Saturday, November 15, 2014

தொழுகையின் முக்கிய நிலை

அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹி­வபரக்காத்துஹு …….

தொழுகையின் முக்கிய நிலை(களான நிற்றல், குனிதல், சிரம்பணிதல் ஆகியவை) களை நிறுத்தி நிதானமாகச் செய்வதும், அவற்றைச் சுருக்கமாக அதே நேரத்தில் முழுமையாக நிறைவேற்றுவதும்.

810. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் முஹம்மத் (ஸல்) அவர்களது தொழுகையை ஊன்றிக் கவனித்தேன். தொழுகையில் அவர்களது நிற்றல் (கியாம்),குனிதல் (ருகூஉ), குனிந்து நிமிர்ந்த பின் நிலைகொள்ளல், அவர்களின் சிரவணக்கம் (சஜ்தா), இரு சிரவணக்கங்களுக்கிடையிலான அமர்வு, பிறகு சலாம் கொடுப்பதற்கும் எழுந்து செல்வதற்கும் இடையேயான இடைவெளி ஆகியவற்றின் கால அளவுகள் ஏறக்குறைய சம அளவில் அமைந்திருந்தன.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 4

811. ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(இராக்கிலுள்ள) கூஃபா நகரை, இப்னுல் அஷ்அஸ் காலத்தில் ஒரு மனிதர் வெற்றி கொண்டார். (அவரது பெயரையும் அறிவிப்பாளர் குறிப்பிட்டார்,) அந்த மனிதர் (மத்தர் பின் நாஜியா), அபூஉபைதா பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்களை மக்களுக்கு (தலைமை தாங்கி)த் தொழுவிக்குமாறு பணித்தார். அவ்வாறே அபூஉபைதா அவர்களும் தொழவைக்கலானார்கள்.

அவர்கள் தொழுகையில் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினால், பின்வருமாறு நான் சொல்லும் அளவிற்கு நிற்பார்கள்: அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி, மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅத். அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்த். லா மானிஅ லிமா அஉதைத்த, வலா முஉத்திய லிமா மனஉத்த, வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத்.
(பொருள்: இறைவா! எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, நீ நாடும் இன்ன பிற பொருட்கள் யாவும் நிரம்பப் புகழனைத்தும் உனக்கே உரியது. புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமிலர். எந்தச் செல்வரின் செல்வமும் அவருக்கு உ(ந்தன் வேதனை த)ன்னிலிருந்து பயன் அளிக்காது.)

தொடர்ந்து ஹகம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் இந்த ஹதீஸை அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் கூறினார்கள்:
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை (நிற்றல்), அவர்களது குனிதல் (ருகூஉ), குனிந்து எழு(ந்ததும் நிலைகொள்)வது, அவர்களின் சிரவணக்கம் (சஜ்தா), இரு சிர வணக்கங்களுக்கிடையிலான அமர்வு ஆகியன ஏறத்தாழ சம அளவில் அமைந்திருந்தன.

(இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான) ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் இந்த ஹதீஸை அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், நான் அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அவர்களது தொழுகை இவ்வாறு அமைந்திருக்கவில்லையே என்று கூறினார்கள்.

- ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹகம் (ரஹ்) அவர்கள், மத்தர் பின் நாஜியா என்பார் கூஃபா நகரை வெற்றி கொண்டபோது அபூஉபைதா (பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத்-ரஹ்) அவர்களை மக்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுவிக்குமாறு கூறினார் என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 4
812. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள் (எங்களிடம்), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்ததைப் போன்றே நான் உங்களுக்குத் தொழுவிக்கிறேன்; அதில் எந்தக் குறையும் வைக்கமாட்டேன் என்று கூறினார்கள். (பிறகு தொழுவித்தார்கள்.)

அனஸ் (ரலி) அவர்கள் (தொழுவித்தபோது) ஒன்றைச் செய்வார்கள். ஆனால், அவ்வாறு நீங்கள் செய்வதை நான் பார்த்ததில்லை. அனஸ் (ரலி) அவர்கள் குனிந்து (ருகூஉ செய்து) நிமிர்ந்ததும் (நீண்ட நேரம்) நேராக நிற்பார்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் மறந்துவிட்டார்களோ! என்று எவரேனும் கூறிவிடுவார். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்து தலையை உயர்த்தியதும் இருப்பில் (நீண்ட நேரம்) நிலைகொண்டிருப்பார்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் மறந்துவிட்டார்களோ! என்று எவரேனும் கூறிவிடுவார்.

Book : 4
813. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட மிகச் சுருக்கமாக, அதே நேரத்தில் நிறைவாகத் தொழுவிக்கக்கூடிய எவருக்குப் பின்னாலும் நான் தொழுததில்லை. அவர்களது தொழுகை(யின் ஒவ்வொரு நிலையும்) சமமான அளவிலேயே அமைந்திருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்களது தொழுகை(யின் ஒவ்வொரு நிலையும் அவ்வாறே) சமமான அளவிலேயே அமைந்திருந்தது. உமர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்தபோது ஃபஜ்ர் தொழுகையை நீண்ட நேரம் தொழுவித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறியதும் நீண்ட நேரம் நிலையில் நிற்பார்கள். எந்த அளவிற்கென்றால் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று கூறுவோம். பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். இரு சிரவணக்கங்களுக்கிடையே (நீண்ட நேரம்) அமர்ந்திருப்பார்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று நாங்கள் கூறுவோம்.

Book : 4
ஸஹீஹ் முஸ்லிம் (Sahih Muslim)

http://kulasaisulthan.wordpress.com



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: