நபித் தோழர் என்ற பதத்தின் வரைவிலக்கணம்:
இவர் நபிகள் நாயகத்தைக் கண்ணால் கண்டு, அவரை அல்லாஹ்வின் இறுதித் தூதர் என விசுவாசித்து, அந்த விசுவாசத்துடனேயே மரணத்திருக்க வேண்டும்.
நபித் தோழர்கள் என்போர் யார்? நபித் தோழர்களை உருவாக்கியது யார்?
இவர்கள் இஸ்லாம் அறிமுகப்படுத்திய அனைத்து விஷயங்களையும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட சமுதாயத்தினர். இவர்களை 'குர்ஆனிய சமுதாயம்' என்றழைப்பதே மிகப் பொருத்தம்.
அல்லாஹ்விடமிருந்து அல்குர்ஆனைப் பெற்ற முஹம்மத் (ஸல்) அவர்கள் தாமாக முன்னின்று வழிகாட்டி, 23 வருட காலத்திற்குள் கட்டியெழுப்பிய சமுதாயத்தினரே நபித் தோழர்கள் என்போர்.
நபித் தோழர்களது பண்புகள் எவ்வாறு காணப்பட்டன?
மனிதப் புனிதர்களான இவர்கள், அழுத்தமான இறைவிசுவாசம், உறுதி குலையாமை, ஆழ்ந்த அறிவு, நீதி, நேர்மை, அன்பு, கருணை, உண்மை நிறையப் பெற்றவர்களாய்க் காணப்பட்டனர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உடையவர்கள். இவர்களது ஆடம்பரமற்ற வாழ்க்கை, சுயநலமற்ற சேவை, கற்பு நெறி தவறாமை, உளத் தூய்மை இளகிய மனம் போன்ற அனைத்தும் உலக வரலாற்றில் தன்னிகரற்றுத் திகழ்கின்றன. இவர்களது வீர தீரம், வணக்க வழிபாட்டில் காணப்பட்ட ஆர்வம், ஷஹாதத் எனும் உயிர்த் தியாக வேட்கை, உலகத்தைப் பற்றிய தெளிவான கண்ணோட்டம், அழகிய நிர்வாகம் போன்றவற்றுக்கு வரலாறு சாட்சி பகருகின்றது. இவர்கள் தராசின் முன் முனை போல் பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்கினார்கள். மக்களோடு பரிவோடும் பாசத்தோடும் பழகுவார்கள். நலம் நாடும் பண்பும், ஆழ்ந்த அன்பும் கொண்ட குடும்பத் தலைவர்களாய் மிளிர்ந்து, குடும்ப வாழ்வில் மிகவும் பொறுப்புணர்வுடனும், கரிசனையோடும், பணியார்வத்துடனும் செயற்பட்டனர். ஏழையாக இருந்தவர்கள் பொறுமையும், போதுமென்ற மனமும் கொண்டிருந்தனர். பணக்காரராய் இருந்தவர்கள் இறைவனுக்கு நன்றியுள்ளவராய், வாரி வழங்கும் வள்ளல்களாய்த் திகழ்ந்தனர்.
لَن تَنَالُواْ الْبِرَّ حَتَّى تُنفِقُواْ مِمَّا تُحِبُّونَ
உங்களுக்கு விருப்பமானவற்றை (இறை வழியில்) செலவழிக்காதவரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது [ஆல இம்றான்: 92] என்ற குர்ஆன் வசனம் அருளப்பட்ட மறுகணமே பெரும் செல்வந்தரான அபூதல்ஹா (ரலி) அவர்கள் அவருக்கு மிகவும் விருப்பமான செழிப்பான, பயன்மிக்க பைரஹா எனும் ஈச்சந்தோப்பை, தனது உறவினர்கள் மத்தியில் பகிர்ந்தளித்தார்கள். இவ்வாறு அல்குர்ஆன் வசனங்கள் இறக்கியருளப்பட்ட போது அவற்றை முழுமையாகச் செயற்படுத்தும் செயல்வீரர்களாகத் திகழ்ந்தார்கள்.
அறிவுத் தாகம் கொண்டவர்கள்:
குர்ஆனையும் சுன்னாவையும் கற்றுக் கொள்வதில் பேரார்வம் கொண்டவர்களாய்க் காணப்பட்டனர். கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய எண்ணமும், அதற்கான அர்ப்பணமும் அறிவொளி பரவக் காரணம் என்பதற்கு திண்ணைத் தோழர்களே உதாரணம். மஸ்ஜிதுந் நபவிக்குப் பக்கத்தில் ஒரு பெரிய திண்ணை. அதனை கல்வியின் மீது தீராத ஆர்வம் கொண்ட ஒரு குழுவினர் இருப்பிடமாகக் கொண்டனர். கற்பதும், கற்பிப்பதும் இவர்களது முக்கிய பணி. இரவு, பகல் என எந்நேரமும் அறிவொளி பரப்பி வந்த உத்தமர்களே அஸ்ஹாபுஸ்ஸுப்பா என்ற திண்ணைத் தோழர்கள். இவர்கள் மட்டுமன்றி ஏனைய நபித் தோழர்களும், கற்பதிலும், கற்பிப்பதிலும் பேரார்வம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். கல்வி கற்பதற்காகவும், அதனைப் போதிப்பதற்காகவும் மிக நீண்ட தூரம் பயணம் மேற்கொண்ட அறிவுத்தாகம் கொண்டவர்களே நபித் தோழர்கள்.
நபித் தோழர்களது சமுதாய வாழ்வு
ஒரே கொள்கையை ஏற்றுக் கொண்ட அவர்கள். அதன் வழியிலான ஒரு சமுதாயமாக அமைந்து, நபிகளார் தலைமையில் வீறுநடை போட ஆரம்பித்தனர். இதன் பயனாக பல்வேறு கூட்டு முயற்சிகள் உருவாகி, அவை வளர்ச்சியடைந்தன.
நபித் தோழர்களுக்கு மத்தியில் உருவான சமூக உணர்வுகள்
அண்டை, அயலாருடன் இணக்கமாக வாழ்தல், பரஸ்பரம் உதவிசெய்து கொள்ளுதல், பெரியோருக்கு மரியாதையும் சிறியோருக்கு அன்பும் செலுத்துதல், கோள், புறம், அவதூறு, பொய் போன்றவற்றைத் தவிர்த்தல், தீமைகளுக்கு இடம் கொடுக்காதிருத்தல், வீண் சண்டை சச்சரவுகளைத் தவிர்த்தல், ஏழைகளுக்கும் தேவையுள்ளோருக்கும் உதவுதல், ஒழுக்க வரம்புகளை மீறாத வகையில் இஸ்லாம் விரும்பும் கூட்டு முயற்சிகளில் ஈடுபடல் என்பனவாகும்.
நபித் தோழர்களது பொருளாதாரச் சிந்தனை
வியாபாரம், விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துதல். வட்டியில்லா நிதிமுறை உருவாக்கல். பொது நிதியம் (பைத்துல் மால்) உருவாக்கல், ஸகாத் மற்றும் தான தர்மங்களை நடைமுறைப்படுத்துதல், தொழிலாளர் உரிமைகளைப் பேணல், அழகிய கடன் வழங்கல், இஸ்லாத்திற்கு இணக்கமான வரிகள் கொண்டுவரல் போன்றனவாகும்.
நபித் தோழர்களது அரசியல் அமைப்பு
பொது நிர்வாகம், ஒழுங்கு, கட்டுப்பாடு, சட்டம், நீதி, தண்டனை, யுத்தம், சமாதானம், ஒப்பந்தங்கள், முஸ்லிமல்லாதாரின் பாதுகாப்பு, அவர்களது உரிமைகள் ஆகியன தொடர்பான அனைத்தும் பொதிந்ததாக அமைந்திருந்தது. அல்குர்ஆனின் பல இடங்களில் நபித் தோழர்கள் குறித்து இறைவன் தனது திருப்தியை வெளிக்காட்டியுள்ளான். மக்காவிலிருந்து மதீனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட, கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமைந்த பயணத்தில், நபியவர்களோடு தன்னையும் அர்ப்பணித்த அபூபக்கர் (ரலி), பயணம் மேற்கொள்ளப்பட்டதை காபிர்கள் அறிந்து கொள்ளாதிருப்பதற்காக நபியவர்களது விரிப்பில் தனது உயிரையும் பணயம் வைத்து உறங்கிய வீரர் அலி (ரலி) போன்ற நபித் தோழர்களது வரலாறுகள் ஏகத்துவத்துக்கான அவர்களுடைய பங்களிப்பைக் காட்டுகின்றன.
பெருமானாரது மகளைத் திருமணம் முடித்திருந்த உஸ்மான் (ரலி) அவர்களின் அருங்குணத்துக்காக, அம்மகள் இறந்தபின் மற்ற மகளையும் திருமணம் முடித்து வைத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் குணத்தின் குன்று, அமைதியின் உறைவிடம் என வரலாற்றில் போற்றப்படுமளவுக்கு உஸ்மான் (ரலி) அருங்குணங்கள் நிறைந்தவராயிருந்தார்கள்.
இஸ்லாமிய சாம்ராஜ்யத்தையே நீதிப் பரிபாலனத்தால் விரிவடையச் செய்தவர் உமர். இவரது சில கருத்துக்களுக்கேற்ற வண்ணம் இறைவன் வேதவெளிப்பாட்டையே இறக்கியுள்ளான். கிப்லா மாற்றப்பட வேண்டும், நபியின் மனைவியர் ஹிஜாப் அணிய வேண்டும், நயவஞ்சகர்கள் மீது ஜனாஸாத் தொழுகையில்லை என்பன போன்ற இவரது கருத்துக்களுக்கேற்ப அல்குர்ஆன் இறங்கியது என்ற நபிகளாரின் பொன்மொழி புகாரி கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு உலக வரலாற்றையே சீர்த்திருத்திய இவர்களுக்கும், தம் உயிரைத் தியாகம் செய்து போர்க்களங்களில் ஷஹீதானவர்களுக்கெல்லாம் இறைவன் சுவனத்தை வாக்களித்துள்ளான்.
لَكِنِ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُواْ مَعَهُ جَاهَدُواْ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ وَأُوْلَئِكَ لَهُمُ الْخَيْرَاتُ وَأُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ أَعَدَّ اللّهُ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
எனினும், (அல்லாஹ்வின்) தூதரும் அவருடன் இருக்கும் முஃமின்களும் தங்கள் செல்வங்களையும் தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிகிறார்கள். அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு. இன்னும், அவர்கள்தான் வெற்றியாளர்கள். அவர்களுக்காக அல்லாஹ் சுவனபதிகளைத் தயார் செய்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும் [அத்-தௌபா: 88-89].
رَّضِيَ اللّهُ عَنْهُمْ وَرَضُواْ عَنْهُ
(அவ்வாறே) இறைவன் இவர்கள் மீது திருப்தியடைகின்றான். இவர்களும் அல்லாஹ்வின் மீது திருப்தியடைகின்றார்கள் [அத்-தௌபா: 100]. சுருங்கக் கூறின் இவர்கள் சகல துறைகளிலும் மாணிக்கக் கற்களாய் ஒளிர்ந்தார்கள். பெருமானார் உருவாக்கிய மனிதப் புனிதர்களது வாழ்வுக்கு வரலாறு சாட்சி! இவர்களது புனிதத்துவம் பொருந்திய வாழ்வுக்கு இறைவனே சாட்சி
http://kulasaisulthan.wordpress.com
--