Monday, October 29, 2012

அங்கு சென்றால் இறைவனைப் பார்க்கலாம்



 வல்ல நாயனின் திருப்பெயர் போற்றீ
 
 
 
 
நம் உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப்பற்றி நபித்தோழர் இப்னு அப்பாஸ் அவர்கள்
 
அறிவிக்கிறார்கள்: நோய்யுற்றிருந்த ஒரு காட்டு அரபியை சந்திக்க ஒரு முறை நபியவர்கள் சென்றார்கள், சந்தித்த பின் " லா பஃஸத் தஹூரன்
 
இன்ஷாஅல்லாஹ்" பரவாயில்லை இன்ஷாஅல்லாஹ் குணம் ஆகிவிடுவீர்" என்று கூறினார்கள்.
 
 
ஒரு முஸ்லிம் வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும் எப்படி நடக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர்கள் நபி (ஸல்) .
 
இன்றைய ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்வைப்பார்த்தாலும் நபியவர்களில் வாழ்க்கை நடைமுறை பிரதிபலித்துக்கொண்டிருக்கும் என்பது தான்
 
மற்றவர்களுக்கும் நபியவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
 
நம் செயல்களாலும், எண்ணங்களாலும் நம்மோடு நபியவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது தான் எதார்த்தம்.
 
இந்த ஹதீஸ் ஒரு நோயாளியை சந்திக்கும் போது கடைப்பிடிக்கவேண்டிய  ஒழுக்க முறைகள் பற்றி பேசுகிறது.
 
 
1. நோயாளியை சென்று சந்திக்கவேண்டும்
 
இந்த ஹதீஸில் நபியவர்கள் ஒரு காட்டரபியை சென்று நோய் விசாரித்தார்கள்.
 
சஹாபாக்களில் தங்களுக்கு நெருக்கமானவர்களை மட்டும் சந்திக்க செல்லவில்லை.
 
தங்களின் தொடர்பிலே தூரமாக இருந்தவர்களைக்கூட நபியவர்கள் சென்று சந்தித்தார்கள்.
 
ஆக, ஒரு நோயாளியை நேரில் சென்று சந்திப்பது முஸ்லிமின் கடமைகளுள் ஒன்று என்று போதித்தார்கள்.
 
இது மனித இனத்தின் உயரிய பண்பைப் காட்டுகிறது.
 
இதில் நெருக்கமானவர், சொந்தபந்தம், பணக்காரன், ஏழை என்ற எந்த வித்தியாசத்தையும் இஸ்லாம் ஏற்படுத்தவில்லை.
 
இப்படி சந்திக்கும் சொல்லும் போது ஒரு மனிதர் நல்லதின் பக்கம் நடக்கிறார் / நல்லதின் பக்கம் விரைகிறார் என்று அர்த்தம்.
 
முஸ்லிம் என்ற கிரந்தத்தில் ஒரு ஹதீஸில் " யார் ஒருவர் ஒரு நோயாளியை சந்திக்க செல்கிறாரோ அவர் சுவனத்தின் தோட்டத்தில் இருப்பார் 
 
சந்தித்து திரும்பும் வரை ".
 
இன்றைய நவீன காலத்தில் அவரவரின் வேலை செய்யவே நேரமில்லை என்று அலையும் போது இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி? எழும்
 
அப்படி தன்னிலை மறந்து அலைகிற மனிதன் தான் ஒரு நாள் நோயில் விழும் போது அவனைப்பார்த்து ஆருதல் சொல்ல எவரும் இருக்கமாட்டார்.
 
இன்னும், இப்படி நோயாளிகளை சந்திக்கும் போது 1. இறைவன் தனக்கு செய்த நிஃமத்துகளை நினைத்து நன்றி செலுத்த ஒரு வாய்ப்பு
 
2.தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆரோக்கியத்தை முறையாக கவனிக்கவேண்டும் என்ற ஒரு உணர்வூட்டல்.
 
3. மனிதத்தை மதித்து ஒழுகும் ஒரு பண்பட்ட சமூக அமைப்பு.
 
2. ஆறுதலான சில  வார்த்தைகள்
 
நோயாளிகளை சந்திக்க செல்லும் போது சில ஆறுதலான வார்த்தைகளை கூற இஸ்லாம் வலியுறுத்துகிறது.
 
 பொதுவாக நோயாளிகள் மனோரீதியாக கவலையடைந்த நிலையில் இருப்பார்கள்.
 
இன்னும் அவரின் இல்லத்தில் உள்ளவர்களும் கவலையாக இருப்பார்கள்.
 
இந்த நேரத்தில் ஒரு முஃமின் அவர்களிடம் எப்படி அளவலாவ வேண்டும் என்று ஹதீஸ் கூறுகிறது.
 
ஒன்றும் கவலைகொள்ளாதீர்கள், இறைவனின் அருளால் நீங்கள் முற்றிலும் குணமடைந்துவிடுவீர்கள்.
 
நோயிலிருந்து நிவாரணம் பெறுவது என்பது இறைவனின் விதிப்படி நடக்கிற ஒரு காரியம்.
 
ஆகையால், பெரும் நோயை பெற்றவரை சந்திக்கும் போது கூட எதிர்மறையான வார்த்தைகளை உபயோகிக்க இஸ்லாம் தடைசெய்கிறது.
 
எந்த நோயாளியை சந்தித்தாலும் நேர்மறையான, நல்ல இன்னும் அவர் மனதிற்கு இதமளிக்கும் வார்த்தைகளை பயன்படுத்த இஸ்லாம் ஏவுகிறது.
 
ஏனெனில் இன்றைய காலங்களில் கேன்சர் நோயாளிகள் கூட சில நேரங்களில் குணமடைந்து விடுகின்றனர்.
 
மருந்து மாத்திரைகளை விட மனிதனுக்கு தரப்படும் மனரீதியான வார்த்தைகள் தான் மனிதனை முழுமையாக நலம்பெறவைக்கிறது.
 
இன்னும் இந்த ஹதீஸில் " தஹூர்" என்ற வார்த்தையை நபியவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.
 
தஹுர் என்ற அரபி வார்த்தைக்கு சுத்தம் என்று பொருள்.
 
நீங்கள் சுத்தம் அடைவீர் என்ற ஒரு ஆழமான பொருள் கொண்ட வார்த்தையை நபியவர்கள் தன் உம்மத்துக்கு கற்றுக்கொடுத்தார்கள்.
 
பொதுவாக நோய் என்பது பல நேரங்களில் மனிதன் பாவத்தின் காரணமாக ஏற்படுகிறது.
 
மனிதன் பாவமான காரியங்கள் செய்ய செய்ய அது அவனின் இதயத்தில் புள்ளிகளாக படிந்து அதை கருப்பாக ஆக்கிவிடுகிறது.
 
அந்த கருப்பான தடைகள் மற்ற உறுப்புகளிலும் ஊடுறுவி அந்த உறுப்புகளில் நோயை, பலவீனத்தை ஏற்படுத்துகிறது.
 
ஆக பாவங்கள் மன்னிக்கப்பட்டால் நோயிலிருந்து நிவாரணமும் கிடைக்கிறது.
 
நபியவர்கள் மற்றுமத சகோதரர்களை கூட சில வேளை நோய் விசாரித்திருக்கிறார்கள்.
 
புஹாரியுடைய ஒரு ஹதீஸில் ஒரு யஹுதி சிறுவனை நோய் விசாரித்தாகவும், அந்நேரத்தில் அவருக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு கொடுத்தார்கள் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
 
இப்னு அபீ ஷைபா உடைய முஸன்னப் என்ற ஹதீஸ் கிரந்தத்தில் அபூதர்தா அண்டை வீட்டு யஹூதியை நோய் விசாரித்தாகவும் ஹதீஸ் பதிவாகியுள்ளது.
 
நபியவர்களும் செய்தார்கள், நபித்தோழர்களும் அதே வழியை செயல்படுத்தினார்கள்.
 
அப்படி நோயுற்றவரை சந்திக்கும் போது அவர் முடியாமல் இருந்தால் அவருக்கும் மருத்துவத்திற்குரிய உதவியை ஒருவர் செய்தால் அது தான் தருமத்தில் சிறந்த தருமமாகும்.
 
கடைசியாக, ஒரு ஹதீஸே குத்ஸியை நினைவு படுத்த விரும்புகிறேன்.
 
மனிதன் தீர்ப்பு நாளில் இறைவனுக்கும் முன்னால் நிறுத்தப்படும்போது,  இறைவன் கேட்பான்
 
" நான் நோயுற்று இருந்தேன் நீ என்னை நோய் விசாரிக்க வரவில்லை என்று கேட்பான்.
 
மனிதன் சொல்லுவான் இறைவா உனக்கு நோயா?  நீயோ உலகத்தாரின் ரச்சகனாக இருக்கிறான்.
 
இறைவன் கூறுவான் என் அடியான் நோயுற்று இருந்தான் நீ ஏன் சென்று பார்க்கவில்லை என்று கேட்பான்.
 
நீ மட்டும் அவ்வடியானை சந்திக்க சென்றிருந்தால் என்னை அங்கு பெற்றுக்கொண்டிருப்பாயே.
 
பள்ளிவாசலிலே மட்டும் இறைவனை தேடிக்கொண்டிருக்கும் நாம் என்று நோயாளிகளின் அறைகளில் இறைவனை தேடப்போகிறோம்.
 
அப்படி தேடுகிற அறிவை நாம் அனைவருக்கும் இறைவன் தருவானாக,
 
 
 
- ஹஸனீ
 

--
*more articles click*
www.sahabudeen.com



No comments: