Monday, December 7, 2015

கோடையை, குளிர்ச்சியாக்க .......


கோடைக்காலம் நெருங்கி வந்து விட்டது.அறிகுறியாக ஆங்காங்கே குடிநீர்த் தட்டுப்பாடு குரல்கள் வர ஆரம்பித்து விட்டது.சில ஆண்டுகளாக
 
கோடை காலம் வர.வர தற்பொது வெப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
கோடை வெப்பத்தை இயற்கையிடமிருந்து நம்மால் குறைக்கவோ,தவிர்க்கவோ இயலாது.ஆனால் அதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க சில தற்காப்புகளை நாம் செய்து கொள்ளலாம்.கீழ்க்கண்டவற்றை நாம் செய்தாலும் தமிழக சாபக்கேடான மின் வெட்டு நம்மை வருத்தெடுக்கத்தான் போகிறது.
அதில் சில:

* கோடைக் காலத்தில் அதிகாலை, 5:00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. பெண்கள், வெயில் வரும்முன்னே சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடலாம்.
* உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிவதுடன், அந்த ஆடைகளில், வெண்மை நிறம் கலந்திருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் "பளிச்' வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும் என்பதால், அவற்றை தவிர்ப்பது நல்லது.
* வெயிலின் தாக்கத்தால், உடலில்இருந்து அதிகளவு வியர்வை வெளியேறுவதால், உடலின் நீர்ச் சத்து குறைந்துவிடும். அதனால், அதிக நீர் அருந்துவதுடன், இடைவெளி விட்டு நீர் அருந்துவது நல்லது. இது, நீர் எரிச்சல், நீர்த்தாரை கடுப்பு போன்றவை உருவாவதை தடுக்கும்.
* வெயிலில் அலைந்து வந்தவுடன், நீர் அருந்தக் கூடாது. எவ்வளவு தாகம் இருந்தாலும், பத்து நிமிடம் கழித்தே, நீர் அருந்த வேண்டும். அந்த நீர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீராக இருக்கக்கூடாது. ஏனெனில், இந்த நீர் ஜலதோஷம், தலைவலியை ஏற்படுத்தும். மண்பானையில் வைத்த தண்ணீரோ அல்லது சாதாரண நீரோ போதுமானது.
* அதிக நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும்.

* இளநீர், பனை நுங்கு உடல் வெப்பத்தைத் தடுத்து, உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.
* ஆரஞ்சு, சாத்துக்குடி, கிர்ணி, எலுமிச்சை பழச்சாறு, பதநீர் சாப்பிடலாம். தர்பூசணி சாப்பிடலாம்.
* குடிநீரை கொதிக்க வைக்கும்போது, அதில் சீரகம் கலந்து கொதிக்க வைத்து, ஆறியபின் அருந்தலாம். தினமும், மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தினால் தான், உடல் சூடு குறைந்து, சமநிலைப்படும்.
* மதிய வேளையில், மோரில் நீர் கலந்து, அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிப்பது நல்லது.
* கோடைக் காலத்தில், காலை உணவாக, தோசை, பூரி, பரோட்டாவை தவிர்த்து, இட்லி அல்லது கேழ்வரகு, கம்பு கஞ்சி செய்து சாப்பிடலாம்.
* மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த, பரங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

* தினமும் இரு முறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும்போதும், வெயிலில் இருந்து திரும்பிய உடன் குளிக்கக் கூடாது.
* வெயில் தாக்காமலிருக்க தலையில் தொப்பி அணிந்து கொள்ளலாம்.
* வாரம் இரு முறை, எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

* கோடை வெப்பத்தின் போது, அதிக நேரம், குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பது நல்லதல்ல. அதுபோல் அலைந்து திரிந்து, வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குச் செல்வதும் நல்லதல்ல.
* சர்க்கரை நோயாளிகள் கோடைக் காலத்தில் அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்கவும். கை கால்களுக்கு எண்ணெய் பூசிக் கொள்ளவும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* படுக்கையறை காற்றோட்டமானதாக இருக்கட்டும். பருத்தியினால் தயாரிக்கப் பட்ட விரிப்புகளை பயன்படுத்துவது நல்லது.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: