Wednesday, May 8, 2013

கடன் வாங்கி கார் வாங்கினீங்களா?

கடன் வாங்கி கார் வாங்கினீங்களா?

இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.

பேங்கிலோ அல்லது தனியார் நிதி நிறுவனங்களிலோ கடன் வாங்கி கார் அல்லது பைக் வாங்கியுள்ளீர்களா? அதில் உள்ள நுணுக்கங்களைத் தெரிந்திருக்கிறீர்களா? பெரும்பாலானவர்கள் அதைப் பற்றி கவலைப் படுவதில்லை. இந்த விவகாரத்தில் உள்ள வில்லங்கங்களை தெரிந்து கொள்வது நல்லது.

காருக்கு கடன் வாங்கும்போது பேங்க் ஆக இருந்தால், ஒரு பத்து கையெழுத்துகளும் தனியார் நிதி நிறுவனமாக இருந்தால் ஒரு நூறு கையெழுத்துகளும் வாங்கியிருப்பார்கள். புது கார் அல்லது பைக் வாங்கும் கிளுகிளுப்பில் நீங்கள் அவர்கள் காட்டிய இடத்திலெல்லாம், ஏதோ நீங்கள்தான் ரிசர்வ் பேங்க் கவர்னர் என்ற நினைப்பில், கையெழுத்து போட்டிருப்பீர்கள்.

ஒவ்வொரு கையெழுத்தும் ஒவ்வொரு கண்ணிவெடி என்பது பின்னால்தான் உங்களுக்குத் தெரியவரும். கார் அல்லது பைக் உங்கள் பேரில்தான் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு உங்கள் பெயர்தான் ஆர்.சி. புஸ்தகத்தில் (இப்போது புஸ்தகம் ஏது, வெறும் ஒரு சிங்கிள் ஷீட்தான்) இருக்கும். நீங்களும் ஆஹா, நம் கார் என்ற மாயையில் சந்தோஷப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். இதுதான் ஒரிஜினல் மாயை. அந்தக் காரின் நிஜ சொந்தக்காரன், அந்த பேங்கோ அல்லது நிதி நிறுவனமோதான்.

அவர்கள் நீங்கள் எப்போது தவணை கட்ட மறக்கிறீர்கள் என்று கண் கொத்திப் பாம்பாக காத்திருப்பார்கள். ஒரு தவணை கட்ட மறந்தீர்களோ, உங்கள் காரைப் பிடுங்கிக்கொள்வார்கள். நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது. சட்டம் அவர்கள் பக்கம். இந்த மாதிரி தவணை கட்டாதவர்களின் காரைப் பிடுங்க ஒரு தனி ஏஜென்சி வைத்திருக்கிறார்கள். அவர்கள் உங்களைக் கண்காணித்து, நீங்கள் ஆள் அரவமில்லாத ரோட்டில் தனியாகப் போய்க் கொண்டிருக்கும்போது, நான்கு பேராக வந்து உங்களை காரிலிருந்து இறக்கி விட்டு விட்டு, காரை ஓட்டிக்கொண்டு போய்விடுவார்கள்.

பிறகு நீங்கள் அவர்களிடம் நடையாய் நடந்து, பல ஏச்சுகள் வாங்கி, தண்டங்கள் பல அழுது உங்கள் காரைத் திருப்பி எடுத்து வரவேண்டும்.

பிறகு நீங்கள் தவறாமல் தவணைகளைக் கட்டி முடித்து விடுவீர்கள். ஆஹா, கார் நம்முடையதாகி விட்டது என்று சந்தோஷப்படுவீர்கள். அது அற்ப சந்தோஷம் என்று உணறுங்கள். நீங்கள் தவணைகளை முழுவதும் கட்டி முடித்து விட்டாலும், கார் சட்டப்பிரகாரம் அவர்களுடையதுதான். பழைய கால ஓட்டல்களில் "இந்த டம்ளர் ஆனந்தபவனில் திருடியது" என்று என்கிரேவ் செய்திருப்பார்கள். அதுபோல
 ஆர்.சி. புத்தகத்தில் அந்த பேங்கின் பெயரைக் குறிப்பிட்டு, இந்தக் கார் இந்த பேங்க்கிற்கு அடமானமாக வைக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருப்பார்கள்.

இதற்கு "ஹைபாதெகேஷன்" என்று பெயர். இதை கேன்சல் செய்தால்தான் கார் உங்களுடையது என்று உறுதியாகும். பலர் இந்த விவரம் நெரியாமல் இருப்பார்கள். இந்த "ஹைபாதெகேஷன்" ஐ கேன்சல் செய்வது என்பது ஒரு மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது போன்ற வேலை.

இதற்கு அந்த நிதி நிறுவனம் அல்லது பேங்கில் இருந்து NOC அதாவது No Objection Certificate வாங்கவேண்டும். அதில் இந்த காருக்கான தவணைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டாம். இந்த காரின் "ஹைபாதெகேஷன்" ஐ கேன்சல் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று குறிப்பிட்டிருப்பார்கள். கூடவே Form 35 என்று ஒன்று இருக்கிறது. அதை அவர்கள் உங்கள் கையெழுத்துடன் நீங்கள் முதலில் கடன் வாங்கும்போதே வாங்கி வைத்திருப்பார்கள். அதையும் அவர்கள், தங்கள் கையெழுத்துப் போட்டுத் தரவேண்டும்.

இந்த இரண்டையும் நீங்கள் வெற்றிகரமாக வாங்கி விட்டீர்களானால், பாதி கிணறு தாண்டி விட்டீர்கள் என்று அர்த்தம். உடனே ஆர்டிஓ ஆபீசுக்கு ஓடிவிடாதீர்கள். இன்னும் பல படிகள் இருக்கின்றன. கீழ்க்கண்ட ஆவணங்கள் தேவை.

1. Form 35 இரண்டு காப்பிகள் (இது பேங்கில் கொடுத்திருப்பார்கள்)
2. NOC (இதற்கு இரண்டு ஜீராக்ஸ் காப்பி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னால் தேவைப்படும்.
3. ஒரிஜினல் ஆர்சி புக் (ஷீட்)
4. இன்சூரன்ஸ் சர்டிபிகேட் ஜீராக்ஸ் காப்பி
5. உங்களுடைய அட்ரஸ் புரூப் (ரேஷன் கார்டு அல்லது ஒட்டர் ஐடி கார்டு) ஜீராக்ஸ் காப்பி
6. உங்களுடைய பேன் (Pan) கார்டு ஜீராக்ஸ் காப்பி
7. காரின் புகைச் சான்றிதழ் ஜீராக்ஸ் காப்பி
8. பேங்க் அல்லது நிதி நறுவனத்தின் விலாசம் எழுதப்பட்ட, 35 ரூபாய் தபால் ஸ்டாம்ப் ஒட்டிய கவர்

அனைத்து ஜீராக்ஸ் காப்பிகளையும் ஒரு கெஜட்டட் ஆபீசர் அல்லது நோட்டரி பப்ளிக் அவர்கள் அட்டெஸ்ட் செய்யவேண்டும். எல்லா ஒரிஜினல்களையும் கூடவே எடுத்துச்செல்லுங்கள்.

இவைகளை ஒன்றாகப் பின் பண்ணி எடுத்துக்கொண்டு உங்கள் ஆர்டிஓ ஆபீசுக்குப் போகவேண்டும். சுற்றுலாத் தலங்களில் கைடுகள் உங்களை மொய்ப்பார்களே அந்த மாதிரி, இங்கும் தரகர்கள் உங்களை மொய்ப்பார்கள். உங்களால் ஆர்டிஓ ஆபீஸ் கெடுபிடிகளை சமாளிக்க தைரியம் இல்லாவிட்டால் இந்த தரகர்களின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆளைப் பொறுத்து, வண்டியைப் பொறுத்து நூறு ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை சார்ஜ் பண்ணுவார்கள்.

நீங்கள் கார் வாங்கிய பின் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தீர்களானால் அதை விட வேறு வினை வேண்டியதில்லை. அந்த நிலையை டீல் பண்ணுவது இன்னொரு பதிவிற்கான விஷயம். அதை அப்புறம் பார்க்கலாம்.

நான் எப்பொழுதும் நேரடியாகத்தான் ஆர்டிஓ ஆபீசை டீல் பண்ணுவது வழக்கம். இந்த மாதிரி கவர்மென்ட் ஆபீசுகளுக்குப் போகும்போது கீழ்க்கண்டவைகளைக் கொண்டு போவது நல்லது.

1.ஸ்டேப்ளர், போதுமான அளவு பின்கள் இருக்கிறதா என்று செக் பண்ணிக்கொள்ளுங்கள்.
2. திக்காக எழுதும் ஸ்கெட்ச் பேனா, சாதாரணப் பேனாக்கள் இரண்டு, சிகப்பு இங்க் பேனா ஒன்று
3. பெவிஸ்டிக் கோந்து
4. குண்டூசிகள்
5. கெட்டி நூலும் அதற்குத் தகுந்த ஊசியும்.

ஆர்டிஓ ஆபீசுக்குள் முதல் முறையாகச் செல்லுகிறீர்க்ள என்றால் அங்குள்ள நடைமுறைகள் தலையும் புரியாது வாலும் புரியாது. கொஞ்சம் நிதானமாக நாலு பேரை விசாரித்து, உங்களுக்கான பணம் வாங்கும் கவுன்டரைக் கண்டு பிடியுங்கள். அங்கு இருக்கும் க்யூவில் சேர்ந்து கொள்ளுங்கள். க்யூவின் நீளம் உங்கள்
 அதிர்ஷ்டத்தைப் பொருத்து பெரிதாகவோ சிறிதாகவோ இருக்கும்.

"ஹைபாதெகேஷன்" கேன்சல் செய்ய கட்டணம் 125 ரூபாய். சரியான சில்லறை கொண்டுபோவது அவசியம். பணத்தை வாங்கிக்கொண்டு ஒரு கம்ப்யூட்டர் ரசீது கொடுப்பார்கள். அது இரண்டு பாகமாக இருக்கும். ஒரு பாதியை கிழித்து உங்கள் Form 35 ல் ஒட்டவும். பிறகு இதைக்கொண்டு போய் எந்த கவுன்டரில் கொடுக்கவேண்டுமென்று விசாரித்து அங்கே கொடுக்கவும். அங்கேயும் க்யூ இருக்கும். அங்குள்ள நபர் உங்களை ஒரு நொடியில் எடை போட்டு விடுவார். சரி, ஒன்றும் பெயராது என்று முடிவு கட்டி, உங்கள் விண்ணப்பத்தை வேண்டா வெறுப்பாக வாங்கி வைத்துக் கொள்வார்.

மறு நாள் 5 மணிக்கு வந்து உங்கள் ஆர்சி புக்கை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்வார். அவரிடம் அதற்கு மேல் ஒன்றும் கேட்க முடியாது. அவ்வளவுதான். மறுநாள் மாலை 5 மணிக்குப் போய், இதற்குண்டான கவுன்டரை விசாரித்து அறிந்து அங்கு போனால் அந்தக் கவுன்டரில் உள்ள ஆள் அப்போதுதான்
  டீ சாப்பிடப்போயிருப்பார். அரை மணி நேரம் கழித்து அவர் வருவார். வந்து என்ன வேண்டும் என்று நம்மை பார்வையாலேயே கேட்பார்.

நாம் ஆர்சி புக் என்று இழுத்து, ரசீதைக் காண்பித்தால் பத்து நிமிடம் தேடி அதை எடுத்துக் கொடுப்பார். அதை வாங்கிக்கொண்டு அப்பாடா என்று வீட்டிற்குத் திரும்ப வேண்டியதுதான். ஆனால் இந்த விஷயம் இத்துடன் முடியவில்லை.

"ஹைபாதெகேஷன்" கேன்சல் செய்யப்பட்ட ஆர்சி புக்கின் ஜீராக்ஸ் காப்பியும் NOC யின் ஒரு காப்பியையும் இணைத்து உங்கள் காரை இன்சூரன்ஸ் செய்திருக்கும் கம்பெனிக்கு அனுப்பவேண்டும். அவர்களிடம் இருந்து இதற்கான ஒப்புதல் வரவேண்டும். அப்போதுதான் இந்த விவகாரம் முடிந்தது என்று அர்த்தம்.

இந்த வேலை செய்தவர்கள், வீடு கட்டுவதோ, கல்யாணம் நடத்துவதோ கஷ்டம் என்று சொல்லவே மாட்டார்கள்.

http://swamysmusings.blogspot.com/2013/05/blog-post_8.html



--
*more articles click*
www.sahabudeen.com


No comments: