தொண்டைக்கு வரும் பாதிப்புகளையும், அதற்கான சிகிச்சை முறைகளையும் சொல்கிறார் டாக்டர் எம்.என்.சங்கர்.
பொதுவாக தொண்டையில் என்னென்ன பாதிப்புகள் வரும்?
பொதுவாக தொண்டை நோய்களைப் பற்றி ஆராயும் போது அநேகம் பேரை பாதிப்பவை இவை என்பதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. குழந்தைகளுக்கு தொண்டையில் சதை வளருதல், பெரியவர்களுக்கு தொண்டை வலி, சரியாக உணவு உண்ண இயலாமை, குரல் மாற்றம், தொண்டையில் புற்றுநோய், வாய்ப்புண், பான்பராக்கினால் வரும் வியாதிகள், இவை தான் முதலில் எனது ஞாபகத்திற்கு வருகின்றன.
குழந்தைகளுக்கு தொண்டையில் வரும் முக்கியமான பாதிப்பு எது? ஏன்?
குழந்தைகளுக்கு தொண்டை வியாதிகளைப் பற்றி கூறும் போது, பொறுப்பான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பேணிக்காக்கிறார்கள் என்பதை கண்டு வியந்திருக்கிறேன். குழந்தை சரியாக சாப்பிடவில்லை என்றால் நாம் உடனே இரத்த சோகை என்று நினைப்போம். ஆனால் சில தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை வாயைத் திறக்கச் செய்து, தொண்டையில் சதை பெரியதாக இருக்கிறதா என்று ஆராய்வர். தொண்டையில் சதை மிகச் சாதாரணமாக குழந்தைகளுக்கு காணப்படுகிறது. இதற்கு டான்சில்ஸ் என்று பெயர்.
குழந்தைகளின் 12-வது வயது வரை இந்த சதை காணப்படுகிறது. அதற்கு பிறகு சில சமயங்களில் தொல்லை கொடுக்கிறது. ஆனால் 12 வயதிற்கு உட்பட்டிருப்பவர்களுக்கு இந்த சதை எப்பொழுதும் தொல்லை கொடுக்கிறது. குளிர்ந்த பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் உட்கொண்ட பிறகு தொண்டை கட்டுகிறது. இதனால் உணவு உட்கொள்ள தடை ஏற்படுகிறது. ஜுரம், கை, கால்வலி வருகிறது. தக்க மருந்துகளை உட்கொண்டால் உடனே சரியாகி விடுகிறது
சில சமயங்களில் இந்த வியாதி குழந்தைகளுக்கு அடிக்கடி வருகிறது. இதற்கு நாள்பட்ட தொண்டை சதை அழற்சி என்று பெயர். இதனால் குழந்தைகளுக்கு உணவு உட்கொள்ள சிரமம், உணவு உட்கொள்ள விருப்பம் இல்லாமை மற்றும் உணவு உட்கொள்ளும் பொழுது வலி ஆகியவை ஏற்படுகின்றன. இவ்வாறு அடிக்கடி தொந்தரவு செய்யும் பொழுதே நாம் இந்த சதையை அறுவை சிகிச்சை செய்து அகற்றிக் கொள்ள வேண்டும்.
டான்ஸிலைட்டிஸ்க்கு ஏன் அறுவை சிகிச்சை அவசியமாகிறது?
அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதலின் முக்கியத்துவம் என்னவென்றால் பிற்காலத்தில் அக்குழந்தைக்கு வாதக் காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளை தவிர்க்கலாம். இந்தியாவில் குழந்தைகளுக்கு காணப்படும் இதய நோய்களில் மிக முக்கியமானவை தொண்டையில் வாழும் கிருமிகளினால் வருபவையே. ஆதலால், தொண்டை நோயை உடனுக்குடன் சரி செய்து கொள்வது அவசியம். இதற்கு காது, மூக்கு, தொண்டை மருத்துவரின் உதவியை நாடவேண்டும். வேறு மருத்துவர்களால் தக்க சிகிச்சை அளிப்பது சாத்தியமல்ல.
டான்ஸில் ஆபரேஷன் செய்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போய்விடும் என்கிறார்களே? உண்மையா?
தொண்டையில் ஏற்படும் அழற்சியை மாத்திரைகளால் சரிவர தீர்வு காணமுடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதே நல்லது. அறுவை சிகிச்சை செய்து கொண்டால் குழந்தையின் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது என்று சில மருத்துவர்கள் தவறான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். இது விஞ்ஞான பூர்வமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவை விட மேற்கத்திய நாடுகளில் இந்த கேள்வி எழும். 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனைச் செய்யலாம். நான் மூன்று வயது குழந்தைக்கும் செய்திருக்கிறேன். அக்குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையின் பிரச்சினையை எப்படியாவது அறுவை சிகிச்சை செய்து தீர்க்கும்படி வற்புறுத்தினர். இப்பொழுது அந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளது. அடிக்கடி வரும் ஜுரம், தொண்டை வலி தீர்ந்து விட்டது. இதனை எதற்கு சொல்கிறேன் என்றால் குழந்தையின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் சதை வளர்ச்சி இருந்தால் அதனை எடுத்து விடுவது நல்லதாகும்.
சில குழந்தைகளுக்கு உச்சரிப்பில் குழப்பம் இருப்பது எதனால்?
குழந்தைகள் மழலையாக பேசும். சில குழந்தைகளுக்கு டா, தா முதலிய வார்த்தைகள் உச்சரிப்பது கடினமாக இருக்கும். இதற்கு காரணம் நாக்கிற்கு அடியில் சுருக்கு இருப்பதால் தான். இதனை ஐந்து வயதிற்குள் சரி செய்து விடுவது நல்லது. இல்லாவிடில், அவர்களுக்கு பின்னாளில் உச்சரிப்பு பிரச்சினை எழ வாய்ப்பு உண்டு.
உணவு விழுங்குவதில் சிரமம் இருந்தால் அவசியம் கவனிக்க வேண்டுமா?
சில பெரியவர்களுக்கு உணவு உட்கொள்ள தடை படுதல் உண்டாகும். இவை 1-2 நாட்களுக்கு இருந்தால் அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் இரண்டு வாரங்களுக்கு மேல் இந்த பிரச்சினை இருந்தால் உடனே காது, மூக்கு, தொண்டை மருத்து வரை அணுகுதல் நல்லது. ஏனெனில் புற்று நோயின் ஆரம்பமாக இருக்கலாம். ஆரம்பத்திலேயே அதனை கண்டறிந்து அதற்கு தகுந்த மருத்துவம் செய்தால் நல்ல தீர்வு காணப்படும். புற்றுநோய் தொண்டை தொடர் புடையதாக உள்ளது. இந்ததொண்டை பாதிப்பு ஆண்களுக்கு சாதாரணமாக காணப்படுகின்றன. பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் சாதாரணமாக காணப்படுவதைப்போல. ஆண்களுக்கு புற்று நோய் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் அதனை எளிதில் குணப் படுத்தலாம் இதற்கு அதன் குணங்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல் அவசியம். உணவு உட்கொள்ள தடை, எடை குறைதல், வாந்தி, கழுத்தில் கட்டி கிளம்புதல், குரல் மாற்றம், மூச்சுத் திணறல் முதலிய அறிகுறிகள் இருக்கலாம். இவையாவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒன்று, இரண்டு அறிகுறிகள் இருக்கலாம். ஆனால், இவற்றுடன் எடை குறைதல் இருந்தால் அவசியம் தொண்டை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். இதனை கண்டறி வதற்கு என்டோஸ் கோபி என்ற உள்நோக்கி கருவி இப்போது உள்ளது.
பான்பராக் போன்ற போதை பாக்கு பழக்கம் தொண்டையை பாதிக்கும் தானே?
இப்பொழுது இளைஞர்களுக்கு பான்பராக் போடும் பழக்கம் மிக சரளமாகி விட்டது. இதனால் வாய் புண்ணாகி, பின்னர் புண் காய்ந்தவுடன் தோல் சுருங்கி புற்றுநோயாக மாறுகிறது. இதற்கு கு€செடிளளை என்று பெயர். பான்பராக்கை நிறுத்திவிட்டு தக்க ஊசி மருந்தை செலுத்தினால் இதனை நிரந்தரமாக நிவர்த்தி செய்ய லாம்.
குரலையே பிரதானமாக கொண்டவர்களுக்கு தொண்டையில் என்னன்ன பாதிப்பு வரலாம்?
மேடை பேச்சாளர்கள், ஆசிரியர்கள், பாடகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சில சமயங்களில் குரல் சரிவர பேசமுடியாமல் போகலாம். இதற்கு காரணம், அவர்கள் குரலை சீராக வைக்காமல் இருப்பது தான். மிக அழுத்தமாக நாம் பேசும்பொழுது குரல் கணீர் கணீர் என்று எடுத்து விடப்படுகிறது. இப்படி செய்யும் பொழுது குரல்வளையில் தேய்தல் உண்டாகி பின்னர் சதை உண்டாகிறது. இரண்டு வாரங்கள் மௌனமாக இருந்தால் இந்த பாதிப்பு குணமாகி விடும். இல்லா விடில் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுக வேண்டும்.
அடிக்கடி வரும் வாய்ப் புண், ஆணிற்கு பெண் குரல் போன்ற பாதிப்புகள் ஏன்?
வாய்ப்புண் எல்லோருக்கும் வருகிறது. ஆனால் இளைஞர்களை இது வெகுவாக பாதிக்கிறது. நம் உடலின் எதிர்ப்பு சக்தி குறைவாகும் தருணத்தில் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தக்க மருத்துவம் செய்தால் இதற்கு நிவர்த்தி காணலாம். இளைஞர்களுக்கு பெண்களைப் போன்ற கீச் குரல் பருவ வயதில் வருவதுண்டு. இதற்கு காரணம் ஹார்மோன் குறைபாடு தான். இதனையும் தக்க மருத்துவம் மூலம் நிரந்தரமாக தீர்வு காணலாம்.
நன்றி: தமிழ் கூடல்
--
No comments:
Post a Comment