Thursday, January 7, 2016

வீடியோ கேம்ஸ் வில்லன்... மொபைல் பூதம்!

குழந்தைகள் பத்திரம்

''ஹாய் சுரேஷ்.. நான் அந்த புல்டோசர் மண்டையனை ஷூட் பண்ணிட்டேன்டா.. ஆனா, அந்த வைரத்தை என்னால எடுக்க முடியல. இன்னொரு டைனோசர் தலையன் இடையில புகுந்துட்டான்''
''ஆமாண்டா.. நானும் டிரை பண்ணி பாத்தேன்.. முடியல! சரின்னு நேத்துலருந்து ஆண்ட்ராய்ட்ல ஆஸ்டான் மார்டின் கார் ரேஸ்க்கு மாறிட்டேன்.. செமையா இருக்குடா! பேசாம நீயும் உங்க அப்பாகிட்ட சொல்லி ஆண்ட்ராய்ட் போன் வாங்கிடு... அப்புறம் நாம எங்க இருந்தாலும் நெட், ஃபேஸ் புக் மூலமா போன்லயே ஜாலியா விளையாடலாம்!''
- இப்படி பள்ளிக் குழந்தைகளை முழுமையாக அடிமைப்படுத்தி வருகிறது வீடியோ கேம்கள். செல்போன், டாப், ஐபாட் மூலம் நெட்டிலிருந்து நேரடியாக டவுன்லோடு செய்து வகை வகையான விளையாட்டுக்களை விளையாடலாம். நாமே, களத்தில் இறங்கி விளையாடுவது போன்ற உணர்வு மேலிடுவதால், பள்ளி செல்லும் பிள்ளைகள் பலரும் படிப்பையும் தாண்டி, இதில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர்.

கிரிக்கெட், செஸ், கேரம், கால்பந்து, பேட்மிட்டன் போன்ற ஆரோக்கியமான விளையாட்டுகளை செல்போன், கணினியில் மட்டுமே இன்றைய குழந்தைகள் விளையாடுகின்றனர். நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் பொழுதுபோக்கு அம்சங்கள் நான்கு சுவற்றுக்குள்ளேயே கிடைத்துவிடுவதால், ஓடி விளையாடக்கூடிய குழந்தைகளை எந்தத் தெருக்களிலும் பார்க்கமுடிவதில்லை. செல்போன் கேம்களில் உள்ள கதாபாத்திரங்கள்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு அவர்களை ஓட வைக்கிறார்கள் நம் பிள்ளைகள்.

பிள்ளைகளின் வருங்காலமே கேள்விக்குறியாக மாறிவரும் நிலையில், வீடியோ கேம் விளையாட்டுக்களால் உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து குழந்தைகள் நல ஆலோசகர் டாக்டர் நடேசன் மற்றும் திருச்சி மூத்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் செங்குட்டுவனும், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை கல்வியாளரும், சமூக சிந்தனையாளருமாகிய ஆயிஷா இரா.நடராசனும் இங்கே அலசுகின்றனர்.  

போதையைப் போன்றது வீடியோ கேம்!
குழந்தைகளின் மூளை வளர்ச்சி என்பது முதல் மூன்று வருடங்கள் அபரிதமாக இருக்கும்.. அப்போது மூளையைத் தூண்டிவிடும் விளையாட்டுகளை விளையாடும் போது குழந்தைகளின் கற்பனைத்திறன், கூர்ந்து கவனிக்கும் திறன் மேம்பட்டுப் படைப்பாளியாக மாறுவார்கள். 

ஆனால், டிவி, கணினி, செல்போன் போன்ற சாதனங்கள், குழந்தைகளை முடக்கினால் ஒரு ரோபோ போல உருவாகி எதிர்காலத்தில் யாரிடம் எப்படி பேசவேண்டும், பழகவேண்டும் எனத் தெரியாமல் தவறான முடிவுகளை நோக்கிச் செல்லும் அபாயம் ஏற்படும். 

இதுவும் ஒரு போதைப் பழக்கத்தைப் போன்றதுதான். பெரும்பாலான பெற்றோர்களே, குழந்தைகளிடம் போன், லேப்டாப் போன்றவற்றைத் தந்து கேம்களுக்கு குழந்தைகளை அடிமையாக்குகின்றனர். சிறு வயதில் கை கால்களை அசைத்து தெருக்களில் ஓடி ஆடும் குழந்தைகளை எந்தவித மன அழுத்த நோய்களும் தாக்காது.

வியாதிகள் வீடு தேடி வரும்!
கணினி மற்றும் போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு முதலில் ஏற்படுவது பார்வைக் கோளாறுதான். தொடர்ச்சியாக திரையைப் பார்ப்பதால் கண் எரிச்சல், தலைவலி ஏற்படும்.  வீடியோ கேம்களில் ஒரு நொடி கண்ணசைவு ஏற்பட்டாலும் தோல்வி என வடிவமைத்திருப்பார்கள்.. இதனால் கண்களை இமைப்பது குறைவதனால் கண்களில் உள்ள ஈரப்பதம் காய்ந்து, சிறுவயதிலேயே கண்ணாடி போட வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகலாம்.

ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் கொழுப்பு சேர்ந்து உடல் பருமன் அதிகரிக்கும். எலும்புகளின் பலன் குறைந்து எலும்பு தேய்மானம், முதுகு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெளிக்காற்றை சுவாசிக்காமல் வீட்டுக்கு உள்ளேயே, ஒரே சூழலில் இருக்கும்போது மன இறுக்கம், கவலைகள் ஏற்படும். ஒரு விஷயத்தின் மீது வெறுப்பு, கவனமின்மை, கோபம், எந்த செயல்களையும் முழுமையாக செய்யாமல், மேலோட்டமாகச் செய்வது போன்ற பாதிப்புகளை எதிர்கொள்வார்கள். சாலையில் செல்லும் போதுகூட கவனமில்லாமல் சென்று விபத்துகளைச் சந்திப்பார்கள். வளர்ந்த பிறகும் எதிர்காலத்தில் முடிவு எடுப்பதில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிடும்.  

ஓடி விளையாடினால் நோய்கள் ஓடிவிடும்!
சூரிய வெளிச்சம் படும்படி விளையாடும்போது வைட்டமின் டி சத்து கிடைக்கிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வியர்வை மூலம் வெளியேறுகின்றன. அணியாகச் சேர்ந்து விளையாடும்போது கூட்டு முயற்சியின் முக்கியத்துவமும், விட்டுகொடுத்தல், தன்னம்பிக்கை போன்ற நல்ல குணநலன்களும் பழக்கப்படுத்தப்படுகின்றன. அனைத்துத் தசை நார்களும் சீராக இயங்குவதால் உடல்பருமன், மன அழுத்தப் பிரச்னைகள் வருவதில்லை.

உறவும், சமூகமும் பகை!
8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயங்கரமான காட்சிகள் மற்றும் வன்முறைகளைப் பார்த்து வளரும்போது, வன்முறைகளும் பயங்கரவாதம் மட்டுமே நிறைந்தது இந்த சமுதாயம் என்று தவறாகப் புரிந்துகொண்டு, நிஜ உலக வாழ்வை எதிர்கொள்ள முடியாத தேவையற்ற பயத்துக்கு ஆளாகிறார்கள்.
தொடர்ச்சியாக விளையாடுபவர்கள், தங்கள் வீட்டுக்கு உறவினர் வந்தால் கூட, அதைத் தங்கள் விளையாட்டுக்கு இடையூறாக எண்ணி எரிச்சலடைவார்கள். கோபம், எரிச்சல் இருந்து கொண்டேயிருக்கும். தனியாகத் தூங்கி எழுவது, குடும்பத்துக்குள் பாசம் குறைவது, பெற்றோர்களை எதிர்த்துப் பேசுவது போன்றவை தலைதூக்கும்.
திருமணம் ஆனாலும் கூட மனைவியிடம் விட்டுகொடுக்க முடியாமல், இடையிலேயே பிரிதல் என எதிர்காலமே கேள்விக்குறியாக மாறலாம்.

மனதைக் கெடுக்கும் வன்முறை விளையாட்டு!
இப்போது வரும் அனைத்து வீடியோ கேம்களிலும் வன்முறைகள் அதிகம் புகுத்தப்பட்டிருக்கின்றன. வாளை எடுத்து வெட்டுவது, துப்பாக்கியால் சுடுவது,   எதிராளியை வீழ்த்துவது, கை, கால்களால் உதைத்து சாகடிப்பது என எல்லா வகையான வன்முறைகளையும் வகுத்துக் கொடுக்கிறார்கள். பெரும்பாலான விளையாட்டுகளில் எதிரியை வீழ்த்திய பிறகே, அடுத்த கட்டத்துக்குச் செல்வது மாதிரியான வகையில்தான் செட் செய்திருப்பார்கள். இந்த கேம்களை பொறுத்தமட்டில் தோல்வி என்பதே கிடையாது. இது அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடும். இதன் பிரதிபலிப்பாக அவர்களால் ஒரு சின்ன தோல்வியைகூட தாங்க முடியாது.

நண்பர்களிடையே ஏற்படும் சின்னச் சின்னப் பிரச்னைகள், ஆசிரியர்கள் மூலம் வரக்கூடிய பிரச்னைகள், மதிப்பெண்களை வீட்டில் காட்ட முடியாத நிலை போன்ற சூழ்நிலைகளைச் சந்திக்கும் போது மனதில் பதிந்துள்ள வன்முறைகள் வெளிப்பட்டு தற்கொலைவரை சென்று விடுகிறார்கள். அவர்கள் மனதைப் பொருத்தமட்டில் உயிரைவிடுவதுகூட பெரிய விஷயம் இல்லை. வீட்டை விட்டு வெளி இடங்களுக்கு செல்கிறோம் என்று கூறிவிட்டு பெரிய பெரிய ஷாப்பிங் மால்களுக்குப் போகிறார்கள். அங்கேயும், 'வர்சுவல் ரியாலிட்டி' எனப்படும் கேம்களைக் கொடுக்கிறார்கள். இதில் விளையாடுபவர்கள் கேம் நடக்கும் களத்துக்குள் நேரடியாகச் சென்று விளையாடும் அனுபவத்தைப் பெறுகிறார்கள். ஆனால், அது அவர்கள் மட்டும் தனியாக விளையாடும் நரகம் என்பது புரிவதில்லை.

வாழ்க்கையைக் கற்றுத்தரும் குழு விளையாட்டு!
பள்ளி மைதானத்திலோ அல்லது தெருவிலோ பல பிள்ளைகள் ஒன்றாகச் சேர்ந்து வியர்வை வெளியேறும் வரை விளையாடும் போது புத்துணர்ச்சி ஏற்படும். அவரவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், பள்ளியில் நடந்தவை, வீட்டில் நடந்தவை என ஒவ்வொரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும். அதாவது பெண் பிள்ளைகள் பூப்பெய்தலுக்குப் பிறகு எப்படி நடக்க வேண்டும் என்பது வரை கற்றுக்கொள்கிறார்கள். 

விட்டுக்கொடுத்தல், குழு நண்பர்களை அனுசரித்துப் போவது, தோல்விகளைத் தாங்கும் மனப்பான்மை மற்றும் புதுவித சிந்தனைகளை உருவாக்கும். இந்த அனுபவம்தான் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் வாழ்க்கையை எதிர்த்துப் போராடும் திறனை வளர்க்க உதவுகிறது. ஆனால், பல பள்ளிகளில் விளையாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் அட்டவணையில் மட்டுமே உள்ளது. இந்த நேரத்தையும் பாட வேளையாக மாற்றி விளையாட்டுக்கும் வேட்டு வைத்து விட்டார்கள்! இதை, பெற்றோர்கள்தான் கவனித்து, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் மூலம் பள்ளி நிர்வாகத்துடன் பேசித் தீர்வு காணலாம்.   தினமும் ஆயிரக்கணக்கான புதுவித கேம்களைக் கொடுத்து அடிமையாக்கி விட்டன நவீன ஆண்ட்ராய்ட் போன்கள். சினிமாப் படங்களை கேம்களாக மாற்றி விட்டன கம்ப்யூட்டர் கேம்கள். இந்த அறிவியல் வளர்ச்சியின் ஆதிக்கத்தால் ஆரோக்கியம் கெடுவதுதான் மிச்சம் என்பதைப் பெற்றோர்கள் உணர்ந்தால், பெருகி வரும் வீடியோ வில்லன்களிடமிருந்து நம் இளைய தலைமுறையைக் காப்பாற்றலாம்!

ஒரு நாளைக்கு அரை மணிநேரத்துக்கு மேல் வீடியோ கேம்கள் விளையாடவோ, டி.வி. பார்க்கவோ குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்.
 குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
 குழந்தையின் நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து, பள்ளியில் நடந்த நிகழ்வுகளை ஆர்வமுடன் கேட்கவேண்டும்.
 குழந்தைகளுக்கு செல்லம் கொடுக்க வேண்டிய நேரத்தில் செல்லமும், கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பையும் காட்டவேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: