Saturday, January 23, 2016

உங்கள் பார்வைத் திறன் எவ்வாறு இருக்கிறது

பார்வை குறைந்து செல்வதை ஆரம்பத்திலேயே கண்டறிவது சற்று சிரமமானதுதான். இருந்தபோதும் சற்று அவதானமாக இருந்தீர்களேயானால் தாமதமின்றிப் புரிந்து கொள்ளலாம்.
கீழ் காண்பவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் பார்வை பாதிப்புறுவதின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

  • மங்கிய வெளிச்சத்தில் எழுத்துக்கள் தெளிவில்லாது இருப்பது, 
  • கைக்கடிகாரத்தில் நேரம் தெளிவின்றி இருப்பது, 
  • புத்தகங்களையும் பத்திரிகைகளையும் வழமையை விடச் சற்றுத் தூரத்தில் வைத்துப் படிக்க நேர்வது, 
  • ரீவீயை சற்று நெருக்கத்தில் இருந்து பார்த்தால்தான் மிகத் தெளிவாக இருப்பது, 
  • இரவில் வாகனம் ஓட்டும்போது எதிரே வாகனத்தின் லைட் வெளிச்சம் கண்களைக் கூசவைப்பது. 
இப்படிப் பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்.

உங்கள் பார்வை குறைந்து செல்வதை உணர்ந்தால் அது வயசுக் கோளாறு என்று சொல்லி வாழாது இருந்து விடாதீர்கள். இதற்கான காரணங்கள் பல. அவற்றில் பல தீவிரமானவை
மக்கியூலர் டிஜெனரேஜன் (Macular degeneration) என்பது விழித்திரையில் உள்ள மக்கியூலா பாதிப்புறுவதால் ஏற்படுவது. பொதுவாக வயது அதிகரிக்கும்போது ஏற்படுவது. கண்வைத்தியர் பரிசோதித்தே கண்டறிய முடியும்.

குளுக்கோமா
(Glaucoma)  என்பது பார்வை நரம்பு பாதிப்புறவதால் வரும். முக்கியமாக கண்ணில் உள்ள திரவத்தில் பிரஸர் அதிகரிப்பதால் அத்தகைய தாக்கம் ஏற்படும்.

கட்டரறக்ட்
 (Cataract)  என்பது கண்வில்லைகளில் வெள்ளையாகப் படிவது. வயது காரணமாக மட்டுமின்றி நீரிழிவாலும் விரைவில் தோன்றும்.

நீரிழிவு விழித்திரை நோய்
 (Diabetic retinopathy) நீரிழிவு நோயால் ஏற்படுவது. விழித்திரையில் உள்ள சிறு குருதிக் குழாய்கள் சேதமடைவதால் திரக மற்றும் குருதிக் கசிவுகள் ஏற்படும். குருதியில் சீனி அதிகமாக இருப்பதாலும் அது கட்டுப்பாட்டில் இல்லாதிருப்பதாலும் வரும் பிரச்சனை இது.

இவற்றில் கட்டரக்ட் நோயிருந்தால் சத்திர சிகிச்சை மூலம் இழந்த பார்வையை முழுமையாக மீளப் பெறலாம்.

ஏனையவற்றில் பார்வையை முழுமையாக மீளப் பெற முடியாதிருக்கும். உடனடியாக மருத்துவம் செய்தால் பார்வை இழப்பு மோசமாகாமல் காப்பாற்ற முடியும். எனவே பார்வையில் பாதிப்பாக இருக்கும் என்று தோன்றினால் உடனடியாக கண் மருத்துவரைச் சந்தியுங்கள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
http://hainallama.blogspot.in/2014/03/blog-post_20.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: