Monday, June 3, 2013

பிரசவத்துக்குப் பிறகு... அம்மா... குண்டம்மா ஆவது ஏன்?-

பிரசவத்துக்குப் பிறகு... அம்மா... குண்டம்மா ஆவது ஏன்?-

'ஐஸ்வரயா ராய் உண்டானாலும் நியூஸ். குண்டானாலும் நியூஸ்!' என்பது இப்போது பிரபல ஜோக். ரொம்ப காலமாகவே அவர் 'ஃபிஃப்டி கே.ஜி. தாஜ்மஹால்' ஆகத்தான் இருந்தார். இப்போது தாய்மை தந்த பூரிப்பில் கொஞ்சம் குண்டடித்து இருக்கிறார். பிரசவத்துக்கு முன் மட்டும் அல்ல; பிரசவத்துக்குப் பின்னும் ஐஸ்வர்யாதான் ஹாட் டாபிக்.
ஐஸ்வர்யாவின் எடை கூடிவிட்டதைப் பற்றிய விவாதங்கள் அனல் பரப்புகின்றன. நமக்கு இந்த விவாதம் தேவையற்றது. ஆனால், குழந்தைப் பேறுக்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பதுகுறித்த அலசல் நிச்சயம் அவசியம். இதுகுறித்து மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத்திடம் கேட்டோம்.
'
தன்னுடைய சராசரி எடையைக் காட்டிலும் கர்ப்ப காலத்தில் 10 முதல் 12 கிலோ வரை ஒரு பெண்ணுக்கு எடை அதிகரிப்பது இயல்புதான். ஆனால், குழந்தை பிறந்த பிறகு ஆறு முதல் ஏழு கிலோ வரை உடல் எடை குறைவது இயல்பாக நடக்கும் விஷயம். மீதம் உள்ள எடையைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறைக்க வேண்டும்.

நம் ஊரில், 'தாய்ப்பால் கொடுக்கப்போகிறாய், இரண்டு பேருக்கும் சேர்த்துச் சாப்பிடு' என்று பெரியவர்கள் கூறுவார்கள். இதனால், அளவுக்கு அதிகமான உணவையும் கொழுப்பு நிறைந்த உணவுகளையும் இளம் தாய்மார்கள் சாப்பிட்டுவிடுகிறார்கள். உடல் எடை குறையாமல் இருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம். அதேபோல பூண்டு நல்லதுதான். ஆனால், பூண்டை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால், உடல் எடை கூடிவிடும். சுகப் பிரசவம் ஆனவர்களாக இருந்தாலும்சரி, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டவர்களும்சரி... மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு, எளிய உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் சாப்பாட்டை மட்டும் அதிகரித்தால், எடை குறையாது. மாறாக எடை கூடிவிடும்.
தைராய்டு சுரப்புகளில் குறைபாடு, ஹார்மோன் சமன்பாட்டில் பாதிப்பு, கர்ப்பகாலச் சர்க்கரை நோய் போன்ற சில காரணங்களாலும் உடல் பருமன் ஏற்படலாம். ஆனால், இவற்றுக்கான வாய்ப்புகள் குறைவு'' என்கிறார் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத்.


'
ஆரோக்கிய உணவு, மிதமான உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை மாற்றம் ஆகியவற்றின் மூலம் கர்ப்பக் காலத்தில் அதிகரித்த கூடுதல் உடல் எடையை இரண்டே மாதங்களில் குறைத்துவிட முடியும்'' என்று நம்பிக்கை ஊட்டுகிறார் உடல் எடை மேலாண்மை ஆலோசகரான டாக்டர் சுனிதா ரவி.
''
கர்ப்பக் காலத்தில் உடல் எடை அதிகரித்த எல்லோரும் உடனடியாக உடல் எடையைக் குறைத்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் அளிக்கும் முதல் அட்வைஸ், 'பொறுமை' என்பதுதான். உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்துவிடவில்லை. எடை அதிகரிக்க ஒன்பது மாதங்கள் ஆனது. அதனால், உடல் எடைக் குறைப்பு என்பது மிக வேகமாக நடந்துவிடாது.  மற்ற பெண்களுடனோ, சினிமா பிரபலங்களுடனோ தங்களை ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்பதுதான் முக்கிய அறிவுரை' என்றவர் உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ நான்கு வழிகளையும் சொன்னார்.

போதுமான அளவு சாப்பிடுங்கள்
குழந்தைப் பேறு என்பது மனதளவில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த நிலையில் நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டோடு இருந்தால், அது மேலும் மன இறுக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, உணவுக் கட்டுப்பாடோ அல்லது சாப்பிடாமல் இருப்பதோ வேண்டாம். பசிக்கும்போது சாப்பிடுங்கள். நொறுக்குத் தீனிக்குப் பதிலாக, பழங்கள், காரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளைச் சாப்பிடுங்கள். இவை உங்கள் கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், உங்கள் தினசரி உணவில் 300 கலோரி கூடுதலாகச் சேர்த்தால் போதும். நீங்கள் சாப்பிடும் உணவு ஊட்டச் சத்து நிறைந்ததாகவும் கொழுப்பு குறைந்ததாகவும் இருக்கட்டும். அதிக சர்க்கரை, க்ரீம், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

தண்ணீர் குடியுங்கள்
உடலின் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க, நாளன்றுக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கவும் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டவும் உதவும். மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் போக வேண்டும். இது சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்கும்.
கை கால்களுக்கும் வேலை கொடுங்கள்
உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், மன அழுத்தத்தை வெளியேற்றி நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். இதற்காக ஜிம்முக்குச் சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதும். யோகா செய்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் தீவிர உடற்பயிற்சி கூடாது. அது பாலில் லாக்டிக் அமிலத்தின் அளவை அதிகரித்துப் புளிப்புத் தன்மையைக் கூட்டிவிடும்.

நேரத்துக்குத் தூங்குங்கள்
இரவு நேரத்தில் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் பசித்தால் காய்கறி மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிடலாம். குழந்தை தூங்கி எழும் நேரத்தில் நீங்களும் எழுங்கள். சரியாகத் தூங்காமல் இருப்பதும் தேவைக்கு அதிக நேரம் தூங்குவதும் உடல் எடையை அதிகரித்துவிடும். தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது நல்லது.
பெரும்பாலும் இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகுதான் பெண்களுக்கு எடை கூடுகிறது. வயது அதிகரிப்பது மற்றும் இரண்டு குழந்தைகளைப் பராமரிப்பதால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவையே இதற்குக் காரணம். முன் எச்சரிக்கையுடன் இருந்தால், உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வளவையும் மீறி உடல் எடை கூடினால், மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதே நலம்.'

http://pettagum.blogspot.in/2012/06/blog-post_416.html



--
*more articles click*
www.sahabudeen.com


No comments: