Saturday, October 20, 2012

ஜமாஅத் தொழுகையின் அணிவகுப்பில் முதல் வரிசை சிறப்புக்குரியது.

ஜமாஅத் தொழுகையின் அணிவகுப்பில் முதல் வரிசை சிறப்புக்குரியது.

"பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராம் விடுவர். தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷா (அதமா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்." அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி) (நூல் - புகாரி 615, முஸ்லிம் 746)

கூட்டுத் தொழுகையில் முதல் வரிசையில் சேர்ந்து நின்று தொழுவது நன்மையின் கூலியை அதிகரிக்கச் செய்யும் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்குகிறோம்.

வெள்ளிக்கிழமை நாளில் குத்பா உரையைக் கேட்க முந்தி வருபவர்களுக்காகவும் கூடுதலான நன்மை உண்டு எனவும் நபிமொழிகள் அறிவிக்கின்றன.

"ஜும்ஆ நாள் வந்துவிட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதலில் வருபவரையும் அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவு செய்கிறார்கள். முதலில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரைப் போன்றும் அதற்கடுத்து வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றும் அதன் பிறகு ஆடு, பிறகு கோழி, பிறகு முட்டை ஆகியவற்றைக் குர்பானி கொடுத்தவர் போலவுமாவார்கள். இமாம் வந்துவிட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டிவிட்டுச் சொற்பொழிவைக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்." (அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல் - புகாரி 881, 929, முஸ்லிம் 1554, 1555)

கூட்டுத் தொழுகைக்காக பள்ளிக்கு வருபவர் முதல் வரிசையில் நின்று தொழுவதற்கான நிலையை அடைந்து கொண்டார் என்றால் அவர் அத்தொழுகைக்காக முன்னரே தம்மை ஆயத்திப்படுத்திக் கொண்டு முதலில் பள்ளிக்கு வந்து கூடுதலான நன்மையை இறைவனிடம் பெற்றுக்கொள்கிறார். அதுபோல் தொழுகை அணிவகுப்பின் அடுத்தடுத்த வரிசைகளில் வந்து சேர்ந்துகொள்பவர்கள் தாமதத்திற்கேற்ப நன்மையின் கூலி குறைக்கப்படுகிறது. ஆனால் பொதுவாக இறைவனை நின்று வணங்கியதற்கான நன்மையை தொழுதவர்கள் அனைவரும் அடைந்து கொள்வர். இது போன்றே, ஜும்ஆ உரையில் கலந்து கொள்ள முந்தி வந்தவர் பிந்தி வந்தவர்களும் அதற்கு ஏற்றவாறு கூடுதல் குறைவான நன்மையை அடைவர்.

இனி இந்த ஹதீஸைப் பார்ப்போம்:

(கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல்கள் - முஸ்லிம் திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரமீ)

நபி (ஸல்) அவர்களது காலத்தில் கூட்டுத் தொழுகையில் ஆண்களுடைய வரிசைகளுக்குப்பின் பெண்களுடைய அணிவகுப்பு வரிசைகள் அமைக்கப்பட்டுத் தொழுது வந்தனர். இதில் ஆண்களின் கடைசி வரிசையும், பெண்களின் முதல் வரிசையும் அருகருகே அமைந்து விடுவதால் கடைசி வரிசையில் நிற்கும் ஆண்களின் உள்ளத்திலும், பெண்களின் வரிசையில் முதல் வரிசையில் நிற்கும் பெண்களின் உள்ளத்திலும் ஊசலாட்டம் ஏற்படும். இதைத்தான் நபி (ஸல்) அவர்கள் ''தீயது'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

மற்றபடி, புகாரி 615வது ஹதீஸின்படி வரிசைகளுக்குத் தக்கவாறு நன்மை குறையுமே தவிர தொழுகைக்கான நன்மை இல்லை என்றாகிவிடாது!

அன்றைய மக்களில் மிகவும் அழகான பெண், நபி (ஸல்) அவர்களின் பின்னே தொழுபவராக இருந்தார். அவரைப் பார்க்கக் கூடாது என்பதற்காக சிலர் முன் வரிசைக்கு முந்துவார்கள். மற்றும் சிலர் கடைசி வரிசைக்கு வந்து ருகூவு செய்யும்போது தமது அக்குள் வழியாக அப்பெண்ணைப் பார்ப்பார்கள். அப்போது, ''நிச்சயமாக உங்களில் முந்திச் செல்பவர்களையும் அறிவோம், பிந்துவோரையும் அறிவோம்'' என்ற (15:24) வசனத்தை அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் - திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்)

மேற்கண்ட அறிவிப்பில் சர்ச்சையுள்ளது என்றிருந்தாலும், நாமறிந்து குறைபாடு உறுதிசெய்யப்படவில்லை என்று கருதுகிறோம். பலவீனம் என்று உறுதிசெய்யப்பட்டால் ஏற்றுக் கொள்வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை!

கூட்டுத் தொழுகையின் அணிவகுப்பில் ஆண்களுடைய கடைசி வரிசையும், பெண்களுடைய முதல் வரிசையும் எவ்வாறு தீமையாகின்றது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் விளக்கமாகவுள்ளது.

நிற்க,

''பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள்'' (புகாரி, முஸ்லிம், நஸயீ)

பெண்கள் கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்ள பள்ளிக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள். என்று ஆண்களுக்குக் கட்டளையிடும் இஸ்லாம்,''பெண்கள் நறுமணம் பூசிக்கொண்டு கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ள வேண்டாம்''  என்று (முஸ்லிம் 758, 759) பெண்களுக்குக் கட்டளையிடுகின்றது.

பெண்கள் பள்ளிக்குச் செல்வதால் குழப்பமும் தீமையும் ஏற்படுமெனில்,

''பெண்கள் வீடுகளில் தொழுவதே சிறந்தது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) நூல் - அபூதாவூத் 480)

இஸ்லாத்தை அறிந்து அதன் தூய வழி நடப்போம்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)


--
*more articles click*
www.sahabudeen.com



No comments: