Sunday, March 18, 2012

கடன் - எச்சரிக்கை




கடன் வாங்கும் முன்பும் பின்பும்!
கவனிக்க வேண்டியது...
 கடன் அன்பை மட்டும் முறிக்காது; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசரத் தேவைக்காக நாம் கடன் வாங்கும்போது பல விஷயங்களைப் பார்ப்பதே இல்லை. வங்கியிலோ அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிலோ கடன் பெறும்போது அவர்கள் நீட்டும் இடங்களில் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து போட்டுவிட்டு பிறகு சிக்கலில் மாட்டி கொள்வது வாடிக்கையான விஷயமாகிவிட்டது. இதிலிருந்து தப்பிக்க கடன் வாங்கும்போதும், கடனை கட்டி முடித்த பிறகும் சில நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணனிடம் கேட்டோம். கடன் திரும்பச் செலுத்தியவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய விஷயங்களை விலாவாரியாக எடுத்துச் சொன்னார் அவர்.

கடன் வாங்கும் முன்...!

''எந்த விதமான கடன் வாங்கப் போனாலும் சரி, அந்தக் கடன் தொகைக்கான வட்டி எவ்வளவு? திருப்பி செலுத்துவதற்கான காலம் எவ்வளவு, முன்கூட்டியே கட்டினால் அபராதம் உண்டா? இருக்கிறது என்றால் எத்தனை சதவிகிதம் என்பது போன்றவற்றை எழுதி வாங்கிக் கொள்வது அவசியம். கடன் கொடுக்கும் போது எழுதி வாங்கப்படும் கடனுறுதி சீட்டு எனப்படும் பிராமிசரி படிவத்தில் கடனுக்கான வட்டி, திரும்பச் செலுத்தும் காலம், கடன் தொகை போன்றவை சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார்களா என்பதைப் பரிசோதித்த பிறகே கையெழுத்துப் போட வேண்டும்.

கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற பட்டியலை வங்கியிடமிருந்து உரிய அதிகாரியின் கையெழுத்து மற்றும் வங்கியின் முத்திரையுடன் பெற்றுக் கொள்வது அவசியம். வங்கியில் பிராமிசரி படிவத்தை திருப்பித் தரமாட்டார்கள். ஆனால், அதன் மீது 'ரத்து செய்யப்பட்டுவிட்டது' என்று எழுதி வங்கி அதிகாரி கையெழுத்திட்டு வைத்துக் கொள்வார்கள். இதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு கடன் தொடர்பான ஆவணங்களையும், திரும்பச் செலுத்தியதற்கான ஆவணங்களையும் பத்திரமாகப் பாதுகாத்து வாருங்கள். பிரச்னை என்றால் கையிலிருக்கும் ஆவணங்கள் நிச்சயம் உதவும்'' என்றவர், மேலும் கவனிக்க வேண்டிய சிலவற்றையும் அடுத்து விளக்கினார்.

கடன் வாங்கிய பிறகு...!

''வாகனக் கடன் வாங்கும்போது வங்கியின் பெயரில் ஆர்.சி. புக் இருக்கும். கடனைத் திருப்பிச் செலுத்திய பின்பு உங்களது பெயருக்கு ஆர்.சி. புக்கை மாற்றி வாங்கிக் கொள்ள வேண்டும். மேலும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நீங்கள் வாங்கிய கடனை பதிவு செய்து இருப்பார்கள். கடனைத் திரும்பச் செலுத்தியதற்கான சான்றிதழை வங்கியில் இருந்து பெற்று ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் வாகனத்தின் மீது இருக்கும் கடன் ரத்தாகும்.

மனை, வீட்டுப் பத்திரம் போன்ற அசையாச் சொத்துக்களின் ஆவணங்களை அடகு வைத்திருந்தால் கடனை முழுவதும் திரும்பச் செலுத்திய பிறகு ஆவணங்களைச் சரிபார்த்து வாங்கிக் கொள்ளும் அதே நேரத்தில், கடன் பாக்கி இல்லை என்பதற்கான சான்றிதழ் மற்றும் வங்கிக்கு இனி அந்த சொத்து மீது எந்த உரிமையும் இல்லை என்பதற்கான சான்றிதழையும் (liability certificate) வாங்கிக் கொள்வது அவசியம். மேலும், அடமானக் கடனை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் கடனைத் திருப்பிச் செலுத்தியதற்கான ரசீதை வங்கியிலிருந்து பெற்றுக் கொண்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் அடமானத்தை ரத்துச் செய்யவேண்டும்.

நகையை அடகு வைக்கும்போது நகையின் எடையை மதிப்பிட்டு வாங்கும் வங்கிகள் நகையைத் திருப்பும்போது எடை போட்டுத் தருவதில்லை. நகையின் எடை குறைய வாய்ப்பிருப்பதால் நகையை திருப்பும் போதும் எடை போட்டு வாங்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இதை யாரும் செய்வதில்லை. என்னென்ன நகைகளை அடகு வைத்திருக்கிறோம் என்பதை இரு தரப்பினரும் தெளிவாக எழுதி வைத்துக் கொள்வதும் நல்லது'' என்றார்.

மஞ்சள் கடுதாசி...
சிலர் ஆ..ஊ.. என்றால் மஞ்சள் கடுதாசி கொடுத்திருவேன் என்று மிரட்டல் தொனியில் சொல்வதுண்டு. ஆனால் உண்மையில் மஞ்சள் கடுதாசி கொடுக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும் அதன் கஷ்டங்கள் என்னவென்று.

மஞ்சள் கடுதாசி என்ன சூழ்நிலைகளில் கொடுக்கப்படும்? அதனால் ஏற்படும் விபரீதங்கள் என்னென்ன? அவற்றிலிருந்து மீள என்ன வழி? என்கிற கேள்விகளுக்கான பதில் முக்கியமானவை. பலருக்கும் தெரியாதவை.

கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை, கடன் காரணமாக ஊரைவிட்டு ஓடிவிடுவது, என்னால் கடனைத் திரும்பச் செலுத்த இயலாது என கடன்பட்டவருக்கு கடிதம் போடுவது போன்ற காரணங்களால் 'ஆக்ட் ஆஃப் இன்சால்வன்சி' சட்டத்தின்படி அவரை நீதிமன்றம் நொடிந்தவர் என்று அறிவிக்கும். நீதிமன்றம் அப்படி அறிவித்த அன்றையத் தேதி வரை அவருக்குள்ள கடன்களை, அவர் பெயரில் உள்ள எல்லா சொத்துகளையும் ஜப்தி செய்து, கடன் கொடுத்தவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும்.

அதன்பின் நீதிமன்றத்தில் தன்னை டிஸ்ஜார்ஜ் செய்யச் சொல்லி மஞ்சள் கடுதாசி கொடுத்தவர் மனு செய்ய வேண்டும். நீதிமன்றமானது, மஞ்சள் கடுதாசி கொடுத்தவரை அதிலிருந்து விடுவித்துவிட்டால் பிறகு அவர் புது வாழ்கையை ஆரம்பிக்கலாம்; புதிய தொழிலும் தொடங்கலாம். அவரை பழைய கடன் ஏதும் தொடராது. ஆனால் வங்கியிலோ, சமுதாயத்திலோ நொடிந்தவர் என நீதிமன்றம் அறிவித்தவருக்கு உரிய மரியாதை கிடைப்பது கஷ்டம். வங்கியில் கடன் கிடைப்பது போன்ற விஷயங்களில் சிக்கல் ஏற்படும். எனவே தேவைக்கு மீறி கடன் வாங்கி அவஸ்தைப்படுவதை விட்டு கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தி இது போன்ற சிக்கலில் மாட்டாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

No comments: