நிறுவனம் நடத்துகிறவர்கள் இந்த தலைப்பை பார்த்தவுடனே நிச்சயம் எனக்கு சாபம் விடுவார்கள்.
ஏனென்றால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இப்போது யாருக்கும் இல்லை. எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும் வெறியில் இருக்கிறார்கள். 60 வயதில் தன் அப்பா சம்பாதித்ததை 20 வயதில் சம்பாதித்துவிட வேண்டும் என்ற வேகம் எல்லோரிடமும் இருக்கிறது. 40 வயதிற்குள் லைஃப்பில் செட்டிலாகி 50 வயதிற்குள் ரிட்டையர்டாகும் அவசரம் தெரிகிறது.
அதனால் நேர்முகத்தேர்விற்கு வரும் யாரும், 'என்ன சம்பளம்?' என்றுதான் முதல் கேள்வி கேட்கி றார்கள். என்ன வேலை? என்று கேட்பதில்லை..
ஒரு நிறுவனத்தில் இருந்து சிறப்பாக உழைத்து படிப்படியாக முன்னேறவேண்டும் என்றெல்லாம் யாரும் நினைப்பதில்லை. கூடுதலாக கிடைக்கும் ஆயிரங்களுக்காக எத்தனை முறை வேண்டு மானாலும் கம்பெனி மாறத்தயாராக இருக்கிறார்கள்.
இரண்டு வருடத்திற்கு முன்னால், '30000 ரூபாய் சம்பளம் கேட்கும் தகுதியுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்' என்று ஒரு எஃப். எம் ரேடியோ நிறுவனம் ரேடியோ ஜாக்கிக்காக விளம்பரம் கொடுத்திருந்தது. அப்போது ஆர்.ஜேக்களின் அதிக பட்ச சம்பளமே இருபதாயிரம்தான். இன்று அவர்களேகூட அப்படி விளம்பரம் கொடுக்க மாட்டார்கள். எனெனில் இன்று தகுதியில்லாத வர்கள்கூட அதை கேட்கத்தயாராக இருக்கிறார்கள்.
யாரும் சம்பாதிக்க ஆசைப்படக்கூடாது என்று சொல்வதாக அவசரப்பட்டு விடாதீர்கள். இலக்குகளில் தவறில்லை. அதை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்பதற்கு பதிலாக முறையாக அடைவது எப்படி என்பதைத்தான் இதில் பார்க்கப்போகிறோம். நாம் அடைய விரும்பும் பொருளாதார இலக்கிற்கு நம்மை தகுதிப்படுத்திக் கொள்வது எப்படி? என்பதற்கான வழி காட்டுதல்தான் இத்தொடர்.
இண்டர்வியூவில் எந்தக்கேள்வி கேட்டாலும் சில பேர் விழிப்பார்கள். சரி நாம் பயிற்சி கொடுத்துக் கொள்ளலாம் என்று சம்பளத்தை நிர்ணயித்தால், 'என்ன சார். எம்.பி.ஏ படிச்சிட்டு டென் தவுசண்ட்தானான்னு வீட்டுல கேட்பாங்க.' என்பார்கள் சற்றும் வெட்கம் இல்லாமல்.
படிப்பு ஒரு தகுதியல்ல. அதை படித்திருந் தால்தான் தகுதி. காலேஜ் கொடுத்த சர்டிபிகேட், நீ அங்கே படித்தாய் என்பதற்குத் தானே தவிர நீ நன்றாகப் படித்தாய் என்பதற்கான தல்ல… இல்லையென்றால் இண்டர்வியூ என்ற ஒன்றே தேவையில்லையே என்று விளக்க வேண்டி வரும்.
உங்களின் தகுதிதான் உண்மையில் உங்களுக்கு சர்டிபிகேட். கட்சிதாவிக்கொண்டே இருக்கும் அரசியல்வாதிகள் போல கம்பெனி மாறிக் கொண்டே இருப்பவர்களை இன்று யாரும் ரசிப்பதில்லை. ரெசெஷன் போன்ற நேரங்களில் முதல் கத்தி இவர்கள் தலையில்தான் விழும். எனவே நம் தகுதிகளை வளர்த்துக்கொண்டு சிறப்பாக முன்னேறும் வழிகளை இதில் விவாதிப்போம்.
நேர்முகத்தேர்வில், தேர்வாளர் நீங்கள் 'கேட்கும் சம்பளம் குறைவு' என்று நினைக்க வேண்டும் இல்லையா? அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் சம்பளம் சின்னதாக தெரிய வேண்டும் என்றால் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை இருகோடுகள் தத்துவம்தான். உங்கள் திறமைகள் பெரிதாக தெரிய வேண்டும்.
நம் தகுதிக்கோட்டை உயர்த்திக்கொள்ளும் வழிமுறைகளை கற்போம்.
நன்றி: – சாதனா – நமதுநம்பிக்கை
--
No comments:
Post a Comment