டிரைவிங் லைசன்ஸ் தொடர்பான பல்வேறு விஷயங்களையும் கடந்த இரண்டு இதழ்களில் வாசகர்களுக்கு விளக்கிய சென்னை-மேற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி இன்னும் பல உபயோகமான தகவல்களையும் கூறினார். அவற்றின் தொகுப்பு...
இங்கே வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை வைத்துக் கொண்டு, ஒருவர் அமெரிக்கா சென்றால் அங்கே அவர் வாகனம் ஓட்ட முடியுமா?
இந்தியாவிலிருந்து, அமெரிக்காவுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ செல்பவர்கள், அங்கே சென்றவுடனே வாகனம் ஓட்ட வேண்டிய அவசியம் ஏற்படலாம். அந்த நாட்டில் டிரைவிங் லைசென்ஸுக்கு விண்ணப்பித்து, அது கிடைக்கும் வரை காத்திருக்க முடியாத சூழ்நிலையில், இங்கேஇருந்து செல்லும்போதே இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பர்மிட் வாங்கிக்கொண்டு செல்லலாம். இந்தியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, அந்த டிரைவிங் பர்மிட், அந்த நாட்டில் ஓராண்டு காலத்துக்குச் செல்லுபடியாகும்.
சர்வதேச வாகனம் ஓட்டுநர் உரிமையை வாங்குவது எப்படி?
ஒருவர் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் மட்டுமே, இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் லைசென்ஸுக்கு விண்ணப்பிக்க முடியும். அதற்குரிய 4ஏ விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதனுடன் டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், விண்ணப்பதாரர் எந்த நாட்டுக்குச் செல்கிறாரோ அதற்குரிய விசா, பயண டிக்கெட் பிரதி, மருத்துவச் சான்றிதழ், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் ஆகியவற்றை இணைத்து ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த அன்றே, இன்டர்நேஷனல் லைசென்ஸ் வழங்கப்பட்டுவிடும்.
இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருந்து, கார் ஓட்டக் கற்றுக் கொண்டால், அவருக்கு இரண்டு வகையான வாகனங்களையும் ஓட்ட தனி லைசென்ஸ் வழங்கப்படுமா? இரண்டுக்குமாக சேர்த்து ஒரே லைசென்ஸ் வழங்கப்படுமா?
இரண்டு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் வைத்திருப்பவர். கார் ஓட்டுவதற்கு முதலில் பழகுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே இரண்டு சக்கர வாகனத்துக்குண்டான லைசென்ஸ் இருப்பதால் சாலை விதிமுறைகள் குறித்த தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்கப்படும். முப்பது நாட்களுக்கு கார் ஓட்டப் பழகியவுடன், விண்ணப்பம் 8 ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். வாகன ஆய்வாளர் முன்பாக நீங்கள் காரை ஓட்டிக் காட்ட, அவர் திருப்தி அடைந்தால், இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் என இரண்டு வகை வாகனங்களையும் ஓட்டுவதற்கு புதிதாக ஒரே லைசென்ஸ் வழங்கப்பட்டுவிடும்.
ஒருவருக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் காலாவதியாகிறபோது புதுப்பித்துக் கொள்ள என்ன வழிமுறை பின்பற்ற வேண்டும்?
பொதுவாக, போக்குவரத்து அல்லாத வாகனங்களை ஓட்டுவதற்கு உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு ஐம்பது வயது வரை செல்லத்தக்க ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படும். அதன் பிறகு, அதனை நீட்டிக்க விரும்புபவர்கள், அதற்குரிய படிவம் 9 ஐ பூர்த்தி செய்து, உரிய கட்டணம் செலுத்தி, மருத்துவச் சான்றிதழுடன் விண்ணப்பித்தால், அது பரிசீலிக்கப்பட்டு ஐந்தாண்டு காலத்துக்கு ஓட்டுநர் உரிமம் அனுமதிக்கப்படும். போக்குவரத்து வாகனங்கள் என்றால் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.
இப்போது இரு சக்கர வாகனமோ (பைக்) காரோ வாங்கும்போது 15 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய சாலை வரியை ஒரே தடவையில் ‘ஆயுள் கால வரி’ என்ற பெயரில் வசூலித்து விடுகிறார்களே? இப்படி ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமா?
1998ஆம் ஆண்டிலிருந்து போக்குவரத்து அல்லாத பிரிவில் வரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆயுட்கால வரியாக வசூலிப்பது நடைமுறையில் உள்ளது. வாகன உரிமையாளர்களுக்கும், அரசாங்கத்துக்கும் இது செளகரியம்தானே? போக்குவரத்து வாகனங்களுக்கு காலாண்டு, அரையாண்டு, ஒரு ஆண்டு மற்றும் ஐந் தாண்டுகளுக்கு வரிப்படி சாலை வரி செலுத்த முடியும். (இன்னொரு விஷயம், வாகனம் வாங்குகிறபோது சாலை வரி என்ற பொதுவான பெயரில் செலுத்தும் தொகையில், வாகனங்களுக்காக செலுத்தப்படும் சாலை வரியைத் தவிர, வாகன பதிவுக் கட்டணம், சாலை பாதுகாப்பு வரி, சேவைக் கட்டணம் என்று இன்னும் சில செலவுகள் அடக்கம்).
ஒருவர் கார் வாங்கும்போது ஆயுள் வரி செலுத்துகிறார். சில ஆண்டுகள் கழித்து, அவர் ஆந்திராவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிவிடுகிறார். தனது காரை ஆந்திராவுக்குக் கொண்டு செல்லும்போது, அங்கே மறுபடியும் சாலை வரி கட்ட வேண்டுமா?
ஆமாம். சாலை வரி என்பது அந்தந்த மாநிலங்களுக்கு செலுத்தப்படும் வரி. எனவே, நீங்கள் உங்கள் வாகனத்தை ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு எடுத்துக் கொண்டு செல்லும்போது, அங்கே அதை மறுபடியும் ரெஜிஸ்டிரேஷன் செய்யும்பட்சத்தில், அப்படிச் செய்துவிட்டு, அதற்குரிய ஆதாரங்களுடன் எங்களுக்கு விண்ணப்பித்து, மீதி வருடங்களுக்குரிய வாகன வரியை நீங்கள் திரும்பிப் பெற வழி உண்டு. உதாரணமாக வாகனம் வாங்கிய ஐந்தாவது ஆண்டில் நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலத்துக்கு வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்று மீண்டும் பதிவுசெய்தால், மீதி பத்து ஆண்டுகளுக்குரிய வாகன வரியை நீங்கள் ரீஃபண்டு வாங்கிக் கொள்ள முடியும்.
வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் ஏன் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது?
இன்று காற்று மண்டலம் எந்த அளவுக்கு மாசுபட்டுப் போயிருக்கிறது என்பதையும், இதில் வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகைக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறது என்பதையும், நான் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. இந்த நிலைமை இன்னமும் மோசமாகாமல் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்குமே உண்டு. அதனால்தான், அரசாங்கம் வாகனங்களி லிருந்து வெளிப்படும் புகை இன்ன அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடு வைத்துள்ளது.
அதன்படி, வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்களுடைய வாகனங்களை மாசுக் கட்டுப்பாட்டு பரிசோதனைக்குட்படுத்தி, சான்றிதழ் பெற்று அதையும் வாகனம் ஓட்டுகிறபோது கையில் வைத்திருக்க வேண்டும். இந்தப் பரிசோதனையை, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு பரிசேதனை மையங்களில் மட்டுமே செய்ய முடியும். இதற்கென அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் கட்டணம் செலுத்தி, பரிசோதனை செய்து, சான்றிதழ் பெறவேண்டியது சட்டப்படி கட்டாயமாகும். இந்தச் சான்றிதழ்களுக்கான ஆயுட்காலம் ஆறு மாதங்கள். மாசுக் கட்டுப்பாடு சான்றிதழுடன், கூடவே ஒரு ஸ்டிக்கர் டோக்கனும் கொடுக்கப்படும். அந்த ஸ்டிக்கரை வாகனத்தில் ஒட்டி வைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மாசுக்கட்டுப்பாட்டு பரிசோதனை செய்து, சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனப் பரிசோதனையின்போது, அதிகாரியிடம் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழைக் காட்டவில்லையென்றால், வாகனத்தின் ரகத்துக்கு ஏற்ப அபராதம் வசூலிக்கப்படும்.
1 comment:
alaikum salam
thank u
Post a Comment