Sunday, December 2, 2012

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!! 

எது நேர்வழி? எது சத்தியம்? எதை இறைவன் விரும்புகிறான்? எதை வெறுக்கிறான்? இறைஉவப்பைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்? இம்மை வாழ்வை நடாத்திச் செல்வது எப்படி? மறுமை வெற்றியை ஈட்டுவது எவ்வாறு? இந்தக் கேள்விகளுக்குப் பதில் பெறுவது நடக்கிற காரியமா? அசாத்தியம்: எனவே, நாம் பொய்யில் புரண்டு, அசத்தியத்தில் மூழ்கி, கடும் இயப்பாடுகளில் சிக்கி, இருளிலேயே தட்டுத் தடுமாறி உழன்று கொண்டு இருந்திருப்போம். மனிதர்களாகவே இருந்திருக்க மாட்டோம். 

ஆனால் இறைவன் நம் மீது மாபெரும் அருட்கொடையை பொலிந்து விட்டான். ஆம்! அந்த மாபெரும் அருட்கொடைதான் நமது நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) ஆவார்கள். " மனிதர்களே! இதோ, அகிலங்களுக்கு ஓர் அருட்கொடையாக, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக என்னுடைய இறுதித் தூதரை நான் அனுப்பிவிட்டேன். இனி உங்களின் இம்மை வெற்றியும் மறுமை ஈடேற்றமும் இந்த இறைத்தூதரைப் பின்பற்றுவதில் தான் அடங்கியுள்ளது!" என்று வல்ல இறைவன் குர்ஆனில் பல்வேறு இடங்களில் தெளிவாக அறிவித்துவிட்டான். 

இறைத்தூதராக நியமிக்கப்பட்ட அந்த நிமிடம் முதல் - அண்ணலாரின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் - அவர்களின் சிறுசிறு அசைவுகளும் கூட மிகக் கவனமாகப் பதிவு செய்யப்பட்டன. காரணம்: திருநபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் வாழ்க்கை திருகுர்ஆனின் செயல்வடிவாகத் திகழ்ந்தது. அதாவது, நடமாடும் குர்ஆனாக அவர்கள் திகழ்ந்தார்கள். வாழ்வின் ஏதோ ஒன்றிரெண்டு துறைகளுக்கு மட்டுமல்ல அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டினார்கள். அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள், தந்த அறிவுரைகள், ஏவிய செயல்கள், தடுத்த காரியங்கள் ஆகிய அனைத்துமே மனிதனுக்கு வழிக்காட்டும் ஒளி விளக்குகளாய் விளங்குகின்றன. 

நபிகளார் மொழிந்தவை:

1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன. 
2.
இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான். 
3.
அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை. 
4.
உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும். 
5.
நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும். 
6.
உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார். 
7.
எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும். 
8.
எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான். 
9.
இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும். 
10.
கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள். 
11.
பதுக்கல் செய்பவன் பாவியாவான்.
12.
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது. 
13.
பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். 
14.
தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு 
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும். 
15.
அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.
16.
நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.
17.
அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள். 
18.
ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.
19.
இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.
20.
தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது. 
21.
பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.
22.
தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான். 
23.
நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.
24.
உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும். 
25.
உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான். 
26.
இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.
27.
உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.
28.
இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள். 
29.
பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான். 
30.
நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது. 
31.
இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.
32.
குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.
33.
எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை. 
34.
புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும். 
35.
கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.
36.
நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
37.
தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.
39.
தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள். 
40.
மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
41.
இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.
42.
நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.
43.
ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.
44.
உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும். 
45.
நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
46.
உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.
47.
வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன். 
48.
தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான். 
49.
இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும். 
50.
ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும். 
51.
தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான். 
52.
கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும். 
53.
பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான். 
54.
ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும் 
55.
வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.
56.
மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
57.
செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.
58.
இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.
59.
நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.
60.
உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.

யா அல்லாஹ்! உனது தூதர், எங்களின் சிரேஷ்டர், உலக மக்களின் நேர்வழிகாட்டி, எங்கள் ஆத்மாக்களுக்கு புத்துயிர் தந்த ஞானதீபம், அனாதைகளின் இரட்சகர், ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் இந்த உயர் மணி மொழிகளை எங்கள் வாழ்க்கையில் எடுத்து நடக்க நீ எங்களுக்கு அருள் புரிவாயாக. அவர்களோடு நாளை சுவர்க்கத்தில் இருக்கும் பாக்கியத்தை எனக்கும், என் குடும்பத்துக்கும், என் அன்பான சுன்னத் வல் ஜமாஅத் எனும் சத்திய கொள்கை பாதையில் இருக்கும் நண்பர்களுக்கும் நசீபாக்குவாயாக!! ஆமீன்!!

http://www.mailofislam.com/annal_nabiyin_60_ponmanigal.html

 


--
*more articles click*
www.sahabudeen.com



No comments: