Saturday, June 15, 2013

உடலினை உறுதி செய்!

தாதுப் பொருட்கள் (Minerals)
உணவில் காணப்படும் தாது உப்புகள் உடலில் பல இன்றியமையாத பணிகளைச் செய்கின்றன. தாதுப் பொருட்களாவன :
அ. கால்சியம் ஆ. துத்தநாகம் இ. இரும்பு ஈ. பொட்டாசியம் உ. மெக்னீசியம் ஊ. சோடியம்
வைட்டமின்களைப் போலவே தாதுப் பொருட்களையும் உடல் உறுப்புகள் தயாரித்து விட முடியாது. எனவே, இவற்றையும் உண்ணும் உணவு மூலமாகத்தான் உடல் பெறவேண்டும். இவை அடங்கிய உணவுகளாவன:
அ. பால் ஆ. பாலாடைக்கட்டி இ. மாமிசம் ஈ. முட்டை உ. கடலை ஊ. பீன்ஸ் எ. விதைகள்
ஏ. எலுமிச்சை ஐ. ஆப்பிள் ஒ. வாழைப்பழம் ஓ. உருளைக்கிழங்கு
ஆரோக்கியமான உணவு அதாவது முழு தானிய அரிசி மற்றும் கோதுமை, பழ வகைகள் மற்றும் காய்கறிகள் உண்ணும்போது உடலுக்குத் தேவையான வைட்டமின்களும் மினரல்களும் கிடைத்து விடுகின்றன. வைட்ட மின்கள் அல்லது மினரல்கள் தினமும் தேவைப் படுவதாலும் இதனை உடல் தானாக தயாரித்துக் கொள்ளாது என்பதாலும் இவை அடங்கிய உணவை தினமும் உண்ணுதல் அவசியமாகிறது. மேற்சொன்ன உணவு வகைகளை வழக்கமாக உண்ணாதவர்கள் மருத்துவரின் ஆலோ சனையைக் கேட்டு வைட்டமின் மாத்திரையைச் சாப்பிடுவது அவசியமாகிறது.
உப்பு (Salt)
நாம் அன்றாடம் உண்ணும் ஒரு தாதுப் பொருள் உப்பு. இது சோடியம் குளோரைடு என்னும் வேதிப் பொருளாகும். ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 6 கிராம் உப்பு (2 கிராம் சோடியம்) போதுமானது. ஆனால், நாம் நமது தேவைக்கு அதிகமாகவே தினமும் உப்பு சாப்பிட்டு வருகிறோம். இது ஒரு பழக்கமாகி விட்டதால் உப்பின் சுவை நமக்கு மிகவும் பிடித்து விட்டது. அதிக உப்பு உடலில் பல ஆபத்துகளை விளைவிக்கும். உடலில் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்துவதுடன் உடலில் உள்ள தண்ணீரை வெளியேற அனுமதிக்காமல் தேக்கி விடும். தொடர்ந்து இந்நிலை நீடித்தால் நச்சுப் பொருட்கள் வெளியேறாமல் உடலில் தேங்கி விடும். இதனால் உடல் நலம் கெட்டுவிடுகிறது.
நாம் உண்ணும் பல வகை உணவுகளில் தேவைக்கு அதிகமாகவே உப்பு உள்ளது. மீன், மாமிசம், ஆகியவற்றைச் சமைக்க அதிக உப்புச் சேர்க்கப்படுகிறது. எண்ணையில் பொரித்த சிப்ஸ் போன்ற உணவில் அதிகமாக உப்பு உள்ளது. நாம் விரும்பி உண்ணும் ஊறுகாயில் கூட அதிகப்படியான உப்பு உள்ளது. ஆக, நாம் தேவைக்கதிகமான உப்பினை அன்றாடம் உட்கொள்கிறோம் என்பது மட்டும் உறுதி யாகிறது.
உடலில் தேவைக் கதிகமாக உப்பு சேர விடாமல் தடுக்க ஊறு காய் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது. சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்றால் மிக குறைந்த அளவுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதே போல எண்ணெயில் பொரித்த சிப்ஸ் போன்ற உணவு வகைகளையும் சாப்பிடுவதால் உப்பின் அடர்த்தி குறைக்கப்பட்டு பொட்டா சியம் என்ற தாதுப்பொருளின் கிரகிப்பு அதிகப்படுத்தப்படுகிறது. இது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சுருங்கச் சொன்னால், உடல்நலம் காக்க உப்பின் அளவைப் பெருவாரியாக குறைத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் (Water)
முழு உடல்நலத்திற்கு என்னென்ன உணவு வகைகள் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இதுவரை நாம் சிந்திக்காத ஒரு வகை உணவு இருக்கிறது. அது திரவ உணவு. அதுதான் தண்ணீர். தண்ணீரும் ஓர் உணவே.
'நீரின்றி அமையாது உலகு' என்றார் திருவள்ளுவர்.
நீரால் ஆனது இவ்வுலகம். நீரால் ஆனவை உயிரினங்கள். நாம் வாழும் பூமிகூட 72 சதவீதம் தண்ணீரைக் கொண்டதுதான். மனித உடல் மற்றும் தாவர உடல் கூட 80 சதவீதம் நீரால் ஆனது எனும்போது நீர் எவ்வளவு முக்கியமானது என்று புரியும். உடலில் 80 சதவீதம் நீர் என்பதால், அந்த நீரின் அளவு குறை யாமலும், அதிகமாகாமலும் பராமரித்தால்தான் ஒவ்வொரு அங்கமும் அதன் பணிகளைச் செவ்வனே செய்ய முடியும். இரத்தத்திலும், செல்களிலும், ஹார்மோன்களிலும் நீரளவு சரியாக இருந்தால்தான் உடலில் Homeostatis என்ற சமச்சீர்நிலை தொடர்ந்து நீடிக்கும்.
உடலில் தண்ணீரின் அளவு குறைவதை (Dehydration) நீரிழப்பு என்கிறோம். வயிற்றுப்போக்கால் அவதிப் படுகிறவர்களுக்கு உடலில் அதிக நீர் தேவைப்படுகிறது. அப்போது கூட மருத்துவர்கள் உப்பு கலந்த நீரைக் கொடுப்பார்கள். ஆனால் கிராமப்புறங்களில் விவரம் தெரியாமல் தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிடுவார்கள். இது மிகவும் ஆபத்தானது.
ஓர் ஆரோக்கியமான மனிதனுக்கு ஒரு நாளுக்கு 1.6 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதைக்கூட ஒரே வேளையிலோ அல்லது இரண்டு வேளைகளிலோ குடிப்பது நல்லதல்ல. அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தும் போது உடலில் உள்ள சோடியத்தின் அடர்த்தி
(Concent ration) குறைந்துவிடுவதால், ஹைப்போரைட்ரிமியா என்ற நோய் ஏற்படுகிறது. இந்நோய் கண்டவர்கள் கோமா நிலைக்குக் கூட தள்ளப்படுவார்கள். அதுவும் சிறுநீரகக் கோளாறு, அதிக இரத்த அழுத்தம், உடலில் குறைந்த உப்பின் அளவு போன்ற நோய் உள்ளவர்கள் தேவைக்கு அதிகமாக தண்ணீர் அருந்தவே கூடாது. நோயினால் பழுதடைந் திருக்கும் சிறுநீரகத்தால் அதிக கொள்ளளவு தண்ணீரைக் கையாள முடியாமல் போய் விடுவதால் தண்ணீரே விஷமாக மாறிவிடுகிறது.
வெகுநேரம் நீர் அருந்தாமல் இருப்பதால் உடலில் நீரின் அளவு குறைவாகி, சோடியத்தின் அடர்த்தி அதிகமாகி நோய் வர காணமாகிவிடும். எனவே பகல் நேரத்தில் 8 முறைதண்ணீர் அருந்துவது மிகவும் நல்லது ஆகும். இப்படி இரண்டு மணி நேரத்தில் ஒரு முறை 200 (ஒரு டம்ளர்) தண்ணீர் அருந்துவதால் உடலுக்குத் தேவையான நீர் சரியான நேரத்தில் கிடைக்கிறது. இதனால் பெருவாரியான உடல் நோய்களையும் மனநோய்களையும் தவிர்த்துவிடவும் முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சுத்தமான நீரையே அருந்தவேண்டும். ஜலதோஷம், காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, வைரஸ் காய்ச்சல் ஆகிய நோய்கள் தண்ணீரின் மூலம் பரவுகின்றன. நல்ல சுத்தமான நீர் அருந்துவதன் மூலம் இந்த நோய்களைத் தவிர்த்து விடலாம். இப்போ தெல்லாம் மக்கள் மினரல் வாட்டர் வாங்கிக் குடிக்கிறார்கள். இதுவும் ஒரு நல்ல பழக்கம்தான்.

தண்ணீர் மருத்துவம்
காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கிறார்கள் சிலர். இதனால் நோய் வராமல் உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்க முடியும் என்கிறார்கள். ஆனால், எந்த ஆராய்ச்சி யாளரும் இதனை நல்ல ஆரோக்கிய மானமுறை என்று சொன்னதாகத் தெரியவில்லை. மாறாக ஒரே தடவையில் 200 மில்லிக்கு மேல் நீர் அருந்து வது கூட நல்லது இல்லை என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதிகாலையில் 200 மிலி சுத்தமான நீர் அருந்தலாம். இது உடலுக்கு நல்லதும் கூட. 1.6 லிட்டர் தண்ணீரை ஒரு நாள் முழுவதும் 8 வேளையாகப் பிரித்துக் குடிக்க வேண்டும். தாராளமாக பழங்களும், காய்கறிகளும் உண் டால் தண்ணீரின் அளவை சற்று குறைக்கலாம்.
தொற்று நோய்கள்
ஒருவருக்கு கண்வலி வந்தால் பின்னர் மற்றஅனைவருக்கும் தொற்றிக் கொள்வதைப் பார்த்திருக்கிறீர்கள். அதைப்போல ஜலதோஷம் மற்றும் வைரஸ் காய்ச்சல். இவை அனைத்தும், தொற்றுநோய்கள் ஆகும்.
நாம் சுகாதாரமாக இருப்பதாலும், நோய் கண்ட ஒருவருக்கு அருகில் போகாமல் இருப்பதாலும் இது போன்ற தொற்று நோய் களைத் தவிர்த்துவிடலாம். நோய் கண்டவர் ஒருவர் உங்கள் அருகில் வந்து தும்மினாலே அவரது நோய் உங்களைத் தொற்றிக்கொள்ளும். தொற்றுநோய் வந்தவர் அருந்திய தண்ணீர் குவளையில் நாம் தண்ணீர் அருந்தக்கூடாது என்ற அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை நம்மில் பலர் பின்பற்றுவதில்லை. சமீபத்தில், ஒரு திருமண மண்டபத்தில், கை அலம்பியதும் ஒருவர் தனது கைக்குட்டையை நீட்டி துடையுங்கள் என்றார். பலர், வழக்கமாக கைக்குட்டையைக் கொடுத்து உதவுகிறார்கள். ஆனால், இப்பழக்கம் மிகப்பெரிய சுகாதாரக்கேடு ஆகும். மற்றவர்கள் கைகுட்டையில் நாம் கை துடைக்கக் கூடாது. உணவினைக் கூட கையால் அள்ளி மற்றவர்களுக்குப் பரிமாறக்கூடாது. தொற்று நோய்ப் பரவ இதைவிட எளிதான வழி வேறு இல்லை.
குடிக்கும் நீரின் மூலம் பலநோய்கள் பரவுகின்றன என்று பிரெஞ்சு நாட்டு விஞ்ஞானி லூயிபாஸ்டர், 1857 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். நோய்கள், கிருமிகளால்தான் ஏற்படுகின்றன என்று கண்டுபிடித்தவரும் இவரே. வெறிநாய்க் கடி (Rabies) என்னும் வைரஸ் நோய்க்கு தடுப்பூசியும் கண்டுபிடித்தார். பால் குடிப்பதன் மூலம் பல நோய்கள் வருவதைக் கண்டுபிடித்த இவர், பாலை 600இ நிலைக்கு காய்ச்சி பின்னர் குளிர வைத்துக் குடித்தால் நோய்கள் வருவதில்லை என்பதை உலகிற்கு உணர்த்தினார். இவர் சொன்ன இந்த முறைக்கு 'பாஸ்ச்சுரை சேசன்' என்று பெயர். இன்றும் நாம் வாங்கி அருந்தும் பால் இந்த 'பாஸ்ச்சுரைசேசன்' என்றமுறைப்படி சூடாக்கி பின்னர் குளிர வைத்த பாலாகும். இந்தக் கண்டுபிடிப்புகளால் லூயிபாஸ்டர் உலகின் சிறந்த மருத்துவ விஞ்ஞானி (The Greatest and the most influencial Medical Scientist) என்று கருதப்படுகிறார்.
இன்று, இத்தனை ஆண்டுகள் ஆகி யிருந்தும் நோய்க்கிருமிகள் நம்மை அணுகாமல் பார்த்துக் கொள்ளும் பழக்க வழக்கங்கள் நம் நாட்டில் எல்லோரிடமும் வந்துவிடவில்லை. ஆறுகள், தெருக்கள், பேருந்துகள், இரயில்கள் என்று எல்லா இடங்களிலும் சுகாதாரக்கேடு மலிந்திருக்கிறது. எங்கும் நோய்க்கிருமிகள் நிறைந்திருக்கின்றன. நாட்டில் ஆறுகள் எந்த அளவுக்கு மாசடைந்து இருக்கின்றன என்று பாருங்கள். கூவம் நதியே இன்று ஒட்டுமொத்த சாக்கடை ஆகிவிட்டது. பொது இடத்தில் மலம் கழிப்பதைப் போன்ற கொடிய சுகாதாரச் சீர்கேடு இருக்க முடியுமா? இந்த நிலை மாறவேண்டும்.
சுத்தமான நீரை அருந்தினால், பல நோய்களிலிருந்துத் தப்பிக்கலாம். வெளியூருக்குச் செல்லும்போது கவனமாக இருக்கவேண்டும். மினரல் வாட்டர் கிடைக்கவில்லை என்றால் நீரினைக் கொதிக்க காய்ச்சிய பின்னர்தான் குடிக்கவேண்டும். சிலர் தண்ணீரைச் சற்று சூடாக்கி பின்னர் குடிக்கிறார்கள். இதில் எந்தப் பயனும் இல்லை. மாறாக நோய் ஏற்படுத்தும் சில வகை பாக்டீரியாக்கள் வெந்நீரில் உயிர் பெற்று, நம்மைத் தாக்குகின்றன. எனவே தண்ணீரைக் கொதிக்க வைத்த பின்னரே குடிக்க வேண்டும்.
சுத்தமான நீரை எட்டு முறை, 200 மி.லி. வீதம் (ஒரு கிளாஸ் தண்ணீர்) தினமும் அருந்துங்கள். உடல்நலம் மேம்படுவதை நீங்கள் உணருவீர்கள்.
உணவினைத் தெரிவு செய்தல்
எல்லா வகை ஊட்டச்சத்துகளும் அடங்கிய உணவு உண்ண வேண்டும். ஊட்டச் சத்து உணவு நமக்குத் தேவையான கலோரியையும் தரவேண்டும். அப்படி என்னென்ன ஊட்டச்சத்துகள், எவ்வளவு தேவை என்பதைப் பார்ப்போம்.
இதில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்துகளில்தான் ஆற்றல் (கலோரி) அடங்கியுள்ளது. எனவே நமக்குத் தேவையான அளவிற்கு மேல் இந்த மூன்று ஊட்டச்சத்துகளை உட்கொள்ளாமல் இருந்தாலே உடல் எடை கூடாது.
ஊட்டச்சத்து எவ்வளவு உட்கொண்டால் அது உடலில் எவ்வளவு சக்தியை (கலோரி) உருவாக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு கிராம் கார்போஹைட்ரேட்டுகள் நான்கு கலோரிகளைத் தரும். ஒரு கிராம் புரதம் ஐந்து கலோரிகளைத் தரும். ஒரு கிராம் கொழுப்பு ஒன்பது கலோரிகளைத் தரும். எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஏன் சொல்கிறார்கள் என்பது இப்போது புரிகிறதா?
ஆனால் ஒன்று, இந்த ஊட்டச்சத்துகளை அளவாக சாப்பிட வேண்டுமே தவிர சாப்பிடக் கூடாது என்பதல்ல. இன்னும் சொல்லப் போனால் நாம் உண்ணும் உணவில் இந்த மூன்று உணவுகளும் குறிப்பிட்ட விகிதத்தில் இருப்பது அவசியமாகிறது.
நமக்கு அவசியமான கலோரிகளில் 65 சதவீதம் கார்போஹைட்ரேட்டுகளிலிருந்தும், 12 சதவீதம் புரதத்திலிருந்தும், 23 சதவீதம் கொழுப்பிலிருந்தும் வருவதாக இருக்க வேண்டும். உணவு வகைகளையும் அவ்விதமே நாம் தேர்வு செய்தல் வேண்டும்.
இது தவிர வைட்டமின்களும், மினரல்களும் உணவில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
மேலே கண்ட ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவுகளை நமது தேவைக்கேற்ப உண்ண வேண்டும். அதாவது உடல் உழைப்பு இல்லாதவர்கள் குறைவாகவும், உடல் உழைப்பு உள்ளவர்கள் அதிகமாகவும் உண்ண வேண்டும்.
எந்த உணவு வகைகளில் எந்த ஊட்டச்சத்து இருக்கும் என்பது தெரிந்து விட்டது. ஆனால் அது மட்டும் போதாது. நாம் தினமும் உண்ணும் உணவு பதார்த்தங்களில் எத்தனை கலோரிகள் இருக்கிறது என்று தெரிந்தால்தான் சரியான கணக்குப் பார்த்து தேவைக்கேற்ப உணவு உட்கொள்ள முடியும்.
http://thannambikkai.org/2009/04/01/2328/

--
*more articles click*
www.sahabudeen.com


No comments: