கோழி, ஆடு இறைச்சி உண்பவரா? உடனே படியுங்கள்!
மௌளவி, அ. முஹம்மது கான் பாகவி
கோழி, ஆடு போன்ற கால்நடைகள், பறவைகள் ஆகியவற்றின் இறைச்சி மனிதர்களின் முக்கிய உணவாக விளங்குகிறது. இவற்றில் உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துகள் இயற்கையாகவே நிறைந்துள்ளன.
ஆயினும், கோழி, ஆடு போன்றவற்றை அறுப்பது முதல் சமைத்து உண்பதுவரை பயன்படுத்தும் முறையைப் பொறுத்து அதன் பயனும் விளைவும் அமைகிறது. முக்கியமாகப் பிராணியை அறுத்து, அதன் குருதியை வெளியேற்றுவதில் மிகவும் கவனம் தேவை.
இன்றைய மின்னணு உலகில், நிமிடக்கணக்கில் வேலைகளை முடித்துவிட்டு, அடுத்த கட்டத்திற்குப் பறக்கவே மனிதன் விரும்புகிறான். கோழி, ஆடுகளை அறுப்பதிலும் அதே அவசரம்தான். அதனால் விளையும் சேதங்களைப் பற்றிச் சிந்திக்க அவனுக்கு நேரமில்லை; மனமும் இல்லை.
முஸ்லிம்களும் அவசர உலகில் சிக்கிக்கொண்டு உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்வதோடு மார்க்க வரைமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டுவிடுகின்றனர் என்பதுதான் நமது கவலையெல்லாம்.
ஆடு, கோழிகளின் உடலில் மின்னதிர்வைச் செலுத்தி, அவற்றை நிமிட நேரத்தில் உயிரிழக்கச் செய்யும் முறையே தற்போதைய உலகில் அதிகமாகச் செயல்பாட்டில் உள்ளது. அல்லது முறையாக அறுக்காமல் அவசரகதியில் உயிரிழக்கச் செய்கின்றனர்.
இதனால், உயிரினத்தின் இரத்தம் முழுமையாக உடலிலிருந்து வெளியேறாமல், செத்த பிராணியின் உடலில் உறைந்து கெட்டியாகத் தேங்கிவிட அதிக வாய்ப்பு உண்டு. அத்துடன் பிராணியின் உயிர் படிப்படியாகப் பிரிந்து, கை, கால்களை உதறி உயிரிழக்காமல் ஒரே அதிர்வில் மூச்சு நின்றுபோகின்ற கோரமும் நேருகிறது.
ஷரீஅத் சொல்வதென்ன?
1. ஆடு, கோழி போன்ற இறைச்சிக்கான பிராணிகளை அறுக்கும்போது அறுப்பவர், அல்லாஹ்வின் திருநாமம் கூறி, அவனைப் பெருமைப்படுத்த வேண்டும். அதாவது "பிஸ்மில்லாஹி, அல்லாஹு அக்பர்" என்று கூற வேண்டும். இவ்வாறு சொல்லி அறுக்கப்படாத பிராணியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடுகின்றது. (அல்குர்ஆன், 6:121)
2. கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் அறுப்பதே விரும்பத் தக்க வழிமுறையாகும். இதனால் அறுக்கப்படும் பிராணிக்கு எளிதான முறையில் உயிர் பிரிய வழியேற்படும்; சித்திரவதை இருக்காது.
3. ஆட்டை அதன் இடப்பக்கமாகப் படுக்கவைத்து, அதன் குரல்வளை, உணவுக்குழாய், குரல்வளையைச் சுற்றியுள்ள எதிரெதிரான இரு நரம்புகள் ஆகியவற்றைத் துண்டிக்கும் வகையில் அறுக்க வேண்டும்.
4. கோழியைக் கையில் ஒருவர் பிடித்துக்கொள்ள மற்றவர் அறுக்கலாம்.
மார்க்கம் காட்டியுள்ள இந்த வழிமுறையின் பயனால், பிராணியின் உடலிலிருந்து முற்றாகக் குருதி வெளியேறிவிடும்; இறைச்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தமும் கழுவினால் போய்விடும். அத்துடன் சித்திரவதையின்றி உயிர் பிரிவதற்கான நல்ல வாய்ப்பும் இதில் கிடைக்கிறது. இதுவே இயற்கையான, ஆரோக்கியமான அறுக்கும் முறையாகும்.
இம்முறையில் அறுக்கப்படாத, தானாகச் செத்த பிராணியின் இறைச்சியையோ பொதுவாக எந்தப் பிராணியின் குருதியையோ உட்கொள்வதற்குத் திருக்குர்ஆன் தடை விதித்துள்ளது. (அல்குர்ஆன், 5:3)
நவீனத்தின் நாசம்
மின்னதிர்வால் ஒரு நொடியில் பிராணிகளைக் கொல்லும் இன்றைய நவீன முறையால் கேடுகள் பல விளையும் என்பதை மறந்துவிடக் கூடாது. இது அறிவியல் ஆராய்ச்சியால் நிரூபிக்கப்பட்டுள்ள பேருண்மை ஆகும்.
'விஜிடேரியன்ஸ் இண்டர்நேஷனல் வாய்ஸ் ஃபார் அனிமல்ஸ்'(VIVA) அமைப்பின் உறுப்பினர் டாக்டர் ஸ்மித் ரீபிக்கா செய்த ஆய்வு முக்கியமானது. மின்னதிர்வு முறையால் ஏற்படும் விளைவுகளை முழுமையாக ஆராய்ச்சி செய்த டாக்டர் ஸ்மித், மின்னதிர்வால் பெரும்பாலான பிராணிகள் உயிரிழப்பதற்கு முன்பே மூச்சுத்திணறி உணர்வை இழக்கின்றன என்று குறிப்பிடுகிறார்.
ஜெர்மன் நாட்டின் ஹானோஃபர் பல்கலைக் கழக டாக்டர் SCHULTZ, மின்னதிர்வால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள், ஷரீஅத் கூறும் அறுப்பு முறையால் ஏற்படுவதில்லை. மின்னதிர்வால் இதயத் துடிப்பு மிக வேகமாக நின்றுவிடுகிறது. இதனால் இறைச்சிக்குள் இரத்தம் ஊடுருவி பரவிவிடுகிறது என்று கண்டறிந்தார்.
இரத்தத்தை உட்கொள்வதும் இரத்தம் ஊடுருவி பரவிவிட்ட இறைச்சியை உண்பதும் உடலுக்குக் கேடு விளைவிக்கும். கிருமித்தொற்று என்பது முதலில் இரத்தத்தில்தான் ஏற்படும். இரத்தத்தில் நோய்க் கிருமிகள் இருந்தால், அவை சாகாமல் அப்படியே தங்கிவிடும். இந்நிலையில் இரத்தத்தைச் சமைத்தோ சமைக்காமலோ எப்படி உண்டாலும் அதிலுள்ள நோய்க்கிருமிகள் நம் உடலுக்குக் கேடு விளைவிக்கும். இதனால்தான், குருதியை முழுவதும் வெளியேற்றிவிட வேண்டும் என்று ஷரீஅத் கூறுகிறது.
முஸ்லிம்களுக்கு அன்பு வேண்டுகோள்
கோழி, ஆடு போன்றவற்றை ஷரீஅத் முறைப்படி அறுத்த பின்பே அதன் இறைச்சியை உட்கொள்ள வேண்டும். இல்லையேல், மார்க்க ரீதியாகப் பெரும் குற்றம் செய்தவர்களாவோம். அத்துடன் மருத்துவ ரீதியாக உடலுக்குத் தீங்கை விளைவித்துக்கொள்வோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஷரீஅத் முறைப்படி ஆடு, கோழி ஆகியவை அறுக்கப்படுகின்றனவா என்பதை இறைச்சி வியாபாரிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லையேல் ஹராமான பொருளை விற்பனை செய்த பாவம் உங்களுக்கு ஏற்படும்.
பொதுமக்களும் இறைச்சி வாங்கும்போது, ஷரீஅத் முறைப்படி அறுக்கப்பட்டதுதானா என்பதைத் தெரிந்துகொண்ட பின்பே வாங்க வேண்டும். ஷரீஅத் முறைப்படி அறுக்கப்படாத பிராணிகளின் இறைச்சியை விற்கும் கடையில் இறைச்சி வாங்காதீர்கள்! உணவகங்களில் உணவருந்தச் செல்லும்போதும் இதைத் தெரிந்துகொண்டே இறைச்சி உணவை வாங்குங்கள்! சந்தேகம் ஏற்பட்டால் தவிர்த்துவிடுங்கள்!
இதுவே மார்க்கத்திற்கும் நல்லது!
சுகாதாரத்திற்கும் நல்லது!
ஷரீஅத்தைப் பேணுவோம்!
உடல்நலம் காப்போம்!
http://khanbaqavi.blogspot.in/2013/05/blog-post.html--
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment