எது சுன்னா? செய்ததை அப்படியே செய்வதா..?
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கருமத்தை எப்படிச் செய்தார்களோ அதனை அப்படியே செய்வதுதான் ஸுன்னா. அதனை மாற்றிச் செய்தால் சுன்னா புறக்கணிக்கப்படுகின்றது. மாற்றிச் செய்பவர் நபியையே புறக்கணிக்கிறார். எனவே, நபிகளாரின் சுன்னாக்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்."இந்தக் கூற்றை விளங்கிக் கொள்வதற்கான ஒரு முயற்சியே இவ்வாக்கம். இந்தக் கூற்றை விளங்குவதற்கு முதலில் பின்வரும் வினாவை எடுத்துக் கொள்வோம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த அனைத்துக் கருமங்களையும் அவர்கள் செய்தது போலவே செய்ய வேண்டுமா?
சில செயல்களை நபிகளார் செய்தது போலவே செய்ய வேண்டும். அத்தகைய செயல்கள் வரிசையில் முதல் இடம்பெறுவது வணக்க வழிபாடுகளாகும்.
வணக்க வழிபாடுகளான தொழுகை, நோன்பு போன்ற அமல்களில் நபிகளார் எதை, எப்படிச் செய்தார்களோ அதை அப்படியே செய்ய வேண்டும். சில அமல்களை அவர்கள் இரண்டு விதமாகச் செய்திருந்தால் நாமும் இரண்டு விதமாகச் செய்யலாம். சிலதை மூன்று விதமாகச் செய் திருந்தால் நாமும் மூன்று விதமாகச் செய்யலாம். அவற்றுள் ஒன்று ஆதார பலம் கூடியதாக அல்லது குறைந்ததாக இருக்கலாம். எனினும், நபிகளார் செய்த முறைகளில் ஒன்றைப் பின்பற்றுவது ஆகுமானதே.
தொழுகை நேரங்கள், தொழு கையின் ரக்அத்துகள், தக்பீர் முதல் ஸலாம் வரையிலான ஒழுங்குகள், நோன்பு, ஹஜ் என்பவற்றிலுள்ள நடைமுறைகள் என இதற்கான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பிரயாணத்தில் தொழுகையை சேர்த்து சுருக்கித் தொழுவதும் நபிகளாரின் சுன்னாதான். சிலர் அவ்வாறு செய்வதில்லை. காரணம், அவ்வாறு செய்யாமலிருப்பது ஈமானுக்கும் தக்வாவுக்கும் சிறந்தது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
இவற்றில் பர்ளுகளை செய்யும் போதும் சுன்னத்துகளை செய்யும் போதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் செய்தது போலவே செய்ய வேண்டும். இவற்றுள் ஒரு செயலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு, மூன்று விதமாகச் செய்திருக்கிறார்கள் என்பது ஹதீஸ்கள் வாயிலாகத் தெரிய வந்தால் அவற்றில் ஒன்றைச் செய்வது சுன்னாவாகவே கொள்ளப்படும். உதாரணமாக, தக்பீரின்போது கையைப் பலவிதமாகக் கட்டியிருக்கிறார்கள் என ஹதீஸ்களில் காண்கிறோம். அவற்றில் ஒரு முறையைப் பின்பற்றலாம். மற்றொரு முறையை இன்னு மொருவர் பின்பற்றினால் அது சுன்னாவல்ல என்று கூறுவதற்கு எமக்கு அதிகாரமில்லை.
ஸகாத் நடைமுறைகளைப் பொறுத்தவரை ஸகாத் விதியாகும் பொருட்கள், அவற்றின் அளவுகள் போன்ற விடயங்களில் விரிவான ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன. காரணம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் இல்லாத உற்பத்திப் பொருட்கள், விளைச்சல்கள், வியாபாரப் பொருட்கள் பிற்காலத்தில் மலிந்து விட்டன. அவற்றின் ஸகாத் நடைமுறைகள் பற்றியே இத்தகைய ஆய்வுகளும் கருத்து வேறுபாடுகளும் தோற்றம் பெற்றன. எனினும், இத்தகைய கருத்து வேறுபாடு கள் நபிகளாரின் சுன்னாவையே பிரதி பலிக்கின்றன. தொழுகை, நோன்பு, ஹஜ் என்பவற்றில் காலத்தால் மாறும் நடைமுறைகள் இல்லை.
அதேபோன்று காலத்தால் மாறாத ஒழுக்கங்கள் சிலவும் இந்த வரிசையில் இடம்பெறுகின்றன. வலது கால், வலது கையை முற்படுத்த வேண்டிய இடங்கள், இடது கால், இடது கையை முற்படுத்த வேண்டிய இடங்கள். ஆடை அணியும் முறை, உணவு உட்கொள்ளும் ஒழுங்குகள், நித்திரை ஒழுங்குகள், குழந்தை பிறந்தால் செய்ய வேண்டியவை, மனிதன் இறந்தால் செய்ய வேண்டியவை, திருமண ஒழுங்குகள் போன்ற இன்னோரன்ன வாழ்வு ஒழுங்குகள் விடயத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தது போன்று நாமும் செய்ய வேண்டும். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சுன்னாவைப் பின்பற்றுவோராக நாம் மாறலாம்.
இவற்றோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தது போல் செய்ய வேண்டிய மற்றுமொரு நடைமுறையும் இருக்கிறது. அதுவே நற்குணங்களாகும். பணிவு, நாவடக்கம், பயனற்ற வேலைகளில் ஈடுபடாமை, பிறரது குறைகளை அறிந்து கொள்வதிலும் பேசுவதிலும் அக்கறையின்மை, அலட்டலும் முறையீடுகளும் இன்மை, கடுமை, முரட்டு சுபாவங்கள், பிடிவாதம், முரண்படும் குணம், விரைந்து உணர்ச்சிவசப்படுதல், பகை பாராட்டுதல், அடுத்தவரின் துன்பத்தில் இன்பம் காணுதல், தற்புகழ்ச்சி போன்ற இழிவான குணங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நற்குணங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்திருக்கிறார்கள். அனைத்துத் தீய குணங்களும் அவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கியிருக்கின்றன. நற்குணங்கள் விடயத்திலும் நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முற்றிலும் பின்பற்றி நடக்க முயற்சி செய்ய வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த செயல்களில் இன்னும் சில இருக்கின்றன. அவற்றை அவர்கள் செய்ததுபோல அப்படியே செய்ய முடியாது செய்வதும் அவசியமில்லை. மாறாக, எந்த நோக்கத்திற்காக அவர்கள் அவற்றை செய்தார்களோ அந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக நாம் அவற்றைச் செய்ய வேண்டும்.
உதாரணமாக, ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளித்திருக்கிறார்கள் என்பதனால் உலக முஸ் லிம்கள் அனைவரும் அந்தளவு சிறிய பாத்திர நீரில்தான் குளிக்க வேண்டும் என்று வலியுறுத்த முடியாது. அங்கு செயலைவிட செயலின் நோக்கம்தான் முன்மாதிரியாகக் கொள்ளப்படுகிறது. சுத்தம் அல்லது பெருந்துடக்கை நீக்குதல் போன்ற நோக்கங்களே இங்கு முன்மாதிரியாகும். அந்த நோக்கங்களை அடைவதற்காக ஒருவர் ஒரு சிறிய பாத்திரமளவு நீரையும் பயன்படுத்தலாம். ஆற்றிலும் குளிக்கலாம் கடலிலும் குளிக்கலாம். அனைத்தும் சுன்னாக்கள்தாம்.
இதற்கு மற்றுமோர் உதாரணம் நாம் அணியும் ஆடைகளாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல்வேறு ஆடைகள் அணிந்திருப்பதாக ஹதீஸ்களில் வந்துள்ளது. உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் அவர்கள் அணிந்தது போன்ற ஆடைகளை அணிவது தான் சுன்னத்தா என்றால் பதில் "இல்லை" என்பதே. காரணம், ஆடைகள் சுன்னத்தல்ல. ஆடை அணியும் நோக்கம்தான் இங்கு சுன்னத்தாகக் கொள்ளப்படுகிறது. அவ்ரத்தை மறைத்தல், கண்ணியத்தைப் பாதுகாத்தல், அழகாக இருத்தல் போன்ற நோக்கங்களுக்காகவே ஆடை அணியப்படுகிறது. அவ்ரத்தில் கண்டிப்பாக மறைக்க வேண்டிய பகுதி, மேலதிகமாக மறைக்க வேண்டிய பகுதி எனும் விளக்கங்கள் உண்டு. அவற்றோடு ஆண்கள், பெண்கள் அணிய வேண்டிய ஆடைகளுக்கான வரையறைகள் தரப்பட்டிருக்கின்றனவே அன்றி, ஆடையின் வடிவங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படவில்லை.
இந்த வகையில் ஒவ்வொரு நாட்டிலும் வாழ்பவர்கள் அந்தந்த நாட்டின் சீதோஷ்ஷண நிலைக்கேற்ற ஆடைகளை இஸ்லாமிய வரையறைகளைப் பேணி அணிவார்கள் என்றால் அவர்கள் பின்பற்றுவது சுன்னாவைத்தான்.
இவ்வாறு நோக்கங்களை அறிந்து செய்ய வேண்டிய சுன்னாக்களும் இருக்கின்றன. நோக்கங்களை அறிந்தோ அறியாமலோ செய்ததை அப்படியே செய்ய வேண்டிய சுன்னாக்களும் இருக்கின்றன. இந்த இரு சுன்னாக்களுக்குமிடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாத தன் காரணமாக, எது சுன்னா, எது இல்லை என்ற குழப்பம் மக்களிடையே நிலவுகிறது. குறிப்பாக, நோக்கங்களை அறிந்து செய்ய வேண்டிய சுன்னாக்கள் விடயத்தில் நோக்கங்களை விட்டுவிட்டு செயல்களை நாம் முக்கியத்துவப்படுத்தினால் இந்தக் குழப்பம் மேலும் அதிகரிக்கும்.
அதேபோன்று நபிகளார் செய்ததை அப்படியே செய்ய வேண்டிய சுன்னாக்களுக்கு நாம் நோக்கம் கற்பிக்க முற்படவும் கூடாது. அவற்றை அப்படியே செய்து விட்டுச் செல்வதுதான் முறை. அவற்றுக்கு நாங்கள் நோக்கம் கற்பித்தால் அங்கும் சமூகத்தில் தெளிவின்மையும் குழப்பமுமே அதிகரிக்கும்.
வணக்க வழிபாடுகளான தொழுகை, நோன்பு போன்ற அமல்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படிச் செய்தார்களோ நாமும் அப்படியே செய்ய வேண்டும் என்று பார்த்தோம். தொழுகையோடு சம்பந்தப்பட்ட அதானும் அப்படிப்பட்ட ஒரு வணக்கம்தான். அதானை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி அறிமுகம் செய்தார்களோ அதனை அப்படியே சொல்ல வேண்டும். அதானுக்கு முன்னால் ஸலவாத்தை நாம் சேர்த்துவிட்டு நபியின் மீதிருக்கின்ற அன்பினால் நாம் அப்படிச் செய் கின்றோம் என்று எமது செயலுக்கு நாங்கள் நோக்கம் கற்பிக்க முற்படக்கூடாது. அவ்வாறு செய்வது சுன்னாவை மறுக்கும் செயலாகும்.
செய்ததை அப்படியே செய்யாமல் மாற்றிச் செய்து விட்டு நோக்கம் கற்பிப்பதற்கு மற்றுமோர் உதாரணம், அறபா தினத்தின் பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினையை விளங்குவதற்கு பின்வரும் வினா முக்கியமானது:
பிறை ஒன்பதாம் நாள் அறபா தினமா? அல்லது "அறபா" தினம் என ஒரு தினம் இருக்கிறது. அத்தினத்தில் பிறை எட்டாகவும் இருக்கலாம் அல்லது பத்தாகவும் இருக்கலாமா?
உண்மையில் ஒன்பதாம் பிறையன்று அறபாவுக்குச் செல்லுங்கள் என்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அதாவது, ஹஜ்ஜில் அறபா தினமன்று அறபாவுக்குச் செல்லும் நடைமுறையொன்று இல்லை. ஒன்பதாம் நாள் அறபா செல்லும் நடைமுறையே இருக்கிறது.
ஆக, உலகில் எங்கிருந்தாலும் அவர்கள் இருக்குமிடத்தில் ஒன்பதாம் தினமே அவர்களுக்கு அறபா தினமாகும். அவர்களது ஒன்பதாம் தினத்தை பத்தாம் தினமாக மாற்றிவிட்டு எட்டாம் தினத்தை ஒன்பதாம் தினமாக்கி அதை அறபா தினம் என்று நோக்கம் கற்பிக்கும் உரிமை எமக்கில்லை. எட்டாம் நாள் எப்படி அறபா தினமாக மாறும்? இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்ததை அப்படியே செய்யாமல் மாற்றிச் செய்து விட்டு, ஏன் மக்காவில் இன்று அறபாவல்லவா? என நோக்கம் அல்லது காரணம் கற்பிக்க முற்படுவது சுன்னாவுக்கு முரணான செயலாகும்.
எதை அப்படியே செய்வது எதை நோக்கமறிந்து செய்வது என்ற வேறுபாடு தெரியாமல் செய்யும்போது தான் இத்தகைய குழப்பங்கள் தோன்றுகின்றன.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மற்றுமொரு சுன்னா இருக்கிறது. அங்கும் செய்ததை அப்படியே செய்ய வேண்டும் என்பதில்லை. அங்கு ஷரீஆ விதிமுறைகளுக்கும் சட்டங்களுக்கும் கட்டுப்படுவதே சுன்னாவாகும். வியாபாரம், சொத்துப் பங்கீடு போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்துக்கும் எமது காலத்துக்குமிடையில் வியாபார நடைமுறைகள் எவ்வளவோ மாறிவிட்டன. நிதி, நிர்வாகத் துறை நடைமுறைகள் மாறிவிட்டன. பொது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட இத்தகைய நடை முறைகளில் விதிகள், சட்டங்கள் என்பவற்றையே நாம் பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்யும்போது நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சுன்னாவைப் பின்பற்றியவர்களாவோம்.
நிர்வாகத்துறையை உதாரணமாக எடுத்துக் கொண்டால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள் மஸ்ஜிதிலிருந்துதான் பரிபாலனம் செய்திருப்பதைக் காண்கிறோம். அலுவலக முறைகள் இன்றைய ஒரு நவீன அலுவலகத்தில் இருப்பது போன்று நபியவர்களது நிர்வாக முறைமைகளில் இருந்திருக்காது. நாமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கனைப் போன்று மஸ்ஜித்களில் இருந்த வண்ணம்தான் அனைத்து விவகாரங்களையும் நிர்வகிக்க வேண்டும் என்று கூறினால் நாங்கள் சுன்னாவை விளங்கவில்லை என்பது பொருள். இங்கு பொறுப்புணர்வு, தகைமை, அமானிதம், சேவை மனப்பான்மை போன்றவற்றை நிர்வாகத்தில் கடை பிடிப்பதுதான் சுன்னாவாகும். மஸ்ஜிதில் இருந்து நிர்வாகம் செய்வதல்ல.
இன்றைய வியாபார நடைமுறைகளை எடுத்துக் கொண்டாலும், நிலைமை அதே போன்றதுதான். அங்கு வியாபாரத்திற்கான விதிகளையும் சட்டங்களையும் கற்று அந்த சட்டங்களுக்கேற்ப தமது வியாபாரத்தை நடத்திச் செல்வதே சுன்னாவாகும். இன்றைய இஸ்லாமிய வங்கிகள் நபிகளாரின் ஒரு சுன்னாவை (வியாபாரத்தில்) உயிர்ப்பித்திருப்பதை இங்கு குறிப்பிடலாம்.
இவ்வாறு நபிகளாரின் சுன்னாக்களை விடயத்திற்கு விடயம் வேறுபடுத்தி எந்த விடயத்தில் எது சுன்னாவாக இருக்கிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த விளக்கம் இல்லாமல் சமூகத்தை வழிநடத்த முற்படும்போதுதான் குழப்பங்களும் அமைதியின்மையும் ஏற்படுகின்றன. "இஸ்லாத்தைக் தேடிக் கற்பது ஒவ் வொரு முஸ்லிமினதும் கடமை" என்ற நபிமொழியின் அர்த்தத்தை இங்கு நாம் தெளிவாக உணரக்கூடியதாக இருக்கின்றது.
களத்தில் சிலர் சில சுன்னாக்களைக் கற்றிருக்கிறார்கள் சிலதைக் கற்கவில்லை. மற்றும் சிலர் வேறு சிலதைக் கற்றிருக்கிறார்கள். முன்னையவர்கள் கற்றதைக் கற்கவில்லை. இவ்வாறு சிலர் சிலதைக் கற்றாலும் பலர் கற்காமலே இருக்கும் ஒரு சுன்னா இருக்கிறது. அந்த சுன்னா விடயத்தில் தெளிவான விளக்கம் இல்லாத காரணத்தால் இஸ்லாத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் மறுமலர்ச்சி யுக யுகமாகப் பின்தள்ளப்பட்டுக் கொண்டே செல்கிறது. அதுதான் இஸ்லாமியப் பணி அல்லது தஃவா விடயத்தில் நபிகளாரின் சுன்னா எது என்பதாகும்.
இஸ்லாமியப் பணி விடயத்தில் எது சுன்னாவல்ல என்பதை சமூகம் தெளிவாகப் புரிந்திருக்கிறது. எனினும், எது சுன்னா என்பதைத்தான் புரியாமல் இருக்கிறது. உதாரணமாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிராவிலிருந்து தனது பணியைத் துவங்கினார்கள். மனைவியிடம் வந்தார்கள். வரகத் இப்னு நவ்பல் என்பவரிடம் சென்றார்கள். உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார்கள். தாருல் அர்கமில் இரகசியமாகப் பிரசாரம் செய்தார்கள். தோழர்களை ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் அனுப்பினார்கள். தாயிபுக்கு ஹிஜ்ரத் போனார்கள்…
இந்த ஒழுங்கைப் பின்பற்றித்தான் தஃவா பணி செய்ய வேண்டும் அதுதான் சுன்னா என்று சமூகத்தில் ஒருவர் கூடச் சொல்வதில்லை. எனவே, எது சுன்னாவல்ல என்பதை மக்கள் புரிந்திருக்கிறார்கள். எனினும், எது சுன்னா என்பது விளங்காதிருக்கின்றது.
தஃவா பணியில் சுன்னா என்பது நபியவர்கள் அந்தப் பணி மூலம் அடைந்து கொண்ட இலக்குகளை அடைவதாகும். அந்த இலக்குகளை ஒருவரோ ஒரு சமூகமோ ஓர் இயக்கமோ தவறவிட்டால் அவர்கள் தஃவா பணியில் நபிகளாரின் சுன்னாவைப் புறக்கணித்தவர்களாகவே கருதப்படுவர். அது மட்டுமல்ல, தஃவா விடயத்தில் நபியவர்களின் இந்த சுன்னாவைப் புறக்கணிக்கும்போது நாம் ஏற்கனவே குறிப்பிட்ட சுன்னாக்கள் சமூகத்தில் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், இஸ்லாத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் மறுமலர்ச்சி எட்டாக்கனியாகவே இருக்கும்.
தஃவா பணியில் நபிகளாரின் இலக்குகள் எவை?
தஃவா பணி என்பது அழைப்புப் பணி. "அழைப்பு" என்றாலே எதை நோக்கி? எங்கு செல்வதற்காக? என்ற வினாக்கள் எழும். அல்லாஹ்விடம் செல்வதற்காக என்று நாம் கூறுவோம். அதாவது, அவனது திருப்தியை… திருப்பொருத்தத்தை அடைந்து கொள்வதற்காக. இதுதான் தஃவா பணியின் இலக்கு. அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தைப் பரிசாக வழங்குவான். ஆக "சுவனம்" தஃவாப் பணியின் அடுத்த இலக்கு. சுருக்கமாகச் சொன்னால் அழைப்புப் பணியின் இலக்குகள் அல்லாஹ்வின் திருப்தியும் சுவனமும் என்பதாகும். இந்த இலக்குகள் விடயத்திலும் முஸ்லிம் சமூகத்தில் ஒத்த கருத்திருக்கிறது. குழப்பமில்லை.
எனினும், குழப்பம் அதற்குப் பின்னர்தான் ஆரம்பமாகிறது. அல்லாஹ்விடம் அழைத்துச் சென்று சுவனம் வாங்கிக் கொடுப்பது எப்படி? அழைப்புப் பணி மூலம் இதனை வெளிப்படையாக சாதித்து விடலாமா? யார் அழைக்கும் அழைப்புக்குப் பின்னால் போனால் சுவர்க்கம் கிடைக்கும்? சுவனமா, நாங்கள் பெற்றுத் தருகிறோம் எங்களுக்குப் பின்னால் வாருங்கள் என்று வெளிப்படை யாகச் சொன்னாலும் சரி, மறைமுகமாகச் சொன்னாலும் சரி யார் சொல்வதை நம்புவது?
இங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. இதற்குக் காரணம், தஃவா பணியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடைந்த இலக்குகள் பற்றி நாம் தெளிவற்றிருப்பதே. அழைப்புப் பணியின் இலக்குகள் அல்லாஹ்வின் திருப்தி, சுவனம் என்பதோடு முடிவதில்லை. அவை இறுதி இலக்குகள். அந்த இறுதி இலக்குகளை அடைய வேண்டுமானால் அதற்கு முன் சில இலக்குகளை உலகில் அடைந்தாக வேண்டும். அந்த உலக இலக்குகளை அடைய முடியுமாக இருந்தால் யார் பின்னால் போனாலும் சுவனம் கிடைக்கும். அது மட்டுமல்ல, அழைப்புப் பணியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றியதாகவும் இருக்கும். காரணம், அழைப்புப் பணியில் சுன்னா நபியவர்கள் அடைந்த இலக்குகளை அடைவதாகும். ஹிரா மலையிலிருந்து பயணத்தை ஆரம்பிப்பதல்ல சுன்னா.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைப்புப் பணியின் மூலம் உலகில் சில இலக்குகளை அல்லது சில அடைவுகளை அடைந்தார்கள். அந்த அடைவுகள் இஸ்லாம் என்ற அமைதியை உள்ளத்துக்கும் உலகத்திற்கும் கொடுத்ததாகும். வேறு விதமாகக் கூறினால், இஸ்லாத்தின் மூலம் அமைதியான உள்ளங்களையும் அமைதியான உலகமொன்றையும் கட்டி யெழுப்பினார்கள் நபியவர்கள். ஆக, "அமைதியான உள்ளம்" "அமைதியான உலகம்" என்பவையே நபியவர்களது அழைப்புப் பணியின் உலக இலக்குகளாகும். இந்த இலக்குகளில் அமைதியான உள்ளம் எனும் இலக்கை ஒவ்வொரு மனிதனும் அவசியம் அடைந்திருக்க வேண்டும்.
இரண்டாவது இலக்கை அடையும் பாதையில் மும்முரமாக உழைக்க வேண்டும்… நகர்ந்து கொண்டிருக்க வேண்டும். அப்போது அவர் செய்யும் அழைப்புப் பணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சுன்னாவை செயல்படுத்துவதாக இருக்கும். சுவனம் என்ற இறுதி இலக்கின்பாலும் அது அவரை இட்டுச் செல்லும்.
அமைதியடைந்த ஆரோக்கியமான உள்ளங்களுக்கே சுவனம் கிடைக்கும் என்று அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. (பார்க்க 89:27, 26:87 – 89)
அதேபோன்று அமைதியான உலகத்தைக் கட்டியெழுப்புவதற்காக நபிகளாரோடு அகபாவில் உடன்படிக்கை செய்த மதீனாவாசிகளுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுவனத்தை வாக்களித்தார்கள். அந்த மதீனாவாசிகளோடு இணைந்து அமைதியான உலகத்தைக் கட்டியெழுப்பும் பணிக்கு உதவ முன் வராமல் மக்காவில் இருக்க விரும்புகின்ற முஸ்லிம்களுக்கு அல்குர்ஆன் எச்சரிக்கை விடுத்தது. அவர்களை அநியாயக்காரர்கள் என்றும் குறிப்பிட்டது. அவர்களது உயிர்களை அநியாயக்காரர்களின் உயிர்களைக் கைப்பற்றுவதுபோல மலக்குகள் கைப்பற்றுவார்கள் என்று சுட்டிக்காட்டியது. (பார்க்க 4:97)
அது மட்டுமல்ல, அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து அமைதியான உலகைக் கட்டியெழுப்பும் பணியில் பங்கு கொள்ளும்வரை அவர்களுடன் எந்த உறவும் வேண்டாம் என்று மதீனாவாசிகளைத் தடுத்தது அல்குர்ஆன். (பார்க்க 8:72)
இந்தப் பணியைச் செய்கின்றவர்களுக்கு அமைதியான உலகமொன்றை ஏற்படுத்தித் தருவதாக அல்லாஹ் வாக்களித்துமிருந்தான். அத்தகைய உலகமொன்றில் தான் இணைவைத்தல் முற்றாக நீக்கப்பட்டு மக்கள் அல்லாஹ்வை வணங்கி வழிபடுகின்ற நிலை உருவாகும். (பார்க்க: 24:55)
இவ்வாறானதோர் இலக்கை அடையும் போராட்டத்திலும் பயணத்திலும் பங்குபற்றாமல் ஒதுங்கியிருக்க விரும்புபவர்களையே மதீனா சமூகத்தின் முனாபிக்குகளாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடையாளப்படுத்தினார்கள். ஆக, அமைதியான உலக மொன்றைக் கட்டியெழுப்பும் பணியிலிருந்து ஒதுங்கியிருக்கும் மதீனாவாசிகள் முனாபிக்குகள் என்றும் ஒதுங்கியிருக்கும் மக்காவாசிகள் அநியாயக்காரர்கள் என்றும் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. அவ்வாறாயின் இந்த இலக்கை அடையும் பாதையில் மும்முரமாக உழைக்காதவர்கள் எப்படி சுவனம் என்ற இறுதி இலக்கை அடைய முடியும்?
எனவே, தஃவா பணியின் சுன்னா நபிகளார் அடைந்த இலக்குகளை அடைவதற்குத் திட்டமிட்டு வேலை செய்வதாகும்.
ஆனால், இன்று மேற்கொள்ளப்படுகின்ற இஸ்லாமிய அழைப்புப் பணிகள் உள்ளங்களில் இருக்கின்ற அமைதியையும் இல்லாமலாக்கி (உலகம் எப்படிப் போனாலும்) ஊர் அளவில் இருக்கின்ற அமைதியையும் இல்லாமல் செய்கின்றன. அவ்வாறு அமைதியை சீர் குலைக்கின்ற சக்திகள் தம்மை எவ்வாறு அடையாளப்படுத்துகின்றன தெரியுமா?
"குழப்பவாதிகள் வந்தார்கள் நாங்கள் விடவில்லை. ஊரின் அமைதியைப் பாதுகாத்தோம்."
இப்படிக் கூறும் இவர்கள் யார்? இவர்கள்தாம் ஊரிலுள்ள குழப்பங்கள் அனைத்துக்கும் பின்னாலிருந்து எண்ணெய் ஊற்றுபவர்கள். அல்லாஹ் சரியாகச் சொன்னான்.
"நீங்கள் பூமியில் குழப்பம் செய்து திரியாதீர்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் நாங்கள்தான் சீர்திருத்தவாதிகள் என அவர்கள் கூறுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள்தான் குழப்பவாதிகள். ஆனால், அவர்கள் அதனை உணர்வதில்லை." (2:11-12)
இன்றைய பணிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடைந்த இலக்குகளை முற்றாக அடையவில்லை என்று நான் கூற மாட்டேன். உள்ளங்கள் சிலவற்றை அமைதியடைந்த உள்ளங்களாக ஆக்குவதில் அவை வெற்றி கண்டிருக்கின்றன. எனினும், சமூகத்தை அமைதியடைந்த ஒரு சமூகமாக ஓர் ஊர் மட்டத்தில் மாற்றுகின்ற அளவுக்காவது முன்னேற்ற வில்லை. முன்னேறும் முயற்சிகளையும் இஸ்லாம் என்ற பெயராலேயே தடுக்கும் வேலைகள்தான் முன்னெடுக்கப்படுகின்றன. இஸ்லாமியப் பணியில் எது சுன்னா என்பதை விளங்க முடியாத நிலையே அதற்குக் காரணமாகும்.
அமைதியடைந்த ஒரு சமூகம் எனும்போது அங்கு ஓர் இஸ்லாமியத் தலைமைத்துவம், கட்டுப்படும் சமூகம், இஸ்லாமிய வாழ்வியலைக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் எனப் பல அம்சங்கள் அதனுள் வருகின்றன. அவை ஒரு சமூகத்திலோ ஓர் ஊரிலோ வந்துவிட்டால் எமது கதி அதோ கதிதான் என்று கருதும் இஸ்லாத்தின் வளர்ச்சியை விரும்பாத சக்திகள் நிச்சயம் இந்த சுன்னாவை அமுல் நடத்துவதற்குத் தடையாகத்தானே இருக்கும்! எனினும், இந்த சக்திகள் அல்லாஹ்வை எதிர்த்து நிற்பதால் நீண்ட காலம் தாக்குப்பிடிப்பதில்லை என்பதே வரலாறு.
ஆக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவை ஒவ்வொரு விடயத்திலும் நாம் எப்படிப் பின்பற்றுவது என்பதை முதலில் நாம் கற்க வேண்டும். அதன்பின் செய்ததை அப்படியே செய்வதா அல்லது நோக்கமறிந்து இலக்கறிந்து செய்வதா என்ற வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி அதிகமாகப் பேசப்படும் இக்காலத்தில் இந்த உண்மைகளை முஸ்லிம்கள் நன்கு விளங்கியிருக்க வேண்டும்.
குறிப்பு: இந்த ஆக்கத்தில் "சுன்னா" என்ற பிரயோகம் அதிகமாக இடம்பெற்றள்ளது. அது பர்ளு, சுன்னத்து என்ற கருத்திலல்ல. பர்ளாக இருக்கலாம். சுன்னத்தாக இருக்கலாம். நபிகளாரின் நடைமுறை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தில்தான் "சுன்னா" என்ற சொல் இங்கு பிரயோகிக்கப்பட்டுள்ளது. இமாம்கள், இஸ்லாமிய அறிஞர்கள் இத்தகைய கருத்துக்களிலும் இன்னும் பல்வேறுபட்ட கருத்துக்களிலும் "சுன்னா" என்ற பதத்தைப் பிரயோகித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
No comments:
Post a Comment