Sunday, August 2, 2015

கருத்தரிப்பதில் சிக்கலா…?

கருத்தரிப்பதில் சிக்கலா…?

மருத்துவர் ஜெயசிறீ கஜராஜ் அவர்கள் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் இருக்கும் தடைகளை எப்படிச் சரிப்படுத்துவது எனச் சொல்கிறார்.
முன்னர் ஒரு தடவை பெண்களுக்குக் கருத்தரிப்பதில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்னென்ன என்பது பற்றிப் பார்த்தோம்…. தற்போது அந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.. அவற்றில் முதலாவதாக சினைமுட்டை வெளிவருவதில் (Ovulation) ஏற்படக்கூடிய பிரச்னை பற்றிப் பார்ப்போம்...
பெண்களுக்கு மாதாமாதம் சினைமுட்டை ஒரு சுழற்சி முறையில் வெளியேறும். இதைத்தான் நாம் பீரியட்ஸ் என்கிறோம். ஆனால் சிலருக்கு இது சரியானபடி ஏற்படாது. இதற்கு முக்கியக் காரணம் நம்முடைய ஹார்மோன்களின் செயல்பாடுதான்.
இதை மருந்துகள் மூலம் சரி செய்துவிடலாம். இந்த மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது சினைமுட்டையை சரியான வளர்ச்சியடையச் செய்யும். இதற்குப் பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையின் பெயர் Clomiphene Citrate. ஆனால் இந்த மாத்திரையைச் சாப்பிட்டு வருவதால் மட்டும் சினைமுட்டை நன்கு வளர்ச்சியடைகிறது என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. அதை உறுதிப் படுத்த Follicular Scan என்கிற ஒரு பரிசோதனையைத் தொடர்ந்து செய்து, அதன் மூலம் முட்டையின் வளர்ச்சியைக் கண்காணிப்போம்.
இந்த மாத்திரையைத் தவிர்த்து ஊசி மூலமும் இந்தப் பிரச்னையை நாம் கையாளலாம். இதற்கென்று Gonadotrophins என்கிற இன்ஜெக்சன் இருக்கிறது. தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தும் சினை முட்டை வளர்ச்சியடைவதில் பிரச்னை இருந்தால் இந்த இன்ஜெக்சனை நாங்கள் கொடுப்போம். மாத்திரைகளைச் சாப்பிட்டு வரும்போதே சில மருத்துவர்கள் இந்த ஊசியும் போட்டு விடுவதுண்டு. இது அவரவர் ட்ரீட்மெண்டுக்கு ஏற்ப மாறுபடும். இதில் தவறொன்றும் இல்லை.
இப்படி தொடர்ந்து ட்ரீட்மெண்ட் செய்து வந்தும் பலன் இல்லையென்றால் Follicle Stimulating Harmone என்கிற ஹார்மோனை அதிகரிக்க மாத்திரைகளை நாங்கள் கொடுப்பதுண்டு. இந்த FSH ஹார்மோன் மற்றும் Gonodotrophins ஆகியவற்றை மனித யூரினில் இருந்துதான் தயார் செய்கிறார்கள். இயற்கையான விஷயத்திலிருந்து, அதிக சிரமத்துடன் இதைத் தயாரிப்பதால் இந்த மருந்துகள் சற்றே காஸ்ட்லிதான். இதற்கு மாற்றாக செயற்கை மருந்துகளையும் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மார்புப் புற்றுநோய் கண்டவர்களுக்குப் பொதுவாக ட்ரீட்மெண்ட் கொடுக்கும்போது Letrozole என்கிற ஒரு மருந்தை நாங்கள் கொடுப்பதுண்டு. இப்படி Letrozole கொடுக்கப்பட்ட சில பேஷண்டுகளைத் தற்செயலாகக் கண்காணித்தபோது ஒரு விஷயத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த மருந்து சினைப்பையின் மீது செயல்பட்டு, சினைமுட்டையின் வளர்ச்சியைத் தூண்டுவது அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பிறகு இந்த Letrozole மருந்தையும் இந்த ட்ரீட்மெண்டுக்குப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஆனால் சில பத்திரிகைகளில் இந்த மருந்து பற்றி வேறுவிதமான செய்திகள் வெளியிட்டார்கள். அதாவது, இந்த மருந்தைப் பயன்படுத்தி வரும் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு சில குறைபாடுகள் ஏற்படலாம் என்று சொன்னது அந்தச் செய்தி.
இதைக் கேள்விபட்டு நிறைய பெண்கள் அதன்பிறகு Letrozole மருந்தைப் பயன்படுத்தவே பயந்தார்கள். ஆனால் இந்த பயம் அவசியமில்லாதது. இதற்கும், பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய குறைபாடுகளுக்கும் தொடர்பில்லை. மேலும் இந்த மருந்தை அவசியப்பட்டால் மட்டுமே, அதுவும் ஒரு சிலருக்கு மட்டுமே மருத்துவர்கள் கொடுப்பார்கள். அதனால் இதில் பயப்பட ஒன்றுமில்லை.
சினைமுட்டை சரியானபடி வளர்ச்சியடையத்தான் மேற்கூறிய சில மருந்துகளை நாங்கள் பரிந்துரைப்போம். இதில் நீங்கள் எந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தாலும், அதைப் பயன்படுத்தும்போதே கட்டாயம் Follicle Scan_ஐ செய்து முட்டை சரியானபடி வளர்ச்சியடைகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். வளர்ச்சி சரியாக இருந்தால், பிறகு அது வெளியேற ஒரு ஊசி போடுவோம்.
பொதுவாக இந்த ஊசி போட்ட முப்பத்தாறு மணி நேரத்தில், சினைமுட்டை கட்டாயம் சினைப்பையிலிருந்து வெளியேறும். இந்தச் சமயத்தில் தம்பதியரை தயாராக இருக்கச் சொல்லி, கட்டாயம் உடலுறவு வைத்துக் கொள்ள அறிவுறுத்துவோம். இதிலும் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் IUI என்கிற ஒரு முறையைக் கையாள்வோம்.
Intra Uterine Insemenation என்று அழைக்கப்படும் இந்த முறையில், சினைமுட்டை வெளியேறும் சமயத்தில் கணவரிடமிருந்து பெறப்பட்டு Labஇல் பதப்படுத்தப்பட்ட விந்தணுக்களை, ஒரு டியூப் மூலமாக மனைவியின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி கருத்தரிக்க உதவுவோம். இந்த முறையில் கருத்தரிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளது.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: