. (Protecter of Emigration) அமைப்பிடமிருந்து கண்டிப்பாக இமிகிரேஷன் க்ளியரன்ஸ் சான்று வாங்கி முகவர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும். அயல்நாட்டிற்கு செல்லும் சான்றுகள் அத்தனையையும் முகவர்களிடம் ஒப்படைத்துவிட்டால் இந்த இமிகிரேஷன் க்ளியரன்ஸ் சான்றையும் அவர்களே வாங்கி தந்துவிடுவார்கள். இந்த இ.சி.ஆர். என்பது 18 நாடுகளுக்கு அடிப்படையாக இருக்கிறது.

சமர்ப்பிக்க வேண்டியவை!

பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் முன்னனுபவ சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவேண்டும். அதுதவிர, தங்களது உடல் முழுவதையும் பரிசோதனை செய்து குறை எதுவும் இல்லாதபடி மருத்துவச் சான்றிதழ் ஒன்றையும் முகவரிடம் சமர்ப்பிக்கவேண்டும். இந்த நடைமுறை விஷயங்கள் முடிவுக்கு வந்ததும் விசா எடுப்பதற்கான விஷயங்கள் ஆயத்தமாகிவிடும்.

வெளிநாடுகளில் வேலைக்குச் செல்பவர்கள் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம், எம்ப்ளாய்மென்ட் விசாவில்தான் செல்ல வேண்டும். டூர் விசாவில் சென்றுவிட்டு அங்கு உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்தால் பிரச்னைதான் ஏற்படும். எம்ப்ளாய்மென்ட் விசாவை கையில் வாங்கியதும், அதில் வேலை செய்வதற்கான விவரங்கள் போடப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்கவேண்டும்" என்று உஷார் டிப்ஸ்களைத் தந்தார் அவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தாங்கள் பணிக்குச் செல்ல விரும்பும் துறைகளில் இரண்டு வருட அனுபவம் இருப்பது நல்லது. 18 வயதைப் பூர்த்தி செய்தவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இமிக்ரேஷன் தொல்லை இருக்காது. விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்களின் கட்டணம் 450 ரூபாயில் இருந்து 1,015 ரூபாய் வரை (இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை) வசூலிக்கப்படுகின்றன. இவற்றோடு சேவை வரியும் வசூலிக்கப்படும்.

சேவைக் கட்டணம்!

ஒன்றரை மாதச் சம்பளம் அல்லது அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கும் சேவை கட்டணம் இதில் எது குறைவோ அந்த தொகையை முகவர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்பவர் கட்டணமாக கொடுத்தால் போதுமானது.

ஆக, இந்த விஷயங்களை எல்லாம் கவனித்து, வெளிநாட்டில் வேலைக்குப் போனால், எந்த வகையிலும் ஏமாறாமல் பொன்னும் பொருளும் சேர்த்துகொண்டு தாயகம் திரும்பலாமே!

செய்யவேண்டியவையும்செய்யக் கூடாதவையும்!

அரசு அங்கீகாரம் பெற்ற அயல்நாட்டு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் முகவர்களை மட்டுமே அணுகவேண்டும்.

அயல்நாடு வேலை வாய்ப்பு குறித்த எந்தவொரு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, பண பரிவர்த்தனைகளாக இருந்தாலும் சரி, அதற்கான ரசீதுகளை உடனுக்குடன் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.

மெயின் முகவர்களின் உதவியுடன்தான் அயல்நாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும். எந்தவொரு பரிவர்த்தனைகளாக இருந்தாலும் அது இவர்களின் மூலம் நடைபெறுமாறு பார்த்துக்கொள்ளலாம். துணை முகவர்களை நம்பி எந்தவொரு டாக்குமென்ட்களையும், பண பரிவர்த்தனைகளையும் செய்யக் கூடாது. அப்படி செய்வதன் மூலம் கூடுதல் செலவு ஆவதுடன் வேலை கிடைக்க காலதாமதம் ஆகலாம்.

வெளிநாட்டிற்குச் சென்ற பின்னரோ அல்லது வேலை தேடும் சமயங்களிலோ பாஸ்போர்ட் புதுப்பிக்கும் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.

வெளிநாட்டில் எந்த நிறுவனத்தாருக்காக நீங்கள் வேலை பார்க்கச் செல்கிறீர்களோ, அந்த நிறுவனத்தைத் தவிர்த்து கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்பதற்காக மற்ற நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்க்கக் கூடாது.

வேலை ஒப்பந்த காலத்திற்குள் ஏதேனும் பிரச்னை என்றால் அந்த நாட்டில் இருக்கும் இந்தியத் தூதரகத்திடமோ அல்லது எந்த முகவரின் உதவியுடன் வெளிநாட்டிற்கு சென்றீர்களோ அவர்களிடமோ தெரியப்படுத்தலாம்.

வெளிநாடுகளில் வேலை செய்யும் காலத்தில் எங்கு வெளியில் செல்வதாக இருந்தாலும் ஐ.டி. கார்டுடன்தான் செல்லவேண்டும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு மாதிரியான சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அதன்படி நடக்கவேண்டுமே தவிர்த்து, முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

எந்த நாட்டில் வேலை செய்து வருகிறீர்களோ, அந்த நாட்டின் வேலைக்கான சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.

உதவிக்கு அணுகுங்கள் !

வெளிநாட்டு வேலை தொடர்பான விளக்கங்களைப் பெற தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: Overseas Manpower Corporation Limited, Government Industrial Training Institute Campus for Women, No.42, Alandur Road, Thiru-vi-ka Industrial Estate, Guindy, Chennai-32.

மேலும், விண்ணப்பங்களை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு 2250 2267, 2250 1538 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்தைக் காணலாம்.

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உதவிக்கு 1800 11 3090, (+91) 011 40 503090 என்ற தொலைபேசி எண்களை அழைத்துக் கூடுதல் தகவல்களைப் பெறலாம். தாங்கள் அணுகும் ஏஜென்சி நிறுவனம் உண்மையானதா என்று அறிய மேலே சொன்னபடி

www.moia.gov.in என்ற இணையதளத்தை காணலாம். மேலும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் செயல்திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தெரிந்துகொள்ள

www.owrc.in என்ற இணையதளத்தை காணலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தைக் காணுங்கள்.

via கல்வி வழிகாட்டி

http://kulasaisulthan.wordpress.com



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வீடு கட்ட வாங்க போகிறீர்களா….?

நடுத்தர மக்களின் வாழ்நாள் கனவு சொந்தமாக ஒரு வீடு கட்டுவது. இந்த கனவை நனவாக்குவதில் சிக்கலாக இருப்பது இரண்டு விஷயங்கள்தான். சிக்கல் நம்பர் ஒன், எகிறிக் கிடக்கும் ரியல் எஸ்டேட் விலை. குறைந்தபட்சம் ஆறேழு வருடங்களுக்கு முன்பு நிலம் வாங்கியிருந்தீர்கள் என்றால் நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்தான். நீங்கள் வாங்கிய நிலத்தின் மதிப்பு இன்றைக்கு பல மடங்கு பெருகி இருப்பதைப் பார்த்து நீங்களே உங்களை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், அன்றைக்கு வாங்கத் தவறியவர்கள் இன்று வாங்க நினைத்தால் அதைவிட பல மடங்கு பணம் கையில் இருக்க வேண்டும்.

சிக்கல் நம்பர் டூ, மணல், ஜல்லி, சிமென்ட் போன்ற கட்டடம் கட்டத் தேவையான பொருட்களின் விலை வானத்துக்கும் பூமிக்கும் தாவிக் கொண்டிருப்பது. மணல் விலை ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. சென்னையில் இருக்கும் விலை வேறு; நெல்லையில் இருக்கும் விலை வேறு. செங்கல்லின் கதையும் அதேதான். இவை தவிர, கட்டடம் கட்டுபவர்களுக்கான கூலியும் பாரதூரமாக மாறுகிறது. இப்படி சந்துக்குச் சந்து கட்டடம் கட்டுவது தொடர்பான அத்தனை விஷயங்களும் வெவ்வேறாக இருக்க, புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் ஏகத்துக்கும் குழம்பித்தான் போவார்கள்.

"என் பக்கத்து வீட்டுக்காரர் கட்டுற அதே அளவுக்குத்தான் நானும் வீடு கட்டுறேன். ஆனா, என்னைவிட கம்மியாத்தான் அவரு செலவு பண்றாரு. நான்தான் ஏமாந்துட்டேன்" என்று புலம்புவர்கள் ஒருபக்கம்

"எட்டு லட்ச ரூபாய்க்குள்ள வீடு கட்டி முடிச்சுடலாம்னு நெனைச்சு ஆரம்பிச்சேன்இன்னைக்கு பன்னிரண்டு லட்சத்தைத் தாண்டிடுச்சு" என்று புலம்புவர்கள் இன்னொரு பக்கம்ஆக மொத்தத்தில், இன்றைக்கு கரெக்ட்-ஆன செலவில் வீடு கட்டுவது எப்படி என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. உள்ளபடி ஆயிரம் சதுர அடி வீடு கட்ட எவ்வளவு பணம் செலவாகும்? கான்ட்ராக்ட் முறையில் வீடு கட்டப் போவதாக இருந்தால் எவ்வளவு தரலாம்? ஃபிளாட்-ஆக இருக்கும் பட்சத்தில் எவ்வளவு விலை கொடுத்து வாங்கலாம்? என்பதை யாராவது எடுத்துச் சொன்னால் கோடி புண்ணியமாகப் போகும் என்கிறீர்களா?

இதோ உங்களுக்காகவே சரியான செலவில் வீடு கட்ட சூப்பர் மாடல் பட்ஜெட்ஒவ்வொரு இடத்தைப் பொறுத்து ஒவ்வொரு விலை இருந்தாலும் இந்த பட்ஜெட்டை வைத்துக்கொண்டு ஓரளவு சரியான விலைதான் நாம் கொடுக்கிறோமா என்பதை செக் செய்து கொள்ளலாம்.

வீடோ, ஃபிளாட்டோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், பில்டர் அல்லது புரமோட்டர்கள் பல்வேறு டெக்னிக்கல் வார்த்தைகளைச் சொல்லி நம்மை குழப்ப வாய்ப்பிருப்பதால், முதலில் சில விஷயங்கள் பற்றி நமக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்வோம்.

கார்பெட் ஏரியா

நான்கு சுவர்களுக்கு இடைப்பட்ட அளவு. அதாவது, வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக்குள் கார்பெட் விரித்தால் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்ளுமோ அந்த அளவுதான் கார்பெட் ஏரியா.

பிளின்த் ஏரியா

கார்பெட் ஏரியாவுடன் சுவர்களின் தடிமன் சேர்ந்தது.

சூப்பர் பில்ட் அப் ஏரியா

பிளின்த் ஏரியா அளவில் 15% முதல் 20% அதிகரிப்பது சூப்பர் பில்ட் அப் ஏரியா. இந்த பரப்புக்குதான் விலை சொல்வார்கள். பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதை, மாடிப் படிக்கட்டு, லிஃப்ட் அறை, மோட்டார் அறை, உடற்பயிற்சி கூடம் போன்றவற்றின் அளவுகள் பிளின்த் ஏரியாவுடன் சேர்க்கப்பட்டு, சூப்பர் பில்ட்அப் ஏரியா கணக்கிடப்படும்.

யூ.டி.எஸ்.

அடுக்குமாடிக் குடியிருப்பின் சதுர அடி விகிதாசாரத்துக்கு ஏற்ப, அந்த மனையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதுர அடி மனை சொந்தம் என்பதை குறிப்பது. 'பிரிக்கப்படாத மனைப் பரப்பு' (Undivided Share) என்று கிரய பத்திரத்தில் இது குறிப்பிடப்பட்டிருக்கும்.

 மேற்சொன்ன இந்த நான்கு விஷயங்களையும் நீங்கள் புரிந்து கொண்டுவிட்டால், உங்களுக்குத் தேவையான அல்லது உங்களுக்கு கிடைக்கப் போகும் கட்டடத்தின் அளவு தெரிந்துவிடும். இனி, இந்த கட்டடம் கட்ட என்னென்ன பொருட்கள் தேவைப்படும்? அதன் விலை என்ன? என்பதைப் பார்ப்போம்

என்ன செலவாகும்?

ஆயிரம் சதுர அடி பிளின்த் ஏரியா கட்டடம் கட்ட சுமார் 15 லட்ச ரூபாய் செலவாகும்.

சொல்லப்பட்ட கணக்கி லிருந்து விலைவாசி உயர்வைப் பொறுத்து மணல், செங்கல், சிமென்ட், கம்பி மற்றும் இதர பொருட்களின் விலை 2% முதல் 3% வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த கணக்குபடி ஒரு சதுர அடி கட்ட சுமார் 1,500 ரூபாய் ஆகிறது. இது பில்டர்கள் கட்டுவதற்கான செலவு. நீங்களே முன்நின்று கட்டும்போது 1,400 ரூபாயிலிருந்து 1,350 ரூபாய் வரை குறைய வாய்ப்பிருக்கிறது. முதல் தரமான பொருட்களை வாங்குவதாக நினைத்தே இந்த கணக்கு போடப்பட்டுள்ளது. சென்னையைவிட மதுரை, சேலம், திருநெல்வேலியில் மணல், செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை குறைவு என்பதால், செலவு இன்னும்கூட குறைய வாய்ப்பிருக்கிறது.

நாம் வாங்கும் ஒரு பிளாட்டின் விலை ஓரளவு நியாயமானதாக இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது என்ற விஷயத்துக்கு இப்போது வருவோம்உதாரணமாக நீங்கள் சென்னை தாம்பரத்திற்கு அருகில் ஒரு ஃபிளாட்டை வாங்குவதாக முடிவு செய்கிறீர்கள். அந்த ஃபிளாட்டின் விலை ஒரு சதுர அடி சுமார் 3,000 ரூபாய் என்று பில்டர் சொல்கிறார்நீங்கள் வாங்கப்போகிற ஃபிளாட்டின் சூப்பர் பில்ட் அப் ஏரியா 952 ச.அடி. என்றும் உங்களுடைய யூ.டி.எஸ். 555 ச.அடி. என்றும் அவர் சொல்கிறார்.

ஆனால், நம் கணக்குப்படி எவ்வளவு செலவு ஆகும் ஃபிளாட்டின் விலை எவ்வளவு வரும் என்று பார்க்கலாம்

அங்கு மனை விலை ஒரு சதுர அடி 1,400 ரூபாய் என்று விசாரித்தபோது நமக்குத் தெரிய வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்அடுத்து கட்டுமானச் செலவு எவ்வளவு ஆகும் என்று பார்க்கலாம்நாம் முன்பு கணக்கிட்டபடி ஒரு சதுர அடி 1,400 ரூபாய் எனும்பட்சத்தில் 952 ச.அடிக்கான கட்டுமானச் செலவு 13,32,800 ரூபாய் வரும். அதேபோல் 555 சதுர அடி மனைக்கான விலை (சதுர அடி விலை 1,400 ரூபாய்) 7,77,000 ரூபாய் ஆகும். ஆக, மொத்தம் 21,09,800 ரூபாய் ஆகும்.

இந்த கணக்கின்படி பார்த்தால் ஒரு ச.அடிக்கான விலை சுமார் 2,220 ரூபாய் வருகிறது. இதற்கு மேல் பில்டர் சொல்லும் விலை அவரது லாபமாகும். ஒருவேளை அவர் 20% லாபம் வைத்தால் சதுர அடி 2,660 ரூபாய் என்று வைத்து விற்பார். ஒருவேளை அவர் பத்திரிகை மற்றும் டி.வி-களுக்கு விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்து, மேலும் புராஜெக்ட்டுக்கு கடனும் வாங்கி இருந்தால், கடனுக்கான வட்டி என எல்லாவற்றையும் சேர்ப்பார். அந்த வகையில் அவர் சுமார் 2,900-3,000 ரூபாய் வரை சொல்ல வாய்ப்பிருக்கிறது.

கவனிக்க வேண்டியவை..!

கட்டிய வீட்டை வாங்கும்போது!

* தனி வீடுகளைப் பொறுத்தவரையில் பிளின்த் ஏரியா 1,000 சதுர அடி என்றால் கார்பெட் ஏரியா 750-800 சதுர அடி வரை இருக்கும். ஃபிளாட் என்று வரும்போது, 600-650 சதுர அடிதான் இருக்கும். பொது இடங்கள், பார்க்கிங் என பொதுவான வசதிகள் அதிகமாக அதிகமாக, கார்பெட் ஏரியா என்பது குறைந்து கொண்டே வரும்.

* எப்போது ஃபிளாட் வாங்கினாலும் கார்பெட் ஏரியாவை அளந்து உறுதி செய்யுங்கள். கட்டி முடித்த ஃபிளாட் என்றால் சுவர்களுக்கு இடையிலான தரையின் அளவை துல்லியமாகக் கணக்கிடுங்கள். பில்டர் சொல்லும் பிளின்த் ஏரியாவிலிருந்து சூப்பர் பில்ட் அப் ஏரியா 15 முதல் 20 சதவிகிதம் அதிகமாக இருந்தால் அந்த பில்டர் நியாயமானவர். அதற்கு மேல் இருந்தால் எதற்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கேளுங்கள்.

ஏனென்றால், நீங்கள் விற்கும்போது இந்தப் பிரச்னை எழும். மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள், நீச்சல் குளம், தோட்டம், வாக்கிங் செல்லும் நடைபாதை போன்றவை விடப்பட்டிருக்கும் புராஜெக்ட்களில் பிளின்த் ஏரியா, சூப்பர் பில்ட் அப் ஏரியா 30-35 சதவிகிதமாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

* அடுக்குமாடி குடியிருப்பு களில்தான் விதிமுறை மீறல்கள் அதிகம் நடைபெறுகிறது. அதனால் அப்ரூவல் பிளான்படி விதிமுறைகள் மீறாமல் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்ப்பது அவசியம். வீட்டுக் கடன் வாங்காத பட்சத்தில் முறைப்படி அப்ரூவல் வாங்காமல் கட்டப்பட்ட வீடுகளை குறைந்த விலைக்கு தள்ளிவிடுவது நடக்கிறது. இதுபோன்ற வீடுகளை வாங்கினால் பிற்காலத்தில் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது. அவசரத்துக்கு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க முடியாது.

* காமன் ஏரியா அனைவரும் பயன்படுத்தும்படி இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். சில பில்டர்கள்/புரமோட்டர்கள், காமன் ஏரியா என்று ஒரு பகுதியைக் காட்டி விட்டு, அதில் அறை அல்லது கடை கட்டி விற்று விடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

* சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, கார் நிறுத்தும் இடம் சூப்பர் பில்ட் அப் ஏரியாவில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில் கார் நிறுத்தும் இடத்துக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை. திறந்தவெளி கார் நிறுத்தும் வசதி என்கிறபோது நயா பைசா கூட கொடுக்கத் தேவையில்லை.

* தனி வீடு என்கிறபோது அஸ்திவாரம் எத்தனை அடி என்பதை கவனியுங்கள். குறைந்தது நான்கு அடி போடுவது கட்டடத்துக்கு நல்லது. சில பில்டர்கள் இரண்டு அடிதான் தோண்டுவார்கள் என்பதால் உஷாராக இருப்பது நல்லது. இதேபோல், வீட்டில் அறையின் உயரம் குறைந்தது 10 அடி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சில பில்டர்கள் ச.அடி விலையைக் குறைத்துச் சொல்லிவிட்டு, வீட்டின் உயரத்தை 9.5 அடி அல்லது 9 அடியாக குறைக்கவும் வாய்ப்புண்டு!

* வீட்டைச் சுற்றி குறைந்தது 5 அடி விட்டிருக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள். பல பில்டர்கள் 2 அடிதான் விடுகிறார்கள். இது பிற்காலத்தில் பிரச்னை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

சொந்தமாக வீடு கட்டும்போது..!

* செப்டிக் டேங், மாடிப் படி, தண்ணீர் தொட்டி, போர்ட்டிகோ, சுற்றுச்சுவர் கணக்கை எல்லாம் மொத்த சதுர அடி கணக்கில் சேர்க்க விடாதீர்கள். உதாரணத்துக்கு சுற்றுச் சுவர் கட்ட ஒரு சதுர அடிக்கு 200 ரூபாய்தான். அந்த வகையில் மேற்கண்ட செலவுகளை தனியாக கணக்கிட்டால் மொத்த செலவு குறைய வாய்ப்பு இருக்கிறது.

* கீழ்தளத்தை விட மேல்தளம் கட்டும்போது செலவு 10-15% குறையும். கணக்குபடி இன்னும் அதிகமாககூட குறைய வேண்டும். ஆனால், பொருட்களை மேல் தளத்துக்கு எடுத்துச் செல்ல கூடுதல் கூலி கொடுக்க வேண்டியிருக்கும்.

நன்றி :

விகடன்

http://kulasaisulthan.wordpress.com



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com