Saturday, May 21, 2016

மலவாயில் அரிப்பு

"சரியான அரிப்பு" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் பயம் வந்தது. ஆனால் செய்யவில்லை. "தானைப் புழுத் தொல்லை என்னை விட்டுப் போகுதில்லை" என அலுத்துக் கொண்டார்.

"இவளுக்கு போன மாதம்தான் பூச்சிக் குளிசை குடுத்தனாங்கள். பிறகும் பின் பக்கமாகக் கையைப் போட்டு சொறியிறாள்" இதைச் சொன்னது 4-5 வயது மதிக்கத்தக்க குழந்தையின் தாய்.
இவர்களுக்கெல்லாம் உண்மையில் பூச்சித் தொல்லைதானா?

மலவாயிலில் அரிப்பு எடுத்தால்
 அது பூச்சித் தொல்லைதான் என்றே பலரும் நம்புகிறார்கள். அது உண்மையா?

மலவாயில் அரிப்பிற்கு அதுவும் முக்கியமாக, இரவில் அரிப்பதற்கு தானைப் புழு என்று பரவலாக சொல்லப்படும்
 Thread worm  ஒரு காரணமாகும். இருந்த போதும் அது மட்டும் காரணமல்ல. மலவாயில் அரிப்பை மருத்துவத்தில் Pruritus ani என்பார்கள்.
இது ஒரு அறிகுறி மட்டுமே. இதுவே ஒரு நோயல்ல. பல்வேறு நோய்கள் காரணமாக அங்கு அரிப்பு ஏற்படுவதுண்டு.

கடுமையான அரிப்பு என்பதால் எங்கு நிற்கிறோம் யார் பார்க்கிறார்கள் என்று யோசிக்காது சொறியச் சொல்லும். சொறிந்த பின்னர் 'என்ன மானங்கெட்ட வேலை செய்தேன்' என நாண வைக்கும்.

இந்த அரிப்பு
  • எந்த நேரத்திலும் வரக் கூடுமாயினும் மலம் கழித்த பின்னரும், இரவில் படுக்கைக்குச் செல்லும் நேரங்களிலும் அதிகமாக இருக்கக் கூடும். 
  • கடுமையான வெக்கை, 
  • அவ்விடத்தில் ஈரலிப்பு, 
  • மலங் கசிதல், 
  • மனப் பதற்றம் போன்றவை அரிப்பை மோசமாக்கும். 
குழந்தைகளில் இப்பிரச்சனையைக் காண்பது அதிகம். அத்துடன் 40-60 வயதுள்ளவர்களிலும்  கூடுதலாகக் காணப்படாலும் எந்த வயதிலும் ஏற்படலாம்.

காரணங்கள் எவை.

பல்வேறு நோய்களால் ஏற்படலாம் என்ற போதும் சரும நோய்களால் ஏற்படுவது அதிகம். எக்சிமா, சோராசிஸ், லைக்கன் பிளேனஸ் போன்ற நோய்கள் சருமத்தின் ஏனைய இடங்களில் தோன்றுவது போலவே மலவாயிலும் வரலாம்.

அதைத் தவிர சருமத்தில் பல காரணங்களால் ஒவ்வாமை அழற்சி ஏற்படுவதுண்டு.

மலவாயில் பகுதியில் ஈரலிப்பு அதிகமாக இருந்தால் அதன் காரணமாக அழற்சி ஏற்படலாம்.
  • கடுமையாக வியர்ப்பது ஒரு முக்கிய காரணம். 
  • வயிற்றோட்டம் போன்ற நோய்களால் அல்லது பழக்க தோசத்தால் அடிக்கடி மலங் கழிப்பதால், மலவாயிலில் ஈரலிப்பு ஏற்பட்டு அதனால் அழற்சியும் அரிப்பும் வர வாய்ப்புண்டு. 
  • இயல்பாகவே கடுமையாக வியர்ப்வர்கள், 
  • வியர்க்க விறுவிறுக்க வேலை செய்பவர்கள், 
  • மலவாயிலை அண்டிய பகுதியில் உரோமம் அதிகம் இருப்பவர்களுக்கு 
அதேபோல வியர்வை ஈரலிப்பால் அழற்சியும் அரிப்பும் ஏற்படும்.

கடுமையான மற்றும் கிருமிஎதிர் சோப் வகைகளை உபயோகிப்பதாலும் அரிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

ஈரலிப்புத்தன்மை அதிகமாக இருப்பதால் அழற்சி மாத்திரமின்றி பங்கஸ் தொற்றும் ஏற்படலாம். ஈரலிப்புடன் மடிப்பும் உள்ள இடமாதலால் இறுக்கமாகவும் வெப்பமாகவும் காற்றோட்டமின்றி இருப்பதால் பங்கஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகமாகும். இதுவும் அரிப்பை ஏற்படுத்தும்.

நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு அவ்வாறு பங்கஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.

மலம் இறுக்கமாகப் போவதால் சிலருக்கு குதத்தில் சிறு வெடிப்புகள் தோன்றலாம்
 Anal fissure  எனப்படும் இவை வேதனையை ஏற்படுத்தும். அத்துடன் அரிப்பையும் ஏற்படுத்தலாம்.
அதே போல சிலருக்கு அவ்விடத்தில் சில தோற்தடிப்புகள் முளை போல வருவதுண்டு. Anal tags என்படும் இவற்றின் இடையே ஈரலிப்பும் மலத் துகள்களும் தேங்குவதால் அரிப்பை ஏற்படுத்தும்.
மூலக் கட்டிகளும் அவ்வாறே மலவாயில் அரிப்பிற்கு காரணமாகலாம்.

சில வகை உணவுகளாலும் ஒரு சிலரில் அரிப்பு ஏற்படும். புளிப்புள்ள பழங்கள், தக்காளி திராட்சை, சுவையூட்டிகள் போன்றவை அரிப்பை ஏற்படுத்தலாம். அதிகளவில் பால், தேநீர், கோப்பி, பியர் போன்ற பானங்களை அருந்துவதாலும் ஏற்படலாம். கடுமையான காரமுள்ள உணவுகளும் சிலருக்கு அரிப்பை ஏற்படுத்துவதுண்டு.

தானைப் புழு

இவ்வாறு பல காரணங்கள் இருந்தபோதும் தானைப் புழு என்று பொதுவாகச் சொல்லப்படும் Thread worm ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இது எந்த வயதிலும் தொற்றக் கூடியது என்ற போதும் குழந்தைகளில் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் 10 குழந்தைகiளில் 4 பேர எப்பொழுதாவது தானைப் புழு தொற்றிற்கு இலக்காகி இருப்பார்கள் என கள ஆய்வுகள் சொல்கினறன.
இப் புழக்கள் குடலில் வாழ்ந்தாலும் முட்டை இடுவதற்காக மல வாயிலுக்கு வருக்கினறன. முக்கியமாக இரவு அரிப்பிற்கு இது முக்கிய காரணமாகக் கருதலாம். ஒரே குடும்பத்தில் பலருக்கு மலவாயில் அரிப்பு இருக்குமானால் அதற்குக் காரணம் இப்பூச்சிகள்தான் எனக் கருதலாம். இதற்கு சிகிச்சையாக குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே நேரத்தில் பூச்சி மருந்து கொடுக்க வேண்டும். 2 வாரங்களின் பின்னர் ஒரு முறை மீண்டும் கொடுப்பதும் உதவலாம்.

அவ்வாறு பூச்சி மருந்து கொடுத்த பின்னரும் அரிப்பு இருக்குமாhனல் அதற்குக் காரணம் வேறு நோய் என்றே கருத வேண்டும். இலகுவான மலப் பரிசோதனை மூலம் பூச்சி இருக்கிறதா என்பதைக் கண்டறியலாம்.

'சுத்திச் சுத்தி சுப்பற்ரை கொல்லைக்குள்ளே' என்று ஊர்புறங்களில் ஒரு வார்த்தையாடல் இருக்கிறது. பலருடைய மலவாயில் கடி அதைப் போன்றதுதான்.

ஏதாவது ஒரு காரணத்தால் ஒருவருக்கு மலவாயில் கடி ஏற்பட்டிருக்கும்.

'சுத்தத்தைப் பேணுவது காணாது, அசுத்தம், அழுக்கு பட்டிருக்கும்..' என்றெல்லாம் எண்ணி அடிக்கடி மல வாயிலைக் கழுவுவார்கள். ஈரலிப்பு அதிகமாவதால் அரிப்பு அதிகரிக்குமே ஒழியக் குறையாது. கழுவியது காணாது என எண்ணி மருந்து கலந்த சோப் வகைளை உபயோகிப்பார்கள்.

அதிலுள்ள மருந்து காரணமான ஒவ்வாமையால் அரிப்பு மேலும் அதிகரிக்கும். எனவே சோப் டெட்டோல் சவ்லோன் போன்றவற்றால் சுத்தம் பண்ண முயல்வார்கள். அவை மென்மையன சருமத்தை உறுத்தி அரிப்பை அதிகரிக்கும்.

எனவே காரணத்தைக் கண்டறியாது சுயவைத்தியத்தில் ஈடுபடுவது நோயை அதிகரிக்குமே ஒழிய தீர்க்காது.

நீங்கள் செய்யக் கூடியவை
 

காரணத்தை கண்டறிய முடியாவிட்டால் நீங்கள் செய்யக் கூடியவை எவை?
சருமத்தை உறுத்தக் கூடிய எந்தப் பொருளையும் உபயோகிக்க வேண்டாம்.
வாசனையூட்டிய சோப், மருந்து கலந்த சோப் போன்றை வேண்டாம். ஒவ்வொரு தடவையும் சோப் போடுவது கூடாது. சோப் போட்டு கழுவிய பின்னர் அதன் எச்சங்கள் சருமத்தில் ஒட்டியிருக்காதவாறு நன்கு அலசிக் கழுவுங்கள். வாசனைத் திரவியங்கள், ஸ்பிரிட், போன்றவற்றைத் தவிருங்கள். அவ்விடத்தில் பவுடர் போடுவதும் கூடாது. நிறம் மணம் அற்ற சோப் வகைகளை உபயோகியுங்கள். மலம் கழித்த பின் கழுவியம் ஈரத்தை ஒற்றி எடுங்கள். கடுமையாத் தேய்க்க வேண்டாம்.

உங்களுக்கு ஏதாவது உணவு வகைகள்தான் அரிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தால் அதைத் தவிர்க்கவும். அரிப்பு சிலகாலத்தில் மறைந்துவிடும்.

மலம் கழித்தால் உடனடியாகக் கழுவுங்கள். மலவாயிலால் வாய்வு கழியும்போது அங்கு ஈரலிப்பு ஏற்படுவதாக உணர்ந்தாலும் கழுவுங்கள். அதேபோல படுக்கப் போகும் முன்னரும் ஒரு தடவை கழுவுங்கள்.

கழுவுவதற்கு சுத்தமான நீரையே உபயோகியுங்கள். சோப் ஒவ்வொரு தடவையும் உபயோகிக்க வேண்டியதில்லை. சோப் உபயோகித்தால் அது எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை ஏற்கனவே கூறினோம்.

  • தினமும் குளியுங்கள். 
  • குளித்த பின்னர் ஈரத்தை ஓற்றி எடுத்து நீரை அகற்றுங்கள். 
  • மென்மையான துணியிலான டவல்களால் ஒற்றி எடுங்கள். 
கடுமையான அரிப்பும் முடி அதிகமாகவும் உள்ளவர்கள் ஹெயர் டிரையர் கொண்டு உலர்த்துமாறு மேலைநாட்டு மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். ஆனால் வெப்பமான சூழலில் வாழும் எங்களுக்கு ஈரத்தை நன்கு ஒற்றி எடுத்தாலே சிறிது நேரத்தில் சருமம் உலர்ந்து விடும்.

  • உள்ளாடைகளை தினமும் மாற்றுங்கள். 
  • துவைத்து, நன்கு உலர்ந்த உள்ளாடைகளையே அணியுங்கள். 
  • மலம் கழித்து கழுவிய ஈரம் அல்லது குளித்த ஈரம் நன்கு உலர்ந்த பின்னரே உள்ளாடைகளை அணிய வேண்டும். 
  • அரிப்பு எடுத்தாலும் சொறிவதை கூடியவரை தவிருங்கள். 
  • முக்கியமாக நகமுள்ள விரல்களால் சொறிவது கூடாது. நகங்களை குட்டையாக வெட்டி அழுக்கின்றி பராமரிப்பது அவசியம். 
  • அரிப்பு கடுமையாக இருந்தால் அதற்கு எதிரான அன்ரிஹிஸ்டமின் மாத்திரை ஒன்றை இரவில் உபயோகிக்கலாம். அவில் (Avil), பிரிட்டோன், லொராடடின், செற்ரிசின் போன்ற பல இவற்றில் அடங்கும்.

கிறீம் வகைகள் பல உள்ளன. பங்கசுக்கு எதிரானது, அரிப்பை குறைக்கும் ஸ்டிரொயிட் கிறீம், குளிர்மையாகக்கும் கிறீம் எனப் பலவகை. எனினும் மருத்து ஆலோசனை இன்றி கண்ட கிறீம் வகைகளையும் உபயோகிக்க வேண்டாம்.

மருத்துவத்தைப் பொறுத்த வரையில் மலவாயில் அரிப்பிற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டு பிடித்து அதற்கான மருந்துகளை உபயோகிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பூச்சி மருந்துகளை உபயோகிப்பதில் பயனில்லை.

எந்த மருத்துவமானாலும் மேலே சொன்ன வழிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
http://hainallama.blogspot.in/2014/07/blog-post_27.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: